|
|
20 ஜூலை 2020 |
|
பொதுக்காலம்
16ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 6: 1-4, 6-8
ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து, மலைகளுக்கு
முன்னிலையில் உன் வழக்கைச் சொல்; குன்றுகள் உன் குரல் ஒலியைக்
கேட்கட்டும். மலைகளே, மண்ணுலகின் நிலையான அடித்தளங்களே, ஆண்டவரின்
வழக்கைக் கேளுங்கள்; ஆண்டவருக்குத் தம் மக்களோடு வழக்கு ஒன்று
உண்டு; இஸ்ரயேலோடு அவர் வாதாடப் போகின்றார்.
என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்? எதில் நான் உங்களைத்
துயரடையச் செய்தேன்? எனக்கு மறுமொழி கூறுங்கள். நான் உங்களை எகிப்து
நாட்டிலிருந்து அழைத்து வந்தேன்; அடிமைத்தன வீட்டிலிருந்து
மீட்டு வந்தேன்; உங்களுக்கு முன்பாக மோசேயையும், ஆரோனையும்,
மிரியாமையும் அனுப்பி வைத்தேன்.
ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக்
கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும்
அவர் முன்னிலையில் வரவேண்டுமா? ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள்
மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய்
மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என்
தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும்
பலி கொடுக்க வேண்டுமா?
ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே!
நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும்
உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர
வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 50: 5-6. 8-9. 16bc-17. 21,23 . (பல்லவி: 23b)
Mp3
=================================================================================
பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும்
மீட்பைக் கண்டடைவர்.
5
"பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன்
ஒன்றுகூட்டுங்கள்."
6
வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே
நீதிபதியாய் வருகின்றார்! - பல்லவி
8
நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை;
உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
9
உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ,
நான் ஏற்றுக்கொள்வதில்லை. - பல்லவி
16bcd
"என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை
பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17
நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத்
தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். - பல்லவி
21
இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்;
நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது
உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன்
ஒவ்வொன்றாய் எடுத்து உரைக்கின்றேன்.
23
நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம்
வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக்
கண்டடைவர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா 95: 8b, 7b
அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்
கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச்
செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து
இவர்களைக் கண்டனம் செய்வார்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-42
அக்காலத்தில்
மறைநூல்அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக,
"போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என
விரும்புகிறோம்" என்றனர்.
அதற்கு அவர் கூறியது: "இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம்
கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத்
தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா மூன்று
பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார்.
அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின்
உள்ளே இருப்பார்.
தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக்
கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு
அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவை விடப்
பெரியவர் அல்லவா!
தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து
இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக்
கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர்
சாலமோனிலும் பெரியவர் அல்லவா!"
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மீக்கா 6: 1-4, 6-8
கடவுள் உன்னிடம் கேட்பது நேர்மையையும்
இரக்கத்தையும் தாழ்ச்சியையும்தான்
நிகழ்வு
"இறக்கத்தானே தானே பிறந்தோம்; அதுவரை இரக்கத்தோடு இருப்போம்"
இந்தப் பொன்மொழியை உதிர்த்தவர் யாரென்று நமக்கு நன்றாகவே
தெரியும். அவர்தான் கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா. தான் இறக்கும்வரை
இரக்கத்தோடு பணிபுரிந்த இந்தப் புனிதையின் வாழ்க்கையில் நடந்த
நிகழ்வு இது.
1964 ஆம் ஆண்டு, திருத்தந்தை ஆறாம் பவுல் இந்தியாவுக்கு வந்திருந்தார்.
அவர் இந்தியாவிற்குச் செல்வதை அறிந்த, அப்போது அமெரிக்க அதிபராக
இருந்த லிண்டன் ஜான்சன், திருத்தந்தை அவர்கள் இந்தியாவில் தரைவழிப்
பயணம் மேற்கும்பொழுது, பயணத்திற்கு வசதியாக இருக்கும் என்று
"காண்டினென்டல்" என்ற விலையுயர்ந்த நான்கு சக்கர வண்டியைப் பரிசாக
அனுப்பி வைத்தார்.
திருத்தந்தை ஆறாம் பவுல் இந்தியாவிற்கு வந்தபிறகு, தரைவழியாக
எங்கெல்லாம் செல்லவேண்டி இருந்ததோ, அங்கெல்லாம் அவர்
"காண்டினென்டல்" என்ற அந்த வண்டியில் அமர்ந்து பயணம் செய்தார்.
கூடவே தன்னோடு இரக்கத்தின் வடிவாய் இருந்த தெரசாவையும் அழைத்துச்
சென்றார். இந்தியாவில் திருத்தந்தையின் திருப்பயணம் முடிந்தது.
திருத்தந்தையை வழியனுப்பி வைப்பதற்காக தெரசா வானூர்தி நிலையத்திற்குச்
சென்றிருந்தார். அப்பொழுது திருத்தத்தை ஆறாம் பவுல், தனக்குப்
பரிசாக அளிக்கப்பட்ட "காண்டினென்டல்" வண்டியை, தெரசாவிற்குப்
பரிசாக அளித்தார். தெரசாவும் அதை அன்போடு பெற்றுக்கொண்டார் .
இதைப் பார்த்துவிட்டு பத்திரிகைகள் "ஏழைகளுக்குச் சேவை
செய்துகொண்டிருக்கும் தெரசாவிற்குக் "காண்டினென்டல்" எதற்கு?"
என்று விமர்சித்தன. தெரசா அந்த விமர்சனங்களைக் கண்டுகொள்ளவில்லை;
"ஒருவர் நமக்குப் பரிசாக அளித்ததை உடனடியாக விற்பது நல்லது
கிடையாது!" என்று நினைத்தர் அவர். ஒருவாரம் கடந்தது. திருத்தத்தை
ஆறாம் பவுல் தனக்குப் பரிசாக அளித்த அந்தக் "காண்டினென்டல்" வண்டியை
விலைக்கு விற்றார். அதிலிருந்து ஒரு பெரிய தொகை கிடைத்தது. அந்தப்
பணம் முழுவதையும் அவர் ஏழைகளுக்காகவே பயன்படுத்தத் தொடங்கினார்.
இப்பொழுது பத்திரிகைகள், "ஏழைகளின் ஏந்தல் தெரசா",
"இரக்கத்தின் உரு தெரசா" என்று எழுதித் தள்ளின
ஆம். "பூமியின் தேவதையாய்" இம்மண்ணில் வலம்வந்த கொல்கொத்தா நகர்ப்
புனித தெரசா, இரக்கத்தின் மறுவுரு வாழ்ந்துவந்தார். இறைவாக்கினர்
மீக்கா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம்,
நீதியையும் இரக்கத்தையும் தாழ்ச்சியையும்தான் இறைவன் உன்னிடம்
கேட்கின்றார் என்று சொல்வதாக இருக்கின்றது. நாம் அதைக்
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பாப்போம்.
ஆண்டவருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே இருந்த வழக்கு
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தின் முற்பகுதியில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு
தனக்கு இருந்த வழக்கை எடுத்துரைப்பதாக இருக்கின்றது. எகிப்தில்
அடிமைகளாய் இருந்த இஸ்ரயேல் மக்களை மோசே, ஆரோன் மிரியம் ஆகியோரின்
தலைமையில் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்கு அழைத்து வந்தார்.
அப்படியிருந்தும் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு உண்மையாக இல்லாமல்,
பாகால் தெய்வத்தை வழிபட்டு வந்தார்கள். மட்டுமல்லாமல், கடவுளுக்குப்
பிடிக்காத எரிபலிகளையும் வேறு பலிகளையும் அவரிடம் கொடுத்துவந்தார்கள்.
இதனால் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், உங்களுக்கு நான் என்ன
செய்தேன்? எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்? என்று
கேட்கின்றார்.
நேர்மை, இரக்கம், தாழ்ச்சி இவற்றையே கடவுள் விரும்புகின்றார்
இஸ்ரயேல் மக்கள், ஆண்டவருக்குப் பிடிக்குமென எரிபலிகளையும் பிற
பலிகளையும் செலுத்தியபொழுது, ஆண்டவரோ அவர்களிடம் நேர்மையையும்
இரக்கத்தையும் தாழ்ச்சியையும் தவிர வேறு நான் எதை உன்னிடம்
கேட்கின்றேன் என்கின்றார்.
ஆம், ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் நேர்மையோடு இருக்கின்றபொழுது,
அவரிடம் இரக்கம் தானாக வந்து சேர்கின்றது. இரக்கம் இருக்கின்ற
இடத்தில் தாழ்ச்சியும் தானாகவே வந்து சேர்கின்றது. மேலே நாம்
பார்த்த கொல்கொத்த நகர்ப் புனித தெரசா கடவுளுக்கு முன்பாக
நேர்மையான வாழ்க்கை வந்தார். அதனால் அவரிடம் இரக்கமும்
தாழ்ச்சியும் தானாகவே வந்து சேர்ந்தன. இன்றைக்குப் பலர் தங்களுடைய
வாழ்க்கையில் நேர்மையைக் கடைப்பிடிப்பதில்லை. நேர்மையைக் கடைப்பிடிகாததாலேயே
அவர்களிடம் இரக்கமும் தாழ்ச்சியும் இல்லாமல் போய்விடுகின்றன.
ஆகையால், நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மையோடு இருக்கக்
கற்றுக்கொள்வோம். நேர்மை நம்மிடத்தில் இருக்கும் படசத்தில்,
இரக்கமும் தாழ்ச்சியும் தானாகவே வந்து சேரும்.
சிந்தனை
"ஒருவருடைய துயரத்தைக் கண்டு, அவருக்காகப் பரிதாபப்படுவதல்ல,
அவருடைய துயரத்தைப் போக்க ஆவனசெய்வதே உண்மையான இரக்கம்" என்பார்
டானியேல் கோல்மேன் என்ற அறிஞர். ஆகையால், நாம் நம்முடைய அன்றாட
வாழ்க்கையில், நம்மிடம் இருக்கும் இரக்கத்தைச் செயலில் வெளிப்படுத்துவோம்.
நேர்மையையும் தாழ்ச்சியையும் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 12: 38-42
நீங்கள் கண்ணால் கண்டால்தான் எதையும் நம்புகிறவர்களா?
நிகழ்வு
தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைக் கப்பலில் பயணம் செய்வதிலேயே
செலவிட்ட ஒரு கப்பல் தளபதி, ஒருநாள் தன்னுடைய பயணத்தை
முடித்துக்கொண்டு துறைமுகத்தில் வந்து இறங்கினார். அவர் துறைமுகத்தில்
வந்து இறங்கிய நாளில், தற்செயலாக அருள்பணியாளர் ஒருவரைச் சந்தித்தார்.
அவர் அந்தக் கப்பல் தளபதியிடம், இயேசுவின் தியாக அன்பை எடுத்துக்கூறி,
காணாமல் அவரை நம்புவோர் பேறுபெற்றோர் என்றார். இதற்கு அந்தக்
கப்பல் தளபதி, "நான் கண்ணால் காணாத எதையும் நம்பமாட்டேன்" என்று
சொல்லி, அருள்பணியாளருடனான பேச்சைத் துண்டித்தார்.
பின்னர் அருள்பணியாளர் அவருடைய வழியில் சென்றுவிட, கப்பல் தளபதி
கப்பலில் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார். அன்றைய நாளில் அவர்
பயணம் செய்த கப்பல் எதிர்பாராத விதமாக ஒரு பனிப்பாறையில் மோத,
அதில் பெரியை சேதம் ஏற்பட்டது. அந்நேரத்தில் அந்த வழியாக இன்னொரு
கப்பல் வர, அந்தக் கப்பலில் இருந்தவர்கள் பனிப்பாறையில் மோதிச்
சேதமான கப்பலில் இருந்த கப்பல்தளபதி உட்பட காயமடைந்த ஒருசிலருக்குச்
சிகிச்சை அளிக்க, எல்லாரும் விரைவில் நலமடைந்தார்கள்.
இந்த நிகழ்விற்குப் பிறகு எதையும் கண்ணால் கண்டால்தான் நம்புவேன்
என்று சொல்லிக்கொண்டிருந்த கப்பல் தளபதி தன்னுடைய வாழ்வை ஆய்வுக்கு
உட்படுத்திப் பார்த்தார். "கண்ணுக்குத் தெரியாமல் கடலுக்குள்
இருக்கும் பனிப்பாறைவே இவ்வளவு வல்லமையானதாக இருக்கும்பொழுது,
கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் கடவுள் எவ்வளவு வல்லமயானவராக
இருப்பார்...! இந்த உண்மையை உணராமல், இத்தனை ஆண்டுகளும் நான்
வாழ்ந்துவிட்டேனே...!" என்று சொல்லி வேதனைப்பட்டார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற கப்பல் தளபதியைப் போன்றுதான்
பலரும் எதையும் கண்ணால் கண்டால்தான் நம்புவேன் என்றும்,
அருமடையாளத்தைக் கண்டால் நம்புவேன் என்றும் வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்கள். நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற
மறைநூல் அறிஞரும், பரிசேயர்களும், (நீர் மெசியா என்றால்)
அடையாளம் ஒன்றைக் காட்டவேண்டும் என்று விரும்புகிறோம்
என்கிறார்கள். இதற்கு இயேசுவின் பதில் என்னவாக இருக்கின்றது
என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவை மெசியா என்று நம்ப மறுத்த பரிசேயர்கள்
மக்கள் நடுவில் இறையாட்சிப் பணியைச் செய்தத் தொடங்கிய இயேசு,
இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்ததோடு
மட்டுமல்லாமல், பல்வேறு வல்லசெயல்களையும் அருமடையாளங்களையும்
அவர்கள் நடுவில் செய்துவந்தார். இவற்றையெல்லாம் பரிசேயர்களும்
அவர்களைச் சார்ந்தவர்களும் கண்கூடாகக் கண்டார்கள். ஆனாலும்,
அவர்கள் இயேசுவே மெசியா என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.
மேலும் அவரை எப்படியாவது ஒழித்துக்கட்ட முடிவுசெய்தார்கள்
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவர்கள் இயேசுவிடம் வந்து,
"அடையாளம் ஒன்று காட்டவேண்டும் என விரும்புகிறோம்"
என்கிறார்கள்.
பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்ட அடையாளம் சாதாராண ஒன்று அல்ல.
யோர்தானை இரண்டாகப் பிளப்பது, வானத்திலிருந்து விண்மீனைக் கீழே
விழச் செய்வது போன்ற அடையாளம். பரிசேயர்கள் இதுமாதிரியான
அடையாளத்தைக் கேட்டதும், இயேசு அதைச் செய்யவில்லை. ஏனெனில்,
இதற்கு முன்பாக இயேசு செய்த அருமடையாளங்களை நம்பி, அவரை மெசியா
என்று ஏற்றுக்கொள்ளவில்லை. தான் இனிமேலும் அருமடையாளங்களைச்
செய்தாலும் இவர்கள் நம்ப மாட்டார்கள் என்பதாலேயே இயேசு
அவர்களிடம் அடையாளம் ஒன்றைக் காட்டவில்லை; ஆனால், வேறு ஓர்
அடையாளத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். அது என்ன என்று
இப்பொழுது பார்ப்போம்.
இயேசு யோனாவை விட, சாலமோன் மன்னரை விடப் பெரியவர்
தன்னிடம் அடையாளம் கேட்ட பரிசேயர்கள் மற்றும் மறைநூல்
அறிஞரிடம் இயேசு யோனாவை அடையாளமாகத் தருகின்றார். மேலும் யோனா
அறிவித்த நற்செய்தியைக் கேட்டு நினிவே நகர மக்கள்
மனம்மாறினார்கள்; ஆனால், தான் யோனாவைவிடப் பெரியவர் என்பதால்,
அவர்கள் தீர்ப்பு நாளில் இந்தத் தலைமுறையினருக்கு எதிராக
எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள் என்கிறார். அதேபோன்று
சாலமோனின் ஞானத்தைக் கேட்க, தென்னாட்டு அரசி, உலகின்
கடைகோடியிலிருந்து வந்தார் (1அர 10: 1-10). தான் சாலமோனைவிடப்
பெரியவர் என்பதால், தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு
எழுந்து, அவர்களைக் கண்டனம் செய்வார் என்கிறார் இயேசு.
ஆம், இயேசு இறைவாக்கினர் யோனாவை விட, சாலமோன் மன்னரை விடப்
பெரியவர். அப்படியிருந்தும் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும்
அவரை நம்ப மறுத்தார்கள். இயேசுவின்மீது அவர்களுக்கு
நம்பிக்கையில்லாததினாலேயே அவர்கள அதற்கான தண்டனையைப்
பெற்றார்கள். எனவே, நாம் இயேசுவை மெசியா என்று நம்பி, அவர்
வழியில் நடந்து, அவருக்கு உகந்தவர்கள் ஆவோம்.
சிந்தனை
"இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள்
இணைந்திருக்கின்றார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கின்றார்"
(1யோவா 4: 15) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவே
மெசியா என்றும் இறைமகன் என்றும் ஏற்க மறுத்த பரிசேயர்களைப்
போன்று இல்லாமல், அவரை இறைமகன் என ஏற்று, அறிக்கையிடுவோம்.
அறிக்கையிட்டதை நம்பி, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|