|
|
22 ஜூலை 2020 |
|
பொதுக்காலம்
16ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
புனித மகதலா மரியா விழா
=================================================================================
கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை.
இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 3: 1-4a
தலைவியின் கூற்று:
இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்; என் உயிர்க்குயிரான அன்பரைத்
தேடினேன்; தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்!
"எழுந்திடுவேன்; நகரத்தில் சுற்றிவருவேன்; தெருக்களிலும் நாற்சந்திகளிலும்
சுற்றி என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்" தேடினேன்;
தேடியும் அவரைக் கண்டேன் அல்லேன்!
ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்; நகரைச் சுற்றி வந்தவர்கள்
அவர்கள். "என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களோ?"
என்றேன். அவர்களை விட்டுச் சற்று அப்பால் சென்றதுமே கண்டேன் என்
உயிர்க்குயிரான அன்பர்தமை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது
பழையன கழிந்து புதியன புகுந்தன.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 5: 14-17
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும்
இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும்.
வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக
வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.
ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை;
முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம்.
ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு
இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப் பட்டவராய் இருக்கிறார்.
பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 63: 1. 2-3. 4-5. 7-8 . (பல்லவி: 1b)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
1
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர்
உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என்
உடல் உமக்காக ஏங்குகின்றது. - பல்லவி
2
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை
நோக்குகின்றேன்.
3
ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப்
புகழ்கின்றன. - பல்லவி
4
என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்;
கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
5
அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என்
வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். - பல்லவி
7
ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின்
நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.
8
நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப்
பிடித்துள்ளது. - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! வழியில் என்ன கண்டாய் நீ, மரியே, எமக்கு
உரைப்பாயே. உயிரோடுள்ள கிறிஸ்துவின் கல்லறை தன்னைக் கண்டேனே;
உயிர்த்த ஆண்டவரின் ஒப்பற்ற மாட்சியும் கண்டேனே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1, 11-18
வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும்
முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த
கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.
மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே
கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு
வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில்
ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
அவர்கள் மரியாவிடம், "அம்மா, ஏன் அழுகிறீர்?" என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம், "என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய் விட்டனர்;
அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை" என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக்
கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை.
இயேசு அவரிடம், "ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" என்று
கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம்,
"ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர்
எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்" என்றார்.
இயேசு அவரிடம், "மரியா" என்றார். மரியா திரும்பிப் பார்த்து,
"ரபூனி" என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு "போதகரே" என்பது
பொருள். இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான்
என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம்
சென்று அவர்களிடம், "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும்
உங்கள் கடவுளுமானவரிடம் செல்ல இருக்கிறேன்" எனச் சொல்" என்றார்.
மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்;
தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எரேமியா 1: 1, 4-10
எரேமியாவைத் தன் பணிக்காக அழைத்த இறைவன்
நிகழ்வு
முன்பெல்லாம் சரக்குக் கப்பல்களில் பணிசெய்வதற்குப் பதின்பருவத்தில்
(Teenage) உள்ளவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். காரணம், அவர்கள்தான்
கப்பல் தளபதி இடும் உத்தரவுகளுக்கு அப்படியே பணிந்து நடப்பார்கள்
என்பதால். ஒருமுறை ஒரு பெரிய சரக்குக் கப்பலின் உரிமையாளர்,
தனக்குச் சொந்தமான கப்பல்களில் பணிபுரிய, பதின்பருவத்தில் உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம் என்றோர் அறிவிப்பை விடுத்தார். அந்த அறிவிப்பைப்
பார்த்துவிட்டு பதின்பருவத்தில் இருந்த பலரும் விண்ணப்பித்திருந்தார்கள்.
குறிப்பிட்ட ஒரு நாளில் விண்ணப்பத்திருந்த ஒருசிலர் நிர்வாகத்தால்
அழைக்கப்பட்டு, நேர்முகத் தேர்வானது நடத்தப்பட்டது.
நேர்முகத் தேர்வின்பொழுது சரக்குக் கப்பலின் உரிமையாளர், அந்தக்
கப்பலில் பணியாற்றிய தளபதி, மாலுமி ஆகியோர் சுற்றி அமர்ந்துகொண்டு
தேர்வுக்கு வந்தவர்களிடம் கேள்விமேல் கேள்வி கேட்டார்கள்.
யாருமே அவர்கள் எதிர்பார்த்த மாதிரி பதிலளிக்காததால் நிராகரிக்கப்பட்டார்கள்.
நேர்முகத் தேர்வு முடியப்போகும் நேரத்தில் ஒருவன் வந்தான். அவனிடம்
கப்பலின் உரிமையாளர், "உன்னால் என்ன வேலையெல்லாம் செய்ய
முடியும்? இதுவரைக்கும் அப்படி என்ன வேலையைச்
செய்திருக்கின்றாய்?" என்றார். "நான் என்னால் முடிந்தத்தைச்
செய்வேன். என் தாயார் என்னிடம் சொன்னதன் பேரில், கடந்த ஈராண்டுகளாக
அவருக்கு விறகுகளை வெட்டித் தருகிறேன்" என்றான் அவன். "நல்லது.
இதுவரை நீ செய்த வேலையைச் சொன்னாய் அல்லவா...! இப்பொழுது நீ இதுவரை
செய்யாத வேலையைச் சொல்" என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் கப்பலின்
உரிமையாளர்.
"இதுவரை நான் செய்யாத வேலை, மற்றவரைப் பற்றிப் புறணி பேசாததுதான்"
என்று அவன் சொன்னதுதான் தாமதம், கப்பலின் உரிமையாளர் அவனிடம்,
"தம்பி உன்னை என்னுடைய கப்பலில் பணிபுரிவதற்குத்
தேர்ந்தெடுக்கின்றேன். ஏனெனில், நீ உன்னுடைய தாயாருக்குக்
கீழ்ப்படிந்து நடக்கின்றாய். அப்படியானால் எனக்கும் கீழ்ப்படிந்து
நடப்பாய் என்பது தெளிவாகிறது. மேலும் நீ அடுத்தவரைப் பற்றிப்
புறணி பேசியதில்லை. அப்படியானால், என்னைப் பற்றியும், என்னுடைய
நிறுவனத்தைப் பற்றியும் அடுத்தவரிடம் புறணி பேசமாட்டாய் என்பது
தெளிவாகிறது. ஆகையால், நீ நாளைக் காலையில் பணியில் வந்து
சேர்ந்துகொள். வாழ்த்துகள்" என்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற சரக்குக் கப்பலின் உரிமையாளரைப்
போன்று, இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு நிறுவனமும், தன்னிடம்
புரிபுரிவதற்கு இன்னன்ன தகுதிகள் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது.
ஆனால், ஆண்டவர் ஒருவரைத் தன்னுடைய பணிக்காகத்
தேர்ந்தெடுக்கின்றார் எனில், அவர்களை அவர் மனிதர்களைப் போன்று
தேர்ந்தெடுப்பதில்லை. அவர் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையே
வித்தியாசமானது. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் எரேமியாவைத்
தேர்ந்தெடுப்பதை அல்லது அழைப்பதைக் குறித்து வாசிக்கின்றோம்.
எரேமியாவின் அழைப்பு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக்
குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தகுதியவற்றவர்களைத் தகுதியுள்ளவராக்கும் இறைவன்
எரேமியாவிற்கு இருபது வயது நடக்கும்பொழுது, அதாவது கி.மு.626
ஆம் ஆண்டு, ஆண்டவர் அவரைத் தன்னுடைய பணிக்காக அழைக்கின்றார்.
ஆண்டவர் எரேமியாவை அழைத்தபொழுது, அவர் நான்
சிறுபிள்ளையாயிற்றே... எனக்குப் பேசத் தெரியாதே என்று
சொல்கிறார். உடனே ஆண்டவர் அவரிடம், (அதைப்பற்றியெல்லாம்
கவலைப்படாதே), யாரிடம் அனுப்புகிறேனோ, அவர்களிடம் நான்
சொல்வதைச் சொல் என்கிறார். இதன்மூலம் கடவுள்,
தகுதியில்லாதவர்களைத் தன்னுடைய பணிக்காக அழைத்தாலும்,
அவர்களைத் தன்னுடைய அருளால் தகுதியுள்ளவர்களாக,
ஏற்புடையவர்களாக மாற்றுகின்றார் (உரோ 8: 30) என்பது
உறுதியாகின்றது.
பாதுகாக்கும் இறைவன்
கடவுள் தான் அழைத்தவர்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றுவதோடு
மட்டுமல்லாமல், அவர்களைப் பாதுகாக்கவும் செய்கின்றார். அதை
எரேமியாவின் அழைப்பில் நாம் காணலாம். "உன்னை விடுவிக்க நான்
உன்னோடு இருக்கின்றேன்" என்று ஆண்டவர் எரேமியாவிடம் சொல்வதன்
வழியாக, ஆண்டவர் எரேமியாவிற்குத் தன்னுடைய பாதுகாப்பை
உறுதிப்படுகின்றார். ஆம், கடவுள் தாம் அழைத்தவர்களைத் தனியாக
விட்டுவிடுவாரா என்ன? ஒருபோதும் அப்படி விடமாட்டார். ஏனெனில்,
அவர் உலகம் முடியும்வரை உடனிருக்கும் இறைவன் (மத் 28: 20).
தன் விருப்பத்தை நிறைவேற்றும் இறைவன்
கடவுள், ஒருவர் தகுதியவற்றவராக இருந்தாலும் அவரை அழைக்கின்றார்
எனில், அவர் வழியாகத் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற
இருக்கின்றார் என்பதுதான் பொருள். கடவுள் எரேமியாவைத் தன்னுடைய
பணிக்காக அழைத்தார் எனில், அவர் வழியாகத் தனது வார்த்தையை
மக்களிடம் எடுத்துரைக்க விரும்பினார். எரேமியா கடவுகளின்
விருப்பத்திற்குப் பணிந்து நடந்தார், அதனால் அவருடைய விருப்பம்
நிறைவேறியது.
அன்று எரேமியாவை அழைத்த இறைவன், இன்று நம்மையும்
அழைக்கின்றார். ஆகையால், நாம் கடவுளின் மேலான அழைப்பையும்,
அவர் அளிக்கும் பாதுகாப்பையும் உணர்ந்து, அவருடைய பணிசெய்யத்
தயாராவோம். அதன்மூலம் அவருடைய உண்மையான சீடர்களாகவும் ஆவோம்.
சிந்தனை
"கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர்
யார்?" (உரோ 8: 31) என்பார் புனித பவுல். ஆகையால், தன்னுடைய
பணியைச் செய்வதற்காக நம்மை அழைக்கின்ற இறைவன், நம்மோடு என்றும்
இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு அவருடைய பணியைச் செய்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 13: 1-9
"சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன"
நிகழ்வு
ஜப்பானிலிருந்த ஓர் இளம்பெண், தன்னுடைய தந்தையின் பிறந்தநாளைச்
சிறப்பாகக் கொண்டாட, பக்கத்திலிருந்த ஒரு கடையிலிருந்து கேக்
அதாவது சீமைப்புட்டு வாங்கச் சென்றார். அவர் அந்தக் கடையில்
இருந்த பெண்மணியிடம் என்ன மாதிரியான கேக் வேண்டும் என்பதையும்,
எந்த அளவில் கேக் வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு, கேக்கை
அவர் உள்ளே சென்று, எடுத்து வரும்வரைக்கும் வெளியே
காத்திருந்தார்.
அப்பொழுது கேக் வாங்க வந்த அந்த இளம்பெண், கடையில் தன்னுடைய
கண்களை அலையவிட்டார். கடையின் சுவர் முழுவதும்,
திருவிவிலியத்திலுள்ள பக்கங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அதைப்பார்த்து வியந்துபோன, அந்த இளம்பெண், கேக்கை
எடுத்துக்கொண்டு வெளியே வந்த அந்தக் கடைக்காரப் பெண்மணியிடம்,
"என்ன இது! உங்களுடைய கடையின் சுவர் முழுவதும்
திருவிவிலியத்திலுள்ள காகிதங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன...!
திருவிவிலியம் என்றால், உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?"
என்றார். அதற்கு அந்தக் கடைக்காரப் பெண்மணி, "திருவிவிலியம்
எனக்கு மிகவும் பிடிக்கும்தான்; ஆனால், இதற்குப் பின்னால்
பெரிய கதை இருக்கின்றது" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்:
"ஒருநாள் மாலை வேளையில் நான் கடைத்தெரு வழியாகச்
சென்றுகொண்டிருந்தான். வழியில் ஒரு பழைய புத்தகக்கடை இருந்தது.
அந்தக் கடைக்கு முன்பாக ஒரு பழைய புத்தகத்தின் காகிதங்கள்
சிதறிக் கிடந்தன. அவற்றைப் பார்த்த நான், "நம்முடைய கடைக்குக்
காகிதங்கள் தேவைப்படும் அல்லவா!" என்று நினைத்துக்கொண்டு,
அவற்றையெல்லாம் அள்ளிக்கொண்டு வந்து, சிலவற்றை என்னுடைய
கடையின் சுவர் முழுவதும் ஒட்டிவைத்தேன். இதையடுத்து வந்த
நாளில், என்னுடைய பேரன், சுவற்றில் ஒட்டபட்டிருந்த
காகிதங்களைச் சத்தமாக வாசிக்கத் தொடங்கினான். அதைக்
கேட்டும்பொழுது சில கருத்துகள் புரிந்துகொள்ளும்படியாகவும்,
சில கருத்துகள் புரிந்துகொள்ள முடியாதவாறும் இருந்தன.
இந்நிலையில் என்னுடைய கடைக்குப் பெரியவர் ஒருவர் வந்தார். அவர்
என்னுடைய கடையின் சுவர் முழுவதும் காகிதங்கள்
ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, "இந்தக் காகிதங்கள்
எல்லாம், எந்த நூலில் உள்ள காகிதங்கள் என்று தெரியுமா...? இதன்
அர்த்தம் தெரியுமா...?" என்று கேட்டார். நானோ, "இது எந்த
நூலில் உள்ள காகிதங்கள் என்று தெரியாது... இதில் உள்ள
கருத்துகள் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருக்கின்றன"
என்றேன். உடனே அவர் என்னைப் பக்கத்திலிருந்த ஒரு கிறிஸ்தவக்
கோவிலுக்கு அழைத்துச் சென்று, அங்கு நடைபெற்ற வழிபாட்டில்
என்னைத் தொடர்ந்து கலந்துகொள்ளச் செய்தார். வழிபாட்டின்பொழுது
அருள்பணியாளர் ஒவ்வொருநாளும் விளக்கம் கொடுக்கும்பொழுதுதான்
தெரிந்தது, என்னுடைய கடைச் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கின்ற
காகிதங்கள் எல்லாம் திருவிவிலியத்திலுள்ள என்று. மேலும்
அதற்கான அர்த்தமும் புரிந்தது. இப்பொழுது நான் என்னுடைய
கடைக்குக் கேக் வாங்க வருபவர்களிடம், அவர்கள் வாங்குகின்ற
கேக்கோடு ஓர் இறைவார்த்தை அச்சிடப்பட்டிருக்கின்ற ஒரு சிறிய
அட்டையைப் போட்டுக் கொடுக்கின்றேன்."
அந்தக் கடைக்கார பெண்மணி சொன்னதைப் பொறுமையாகக்
கேட்டுக்கொண்டிருந்த இளம்பெண், "உங்களுடைய சேவை தொடரட்டும்.
வாழ்த்துகள்" என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.
ஆம், இறைவார்த்தை என்ற விதை, நல்ல நிலமாகிய, அந்தக் கடைக்கார
பெண்மணியின் உள்ளத்தில் விழுந்தது. அதனால்தான் அவர் நூறு
மடங்காப் பலன் தந்தார். இன்றைய நற்செய்தி வாசகம் நாம்
ஒவ்வொருவரும் நூறு மடங்கு பலன்தரும் நல்ல நிலமாக வாழ
அழைக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
பலன் தராத கெட்ட நிலங்கள்
நற்செய்தியில் இயேசு விதைப்பவர் உவமையைச் சொல்கின்றார். இயேசு
சொல்லும் இந்த உவமையில் நான்கு நிலங்கள் இடம்பெறுகின்றன. இந்த
நான்கில் முதல் மூன்று நிலங்களான, வழியோர நிலம், மண்ணில்லாப்
பாறை நிலம், முட்செடி நிலம் ஆகிய மூன்று நிலங்களும் கெட்ட
நிலங்களாக இருக்கின்றன. ஏன் கெட்ட நிலம் எனில், நல்ல நிலம்
பலன் கொடுக்கும். அப்படியானால் பலன் கொடுக்காத நிலங்களைக்
கெட்டநிலம் என்றுதானே சொல்லவேண்டும். மனிதர்களிலும் சில பலன்
கொடுக்காத, கெட்ட நிலங்கள் இருக்கின்றார்கள். இவர்கள்
தங்களுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்ப்பது நல்லது
பலன் கொடுக்கும் நல்ல நிலம்
இயேசு சொல்லக்கூடிய நான்காவது நிலம், நல்ல நிலம். இந்த நிலம்
முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலன்
கொடுக்கின்றது. இறைவார்த்தையைக் கேட்டு, அதைத் தியானித்து,
அதன்படி வாழ்கின்ற ஒவ்வொருவரும் நல்ல நிலமாக இருக்கின்றார்.
அதனால் அவர்கள் மிகுந்த பலன் கொடுக்கக்கூடியவர்களாக
இருக்கின்றனர்.
நாம் பலன் கொடுக்கின்ற நல்ல நிலமாக இருக்கின்றோமா? அல்லது பலனே
கொடுக்காத கெட்ட நிலமாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெற்றிபெறுவீர்கள்" (2 குறி
20: 20) என்கிறார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவருக்குச்
செவிகொடுத்து, நல்ல நிலமாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை (ஜூலை 22)
புனித மகதலா மரியா விழா
இன்று திருச்சபையானது தூய மகதலா மரியாளின் விழாவைக் கொண்டாடி
மகிழ்கின்றது. கலிலேயாவிலுள்ள மகதலா என்னும் ஊரில் பிறந்ததால்
இவர் மகதலா மரியாள் என்று அழைக்கப்படுகிறார். ஒருசிலர் இயேசுவின்
பாதத்தை தன்னுடைய கூந்தலால் கழுவிய பாவிப் பெண் இவர் என்று
சொல்வர். ஆனால் அது உண்மையில்லை என்று விவிலிய அறிஞர்கள் மறுக்கிறார்கள்.
இவர் இயேசுவால் ஏழு பேய்கள் நீங்கப் பெற்றவர் (லூக் 8:1). இயேசுவின்
சிலுவையின் அடியில் நின்றவர். இவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த
நாளில் இவருடைய விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று
சிந்தித்து பார்ப்போம்.
முதலாவதாக மகதலா மரியா பெற்ற நன்மைக்கு நன்றியுள்ளவராக இருந்தார்.
ஆண்டவர் இயேசு இவரிடமிருந்து ஏழு பேய்களை ஓட்டியதும், அதை அப்படியே
மறந்துவிட்டு, தன்னுடைய வழியில் சென்றவர் இல்லை இவர். மாறாக ஆண்டவர்
இயேசுவோடு இறுதிவரை நின்றவர், அவருக்கு எல்லாப் பணிவிடைகளையும்
செய்தவர்.
கடவுளிடமிருந்து நாம் ஏராளமான நன்மைகளைக் கொடையாகப்
பெறுகின்றோம். அவற்றிற்க்கெல்லாம் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோமா?
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இயேசுவிடமிருந்து
குணம்பெற்று நன்றி செலுத்த வராத அந்த ஒன்பது தொழுநோயாளிகளைப்
போன்றுதான் இருக்கிறோம். நன்றி செலுத்த வந்த அந்த சமாரியனைப்
போன்று ஒருபோதும் இருப்பதில்லை.
நன்றி என்ற நற்குணம் எல்லாப் பண்புகளிலும் சிறந்தது என்பார் சிசரோ
என்ற அறிஞர். ஆகவே நாம் மகதலா மரியாவைப் போன்று ஆண்டவரிடம்
பெற்ற நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
தூய மகதலா மரியாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய இரண்டாவது
பாடம் அவர் எப்போதும், ஏன் எல்லாவற்றிற்கும் மேலாக முதன்முதலாக
கடவுளைத் தேடினார். இயேசுவின் மற்ற சீடர்களெல்லாம்
வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க மகதலா மரியாதான் வாரத்தின் முதல்
நாளன்று கல்லறைக்கு வருகிறார். கல்லறை வாயிலில் இருந்த கற்கள்
அகற்றப்பட்டிருப்பதைக் கண்டு கலக்கம் கொள்கிறார். ஆண்டவர் இயேசுவின்
உடலை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனரோ என்று வருந்தி அழுகின்றார்.
இப்படி அவர் முந்தமுந்த இயேசுவைத் தேடியதால், உயிர்த்த இயேசுவை
முதல்முறையாகக் காணும் பேறுபெறுகின்றார். இயேசுவின் சீடர்களாக
வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் கடவுளை முந்த முந்த
தேடுகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஓர் ஊரில் ஒரு படகோட்டி இருந்தார். அவர் ஊருக்கு மிக அருகில்
இருந்த ஆற்றில் படகோட்டி, அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து
பிழைப்பை ஒட்டிக்கொண்டு வந்தார். அவர் சிறந்த ஒரு பக்திமானும்
கூட.
ஒருநாள் அவருடைய படகில் படகு சவாரி செய்ய சில இளைஞர்கள்
வந்திருந்தார்கள். அவர்கள் மிகவும் துடுக்கானவர்களாக
இருந்தார்கள். படகோட்டி படகு சவாரியைத் தொடங்குவதற்கு முன்பாக
சிறதுநேரம் ஜெபித்துவிட்டு அதன்பின் தொடர்ந்தார். இதைப்பார்த்த
அந்த இளைஞர்கள், "காலச் சூழ்நிலை எல்லாம் நன்றாகத் தானே
இருக்கிறது. பிறகு எதற்கு ஜெபிக்க வேண்டும்" என்று நினைத்து
தங்களுக்குள் ஏளனமாகச் சிரித்துக் கொண்டார்கள்.
படகு பயணம் சென்றது. அப்போது திடிரென்று ஆற்றில் நீர்வரத்து
அதிகமாக ஏற்பட, படகு நிலைகுலையும் அபாயம் ஏற்பட்டது. உடனே
இளைஞர்கள் யாவரும் அலறியடித்துக் கொண்டு கடவுளிடம் ஜெபிக்கத்
தொடங்கினார்கள். ஆனால் படகோட்டி மட்டும் ஜெபிக்காமல், படகை
ஓட்டுவதிலே மும்முரமாக இருந்தார்.
இதைக் கண்ட இளைஞர்கள் அவரிடம், "நாங்களெல்லாம் ஜெபிக்க, நீர்
மட்டும் ஜெபிக்காமல், இப்படி படகோட்டுவதிலே குறியாய்
இருக்கிறீர்?" என்று கேட்டு கடிந்துகொண்டார்கள். அதற்கு அவர்,
"நான்தான் தொடக்கத்திலே இறைவனிடம் ஜெபித்துவிட்டேனே, இப்போது
ஆபத்து வருகிறபோது படகை எப்படி சரியாக ஓட்டுவது என்று
சிந்திக்க வேண்டுமே ஒழிய, இந்நேரத்தில் ஜெபித்துக்
கொண்டிருப்பது நல்லதல்ல" என்றார்.
பல நேரங்களில் இந்த நிகழ்வில் வரும் இளைஞர்களைப் போன்றுதான்
ஆபத்து வரும்போது இறைவனைத் தேடுகின்றோம் அல்லது இறைவனை
அழைக்கின்றோம். அதனால் எந்த பயனும் வரப்போவதில்லை. கண்கெட்ட
பிறகு சூரிய நமஷ்காரம் என்பதுபோல, கடைசி நேரத்தில் கடவுளைத்
தேடுவதால் ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. ஆதலால்
எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை முதல்முதலாகத் தேடுவோம்.
இறுதியாக மகதலா மரியாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய
பாடம். அவர் ஒரு நற்செய்தி அறிவிப்பாளராக விளங்கினார் என்பதே
ஆகும். உயிர்த்த இயேசு அவருக்கு காட்சி கொடுக்கும்போது, "நீ
என் சகோதரர்களிடம் சென்று, என் தந்தையும், உங்கள்
தந்தையுமானவிடம் செல்லவிருக்கிறேன் எனச் சொல்" என்கிறார்.
மகதலா மரியாவும் இயேசு சொன்னதை, இயேசு உயிர்த்ததை சீடர்களிடம்
அறிவித்து முதல் நற்செய்தி அறிவிப்பாளராக விளங்கினார்.
திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் நற்செய்தி
அறிவிப்பாளர் என்பதை உணர்ந்து, இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா
மக்களுக்கும் அறிவிப்போம்.
ஆகவே, மகதலா மரியாவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று
கடவுளிடமிருந்து பெற்ற நன்மைக்கு நன்றியுள்ளவராக இருப்போம்.
இறைவனை முதன்முதலாகத் தேடுவோம், எல்லாவற்றிற்கும் மேலாக
நற்செய்தி அறிவிப்பாளராக விளங்குவோம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|