Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     18 ஜூலை 2020  

பொதுக்காலம் 15ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கை வலிமையினால் அவர்கள் அதைச் செய்து முடிக்கின்றார்கள். வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்; வீடுகள்மேல் இச்சை கொண்டு அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்; ஆண்களை ஒடுக்கி, அவர்கள் வீட்டையும் உரிமைச் சொத்தையும் பறிமுதல் செய்கின்றார்கள்.

ஆதலால் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் திட்டமிடுகிறேன்; அதனின்று உங்கள் தலையை விடுவிக்க உங்களால் இயலாது; நீங்கள் ஆணவம் கொண்டு நடக்க மாட்டீர்கள்; ஏனெனில் காலம் தீயதாய் இருக்கும். அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி இரங்கற்பா இயற்றி, "அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே; ஆண்டவருடைய மக்களின் உரிமைச் சொத்து கைமாறி விட்டதே! நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றாரே!" என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.

ஆதலால், நூல் பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் எவனும் ஆண்டவரின் சபையில் இரான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 10: 1-2. 3-4. 7-8. 14 . (பல்லவி: 12b)  Mp3
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, எளியோரை மறந்துவிடாதேயும்.
1
ஆண்டவரே, ஏன் தொலையில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்து கொள்கின்றீர்?
2
பொல்லார் தம் இறுமாப்பினால் எளியோரைக் கொடுமைப் படுத்துகின்றனர்; அவர்கள் வகுத்த சதித் திட்டங்களில் அவர்களே அகப்பட்டுக் கொள்வார்களாக. - பல்லவி

3
பொல்லார் தம் தீய நாட்டங்களில் தற்பெருமை கொள்கின்றனர்; பேராசையுடையோர் ஆண்டவரைப் பழித்துப் புறக்கணிக்கின்றனர்.
4
பொல்லார் செருக்கு உள்ளவராதலால் அவரைத் தேடார்; அவர்கள் எண்ணமெல்லாம் "கடவுள் இல்லை" என்பதே. - பல்லவி

7
அவர்களது வாய் சாபமும் கபடும் கொடுமையும் நிறைந்தது; அவர்களது நாவினடியில் கேடும் தீங்கும் இருக்கின்றன.
8
ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்; சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்; திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர். - பல்லவி

14
ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்; கேட்டையும் துயரத்தையும் பார்த்து, உதவி செய்யக் காத்திருக்கின்றீர்; திக்கற்றவர் தம்மை உம்மிடம் ஒப்படைக்கின்றனர்; அனாதைக்கு நீரே துணை. - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
2 கொரி 5: 19

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறைவாக்கினர் கூறியது நிறைவேறும்படி, தம்மை வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்குக் கற்பித்தார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 14-21

அக்காலத்தில்

பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கினார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார். இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின:

"இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்து கொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார். இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார்; கூக்குரலிட மாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை, நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார். எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மீக்கா 2: 1-5

"தீச்செயல் புரியத் திட்டமிடுவோருக்கு ஐயோ கேடு"

நிகழ்வு

பெரியவர் ஒருவர் தன்னுடைய வீட்டிற்குப் பின்பக்கம் இருந்த தோட்டத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் அவருடைய பேரன் அங்கும் அங்கும் ஓடியாடி விளயாடிக்கொண்டிருந்தான். இதற்கிடையில், தற்செயலாகப் பெரியவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்தபொழுது, தூரத்தில் இரண்டு பறவைகள் சண்டைபோட்டுக்கொண்டிருந்தன. நேரம் ஆக ஆக தூரத்தில் சண்டை போட்டுக்கொண்டிருந்த அந்த இரண்டு பறவைகளும் கொஞ்சம் பக்கத்தில் வந்து சண்டையிடத் தொடங்கின.

அப்பொழுது அந்தப் பெரியவருக்குத் தெரிந்தது, அந்த இரண்டு பறவைகளும் கழுகுகள் என்பதும்... மீனுக்காக அவை இரண்டும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும். பெரியவர் அந்த கழுகுகள் சண்டையிடுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டும் மிக ஆக்ரோசமாகச் சண்டை போட்டுக்கொண்டன. அப்படிச் சண்டை போட்டுக் கொண்டதில், எதற்காக அந்த இரண்டு கழுகுகளும் சண்டையிட்டுக் கொண்டனவோ, அந்த மீன் கீழே விழுந்தது. ஆனாலும், அவை தொடர்ந்து சண்டைபோட்டுக் கொண்டன. முடிவில் அந்த இரண்டு கழுகுகளும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுப் பறக்க முடியாமல், கீழே விழுந்து, செத்து மடிந்தன.

இதைத் தன்னுடைய பேரனிடம் சுட்டிக்காட்டிய பெரியவர், "தொடக்கத்தில் ஒன்றின்மீது ஒருவருக்குச் சிறிதளவில்தான் ஆசை ஏற்படும். அதுவே பேராசையாக மாறும்பொழுது, அது அவருடைய வாழ்வையே முடித்துவிடும். அதனால் நாம் ஒருபொழுதும் பேராசைக்கு இடங்கொடாதவாறு மிகக் கவனமாக இருக்கவேண்டும்" என்றார்.

ஆம், யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே என்பதுபோல், பேராசை வரும் முன்னே; பேரழிவு வரும் பின்னே. இன்றைய முதல் வாசகம், பேராசை பிடித்த பணக்காரர்கள், வறியவர்களின் நிலங்களை அபகரித்துக் கொள்வதையும், அதற்கு ஆண்டவர் அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனையையையும் குறித்தும் எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பேராசை பிடித்தவர்கள் வறியவர்கள் நிலத்தை அபகரித்தல்

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் மீக்கா, எப்படியெல்லாம் பணக்காரர்கள் ஏழைகளின் வயல்வெளிகளையும், வீடுகளையும் கைப்பற்றத் திட்டம் தீட்டுகின்றார்கள் என்பதையும், அதனால் அவர்கள்மீது ஆண்டவர் சினம் எப்படி வரப்போகிறது என்பதையும் எடுத்துக்கூறுகின்றார்.

பணக்காரர்கள் ஏழைகளின் நிலத்தை அபகரிப்பது ஏன் கடவுள் பார்வையில் குற்றம் என இறைவாக்கினர் மீக்கா கூறுவதைக் குறித்து நாம் தெரிந்துகொள்வது நல்லது. லேவியர் நூல் இருபத்து ஐந்தாம் அதிகாரத்தில் இடம்பெறும் வார்த்தைகளைக் கொண்டு பார்க்கும்பொழுது, நிலம் என்பது கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்தது என்பதும் (லேவி 25: 2, 23, 38), மனிதர்கள் நிலத்தை வாங்கும் பொழுதும் விற்கும்பொழுதும் ஒருவர் மற்றவரை ஏமாற்றக்கூடாது என்பதும் தெரிய வருகின்றது (லேவி 25: 14); ஆனால் மக்களில் இருந்த பணக்காரர்கள் ஏழைகளின் நிலத்தை எப்படி அபகரிக்கலாம் என்றும், அவர்களுடைய வீடுகளை எப்படிக் கைப்பற்றலாம் என்றும் படுக்கையில் இருந்து திட்டம் தீட்டிவிட்டு, அதனை பகலில் செயல்படுத்தினார்கள். இதனாலேயே கடவுளின் சினம் அவர்கள் மேல் எழுகின்றது.

பேராசைக்காரர்களுக்குக் கிடைக்கும் தண்டனை

திருவிவிலியம் முழுவதையும் நாம் படித்துப் பார்க்கும்பொழுது கடவுள், ஏழைகள்மீதும் வறியவர்கள்மீதும் திக்கற்றவர்கள்மீதும் தனிப்பட்ட அன்புகொண்டிருப்பதை நம்மால் உணர முடியும் (விப 23: 11; லேவி 25: 35; திபா 82: 3, நீமொ 21; 13; எரே 22: 16). இன்றைய முதல் வாசகத்தில் வரும் பணக்காரர்கள் ஏழைகளின் நிலங்களையும் வீடுகளையும் அபரித்துக்கொண்டதால், கடவுள் இறைவாக்கினர் மீக்கா வழியாக, "இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் திட்டமிடுகின்றேன்" என்கின்றார்.

ஆம், இறைவாக்கினர் மீக்கா வழியாக ஆண்டவர் சொன்னதுபோன்று, இஸ்ரயேல்மீது அசீரியர்களின் படையெடுப்பு ஏற்பட்டபொழுது, பணக்காரர்கள் பேராசையோடு அபகரித்த நிலங்கள் எல்லாம் அசீரியார்களால் கைப்பற்றப்பட்டன. மேலும் பணக்காரர்கள் அதற்குரிய தண்டனையைப் பெற்றார்கள். வினை விதைத்தவன் அதற்குரிய வினையை அறுவடை செய்வதுதானே முறை! பணக்காரர்கள் பேராசையோடு ஏழைகளைச் சுரண்டினார்கள். அதனால் அதற்குரிய தண்டனையைப் பெற்றார்கள். ஆகையால், நாம் எல்லாவிதமான பாவங்களுக்கும் மூல காரணமாக இருக்கும் பேராசையை நம்மிடமிருந்து தவிர்த்து, நன்மை செய்யக் கற்றுக்கொள்ளக்கூடியவர்களாக வாழ்வோம்.

சிந்தனை

"பேராசை என்பது பெரிய பாவம் மட்டுமல்ல, எல்லாப் பாவங்களுக்கும் காரணமாக இருக்கும் பாவம்" என்பார் வில்லியம் சென் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் பேராசை கொள்ளாமல், ஆண்டவர்மீது பற்றுக்கொண்டு, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 12: 14-21

இறைவன்மீது கண்களைப் பதிய வைத்து, எதிர்ப்புகளையும் மீறிப் பணிசெய்த இயேசு

நிகழ்வு

ஒரு சிற்றூரில் இருந்த சிறுவர்களுக்கிடையே ஒருமுறை ஒரு வித்தியாசமான போட்டி நடைபெற்றது. அது என்ன போட்டி எனில், காலால் நேர்கோடு வரைவது. இப்போட்டியில் பல சிறுவர்கள் கலந்துகொண்டார்கள்; ஆனால், கோடு வரைந்த யாவரும் கோணலாகவே கோடு வரைந்தார்கள். கடைசியாக சிறுவன் ஒருவன் வந்தான். அவன் தன் காலால் கோடு வரையத் தொடங்கி, மிக நேராக வரைந்துமுடித்தான். அதைக் கண்ட எல்லாரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

அப்பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவன், நேராகக் கோடு வரைந்த சிறுவனை நோக்கி, "அது எப்படி நாங்கள் அனைவரும் கோணலாகக் கோடு வரைந்திருக்கும்பொழுது, உன்னால் எப்படி நேராகக் கோடு வரைய முடிந்தது?" என்றான். அதற்கு நேராகக் கோடு வரைந்த சிறுவன், "நீங்கள் அனைவரும் உங்களுடைய கட்டை விரலில் கண்களைப் பதிய வைத்து, கோடு வரைந்தபொழுது, நான் எதிரில் தெரிந்த மரத்தில் இலக்கில் கண்களைப் பதிய வைத்து வரைந்தேன். அதனால்தான் என்னால் நேராகக் கோடு வரைய முடிந்தது" என்றான்.

ஆம். நம்முடைய இலக்கில் கண்களைப் பதிய வைத்துப் பயணம் செய்கின்றபோது, இடையே வருகின்ற எந்தவோர் இடஞ்சலாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது; நிச்சயம் ஒருநாள் நம்மால் இலக்கை அடையமுடியும். நற்செய்தியில், பரிசேயர்கள் இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என்று சூழ்ச்சி செய்கின்றபொழுது, இயேசு அவர்களுடைய சூழ்ச்சிகளை எல்லாம் கண்டுகொண்டால், கடவுளின்மீது தன்னுடைய கண்களைப் பதிய வைத்து, தொடர்ந்து தன்னுடைய இலக்கை நோக்கிப் பயணப்படுகின்றார்.

பரிசேயர்கள் இயேசுவுக்கு எதிராக ஏன் சூழ்ச்சி செய்யவேண்டும்...? அந்தச் சூழ்ச்சிகளை எல்லாம் கடந்து இயேசு எப்படி தந்தைக் கடவுளின்மீது கண்களைப் பதிய வைத்துப் பயணப்பட்டார்...? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஓய்வுநாள் சட்டத்தை மீறியதற்காக இயேசுவை ஒழித்துக் கட்டத்துணிந்த பரிசேயர்கள்

இன்றைய நற்செய்திக்கு முந்தைய பகுதிகளில், ஓய்வுநாளின்பொழுது கதிர்களைக் கொய்து உண்ட தன்னுடைய சீடர்கள்மீது குற்றம் கண்டுபிடித்த பரிசேயர்களின் வெளிவேடத்தை இயேசு கடிந்துகொள்வார் (மத் 12: 1-8). அதேபோன்று, "ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை" (மத் 12: 9-13) சொல்லி கை சூம்பிய மனிதரை நலப்படுத்துவார். இவற்றையெல்லாம் பார்த்துவிட்டுத்தான், இயேசு ஓய்வுநாள் சட்டங்களை மீறுகின்றார் என்று அவரை எப்படி ஒழித்துக் கட்டலாம் என்று பரிசேயர்கள் சூழ்ச்சி செய்கின்றார்கள்.

பரிசேயர்கள் இயேசுவை எப்படி ஒழித்துக்கட்டலாம் என்று சூழ்ச்சிசெய்தபோது, இயேசு அவர்களுடைய சூழ்ச்சிக்கு அஞ்சித் தன்னுடைய பணியைப் பாதிலேயே நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக, அவர் ஆண்டவர்மீது தன்னுடைய கண்களைப் பதியவைத்து வாழ்ந்ததால், அவருடைய பணியை அவர் தொடர்ந்து செய்துவருகின்றார். இன்றைய நற்செய்தியில் பரிசேயர்கள் இயேசுவை எப்படி ஒழித்துக் கட்டலாம் என்று சூழ்ச்சி செய்தபொழுது, இயேசு அங்கிருந்து புறப்பட்டுச் செல்கின்றார்; அவரைப் பலர் பின்தொடர்ந்து செல்லவே, அவர் அவர்களிடமிருந்த நோயாளர்களை நலப்படுத்துகின்றார்.

இயேசுவின் இச்செயல், நாம் நமக்கு எதிராக ஆபத்துகளும் சூழ்ச்சிகளும் சவால்களும் வந்தாலும், இயேசுவைப் போன்று தந்தைக் கடவுளின்மீது கண்களைப் பதிய வைத்து வாழ்ந்தால், நம்மை எதுவும் ஒன்றும்செய்யாது என்ற செய்தியை மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது.

நெரிந்த நாணலை முறியாத மெசியா

பரிசேயர்கள் தனக்கெதிராகச் சூழ்ச்சிகள் செய்தபோதும், அவற்றையெல்லாம் பொருள்படுத்தாமல், இயேசு எளிய மக்களுக்கு நன்மை செய்வதைப் பார்த்துவிட்டு மத்தேயு நற்செய்தியாளர், இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்த வார்த்தைகள் (எசா 42: 1-4) இயேசுவில் நிறைவேறுவதைச் சுட்டிக்காட்டுகின்றார்.

ஆம், இஸ்ரயேல் மக்கள் இயேசுவை அரசியல் மெசியாவாகப் பார்த்தார்கள்; ஆனால், அவர் நெரிந்த நாணலைப் போன்றும், புகையும் திரியைப் போன்றும் இருந்த எளிய மக்களோடு தன்னை ஒருவராக்கிக்கொண்டு அவர்கள் நடுவில் பணிசெய்து வந்தார். அவர் எளிய மக்களோடு இருந்து, அவர்களுக்குப் பணிசெய்ததால்தானோ என்னவோ அதிகாரத்திலிருந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார்கள். இயேசு, பரிசேயர்கள் தனக்கெதிரகச் சதித்திட்டம் தீட்டியபொழுதும், தந்தைக்கடவுளின் மீது கண்களைப் பதிய வைத்து வாழ்ந்ததால், அவரை எதுவும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆகையால், நாம் இயேசுவைப் போன்று தந்தைக் கடவுள்மீது கண்களைப் பதிய வைத்து, அவருடைய வழியில் நடப்போம்.

சிந்தனை

"பெரிய சாதனைகளைச் செய்ய, பெரிய இலட்சியம் வேண்டும்" என்பார் ஹெராக்லிடஸ் என்ற அறிஞர். ஆகையால், இயேசுவைப் போன்று தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தோடு, அவர்மீது கண்களைப் பதிய வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!