|
|
09
மே 2020 |
|
பாஸ்கா 4ஆம் வாரம் - சனிக்கிழமை
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 44-52
அடுத்து வந்த ஓய்வுநாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய
நகரத்தார் அனைவரும் கூடிவந்தனர். மக்கள் திரளைக் கண்ட யூதர்கள்
பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப்
பழித்துரைத்தார்கள்.
பவுலும் பர்னபாவும் துணிவுடன், "கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான்
முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித்
தள்ளி நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே
தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம்
செல்கிறோம். ஏனென்றால், "உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு
நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்" என்று ஆண்டவர்
எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்" என்று எடுத்துக் கூறினார்கள்.
இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின்
வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்
டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின்
வார்த்தை பரவியது. ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய
பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும்
பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது
நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். அவர்கள் தங்கள் கால்களில்
படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச்
சென்றார்கள். சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில்
திளைத்திருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 98: 1. 2-3ab. 3cd-4 (பல்லவி: 3c)
Mp3
=================================================================================
பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு
செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்
அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி
2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம்
நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும்
அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி
3cd
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 8: 31b-32)
அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து
வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும்
இருப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என்னைக் காண்பது, தந்தையைக் காண்பது ஆகும்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 7-14
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கி: "நீங்கள் என்னை அறிந்திருந்தால் என்
தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள்.
அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்" என்றார்.
அப்போது பிலிப்பு அவரிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக்
காட்டும்; அதுவே போதும்" என்றார். இயேசு அவரிடம் கூறியது:
"பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா?
என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க,
"தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று நீ எப்படிக் கேட்கலாம்?
நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?
நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு
செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள்
இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின்
பொருட்டு நம்பாவிட்டால், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.
நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும்
செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில்
நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான்
செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள்
என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 13: 44-52
கடவுளின் வார்த்தையை நம்பிய பிற இனத்தார்
நிகழ்வு
அயர்லாந்து நாட்டில் பெரிய நிலக்கிழார் ஒருவர் இருந்தார். இவரிடம்
பலர் கடன் வாங்கியிருந்தார்கள். வாங்கி கடனை அடைக்க முடியாமல்
அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட நிலக்கிழார்
தன்னிடம் கடன்பட்டவர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுடைய கடனையெல்லாம்
தள்ளுபடி செய்யலாம் என்று முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து
இவர், "என்னிடம் கடன்பட்டவர்களுடைய கடனைத் தள்ளுபடி செய்யப்போகிறேன்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் குறிப்பிட்ட நாளில், காலைப் பத்துப்
பணியிலிருந்து பகல் பன்னிரண்டு மணிக்குள் என்னுடைய அலுவலகத்திற்கு
உரிய ஆவணங்களோடு வரவேண்டும். அப்படி வருவோருடைய கடனை நான் தள்ளுபடி
செய்வேன்" என்று எழுதி, ஓர் அறிவிப்புப் பலகைத் தயார்செய்து,
அதை மக்கள் கூடிவரும் ஒரு முக்கியமான இடத்தில் வைத்தார்.
நிலக்கிழார் வைத்த இந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்துவிட்டு
நகரில் ஒரே சலசலப்பு ஏற்பட்டது. நிலக்கிழார் சொல்வது உண்மையா?
இல்லை பணத்தைத் திருப்பி வாங்குவதற்கான தந்திரா? என்று கடன்பட்டவர்கள்
பலவாறாகப் பேசத் தொடங்கினார்கள். இப்படியிருக்கையில் நிலக்கிழார்
குடிப்பிட்டிருந்த நாளும் வந்தது. சரியாகப் பத்து மணிக்கு நிலக்கிழார்
தன்னுடைய உதவியாளரோடு தன்னுடைய அலுவலகத்திற்கு வந்தார். இவரிடம்
கடன்பட்டிருந்தவர்களோ இவருடைய அலுவலகத்திற்கு முன்பாகக்
கூடினார்களே ஒழிய, யாரும் அலுவலகத்திற்கு உள்ளே செல்லவில்லை.
நேரம் கடந்துகொண்டே இருந்தது.
சரியாக மணி 11: 55 இருக்கும். அப்பொழுது பெரியவர் ஒருவர் அங்கு
வந்தார். அவர் நிலக்கிழாரிடம் கடன்பட்டிருந்தவர். அவர் வேறு எதைப்
பற்றியும் சிந்திக்காமல், நிலக்கிழாருடைய அலுவலகத்திற்குள்
நுழைந்து, உரிய ஆவணங்களை அவரிடம் எடுத்துக் கொடுத்தார். அவற்றைப்
பார்த்த நிலக்கிழார், அவருடைய கடன் முழுவதையும் தள்ளுபடி
செய்தார். தன்னுடைய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்ட மகிழ்ச்சியில்
பெரியவர் மிகவும் உற்சாகமாக நிலக்கிழாரின் அலுவலகத்தை விட்டு
வெளியே வந்தார். அவருடைய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது
என்பதை அறிந்த அங்கே குழுமியிருந்தவர்கள், நிலக்கிழாரின் அலுவலகத்திற்குள்
முண்டியடித்துக்கொண்டு உள்ளே நுழையப் பார்த்தார்கள்.
அப்பொழுது நிலக்கிழார் அவர்களிடம், "இவ்வளவு நேரமும் நீங்கள்
வருவீர்கள் என்று நான் காத்துக்கொண்டிருந்தேன்; ஆனால், இந்தப்
பெரியவரைத் தவிர உங்களில் யாருக்கும் நான் கடனைத் தள்ளுபடி
செய்வேன் என்ற நம்பிக்கை இல்லை. இந்தப் பெரியவர் நான் கடனைத்
தள்ளுபடி செய்வேன் என்ற என்னுடைய வார்த்தைகளை நம்பினார்; அதனால்
அவருடைய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது; நீங்கள் என்னுடைய
வார்த்தையை நம்பவில்லை. அதனால் உங்களுடைய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை"
என்று சொல்லிவிட்டு, தன்னுடைய அலுவலகத்தைப் பூட்டிவிட்டு,
வீட்டுக்குக் கிளம்பிப் போனார்கள். நிலக்கிழாரிடம் கடன்பட்டிருந்தவர்களோ
பேயறைந்தவர்கள் மாதிரி நின்றார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற நிலக்கிழாரிடம் பெரியவர் எப்படி நம்பிக்கை
கொண்டதால், அவருடைய கடன்முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டதோ, அப்படி
இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற பிறஇனத்து மக்கள் பவுல் அறிவித்த
கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதன்மீது நம்பிக்கை கொண்டதால்
மகிழ்ச்சி அடைகின்றார்கள். அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
கடவுளின் வார்த்தையை நம்ப மறுத்த யூதர்கள்
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,
அவர்கள் பிற இனத்து மக்களுக்கும் ஆசியாக, ஒளியாக இருக்கவேண்டும்
என்பதற்குத்தான் (தொநூ 12: 3; எசா 49: 6); ஆனால், அவர்கள் கடவுளின்
வார்த்தையை நம்பாமல், அதை எடுத்துச் சொன்ன இறைவாக்கினர்களைத்
துன்புறுத்தினார்கள். அதைத்தான் பவுல் இன்றைய முதல் வாசகத்தில்,
"நீங்கள் கடவுளின் வார்த்தையை உதறித் தள்ளி நிலைவாழ்வுக்குத்
தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக்
கொண்டீர்கள்" என்கின்றார்.
கடவுளின் வார்த்தையை நம்பி ஏற்றுக்கொண்ட பிற இனத்து மக்கள்
யூதர்கள் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல் போக, பிற இனத்து
மக்களோ அதை நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்கின்றார்கள். இதற்கு
திருத்தூதர் பணிகள் நூலிலேயே பல சான்றுகள் இருக்கின்றன (திப 2:
3-4, 8: 17, 10: 44-46). இன்றைய முதல் வாசகத்தில் பிற இனத்து
மக்கள் அறிவிக்கப்பட்ட கடவுளின் வார்த்தையை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டதும்
மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆம், கடவுளின் வார்த்தையை நம்பிக்கையோடு
ஏற்றுக்கொள்ளும்பொழுது அது நமக்கு எல்லா விதமான ஆசிகளையும் அளிக்கும்
என்பது உறுதி.
எனவே, நாம் கடவுளின் வார்த்தையை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு,
அவர் தருகின்ற ஆசியைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
"ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்குரியவை"
(திபா 33:4) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம்
நேர்மையானதும் நம்பிக்கைக்குரியதும் வாழ்வளிப்பதுமான கடவுளின்
வார்த்தையை நம்பி, அதன்படி வாழ முயற்சி செய்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 14: 7-14
"நான் சொல்வதை நம்புங்கள்"
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். இவரிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான்.
அவன் கொஞ்சம் முட்டாளாக இருந்தும், அவனைத் துறவி தன்னுடைய சீடனாக
வைத்திருந்தார். அதற்கு முக்கியமான காரணம், அவன் மிகவும் நம்பிக்கைக்குரியவனாக
இருந்தான். சீடனுக்குப் பக்கத்து ஊர்; அதனால் அவன் ஒவ்வொரு
நாளும் வீட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி துறவி இருந்த ஆசிரமத்திற்கு
வந்தான். இடையில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதை அவன் படகில்
சவாரி செய்து கடந்து வந்தான்.
ஒருநாள் துறவி தன்னுடைய சீடனைக் குறித்துக் கேள்விப்பட்ட ஒரு
செய்தியைப் பற்றி மிகவும் வியப்படைந்தார். அச்செய்தி
வேறொன்றும் இல்லை; தன்னுடைய சீடன் ஆற்றின்மீது நடந்து வருகின்றான்
என்பதுதான். உடனே துறவி, "இவன் சரியான முட்டளாயிற்றே! இவன் எப்படி
ஆற்றின்மீது நடக்க முடியும்! ஒருவேளை இது வதந்தியாக இருக்கும்!"
என்று அதைத் தட்டிக் கழிக்கப் பார்த்தார்; ஆனால் இச்செய்தியைப்
பற்றி பலரும் பேசிக்கொண்டதால், துறவி அந்தச் சீடனை அழைத்து,
"நான் உன்னைப் பற்றிக் கேள்விப்படுவது உண்மையா?" என்றார்.
"ஆமாம்" என்று அமைந்த குரலில் சொன்னான் சீடன்.
"அது எப்படி உன்னால் ஆற்றில் நடந்து செல்ல முடிகின்றது?" என்று
துறவி வியப்போடு கேட்க, சீடன் மிகவும் பொறுமையாகச் சொன்னான்:
"குருவே! இது ஒன்றும் பெரிய செயலில்லை; நீங்கள் என்னிடத்தில்
சொன்னது போன்று, நான் உங்களுடைய பெயரை நம்பிக்கையோடு உச்சரித்துக்கொண்டு
ஆற்றில் நடந்து சென்றேன். என்னால் மிக எளிதாக ஆற்றில் நடக்க
முடிந்தது." தன்னுடைய சீடன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, இன்னும்
வியப்படைந்த துறவி, "என்ன! என்னுடைய பெயரை நம்பிக்கையோடு
சொன்னால், ஆற்றை எளிதாகக் கடந்துவிட முடியுமா...? சரி வா நாம்
இருவரும் ஆற்றுக்குப் போவோம்" என்று சொல்லிக்கொண்டு, சீடனைத்
தன்னோடு அழைத்துக் கொண்டு ஆற்றுக்குப் போனார்.
ஆற்றை அடைந்ததும், சீடனை கரையில் நிறுத்திவிட்டு, துறவி தன்னுடைய
பெயரை நம்பிக்கையோடு உச்சரித்துக்கொண்டே ஆற்றில் நடக்கத் தொடங்கினார்.
தொடக்கத்தில் சீராக நடக்கத் தொடங்கிய துறவிக்கு, "நாம் ஆற்றில்
நடப்பது, கனவா? நனவா?" என்று மெல்லிசாக ஐயம் வந்து. எப்பொழுது
துறவிக்கு இப்படியோர் ஐயம் வந்ததோ, அப்பொழுதே ஆற்றுக்குள் மூழ்கத்
தொடங்கினார். தன்னுடைய குரு ஆற்றில் விழுந்து மூழ்குவதைப்
பார்த்த சீடன்தான், கரையிலிருந்து ஓடிச்சென்று, துறவியைக்
காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
இந்தக் கதையில் வரும் சீடனுக்குத் துறவியின் பெயரில் நம்பிக்கை
இருந்தது. அதனால் அவனால் எளிதாக ஆற்றில் நடக்க முடிந்தது; துறவிக்கோ
அவருடைய பெயரில் அவருக்கே நம்பிக்கை இல்லை. அதனால் அவர் ஆற்றில்
விழுந்து மூழ்கினார். நற்செய்தியில் இயேசு, என்மீது நம்பிக்கை
கொள்பவர் நான் செய்யும் செயல்களையும்; ஏன் அவற்றைவிடப் பெரியவற்றையும்
செய்வார் என்று கூறுகின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின்
பொருளென்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நாம் ஏன் இயேசு சொல்வதை நம்பவேண்டும்?
நற்செய்தியில் இயேசு, "நான் சொல்வதை நம்புங்கள்" என்கின்றார்.
இயேசு சொல்வதை நம்புவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று, இயேசு கட்புலனாக கடவுளின் சாயல் (கொலோ 1: 15). ஆகையால்,
இயேசுவை அறிவது என்பது தந்தையை அறிவதாக இருக்கின்றது; இயேசுவைக்
காண்பது தந்தையைக் காண்பதாக இருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால்
இயேசுவும் தந்தையும் ஒன்றாய் இருக்கின்றார்கள் (யோவா 10: 30).
அப்படியிருக்கையில், இயேசுவை நம்புவது தந்தையை நம்புவதாக இருக்கின்றது.
இரண்டு, இயேசு சொல்வதை நம்புகின்றபொழுது, அவர் செய்யும் செயல்களையும்
ஏன்; அவற்றையும்விட பெரியவற்றையும் நம்மால் செய்யவேண்டும். இதை
இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு மிக அழகாக எடுத்துக்
கூறுகின்றார். எனவே நாம் ஆண்டவர் இயேசு சொல்வதை நம்வுவோம். நம்புவதோடு
மட்டுமல்லாமல் அதன்படி வாழ்வோம்.
என்ன நாம் இயேசு சொல்வதை நம்பத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
"உங்களிடம் நம்பிக்கை இருந்தால் கொஞ்சமாவது எதையாவது செய்யலாம்;
ஆனால், உங்களிடம் நம்பிக்கை இல்லையென்றால், அதைக்கூடச் செய்யமுடியாது"
என்பார் ஆங்கிலக் கவியான சாமுவேல் பட்லர் (1612-1680). ஆகையால்,
நாம் ஆண்டவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அவருக்கு உகந்த
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|