Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                    02  மே 2020  

பாஸ்கா காலம் 3 ம் வாரம் சனிக்கிழமை

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 திருச்சபை வளர்ச்சியுற்று தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 31-42

அந்நாள்களில்

யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளில் எல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.

பேதுரு எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார்; ஒரு நாள் லித்தாவில் வாழ்ந்த இறைமக்களிடம் வந்து சேர்ந்தார். அங்கே அவர் எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயா என்னும் பெயருடைய ஒருவரைக் கண்டார்; அவரிடம், "ஐனேயா, இயேசு கிறிஸ்து உம் பிணியைப் போக்குகிறார்; எழுந்து உம் படுக்கையை நீரே சரிப்படுத்தும்" என்று பேதுரு கூறினார். உடனே அவர் எழுந்தார். லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் அதைக் கண்டு ஆண்டவரிடம் திரும்பினார்கள்.

யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடர் ஒருவர் இருந்தார். அவர் தொற்கா என்றும் அழைக்கப்பட்டார்; நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் அவர் முற்றிலும் ஈடுபட்டிருந்தார். உடல்நலம் குன்றி ஒரு நாள் அவர் இறந்துவிட்டார். அங்கிருந்தோர் அவரது உடலைக் குளிப்பாட்டி மேல்மாடியில் கிடத்தியிருந்தனர். யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் பேதுரு வந்திருப்பதைச் சீடர்கள் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி, "எங்களிடம் உடனே வாருங்கள்" என்று கெஞ்சிக் கேட்டார்கள்.

பேதுரு புறப்பட்டு அவர்களோடு வந்தார். வந்ததும் அவர்கள் அவரை மேல்மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். கைம்பெண்கள் அவரருகில் வந்து நின்று, தொற்கா தங்களோடு இருந்தபோது செய்துகொடுத்த எல்லா அங்கிகளையும் ஆடைகளையும் காண்பித்தவாறே அழுதார்கள். பேதுரு அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்; அவரது உடலின் பக்கமாகத் திரும்பி, "தபித்தா, எழுந்திடு" என்றார். உடனே அவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு, எழுந்து உட்கார்ந்தார். பேதுரு அவருடைய கையைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தார். இறைமக்களையும் கைம்பெண்களையும் கூப்பிட்டு, அவர்கள்முன் அவரை உயிருடன் நிறுத்தினார்.

இது யோப்பா நகர் முழுவதும் தெரிய வரவே, ஆண்டவர்மீது பலர் நம்பிக்கை கொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 116: 12-13. 14-15. 16-17 (பல்லவி: 12)  Mp3
=================================================================================

பல்லவி: ஆண்டவர் செய்த நன்மைகளுக்காக என்ன கைம்மாறு செய்வேன்? அல்லது: அல்லேலூயா.
12
ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
13
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். - பல்லவி

14
இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
15
ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. - பல்லவி

16
ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.
17
நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 6: 63c, 68c)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே! நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69

அக்காலத்தில்

இயேசு நிலைவாழ்வு அளிக்கும் உணவு பற்றி கற்பித்துக்கொண்டிருந்த பொழுது, சீடர் பலர் இதைக் கேட்டு, "இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்று பேசிக்கொண்டனர். இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், "நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை" என்றார்.

நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக்கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது. மேலும் அவர், "இதன் காரணமாகத்தான் "என் தந்தை அருள்கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது" என்று உங்களுக்குக் கூறினேன்" என்றார்.

அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரைவிட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 9: 31-42

பேதுரு வழியாக வல்ல செயல்களைச் செய்த ஆண்டவர்

நிகழ்வு

உலகமெங்கிலும் மருந்தகங்களைக் (Clinics) கொண்டிருக்கின்ற மிகப்பெரிய மருத்துவ நிறுவனம், மாயோ கிளினிக் என்பதாகும். இதனுடைய நிறுவனர்களில் ஒருவர் மருத்துவர் வில்மாயோ என்பவராவார். இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வை இவ்வாறு பகிர்ந்துகொள்கின்றார்:

"ஒருமுறை என்னுடைய மருத்துவமனையில், முடிந்தவரையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, நலப்படுத்த முடியாத நிலையில் ஒருசில நோயாளர்கள் இருந்தார்கள். அவர்கள் எப்பொழுது வேண்டுமானால் இறக்கக்கூடும் என்றுதான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு அந்த ஓர் அருள்பணியாளர், சாகும் தருவாயில் இருந்த நோயாளர்கள்மீது தம் கைகளை வைத்து வேண்டினார். அவர் இவ்வாறு வேண்டிய சிலமணி நேரத்திற்குள் அவர்கள் உயிர் பிழைத்துக் கொண்டார்கள். அப்பொழுதுதான் நான் நினைத்துக்கொண்டேன்: "மருத்துவம் தோற்றுப் போகின்ற இடத்தில் கடவுள் வெற்றிகொள்கின்றார்" என்று."

"மருத்துவம் தோற்றுப் போகின்ற இடத்தில் கடவுள் வெற்றிகொள்கின்றார்" என்று மருத்துவர் வில் மாயோ சொன்ன வார்த்தைகள் நம்முடைய ஆழமான சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயாவை நலப்படுத்தி, இறந்துபோன தபித்தாவைப் பேதுரு உயிர்த்தெழச் செய்கின்றார். பேதுரு செய்த இந்த வல்ல செயல்கள் நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றன என்பதைக் குறித்து சிந்திப்போம்.

தூய ஆவியாரால் பெருகி வந்த திருஅவை

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், திருஅவையானது யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளில் வேகமாக பெருகி வந்ததைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. திருஅவை இப்படி வேகமாகப் பெருகி வந்ததற்குக் காரணம், தூய ஆவியார்தான். எப்படி மண்ணால் உருவாக்கப்பட்ட மனிதன், உயிர் மூச்சைப் பெற்றுக்கொண்டதும், உயிர் பெற்றானோ (தொநூ 2:7) அப்படி யூதர்களுக்கு அஞ்சி வாழ்ந்த சீடர்கள் அல்லது திருஅவை, தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்டதும் (திப 2). பெருகத் தொடங்குகின்றது. ஆம், தூய ஆவியாரால் உயிர் இல்லாததற்குக்கூட உயிர்கொடுக்க முடியும் (எசே 37)

ஆண்டவரின் அருளால் வல்ல செயல் செய்த பேதுரு

திருஅவை இவ்வாறு தூய ஆவியாரின் துணையால் பெருகி வந்த நேரத்தில், பேதுரு லித்தாவில், எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயா என்பவரை நலப்படுத்துகின்றார். அதே போன்று யோப்பா என்ற நகரில் இறந்து போன தபித்தா என்ற பெண் சீடரை உயிர் பெற்றெழச் செய்கின்றார்.

லித்தாவிலும் யோப்பாவிலும் எப்படி கிறிஸ்தவம் பரவியது என்ற கேள்வி நமக்கு எழலாம். இங்கு கிறிஸ்தவம் பரவியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, பெந்தக்கோஸ்து நாளில், பெரிய அளவில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கூட்டத்தில் இந்த பகுதிகளைச் சார்ந்தவர்களும் இருந்திருக்கக்கூடும் (திப 2). இரண்டு, எருசலேமிலிருந்து யூதேயா, கலிலேயா, சமாரியாப் பகுதிகளுக்குச் சிதறி வந்தவர்கள், இங்குள்ள மக்களுக்கு ஆண்டவருடைய நற்செய்தியை எடுத்துரைத்திருக்கவேண்டும். இங்கு ஒரு முக்கியமான செய்தியைக் குறிப்பிட்டாக வேண்டும். அது என்னவெனில், பவுல் இயேசுவைப் பற்றிய நற்செய்தி மற்ற இடங்களுக்குப் பரவிவிடக்கூடாது என்பதற்குத்தான் தமஸ்கு நோக்கி வந்தார்; ஆனால், அவர் நினைத்ததை விடவும், தூய ஆவியாரின் துணையால் கிறிஸ்தவர்கள் மேலும் மேலும் பெருகிக்கொண்டே வந்தார்கள்.

இப்படி எதிர்ப்புகளையும் மீறிப் பரவி வந்த கிறிஸ்தவர்களில்தான் ஐனேயாவும் தபித்தாவும் இருக்கின்றார்கள். இப்படியிருக்கையில், தூய ஆவியாரைப் பெற்றிருந்த இவர்கள் இருவரில் முதலாமவருடைய முடக்குவாதத்தைப் போக்கி, இரண்டாமவருக்கு வாழ்வளிக்கின்றார் பேதுரு. பேதுரு செய்த இந்த வல்ல செயல்களைக் கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கின்றார்கள்.

நன்மை செய்வோருக்கு நன்மை செய்யும் ஆண்டவர்

இன்றைய முதல் வாசகம் தபித்தாவைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, அவர் நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் முற்றிலும் ஈடுபட்டிருந்தார் என்று கூறுகின்றது. தபித்தா என்ற அந்தப் பெண் சீடர் நன்மையையும் இரக்கச் செயல்களையும் செய்து வந்ததனாலோ என்னவோ, கடவுள் புனித பேதுரு வழியாக அவரை உயிர்பெற்று எழச் செய்து, அவருடைய ஆயுளைக் கூட்டித் தருகின்றார். அவ்வாறெனில், கடவுள் நமக்குக் கொடுத்த இந்த வாழ்வில் நாம் நன்மைகளும் இரக்கச் செயல்களையும் செய்கின்றபொழுது, கடவுள் நம்முடைய ஆயுளையும் கூட்டித் தருவார் என்பது உறுதி.

ஆகையால், கடவுள் கொடுத்திருக்கின்ற இவ்வாழ்வைக் கொண்டு மற்றவர்களுக்குக் நன்மைகளையும் இரக்கச் செயல்களையும் செய்வோம்.

சிந்தனை

"கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். (அதனால்) அவர் எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்" (திப 10: 38) என்கின்றது இறைவார்த்தை. ஆகையால் தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட இயேசு எப்படி எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றாரோ, அப்படி நாமும் இயேசுவைப் போன்று, பேதுருவைப் போன்று, தபித்தாவைப் போன்று நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 6: 60-69

நிலைவாழ்வளிக்கும் இயேசுவின் வார்த்தைகள்


நிகழ்வு


ஆப்பிரிக்கா மக்கள் நடுவில் மருத்துவப் பணியையும் இறைப்பணியையும் ஒரு சேரச் சேர்த்துச் செய்தவர் டேவிட் லிவிங்ஸ்டன் (1813-1873).

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவரான இவர், 1852 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவிற்குச் சென்றபொழுது, தன்னோடு 180 பவுண்டுகள் எடைகொண்ட 73 நூல்களை எடுத்துச் சென்றார். காட்டுப் பகுதியில் அந்த 73 நூல்களையும் தூக்கிச்செல்வது மிகவும் சிரமமாக இருக்கின்றது என்பதை இவர் உணர்ந்தார். ஆதலால், இவர் அந்த 73 நூலில் தேவையில்லாத நூல்களை ஒன்றாக ஆங்காங்கே வீசி எறிந்துகொண்டே வந்தார். இவ்வாறு இவர் வீசி எறிந்துகொண்டு வந்ததில், இவரிடம் இருந்த 72 நூல்கள் இல்லாமல் போயின. ஒரே ஒரு நூல் மட்டும்தான் இவரிடத்தில் இருந்தது. அந்த நூல் வேறு எந்த நூலும் அல்ல; திருவிவிலியம்தான்.

ஆம், திருவிவிலியத்தைத்தான் டேவிட் லிவிங்க்ஸ்டன் என்றட மறைப்பணியாளர் தன்னோடு கடைசிக்குவரைக்கும் வைத்திருந்தார். அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது, இந்த உலகில் வேறு எந்த நூலும் தராத வாழ்வு தரும் வார்த்தைகளைத் திருவிவிலியம் தரும் என்று. நற்செய்தியில், சீமான் பேதுரு, இயேசுவிடம், "வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" என்கின்றார். பேதுரு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதையும், இப்படிப்பட்ட வார்த்தைகள் எப்படிப்பட்ட சூழலில் உதிர்க்கப்பட்டன என்பதையும் இப்பொழுது நாம் சிந்திப்போம்.

இயேசு சொன்னதை நம்ப மறுத்த சீடர் பலர்

இயேசு, கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில், என் சதையை உண்டு, என்னுடைய இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார் என்று பேசினார். இதைக் கேட்டுவிட்டு, அவருடைய சிடரில் பலர், "இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்" என்கின்றார்கள். யோவான் இங்குக் குறிப்பிடும் "சீடர் பலர்" இயேசுவைப் பின்தொடர்ந்து வந்த பலரைக் குறிப்பதாக இருக்கின்றது (யோவா 4:1). இவர்கள் இயேசுவைப் பல காரணங்களுக்காகப் பின்தொடர்ந்து வந்திருக்கலாம்.

"இயேசு, இஸ்ரயேல் மக்களுக்கு உரோமையரிடமிருந்து அரசியல் விடுதலைப் பெற்றுத்தருவார்... நாம் அவருடைய அரசபையில் உறுப்பினராக இருக்கலாம்" என்று எண்ணத்தோடும், "இயேசுவைப் பின்தொடர்ந்தால் பெயரும் புகழும் கிடைக்கும்" என்ற எண்ணத்தோடும்... இப்படிப் பல்வேறு எண்ணங்களோடும் காரணங்களோடும் இயேசுவைப் பின்தொடர்ந்த "இந்தச் சீடர்கள்" இயேசுவின் சீடராக இருப்பதற்குக் கொடுக்கவேண்டிய விலையை நிச்சயம் உணர்ந்திருக்கவும் மாட்டார்கள் (லூக் 14: 25-33); இயேசு, நிலைவாழ்வு அளிக்கும் உணவு பற்றிப் பேசியதையும் உணர்ந்திருக்கமாட்டார்கள். அதனால்தான் இவர்கள் இயேசுவுக்கு எதிராக முணுமுணுக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களிடம் இயேசு, "....மானிட மகன் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்" என்கிறார்.

இயேசு இப்படிச் சொன்னபிறகு, அவருடைய சீடருள் பலர் அவரை விட்டு விலகிச் செல்கின்றார்கள். இதற்குப் பின்புதான் பேதுருவிடமிருந்து "அந்த முக்கியமான வார்த்தைகள்" வருகின்றன. அது பற்றித் தொடர்ந்து சிந்திப்போம்.

இயேசு சொன்னதை நம்பிய பேதுரு

தன்னுடைய சீடர்களில் பலர் தன்னை விட்டு விலகிச் சென்றபிறகு, இயேசு பன்னிரு சீடரிடமும், "நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா?" என்று கேட்கின்றார். இயேசு பன்னிரு சீடரிடமும் இவ்வாறு கேட்பது, இயேசு யாரையும் தன்னுடைய சீடராக இருக்கவேண்டும் என்று வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கவில்லை என்பதையும், ஒவ்வொருவருடைய சுதந்திரத்தையும் அவர் மதிக்கின்றார் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

இயேசு இவ்வாறு தன்னுடைய பன்னிரு சீடரிடம் கேட்டபிறகு, பேதுரு, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமாணவர்" என்கின்றார். இங்குப் பேதுரு சொல்லக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவ்வளவு ஆழமான பொருள் இருக்கின்றது. ஆம், பேதுரு இயேசுவை ஆண்டவர் என்றும் அவருக்கு இணை வேறு யாரும் இல்லை என்றும், நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் அவரிடம் உள்ளன என்றும், அவர் கடவுளுக்கு அப்பர்ணமானவர் என்றும் குறிப்பிடுவது, நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. மேலும் இங்குப் பேதுரு சொல்லக்கூடிய வார்த்தைகள் ஒத்தமை நற்செய்தி நூல்களில் இடம்பெறும் வார்த்தைகளையும் ஒத்துப் போகின்றன (மத் 16: 16; மாற் 8:29; லூக் 9: 20).

ஆகையால், பேதுரு இயேசுவைப் பற்றிச் சொல்வது போன்று, இயேசுவிடம் நிலைவாழ்வு அளிக்கின்ற வார்த்தைகள் இருக்கின்றன. அதனால் நாம் இயேசுவின் வார்த்தைகளை வாசித்து, வாழ்வாக்குவோம். அதன்மூலம் அவர் தரும் நிலைவாழ்வைப் பெறுவோம்.

சிந்தனை

"உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நலவாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை" (திபா 119: 165) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நமக்கு நலவாழ்வையும் உறுதியையும் தரும் ஆண்டவரின் வார்த்தையை வாசித்து, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!