|
|
28 ஜூலை 2020 |
|
பொதுக்காலம்
17ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை
முறித்துவிடாதீர்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 14: 17-22
ஆண்டவர் எரேமியாவுக்குக் கூறியது: நீ அவர்களுக்கு இந்த
வாக்கைக் கூறு: என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்;
இடைவிடாது சொரியட்டும்; ஏனெனில் என் மக்களாம் கன்னி மகள்
நொறுங்குண்டாள்; அவளது காயம் மிகப் பெரிது. வயல்வெளிகளுக்குச்
சென்றால், இதோ! வாளால் மடிந்தவர்கள்! நகரில் நுழைந்தால், இதோ!
பசியால் நலிந்தவர்கள்! இறைவாக்கினரும் குருக்களும் தங்களுக்கு
முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர்.
நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா? சீயோனை உம் உள்ளம்
வெறுத்துவிட்டதா? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை
நொறுக்கினீர்? நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்; பயனேதும்
இல்லை! நலம் பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்; பேரச்சமே
மிஞ்சியது!
ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும்
நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம்
செய்தோம். உம் பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்ளாதீர்; உம்
மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்; நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை
நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர்.
வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டா?
வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா? எங்கள் இறைவனாகிய ஆண்டவரே,
நீர் அல்லவா அதைச் செய்யக்கூடியவர்; நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம்;
ஏனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 79: 8. 9. 11,13 . (பல்லவி: 9c)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.
8
எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம்
எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப் பட்டிருக்கின்றோம்.
- பல்லவி
9
எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு
எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை
விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். - பல்லவி
11
சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத்
தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக.
13
அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள்
என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை
எடுத்துரைப்போம். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம், அதை
விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும்
நிலைத்திருப்பர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக
முடிவிலும் நடக்கும்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 36-43
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார்.
அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, "வயலில் தோன்றிய களைகள்
பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்" என்றனர். அதற்கு
அவர் பின்வருமாறு கூறினார்:
"நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல
விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச்
சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்
முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.
எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக
முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார்.
அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி
கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில்
தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது
நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர்.
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எரேமியா 14: 17-22
"உமக்கெதிராகப் பாவம் செய்தோம்"
நிகழ்வு
ஒரு நாடு தன்னுடைய எதிரி நாட்டின்மீது படையெடுப்பதற்காகத் தயாராக
இருந்தது. அப்பொழுது படைவீரர்களுக்கு முன்பாகத் தோன்றிய படைத்தளபதி,
"வீரர்களே! இப்பொழுது நாம் நம்முடைய எதிரி நாட்டின்மீது
போர்தொடுக்கப் புறப்பட இருக்கின்றோம். அதற்கு முன்னதாக உங்களிடம்
நான் ஒருசில வார்த்தைகளைச் சொல்லவேண்டும். நான் உங்களிடம் வலியுறுத்திச்
சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். நாம் எதிரிநாட்டின்மீது
போர்தொடுக்கச் செல்லும்பொழுது, நம்முடைய கவனம் முழுவதும் எதிரிகளை
வீழ்த்துவதில்தான் குறியாக இருக்கவேண்டுமே ஒழிய, போகிற வழியில்
இருக்கின்ற எதையாவது கவர்வதில் இருக்கக் கூடாது. இதையும் மீறி,
யாராவது ஏதாவது கவர்ந்தால், அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்"
என்றார்.
இதற்குப் பிறகு படைத்தளபதி முன்னால் செல்ல, வீரர்கள் அனைவரும்
அவருக்குப் பின்னால் குதிரையில் வேகமாகச் சென்றார்கள். வழியில்
ஒரு திராட்சைத் தோட்டம் வந்தது. அதைப் பார்ப்பதும், படைவீரர்களுள்
ஒருவருக்கு நாக்கில் எச்சில் ஊறியது. உடனே அந்தப் படைவீரர் தன்னுடைய
குதிரையை நிறுத்தி, திராட்சைத் தோட்டத்திற்குள் புகுந்து, கொஞ்சம்
திராட்சைப் பழங்களைப் பறித்து, அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டே
தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார்.
இதற்கு நடுவில் படைவீரர் ஒருவர் திராட்சைத் தோட்டத்திற்குள்
புகுந்து, பழங்களைப் பறித்துச் சாப்பிட்ட செய்தி, படைத்தளபதிக்குத்
தெரிய வந்தது. உடனே படைத்தளபதி தவறு செய்த அந்தப் படைவீரரைத்
தன் முன்வருமாறு அழைத்தார். அவரும் அவர்முன்னே சென்றார்.
"நான்தான் வருகின்ற எதையும் கவரக்கூடாது என்று கட்டளையிட்டேனே!
அதையும் மீறி நீ ஏன் திராட்சைத் தோட்டத்திற்குள் புகுந்து,
திராட்சைப் பழங்களைப் பறித்தாய்...? என்னுடைய கட்டளையை மீறியதற்காக
உன்னை நான் என்ன செய்கின்றேன் பார்" என்று சொல்லி அந்தப் படைவீரரின்
தலையைத் துண்டிக்க வாளை ஓங்கினார் படைத்தளபதி.
அப்பொழுதுகூட அந்தப் படைவீரர் திராட்சைப் பழங்களை ருசித்துச்
சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து வியந்துபோன படைத்தளபதி,
"இப்பொழுது நான் உன்னுடைய தலையை வெட்டப் போகிறேன. அப்படியிருந்தும்,
கொஞ்சம்கூட அச்சமில்லாமல், இப்படித் திராட்சைப் பழங்களைச்
சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றாயே...! உனக்கு உன்னுடைய உயிர்மீது
சிறிதும் அக்கறையில்லையா?" என்றார். அதற்குப் படைவீரர், "நான்
இந்தத் திராட்சைப் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டதற்காகத்தான்
கொல்லப்பட்டப் போகிறேன் என்று எனக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது.
அப்படியிருக்கும்பொழுது அதற்காக வருந்திக்கொண்டிருக்கவா
முடியும்? அதனால்தான் இந்தத் திராட்சைப் பழங்களை மகிழ்ச்சியாகச்
சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்" என்றார். படைவீரர் சொன்ன பதில்
படைத்தளபதிக்கு வியப்பாக இருந்தாலும், தன்னுடைய கட்டளையை மீறிய
குற்றத்திற்காக அவர் படைவீரரைத் தலைவெட்டிக் கொன்றார்.
ஆம். தவறு செய்கின்றவர் அதற்கான தண்டனையைப் பெறுவார். அந்த உண்மையைத்தான்
இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இறைவாக்கினர் எரேமியா
நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், கடவுளின் கட்டளையை
மீறிச் செயல்பட்ட, யூதாவில் இருந்த மக்கள், அதற்கான தண்டனையைப்
பெறுவதற்குக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் நடந்த மக்கள்
இன்றைய முதல் வாசகமானது, கி.மு.587 ஆம் ஆண்டு, யூதாவின் மீது
நடந்த பாபிலோனியர்களின் படையெடுப்பிறகுப் பிறகு எழுதப்பட்ட பகுதியாக
இருக்கின்றது. பாபிலோனியர்களின் படையெடுப்பிற்கு பிறகு
யூதாவில் எங்கும் மரண ஓலங்கள் கேட்டன; மக்கள் பட்டினி கிடந்தார்கள்.
அதே நேரத்தில் மக்கள் தாங்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம்
செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தார்கள்.
யூதாவில் ஏற்பட்ட இப்படிப்பட்ட நிலைக்கு காரணம், அங்கிருந்தவர்கள்
கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் நடந்ததுதான். கி.பி 722
ஆம் ஆண்டு இஸ்ரயேல்மீது அசீரியர்கள் நடத்திய தாக்குதலே
யூதாவில் இருந்தவர்களுக்குப் பெரிய அனுபவமாக இருந்திருக்கும்!
ஆனாலும்கூட, யூதாவில் இருந்தவர்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல்,
தொடர்ந்து கடவுளின் கட்டளையை மீறி நடந்து, பாவம் செய்தார்கள்.
ஆகவே அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
மக்கள் தாங்கள் செய்த தவற்றுக்காகத் தண்டிக்கப்பட்டாலும், ஆண்டவராகிய
கடவுள் அவர்களுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையைக் கண்டு கண்ணீர்
சொரிகின்றார். ஆம், கடவுளின் விரும்பம் நாம் அழியவேண்டும் என்பது
கிடையாது. மாறாக நாம் மனம் மாறவேண்டும். ஆகையால், நம்மீது பேரன்பு
கொண்டிருக்கின்ற இறைவனிடம் நாம் நம்முடைய குற்றத்தை உணர்ந்து
திருந்தி, திரும்பி வருவோம். அதன்மூலம் அவருடைய அன்புக்குரிய
மக்களாவோம்.
சிந்தனை
"யாரும் அழிந்துபோகாமல், எல்லாரும் மனம்மாறவேண்மென
விரும்புகிறார்" (2 பேது 3: 9) என்பார் புனித பேதுரு. ஆகையால்,
நாம் அழிய வேண்டும் என்று அல்ல, மனம்மாறி வாழ்வுபெற வேண்டும்
என்று விரும்பும் ஆண்டவரிடம் திரும்பி வந்து, அவருக்கு உகந்த
வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 13: 36-43
அழிந்துபோக வேண்டும் என்று அல்ல; மனம்மாற
வேண்டும் என்று விரும்பும் கடவுள்
நிகழ்வு
இங்கிலாந்து நாட்டை ஆண்டு வந்தவர் இரண்டாம் ஹென்றி என்ற மன்னர்.
இவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் இவரையே எதிர்த்துக் கலகம்
செய்தான். இதை அறிந்த இரண்டாம் ஹென்றி, அவனைத் துரத்திச்
சென்று பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு நகரிலிருந்து
பிடித்துக்கொண்டு வந்து, வீட்டுச்சிறையில் அடைத்து வைத்தார்.
வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட அவன், தொடக்கத்தில் முரண்டு
பிடித்துக்கொண்டே இருந்தான்; நாள்கள் மெல்ல உருண்டோடியபோது,
அவன் தன் தந்தைக்கு எதிராகச் செய்த தவற்றை உணர்ந்து மனம் வருந்தத்
தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து அவன், தன்னைக் காவல் காத்துக்கொண்டிருந்த காவலரை
அழைத்து, அவர்மூலமாக தன் தந்தையிடம், "நான் என்னுடைய குற்றத்தை
உணர்ந்து மனம்மாறிவிட்டேன்; இப்பொழுது நான் உங்களிடம் அதற்காக
மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கின்றேன்" என்று சொல்லச் சொல்லி
அனுப்பினான். இதை அந்தக் காவலர் மன்னர் இரண்டாம் ஹென்றியிடம்
சொன்னபோது, அவர் தனது மகனை மன்னித்து ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
மாறாக அவர் அந்தக் காவலரிடம், "எனக்கு எதிராகக் கலகம் செய்த
அவனை, அவன் என்னுடைய மகனாக இருந்தாலும், எப்படி மன்னித்து ஏற்றுக்கொள்வது...?
அதெல்லாம் முடியாது...!" என்று சொல்லி, காவலரை அங்கிருந்து அனுப்பிவிட்டார்.
காவலர் இச்செய்தியை இரண்டாம் ஹென்றியின் மகனிடம் சொன்னபோது,
அவன் பெரிதும் வருந்தினான். இதற்குப் பின்பு அவன் சரியாகச்
சாப்பிடவில்லை. இதனாலேயே அவனுடைய உடல் நலம் குன்றிப் படுத்த படுக்கையானான்.
சில நாள்களுக்குப் அவன் தன்னுடைய இறப்பு நெருங்கிவருவதை
உணர்ந்து, காவலரை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி
வந்துவிட்டது; இன்னும் ஓரிரு நாள்களில் நான் இறந்து விடுவேன்.
அதனால் நான் இறந்தபின் என்னைச் சாக்கு உடையால் உடுத்தி,
சாம்பலில் படுக்கவைத்து, நான் என்னுடைய தந்தையிடம் மன்னிப்புக்
கேட்பதைக் குறிக்கும் விதத்தில், என் கைகளைக் குவித்தவாறு
அவரிடம் கொண்டு செல்லுங்கள். அப்பொழுதாவது அவர் என்னை
மன்னிப்பார்" என்றான்.
அவன் சொன்னது போன்றே, அவன் இறந்த பிறகு, அவனைச் சாக்கு உடையால்
உடுத்தி, சாம்பலில் படுக்கவைத்து, கைகளைக் குவித்தவாறு அவனுடைய
தந்தையிடம் கொண்டு சென்றார் காவலர். அவனை அந்நிலையில்
பார்த்துவிட்டு, அவனுடைய தந்தை இரண்டாம் ஹென்றி, "என்னுடைய
மகன் தான் செய்த குற்றத்திற்கு இந்தளவுக்கு வருந்தியும் நான்
அவனை மன்னிக்காத பெரும் பாவியாகி விட்டேனே" என்று சொல்லிப்
பெரிதும் வருந்தினார்.
ஆம். இன்றைக்கு மனிதர்கள் ஒருவர் செய்த குற்றத்தை
மன்னிப்பதற்கும், அவர்களைப் பொறுத்துக் கொள்வதற்கும் தயாராக
இல்லை; ஆனால் ஆண்டவர் மனிதர்களாகிய நாம் செய்யக்கூடிய
குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளவும் மன்னிக்கவும் தயாராக
இருக்கிறார். இத்தகைய செய்தியை எடுத்துச்சொல்லும் இன்றைய
நற்செய்தி வாசகத்தைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மனிதர்கள் மனம் மாறுவதற்காகப் பொறுமையோடு இருக்கும் ஆண்டவர்
இன்றைய நற்செய்தியில் இயேசு, வயலில் தோன்றிய களைகள் உவமைக்குத்
தன்னுடைய சீடர்களுக்கு விளக்கமளிக்கிறார். நிலத்தில்
விதைக்கப்பட்ட களைகள் என்பவை தீயவனாகிய சாத்தானால்
விதைக்கப்பட்டவையாக இருக்கின்றன. நிலக்கிழார் களைகளை உடனே
அப்புறப்படுத்தவில்லை. மாறாக, தீயவர்கள் மனம் மாறவேண்டும்
என்பதற்காகக் கடவுள் பொறுமையோடு இருப்பது போன்று அவர் அறுவடை
வரை, பொறுமையோடு இருக்கிறார்.
இக்கருத்தை புனித பேதுரு தன்னுடைய இரண்டாவது திருமுகத்தில்
இவ்வாறு பதிவு செய்வார்: "கடவுள் காலம் தாழ்த்துவதில்லை.
மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடு இருக்கிறார். யாரும்
அழிந்துபோகாமல், எல்லாரும் மனம்மாற வேண்டுமென விரும்புகிறார்
(2 பேது 3:9). ஆகவே பொறுமையுள்ள கடவுளிடம் நாம் நம்முடைய
குற்றத்தை உணர்ந்து, திருந்திவருவதே சாலச் சிறந்த செயலாகும்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிக்கும்
ஆண்டவர்
இன்றைய நற்செய்தி வாசகம் கடவுளின் பொறுமையை எடுத்துக்கூறுகின்ற
அதேவேளையில், கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு
ஏற்ப கைம்மாறு அளிக்கிறார் என்ற செய்தியையும்
எடுத்துக்கூறுகிறது. அறுவடையின்போது எப்படிக் கலளைகள்
கட்டுகளாகக் கட்டப்பட்டுத் தீயில் எரிக்கப்படுகின்றனவோ,
அதுபோன்று உலக முடிவில் தீயவர்கள் தீச் சூளையில்
தள்ளப்படுவார்கள்; ஆனால் நேர்மையாளர்கள் கதிரவனைப் போன்று ஒளி
வீசுவார்கள்.
நாம் தீயவர்களாக இருக்கிறோமா அல்லது நேர்மையாளர்களாக
இருக்கிறோமா என்று நம்முடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப்
பார்த்து, நேர்மையாக வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
"ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும்
பேரன்பும் உள்ளவர்' (திபா 103: 8) என்பார் திருப்பாடல்
ஆசிரியர். ஆகவே பொறுமையோடு இருக்கும் இறைவனிடத்தில், நாம்
நம்முடைய குற்றங்களை உணர்ந்து, திருந்திவருவோம்; நேர்மையாக
நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|