|
|
29 ஜூலை 2020 |
|
பொதுக்காலம்
17ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எனக்கு ஏன் தீராத வேதனை? நீ திரும்பி வந்தால் என்முன் வந்து
நிற்பாய்
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 15: 10, 16-21
நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த
என் தாயே, எனக்கு ஐயோ கேடு! நான் கடன் கொடுக்கவும் இல்லை; கடன்
வாங்கியதும் இல்லை. எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.
நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்; அவற்றை உட்கொண்டேன்; உம்
சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன; என் உள்ளத்திற்கு உவகை அளித்தன.
ஏனெனில் படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.
களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை.
உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன். சினத்தால்
நீர் என்னை நிரப்பியிருந்தீர். எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக்
கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!
எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே: "நீ திரும்பி வந்தால் நான் உன்னை
முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். என்முன் வந்து நிற்பாய்;
பயனில நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய்.
அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்; நீ அவர்களிடம் திரும்ப
வேண்டாம். நான் உன்னை அவர்கள்முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்;
அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்; ஆனால், உன்மேல்
வெற்றிகொள்ள மாட்டார்கள்; ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும்
நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். தீயோரின்
கையினின்று நான் உன்னைக் காப்பேன்; முரடரின் பிடியினின்று உன்னை
மீட்பேன்."
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 59: 1-2. 3. 9-10. 16-17 . (பல்லவி: 16d)
Mp3
=================================================================================
பல்லவி: நெருக்கடி வேளையில் எனக்கு அரணும் அடைக்கலமும் நீரே.
1
என் கடவுளே! என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்; என்னை
எதிர்த்து எழுவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு அளித்தருளும்.
2
தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; கொலைவெறியரிடமிருந்து
என்னைக் காத்தருளும். - பல்லவி
3
ஏனெனில், அவர்கள் என்னைக் கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்; கொடியவர்
என்னைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்; நானோ, ஆண்டவரே! குற்றம் ஏதும்
இழைக்கவில்லை; பாவம் ஏதும் செய்யவில்லை. - பல்லவி
9
நீரே என் ஆற்றல்! உமது உதவியை எதிர்பார்க்கின்றேன்; ஏனெனில்,
கடவுளே! நீரே என் அரண்.
10
என் கடவுள் தமது பேரன்பால் என்னை எதிர்கொள்ள வருவார்; கடவுள்
என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் காணும்படி செய்வார்.
- பல்லவி
16
நானோ உமது ஆற்றலைப் புகழ்ந்து பாடுவேன்; காலையில் உமது பேரன்பைப்
பற்றி ஆர்ப்பரித்துப் பாடுவேன்; ஏனெனில், நெருக்கடியான
வேளையில் நீர் எனக்கு அரணும் அடைக்கலமுமாய் இருந்தீர்.
17
என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், கடவுள்
எனக்கு அரண்; கடவுளே எனக்குப் பேரன்பு! - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 15b
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உங்களை நான் நண்பர்கள்
என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும்
உங்களுக்கு அறிவித்தேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 19-27
அக்காலத்தில்
சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப்
பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று
கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா
வீட்டில் இருந்துவிட்டார்.
மார்த்தா இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால்
என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம்
கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத்
தெரியும்" என்றார்.
இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார்.
மார்த்தா அவரிடம், "இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான்
என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை
கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம்
நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாக மாட்டார். இதை நீ நம்புகிறாயா?"
என்று கேட்டார்.
மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்!
நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது
மார்த்தா இயேசுவைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42
அக்காலத்தில்
இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம்
வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும்
சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து
அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம்
வந்து, "ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே
விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி
அவளிடம் சொல்லும்" என்றார்.
ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப்
பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே.
மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து
எடுக்கப்படாது" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எரேமியா 15: 10, 16-21
"அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்;
ஆனால், உன்மேல் வெற்றிகொள்ள மாட்டார்கள்"
நிகழ்வு
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர் ஹரோல்ட் மாக்மில்லன்
(Harold Macmillan). ஒருமுறை இவர் ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப்
பயணம் செய்தபொழுது, அங்கிருந்த (கறுப்பினத்து) மக்கள்,
"ஹரோல்ட் மாக்மில்லன் நிறவெறி பிடித்தவன்", மக்களிடத்தில் அவன்
வேறுபாடு காட்டுகின்றவன் என்கிற அடிப்படையில் முழக்கங்களை எழுப்பினார்கள்.
ஒருசிலர் அவருக்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வண்ணம்,
"ஹரோல்ட் மாக்மில்லன் ஒழிக", "நிறைவெறி பிடித்தவனே எங்களுடைய
நாட்டை விட்டுத் திரும்பிச் செல்" என்பது மாதிரியான வார்த்தைகளை
அட்டைகளில் எழுதி அதைத் தாங்கிக் பிடித்திருந்தார்கள்.
உண்மையில் ஹரோல்ட் மாக்மில்லன் நிறைவெறி பிடித்தவரும்
கிடையாது; அவர் யாரிடமும் பாடுபாடு காட்டியது கிடையாது. அவரைப்
பிடிக்காதவர்கள்தான் அவரைப் பற்றித் இப்படித் தவறான செய்தியைப்
பரப்பிக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் ஆப்பிரிக்கா வந்த ஹரோல்ட் மாக்மில்லன்,
தனக்குகெதிராக எழுந்த முழக்கங்களையும், தனக்கெதிராக
வைக்கப்பட்டிருந்த அட்டைகளையும் கண்டு அதிர்ச்சியடையவில்லை.
மாறாக, தனக்கெதிராக எழுதப்பட்டிருந்த வார்த்தைகளைக்
கொண்டிருந்த அட்டையைத் தாங்கிப்பிடித்திருந்த ஒரு பெரியவரிடம்
வேகமாகச் சென்று, "ஐயா! நீங்கள் உங்களுடைய கையில்
வைத்திருக்கின்ற அட்டையைத் தலைகீழாக வைத்திருக்கின்றீர்கள்.
கொஞ்சம் நேரமாக வைத்தால், அதில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது
என்பதை தெளிவாக வாசித்துக் கொள்வேன்" என்றார். இதைக்
கேட்டுவிட்டு அங்கிருந்த அனைவரும் சத்தமாகச் சிரித்துவிட்டனர்.
ஆம். ஹரோல்ட் மாக்மில்லன் தனக்கெதிராக எழுந்த முழக்கங்களையோ,
எழுதப்பட்டப்பட்ட வார்த்தைகளோ கண்டு கலங்கிடவில்லை. மாறாக,
அவர் அவற்றைத் துணிவோடு எதிர்கொண்டார். இறைவாக்குப் பணியைச்
செய்கின்றவருக்குக்கூட இது பொருந்தும். ஆம். கடவுளின்
வார்த்தையை மக்களுக்கு அறிவிக்கிறபொழுது, மக்களிடமிருந்து
பழிச்சொற்கள் வரும்; ஏன், உயிருக்கு ஆபத்துகூட வரும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு
அறிவிக்கின்றவர்கள் எப்படிப் பணிசெய்யவேண்டும் என்பதை இன்றைய
முதல் வாசகம் எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து
இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினர் எரேமியாவின்மீது பழி சுமத்திய மக்கள்
பாபிலோனியர்கள் யூதாவின்மீது படையெடுத்துச் சென்றபிறகு எங்கும்
மக்களுடைய அழுகுரல் கேட்டது; உணவு கிடைக்காமல் பலர்
பட்டினியில் வாடினார்கள். இந்த நிலையில் மக்களுக்குக் கடவுளின்
வார்த்தையை எடுத்துச் சொன்ன இறைவாக்கினர் எரேமியாமீது
"அவர்தான் நாடெங்கும் சண்டை சச்சரவு ஏற்படுவதற்குக் காரணம்"
என்று மக்கள் பழிசுமத்துகின்றார்கள். யூதாவில் இருந்தவர்கள்
கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைப்படி நடக்கவில்லை.
அதனால்தான் அவர்கள்மீது பாபிலோனியர்களின் படையெடுப்பு
நிகழ்ந்து; ஆனால், மக்களுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை.
கடவுளின் வார்த்தையை மக்களுக்கு அறிவித்த இறைவாக்கினர்
எரேமியாதான் அவர்களுடைய கண்ணுக்குப் பெரிதாகத் தெரிந்தார்.
அதனால் அவர்மீது வீண்பழி சுமத்துகின்றார்கள்.
இதைத் தொடர்ந்து இறைவாக்கினர் எரேமியா, என்னைப் பெற்றெடுத்த
தாயே எனக்கு ஐயோ...! கடன் வாங்கவும் இல்லை, கொடுக்கவும் இல்லை;
ஆனாலும் மக்கள் என்னைச் சபிக்கின்றனரே! என்று அழுது
புலம்புகின்றார்.
தன்னுடைய உடனிருப்பை வெளிப்படுத்தும் ஆண்டவர்
இறைவாக்கினர் எரேமியாவின் இந்தப் புலம்பலைக் கேட்கும் இறைவன்,
அவரிடம் இரண்டு முக்கியமான செய்திகளைச் சொல்கின்றார். ஒன்று,
இறைவாக்குப் பணியில் போராட்டம் இருந்துகொண்டே இருக்கும்
என்பதாகும். இரண்டு, போராட்டத்திற்கு நடுவிலும், தன்னுடைய -
கடவுளுடைய - உடனிருப்பது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்
என்பதாகும்.
இறைவாக்கினர் எரேமியாவைப் பார்த்து இறைவன் கூறும், "அவர்கள்
உனக்கு எதிராகப் போராடுவார்கள்" என்ற வார்த்தைகள், இறைவாக்குப்
பணியைச் செய்யக்கூடியவர்களுக்கு எதிராக, இறைவார்த்தையைக்
கேட்டத் திறந்தமனது இல்லாதவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டுதான்
இருப்பார்கள் என்ற உண்மையை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.
இயேசுவுக்கு எதிராகவும் இப்படித்தான் பரிசேயர்களும் மறைநூல்
அறிஞர்களும் தொடர்ந்து போராடினார்கள்; ஆனாலும், இயேசு அவர்கள்
தனக்கு எதிராகப் போராடுகின்றார்கள் என்பதற்காகத் தன்னுடைய
பணியைப் பாதியில் நிறுத்திக்கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து
தன்னுடைய பணியைச் செய்து, நிறைவுசெய்தார்.
இறைவாக்கினர் எரேமியாவைப் பார்த்து இறைவன் கூறும், "உன்னை
விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கின்றேன்" என்ற
வார்த்தைகள், இறைவாக்குப் பணியைச் செய்யக்கூடியவர்களுக்கு
எதிராக மக்கள் போராடினாலும், இறைவனுடைய உடனிருப்பும்
பாதுக்காப்பும் எப்போதும் இருக்கும் என்பதை மிக அழகாக
எடுத்துச்சொல்கின்றன.
இறைவனிடமிருந்து இப்படிப்பட்ட ஆறுதலான வார்த்தைகளைக் கேட்ட
இறைவாக்கினர் எரேமியா அதன்பிறகு இறைப்பணியைத் தொடர்ந்து
செய்கின்றார். இறைவாக்கினர் எறேமியாவின் வாழ்வில் ஏற்பட்ட
இந்தப் பிரச்சனை போன்று, நமக்கும் பிரச்சனைகள் சவால்கள்
வரலாம். இத்தகைய சூழநிலையில் நாம் இறைவனுடைய பாதுக்காபையும்
உடனிருப்பையும் உணர்ந்து, அவருடைய பணியைச் செய்வதே சிறந்தது.
சிந்தனை
"அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னோடு இருக்கின்றேன்" (எசா 43: 5)
என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் கடவுளின் உடனிருப்பை
உணர்ந்தவர்களாய், எதிர்வரும் எதிர்ப்புகளைக் கண்டு கலங்காமல்,
தொடர்ந்து இறைப்பணி செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 13: 44-46
அனைத்திற்கும் மேலாக அவருக்கு
ஏற்புடையவற்றை நாடுவோம்
நிகழ்வு
ஜமைக்காவில் உள்ள மொண்டேகோ பேவில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர்
பிரபல கண் மருத்துவரான கார்த் ஆல்பிரெட் டெய்லர் (Dr. Garth
Alfred Taylor) கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டவரான இவர்
தன்னுடைய வாழ்க்கையை ஒரு கண் மருத்துவராகத்தான் தொடங்கினார்.
திடீரென்று ஒருநாள் இவருக்கு, "நான் எல்லாரையும் போல்
வாழ்ந்துவிட்டுப் போய்விடக்கூடாது... கடவுள் எனக்குக்
கொடுத்திருக்கும் திறமையைக் கொண்டு இந்தச் சமூகத்திற்கு ஏதாவது
செய்துவிட்டுப் போகவேண்டும்" என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்குப்
பின்பு வந்த நாள்களில் இவர் யாருக்கெல்லாம் கண்பார்வை
தரமுடியுமா, அவர்களுக்கெல்லாம் தீவிரச் சிகிச்சை அளித்து,
கண்பார்வை அளித்தார். இவர் தன்னுடைய சேவையை ஜமைக்கா நாட்டோடு
மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை; உலகம் முழுவதும் கிடைக்கச்
செய்தார். அதற்காக இவர் பல நாடுகளையும் சுற்றிவந்தார்.
பெரும்பாலான நேரங்களில் இவர் தன்னிடம் கண் சிகிச்சை பெற
வந்தவர்களிடம் பணம் வசூலிகாமல், இலவசமாகவே சிகிச்சை அளித்து
வந்தார். "ஒருவர் கண்பார்வை பெறுவதன் மூலம், தன்னம்பிக்கையும்
தன்மானத்தையும் பெறுகின்றார்" என்று தொடர்ந்து வலியுறுத்தி
வந்த இவர், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியை
இறைப்பணியைச் செய்துவந்தார். அதனால்தான் இவர்
இறக்கும்பொழுது, இவருடைய இறுதிப் பயணத் திருப்பலி நடந்த பெரிய
கோயில் நிரம்பி வழிந்து, தெருக்களிலும் சாலைகளிலும் மக்கள்
நின்றுகொண்டிருந்தார்கள்.
ஆம். மருத்துவர் காரத் ஆல்பிரெட் டெய்லர், கண்பார்வையற்றவர்கள்
பார்வை பெறுவதற்காகத் தன்னுடைய உடல் பொருள், ஆவி என
அத்தனையையும் இழந்தார். அதனால்தான் கடவுள் அவருக்கு மக்கள்
மனத்திலும் விண்ணகத்திலும் நிலையானதோர் இடம் கொடுத்தார்.
இன்றைய நற்செய்தி வாசகம், விண்ணரசிற்காக நாம் எதையும் இழக்கத்
துணியவேண்டும் என்ற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது.
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
விண்ணரசைக் புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடும் இயேசு
ஆண்டவர் இயேசு, மத்தேயு நற்செய்தி பதின்மூன்றாம் அதிகாரம்
முழுவதும் விண்ணரசைப் பலவற்றோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார்
இன்றைய நற்செய்தியில் அவர் விண்ணரசை நிலத்தில் மறைந்திருந்த
புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடுகின்றார்.
ஆண்டவர் இயேசு ஏன் விண்ணரசை நிலத்தில் மறைந்திருந்த
புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடுகின்றார் என்று
தெரிந்துகொள்வது நல்லது. புதையல் அரிதாகக் கூடியது; விலைக்க
மதிக்க முடியாதது. ஆதலால், அதைக் கண்டுபிடிக்கும் எவரும் அதைத்
தனக்குச் சொந்தமாக்கத்தான் முயற்சி செய்வார். நற்செய்தியில்
இயேசு சொல்லும் புதையல் உவமையில் வருகின்ற மனிதரும், நிலத்தில்
மறைந்திருந்த புதையலைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள,
தன்னிடம் உள்ள யாவற்றையும் விற்கின்றார். அதன்மூலம் புதையல்
இருந்த நிலத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கின்றார்.
முத்து உவமையில் வருகின்ற வணிகரும், விலை உயர்ந்த ஒரு முத்தைக்
கண்டவுடன், போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக்
கொள்கின்றார். ஆகையால், புதையலையும் முத்தையும் அடைவதற்கு
உவமையில் வருகின்றவர்கள் எப்படித் தங்களிடம் இருந்த
எல்லாவற்றையும் இழக்கத் துணிந்தார்களோ, அதுபோன்று நாம்
விண்ணரசு என்ற விலைமதிக்க முடியாத புதையலை, முத்தை அடைய,
நம்மிடம் இருக்கின்ற எல்லாவற்றையும் இழக்கத் துணிய வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக விண்ணரசை நாடுவோம்
இயேசு விண்ணரசைப் புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடுவதற்கு
இன்னொரு காரணமும் இருக்கின்றது. அது என்னவெனில், நாம்
ஒவ்வொருவரும் விண்ணரசுக்கு முதன்மையான இடம் கொடுத்து
வாழவேண்டும் என்பதுதான் (மத் 6: 33). முத்து உவமையில் வருகின்ற
வணிகர் முத்தைத் தேடி அலைந்தார் என்று வாசிக்கின்றோம். அது
போன்று நாம் விண்ணரசைத் தேடவேண்டும்; அதற்காக எதையும் இழக்கத்
துணியவேண்டும். அப்படி நாம் தேடுகின்றபொழுது, அதை நிச்சயம்
கண்டுகொள்வோம்; கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்வோம் என்பது
உறுதி.
ஆகையால், நாம் அனைத்திற்கும் மேலாக விண்ணரசைத் தேடுவோம்.
அதன்மூலம் அதில் பங்கு பெறும் உரிமையைப் பெறுவோம்.
சிந்தனை
"என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும்
எவரும் அதைக் காத்துக் கொள்வார்" (மாற் 8: 35) என்பார் இயேசு.
ஆகையால், விண்ணரசு என்ற புதையலை, முத்தை அடைவதற்கு நம்மிடம்
இருக்கின்ற எல்லாவற்றையும் இழக்கத் துணிவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை (ஜூலை 29) தூய
மார்த்தாவின் விழா
இன்று திருச்சபையானது தூய மார்த்தாவின் விழாவைக்
கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளில் இவரது வாழ்வும், பணியும்
நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப்
பார்ப்போம்.
மார்த்தா பெத்தானியாவை சேர்ந்தவர். மரியா, மற்றும் லாசர்
இவருடைய சகோதர, சகோதரி ஆவர். இவர்கள் மூவரும் ஆண்டவர்
இயேசுவால் அதிகமாக அன்பு செய்யப்பட்டவர்கள் (யோவான் 11:5).
மேலும் மார்த்தா எப்போதுமே விருந்தோம்பலுக்கும்,
உபசரிப்புக்கும் பெயர் போனவராக இருக்கின்றார். ஆண்டவர் இயேசு
மார்த்தா, மரியாவின் வீட்டிற்கு சென்றபோதெல்லாம் மார்த்தாதான்
இயேசுவை உபசரிக்கிறார் (லூக் 10:40, யோவான் 12:2).
தொடக்க நூல் 18 ஆம் அதிகாரத்தில் வரும் ஒரு நிகழ்ச்சி.
விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஆபிரகாம் மம்ரே என்ற
இடத்தில் நின்றுகொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர்கள் மூவர்
அங்கே நிற்பதைக் காண்கிறார். உடனே ஆபிரகாம் அவர்கள் மூவரையும்
தன்னுடைய கூடாரத்திற்குள் அழைத்து, அவர்களுக்கு விருந்து
படைக்கிறார். ஆபிரகாம் அளித்த விருந்தினை உண்டு, மகிழ்ச்சி
அடைந்த அம்மூவரும் ஆபிரகாம், சாரா தம்பதியினருக்கு குழந்தை
வரம் தருகிறார்கள் (தொநூ 18:14).
இங்கே ஆபிரகாம் கடவுளின் வரத்தைப் பெற அவர் அளித்த
விருந்துதான் காரணமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகது.
மார்த்தாவும் தன்னுடைய இல்லத்தைத் தேடிவந்த ஆண்டவர்
இயேசுவுக்கு சிறப்பான விதத்தில் விருந்தளித்து,
விருந்தோம்பலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக
விளங்குகின்றார்.
ஒருகாலத்தில் விருந்தினர்களை கடவுளாகப் பார்க்கும் வழக்கம்
போய் இன்றைக்கு விருந்தினர்களைக் கண்டால் தெறித்து ஓடும்
நிலையே இருக்கிறது. விருந்தோம்பல் பண்பு நம்மிடமிருந்து
அடியோடு மறைந்து போய்விட்டது. இந்த வேளையில் மார்த்தா நமக்கு
விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
கலைவாணர் என்.எஸ்.கே விருந்தோம்பலுக்கு சிறந்த முன்மாதிரியாய்
இருப்பார் என்று சொல்வார்கள். அவர் தன்னுடைய வீட்டிற்கு யார்
பசியோடு வந்தாலும், அவர்களை உள்வீட்டிற்குள் அழைத்து,
அவர்களுக்கு விருந்துகொடுப்பார். அத்தகைய தயாள குணம்
நிறைந்தவராக இருப்பார்.
ஒருநாள் இரவு அவர் ஒரு நிகழ்ச்சியை முடிந்துவிட்டு தன்னுடைய
வீட்டிற்கு காரிலே பயணம் செய்துகொண்டிருந்தபோது முப்பதுக்கும்
மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய தோள்மீது மண்வெட்டியைப்
போட்டுக்கொண்டு, சாலையோரமாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.
இதைப் பார்த்த உடனே தன்னுடைய காரை நிறுத்திய அவர் அவர்களிடம்,
"எதற்காக இந்த இரவில் இப்படி நடந்து
சென்றுகொண்டிருக்கிறீர்கள்?" என்று காரணத்தைக் கேட்டார்.
அதற்கு அவர்களோ "எங்களை வேலைக்கு அழைத்த முதலாளி வேலை
இல்லையென்று திருப்பி அனுப்பிவிட்டார். அதனால்தான் கையில்
பணமில்லாமல், உணவுல்லாமல் இப்படி நீண்டதூரம் நடந்து வருகிறோம்"
என்றார்கள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கலைவாணர் தன்னுடைய வாகன
ஒட்டியையும், உடன்வந்த இன்னொரு நபரையும் அழைத்து, பக்கத்தில்
ஏதாவது கடைகள் இருந்தால், உணவு வாங்கிக்கொண்டு வருமாறு
கேட்டுக்கொண்டார். அவர்களும் சிறுது நேரத்தில் உணவு
வாங்கிக்கொண்டு வந்தார்கள். கலைவாணர் அந்த உணவுப் பொட்டலங்களை
விவசாயிகளிடம் கொடுத்து, உண்ணக் கொடுத்தார். அதோடு
மட்டுமல்லாமல், தன்னிடம் இருந்த பணத்தையும் அவர்களுக்கு
சரியாகப் பகிர்ந்து கொடுத்து, அவர்களைப் பத்திரமாக
வீட்டிற்குப் போகுமாறு கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு பசியாய் இருந்த விவசாயிகளுக்கு உணவளித்து, கலைவாணர்
விருந்தோம்பலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.
தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் நாமும்
விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும்.
அடுத்ததாக மார்த்தாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
அவளிடம் விளங்கிய நம்பிக்கைதான். இறந்த இலாசரைப் பார்க்க வந்த
இயேசுவிடம் மார்த்தா, "ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால்
என்னுடைய சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர்
கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்று
எனக்குத் தெரியும்" என்று சொல்கிறார். அதற்கு இயேசு, "உன்
சகோதரன் உயிர்த்தெழுவான்" என்கிறார்... உடனே மார்த்தா, "நீரே
மெசியா!, நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என
நம்புகிறேன்" என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கை அறிக்கையை
வெளியிடுகிறார்.
இவ்வார்த்தைகளை நாம் கூர்ந்து நோக்கும்போது அவர் எந்தளவுக்கு
கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்று நமக்கு
புரியும். ஆகவே, மார்த்தா எப்படி இயேசுவிடம் நம்பிக்கையோடு
கேட்டு, கேட்டதைப் பெற்றுக்கொண்டாரோ அது போன்று நாமும்
இறைவனிடம் நம்பிக்கையோடு கேட்டால், எல்லா வரமும் கைகூடும்
என்பது உண்மை.
நிறைவாக மார்த்தா நற்செய்தி அறிவிப்புக்கும் சிறந்த
முன்மாதிரியாய் விளங்கினார். இவரைக் குறித்துச் சொல்லப்படும்
ஒரு தொன்மம் (legend). இயேசு லாசரை உயிர்ப்பித்த செய்தியைக்
கேள்விப்பட்ட யூதர்கள் இலாசரையும், அவருடைய சகோதரிகள்
இருவரையும் அழித்தொழிக்க வேண்டும் என்று திட்டம்
தீட்டினார்கள். எனவே அவர்கள் மூவரையும் ஒரு சிறு படகில் ஏற்றி,
அதில் துடுப்பு எதுவும் இல்லாமல் அனுப்பி வைத்தனர். அந்த
படகானது கிழக்கு பிரான்சை அடைந்தது. அங்கே லாசர் மற்றும்
மார்த்தா, மரியா நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.
இவ்வாறு மார்த்தா நற்செய்தி அறிவிப்புப் பணியிலும் சிறந்து
விளங்கினார். ஆகவே, தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும்
நாமும் அவரைப் போன்று விருந்தோம்பலில், கடவுள் மீது கொண்ட
நம்பிக்கையில், நற்செய்தி அறிவிப்புப் பணியில் சிறந்து
விளங்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|