Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     21 ஜூலை 2020  

பொதுக்காலம் 16ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20

ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்தது போல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.

உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்பு கூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார். பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 85: 1-3. 4-5. 6-7 . (பல்லவி: 7a) Mp3
=================================================================================


பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.
1
ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.
2
உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர்.
3
உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர். கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர். - பல்லவி

4
எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும்.
5
என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறை தோறுமா உமது கோபம் நீடிக்கும்? - பல்லவி

6
உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?
7
ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: "என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்." அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

தம் சீடர் பக்கம் கையை நீட்டி, "என் தாயும் சகோதரர்களும் இவர்களே'' என்றார் இயேசு.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

அக்காலத்தில்

மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்" என்றார்.

அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?" என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, "என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மீக்கா 7: 14-15

மன்னிப்பதில் இறைவனுக்கு நிகரானவர் யாருமில்லை

நிகழ்வு

கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தார் என்பதற்காகக் அருள்பணியாளர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்த சிறை அதிகாரியால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார். எந்தளவுக்கு என்றால், அருள்பணியாளர் பாதி மயக்கமுறுகின்ற அளவுக்கு அந்தச் சிறைஅதிகாரி அவரை அடித்தார்.

அருள்பணியாளர் பாதி மயக்கமுற்றுக் கிடந்த நிலையில் சிறை அதிகாரி, அவரிடம், "நான் உங்களை மயக்கமுறுகின்ற அளவுக்கு அடித்துத் துன்புறுத்தி இருக்கின்றேன். இப்பொழுது நீங்கள் நம்புகின்ற இயேசு என்ன செய்வார்?" என்றார். துவண்டுபோய்க் கிடந்த அந்த நிலையிலும் அருள்பணியாளர் அவரிடம், "நாம் நம்புகின்ற இயேசு, என்னை இப்படி அடித்துத் துன்புறுத்தி இருக்கின்ற உங்களை மனதார மன்னிப்பதற்கான ஆற்றலைத் தருவார்" என்றார். இதைக் கேட்டுவிட்டு அந்தச் சிறை அதிகாரியால் எதுவும் பேசமுடியவில்லை.

ஆம். நம் ஆண்டவராகிய கடவுள், பிறர் நமக்கு எதிராகச் செய்யும் குற்றங்களை மன்னிப்பதற்கான ஆற்றலை நமக்குத் தருவதோ மட்டுமல்லாமல், அவரே நம்முடைய குற்றங்களை மன்னிப்பவராக இருக்கின்றார். ஏனெனில் மன்னிப்பதில் அவருக்கு நிகர் வேறு யாரும் கிடையாது. இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், கடவுள் மன்னிப்பதில் எவ்வளவு தாராளமாக இருக்கின்றார் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இஸ்ரயேல் மக்கள் செய்த குற்றம்

ஆண்டவராகிய கடவுள் மோசேயிடம் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார். இதில் முதன்மையான கட்டளை, "நானே உன் கடவுளாகிய ஆண்டவர்... என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது" (விப 20: 1-3) என்பது ஆகும். அதேபோன்று, "உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக" (இச 6:5) என்றும் இஸ்ரயேல் மக்களிடம் சொல்லப்பட்டது; ஆனால், இஸ்ரயேல் மக்கள், உண்மைக் கடவுளை மறந்து பாகால் தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள். இதனாலேயே அவர்கள்மீது கி.மு. 722 ஆம் ஆண்டு அசீரியர்களின் படையெடுப்பு ஏற்பட்டது.

இத்தகையதொரு சூழ்நிலையில் இறைவாக்கினர் மீக்கா, ஆண்டவராகிய கடவுளிடம், மன்னிப்பதில் உமக்கு நிகரானவர் யாருமில்லை. ஆகையால், இஸ்ரயேல் மக்களை நீர் மன்னித்து, உமது கோலினால் அவர்களை மேய்த்தருளும் என்கின்றார்.

மன்னிப்பதில் தாராளமான இறைவன்

இறைவாக்கினர் மீக்கா, ஆண்டவராகிய கடவுளிடம் முறையிடுகின்றபொழுது, "உனக்கு நிகரான இறைவன் யார்?" என்று சொல்லியே முறையிடுவதை நாம் வாசிக்கின்றோம். காரணம் இஸ்ரயேல் மக்கள் நெறிதவறி வாழ்ந்தபொழுது, வழிபட்டு வந்த பாகால் தெய்வம் பழிவாங்கக்கூடிய தெய்வமாகப் பார்க்கப்பட்டது; ஆனால், ஆண்டவராகிய இறைவன் அப்படிக் கிடையாது. அவர் பழிவாங்குகின்றவர் அல்லர்; அவர் மக்கள் தவறு செய்கின்றபொழுது அதை மன்னிக்கின்றவர்; பொறுத்துக் கொள்ளக்கூடியவர்.

இது தொடர்பாக திருப்பாடல் ஆசிரியர் கூறும்பொழுது, "ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்" (திபா 130: 3-4) என்பார். ஆம், கடவுள் நாம் செய்யக்கூடிய குற்றங்களை மனத்தில் வைத்திருப்பது கிடையாது; மாறாக அவற்றை மன்னிக்கக் கூடியவராக இருக்கின்றார். இந்த உண்மையைத்தான் இறைவாக்கினர் மீக்கா எடுத்துக்கூறுகின்றார். கடவுள் மன்னிப்பவராக இருக்கின்றார் எனில், அவரிடமிருந்து நாம் மன்னிப்பைப் பெறுவதற்கு ஒரு முதன்மையான செயலைச் செய்யவேண்டும். அது என்ன என்று பார்ப்போம்.

நொறுங்கிய, குற்றமுணர்ந்த நெஞ்சத்தோடு ஆண்டவரிடம் வருவோம்

மன்னிப்பதில் தாராளமாக இருக்கும் இறைவனிடமிருந்து மன்னிப்பைப் பெறுவதற்கு நாம் நொறுங்கிய, குற்றமுணர்ந்த நெஞ்சத்தோடு வரவேண்டும். ஏனெனில் அவர் நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை அவமதிப்பதில்லை (திபா 51: 17). இறைவாக்கினர் மீக்காகூட இஸ்ரயேல் மக்களின் பிரதிநிதியாக இருந்து நொறுங்கிய நெஞ்சத்தோடு, இறைவனுடைய மன்னிப்பை வேண்டி நிற்கின்றார். ஆகையால், நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் இறைவனிடம், நொறுங்கிய நெஞ்சத்தோடு வந்து, அவருடைய மன்னிப்பைப் பெறுவோம்.

சிந்தனை

நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்" (மத் 3: 8) என்று திருமுழுக்கு யோவான், தன்னிடம் திருமுழுக்குப் பெற வந்தவர்களிடம் சொல்வர். இறைவன் மன்னிப்பதில் தாராளமானவர்; அதில் அவருக்கு நிகரானவர் யாரும் கிடையாது என்பதை உணர்கின்ற நாம், நொறுங்கிய உள்ளத்தோடு அவரிடம் வந்து, மன்னிப்பைப் பெறுவோம். மன்னிப்பின் மூலம் மனமாற்றம் அடையும் நாம், அந்த மனமாற்றத்தைச் செயலில் காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 12: 46-50

"என் தாயும் சகோதரர்களும் இவர்களே!"

நிகழ்வு

முல்லா தன்னுடைய சிறுவயதில் மிகவும் குறும்புக்காரராக இருந்தார். குறிப்பாகத் தன் தந்தை என்ன சொன்னாலும், அதற்கு நேர்எதிராக செயல்பட்டு வந்தார். தன்னுடைய தந்தை இடப்பக்கம் நடக்கச் சொன்னால், வலப்பக்கம் நடப்பார். எதைச் செய்யக்கூடாது என்று சொன்னாரோ, அதையே செய்தார். இப்படி, தான் சொன்ன எல்லாவற்றையும் முல்லா நேர் எதிராகச் செய்துவந்ததால், முல்லாவின் தந்தை அவரைக் குறித்துப் பெரிதும் வருந்தினார்.

ஒருமுறை முல்லாவும் அவருடைய தந்தையும் சந்தையிலிருந்து இரண்டு சீனி மூட்டைகளை வாங்கி, அதைத் தங்களிடம் இருந்த இரண்டு கழுதைகள்மீது ஒவ்வொன்றாக ஏற்றினார்கள். இவ்வாறு சீனி மூட்டைகள் ஏற்றிவைக்கப்பட்ட இரண்டு கழுதைகளில் ஒரு கழுதையை முல்லாவும், இன்னொரு கழுதையை முல்லாவின் தந்தையும் ஓட்டிக்கொண்டு, வந்தார்கள். வழியில் ஒரு பாலம் வந்தது. அந்தப் பாலத்தில் பக்கவாட்டில் தடுப்புச்சுவர் கிடையாது.. அந்தப் பாலத்திற்கு வந்ததும், முல்லா ஓட்டிவந்த கழுதையின்மேல் இருந்த சீனி மூட்டை இடப்பக்கமாகச் சரியத் தொடங்கியது.

இதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போன, அவருடைய தந்தை, வழக்கமாகவே முல்லா நாம் சொல்வதற்கு நேர்எதிராகச் செயல்படுவார். இப்பொழுது மட்டும் அவர் நம்முடைய பேச்சை கேட்கவா போகிறார்? சீனிமூட்டை இடப்பக்கம் சரிந்திருக்கும் இந்த வேளையில், அவரிடம் வலப்பக்கமாக மூட்டை இழு என்றால், அவர் இடப்பக்கமாக இழுப்பார். இதனால் சீனி மூட்டை ஆற்றுக்குள் விழுந்துவிடும். இதனால் அவரிடம் மூட்டையை வலப்பக்கமாக இழு என்று சொல்வோம். அப்படிச் சொன்னால், அவர் மூட்டையை இடப்பக்கமாக இழுப்பார். சீனி மூட்டையும் ஆற்றுக்குள் விழுந்து விடாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று முல்லாவிடம், "மகனே! சீனி மூட்டையை வலப்பக்கமாக இழு" என்றார்.

இந்த முறை முல்லா அவருடைய தந்தை சொன்னதுபோன்றே செயல்பட்டு, மூட்டையை வலப்பக்கமாக இழுத்தார். இதனால் கழுதைமீது மீதிருந்த சீனி மூட்டை நடுநிலைக்கு வந்தது. இதைப் பார்த்து வியப்படைந்த முல்லாவின் தந்தை அவரிடம், "வழக்கமாக நான் சொல்வதற்கு நேர்எதிராகத்தானே நீ செயல்படுவாய்! இன்று மட்டும் நீயேன் நான் சொல்வதற்கு அப்படியே கீழ்ப்படிந்தாய்! ஒருவேளை நீ உன்னுடைய தந்தையாகிய என்னுடைய சொல்கேட்டு நடக்கத் தொடங்கிவிட்டாயா...?" என்றார். "அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் என்னிடம், கழுதையின் மேல்இருக்கும் மூட்டையை வலப்பக்கமாக இழு என்று சொன்னபொழுது, நான் உங்களுடைய கண்ணில் தெரிந்த தந்திரத்தைக் கண்டுபிடித்தேன். அதைப் பார்த்துவிட்டுத்தான் நான் உங்களுடைய சொற்களுக்கு எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கீழ்ப்படிந்து விடக்கூடாது என்பதற்காக, நீங்கள் நினைத்ததற்கு மாறாக, சீனி மூட்டையை வலப்பக்கமாக இழுத்தேன்" என்றார்.

முல்லா இப்படியெல்லாம் இருப்பார் என்று கனவிலும் எதிர்பார்த்திராத அவருடைய தந்தை அவரை நினைத்து இன்னும் வருத்தப்பட்டார்.

ஆம். இந்த நிகழ்வில் வருகின்ற முல்லாவைப் போன்றுதான் இன்றைக்குப் பலர் தந்தைக்கடவுளின் விருப்பத்தின் படி நடக்காமல், தங்களுடைய விருப்பத்தின்படி நடந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நற்செய்தியில் இயேசு, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் என்கின்றார். இயேசு சொல்வதுபோல் அவரது உண்மையான உறவினராக மாற நாம் செய்வது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே இயேசுவின் உண்மையான உறவினர்

இயேசு மதிமயங்கி விட்டார் (மாற் 3:21) என்று மக்கள் பேசிக்கொண்டதைக் கேள்விப் பட்ட, அவருடைய தாயும், அவருடைய சகோதரர், சகோதரிகளும் அவரைப் பார்க்க அவர் இருக்கும் இடத்திற்கு வருகின்றார்கள். இயேசுவை அவருடைய வீட்டிலிருந்து பார்க்க வந்திருக்கின்றார்கள் என்ற செய்தி, அவரிடம் சொல்லப்பட்டதும், அவர் தம் சீடர்ப் பக்கம் கையை நீட்டி, "என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்கின்றார்.

இயேசு தம் சீடர் பக்கம் கையை நீட்டி இவ்வாறு சொல்லக் காரணம், அவர்கள் இறைவார்த்தையைக் கேட்டார்கள்; அதிலிருந்து கற்றுக்கொண்டார்கள்; கற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அதை நம்பி, அதன்படி வாழ்ந்தார்கள். இவ்வாறு அவர்கள் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி அவருடைய தாயும் சகோதரர்களும் ஆனார்கள். நாமும் இயேசுவின் தாயாக சகோதரர், சகோதரியாக மாற, இறைவார்த்தையைக் கேட்டு, அதிலிருந்து கற்றுக்கொண்டு, அதை நம்பி, அதன்படி வாழ்வது மிகவும் இன்றியமையாதது.

சிந்தனை

இயேசு இவர்களை (நம்மைச்) சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை (எபி 2:11) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, இயேசுவின் உண்மையான உறவினர்கள் ஆவோம். அதவழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!