|
|
25 ஜூலை 2020 |
|
பொதுக்காலம்
16ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
புனித யாக்கோபு - திருத்தூதர் விழா
=================================================================================
இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து
செல்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 4: 7-15
சகோதரர் சகோதரிகளே,
கடவுளின் மாட்சியாகிய செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள்
கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து
வரவில்லை, அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.
நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்துபோவதில்லை;
குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும்
கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின்
வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச்
சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து
செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில்
வெளிப்படுமாறு உயிரோடு இருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு
எந்நேரமும் சாவின் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறோம். சாவின் ஆற்றல்
எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது.
"நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்" என்று
மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை
கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். ஆண்டவர் இயேசுவை
உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச்
செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே
நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும். இவை அனைத்தும் உங்கள்
நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப்
பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும்.
இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
=================================================================================
திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 . (பல்லவி: 3)
Mp3
பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்.
1
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல
இருந்தோம்.
2ab
அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம்
எழுந்தது. - பல்லவி
2cd
"ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற
இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3
ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம்
பெருமகிழ்ச்சியுறுகின்றோம். - பல்லவி
4
ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல,
எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5
கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -
பல்லவி
6
விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு
செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு
வருவார்கள். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்.
நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை
ஏற்படுத்தினேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 20-28
அக்காலத்தில்
செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு
இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். "உமக்கு என்ன வேண்டும்?"
என்று இயேசு அவரிடம் கேட்டார்.
அவர், "நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள்
ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும்
அமரச் செய்யும்" என்று வேண்டினார்.
அதற்கு இயேசு, "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத்
தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால்
குடிக்க இயலுமா?" என்று கேட்டார். அவர்கள், "எங்களால் இயலும்"
என்றார்கள்.
அவர் அவர்களை நோக்கி, "ஆம், என் கிண்ணத்தில் நீங்கள்
குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி
அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை
யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்"
என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர்
மீதும் கோபங்கொண்டனர்.
இயேசு அவர்களை வரவழைத்து, "பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை
அடக்கி ஆளுகின்றார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக்
காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி
இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள்
தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க
விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே
மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய
மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று
கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எரேமியா 7: 1-11
"இந்தக் கோயில் கள்வர் குகையாகிவிட்டதே...!"
நிகழ்வு
பத்தொன்பாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தோன்றிய ஈடு இணையற்ற
கல்வியாளர் புக்கர்.டி. வாஷிங்டன் (1856-1915). ஆப்பிரிக்க
அமெரிக்க இனத்தைச் சார்ந்தவரான இவர் இளைஞனாக இருந்தபொழுது, ஒரு
கோயிலுக்குள் சென்றார்; ஆனால், அங்கிருந்த ஒருசில நிறவெறி
பிடித்த ஆள்கள் இவரைக் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தார்கள்.
அப்பொழுது இவர் அவர்களிடம், "இப்பொழுது நீங்கள் என்னைக்
கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கலாம், பரவாயில்லை; ஆனால், ஆண்டவர்
என்னிடம் வந்து பேசுவார்" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து
சென்றுவிட்டார்.
இதற்குப் பிறகு புக்கர் டி.வாஷிங்டன் ஒரு தலைசிறந்த கல்வியாளராக,
எழுத்தாளராக, பேச்சாளாராக, ஆலோசகராக உயர்ந்தார். மட்டுமல்லால்,
தன்னிடம் தரப்பட்ட டஸ்க்கி என்ற நிறுவனத்தை மலையளவு உயர்த்தினார்.
இதனால் இவருடைய புகழ் எங்கும் பரவியது. எந்தளவுக்கு என்றால்,
1901 ஆம் ஆண்டு, அப்பொழுது அமெரிக்காவின் அதிபராக இருந்த தியோடர்
ரூஸ்வெல்ட் இவரை அழைத்து, இவருக்குத் தனது வாழ்த்துகளைத்
தெரிவித்தார். இவ்வளவுக்கு நடுவிலும் புக்கர் இவர் இறைநம்பிக்கையில்
வளர்ந்துகொண்டே வந்தார்.
ஒருநாள் இவருக்கு, இவர் இளைஞனாக இருந்தபொழுது, எந்தக் கோயிலில்
நுழையக்கூடாது என்று உரிமை மறுக்கப்பட்டதோ, அந்தக் கோயில்
நிர்வாகத்திடமிருந்து கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து கலந்துகொள்ளுமாறு அழைப்பு
விடுக்கப்பட்டது. இவரும் அந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு அங்கு
சென்றார்; ஆனால் கோயிலுக்குள் நுழையவில்லை.
அப்பொழுது முன்பு இவரைக் கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுத்த நிறவெறியன்
ஒருவன் இவரிடம், "முன்பு நீர் இங்கு வந்தபொழுது, எங்களிடம்,
"நீங்கள் என்னைக் கோயிலிளுக்கு நுழையவிடாமல் தடுக்கலாம்; ஆனால்,
ஆண்டவர் என்னிடம் வந்து பேசுவார் என்று சொன்னீரே!" ஆண்டவர் உங்களிடம்
அப்படி என்ன பேசினார்" என்றார். அதற்குப் புக்கர் டி.வாஷிங்டன்
சிறிதும் தாமதியாமல், "நான் செல்லாத கோயிலுக்குள் நீ ஏன்
சென்றாய் என்றார்" என்று உரக்கச் சொன்னார். இதைக்கேட்ட அந்த நிறவெறியன்
அவமானத்தில் தலைகுனிந்து போனான்.
ஆம், இனத்தின் பெயராலும், மொழியின் பெயராலும், குலத்தின் பெயராலும்
வேறுபாடு காட்டப்படுகின்ற கோயில்களில் கடவுள் இருப்பதே இல்லை
என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. இன்றைய
முதல் வாசகத்தில், எரேமியா இறைவாக்கினர் மக்களிடம் உங்களுடைய
தீச்செயலால், கடவுளின் திருக்கோயிலைக் கள்வர் குகையாக
மாற்றிவிட்டீர்கள் என்று கூறுகின்றார். இச்சொற்களில் இருக்கும்
பொருள் என்ன என்பதைக் குறித்து, இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
கள்வர் குகையான எருசலேம் திருக்கோயில்
யூதர்கள் ஒவ்வோர் ஆண்டும் பாஸ்காத் திருவிழா, அறுவடை விழா,
கூடார விழா என்று மூன்றுமுறை எருசலேமுக்கு வரவேண்டும். (இச 16:
16). இது மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த கட்டளை. இஸ்ரயேல்
மக்களும் மூன்றுமுறை எருசலேமுக்கு வந்தார்கள்; ஆனால்,
தூய்மையான உள்ளத்தோடு வந்தார்களா என்பதுதான் கேள்விக்குறி.
இஸ்ரயேலில் இருந்த போலி இறைவாகினர்களும் குருக்களும் மக்களிடம்,
நீங்கள் உங்களுடைய பாவத்தோடே எருசலேமிற்குச் செல்லலாம் என்று
சொல்லி வந்தார்கள். மக்கள் இதைக் கேட்டுவிட்டுத் தங்களுடைய பாவத்தோடு
எருசலேம் திருகோயிலுக்குள் சென்றார்கள். இதைப்
பார்த்துவிட்டுத்தான் இறைவாக்கினர் எரேமியா மக்களிடம்,
திருக்கோயிலைக் கள்வர் குகையாக மாற்றிவிட்டீர்களே! என்கின்றார்.
கள்வர் குகை என்பது, திருடர்கள் தாங்கள் திருடியதை மறைத்து
வைப்பதற்கான ஓர்இடம். யூதாவில் இருந்தவர்கள் தங்களுடைய தவற்றை
மறைக்க எருசலேம் திருக்கோயிலுக்கு வந்ததால்தான் இறைவாக்கினர்
எரேமியா அப்படிச் சொல்கின்றார்.
வழிகளையும் செயல்களையும் சீர்படுத்த அழைப்பு
கடவுளின் திருக்கோயிலுக்குள் குற்றத்தோடு செல்லக்கூடாது என்று
கூறும் இறைவாக்கினர் எரேமியா, மக்கள் தங்களுடைய வழிகளையும் செயல்களையும்
சீர்படுத்திவிட்டு, அதன்பின் கடவுளின் திருக்கோயிலுக்குள்
போகுமாறு அழைப்பு விடுக்கின்றார்.
வழிகளைச் சீர்படுத்துதல் என்று எரேமியா இறைவாக்கினர்
சொல்லும்பொழுது, நேர்மையோடு நடப்பது, அன்னியர்களையும் கைம்பெண்களையும்
ஒடுக்காதிருப்பது, மாசற்றவரின் இரத்தத்தைச் சிந்தாமல் இருப்பது,
வேற்று தெய்வ வழிபாட்டை நிறுத்துவது என்று
சுட்டிக்காட்டுகின்றார். ஆம், நாம் நம்மிடம் இருக்கும் தீமைகளை
விட்டொழித்து, நன்மைகளைச் செய்கின்றபொழுது, நாம் ஆண்டவரின் இல்லத்திற்குள்
நுழைய தகுதி பெறுபவர்களாய் மாறுகின்றோம். இப்படி நாம் வாழாதபொழுது,
நாமும் கடவுளின் கோயிலைக் கள்வர் குகையாக மாற்றுகின்றோம் என்பது
உண்மை.
சிந்தனை
"மாசற்றவராய் நடப்பவர், நேரியவற்றைச் செய்பவர், உளமார உண்மை
பேசுபவர்... ஆகியோர் ஆண்டவரின் கூடராத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர்
ஆவர்" (திபா 15) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம்
கடவுளுக்கு உகந்த வாழக்கை வாழ்ந்து, உயிருள்ள கோயிலாகி, இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 13: 24-30
பொறுமையோடு இருக்கும் இறைவன்
நிகழ்வு
திருஅவையில் பதினைந்தாம் பெனடிக்ட் திருத்தந்தையாக இருந்த நேரம்
அது. ஒருநாள் வழக்கமாக அவர் மக்களுக்கு ஆசிவழங்கும் இடத்திலிருந்து
ஆசி வழங்கிக் கொண்டிருக்கும்பொழுது, அவரைச் சுட்டுக் கொல்லவேண்டும்
என்ற நோக்கத்தோடு அங்கு வந்த மதவெறியன் ஒருவன், தான் மறைத்து
வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்துத் திருத்தந்தையை
நோக்கிக் குறிபார்த்துச் சுட்டான். அவன் வைத்த குறி தப்பிவிடவே,
திருத்தந்தைக்கு எதுவும் ஆகவில்லை.
இதைத் தொடர்ந்து, திருத்தந்தையைச் சுட்டுக் கொல்லமுயன்ற அந்த
மதவெறியனை வத்திக்கான் பேதுரு பெருங்கோயில் வளாகத்தில் காவல்காத்துக்கொண்டிருந்த
காவலர்கள் சுற்றி வளைத்துப் பிடித்து, திருத்தந்தையிடம் இழுத்துக்கொண்டு
வந்தார்கள். திருத்தந்தையைக் கொல்ல முயன்றவனோ, "நான் வசமாக
மாட்டிக்கொண்டுவிட்டேன். இன்றைக்கு எனக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறது
என்று தெரியவில்லையே!" என்ற அச்சத்தோடு வந்தான். ஆனால், திருத்தந்தை
பதினைந்தாம் பெனடிக்ட் அவனிடம் அவன் நினைத்து மாதிரி எதுவும்
பேசவில்லை. மாறாக அவர் அவனிடம், "நீ ஏன் என்னைக்
குறிபார்த்துச் சுட முடியவில்லை தெரியுமா...? நான் ஆசி வழங்கிய
கூட்டத்தில் இருந்தாய். ஒருவேளை நீ வேறு எங்காவது நின்று
கொண்டுயு என்னைக் குறிபார்த்துச் சுட்டிருப்பாய் எனில், உன்னால்
என்னைக் குறிபார்த்துச் சுட்டிருக்க முடியும்!" என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டுத் திருத்தந்தை அவனிடம் தொடர்ந்து
பேசினார்: "நீ என்னைச் சுட முயன்றதற்காக நான் உனக்கு எந்தத் தண்டனையையும்
கொடுக்கப்போவதில்லை; உன்னை மனதார மன்னிக்கின்றேன். மேலும், நீ
என்னைச் சுட்டுக் கொல்லமுயன்ற செய்தி எப்படியும் உன்னுடைய
குடும்பத்தில் இருப்பவர்களுக்குத் தெரியவரும். அதை நினைத்து
அவர்கள் பெரிதும் வருந்தக்கூடும். அதனால் நீ உன்னுடைய
வீட்டிற்கு உடனே சென்று, நான் உன்னை மனதார மன்னித்து, உன்னிடத்தில்
பொறுமையாக நடந்துகொண்டதைப் பற்றிச் சொல். இதைக் கேட்கும் அவர்கள்
வருத்தப்படமாட்டார்கள்."
இதற்குப் பின்பு, திருத்தந்தையைக் கொல்லமுயன்ற அந்த மதவெறியன்
தன்னுடைய வீட்டிற்குச் சென்று, நடந்த அனைத்தையும் வீட்டிலிருந்தவர்களிடம்
சொன்னான். அதற்கு வீட்டில் இருந்தவர்கள், "திருத்தந்தை உன்னைத்
தண்டிக்காமல் மனதார மன்னித்து, பொறுமையாக இருந்தாரே, அதற்கு நன்றிக்கடனாக,
நீ நல்லவழியில் வாழக் கற்றுக்கொள்" என்றார்கள். அவனும் தன்னுடைய
குற்றத்தை உணர்ந்து, மனம்வருந்தி, நல்ல மனிதனாக வாழத் தொடங்கினான்.
ஆம், திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட், தன்னைச்
சுட்டுக்கொல்ல முயன்றவனைத் தண்டிக்காமல், மன்னித்து, அவரிடம்
பொறுமையாக நடந்துகொண்டார். அதனால் அவன் தன்னுடைய தவற்றை உணர்ந்து,
திருந்தி நடக்கத் தொடங்கினான். கடவுளும்கூட தவறு செய்கின்ற நம்மை
உடனே தண்டிப்பதில்லை. மாறாக, நாம் மனம்மாறி, நல்ல வழியில் நடக்கவேண்டும்
என்பதற்காக மிகவும் பொறுமையாக இருக்கின்றார். இத்தகைய செய்தியை
எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து நாம்
இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
நல்ல விதைகளை விதைத்தும், களைகள்
ஆண்டவர் இயேசு விண்ணரசைப் பற்றி மக்கள் புரிந்துகொள்வதற்கு பல்வேறு
உவமைகளைப் பயன்படுத்துகின்றார். அதில் ஓர் உவமைதான், இன்றைய நற்செய்தியில்
அவர் பயன்படுத்தக்கூடிய வயலில் தோன்றிய களைகள் உவமை. இந்த உவமையில்
வருகின்ற நிலக்கிழார், ஆண்டவர் எப்படித் தான் படைத்த அனைத்தையும்
நல்லதாகப் படைத்தாரோ (தொநூ 1:31), அப்படித் தன்னுடைய நிலத்தில்
நல்ல விதைகளைத்தான் விதைத்தார்; ஆனால், பகைவர்கள் அவருடைய நிலத்தில்
களைகளைத் தூவிவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள். இதை அறியும் நிலக்கிழார்
தன்னுடைய பணியாளரிடம் அறுவடை வரைக்கும் பொறுமையாக இருக்கச்
சொல்கின்றார்.
பொறுமையோடு இருக்கும் கடவுள்
உவமையில் வருகின்ற நிலக்கிழார் அறுவடைவரை பொறுமையாக இருந்தது
போன்று ஆண்டவராகிய கடவுளும் பொறுமையாக இருக்கின்றார். அதற்கு
இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, தீயவர்களோடு
நல்லவர்களும் அழிவுறக்கூடிய நிலை ஏற்படும் என்பதால். இரண்டு,
புனித பேதுரு சொல்வது போல் (2 பேது 3: 9), யாரும் அழிந்து
போய்விடக்கூடாது; எல்லாரும் மனம்மாறவேண்டும் என்பதால். ஆகையால்,
நாம் மனம்மாறி நல்ல வழியில் நடக்கவேண்டும் என்று விரும்பும் இறைவனின்
விருப்பத்திற்கு ஏற்ப, நாம் மனம்மாறி வாழத் தயாரா?
சிந்திப்போம்.
சிந்தனை
"நீரோ பல்லாண்டுகளாய் அவர்கள் மேல் பொறுமையாய் இருந்தீர்"
(நெகே 9: 30) என்று ஆண்டவரைக் குறித்து நெகேமியா நூலில் சொல்லப்படுகின்றது.
ஆகையால் நாம் மனம்மாறப் பொறுமையோடு காத்திருக்கும் ஆண்டவரிடம்
திரும்பி வந்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை (ஜூலை 25)
இன்று திருச்சபையானது இயேசுவின் முதன்மைச் சீடர்களில் ஒருவரும்,
முதல் மறைசாட்சியுமான தூய யாக்கோபுவினுடைய திருவிழாவைக்
கொண்டாடுகிறது. இவர் பெரிய யாக்கோபு எனவும் அழைக்கப்படுகிறார்
என்பது கூடுதல் செய்தி.
ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து தன்னுடைய உயிர்ப்புக்குப் பிறகு சீடர்களுக்குக்
காட்சியளித்தபோது, "நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம்
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என அறிவித்தார். அதன் அடிப்படையில்
தூய யாக்கோபு இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க ஸ்பெயின் தேசம்
சென்று, மீண்டும் இஸ்ராயேல் தேசம் வந்தபோது ஏரோது மன்னனால்
சிரச்சேதம் செய்யப்பட்டு மறைசாட்சியாக மரித்தார். பல ஆண்டுகளுக்குப்
பின்னர் ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்திருந்த அவருடைய சீடர்கள்
அவருடைய கல்லறையைத் தோண்டி, அவருடைய எலும்புகளை தங்களுடைய
நாட்டிற்கு எடுத்துச்சென்றனர். அங்கு உலகப்புகழ் பெற்ற ஒரு
ஆலயத்தை அவருடைய கல்லறை மேலேயே கட்டினர். அதுதான் இன்றைக்கு
SANTIAGO DE COMPOSTALA என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இயேசுவின் பன்னிரண்டு சீடர்களும் மறைசாட்சிகளாகப் பல்வேறு இடங்களில்
மரித்திருந்தாலும், அவர்களுடைய கல்லறைகளில் நினைவுச்சின்னங்கள்
எழுப்பப்பட்டிருந்தாலும், அவர்களுள் மூன்று சீடர்களின் கல்லறைகள்
மீதே ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது தனி சிறப்பாகும். அவைகள்
ரோமில் வத்திக்கானில் தூய பேதுரு ஆலயமும், இந்தியாவில்
சென்னையிலுள்ள மயிலப்பூரில் அமைந்துள்ள தோமா ஆலயமும்,
ஸ்பெயின் தேசத்திலுள்ள தூய (சந்தியாகப்பர்) யாக்கோபு ஆலயமும்
ஆகும்
தூய யாக்கோபுவைக் குறித்துச் சொல்லப்படக்கூடிய நிகழ்வுகளில் ஒன்று
.ஸ்பெயின் நாட்டில் பல இடங்களில் தூய யாக்கோபு நற்செய்தியை அறிவித்தாலும்
அன்றைய கால கட்டத்தில் அவர் எதிர்ப்பார்த்தது போல மக்கள் உடனடியாக
மனம் திருந்திவிட வில்லை. அவர் எவ்வளவோ புத்தி கூறினாலும், அற்புதங்களும்,
அருங்குறிகள் பல புரிந்தாலும் மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள
மனதில்லாமல் இருந்தார்கள். இதனால் சினம்கொண்ட தூய யாக்கோபு
"இவர்கள் மேல் இடியை இறக்கிவிடவேண்டியது தான். அப்போது தான்
இவர்களுக்கு புத்தி வரும்" என்று நினைத்து சற்றே கண் மூடி இயேசுவை
நினைத்தார்.
அப்போது திடீரென்று இயேசு அவர் முன்னே தோன்றி, "யாக்கோபு ஏன்
உனக்கு இவ்வளவு கோபம்! அன்று நான் உன்னை சமாரியாவுக்கு நற்செய்தி
அறிவிக்க அனுப்பியபோது கூறியவற்றை மறந்துவிட்டாயா? ஓநாய்களுக்கிடையே
ஆட்டுக்குட்டியை அனுப்புவது போல் நான் உங்களை அனுப்புகிறேன்,
என் பெயரால் நற்செய்தியை அறிவியுங்கள், நோய்களைத் தொட்டுக்
குணமாக்குங்கள், தீய ஆவிகளை ஓட்டுங்கள், என் பெயரால் அனைத்தும்
நடக்கும் என்று சொன்னேனே! நீ சினம் கொண்டால் நான் அறிவித்தவை,
கனவுகண்டவை எல்லாம் எப்படி நடக்கும்" என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
இவ்வளவு காட்சிகளும், நினைவுகளும் தான் அமர்ந்திருந்த எப்ரோ
நதிக்கரையில் அவருக்குத் தோன்றி மறைந்தது. இந்த எப்ரோ நதியின்
குளிர்ந்த காற்றின் இன்பத்தில் சுய நினைவு பெற்றார் தூய
யாக்கோபு.
அப்போது ஒரு பேரதிசயம் அங்கு நடந்தது. அது என்னவென்றால் அவருக்கு
முன்பே இருந்த ஒரு பெரிய பாறையின் மீது மரியன்னை தோன்றி (மரியன்னை
அப்போது உயிரோடுதான் இருந்தார்) "மகனே இந்த சாரகோசா என்னும்
நகரில் எப்ரோ நதிக்கரையில் நாம் தோன்றியுள்ள இந்த பாறையின்
மீது நமக்காக நம் பெயரில் ஒரு ஆலயம் அமைப்பாயாக. இந்த நாட்டு
மக்களை நாம் இனி எம் மக்களாக ஏற்றுக்கொள்வோம். இங்கு இனிமேல்
பேரதிசயங்கள் நடக்கும். அனைவரையும் நாம் எம்பால் ஈர்த்துக்கொள்வோம்.
நம் பெயரில் ஆலயம் அமைத்த பிறகு மீண்டும் எருசலேம் வருவாயாக.
அங்கு உமக்காக வேத சாட்சி முடி காத்துக்கொண்டிருக்கிறது. இதோ
நம் வடிவம், இதை நீ எம்பெயரில் கட்டப்போகும் அந்தக்கோவிலில்
வைப்பாயாக" என்று சொல்லி ஒன்றேகால் அடி உயரமே உள்ள ஒரு மரச்சிற்பத்தை
அவருக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்து மறைந்தார்.
அந்த மரச்சிற்பம் மரியன்னையும், அவர் திருமகன் குழந்தை இயேசுவும்,
அவரது வலது கையில் ஒரு புறா இருப்பதுபோல் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த மரியன்னை தூண்மாதா [OUR LADY OF PILLARS] என்று இன்றளவும்
அழைக்கப்படுகின்றார். அந்தக் காட்சிக்குப் பிறகு கி.பி.44 ஆம்
ஆண்டு மரியன்னை உயிரோடு இருந்த காலத்திலேயே அவருக்காக
யாக்கோபு ஒரு சிற்றாலயம் அமைத்தார். அது பிற்காலத்தில் மிகப்பெரும்
ஆலயமாக சாரகோசா பட்டிணத்தில் விளங்கியது. அதற்குப் பின்
யாக்கோபு எருசலேம் திரும்பினார்.
இந்த நிகழ்விலே தூய யாக்கோபு இயேசுவின் நற்செய்தியை எவ்வாறெல்லாம்
அறிவித்தார், அதற்காக எவ்வளவு துன்பங்களைச் சந்தித்தார் எதிர்காலத்தில்
அவர் எத்தகைய மரணத்தைச் சத்திக்கப்போகிறார் என்பதை நமக்குச்
சுட்டிக்காட்டுகிறது.
தூய யாக்கோபு ஸ்பெயின் நாட்டிலிருந்து எருசலேம் திரும்பி பிறகு
இயேசு கிறிஸ்து பற்றிய நற்செய்தியைத் துணிவுடன் மக்களுக்கு அறிவித்தார்.
இதனால் திருச்சபை இன்னும் வேகமாக வளர்ந்தது. இதனைப் பார்த்த எரோது
அக்ரிபா என்ற மன்னன் அவரைச் சிரச்சேதம் செய்தான். இவ்வாறு தூய
யாக்கோபு மறைச்சாட்சிப் பட்டம் பெற்றார்.
இயேசுவின் சீடர்களாக இருக்கக்கூடிய நாமும் அவரது நற்செய்தியை
அறிவிக்கின்றபோது பல்வேறு துன்பங்களைச் சந்திக்கலாம். ஆனாலும்
இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்தால் இறைவார்தையைத்
துணிவுடன் அறிவிக்கலாம்.
தூய யாக்கோபு ஆற்றிய அற்புதங்கள்
கி.பி.844 ஆம் ஆண்டில், ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் காட்டுப்பகுதி
வழியே தன்னந்தனியே பயணித்தார் ஒரு துறவி. அப்போது அந்த இரவில்
ஒரு மண்மேட்டிலிருந்து ஒளி வெள்ளம் தோன்றுவதைக் கண்டு அதிசயித்தார்.
அருகில் சென்று பார்த்த பொழுது விண்ணகத்திலிருந்து ஒரு வினோதமான
ஒளி வெள்ளம் தோன்றி அந்த மண் மேட்டில் இறங்கியது கண்டு அதிசயித்தார்.
மேலும் வானோர் பாடலும் மிகத்தெளிவாக கேட்டதால் இந்த இடத்தில்
ஏதோ அதிசயம் நடக்கப்போகிறது அல்லது மறைந்துள்ளது என்று கண்டு
கொண்டார். அந்த இடத்தை அடையாளம் வைத்துக்கொண்டு மேலும் பல சீடர்களை
அழைத்துக்கொண்டு அந்த மண் மேட்டை தோண்டிப் பார்த்தபொழுது அங்கே
யாக்கோபுவின் எலும்புக்கூடு ஒரு பெட்டியில் ஒளிர்ந்தது. மேலும்
அந்த பெட்டியில் இருந்த சில பொருட்களை முன்னிட்டு அவை
யாக்கோபுவின் எலும்புக்கூடுதான் என்று நிச்சயித்தார்கள். அன்றிலிருந்து
ஆரம்பமானது புனிதரின் அதிசயங்களும் அற்புதங்களும்.
இதைப்பற்றி கேள்விப்பட்ட அரசன் அல்ஃபொன்சா ஓடோடி வந்தான்.
தூய யாக்கோபுவைத் தெண்டனிட்டு வணங்கினான். அவரை ஸ்பெயின் தேசத்தின்
பாதுகாவலர் என்று அறிவித்தான். அவர் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்ட
இடத்தின் பெயர் கம்போஸ்த்தலா என்பதாகும். எனவே இதே இடத்தில்
அவர் சமாதி மீது ஒரு மிகப் பிரம்மாண்டமான கோவில் ஒன்றைக் கட்டினான்.
அவரது காலத்தில் அதற்கு இணையான ஆலயம் உலகில் எங்குமே இல்லை என்னும்
அளவிற்கு அது இருந்தது. இப்போதும் இந்தக்கோவில் [ SANTIAGO
DE COMPOSTALA] என்று அழைக்கப்படுகிறது.
வெள்ளைக் குதிரையில் தூய யாக்கோபு (சந்தியாகப்பர்)
ஸ்பெயின் நாட்டில் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் தூய
யாக்கோபுவைத் தரிசிக்க மக்கள் வெள்ளம் படை எடுத்து வந்தது. இதனால்
வியாபாரம், தங்குமிடம், போக்குவரத்து என பல வழிகளிலும்
நாட்டிற்கு வருமானம் பெருகியது. சிறு சிறு சமஸ்த்தானங்கள்,
குட்டி ராஜாக்கள் தங்களின் நிலைகளை உயர்த்திக்கொள்ளவும்,
பாதுகாப்பை முன்னிட்டும் ஒன்று சேர்ந்த்னர். இது பல வல்லரசு
நாடுகளான சார்சனியர்களுக்கும், துருக்கி முஸ்லிம்களுக்கும் ஆப்ரிக்க
இஸ்லாமிய நாட்டினருக்கும் பிடிக்கவில்லை. எனவே ஸ்பெயின் நாட்டு
மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் அடிக்கடி சண்டை வெடித்தது.
அப்போது ஸ்பெயின் நாட்டில் அரசராக இருந்தவர் ரோமிரோ. இவர்
அப்போது அஸ்துரியாஸ் என்னுமிடத்தில் தன் குறைந்த படையினரோடு
மிகப்பெரும் சார்சனிய படைகளுடன் மோதுவதற்குத் தயாராக இருந்தார்.
என்னதான் அவருக்கு கடவுள் நம்பிக்கையும், தன் படைமீது நம்பிக்கையும்
இருந்தாலும் ஏனோ மனம் கலக்கமுற்றார். தன் படைவீர்களை
க்ளாவிஜோ என்னுடமித்தில் நிறுத்தினார். அந்த இடத்தில் அன்றைய
இரவில் புனித சந்தியாகப்பர் அரசன் ரோமிரோவின் கனவில்
தோன்றி, "ரோமிரோ! நீ மனம் கலங்க வேண்டாம். நாளைய போரில் இந்த
சார்சனியர்களை எதிர்த்து உன் சார்பாக நான் போராடுவேன். வெற்றி
உனதே. நான் ஒரு வெள்ளைக்குதிரையில் வெள்ளை ஆடையில் சிலுவை அடையாளமிட்ட
வெள்ளைக்கொடியோடு இந்த பெரிய சார்சனிய படைவீர்களோடு
போராடுவேன். இதை நீயும், உன் வீரர்களும் மற்றும் சார்சனிய வீரர்களும்
காண்பீர்கள்" என்று கூறி மறைந்து போனார்.
அரசன் ரோமிரோ அடைந்த சந்தோஷமும் தைரியமும் சொல்ல வார்த்தை
இல்லை. அப்போதே இந்த கனவைப்பற்றி தன் படைத்தளபதிக்கும், வீரர்களுக்கும்
அறிவித்து அந்த இரவிலேயே அங்கே இருந்த ஆயரிடம் சென்று தன் கனவைத்
தெரிவித்து வெற்றிகான ஆசீரும் அவரிடம் பெற்றான். புனிதர்
கொடுத்த தைரியத்தினாலும், அவருடைய வாக்குறுதியினாலும் உத்வேகம்
பெற்ற அரசனும், படையினரும் போர்க்களத்தில் பயங்கரமாகப்
போரிட்டனர்.
"என்ன ஆயிற்று இந்த கிறிஸ்தவர்களுக்கு" என்று ஆத்திரப்பட்டான்
முஸ்லிம் படைத்தளபதி. "இந்த சின்ன படையை வைத்துக்கொண்டு நம்மை
எதிர்க்க இந்த கிறிஸ்தவர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு
தைரியம். நம் படைக்குமுன் இந்தப்படை ஐந்து நிமிடங்களூக்கு கூட
தாங்காது" என்று சொல்லி போர்தொடுக்க ஆணையிட்டான். பயங்கர போர்
ஆரம்பமாயிற்று. முஸ்லிம் படையான சார்சனியர்களுக்கு பலத்த சேதம்
ஏற்பட்டது. அவர்களுள் பலர் தலை இழந்தனர்.
பல கிறிஸ்தவப் படைவீர்களும், பல முஸ்லிம் வீரர்களும் தூய
யாக்கோபு வெள்ளைக்குதிரையில், வெள்ளை உடையில் உருவிய கத்தியோடும்,
வெள்ளைக் கொடியுடனும் போர்க்களத்தில் சுற்றி சுற்றி வருவதைக்
கண்டார்கள். "புனித சந்தியாகப்பர் வாழ்க, புனித சந்தியாகப்பர்
வாழ்க" என்று யாக்கோபுவுக்கு -சந்தியாகப்பருக்கு - ஜெயகோஷம்
போட்டனர். அவ்வளவு தான் பெரும்படைகொண்ட சார்சனியப்படை
பெரும்தோல்வி கண்டது. "சந்தியாகப்பரை எதிர்க்க முடியாது.
வாருங்கள் ஓடிப்போவோம் என்று குரல் கேட்டது அவ்வளவுதான்.
சார்சனியப் பெரும்படை புறமுதுகு காட்டி ஓடியது. அன்றையப்
போரில் தலை இழந்தும், வெட்டப்பட்டு இறந்தவர்களும் குறைந்தது
எழுபது ஆயிரம்பேர்.
இப்படியாக புனித யாக்கோபு (சந்தியாகப்பர்) போராளித் திருத்தூதர்
என்று அழைக்கப்பட்டார் பல்வேறு அற்புதங்கள் செய்து மக்களைத்
தீயோரிடமிருந்து காப்பாற்றினார்.
தூய யாக்கோபின் சந்தியாகப்பரின் - பெருவிழாவைக் கொண்டாடும்
நாம் அவரைப் போன்று இயேசுவுக்கு சான்று பகருவோம். இறையருளை
நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=============================================
மறையுரைச் சிந்தனை (ஜூலை 25)
இன்று திருச்சபையானது தூய யாக்கோபின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.
கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சார்ந்த இவர், மீன்பிடித்
தொழில் செய்துவந்தவர். இவர் செபதேயுவின் இரண்டு மகன்களில் ஒருவர்.
இன்னொருவர் நற்செய்தியாளரான தூய யோவான்.
ஒருமுறை இவர் தன்னுடைய சகோதரர் யோவான் மட்டும் சில பணியாளர்களோடு
கடலில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த
ஆண்டவர் இயேசு இவரிடம், "என் பின்னே வாருங்கள்" என்று சொன்னதும்
அவரும், அவருடைய சகோதரரும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப்
பின்தொடர்ந்து செல்கிறார்கள் (மாற்கு 1:20)).
தூய யாக்கோபு திருத்தூதர்கள் அணியில் மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றார்.
எந்தளவுக்கு என்றால் இயேசு எங்கெல்லாம் சென்றாரோ அங்கெங்கும்
இவரும் கூடவே செல்கிறார். குறிப்பாக ஆண்டவர் இயேசு உருமாற்றம்
அடைகின்றபோதும், தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகளைக் குணப்படுத்திய
போதும், கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்தபோதும்
இவர் உடன் இருக்கிறார்.
ஒருமுறை இவருடைய தாய் சலோமி, ஆண்டவர் இயேசுவிடம் வந்து, அவர்
ஆட்சியுரிமையோடு வரும்போது தன்னுடைய இரண்டு மகன்களில் ஒருவனுக்கு
வலப்புறமும், இன்னொருவனுக்கு இடப்புறமும் இடமளிக்குமாறு
கேட்கும்போது, இயேசு அவரிடம். "நான் குடிக்கபோகும் துன்பக்
கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?" என்று கேட்கிறார். இந்த
நிகழ்வு தூய யாக்கோபு ஆண்டவர் இயேசுவுக்காக எப்படிப்பட்ட துன்பங்களைச்
சந்திக்க இருக்கிறார் என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது (மத்
20:20-28).
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புக்குப் பிறகு, இவர் எருசலேமில் உள்ள
யூத மக்களுக்கு நற்செய்தி அறிவித்து வந்தார். அப்போது கி.பி.
43-44 ஆம் ஆண்டு ஏரோது அக்ரிப்பா என்ற மன்னன், யூதர்களையும்,
அங்கே இருந்த சமயத் தலைவர்களையும் திருப்திப்படுத்த இவரைக்
கொலைசெய்தான். இவ்வாறு தூய யாக்கோபு ஆண்டவர் இயேசுவை எல்லா மக்களுக்கும்
எடுத்துரைத்ததனால் தன்னுடைய இன்னுயிரையே பலியாகத் தந்தார்.
ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவிப்புப் பணியில்
நமக்குப் பல்வேறு துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும், நாம்
தொடர்ந்து நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்பதையே இவருடைய
வாழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.
இந்த நேரத்தில் அன்னைத் தெரசா வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வை
இங்கு இணைத்துச் சிந்தித்து பார்ப்பது இன்னும் பொருத்தமாக
இருக்கும் என்று தோன்றுகிறது.
ஒருமுறை அன்னைத் தெரசா கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி
எல்லாருக்கும் அறிவித்து, மக்களை மதம் மாற்றுகிறார் என்று
குற்றம் சுமத்தப்பட்டு, குற்றவாளிக் கூண்டில்
நிறுத்தப்பட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
அன்னையிடம், "அன்னையே! உங்கள் மீது சுமத்தப்பட்ட இந்த
குற்றச்சாற்று எல்லாம் உண்மையா? என்று கேட்டார்.
அதற்கு அவர், "நான் தெருவோரங்களிலும், குப்பை மேட்டிலும்
தூக்கி வீசப்படும் குழந்தைகளை அள்ளி எடுக்கிறபோது, அது எந்த
மதம், என்ன மொழி பேசும் என்றெல்லாம் பார்ப்பதில்லை. மாறாக
என்னுடைய அன்பையும், பாசத்தையும், இரக்கத்தையும்
அக்குழந்தைக்கு வாரி வழங்குவேன். எல்லாவற்றிற்கும் மேலாக,
என்னிடம் இருக்கும் மிகச் சிறந்த கொடையான கிறிஸ்துவின் மீது
நான் கொண்ட விசுவாசத்தை எடுத்துரைப்பேன். அந்த கிறிஸ்துவ
விசுவாசத்தை எடுத்துரைப்பதில் ஏதாவது தவறு இருக்கிறதா
சொல்லுங்கள்?" என்று கேட்டார்.
நீதிபதி எதுவும் பேசாது இருந்தார். பின்னர் அந்த வழக்கு
செல்லுபடியாகாது என்று சொல்லி, தள்ளுபடி செய்தார்.
அன்னைத் தெரசா தன்னுடைய வாழ்வில் எத்தனை இடர் வரினும், தான்
கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையை ஒருபோதும் கைவிடவில்லை.
அதுபோன்றுதான் யாக்கோபும் தான் கிறிஸ்துவின் மீதுகொண்ட
விசுவாசத்தை ஒருபோதும் கைவிடாமல், அதற்காகத் தன்னுடைய
உயிரையும் தந்தார்.
தூய யாக்கோபு ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று, அங்கே மறைபோதகப்
பணியைச் செய்தார் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் அதற்கு
போதுமான ஆதாரங்கள் இல்லை. யாக்கோபின் - சந்தியாகப்பரின் -
நினைவாக "San Tiago" என்று அதன் தலைநகர் இன்றளவும்
அழைக்கப்பட்டு வருவது நம்முடைய சிந்தனைக்கு உரியதாக
இருக்கின்றது.
தூய யாக்கோபு நமக்கு "யாக்கோபு திருமுகத்தை"யும்
வழங்கியிருப்பதை நாம் மறக்கமுடியாது. அத்திருமுகத்தில்
உண்மையான கிறிஸ்தவ வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பது
பற்றிச் சொல்லப்படுகிறது. நாவடக்கம் பற்றியும், நோயில் பூசுதல்
பற்றியும் அதில் சொல்லப்படுகின்றது. இவை எல்லாவற்றிற்கும்
மேலாக ஏழைகளை, அனாதைகளை மதிப்பது பற்றியும் சொல்லப்படுகின்றது.
(யாக் 1:27). உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது வழிபாட்டோடு
நின்றுவிடக்கூடிய ஒன்றல்ல, மாறாக அது வாழ்வோடு தொடர்புடையதாக
இருக்கின்றது என்பதை இந்தத் திருமுகம் நமக்கு அழுத்தம்
திருத்தமாக எடுத்துக்கூறுகிறது.
ஆகவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் நமது வாழ்வை இறை இரக்கச்
செயல்கள் நிறைந்ததாக மாற்றியமைத்துக்கொள்வோம்.
ஜப்பானை ஆண்டு வந்த டெட்சுகன் (Tetsugan) என்ற மன்னன் புத்த
மதத்தின் வேதநூலை தன்னுடைய நாட்டிலிருந்த பத்தாயிரத்திற்கும்
மேற்பட்ட மக்களுக்கு அச்சிட்டுத் தரமுயன்றான். ஆனால்
அவனிடத்தில் போதுமான பணமில்லை. எனவே, தனக்குத் தெரிந்த
நண்பர்கள், அன்பர்களிடமிருந்து அதற்காக பணம் சேகரிக்கத்
தொடங்கினான். ஏறக்குறைய தான் தொடங்கிய பணியை முடிப்பதற்குப்
போதுமான பணத்தை சேகரிப்பதற்கு அவனுக்குப் பத்து ஆண்டுகள்
தேவைப்பட்டது.
அவன் தன்னிடமிருந்த, தனக்குக் கிடைத்த பணத்தை எல்லாம்
வைத்துக்கொண்டு, வேதநூலை அச்சடிக்கத் தொடங்கியபோது நாட்டில்
பெரும் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான குடிசைகள் அழிந்துபோயின.
மக்கள் எல்லாரும் தங்குவதற்கு இடமில்லாமல் மிகவும்
கஷ்டப்பட்டார்கள். இதைப் பார்த்த அரசன் தான் வேதநூலை அச்சிட
வைத்திருந்த பணத்தையெல்லாம் மக்களுக்காகவே செலவழித்தான்.
சில ஆண்டுகள் கழித்து, அவன் மீண்டுமாக பணம் சேகரித்து, தான்
மேற்கொண்ட பணியைத் தொடங்கியபோது நாட்டில் பூகம்பம் ஏற்பட்டு,
ஏராளமான மக்கள் இறந்துபோனார்கள். அப்போதும் அவன் தான்
வைத்திருந்த பணத்தை எல்லாம் மக்களுக்காகவே செலவழித்தான்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு நபர்களிடமிருந்து பணம்
திரட்டி, தான் மேற்கொண்ட பணியை வெற்றிகரமகாச்
செய்துமுடித்தான். அவன் அச்சடித்து வெளியிட்ட புத்தமதத்தின்
வேதநூல்கள் கொயோடோ என்ற இடத்தில் உள்ள ஒபாகு மடத்தில்
இன்றைக்கும் மக்களுக்குக் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இன்று ஜப்பானியர்கள் தங்களுடைய குழந்தைகளிடம், "டெட்சுகன்
மன்னன் இப்போது இருக்கும் வேதநூலின் முதல் இரண்டு பதிப்புகளை
ஏற்கனவே பதிப்பித்துவிட்டான் என்றும் அந்த பதிப்புகள் இப்போது
இருப்பதைவிடவும் மிகவும் சிறந்தது" என்றும் சொல்லி
வருகிறார்கள்.
இறைத்தொண்டும், மக்கள்தொண்டும் வேறுவேறு அல்ல என்பது டெட்சுகன்
என்ற அந்த மன்னன் நமக்கு எடுத்துரைக்கும் பாடமாக இருக்கின்றது.
அவன் அப்படி வாழ்ந்ததனால்தான் இன்றும் மக்களால்
நினைவுகூறப்படுகிறான்.
ஆகவே, தூய யாக்கோபின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில்,
நாமும் கிறிஸ்தவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும்
அறிவிப்போம். எத்தகைய இடர் வரினும் தொடர்ந்து இறைவழியில்
நடப்போம். இன்றைய நாள் இரண்டாம் வாசகத்தில் படிப்பது போல,
"நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து
போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை;
துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும்
அழிந்து போவதில்லை" என்ற பவுலடியார் கொண்டிருந்த மனநிலையோடு
வாழ்வோம்.
அதைவிட மேலாக வழிபாடும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்பதை
உணர்ந்து, நம்மோடு இருக்கும் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும்
உதவிகளைச் செய்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா
வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|