|
|
04
மே 2020 |
|
பாஸ்கா 4ஆம் வாரம் - திங்கள்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வாழ்வுக்கு வழியான மன மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள்
கொடுத்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 1-18
அந்நாள்களில்
பிற இனத்தவரும் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதைப்பற்றித்
திருத்தூதர்களும் யூதேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளும் கேள்விப்பட்டார்கள்.
பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனம்
செய்துகொண்டவர்கள் அவரோடு வாதிட்டனர். "நீர் ஏன் விருத்தசேதனம்
செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?"என்று
குறை கூறினர்.
பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார்.
""நான் யோப்பா நகரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது
மெய்ம்மறந்த நிலையில் ஒரு காட்சி கண்டேன். பெரிய கப்பற்பாயைப்
போன்ற ஒரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டு வானத்திலிருந்து
இறக்கப்பட்டு என்னிடம் வந்தது. அதை நான் கவனமாக நோக்கியபோது,
தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன, காட்டு விலங்குகள் ஆகியவற்றைக்
கண்டேன். "பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு" என்னும்
ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன். அதற்கு நான், "வேண்டவே
வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதுவும் ஒருபோதும்
என் வாய்க்குள் சென்றதில்லையே" என்றேன். இரண்டாம் முறையும்
வானிலிருந்து மறுமொழியாக, "தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத்
தீட்டாகக் கருதாதே" என்று அக்குரல் ஒலித்தது. இப்படி மும்முறை
நடந்தபின்பு யாவும் வானத்துக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அந்நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர்
நான் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றனர். தூய ஆவியார்
என்னிடம், "தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு செல்" என்று கூறினார்.
உடனே நானும் இந்த ஆறு சகோதரர்களுமாக அந்த மனிதர் வீட்டுக்குச்
சென்றோம். அவர் தம் வீட்டில் வானதூதர் வந்து நின்றதைக் கண்டதாகவும்,
அத்தூதர் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்; நீரும்
உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர்
உம்மோடு பேசுவார் என்று தமக்குக் கூறியதாகவும் எங்களுக்கு அறிவித்தார்.
நான் பேசத்தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்ததுபோல்
அவர்கள் மீதும் இறங்கி வந்தது. அப்போது, "யோவான் தண்ணீரால்
திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால் நீங்கள் தூய ஆவியால்
திருமுழுக்குப் பெறுவீர்கள்" என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான்
நினைவு கூர்ந்தேன். இப்போதும் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே
கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க
நான் யார்?"என்றார்.
இவற்றைக் கேட்டு அவர்கள் அமைதி அடைந்தனர்; வாழ்வுக்கு வழியான
மனமாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று
கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
=================================================================================
பதிலுரைப் பாடல்
திபா 42: 1-2; 43: 3. 4 (பல்லவி: 42:2a)
பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.
1
கலைமான் நீரேடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என்
நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
2
என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது;
எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?
- பல்லவி
3
உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி,
உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச்
சேர்க்கும். - பல்லவி
4
அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய
இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து
உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 10: 14-15)
அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்;
என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18
அக்காலத்தில்
இயேசு கூறியது: "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம்
உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு
ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல;
ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றிஇழுத்துக்
கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு
ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை.
நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை
அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்;
என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக்
கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன.
நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச்
செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும்
நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார்.
ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும்
பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து
யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக்
கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும்
அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப் படியே நான் இப்படிச்
செய்கிறேன்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 11: 1-18
பிற இனத்தார்மீதும் இறங்கி வந்த தூய ஆவியார்
நிகழ்வு
காந்தியடிகள் தன் வரலாற்று நூலில் (Autobiography)
குறிப்பிடுகின்ற ஒரு முக்கியமான நிகழ்வு. காந்தியடிகள்,
தென்னாப்பிரிக்காவில் இருந்த நேரத்தில், ஒரு
ஞாயிற்றுக்கிழமையின்போது, அங்கிருந்த கிறிஸ்தவக் கோயிலுக்கு
சென்றார். இவர் கோயிலுக்கு உள்ளே நுழைகையில், அங்கிருந்த
இரண்டு வெள்ளையர்கள், இவரைத் தடுத்து நிறுத்தி, "நீங்கள்
கோயிலுக்குள் தாராளமாகச் செல்லலாம்; ஆனால், ஒரு நிபந்தனை,
நீங்கள் கறுப்பினத்தவர் அமர்ந்திருக்கின்ற பகுதியில் போய்
அமர்ந்துகொள்ளுங்கள், வெள்ளை இனத்தவர் அமர்ந்திருக்கின்ற
பகுதியில் தயவு செய்து அமரவேண்டாம்"என்றார்கள்.
அவர்களிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சிறிதும்
எதிர்பாராத காந்தியடிகள் கோயிலுக்குள் நுழையாமல் அப்படியே
திரும்பி வந்துவிட்டார்.
ஆண்டவர் குடிகொண்டிருக்கும் கோயிலில் கூட அல்லது ஆண்டவருடைய
பெயரைச் சொல்லிகூட ஏற்றத்தாழ்வு நடைபெறுவதைக் காந்தியடிகளின்
வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு மிகவும் வேதனையோடு
பதிவுசெய்கின்றது.
இன்றைய முதல் வாசகத்தில், திருத்தூதர்களின் தலைவராகிய பேதுரு
பிற இனத்தாருடைய வீட்டில் உணவருத்தியதை எருசலேமில் இருந்த
யூதர்கள் மிகப்பெரிய சர்ச்சை ஆக்குகின்றார்கள். இப்படிப்பட்ட
சூழலில் பேதுரு, தூய ஆவியார் பிற இனத்தார்மீதும்
பொழியப்பட்டார் என்று சொல்லி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
வைக்கின்றார். திருத்தூதர் பணிகள் நூலில் இடம்பெறும் இந்த
நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்று
சிந்தித்துப் பார்ப்போம்.
தங்களை உயிர்வாகக் கருதி மற்றவர்களை இழிவாகக் கருதிய யூதர்கள்
இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் சிக்கலின் ஆழத்தைப்
புரிந்துகொள்வதற்கு யூதர்கள் பிற இனத்தார் இடையே உறவு எப்படி
இருந்தது என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. ஆண்டவராகிய கடவுள்,
மோசே வழியாகத் தங்களுக்குப் பத்துக் கட்டளைகளைக் கொடுத்ததால்
(விப 19-20) யூதர்கள், தாங்கள்தான் மற்ற இனத்தாரைவிடச் சிறப்பு
வாய்ந்தவர்கள்; கடவுளால் ஆசி பெற்றவர்கள் என்று எண்ணத்
தொடங்கி, மற்றவர்களைக் கீழானவர்களாகப் பார்க்கத்
தொடங்கினார்கள். இத்தனைக்கும் ஆண்டவராகிய கடவுள் எல்லாருக்கும்
பொது; எல்லாரும் கடவுளின் மக்கள் (எசா 56:7) என்று இறைவார்த்தை
சொன்னாலும், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல், பிற இனத்து மக்களை
இழிவாகக் கருதி வந்தார்கள்.
இயேசுகூட தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கிப், சீடர்களைப்
பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, "பிற இனத்தாரின்
எப்பகுதிக்கும் செல்லவேண்டாம்"(மத் 10: 5) என்று
சொன்னாலும்கூட பிறகு, சமாரியப் பெண்ணுக்கு நற்செய்தி
அறிவிக்கின்றார் (யோவா 4: 1-42) கிரேக்கர்கள் மிகுதியாக
வாழ்ந்த பகுதியில் பணி செய்கின்றார் (மாற் 5: 1-20), உரோமை அரச
அதிகாரியான நூற்றுவத் தலைவருடைய பணியாளரை நலப்படுத்துகின்றார்
(லூக் 7: 1-10). இவை எல்லாவற்றிகும் மேலாகத் தன்னுடைய
சீடர்களிடம் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி
அறிவியுங்கள் (மாற் 16: 15) என்றார். இவ்வாறு இயேசு எல்லா
மக்களும், கடவுளுடைய மக்கள் என்று அவர்களுக்குப்
பணிசெய்தபொழுது, இயேசுவை ஏற்றுக்கொண்ட யூதர்கள், பேதுரு
பிறஇனத்தாரின் வீட்டில் உணவருந்தியதை பெரிய பிரச்சனை
ஆக்குகின்றார்கள். இவர்களுக்கு பேதுருவின் பதில் என்னவாக
இருக்கின்றது என்று தொடர்ந்து சிந்திப்போம்.
இரண்டாம் பெந்தக்கோஸ்து
எருசலேமிலிருந்த விருத்தசேதனம் செய்தவர்கள், விருத்த சேதனம்
செய்யாதவர்களோடு எப்படி உண்ணலாம் என்று பேதுருவிடம் கேள்வி
கேட்டபொழுது, அவர் அவர்களிடம், யோப்பாவில் இருந்தபொழுது தான்
கண்ட காட்சியையும் பின்னர் அவர் கொர்னேலியுவின் வீட்டிற்குச்
சென்றபொழுது, தூய ஆவியார் அவர்மீது இறங்கி வந்ததையும்
எடுத்துக் கூறுகின்றார். யூதர்கள் தங்கள்மீதுதான் தூய ஆவியார்
இறங்கிவந்தார் (திப 2) என்று எண்ணிக் கொண்டிருக்கையில், அவர்
பிற இனத்தார்மீதும் இறங்கி வந்ததைப் பேதுரு அவர்களிடம்
சொன்னபொழுது, அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாகின்றார்கள்.
தூய ஆவியார் பிற இனத்தார்மீதும் பொழியப்பட்ட இந்த நிகழ்வு,
கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர்; நாம் அனைவரும் சகோதரர்
சகோதரிகள் என்ற உண்மையை மிக ஆழமாக உணர்த்துகின்றது. ஆகையால்,
நாம் நம்மிடம் இருக்கும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற
ஏற்றத்தாழ்வைக் களைந்துவிட்டு, கிறிஸ்து இயேசுவில் ஒன்றாய்
இருப்போம்.
சிந்தனை
"உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும்
உடல் ஒன்றாயிருப்பது போல கிறிஸ்துவும் இருக்கின்றார் (1 கொரி
12: 12) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கிறிஸ்துவில்
ஒன்றாய் இருக்கின்றோம். என்ற உண்மையை உணர்ந்தவர்களாய்,
நம்மிடம் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைக் களைந்துவிட்டு,
கிறிஸ்துவில் ஒன்றாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 10: 11-18
ஆடுகளுக்காக உயிரைத்தரும் நல்ல ஆயன் இயேசு
நிகழ்வு
இளைஞன் ஒருவன் தாபோர் மலையடிவாரத்தில் தன்னுடைய ஆடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அந்த வழியாக நாடோடிக்
கூட்டம் (Bedouins) வந்தது. அந்தக் கூட்டத்தின் தலைவன், ஆடுகளை
மேய்த்துக்கொண்டிருந்த இளைஞனிடம், "உன்னுடைய ஆடுகளில்
ஒருசிலவற்றை எங்களுக்குத் தா"என்று மிரட்டினான். அவனுடைய
மிரட்டலுக்கு அஞ்சாமல், அந்த இளைஞன், "அதெல்லாம் தரமுடியாது;
நீங்கள் என்ன வேண்டுமாலும் செய்துகொள்ளங்கள்"என்று உறுதியாகச்
சொன்னான்.
உடனே அந்த நாடோடிக் கூட்டத்தின் தலைவன், தன்னுடைய இடையில்
மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி, அவன்மீது பாய்ச்சி, அவனைக்
கொன்றுபோட்டான். இவ்வாறு அந்த இளைஞன், தன்னுடைய ஆடுகளுக்காக
உயிரையும் தந்தான்.
இந்த நிகழ்வில் வருகின்ற ஆடுமேய்க்கும் இளைஞன் எப்படித்
தன்னுடைய ஆடுகளுக்காக உயிரையும் தந்தானோ, அப்படி நம் ஆண்டவர்
இயேசு தன் ஆடுகளாகிய நமக்காக உயிரையும் தருபவராக... நல்ல ஆயனாக
விளங்குகின்றார். இயேசு எப்படி நல்ல ஆயனாக இருக்கின்றார்
என்பதை இப்பொழுது நாம் சிந்தித்து பார்ப்போம்.
ஆடுகளை அறிந்தவர்
யோவான் எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, "நல்ல ஆயன் நானே"
என்கின்றார். இயேசு எப்படி நல்ல ஆயனாக இருக்கின்றார் என்பதை
இன்றைய நற்செய்தியை அடிப்படையாக வைத்தே நாம் அறிந்துகொள்வோம்.
இயேசு தன்னைக் குறித்துச் சொல்கின்றபொழுது, "தந்தை என்னை
அறிந்திருக்கின்றார். நானும் தந்தையை அறிந்திருக்கின்றேன்.
அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கின்றேன்"என்கிறார். ஒரு
நல்ல ஆயனுக்கு இருக்கவேண்டிய மிக முக்கியமான கடமை, ஆடுகளை
அறிந்திருப்பது. கூலிக்கு மேய்ப்பவர் ஆடுகளை அறிந்திருக்க
வாய்ப்பில்லை; அவற்றை முழுமையாக அறியவேண்டிய தேவையும் அவருகு
இல்லை. இஸ்ரயேல் சமூகத்தில் ஆயர்களாக இருந்தவர்கள், ஆடுகளை
அறியவும் இல்லை; அவற்றைச் சரியாகப் பேணவும் இல்லை (எசே 34:
1-8) இதனால் ஆண்டவரின் சினம் அவர்களுக்கு எதிராக எழுகின்றது.
நல்ல ஆயன் இயேசுவோ ஆடுகளை நன்கு அறிந்திருந்தார். அவர்களுடைய
தேவையைத் தன் வார்த்தையாலும் செயலாலும் நிறைவேற்றித் தந்தார்.
வேறு ஆடுகளையும் வழிநடத்திச் செல்பவர்
இயேசு எப்படி நல்ல ஆயனாக இருக்கின்றார் என்பதற்கு இரண்டாவது
சான்றாக இருப்பது, அவர் தன்னுடைய கொட்டிலைச் சேராத வேறு
ஆடுகளையும் வழி நடத்துகின்றார் என்பதுதான். இயேசு தன்னுடைய
பணிவாழ்வில் யூதர்களுக்கு மட்டுமல்ல, பிற இனத்து மக்களுக்கும்
கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்தார் (யோவா 12: 20-22).
இதன்மூலம் ஒரே ஆயன், ஒரே மந்தை என்ற நிலையை உருவாக்கினார். ஒரே
ஆயன், ஒரே மந்தை என்ற நிலை பற்றி, இறைவாக்கினர் எசேக்கியேல்
நூல் சொல்லப்பட்டிருக்கின்றது (எசே 34: 11-14, 23).
அவ்வார்த்தைகள் இயேசுவில் நிறைவேறுகின்றன.
ஆடுகளுக்காக உயிரையும் தருபவர்
இயேசு நல்ல ஆயனாய் இருக்கின்றார் என்பதற்கு மூன்றாவது சான்றாக
இருப்பது, அவர் ஆடுகளுக்காகத் தன் உயிரையும் தந்ததுதான். நல்ல
ஆயர் ஆடுகளுக்காகத் தன் உயிரையும் தருவார் என்பதை இயேசு,
இன்றைய நற்செய்தியில் நான்கு இடங்களில் (10: 11,15,17,18)
குறிப்பிடுக்கின்றார். அப்படியென்றால், ஓர் ஆயரின் தலையாய
கடமை, தன்னுடைய ஆடுகளுக்காக எதையும்; ஏன் தன்னுடைய உயிரையும்
தருவதுதான் என்பது நிரூபணமாகின்றது.
இயேசுவின் காலத்திற்கு முன்பாக இருந்த ஆயர்கள், மந்தையைப்
பராமரிக்காமல், தங்களைப் பராமரித்துக்கொண்டார்கள். மேலும்
அவர்கள் கூலிக்கு மேய்ப்பவர்கள் போன்று, ஆண்டுகளைப் பற்றி
எந்தவோர் அக்கறையும் இல்லாமல், தங்களைப் பற்றி மட்டுமே அக்கறை
கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால், நல்ல ஆயனாம் ஆண்டவர் இயேசு,
தன்னுடைய கொட்டிலைச் சேர்ந்த ஆடுகளை மட்டுமல்ல, வேறு
கொட்டிலைச் சேர்ந்த ஆடுகளையும் அறிந்து, அவற்றை நல்ல முறையில்
வழிநடத்தி, அவற்றுக்காக உயிரையும் தந்தார். இவ்வாறு இயேசு நல்ல
ஆயனாக இருக்கின்றார்.
ஆகையால், நல்ல ஆயனாக இருக்கும் இயேசுவின் மந்தையாகிய நாம்,
அவருடைய குரல் கேட்டு, அவரை அறிந்து, அவர் வழி நடக்க முயற்சி
செய்வோம்.
சிந்தனை
"தாம் தூயவர்களாக்கியவர்களை ஒரே பலியினால் (இயேசு)
என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்" (எபி 10: 14) என்பார்
எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். நாம்
நிறைவுள்ளவர்களாகுவதற்குத் தன்னையே பலியாகக் கொடுத்த நல்லாயன்
இயேசுவின் மந்தையாகி நாம், அவருடைய குரலைக் கேட்டு, அவருடைய
வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். a Antonyraj, Fr.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|