Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       07  மே 2020  

பாஸ்கா 4ஆம் வாரம் - வியாழன்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 
கடவுள் தாவீது வழிமரபிலிருந்தே இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 13-25

சகோதரர் சகோதரிகளே,

பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு வந்தார்கள். அங்கே யோவான் அவர்களைவிட்டு அகன்று எருசலேமுக்குத் திரும்பினார். அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தி யோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வுநாளன்று அவர்கள் தொழுகைக் கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள். திருச்சட்டமும் இறைவாக்கினர் நூல்களும் வாசித்து முடிந்தபின் தொழுகைக்கூடத் தலைவர்கள் அவர்களிடம் ஆள் அனுப்பி, "சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்" என்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்போது பவுல் எழுந்து கையால் சைகை காட்டிவிட்டுக் கூறியது: "இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர் தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்; நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலைநிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார். அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்; அதன்பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம் வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.

பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து "ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்" என்று சான்று பகர்ந்தார்.

தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், "மனம் மாறி திருமுழுக்குப் பெறுங்கள்" என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில், "நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதி இல்லை" என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -
=================================================================================
திபா 89: 1-2. 20-21. 24,26 (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை என்றென்றும் நான் அறிவிப்பேன். அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. - பல்லவி

20
என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.
21
என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். - பல்லவி

24
என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.
26
"நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை" என்று அவன் என்னை அழைப்பான். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(திவெ 1: 5ab)

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 16-20

அக்காலத்தில்

சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் இயேசு அவர்களுக்குக் கூறியது: "பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப் பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.

உங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்து கொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும். எனினும், "என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்" என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறியாக வேண்டும்.

அது நிறைவேறும்போது, "இருக்கிறவர் நானே" என்று நீங்கள் நம்புமாறு இப்போதே, அது நிறைவேறுமுன்பே, அதுபற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன். நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 13: 13: 25

இயேசு என்னும் மீட்பர்

நிகழ்வு

இங்கிலாந்தில் தோன்றிய மிக முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவர் சார்லோட் எல்லியோட் (Charlotte Elliot 1789-1871). இவர் நல்லதொரு பாடலாசிரியரும்கூட. இவர் எழுதிய "Just As I Am", "Thy Will be done" என்ற இரண்டு பாடல்களும் மிகவும் பிரபலமானவை.

ஒருகாலத்தில் மிகவும் பாவியாக வாழ்ந்த இவர், ஒரு மறைப்பணியாளரின் போதனையின் மூலமாக கிறிஸ்துப் பற்றி அறிந்து, அவரிடம், "நான் ஒரு கிறிஸ்தவளாக வேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்றார். உடனே அந்த மறைப்பணியாளர், "நீங்கள் கிறிஸ்தவராக வேண்டும் என்றால், அவரிடம் வந்தாலே போதுமானது" என்றார். "நானோ மிகப்பெரிய பாவி; அப்படியிருக்கையில் நான் அப்படியே வந்தால் போதுமா...? நான் கிறிஸ்தவளாக முடியுமா...? கிறிஸ்து என்னை ஏற்றுக்கொள்வாரா...?" என்றார் இவர். அதற்கு அந்த மறைப்பணியாளர், "நீங்கள் அப்படியே இயேசுவிடம் வந்தால் போதும்; ஏனெனில், இழந்து போனதைத் தேடி மீட்கத் இயேசு இந்த உலகத்திற்கு வந்தார் (லூக் 19:10)" என்றார்.

இதற்குப் பின்பு சார்லோட் எல்லியோட் அந்த மறைப்பணியாளருக்கு நன்றி சொல்லிவிட்டு, தன்னுடைய அறைக்கு வந்து, "கிறிஸ்து என்னை அப்படியே ஏற்றுக்கொண்டு எனக்கு மீட்பை வழங்கிவிட்டார்" என்ற மகிழ்ச்சியில், "Just as I am without plea, O Lamb of God, I Come, I come" என்ற பாடலை எழுதினார்.

ஆம், ஆண்டவராகிய இயேசு இவ்வுலகிற்கு மீட்பராய் வந்தார். அவரிடம் நாம் நம்முடைய பாவங்களையும் குற்றங்குறைகளையும் உணர்ந்து, சென்றால் அவர் நமக்கு மீட்பினை அளிப்பார். இன்றைய முதல் வாசகத்தில், பிரிதியாவிலுள்ள அந்தியோக்கில் இருந்த தொழுகைக்கூடத்தில் பவுல் பேசுகின்றபொழுது, கடவுள் தாவீதின் வழிமரபிலிருந்து இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார் என்று பேசுகின்றார். புனித பவுல் பேசிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

தனிப்பட்ட பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பவுல்

நேற்றைய முதல் வாசகத்தில் தூய ஆவியார், "பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கின்றேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்" (திப 13: 2) என்று சொல்வதாக நாம் வாசித்திருப்போம். பர்னபாவும் சவுலும் தனிப்பட்ட பணிக்காக அழைக்கப்பட்டார்கள் எனில், அவர்கள் பிற இனத்து மக்கள் நடுவில் நற்செய்தி அறிவிப்பதற்காக அழைக்கப்பட்டார்கள்; அதற்காக அவர்கள் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். இப்படிப் பிறஇனத்து மக்கள் நடுவில் நற்செய்தி அறிவிக்க அழைக்கப்பட்ட பர்னபாவும் பவுலும், பல்வேறு இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்துவிட்டு, பிசிதியாலுள்ள அந்தியோக்கை அடைந்து, அங்குள்ள தொழுகைக்கூடத்தில் நற்செய்தி அறிவிக்கத் தொடங்குகின்றார்கள். குறிப்பாக பவுல் அங்கிருந்த தொழுகைக்கூடத்தில் நற்செய்தி அறிவிக்கத் தொடங்குகின்றார்.

இதற்கிடையில் யோவான் எனப்படும் மாற்கு பர்னபாவையும் பவுலையும் விட்டுப் பிரிந்து எருசலேம் செல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். இதற்குத் திருவிவிலிய அறிஞர்கள், மாற்கு, பவுலின் தலைமையை ஏற்காமல் இருந்திருக்கலாம் என்றும் மாற்கிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் மாற்கால் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் போயிருக்கலாம் என்றும் பவுலின் உடல்நலக் குறைவுகூட ஒரு காரணமாக (கலா 4: 13-14) இருந்திருக்கலாம் என்றும் கூறுவர். இது ஒருபக்கம் இருந்தாலும், பர்னபாவும் பவுலும் மாற்கு தங்களை விட்டுப் பிரிந்து சென்றதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், பிசிதியாவிலுள்ள அந்தியோக்கிற்கு வந்து, ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைக்கின்றார்கள்.

மீட்பராக வந்த இயேசு

பவுல் தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களிடம் பேசுகின்றபொழுது, கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார் என்று தொடங்கி, இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார் என்று முடிக்கின்றார். ஆம், இயேசு இந்த உலகத்திற்கு மீட்பராய் வந்தார். அவரைப் பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ளாமல் அவர் அளித்த மீட்பினை இழந்து போனார்கள் .மாறாக, அவர்மீது நம்பிக்கைகொண்டு, அவரை ஏற்றுக்கொண்டவர்களோ அவர் அளித்த மீட்பினைப் பெற்றுக்கொண்டார்கள். அவ்வாறெனில், இயேசு அளிக்கும் மீட்பினைப் நாம் பெறுவதற்கு அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொள்வது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. நாம் மீட்பராம் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு, அவரை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"இயேசுவே ஆண்டவர்" என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்" (உரோ 10: 9) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக அவர் அளிக்கும் மீட்பை, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 13: 16-20

"இவற்றை நீங்கள் அறிந்துகொண்டு நடப்பீர்கள் என்றால் பேறுபெற்றவர்கள்"

நிகழ்வு


பிரான்சிஸ் சவேரியார் ஜப்பானில் கடவுளின் வார்த்தையை அறிவித்துக் கொண்டிருந்த நேரம் அது. ஒருநாள் இவர் தனக்கு முன் திரண்டிருந்த மக்களுக்கு கடவுளின் வார்த்தையை அறிவித்துக்கொண்டிருக்கும்பொழுது, ஒருவர் இவரிடம் வந்து, "உங்களிடம் ஒருசில வார்த்தைகள் பேசவேண்டும்" என்றார். இவரும் அந்த மனிதர் தன்னிடத்தில் ஏதோ முக்கியமான செய்தியைச் சொல்லப் போகிறார் என்று நினைத்துக்கொண்டு கூட்டத்தை விட்டுவிலகி, அவரைப் பின்தொடர்ந்தார்.

சிறிதுதூரம் தள்ளிச் சென்றபிறகு அந்த மனிதர், பிரான்சிஸ் சவேரியாரின் முகத்தில் காறி உமிழ்ந்தார். இதைப் பார்த்துவிட்டுக் கூட்டம் அதிர்ந்துபோனது; ஆனால், சவேரியார் அந்த மனிதரிடம் எந்தவோர் எதிர்வினையும் ஆற்றாமல், தன்னிடம் இருந்த துண்டை எடுத்துத் துடைத்துக்கொண்டு, மீண்டுமாக மக்கள் கூட்டத்திற்கு முன்பாக வந்து, முன்புபோல் கடவுளின் வார்த்தையை மிகவும் உற்சாகத்தோடு அறிவிக்கத் தொடங்கினார்.

இதைப் பார்த்துவிட்டு, அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு முக்கியமான நபர், "தன்மீது ஒருவர் காறி உமிழ்ந்திருக்கின்றார்; அதற்காக அந்த மனிதரை எதுவும் செய்யாமல், இவர் இப்படிப் பொறுமையாக இருக்கின்றார் எனில், இவரிடம் தாழ்ச்சி மிகுதியாக இருக்கவேண்டும். அதனால்தான் இவரால் தன்னை இழிவுபடுத்தியவனையும் பொறுமையாக ஏற்றுக்கொள்ள முடிகின்றது" என்று நினைத்துகொண்டு, அவர் நேராகச் சவரியாரிடம் வந்தார்.

அவர் சவேரியாரிடம், "உங்களை காறி உமிழ்ந்தவனைக் கூட, நீங்கள் பொறுமையாக ஏற்றுக்கொண்டீர்கள் என்றால், உங்களிடத்தில் மிகுந்த தாழ்ச்சி இருக்கவேண்டும் என்பது தெரிய வருகின்றது. இப்படிப்பட்ட தாழ்ச்சியை, நிச்சயம் நீங்கள் பின்பற்றும் கிறிஸ்துவ மதம்தான் உங்களுக்குக் கற்றுத் தந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அப்படிப்பட்ட மதத்தில் நானும் சேர்ந்து தாழ்ச்சியோடு வாழலாம் என்று ஆசைப்படுகின்றேன். அதனால் நீங்கள் எனக்கு இப்பொழுதே திருமுழுக்குக் கொடுத்து, என்னை உங்களுடைய மதத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்றார். சவேரியாரும் அவர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். அவரைப் பார்த்துவிட்டு, பலரும் அந்நாளில் திருமுழுக்குப் பெற்றார்கள்.

ஆம், புனித பிரான்சிஸ் சவேரியாரின் உள்ளத்தில் இருந்த தாழ்ச்சி, பலரையும் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தது. நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்கள் தாழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்று கற்பிக்கின்றார். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சீடர்களின் காலடிகளைக் கழுவி, முன்மாதிரி காட்டிய இயேசு

யோவான் எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம், இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவியபின், அவரிடம் பேசக்கூடிய வார்த்தைகளாக இருக்கின்றன. சீடர்கள் நடுவில் யார் பெரியவர் (லூக் 22:24) என்ற விவாதம் நடைபெற்றது. இதை அறிந்த இயேசு அவர்களுக்குப் பாடம் புகட்ட, அவர்களுடைய காலடிகளைக் கழுவிகின்றார். பின்னர் "பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல" என்று சொல்லிவிட்டு, "இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால், நீங்கள் பேறுபெற்றவர்கள்" என்கின்றார்.

ஆம், இயேசு தன்னுடைய சீடர்கள் தாழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்று தன்னுடைய வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்வாலும் போதித்தார். இத்தகைய போதனையை, அவருடைய சீடர்களாக நாம், நம்முடைய வாழ்வில் வாழ்ந்து காட்டினோம் என்றால், நாமும் பேறுபெற்றவர்கள் ஆவோம்.

இயேசுவை ஏற்றுக்கொள்பவர் தந்தையை ஏற்றுக்கொள்பவர் ஆவார்

இயேசு தன்னுடைய சீடர்களிடம் தொடர்ந்து பேசுகின்றபொழுது, "என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கின்றார்" என்கின்றார்.

இயேசுவை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் என்ன என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசுவை ஏற்றுக்கொள்ளுதல் என்றால், அவருடைய விழுமியங்களான தாழ்ச்சி, இரக்கம், மன்னிப்பு, அன்பு... ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழ்தல், அப்படி நாம் இயேசுவின் விழுமியங்களை ஏற்றுக்கொண்டு வாழ்வதன் வழியாக அவரை ஏற்றுக்கொள்கின்றோம். அவரை ஏற்றுக்கொள்வதன் வழியாக அவரை அனுப்பிய தந்தைக் கடவுளையே ஏற்றுக்கொள்பவர்களாக ஆகின்றோம்.

ஆகவே, இயேசு இன்று நமக்குத் கற்றுத்தருகின்ற தாழ்ச்சி என்ற பண்பினை நம்முடைய வாழ்வில் வாழ்ந்து காட்டி, அவருடைய உண்மையான சீடராக மாற முயற்சி செய்வோம்.

சிந்தனை

"நாம் தாழ்ச்சியோடு இருக்கின்றோம் என எண்ணுகின்றபொழுதே, அதை இழந்துவிடுகின்றோம்" என்கிறது ஒரு முதுமொழி. ஆகையால், நாம் தாழ்ச்சியோடு இருக்கின்றோம் என்ற எண்ணமே இல்லாமல் இருப்போம். தாழ்ச்சியின் வெளிப்பாடாக, இயேசுவைப் போன்று அடுத்தவருக்குத் தொண்டுகள் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!