|
|
01
மே 2020 |
|
பாஸ்கா 3ஆம் வாரம் - வெள்ளி
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 1b-8
அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்கு உள்ளாகியது.
திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின்
நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர். இறைப்பற்று
உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம் செய்து, அவருக்காக மாரடித்துப்
பெரிதும் புலம்பினர். சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையும்
பெண்களையும் இழுத்துக் கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச்
செய்தார். இவ்வாறு அவர் திருச்சபையை அழித்துவந்தார்.
சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து
வந்தனர். பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு
மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும்
அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு
அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய
ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்த குரலுடன் கூச்சலிட்டுக்கொண்டே
வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம்
பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 66: 1-3a. 4-5. 6-7a (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அல்லது:
அல்லேலூயா.
1
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
2
அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை
மேன்மைப்படுத்துங்கள்.
3a
கடவுளை நோக்கி "உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை" என்று
சொல்லுங்கள். - பல்லவி
4
"அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;
உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்" என்று சொல்லுங்கள்.
5
வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும்
செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. - பல்லவி
6
கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து
கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.
7a
அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 6: 35)
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப்
பசியே இராது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு
பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 35-40
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி: "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம்
வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு
என்றுமே தாகம் இராது. ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள்
என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை. தந்தை என்னிடம் ஒப்படைக்கும்
அனைவரும் என்னிடம் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே
தள்ளிவிடமாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல,
என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து
இறங்கி வந்தேன்.
அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி
நாளில் அனைவரையும் உயிர்த்தெழச்செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின்
திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும்
நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்.
நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று
கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 8: 1b-8
சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து
வந்தார்கள்
நிகழ்வு
நோய்வாய்ப்பட்டு, உடல்நலம் குன்றியிருந்த ஒரு மூதாட்டிக்காக இறைவனிடம்
வேண்டவேண்டும் என்பதற்காக பங்குத்தந்தை அழைக்கப்பட்டார். பங்குத்தந்தையும்
அழைப்பை ஏற்று, மூதாட்டி இருந்த வீட்டிற்குச் சென்றார். பங்குத்தந்தை
மூதாட்டியின் வீட்டிற்குச் சென்ற நேரம், அவர் படுக்கையில் படுத்துக்
கிடந்தார். அவருக்காகக் கைகளை விரித்து இறைவனிடம்
வேண்டிவிட்டு, அவர் அருகில் அமர்ந்து, அவருக்குத் தன்னம்பிக்கையை
ஊட்டுகின்ற பொதுவான வார்த்தைகளைப் பேசினார் பங்குத்தந்தை.
அப்பொழுது அந்த மூதாட்டி பங்குத்தந்தையிடம், "சுவாமி! இதுபோன்ற
வார்த்தைகளை நான் நிறையக் கேட்டுவிட்டேன். இப்பொழுது எனக்கு
நீங்கள், கடவுள் அளிக்கும் மீட்பைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்
என்பதைப் பற்றிச் சொல்லுங்கள். அது போதும்" என்றார். உடனே பங்குத்தந்தை
அவரிடம், "சிலுவையில் நமக்காக இரத்தம் சிந்திய இயேசுவின்மீது
நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால், கடவுள் தரக்கூடிய மீட்பினைப்
பெற்றுகொள்ளலாம்" என்று திருவிவிலியத்திலிருந்து பல மேற்கோள்களைக்
காட்டி, அவருக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
இதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த அந்த மூதாட்டி, "கடவுளைக்
குறித்தும் அவர் அளிக்கின்ற மீட்பினைக் குறித்தும்
தெரிந்துகொள்ளவேண்டும் என்று நீண்ட நாள்கள் ஆசைப்பட்டேன். இப்பொழுதுதான்
என்னுடைய ஆசை நிறைவேறியது" என்று பங்குத்தந்தையை கைகளைப்
கூப்பி வணங்கினார்.
இந்த நிகழ்வில் வருகின்ற மூதாட்டியைப் போன்றுதான் பலரும்
கிறிஸ்துவைக் குறித்து அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாய் இருக்கின்றார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு நாம் கிறிஸ்துவைக் குறித்து அறிவிப்பது
நம்முடைய மிகப்பெரிய கடமையாக இருக்கின்றது. முதல் வாசகத்தில்,
சிதறிய தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள், தாங்கள் சென்ற இடமெல்லாம்
நற்செய்தியை அறிவித்து வந்தனர் என்று வாசிக்கின்றோம். அது
குறித்து இப்பொழுது நாம் சிந்திப்போம்.
ஸ்தேவானின் கொல்லப்பட்ட பிறகு சிதறிய மக்கள்
யூதர்கள் ஸ்தேவானைக் கொன்றபிறகு, திருத்தூதர்களைத் தவிர மற்ற
எல்லாரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறங்களுக்குச் சிதறுண்டு
போனார்கள் என்று வாசிக்கின்றோம். இந்த இறைவார்த்தை, ஒரு முக்கியமான
செய்தி எடுத்துச்சொல்கின்றது. அது என்னவெனில், கிறிஸ்தவம் அல்லது
கிறிஸ்தவர்கள் பல இடங்களுக்குப் பரவினார்கள் என்பதாகும்.
சாத்தான், ஆண்டவருடைய நற்செய்தி எங்கும் பரவக்கூடாது, அவருடைய
அடியார்களை யூதர்கள் மூலம் கொல்லவேண்டும் என்று நினைத்தது; ஆனால்,
கிறிஸ்தவம் தடைபடுவதற்குப் பதிலாக, அது எங்கும் பரவியது.
குறிப்பாக யூதேயா, சமாரியாவின் நாட்டுப்புறங்களுக்கு பரவியது.
இவ்வாறு ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்பு, தன் சீடர்களிடம்
சொன்ன, "தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப்
பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை
வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (திப 1:8) என்ற
வார்த்தைகள் நிறைவேறுகின்றன.
ஆம், கிறிஸ்தவம் பரவக்கூடாது என்பதற்கான சதி வேலைகள் நடந்தபொழுது,
அதையெல்லாம் மீறி, கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது. அதற்கு மிகச்
சிறந்த எடுத்துக்காட்டுதான் இன்றைய முதல் வாசகம்.
நற்செய்தியை அறிவித்த மக்கள்
யூதேயா, சமாரியாவின் நாட்டுப்புறங்களுக்குச் சிதறி ஓடிய மக்கள்,
உயிருக்குப் பயந்துகொண்டு, எங்கேயும் முடங்கி இருக்கவில்லை.
மாறாக, சென்ற இடங்களிலெல்லாம் நற்செய்தி அறிவித்து வந்தார்கள்
என்று, இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதியில்
வாசிக்கின்றோம். ஆம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தலோ,
ஸ்தேவானின் இறப்பு போன்ற நிகழ்வுகளோ அவர்களை ஒன்றும் செய்யவில்லை.
அவர்கள் தாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் நற்செய்தி அறிவித்து வந்தார்கள்.
இன்றைய முதல் வாசகம் பிலிப்பைக் குறித்தும் பேசுகின்றது. இவர்
திருத்தூதர் கிடையாது; மாறாக, இவர் கிரேக்க மொழி பேசிய
திருத்தொண்டர் (திப 6:5). திருத்தூதர்கள் எருசலேமில் இருந்தார்கள்.
ஏனையோர்தான் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறங்களில் சிதறடிப்பட்டார்கள்.
அதனால் திருத்தொண்டரான பிலிப்பு சமாரியர் நகர் சென்று, அங்குள்ள
மக்களுக்கு மெசியாவைப் பற்றி அறிவிக்கின்றார். அவர் அறிவித்த
செய்திக்கு அந்த மக்கள் அப்படியே செவிசாய்க்கின்றர்கள்.
திருத்தொண்டரான பிலிப்பு மெசியாவைப் பற்றி சமாரியர்களிடம் அறிவித்ததும்
அதற்கு அவர்கள் செவிசாய்த்ததும், நமக்கு ஒரு முக்கியமான
செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், நற்செய்தியானது
எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படவேண்டும். ஏனென்றால், எல்லாரும்
மீட்புப் பெறவே கடவுள் விரும்புகின்றார் (1திமொ 2: 4). ஆகையால்,
மெசியாவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்து,
அனைவரும் இறைவன் தருகின்ற மீட்பைப் பெறுவதற்கு நாம் ஒரு கருவியாக
இருப்போம்.
சிந்தனை
"உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப்
பறைசாற்றுங்கள்" (மாற்16 : 15) என்பார் இயேசு. ஆகையால், நாம்
இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 6: 35-40
தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவரை அழிய
விடாமல், உயிர்த்தெழச் செய்யும் இயேசு
நிகழ்வு
போலந்து நாட்டில் பாரம்பரியமாகச் சொல்லப்படுகின்ற கதை இது.
ஒருகாலத்தில் நாயும் பூனையும் எலியும் நட்பாகவே இருந்தன.
இப்படியிருக்கையில் ஒருநாள், நாயானது வெளியூர் செல்லவேண்டிய
சூழ்நிலை வந்தது. இதனால் அது தன்னிடம் இருந்த முக்கியமான
ஆவணங்களைத் தன்னுடைய நண்பன் பூனையிடம் கொடுத்து, "நான்
வெளியூர் செல்லவேண்டி இருப்பதால், என்னிடமுள்ள முக்கியமான
ஆவணங்களை உன்னிடம் கொடுத்துவிட்டுப் போகிறேன். நான் வரும்
வரைக்கும் இவற்றைப் பத்திரமாக வைத்திரு. நான் திரும்பி
வந்தபிறகு உன்னிடமிருந்து வாங்கிக்கொள்கின்றேன்" என்றது.
பூனையும் சரியென்று ஒப்புக்கொண்டு, நாய் கொடுத்த ஆவணங்களைப்
வாங்கிக்கொண்டது.
பூனையால் ஓரிடத்தில் நிலையாய் இருக்க முடியாதல்லவா! அதனால் அது
நாய் கொடுத்த முக்கியமான ஆவணங்களை கொண்டு சென்று நண்பன்
எலியிடம் கொடுத்து, "இவை மிகவும் முக்கியமான ஆவணங்கள்;
இவற்றைப் பத்திரமாக வைத்திரு. நான் திரும்பி வந்து
கேட்கின்றபொழுது, அவற்றை என்னிடம் கொடு" என்றது. எலியும் அந்த
ஆவணங்களை வாங்கித் தான் இருந்த பொந்தினுள் வைத்துக்கொண்டது.
நாள்கள் சென்றன. எல்லாம் நல்லபடியாய்ப் போய்க்கொண்டிருந்தது.
மழைக்காலம் வந்தது. அதனால் எலியால் முன்புபோல் வெளியே சென்று
இரை தேட முடியவில்லை. அதனால் அது தன் நண்பன் பூனை தன்னிடம்
ஒப்படைத்திருந்த முக்கியமான ஆவணங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக்
கொரித்துக் கொரித்துச் சாப்பிடத் தொடங்கி, ஒருகட்டத்தில்
அவற்றை முற்றிலுமாகக் காலியாக்கிவிட்டது.
இது நடந்து சிலநாள்கள் கழித்து, வெளியூர் சென்றிருந்த நாய்
திரும்பி வந்து, தன்னுடைய நண்பன் பூனையிடம் சென்று, தான்
கொடுத்த முக்கியமான ஆவணங்களைத் திருப்பித் தரக்கேட்டது.
பூனையோ, "நீ கொடுத்த முக்கியமான ஆவணங்களை நம் நண்பன் எலியிடம்
கொடுத்துப் பத்திரமாக வைக்கச் சொல்லியிருக்கின்றேன். வா நாம்
இருவரும் சேர்ந்து, வாங்கிவிட்டு வருவோம்" என்று சொல்லி, பூனை
நாயைத் தன்னோடு அழைத்துக்கொண்டு, எலி இருந்த பொந்துக்குள்
சென்றது. உள்ளே சென்றதும், பூனை எலியிடம், "நான் கொடுத்த
முக்கியமான ஆவணங்களைத் திருப்பிக் கொடு" என்று கேட்டபொழுது,
அது, "எல்லாவற்றையும் நான் உணவாகச் சாப்பிட்டேன்" என்று பாவம்
போல் சொன்னது.
இதைக் கேட்ட நாய்க்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அதனால்
அது, "நான் உன்னை நம்பிக் கொடுத்த முக்கியமான ஆவணங்களை நீ ஏன்
எலியிடம் கொடுத்தாய்?" என்று பூனைமீது பாய்ந்தது. பூனையோ
எலியிடம், "நான் உன்னிடம், ஆவணங்களைப் பத்திரமாக வைத்திருக்கச்
சொல்லித்தானே ஒப்படைத்தேன்; நீ ஏன் இப்படிச் செய்தாய்?" என்று
சொல்லி எலியின்மீது பாய்ந்தது. எலியோ தன்னைத்
தற்காத்துக்கொண்டு வெளியே தப்பித்து ஓடியது. இப்படித்தான்
நட்பாய் இருந்த நாயும் பூனையும் எலியும் எதிரிகளாக மாறின.
கதை வேடிக்கையாக இருந்தாலும், இந்த பூனையையும் எலியையும்
போன்றுதான் பலர் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை,
ஒப்படைக்கப்பட்ட மனிதர்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது
கிடையாது; ஆனால், ஆண்டவர் இயேசு, இதற்கு முற்றிலும் மாறாக,
தந்தைக் கடவுள் தன்னிடம் ஒப்படைத்தவர்களை அழியவிடாமல்,
உயிர்த்தெழச் செய்பவராக இருக்கின்றார். அதைப் பற்றித்தான்
இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக்
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
தந்தை தன்னிடம் ஒப்படைத்த பணியைச் சிறப்பாய்ச் செய்யும்-செய்த
இயேசு
நற்செய்தியில், இயேசு தன்னைத் தேடிவந்த மக்களிடம், "அவர்
(தந்தை) என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல்,
இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்யவேண்டும்..." என்று
கூறுகின்றார்.
இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகளில் மூன்று செய்திகள்
இருக்கின்றன. ஒன்று, அனைவரும் உயிர்த்தெழ வேண்டும் அல்லது
மீட்படையவேண்டும் என்பது இறைவனின் திருவுளம் (1திமொ 2:4).
இரண்டு, எல்லாரும் உயிர்த்தெழவேண்டும் அல்லது மீட்படையவேண்டும்
என்றாலும், யாரெல்லாம் இயேசுவின்மீது நம்பிக்கை
கொள்கின்றார்களோ, அவர்களை அவர் உயிர்த்தெழச் செய்கின்றார்.
மூன்று, தந்தைக் கடவுள், தன் மகன் இயேசுவிடம் நம்பிக்கை
கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்ற பொறுப்பினை
அவரிடம் ஒப்படைத்தார். அப்பொறுப்பினை இயேசு மிகச் சிறப்பாகவே
செய்தார் (யோவா 17:11); அதன்மூலம் தன்மீது அவர் தன்மீது
நம்பிக்கை கொண்டோருக்கு வாழ்வளித்தார்.
அப்படியானால் இயேசு ஒரு பொறுப்புள்ள ஊழியராக இருந்து
பணியாற்றியிருக்கின்றார் என்பது உண்மையாகின்றது.
இப்படிப்பட்டவரிடம் நாம் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால்,
நிலைவாழ்வைப் பெறுவோம். ஆகையால், நாம் இயேசுவைப் போன்று
பொறுப்புள்ளவர்களாக வாழ்வோம். இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு
நிலைவாழ்வைப் பெறுவோம்.
சிந்தனை
"நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில்
நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர், எனவே பெரிய பொறுப்புகளில்
உம்மை அமர்த்துவேன்" (மத் 25: 21) என்பார் இயேசு சொல்லும்
தாலந்து உவமையில் வரும் தலைவர். ஆகையால், நாம் இயேசுவைப்
போன்று பொறுப்புள்ள ஊழியர்களாய் வாழ்வோம்; இயேசுவின்மீது
நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|