|
|
05
மே 2020 |
|
பாஸ்கா 4ஆம் வாரம் - செவ்வாய்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 19-26
அந்நாள்களில்
ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா,
சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். அவர்கள் யூதருக்கு
மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்; வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை.
அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர்.
அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி
ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். ஆண்டவரின்
கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந்தொகையான மக்கள் நம்பிக்கை
கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர்.
இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள்
பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்றுவர அனுப்பி வைத்தார்கள். அவர்
அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்;
மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும்
ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு
நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம்
சேர்த்தார்.
பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு,
அந்தியோக்கியாவுக்கு அழைத்துவந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும்
அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து
வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள்
கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
=================================================================================
திபா 87: 1-3. 4-5. 6-7a (பல்லவி: திபா 117: 1a)
பல்லவி: பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!
1
நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
2
யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும் விட ஆண்டவர் சீயோன் நகர
வாயில்களை விரும்புகின்றார்.
3
கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. - பல்லவி
4
எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்;
பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக்
குறித்து, "இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்" என்று கூறப்படும்.
5
"இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை
நிலைநாட்டியுள்ளார்!" என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். -
பல்லவி
6
மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, "இவர் இங்கேதான்
பிறந்தார்" என ஆண்டவர் எழுதுவார்.
7a
ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து "எங்கள் நலன்களின் ஊற்று
உன்னிடமே உள்ளது" என்பர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 10: 27)
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச்
செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்
பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30
அக்காலத்தில்
எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது
குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார்.
யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, "இன்னும் எவ்வளவு காலம் நாங்கள்
காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச்
சொல்லிவிடும்" என்று கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக, "நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை.
என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச்
சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில்
நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச்
செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்
பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை
என்றுமே அழியா.
அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார். அவற்றை
எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என்
தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும்
தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 11: 19-26
ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்
நிகழ்வு
வில்லியம் டி, ஸ்டித்கர் (William T. Stidger) என்ற எழுத்தாளர்
சொல்லக்கூடிய ஒரு நிகழ்வு. ஒருநகரில் பொறியாளர் ஒருவர் இருந்தார்.
இவருக்கு அவ்வளவாக கட்டடம் கட்டுவதற்கான வாய்ப்புகள் வரவே இல்லை
நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு செல்வந்தரிடமிருந்து மிகப்பெரிய
மாளிகைக் கட்டுவதற்கான வாய்ப்பு இவருக்கு வந்தது. மிகவும் உற்சாகமாகவும்
மகிழ்ச்சியாகவும் இவர் அந்த மாளிகைக் கட்டத் தொடங்கி, முடிக்கக்கூடிய
தருவாயில், ஏதோவொரு காரணத்தால் கட்டடம் இடிந்துவிழுந்து, மிகப்பெரிய
பொருள்சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் பொறியாளருக்கு
யாருமே வேலை கொடுக்கவில்லை.
இப்படியிருக்கையில் இவருடைய மனைவியும் திடீரென இறந்துபோனார்.
இதனால் இவர் விரக்தியின் விளிம்பிற்கே சென்று தற்கொலை
செய்துகொள்ளலாமா என்றுகூட சிந்தித்தார். இதற்கு நடுவில் இவர்,
பக்கத்து ஊரில் இருந்த ஒரு கிறிஸ்தவக் கோயிலுக்குச் சென்றார்.
கோயிலில், அருள்பணியாளர் மறையுரை ஆற்றும்பொழுது, அதை கூர்ந்து
கவனித்தார் இவர். அந்த மறையுரை இவருடைய உள்ளத்தைத் தொடவே,
திருப்பலி முடிந்த பிறகு, இவர் அருள்பணியாளரைச் சந்தித்து, தன்னுடைய
பிரச்சனைகளை எல்லாம் அவரிடத்தில் எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும்
அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அருள்பணியாளர் இவரிடம், "சாவி
இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. அதுபோல் தீர்வு இல்லாத
பிரச்சனை இறைவனும் அனுமதிப்பதில்லை" என்று சொல்லி இவருக்கு உற்சாகமூட்டினர்.
அருள்பணியாளர் சொன்ன இந்த உற்சாகமூட்டும் வார்த்தைகளால் விரக்தியோடு
இருந்த பொறியாளரின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை ஒளி பிறந்தது.
இதற்குப் பின்பு இவர் நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொண்டார்.
நாள்கள் மெல்ல உருண்டோடியபொழுது, இவருக்குப் பலரிடமிருந்து கட்டட
வேலைகள் வந்தன. அவற்றை இவர் சிறப்பாகச் செய்து முடித்ததால்,
இவடைய பெயர் எங்கும் பரவி இவர் பெரிய ஆளானார்.
இந்த நிகழ்வில் வருகின்ற பொறியாளர் விரக்தியின் விளிம்பில் இருந்தபொழுது,
அருள்பணியாரின் வார்த்தைகள் இவருக்கு உற்சாக மூட்டின. அதுபோன்று
இன்றைய முதல் வாசகத்தில், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அந்தியோக்கு
மக்களுக்கு பர்னபாவின் வார்த்தைகள் உற்சாகமூட்டுபவையாக இருக்கின்றன
அந்தியோக்கு நகரில் கிறிஸ்தவம் எப்படிப் பரவியது என்பதையும் அங்கு
பர்னபாவின் பணி எப்படி இருந்தது என்பதையும் இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
அந்தியோக்கு வரை கிறிஸ்தவம் பரவுதல்
கிரேக்க மொழி பேசிவந்த கைம்பெண்கள் நடுவில் பணிசெய்வதற்காக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு திருத்தொண்டர்களுள் ஒருவரான ஸ்தேவான்,
யூதர்களால் கொல்லப்பட்ட பிறகு, எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்கள்
யூதேயா, சமாரியா, கலிலேயா, பெனிசியா என்று பல்வேறு இடங்களுக்குச்
சிதறிப்போயினர். இப்படிச் சிதறியவர்கள் அந்தியோக்கிற்கும் வந்தார்கள்.
இவர்கள் அங்கிருந்த யூதர்களுக்கு நற்செய்தி அறிவித்தார்கள்.
அந்தியோக்கில் கிறிஸ்தவம் எப்படிப் பரவியது என்பதைக்
குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன், இந்நகர் எப்படிப்பட்டது
எனத் தெரிந்து கொள்வது நல்லது. உரோமையை ஆட்சி செய்தவர்களுடைய
மூன்று முக்கியமான நகர்களில் ஒன்றாக இருந்ததுதான் இந்த அந்தியோக்கு
நகர். இதில் பல இனங்களைச் சார்ந்த மக்கள் இருந்தார்கள். செல்வச்
செழிப்பான இந்த நகரில் பிற தெய்வ வழிபாடு மிகுந்திருந்த அதேநேரத்தில்
பாவமும் மிகுந்திருந்தது. இப்படிப்பட்ட நகருக்குச் சிதறி வந்த
யூதக் கிறிஸ்தவர்கள், யூதர்களுக்கு மட்டுமே நற்செய்தி அறிவித்து
வந்தார்கள்; ஆனால், சிதறி வந்தவர்களில் சைப்பிரசு, சிரேன் ஆகிய
இடங்களைச் சார்ந்தவர்கள் இருந்தார்கள். இவர்கள் பிற இனத்து மக்களுக்கு
ஆண்டவருடைய நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார்கள். அதனால்
கிறிஸ்தவம் அங்கு வேகமாகப் பரவியது. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட
எருசலேமில் இருந்த திருஅவை பர்னபாவை அங்கு அனுப்பி வைக்கின்றது.
இதன் பிறகு என்ன நடந்தது என்று சிந்திப்போம்.
பர்னபா அந்தியோக்கு மக்களிடம் அனுப்பப்படல்
கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த அந்தியோக்கிற்குப் பர்னபா அனுப்பப்பட்டதும்,
அங்கிருந்த மக்களைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைகின்றார்; மட்டுமல்லாமல்,
அவர் அவர்களை உற்சாகமூட்டுகின்றார். இந்தப் பர்னபாவைக்
குறித்து திருத்தூதர் பணிகள் நூலில் முன்னரே நாம்
வாசிக்கின்றோம். இவர் நல்லவராகவும் தூய ஆவியாரால் நிரப்பப்பட்டவராகவும்
நம்பிக்கை நிறைந்தவராகவும் இருக்கின்றார் (திப 4:36) இப்படிப்பட்ட
பர்னபா, அந்தியோக்கு நகர் வந்து, அங்கிருந்த மக்களை உற்சாகமூட்டி,
பலரையும் ஆண்டவருக்குள் கொண்டு வந்து சேர்கின்றார். அத்தோடு பவுலின்
துணையோடு அந்த மக்களுக்கு இன்னும் சிறப்பாக ஆண்டவருடைய
வார்த்தையை எடுத்துரைக்கின்றார்.
பர்னபா, அந்தியோக்கு மக்கள் நடுவில் பணிசெய்தது நமக்கொரு
முக்கியமான செய்தியைச் சொல்கின்றது. அது என்னவெனில், ஒருவர் மற்றவருக்கு
ஊக்க மூட்டவேண்டும் என்பதுதான். நிறைய நேரங்கில் மற்றவருக்கு
அவ நம்பிக்கையை ஊட்டும் நாம், நம்பிக்கையை உற்சாகமான வார்த்தைகளால்
ஊட்டுவது சாலச் சிறந்தது. எனவே, இயேசுவின் வழியில் நாம், ஒருவர்
மற்றவரை ஊக்கமூட்டி, எல்லாரும் கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை
கொண்டு வாழ்வதற்கு நாம் கருவிகளாக இருப்போம்.
சிந்தனை
"திடம் கொள்; உறுதியாய் இரு; அஞ்சாதே; கலங்காதே" (1 குறி 22:
13) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், பர்னபா, அந்தியோக்குக் மக்களை
ஊக்க மூட்டியதுபோல், நாமும் மேலே உள்ள வார்த்தைகளால் ஆண்டவர்
எப்படி நமக்கு ஊக்கமூட்டுகின்றாரோ, அதுபோன்று ஒருவர் மற்றவரை
ஊக்க மூட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 10: 22-30
நல்ல ஆயனின் ஆடுகள், அவருடைய குரலுக்குச் செவிசாய்க்கும்
நிகழ்வு
ஒருகாலத்தில் அமெரிக்கப் பேஸ்பால் அணியில் நட்சத்திர
விளையாட்டு வீரராக இருந்து, பின் ஆண்டவருடைய வார்த்தையை மக்களுக்கு
எடுத்துச் சொல்லக்கூடியவராக மாறியவர் பில்லி சண்டே எனப்படும்
வில்லியம் ஆஸ்லே சண்டே (1862-1935).
இவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட புதிதில், இவரிடம் வந்த ஒருவர்,
"வில்லியம்! நான் சொல்லக்கூடிய ஒரு முக்கியமான செய்தியை உன்னுடைய
வாழ்நாள் முழுக்கக் கடைப்பிடித்து வந்தால், நீ இயேசுவின் உண்மையான
சீடராய் இருப்பாய்" என்றார். இப்படிச் சொல்லிவிட்டு, அந்த
மனிதர் பில்லி சண்டேயிடம் தொடர்ந்து பேசினார்: "ஒவ்வொரு நாளும்
முதல் பதினைந்து வினாடிகள், ஆண்டவர் உன்னோடு பேசுவதைக் கேள்;
அதற்கடுத்த பதினைந்து வினாடிகள் ஆண்டவரோடு நீ பேசு. பின்னர்
அந்த நாளில் ஒரு பதினைந்து வினாடிகள் ஒதுக்கி, ஆண்டவர் உன்னோடு
பேசியதை யாராவது ஒருவரிடம் எடுத்துச் சொல். இப்படிச் செய்தால்
நீ இயேசுவின் உண்மையான சீடனாய் இருப்பாய்."
இதற்குப் பின்பு பில்லி சண்டே, அந்த மனிதர் தன்னிடம் சொன்னது
போன்று, ஒவ்வொருநாளும் படுக்கையிலிருந்து எழுந்ததும், முதல்
பதினைந்து வினாடிகளை ஆண்டவர் தன்னிடம் என்ன பேசுகின்றார்
என்பதை அமைதியான மனநிலையோடு கேட்டார். அதற்கு அடுத்த பதினைந்து
வினாடிகளை ஆண்டவரோடு பேசுவதற்கு அவர் செலவழித்தார். பின்னர்
அந்த நாளில் ஒரு பதினைந்து வினாடிகளை ஒதுக்கி, ஆண்டவர் தன்னோடு
பேசியதை மற்றவருக்கு அறிவித்தார். இவ்வாறு அவர் இயேசுவின்
உண்மையான சீடராக மாறியதோடு மட்டுமல்லாமல், மிகச்சிறந்த
நற்செய்திப் பணியாளராக மாறினார்.
ஆம், பில்லி சண்டே ஆண்டவருடைய குரலைக் கேட்டு, அவருடைய
உண்மையான சீடராக அவருடைய மந்தையைச் சார்ந்த ஒருவராக
விளங்கினார். இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவின் மந்தையைச்
சார்ந்தவர், அவருடைய குரலுக்குச் செவிகொடுக்கவேண்டும் என்ற
செய்தியை எடுத்துச் சொல்கின்றது. இது குறித்து நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
தான் மெசியா என்று இயேசு வெளிப்படையாகச் சொல்லவில்லையா?
யோவான் எழுதிய நற்செயதி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
நற்செய்தி வாசகத்தில், எருசலேமில், கோயில் அர்ப்பண விழா நடந்து
கொண்டிருக்கையில், அங்கு வருகின்ற இயேசுவிடம் யூதர்கள்,
"...நீர் மெசியாவானால், அதை எங்களிடம் வெளிப்படையாகச்
சொல்லிவிடும்" என்று பேசுவதைக் குறித்து வாசிக்கின்றோம்.
இயேசுவிடம் இவ்வாறு சொன்ன யூத்ரகளுக்கு இயேசு என்ன பதில்
சொன்னார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பு, யூதர்கள்
கொண்டாடிய கோயில் அர்ப்பண விழாவைக் குறித்துச் சிறிது
தெரிந்துகொள்வோம்.
யூதர்கள் கொண்டாடிய கோயில் அர்ப்பண விழா என்பது
தொடக்கத்திலிருந்து கொண்டாடப்பட்ட விழா அல்ல; யூதா மக்கபேயரின்
காலத்திலிருந்து, அதாவது கி.மு. 166 ஆம் ஆண்டிலிருந்து
கொண்டாடப்பட்டு வந்தது. முன்னதாக அந்தியோக்கு எப்பிபான் என்ற
மன்னனால், எருசலேம் திருக்கோயிலின் திருப்பீடம் பன்றி
இறைச்சியால் தீட்டுப்படுத்தப்பட்டது (1மக் 4) அதைத்தான் யூதா
மக்கபேயர் தூய்மைப்படுத்திக் கோயில் அர்ப்பண விழா கொண்டாடினார்
(2மக் 10: 1-8). அதிலிருந்துதான் கோயில் அர்ப்பண விழா
கொண்டாடப்பட்டு வந்தது. இப்படிக் கொண்டாடப்பட்ட கோயில் அர்ப்பண
விழாவிற்கு இயேசு வருகையில்தான் யூதர்கள் அவரிடம் மேலே
கேட்கப்பட்ட கேள்வியைக் கேட்டார்கள்.
இப்பொழுது நமக்கு, இயேசு தன்னை யூதர்களுக்கு
வெளிப்படுத்தவில்லையா? என்ற கேள்வி எழலாம். இயேசு தன்னுடைய
வார்த்தையின் வழியாகவும் (யோவா 5: 17ff, 6:32) செயல்
வழியாகவும் தான் மெசியா என்று மக்களுக்கு அறிவித்தார்.
யூதர்கள்தான் அவர் மெசியா என்பதை உணரவில்லை. அதற்கு என்ன
காரணம் என்று தொடர்ந்து சிந்திப்போம்.
இயேசுவின் ஆடுகள் அவருடைய குரலுக்குச் செவிசாய்க்கும்
யூதர்கள், இயேசுவை மெசியா என்று அறிய முடியாமல் போனதற்குக்
காரணம், அவர்கள் இயேசுவின் மந்தையாக இல்லை என்பதுதான்.
ஏனென்றால், இயேசுவின் மந்தையைச் சார்ந்த யாரும் அவருடைய
குரலுக்குச் செவிகொடுப்பார்கள்; அவரைப் பின்தொடர்வார்கள்.
இயேசுவின் குரலுக்கு யூதர்கள் செவிகொடுக்காமலும் அவரைப்
பின்தொடராமலும் போனதால், அவர்கள் அவருடைய மந்தையைச்
சாராதவர்களாகவும் அவரை மெசியா என்று அறிந்துகொள்ளாதவர்களாவும்
ஆனார்கள்.
நாம் இயேசுவின் மந்தையாக இருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டும்
என்பது நமக்கு இப்பொழுது புரிந்திருக்கும். ஆம், நாம்
இயேசுவின் மந்தையாக இருப்பதற்கு அவருடைய குரலைக் கேட்டு,
அவரைப் பின்தொடர வேண்டும். நாம் இயேசுவின் குரலைக் கேட்டு,
அவரைப் பின்தொடர்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"செவிகொடுங்கள்; நான் கூறுவதைக் கேளுங்கள்; செவிசாய்த்து நான்
சொல்வதைக் கவனியுங்கள்" (எசா 28: 23) என்பார் ஆண்டவர்.
ஆகையால், நாம் நல்ல ஆயனாம் ஆண்டவர் இயேசுவின் குரலுக்குச்
செவிசாய்த்து, அவருடைய ஆடுகளாக விளங்குவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|