Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     23 ஜூலை 2020  

பொதுக்காலம் 16ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம்    புனித பிரிசித்தா - துறவி
=================================================================================
 பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-3, 7-8, 12-13

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

"நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலை நிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன். இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது; அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது; அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்; அவர்கள் மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர்.

செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்; எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்கு உள்ளாக்கினீர்கள். குருக்கள், "ஆண்டவர் எங்கே?" என்று கேட்கவில்லை; திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை; ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்; இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்.

வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்; அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்: பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்; தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 36: 5-6ab. 7-8. 9-10 . (பல்லவி: 9a)
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது.
5
ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு; முகில்களைத் தொடுகின்றது உமது வாக்குப் பிறழாமை.
6ab
ஆண்டவரே, உமது நீதி இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது; உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை. - பல்லவி

7
கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்.
8
உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்; உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர். - பல்லவி

9
ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது; உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.
10
உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும், நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்! - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17

அக்காலத்தில்

சீடர்கள் இயேசுவின் அருகே வந்து, "ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?" என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: "விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:

"நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்."

உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எரேமியா 2: 1-3, 7-8, 12-13

"பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்து விட்டீர்கள்"

நிகழ்வு

இயேசு வாழ்ந்த காலத்திற்கு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் கிரேக்க அறிஞரான சாக்ரடீஸ். இவரைப் பற்றிச் சொல்லப்படுகின்ற ஒரு நிகழ்வு.

சாக்ரடீஸ் வாழ்ந்த பகுதியில் மிகப்பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் சாக்ரடீசிடம் வந்து, "நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வருகை தந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என்றார். சாக்ரடீசும் அவருடைய அழைப்பினை ஏற்று, அவரது வீட்டிற்குச் சென்றார். தன்னுடைய அழைப்பை ஏற்றுத் தனது வீட்டிற்கு வந்த சாக்ரடீசை இன்முகத்தோடு வரவேற்ற அந்தப் பணக்காரர், அவரை நல்லமுறையில் உபசரித்துவிட்டு, தன்னுடைய வீடு, வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருள்கள், வீட்டைச் சுற்றித் தனக்குச் சொந்தமாக இருந்த தோட்டம், நிலபுலன்கள் யாவற்றையும் சுற்றிக் காட்டினார். எல்லாவற்றியும் அமைதியாகப் பார்த்துக்கொண்டு வந்தார் சாக்ரடீஸ்.

இறுதியில் அந்தப் பணக்காரர் சாக்ரடீசிடம், "என்னுடமுள்ள எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தீர்களே...! இப்பொழுது உங்களுடைய உள்ளத்தில் இவற்றைக் குறித்து என்ன தோன்றுகின்றது?" என்றார். சாக்ரடீஸ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். உடனே அந்தப் பணக்காரர் சாக்ரடீசிடம், "என்னிடம் உள்ளதையெல்லாம் பார்த்த பிறகு, நம்மிடம் இப்படியெல்லாம் இல்லையே என்று உங்களுக்கு வருத்தமாகவும் பொறாமையாகவும் இருக்கின்றதா?" என்றார். அதற்கு சாக்ரடீஸ் அவரிடம், "உங்களிடம் உள்ளத்தையெல்லாம் பார்த்தபிறகு எனக்கு வருத்தமாகவோ, பொறாமையாகவோ எல்லாம் இல்லை. மாறாக, இவ்வளவு பொருள்கள் இல்லாமலும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்ற எண்ணம்தான் தோன்றியது" என்றார். இதற்கு அந்தப் பணக்காரரால் எதுவும் பேச முடியவில்லை. (The Next 500 Stories - Frank Mihalic, SVD).

இன்றைக்குப் பலர் நிறையப் பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்... நிறையப் பொருள் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்... நாம் நினைத்ததெல்லாம் கிடைத்துவிட்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம்... என்று நினைத்துக்கொண்டு வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இஸ்ரயேல் மக்களோ பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய ஆண்டவராகிய கடவுளை மறந்து, பிற தெய்வத்தை வழிபட்டு வந்தார்கள். இத்தகைய வாழ்க்கையை வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்களிடம் இறைவாக்கு உரைக்க எரேமியா இறைவாக்கினரை ஆண்டவர் அனுப்பி வைக்கின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவனுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நடந்த (மண)ஒப்பந்தம்

இறைவாக்கினர் எரேமியாவிடம் உள்ள தனிச்சிறப்பே அவர் எதையும் உருவகமாகச் சொல்வதுதான். எரேமியா நூல் இரண்டாம் அதிகாரத்தில் மட்டும் பத்துவிதமான உருவகங்கள் இடம்பெறுகின்றன. இவற்றுள், இரண்டு உருவகங்கள் இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறுகின்றன.

எரேமியா இறைவாக்கினர் பயன்படுத்துகின்ற முதலாவது உருவகம். கணவன், மனைவி உருவகமாகும். ஆண்டவராகிய கடவுள் சீனாய் மலையில் மோசேக்குப் பத்துக் கட்டளைகள் கொடுத்தார் (விப 19-20) அந்தப் பத்துக் கட்டளையும், எரேமியா இறைவாக்கினர் கடவுள் என்ற மணமகனுக்கும், இஸ்ரயேல் என்ற மணமகளுக்கும் இடையே நடக்கும் மண ஒப்பந்தமாக உருவகப்படுத்துகின்றார். கடவுளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்தது மண ஒப்பந்தம் எனில், இஸ்ரயேல் மக்கள், கடவுளுக்கு நம்பிக்குரியவர்களாய் இருந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டில் குடியேறிய பின்பு, தன்னுடைய கணவராகிய கடவுளை மறந்து, பாகால் என்ற பிற தெய்வத்தை வழிபடத் தொடங்கி, விபசாரம் செய்தார்கள் (எசா 54: 5; ஒசே 2: 16). இதனால்தான் எரேமியா இறைவாக்கினர் அவர்களுக்கு எதிராக இறைவாக்கு உரைக்கின்றார்.

பொங்கி வழியும் நீரூற்றாகிய இறைவனை மக்கள் புறக்கணித்தல்

இன்றைய முதல் வாசகத்தில், எரேமியா இறைவாக்கினர் பயன்படுத்துகின்ற இரண்டாவது உருவகம், பொங்கி வழியும் நீரூற்றாகும். ஆம், இஸ்ரயேல் நாட்டில் நல்ல தண்ணீர் கிடைப்பது அவ்வளவு அரிது. இத்தகைய பின்னணில் எரேமியா இறைவாக்கினர் கடவுளைப் பொங்கி வழியும் நீரூற்றுக்கு உருவகப்படுத்துகின்றார். யோவான் நற்செய்தி ஏழாம் அதிகாரத்தில் ஆண்டவர் இயேசு வாழ்வளிக்கும் தண்ணீரைக் குறித்துப் பேசுவதையும் இங்கு நாம் இணைத்துப் பார்த்துக் கொள்ளலாம் (யோவா 7: 37-39). ஆம், ஆண்டவராகிய கடவுள் பொங்கி வழியும் நீரூற்றாக, வாழ்வளிக்கும் தண்ணீராக இருந்தாலும், இஸ்ரயேல் மக்கள் தண்ணீரே தேங்காத, உடைந்த குட்டைகளைக் குடைந்து கொண்டது வேடிக்கையாக இருக்கின்றது. வள்ளுவர் சொல்வாரே, "கனியிருப்ப காய் கவர்ந்தற்று" என்று. அதுபோன்றுதான் இஸ்ரயேல் மக்களும் பொங்கி வழியும் நீரூற்றாகிய கடவுளை மறந்து, குட்டையாகிய பாகால் தெய்வத்தை வழிபாட்டு வந்தார்கள்.

பல நேரங்களில் நாமும்கூட, இப்படித்தான் கடவுளை மறந்து நம்முடைய மகிழ்ச்சியை எங்கெல்லாமோ தேடிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே, நாம் வாழ்வளிக்கும் தண்ணீராக இறைவனிடம் வந்து, அவரது அருளை பெற முயற்சி செய்வோம்.

சிந்தனை

"ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வடைவீர்கள்" (ஆமோ 5: 6) என்பார் ஆமோஸ் இறைவாக்கினர். ஆகையால், பொங்கி வழியும் நீரூற்றாகிய ஆண்டவரைத் தேடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 13: 10-17

"உங்கள் கண்களும் காதுகளும் பேறுபெற்றவை"

நிகழ்வு

மெட்டில்டா என்றொரு கல்லூரி மாணவி இருந்தார். இவருடைய தந்தைக்கு பிறந்தநாள் நெருங்கி வந்துகொண்டிருந்தது. இதனால் இவர் தன்னுடைய தந்தைக்குப் பிறந்தநாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று மிகத்தீவிரமாக யோசித்தார்; இறைவனிடத்தில்கூட இது குறித்து இவர் வேண்டினார். அப்பொழுதுதான் "திருவிவிலியத்தைப் பரிசாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்று இவருக்கு வெளிப்படுத்தப்பட்டது.

"தந்தையின் பிறந்தநாள் பரிசாகத் திருவிவிலியத்தைக் கொடுத்து விடலாம்... ஆனால், அதில் என்ன எழுதிக் கொடுக்கலாம்?" என்று மெட்டில்லா மீண்டும் யோசிக்கத் தொடங்கினார். "மெட்டில்டாவிடமிருந்து" என்று எழுதிக் கொடுக்கலாமா...? என்று நினைத்தார். "அப்படி எழுதிக் கொடுப்பது அவ்வளவு சிறப்பில்லை" என்று நினைத்த அவர், அந்த எண்ணத்தைக் கைவிட்டார். பின்னர், "உங்கள் குட்டி இளவரசியிடமிருந்து" என்று எழுதிக் கொடுக்கலாமா...? என்று நினைத்தார். "ஏழு கழுதை வயதாகின்றது; இன்னும் என்ன குட்டி இளவரசி!" என்று நினைத்து, அந்த எண்ணத்தையும் கைவிட்டார்.

இப்படியே இவர் சிந்தித்துக் கொண்டிருக்கும்பொழுது, தற்செயலாகத் தன் தந்தை வைத்திருந்த புத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தார். அவ்வாறு பார்க்கும்பொழுது, ஒரு புத்தகத்தில் "From the Author" (ஆசிரியரிடமிருந்து) என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மெட்டில்டா, தன் தந்தைக்கு அளிக்கவிருந்த பிறந்தநாள் பரிசான திருவிவிலியத்தின் முதல் பக்கத்தில் "ஆசிரியரிடமிருந்து" என்று எழுதிக் கொடுத்தார். அதை அன்போடு வாங்கிப் பார்த்த மெட்டில்டாவின் தந்தை, "எனக்கு இந்தத் திருவிவிலியத்தை எழுதிய இதன் ஆசிரியரான கடவுளிடமிருந்தா இந்தப் பரிசு வந்திருக்கின்றது; அப்படியானால், இத்திருவிவிலியத்தை நான் எந்தளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்த முடியுமோ, அந்தளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்தவேண்டும்" என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

இதற்குப் பின்பு அவர் திருவிவிலியத்தைக் கருத்தூன்றி வாசிக்கத் தொடங்கினார். திருவிவிலியம் அவரைத் தொட்டது. இதனால் அவர் ஒரு நற்செய்திப் பணியாளராக மாறி, நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். அவ்வாறு அவர் மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கும்பொழுது, "திருவிவிலியம் என்பது மற்ற நூல்களைப் போன்ற ஒரு சாதாரண அல்ல, அது கடவுள் மானிடர் யாவருக்கும் கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு. இதை ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு பயன்படுத்தினால் ஏராளமான ஆசிகள் கிடைக்கும்" என்றார்.

ஆம். திருவிவிலியம் என்பது கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மிகவும் மேலான ஓர் அன்புப் பரிசு. இதை நாம் நம்பிக்கையோடு வாசித்து, அதன்படி வாழ்ந்தால், நாம் மிகுந்த கனிதருவோம் என்பது உறுதி. நற்செய்தியில் இயேசு, இறைவார்த்தையைக் கேட்டு நடப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் விதைப்பவர் உவமைக்கு விளக்கம் தருவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கண்ணிருந்தும் குடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் வாழ்ந்தவர்கள்

"ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?" என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்பதிலிருந்து இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகின்றது. உவமை என்பது கண் காணாவற்றை (ஓரளவு) புரிந்துகொள்வதற்கு கண்முன்னால் இருக்கின்ற ஒரு கதையாடல் வடிவம். இயேசு தன்னுடைய போதனையில் மூன்றில் ஒரு பகுதியை உவமையாகத்தான் பயன்படுத்தினார். இயேசு சொன்ன உவமைகள் அவரை ஏற்றுக்கொண்ட மக்களுக்குப் புரிந்தன; அவரை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்குப் புரியாமல் மறைவாய் இருந்தன. இதனால் இயேசு இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை (எசா 6:9) மேற்கோள் காட்டி, அவர்கள் கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்கள் இருக்கின்றார்கள் என்கின்றார்.

ஆம், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டும், அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பவர்கள், யாவரும் கண்ணிருந்தும் குருடர்கள்தான்; காதிருந்தும் செவிடர்கள்தான்.

இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, அவரை நம்பியதால் சீடர்கள் பேறுபெற்றவர்கள்

பரிசேயர்கள் இயேசுவை நம்பாமல் இருந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவர்மீது நம்பிக்கை கொண்டார்கள். அதனால் இயேசு அவர்களிடம், உங்கள் கண்களும் காதுகளும் பேறுபெற்றவை என்கின்றார். இயேசுவைக் காண்பதற்கும், அவருடைய குரலைக் கேட்பதற்கும் பலரும் ஏங்கினார்கள்; அவர்களுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால், அவருடைய வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கைகொண்ட அவருடைய சீடர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்படியானால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசான திருவிவிலியத்தை நாம் வாசித்து, அதன்மீது நம்பிக்கைகொண்டு, அதன்படி வாழ்கின்றபொழுது நாமும் பேறுபெற்றவர்கள் ஆவோம்; மிகுந்த கனிகளையும் தருவோம். இது உண்மையிலும் உண்மை.

நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்மீது நம்பிக்கை வைத்து, வாழத் தயாரா? சிந்திப்போம் .

சிந்தனை

"என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்போர் என்மீது அன்புகொண்டுள்ளார்; அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்" (யோவா 14: 21) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவின் வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!