Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     19 ஜூன் 2020  
                                            பொதுக்காலம் 16 ஆம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எம் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 12: 13, 16-19

ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. எல்லாவற்றின் மீதும் நீர் கருத்தாய் இருக்கிறீர். முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை யாரிடம் காட்ட வேண்டும்?

உமது ஆற்றலே நீதியின் ஊற்று. அனைத்தின் மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமை அனைத்தையும் வாழும்படி விட்டு வைக்கிறது. மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஐயுறும்போது நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்; அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர். நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்; மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர். ஏனெனில் நீர் விரும்பும் போதெல்லாம் செயல் புரிய உமக்கு வலிமை உண்டு.

நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்; உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்; ஏனெனில் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 86: 5-6. 9-10. 15-16 . (பல்லவி: 5a) Mp3
=================================================================================
 

பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர்.
5
என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.
6
ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். - பல்லவி

9
என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.
10
ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! - பல்லவி

15
என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்.
16
என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். - பல்லவி



================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
தூய ஆவியார் தாமே நமக்காகப் பரிந்து பேசுகிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-27

சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறை மக்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-43


அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான்.

பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, "ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இது பகைவனுடைய வேலை" என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், "நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?" என்று கேட்டார்கள். அவர், "வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், "முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்" என்று கூறுவேன்" என்றார்.

இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: "ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்."

அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: "பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்."

இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேச வில்லை. "நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்" என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது. அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவர் அருகே வந்து, "வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்" என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்:

"நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.

எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."

ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்

அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-30

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான்.

பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, "ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இது பகைவனுடைய வேலை" என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், "நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?" என்று கேட்டார்கள். அவர், "வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், "முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்" என்று கூறுவேன்" என்றார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
I சாலமோனின் ஞானம் 12: 13, 16-19
II உரோமையர் 8: 26-27
III மத்தேயு 13: 24-43

கனிவோடு தீர்ப்பு வழங்கும் இறைவன்

நிகழ்வு

ஒரு சிற்றூரில் இரண்டு விவசாயிகள் இருந்தார்கள். அவர்கள் இருவருடைய வயலும் அருகருகே இருந்தன. இதில் ஒரு விவசாயி கடவுள்மீது கொண்டவர்; இன்னொரு விவசாயியோ கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவர். கடவுள்மீது நம்பிக்கை இல்லாத விவசாயி தன்னுடைய விருப்பம்போல் வாழ்ந்துவந்தார். அதனால் கடவுள்மீது நம்பிக்கைகொண்ட விவசாயி அவரிடம், புத்திமதிகளைச் சொல்லி நல்லமுறையில் வாழவேண்டும் என்றும், இல்லையென்றால் கடவுள் அதற்கேற்ற தண்டனையைத் தருவார் என்றும் சொல்லி வந்தார். இதனைக் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத விவசாயி கண்டுகொள்ளவே இல்லை.

அந்த ஆண்டு அவர்கள் இருவரும் தங்களுடைய வயலில் நாற்று நட்டு, பயிர்கள் நன்றாக வளர வேண்டியதையெல்லாம் செய்து, அறுவடைக்காகக் காத்திருந்தார்கள். அறுவடையின்பொழுது கடவுள்மீது நம்பிக்கையில்லாத விவசாயிக்கு அமோக விளைச்சல் கிடைத்தது; கடவுள்மீது நம்பிக்கைகொண்ட விவசாயிக்கு விளைச்சல் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

இதனால் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத விவசாயி, கடவுள் நம்பிக்கைகொண்ட விவசாயியிடம், "கடவுளுக்கு அஞ்சி நல்ல வழியில் வாழாவிட்டால், அவர் தண்டிப்பார் என்று என்னவெல்லாமோ என்னிடத்தில் சொன்னாயே...! இப்பொழுது பார்! கடவுள்மீது நம்பிக்கை கொண்ட உனக்கு சொல்லிக்கொள்ளும்படியாக விளைச்சல் இல்லை. ஆனால், கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல், விரும்பம்போல் வாழ்ந்த எனக்கு அமோக விளைச்சல் கிடைத்திருக்கின்றது" என்றார். அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கடவுள்மீது நம்பிக்கை கொண்ட விவசாயி இப்படிச் சொன்னார்: "கடவுள் மனிதரைப் போன்று ஒவ்வோர் ஆண்டும் அல்லது ஒவ்வொரு மாதமும் படியளப்பார் கிடையாது. அவர் படியளக்க வேண்டுமானால் காலம் தாழ்த்தலாம்; ஆனால், நிச்சயம் எல்லாருக்கும் படியளப்பார்." இவ்வார்த்தைகள் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத விவசாயியை மிகவே சிந்திக்க வைத்தன.

கடவுள் படியளக்க அல்லது தீர்ப்பு வழங்கக் காலம் தாழ்த்தலாம்; ஆனால், இறுதித் தீர்ப்பின்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்குவார். இது உறுதி. பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, "கனிவோடு தீர்ப்பு வழங்கும் இறைவன்" என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

அனைத்தையும் நன்றாய்ப் படைத்த இறைவன்

நற்செய்தியில் இயேசு, வயலில் தோன்றிய களைகள் உவமை, கடுகுவிதை உவமை, புளிப்பு மாவு உவமை என்று மூன்று உவமைகளைச் சொல்கின்றார். இந்த மூன்று உவமைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இருந்தாலும், வயலில் தோன்றிய களைகள் உவமையை மட்டும் நாம் முதன்மையாக எடுத்துச் சிந்திப்போம்.

இயேசு சொல்லக்கூடிய வயலில் தோன்றிய களைகள் உவமையில் வரும் நிலக்கிழார், தன்னுடைய நிலத்தில் நல்ல விதைகளை விதைக்கின்றார். அவர் நல்ல விதைகளை விதைத்தது, ஆண்டவராகிய கடவுள், தான் உருவாக்கிய அனைத்தையும் நோக்க, அவை மிகவும் நன்றாய் இருந்தன (தொநூ 1: 31) என்ற வார்த்தைகளையும், இயேசு காதுகேளாதவரைப் பேசச் செய்ததைப் பார்த்துவிட்டு, மக்கள், "இவர் எத்துணை நன்றாய் யாவற்றையும் செய்துவருகின்றார்" (மாற் 7: 37) என்ற வார்த்தைகளையும் நமக்கு நினைவுபடுத்துவதாக் இருக்கின்றன.

நிலக்கிழார் நல்லவிதைகளை விதைத்தாலும், அவருடைய பகைவர்கள் கோதுமைகளுக்கு இடையே களைகளையும் விதைத்து விட்டுப் போகின்றார்கள். இது சாத்தானுடைய சூழ்ச்சியை (தொநூ 3:1) நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நல்லவை விதைக்கப்பட்டபொழுது, அல்லவை விதைக்கப்பட்டதே, அது உடனே அகற்றப்பட்டதா...? அதற்கென்று காலம் ஒதுக்கப்பட்டதா? என்பதைக் குறித்து தொடர்ந்து சிந்திப்போம்.

பொறுமையோடு கனிவோடும் இருக்கும் இறைவன்

நிலக்கிழாருடைய பணியாளர்கள், வயலில் கதிர்களோடு களைகளும் இருப்பதைப் பார்த்துவிட்டு, களைகளை அகற்றிவிடலாமா? என்று கேட்கின்றபோழுது, நிலக்கிழார் அவர்களிடம், களைகளைப் பறிக்கும்பொழுது, அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள்" என்கின்றார். நிலக்கிழார் சொல்லக்கூடிய வார்த்தைகள், புனித பேதுரு தன்னுடைய இரண்டாவது திருமுகத்தில் கூறுகின்ற, "ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றிக் காலம்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர்; ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை; மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார்" (2 பேது 3: 9-10) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

ஆம், ஆண்டவராகிய கடவுள், களைகள் போன்று இருக்கும் மனிதர்களை உடனே அப்புறப்படுத்தாமல், பொறுமையோடு இருக்க முதல் காரணம், புனித பேதுரு சொல்வது போல, அவர் யாரும் அழிந்துபோகாமல், மனம்மாறவேண்டும் என்று விரும்புவதால்தான். இரண்டாவது காரணம், சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போல், கடவுள் கனிவோடு தீர்ப்பு வழங்குவதால் ஆகும். இவ்வாறு கடவுள் நம்மீது கனிவோடு இருந்து, நாம் அனைவரும் மனம்மாறவேண்டும் என்று விரும்புவதால்தான் பொறுமையோடு இருக்கின்றார்.

அவரவர் செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கும் இறைவன்

கடவுள் கனிவுள்ளவராகவும் பொறுமையுள்ளவராகவும் இருந்தாலும், அறுவடையின்பொழுது நிலக்கிழார் எப்படித் தன்னுடைய பணியாளர்கள் மூலமாகக் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்த்து வைத்துவிட்டு, களைகளை எரிப்பதற்காகக் கட்டுகின்றாரோ, அப்படி, இறுதித் தீர்ப்பின்பொழுது கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார் அல்லது தீர்ப்பு வழங்குவார் (மத் 25: 31-46; உரோ 2: 6).

இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு, வயலில் தோன்றிய களைகள் உவமைக்கு விளக்கம் அளிக்கின்றபொழுது, "வானதூதர் நெறிகெட்டோரைத் தீச்சூளையில் தள்ளுவார் அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளிவீசுவர்" என்று சொல்கின்றாரே, நாம் தீச்சூளையில் தள்ளப்படுவதும், கதிரவனைப் போன்று ஒளிவீசுவதும் நம்முடைய கையில் அல்லது நாம் வாழும் வாழ்க்கையைப் பொருத்துதான் இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

"அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்" (யோவா 3:15) என்று இயேசு கூறுவதாக யோவான் நற்செய்தியில் வாசிக்கின்றோம். அப்படியானால், நாம் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு வாழ்ந்தோமெனில் நிலைவாழ்வைப் பெறுவோம்; கதிரவனைப் போன்றும் ஒளிவீசுவோம். அதே நேரத்தில் நாம் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு வாழாமல், மனம்மாறுவதற்கு நமக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளையும் நாம் உதறித் தள்ளிவிட்டு வாழ்ந்தோம் எனில், அதற்குரிய தண்டனையைத்தான் நாம் பெறுவோம் என்பது உறுதி.

நாம் இயேசுவின்மீது நம்பிக்கைகொண்டு நிலைவாழ்வைப் பெறப்போகிறோமா? அல்லது அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் தண்டனையைப் பெறப் போகிறோமா? இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம். சிந்திப்போம்.

சிந்தனை

"எங்களுடைய செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்ட மக்களிடம் இயேசு, "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்" (யோவா 6: 28,29) என்பார். ஆகையால், நாம் மனம்மாறவேண்டும்; இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகப் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கும் கடவுளிடம், நம்பிக்கை கொண்டவர்களாய் அவரிடம் செல்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு - திருப்பலி முன்னுரை
=================================================================================

இறைவன் விதைத்த நல்ல விதைகளாகிய நாம் நல் உள்ளம் பெற்று நேர்மையானவர்களாய் வாழ இன்றைய பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு திருப்பலி நம்மை அழைக்கிறது.

நல் விதைகளுக்கிடையே விதைக்கப்பட்ட களைச் செடிகளோடு போராடும் விதைகளே பலன் கொடுக்கும். களைச் செடிகளை விட்டு வைத்தது களைக்கு ஆதாயம் அல்ல. பின்னர் அகற்றப்பட கொடுக்கப்பட்ட அவகாசம். நாமும் உலக தவறுகளை நினைத்து இறைவனை தவறாக எண்ணுகிறோம். ஆனால் தண்டிக்கும் முன் தவறை திருத்துவதற்காக இறைவன் பொறுமையோடிருக்கிறார் என்பதை உணர்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில், "நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால், கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்" என்று மொழிகிறார் சாலமோனின் ஞான நூல் ஆசிரியர். இறைவன் இரக்கம் நிறைந்தவர். முறைகேடான தீர்ப்பு வழங்குவதில்லை. அதுபோலவே மனிதரின் மாண்பே மனித நேயம் தான். மனித நேயம் மிக்கவர்களை நீதிமான்கள் என்றே விவிலியம் கூறுகிறது.

இன்றைய நற்செய்தியில், விண்ணரசு பற்றி உவமைகள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்கிறார் இயேசு. நல்ல விதைகள் எனும் மனங்கள் நம் உடலில் விதைக்கப்படுகின்றது, இவ்வுலக பேராசை, துர்குணங்கள் களைகளாக மனங்களுக்குள் புகுந்து விடுவதே மனிதம் மறந்து போக காரணமாய் அமைகிறது. எனவே இவ்வுலக களைகளை அகற்றி இறையரசை நோக்குவோம். இப்பலியில் இணைவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

1. விண்ணரசை உரிமையாக்கிக் கொள்ள அழைப்பவரே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் கடுகு விதை போல் திருச்சபையை உலகெங்கும் வளர்ந்து நிற்கச் செய்யவும், இறையரசின் மதிப்பீடுகளை மக்கள் மனங்களில் விதைக்கும் கருவிகளாக செயல்பட வல்லமை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. நேர்மையாய் வாழ அழைப்பவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நேர்மையான ஆட்சி புரியவும், மனித நேயம் மிக்க மனிதராய் வாழ்ந்து, மக்களை வழிநடத்தவும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தவும், இயற்கையைப் பேணிக் காத்திடவும், கொடிய நோய்க்கு எதிரான சரியான அணுகுமுறையை கையாண்டு, நாட்டையும் மக்களையும் காத்திட நல்லறிவு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. மனித நேய மிக்கவர்களாய் வாழ அழைப்பவரே எம் இறைவா!
வாழ்வில் போராடும் சகோதர சகோதரிகளைத் தேடிச் சென்று உதவிடவும், தேவையிலுள்ளோரின் நல்வாழ்விற்காக உழைக்கும் நல் உள்ளத்தைப் பெற்று, மனித நேயத்தோடு வாழ்வை வழிநடத்த வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. வல்லமையைப் பொழிபவரே எம் இறைவா!
எம் பகுதியில் பருவமழை பொழியப்பட்டு, வேளாண்மை சிறக்கவும், பொருளாதாரம் ஏற்றம் பெறவும், நோய் தொற்று குறைந்து, இயல்பு வாழ்வு மீண்டு வரவும், குடும்பங்களில் அமைதி, மகிழ்ச்சி பெருகவும், உள்ளத்தின் வேண்டுதல்கள் நிறைவேறவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.



 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!