|
|
27 ஜூலை 2020 |
|
பொதுக்காலம்
17ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தீய மக்கள், எதற்கும் பயன்படாத இந்தக்
கச்சையைப் போல் ஆவார்கள்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம்
13: 1-11
ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: "நீ உனக்காக நார்ப் பட்டாலான
ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக்கொள். அதைத் தண்ணீரில்
நனைக்காதே." ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில்
கட்டிக்கொண்டேன்.
எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது: "நீ வாங்கி
உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக்கொள்: எழுந்து
பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்து
வை." ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில்
அதனை மறைத்து வைத்தேன்.
பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: "எழுந்து
பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட
கச்சையை அங்கிருந்து எடுத்துவா." அவ்வாறே நான் பேராத்திற்குச்
சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத்
தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப்
போயிருந்தது.
அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: "ஆண்டவர் கூறுவது
இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன். என் சொற்களுக்குச்
செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப் பிடிவாதத்தின்படி நடந்து,
வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து
வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப்
போல் ஆவார்கள். கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல இஸ்ரயேல்,
யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள்
எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச்
செய்தேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை" என்கிறார் ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
இச 32: 18-19, 20-21 . (பல்லவி: 18a) Mp3
=================================================================================
பல்லவி: உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.
18
"உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை
மறந்துவிட்டாய்'.
19
தம் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு
அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். - பல்லவி
20
அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்
கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக்
கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை
அறவே அற்ற பிள்ளைகள். - பல்லவி
21
இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால்
எனக்கு சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்;
மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யாக் 1: 18
அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி
உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர்
விரும்பினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள்
அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35
அக்காலத்தில்
இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: "ஒருவர் கடுகு
விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்
விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும்
விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும்
அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்."
அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: "பெண் ஒருவர்
புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து
வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு
மாவுக்கு ஒப்பாகும்."
இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார்.
உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. "நான் உவமைகள்
வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்"
என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மத்தேயு 13: 31-35
சிறிய அளவில் தொடக்கம்; பெரிய அளவில் மாற்றம்
நிகழ்வு
பெரியவர் ஒருவர் துறைமுகத்தில் பணியாற்றி வந்த தன்னுடைய மகனைப்
பார்க்கத் துறைமுகத்திற்கு வந்தார். அவர் அங்கு வந்து, தன்னுடைய
மகனைச் சந்தித்து அவனோடு பேசிக்கொண்டிருக்கும்பொழுது, கடலுக்குள்
சற்று தள்ளி, பாய்மரக் கப்பல் ஒன்று நின்றுகொண்டிருப்பதைக்
கொண்டார். அந்த நேரத்தில் காற்று மிக வேகமாக வீசியது. அப்படியிருந்தும்
அந்தப் பாய்மரக் கப்பல் நகராமல், அங்கே நின்றுகொண்டிருந்தது.
அதைப் பார்த்துவிட்டுப் பெரியவர் தன்னுடைய மகனிடம், "தம்பி!
காற்று இவ்வளவு வேகமாக வீசுகின்றது. அப்படியிருந்தும் இந்தப்
பாய்மரக் கப்பல் கொஞ்சம்கூட முன்னேறாமல், இருந்த இடத்தில் அப்படியே
இருக்கின்றதே...! அது ஏன்?" என்றார். "அப்பா! இந்தப் பாய்மரக்
கப்பல் கொஞ்சம்கூட முன்னேறாமல், இருந்த இடத்தில் அப்படியே இருக்கக்
காரணம், கடலுக்குள் இருக்கும் நங்கூரம் இதைக் பற்றிப்
பிடித்துக் கொண்டிப்பதால்தான்" என்றான் மகன்.
உடனே பெரியவர் தன்னுடைய மகனிடம், "கடலுக்குள் இருக்கும் நங்கூரம்
எப்படி இந்தப் பாய்மரக் கப்பலைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருப்பதால்,
இது கொஞ்சம் கூட முன்னேற முடியாமல் இருக்கின்றதோ, அப்படி சில
மனித்ரகளையும் அவர்களுடைய ஆசைகள், உலகக் கவலைகள் ஆகியவை பற்றிப்
பிடித்துக்கொண்டிருந்தால், அவர்கள் முன்னேறாமல், மாறாமல் அப்படிய்
இருக்கின்றார்கள்" என்றார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவர் சொன்னது போன்று, இன்று
ஒருசிலர்கள் ஒருசிலவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பதால்
அவர்கள் முன்னேறாமல், மாற்றம் அடையாமல் இருக்கின்றார்கள்; ஆனால்,
இயேசு அப்படிக் கிடையாது. அவர் ஆண்டவர் ஒருவரைத் தவிர வேறு எதையும்
பற்றிக்கொண்டிருக்கவில்லை. அதனால்தான் அவர் தொடங்கிய விண்ணரசு
எங்கும் பரவி, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இன்றைய நற்செய்தியில் இயேசு விண்ணரசைக் கடுகு விதைக்கும்,
புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகின்றார். இயேசு ஏன் விண்ணரசைக் கடுகு
விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிட வேண்டும்...? இதன்வழியாக
இயேசு நமக்குச் சொல்லக்கூடிய செய்தி என்ன? என்பன குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பாப்போம்.
விண்ணரசைக் கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிடும்
இயேசு
விண்ணரசை நிலத்தில் விதைக்கப்பட்ட விதை, வயலில் தோன்றிய களைகள்...
ஆகிய பலவற்றிற்கும் ஒப்பிடுகின்ற இயேசு, இன்றைய நற்செய்தியில்
அதை கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகின்றார்.
காரணம், இரண்டும் அளவில் சிறிதாக இருந்தாலும், அவற்றிலிருந்து
அல்லது அவற்றால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்பதாலாகும். அதைப்
போன்றுதான் விண்ணரசும் நாசரேத்து என்ற ஒரு சாதாரண ஊரில் தொடக்கப்பட்டு,
உலகமெங்கும் நிறைந்து இருக்கும். இயேசு சொல்லக்கூடிய இரண்டு
உவமைகளும் நமக்கொரு முக்கயமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது.
அதைக் குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
சிறிதாகத் தொடங்கி, பெரிதாக மாற்றம் காண்போம்
கடுகு விதையும், புளிப்பு மாவும் அளவில் சிறியதுதான்; ஆனால்,
அவற்றிலிருந்து மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அதுபோன்று விண்ணரசைப்
பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள்
சிறியதாக இருந்தாலும், அவற்றால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள்தான் புனித பவுலும், புனித
பிரான்சிஸ் சவேரியாரும்.
பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கப் பவுல் என்ற ஒற்றை மனிதர்
எடுத்த முயற்சிகளை நாம் மறந்துவிடமுடியாது. அவரோடு ஒருசிலர்
உடன் பணியாளர்களாகப் பணியாற்றினாலும், பிற இனத்தாருக்கு ஆண்டவரின்
நற்செய்திக் கொண்டு சென்றதில் புனித பவுல் ஒரு முன்னோடிதான்.
அதைப்போன்று இந்தியாவிலுள்ள கடற்கரை ஊர்களுக்கும் சீனாவிற்கும்
ஜப்பானுக்கும் ஆண்டவரின் நற்செய்தியைக் கொண்டுசென்ற புனித
பிரான்சிஸ் சவேரியாரும். இவர் தனியொரு மனிதனாகவே பல இடங்களுக்குச்
சென்று நற்செய்தி அறிவித்தார். அப்படியானால், நாம்
"சிறியவர்களாக" இருந்தாலும், சிறிதளவில் நற்செய்தியை அறிவித்தாலும்,
அதனால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்பது உறுதி
எனவே, நாம் இயேசுவின் விண்ணரசு பற்றிய நற்செய்தி எல்லா மக்களையும்
சென்றடைய, நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வோம் இறைவன்
நிச்சயம் அவற்றிலிருந்து பெரிய மாற்றங்களைக் கொண்டு வாருவார்.
சிந்தனை
"இதன் பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக்
கண்டேன்" (திவெ 7:9) என்பார் நற்செய்தியாளர் யோவான். ஆம். இயேசுவால்
தொடங்கப்பட்ட விண்ணரசு, யாராலும் எண்ணிக்கையிட முடியாத அளவுக்கு
மக்களை உள்ளடக்கியது. ஆகையால், விண்ணரசு இன்னும் பல மக்களையும்
உள்ளடக்க, நாம் இயேசு விட்டுச் சென்ற நற்செய்திப் பணியைத் தொடந்து
செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
எரேமியா 13: 1-11
"கடவுளோடு உள்ள உறவை முறித்த மக்கள்"
நிகழ்வு
மலையடிவாரத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய மனைவி
மற்றும் மகனோடு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்த
விவசாயினுடைய மகன் பக்கத்து ஊரில் இருந்த ஓர் அரசு பள்ளியில்
பன்னிரண்டாம் வகுப்புப் படித்து வந்தான். அவன் படிப்பில்
கெட்டிக்காரன் என்று ஊரே மெச்சியது. அதைக்
கேட்கும்பொழுதெல்லாம் விவசாயி தன்னுடைய மகனை நினைத்து பெருமிதம்
அடைந்தார்.
அந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அதில் விவசாயினுடைய
மகன்தான் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தான். இதனால் விவசாயி
தன்னுடைய மகன் பக்கத்தில் படிப்பதை விடவும், பட்டணத்திற்குச்
சென்று படித்தால் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வருவான் என்று
நினைத்து, தன்னிடம் இருந்த கொஞ்ச நிலத்தையும் விற்று, அதைக்கொண்டு
அவனைப் பட்டிணத்தில் இருந்த ஒரு பெரிய கல்லூரில் சேர்த்துப் படிக்க
வைத்தார்.
தொலைபேசி வசதி அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில், மகனிடமிருந்து
ஒவ்வொரு வாரமும் விவசாயிக்குக் கடிதம் வந்தது. இவர் அந்தக் கடிதத்தைப்
படிக்கத் தெரிந்தவர்களிடம் கொடுத்து, படிக்கக் கேட்டு, உள்ளம்
பூரிப்படைந்தார். மாதங்கள் மெல்ல உருண்டிய பொழுது, பட்டணத்தில்
படித்துக்கொண்டிருந்த மகனிடமிருந்து கடிதம் வருவது குறைந்தது.
ஒருகட்டத்தில் மகனிடமிருந்து விவசாயிக்குக் கடிதம் வருவது
முற்றிலுமாக நின்றுபோனது. இதனால் தன்னுடைய மகனுக்கு என்ன ஆயிற்றோ
என்ற பதற்றத்தில் இவர் அவனைப் பார்ப்பதற்காக, அவன் படித்து வந்த
கல்லூரிக்குச் சென்றார்.
விவசாயி தன் மகன் படித்துவந்த கல்லூரிக்குச் சென்ற நேரம், காலை
நேரம் என்பதால், கல்லூரி வாசலில் நின்றுகொண்டு, தன்னுடைய மகனுடைய
வருகைக்காக் காத்துக் கொண்டிருந்தார். அந்தக் கல்லூரியில் படித்த
மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருந்தார்கள். அந்தக்
கூட்டத்திற்கு நடுவில் இரு நண்பர்களோடு சேர்ந்து மகன் வந்தான்.
இவர் அவனைப் பார்த்ததும் மட்டில்லா மகிழ்ச்சியோடு அவனை நோக்கி
ஓடினார். தன்னுடைய தந்தையின் வருகையை, அதுவும் ஒரு சாதாரண உடையில்
வந்து நின்றதைச் சற்றும் எதிர்பாராத மகன், "ஐயா! நீங்கள் யார்?
உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டுவிட்டு அப்படியே கடந்து
சென்றுவிட்டான். அந்த ஏழை விவசாயிக்கு அங்கேயே செத்துவிடலாம்
போல் இருந்தது. இருந்தாலும் தன்னுடைய மனத்தைக் கல்லாக்கிக்
கொண்டு, வீட்டிக்கு வந்து, நடந்ததையெல்லாம் தன்னுடைய மனைவியிடம்
சொல்லிச் சொல்லி அழுதார்.
இந்த நிகழ்வில் வரும் இந்தச் சாதாரண, அதே மிகுந்த அன்பு
கொண்டிருந்த தந்தையை மகன் புறக்கணித்தது போல, இஸ்ரயேல் மக்களும்
தங்கள்மீது பேரன்பு கொண்டிருந்த கடவுளை மறந்து, பிற தெய்வத்தை
வழிபட்டார்கள். இதனால் அவர்களுக்கு என்ன நேரப்போகிறது என்பதை
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகம் எடுத்துக்கூறுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
இஸ்ரயேலைத் தனக்கு மிக நெருக்கமாக வைத்து அன்புசெய்த கடவுள்
எரேமியா இறைவாக்கினர் மக்களிடம் பேசுகின்றபொழுது உருவகம்
வழியாகவே பேசுவார். அது அவருடைய தனிச்சிறப்பு. இன்றைய முதல்
வாசகத்திலும் ஆண்டவர் சொன்னதற்கிணங்க, ஒரு நார்ப்பட்டானாலான
கச்சையின் வழியாக ஒரு செய்தியைச் சொல்கின்றார். கச்சை என்பது
ஒருவருடைய இடுப்பில், உடலோடு ஒட்டிக் கட்டப்படுகின்ற ஒரு துணி.
ஆண்டவாகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தன் சொந்த மக்களாக, தூய
மக்களினமாகத் தேர்ந்தெடுத்து அன்புசெய்தார் (விப 19:6). கடவுள்
தங்கள்மீது காட்டிய இந்தத் தனிப்பட்ட அன்பிற்கு இஸ்ரயேல்
மக்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தார்களா? சிந்திப்போம்.
கடவுளின் அன்பைப் புறக்கணித்த இஸ்ரயேல் மக்கள்
கடவுள் சொன்னதற்கிணங்க, எரேமியா இறைவாக்கினர் நார்ப்பட்டாலான
கச்சையைத் தன்னுடைய இடையில் கட்டுகின்றார். பின்னர் அவர்
அந்தக் கச்சையைப் பேராத்துக்கு அருகில் இருந்த பாறையில்
ஒளித்து வைத்து, மீண்டுமாக எடுத்துப் பார்க்கின்றார். அதுவோ
ஒன்றுக்கும் உதவாததுபோல் இருக்கின்றது. ஒருகாலத்தில் உடலோடு
ஒட்டி இருந்த கச்சை எப்படி ஒன்றுக்கும் உதவாமல், போனதோ,
அதுபோன்று கடவுளுக்கு மிக நெருக்கமாக இருந்த இஸ்ரயேல்
குறிப்பாக யூதாவில் இருந்த மக்கள், அவரை மறந்து பிற
தெய்வத்தைத் தேடியதால், அதற்கான தண்டனையைப் பெறுவார்கள் என்று
இறைவாக்கினர் எரேமியா வழியாக ஆண்டவர் கூறுகின்றார்.
நாம் நம்முடைய வாழ்க்கையைச் சற்று அலசிப் பார்ப்போம். பல
நேரங்களில் நாமும்கூட கடவுளையும் அவரது அன்பையும்
புறக்கணித்து, வேறு ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து
வாழ்பவர்களாகவே இருக்கின்றோம் என்பது வேதனை கலந்த உண்மை.
யோவான் நற்செய்தியில் இயேசு சொல்வது போல, கொடி திராட்சைச்
செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது.
ஆகையால், நாம் எப்பொழுதும் ஆண்டவரோடு ஒன்றித்திருந்து, அவருடைய
அன்பு மக்களாக வாழ முயற்சி செய்வோம். அதுவே சாலச் சிறந்த
செயல்.
சிந்தனை
"என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது"
(யோவா 15: 5) என்பார் இயேசு. ஆகையால், நாம், நமக்கு எல்லாம்
தெரியும்... எல்லாம் என்னிடத்தில் இருக்கின்றது, எனக்கு யாரும்
தேவையில்லை என்ற ஆணவத்தில் ஆடாமல், இறைவனை விட்டுப் பிரிந்து
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மையை உணர்ந்தவர்களாய்,
அவரோடு ஒன்றித்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|