|
|
17 ஜூலை 2020 |
|
பொதுக்காலம்
15ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து
ஆண்டு மிகுதியாக்குவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 38: 1-6, 21-22, 7-8
அந்நாள்களில்
எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின்
மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி,
"ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும்;
ஏனெனில் நீர் சாகப் போகிறீர்; பிழைக்க மாட்டீர்" என்றார். எசேக்கியா
சுவர்ப் புறம் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி,
"ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மை வழியில் மாசற்ற மனத்துடன்
நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும்
நினைத்தருளும்" என்று கூறிக் கண்ணீர் சிந்தித் தேம்பித் தேம்பி
அழுதார்.
அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது; "நீ எசேக்கியாவிடம்
சென்று கூறவேண்டியது: உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர்
கூறுவது இதுவே; உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை
இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன். உன்னையும் இந்த நகரையும்
அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்; இந்த நகரைப்
பாதுகாப்பேன்."
"எசேக்கியா நலமடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டு வந்து பிளவையின்மேல்
வைத்துக் கட்டுங்கள்" என்று எசாயா பதில் கூறியிருந்தார். ஏனெனில்,
"ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு
அடையாளம் யாது?" என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார். தாம்
கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பதற்கு அவர்
உமக்களிக்கும் அடையாளம்: இதோ, சாயும் கதிரவனின் நிழல் ஆகாசின்
கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்வேன்." அவ்வாறே
சாயும் கதிரவனின் நிழல் அக்கடிகையில் பத்துப் பாத அளவு
பின்னிட்டது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
எசா 38: 10. 11. 12. 16 . (பல்லவி: 17b)
Mp3
=================================================================================
பல்லவி: அழிவின் குழியிலிருந்து ஆண்டவரே, என் உயிரைக்
காத்தீர்.
10
"என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்லவேண்டுமே!
நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப் பாதாளத்தின் வாயில்களில் கழிக்க
நேருமே!" என்றேன். - பல்லவி
11
"வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே! மண்ணுலகில்
குடியிருப்போருள் எந்த மனிதரையும் என்னால் பார்க்க முடியாதே!"
என்றேன். - பல்லவி
12
என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல் பெயர்க்கப்பட்டு என்னை
விட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவது போல் என்
வாழ்வை முடிக்கிறேன். தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்.
- பல்லவி
16
என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்; என் உயிர் உமக்காகவே
வாழ்கின்றது; எனக்கு உடல் நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச்
செய்வீர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச்
செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்
பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-8
அன்று ஓர் ஓய்வு நாள். இயேசு வயல் வழியே சென்றுகொண்டிருந்தார்.
பசியாய் இருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத்
தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், "பாரும்,
ஓய்வுநாளில் செய்யக் கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்" என்றார்கள்.
அவரோ அவர்களிடம், "தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது
தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா? இறை
இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண
அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை
அவர்கள் உண்டது தவறல்லவா?
மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வு
நாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா?
ஆனால் கோவிலை விடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
"பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை
நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம்
செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக்
கட்டுப்பட்டதே" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசாயா 38: 1-6, 21-22, 7-8
தனக்கு நம்பிக்கைக்குரியவராய் இருப்போருக்குக்
கடவுள் தரும் ஆசி
நிகழ்வு
அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் அற்புதம் என்பவர்
கோயில் பணியாளராக (உபதேசியாராக) இருந்தார். கடவுள்மீது மிகுந்த
நம்பிக்கைகொண்டிருந்த இவர், கோயில் பணிகளை அவ்வளவு நேர்த்தியாகச்
செய்து, உண்மையாய் வாழ்ந்து வந்தார். இந்த அற்புதத்திற்கு ஒரு
மகனும் மகளும் இருந்தார்கள். இருவருமே உள்ளூரில் இருந்த உயிர்நிலைப்
பள்ளியில் முறையே, பத்தாம் வகுப்பும் ஏழாம் வகுப்பும் படித்து
வந்தார்கள். அற்புதத்திற்கென்று கொஞ்சம் நிலம் இருந்தது. அதில்
வேளாண்மை செய்து வந்தார். ஆனால், இவருடைய குடும்பத்தின்
பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்தது, இவரிடம் இருந்த ஒரு பசுமாடு
தான்.
இப்படி இருக்கும்பொழுது, அற்புதத்திடம் இருந்த ஒரே பசுமாடும்
திடீரென இறந்துபோனது. இதனால் தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலமே
கேள்விக்குள்ளானதை நினைத்து அற்ப்புதம் மிகவும்
நொந்துகொண்டார். இந்நிலையில், கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வந்தது.
இதையொட்டி, அந்தப் பங்கில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த
வின்சென்ட் தெ பவுல் சபையினர், வழக்கமாகச் செய்வதுபோல் பங்கில்
இருந்த ஐந்து ஏழைக் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அந்தக்
குடும்பங்களுக்குத் தலா ஐயாயிரம் உரூபாய் கொடுக்கலாம் என்று
முடிவுசெய்தனர். அதற்காக அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம்
எல்லாம் நன்கொடை சேகரிக்கத் தொடங்கினார்கள். அந்த ஆண்டு வழக்கத்திற்கு
மாறாக ஐம்பதாயிரத்தும் மேல் பணம் வந்து சேர்ந்தது.
"ஐந்து ஏழைக் குடும்பங்குக்குத் தலா ஐயாயிரம் உரூபாய் கொடுத்த
பிறகும், மீதம் இருபத்து ஐந்தாயிரம் உரூபாய் இருக்குமே! இந்தப்
பணத்தை நாம் என்ன செய்யலாம்?" என்று வின்சென்ட் தெ சபைத் தலைவர்,
உறுப்பினர்களிடம் கேட்டார். அப்பொழுது ஒரு உறுப்பினர்,
"நம்முடைய கோயில் பணியாளர் அற்புதத்தைப் பற்றி நமக்குத்
தெரியுமே...! மிகவும் உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய்ப் பணிந்துவரும்
இவர், தன்னிடமிருந்த மாடு இறந்ததிலிருந்து மிகவும்
நொடிந்துபோய்விட்டார். இந்த நேரத்தில் நாம் நம்மிடம் மீதமிருக்கும்
பணத்தைக் கொண்டு, ஒரு பசுமாடு வாங்கிக்கொடுத்தால், அவர் மிகவும்
மகிழ்ச்சியடைவார்; கடவுளையே நம்பி இருக்கும் அவரும் பிழைத்துக்
கொள்வார்" என்றார். அவர் சொன்ன யோசனை எல்லாருக்கும் பிடித்துப்
போகவே, வின்சென்ட் தெ பவுல் சபையைச் சார்ந்த அனைவரும் ஒரு மனதாக,
மீதமிருந்த பணத்தைக் கொண்டு, ஒரு பசுமாட்டை வாங்கி, அதை அற்புதத்திற்குக்
கொடுத்து உதவிசெய்தார்கள். இவ்வாறு கோயில் பணியாளர் அற்புதத்தின்
வாழ்வில் விடியல் வந்தது.
இந்த நிகழ்வில் வரும் அற்புதம், ஆண்டவரையே நம்பி வாழ்ந்து வந்ததால்,
ஆண்டவர் அவருக்கு புனித வின்சென்ட் தெ சபையார் வழியாக நன்மை
செய்தார். இன்றைய முதல் வாசகம், ஆண்டவரையே நம்பி, அவருடைய
வழியில் நடந்த, எசேக்கியா மன்னர் சாவிலிருந்து மீட்கப்பட்டு,
மேலும் பதினைந்து ஆண்டுகள் வாழ்வதற்கான ஆசியைப் பெறுவதைக்
குறித்து எடுத்துரைகின்றது. அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
சாகும் நிலையில் இருந்த எசேக்கியா
இஸ்ரயேலை ஆண்ட மன்னர்களில் மூன்று மன்னர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
தாவீது, உசியா, இன்றைய முதல் வாசகத்தில் வரும் எசேக்கியா, இவர்கள்தான்
அந்த மூன்று மன்னர்கள். மற்ற எல்லாரும் பாகால் தெய்வ வழிபாட்டை
ஆதரித்தபொழுது, இவர்கள் ஆண்டவராகிய கடவுளுக்கு உண்மையாகவும் நம்பிக்குரியவர்களாகவும்
இருந்தார்கள். இப்படி ஆண்டவருக்கு உண்மையாகவும் நம்பிக்கைக்குரியவராகவும்
இருந்த எசேக்கியாவிற்குக் குழந்தை கிடையாது என்பது கூடுதல்
தகவல். இதனால் அவர் தனக்குப் பின் நாட்டை யார் ஆள்வாரோ என்ற
கவலையோடும், தன்னுடைய சாவு நெருங்கி வந்தனால் ஏற்பட்ட கவலையோடும்
ஆண்டவரிடம், "உண்மை வழியிலும், நல்ல மனத்துடன் உனக்கு பணிசெய்த
என்னை நினைவுகூரும்" என்று சொல்லிக் கண்ணீர் வடித்து மன்றாடுகின்றார்.
ஆண்டவர் எசேக்கியாவிற்கு ஆயுளைக் கூட்டித் தருதல்
எசேக்கியா தன்னிடம் இவ்வாறு மன்றாடியதைத் தொடர்ந்து, ஆண்டவர்
இறைவாக்கினர் எசயாவிற்குத் தோன்றி, "உன் கண்ணீரைக் கண்டேன். இதோ
நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டுகள்
மிகுதியாக்குவேன். உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன்
கையினின்று விடுவிப்பேன்" என்று சொல்லச் சொல்கின்றார். அவரும்
அவ்வாறு எசேக்கியா மன்னரிடம் சென்று சொல்கின்றார். இவ்வாறு ஆண்டவரையே
நம்பி, அவருக்கு உண்மையாய்ப் பணிசெய்து வந்த எசேக்கியாவின் ஆயுள்காலம்
கூட்டித் தரப்படுகின்றது; எதிரிகளிடமிருந்தும் அவர் காப்பற்றப்படுகின்றார்
எசேக்கியா மன்னர் ஆண்டவருக்கு உண்மையாகவும் நம்பிக்கைக்குரிய
ஊழியராகவும் இருந்ததுபோல நாம் ஆண்டவருக்கு உண்மையாகவும் நம்பிக்கைக்குரிய
ஊழியருமாகவும் இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"ஆண்டவர் தம் அடியாருக்கு இரக்கம் காட்டுவார்" (திபா 135: 14)
என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், எசேக்கியா மன்னர் எப்படி
ஆண்டவருக்கு உண்மையாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தாரோ
அதுபோன்று, நாமும் ஆண்டவருக்கு உண்மையாகவும் நம்பிக்கைக்குரியவராகவும்
இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 12: 1-8
பலியை அல்ல, இரக்கத்தை விரும்பும் இறைவன்
நிகழ்வு
ஒருமுறை மூன்று துறவிகள் காட்டுவழியாக ஓர் ஊருக்குச்
சென்றுகொண்டிருந்தார். வழியில் அவர்களுக்கு அவர்கள்
சென்றுகொண்டிருந்த ஊருக்கான வழி மறந்துபோனது. இதனால் அவர்கள்
அங்கும் இங்கும் சுற்றியலைய வேண்டியதாயிற்று. அதனாலேயே அவர்கள்
மிகவும் களைப்புறத் தொடங்கினார்கள்; பசியும் அவர்களுக்கு எடுக்கத்
தொடங்கியது. இந்த நேரத்தில் அவர்கள் சுற்றும் முற்றும்
பார்த்தார்கள். அப்பொழுது அவர்கள், தாங்கள் இருந்த இடத்திற்குச்
சற்றுத் தொலைவில் ஒரு கோதுமை வயல் இருக்கக் கண்டார்கள். அதைக்
கண்டதும், அவர்கள் அந்தக் கோதுமை வயலுக்குச் சென்று, அதிலிருந்து
கதிர்களைக் கொய்து சாப்பிடத் தொடங்கினார்கள்.
இதைக் கோதுமை வயலுக்குச் சொந்தக்காரர் பார்த்துவிடவே, அவர் அந்த
மூன்று துறவிகளையும் பார்த்து, "நீங்களெல்லாம் உண்மையான துறவிகள்
கிடையாது; போலியான துறவிகள்! ஒருவேளை நீங்கள் உண்மையான துறவிகளாக
இருந்தால், அடுத்தவருடைய வயலிலிருந்து இப்படிக் கதிர்களைக்
கொய்து உண்டிருக்க மாட்டீர்கள்" என்று சத்தம் போட்டார். இதற்கு
அந்த மூன்று துறவிகளில் இருந்த தலைமைத் துறவி, "நாங்கள் உம்முடைய
வயலிலிருந்து கதிர்களைக் கொய்து உண்டதால், போலியான துறவிகள்தான்;
ஆனால், இதை நாங்கள் விரும்பிச் செய்யவில்லை; நாங்கள் செல்லக்கூடிய
ஊருக்கான வழி மறந்துபோனது. அதனால் அங்கும் இங்கும் அலையவேண்டி
வந்தது. இதனாலேயே எங்களுக்குப் பசி மிகுதியாக எடுக்க, உங்களுடைய
வயலிலிருந்து கதிர்களைக் கொய்து உண்ணவேண்டிய நிலை ஏற்பட்டது"
என்று அமைந்த குரலில் சொல்லி முடித்தார்.
தலைமைத் துறவி இப்படிச் சொன்னதுதான் தாமதம், கோதுமை வயலுக்குச்
சொந்தக்காரர், அவருடைய காலில் விழுந்து, "சுவாமி! நீங்கள்
பசியால்தான் இப்படிக் கதிர்களைக் கொய்து தின்றீர்கள் என்று
எனக்குத்தெரியாது. இல்லையென்றால் நான் இப்படிப்
பேசியிருக்கமாட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று
சொன்னது மட்டுமல்லாமல், தன்னுடைய வயலிருந்த கொஞ்சம்
கதிர்களையும் அறுத்து அவர்கள் உண்பதற்குக் கொடுத்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற கோதுமை வயலின் உரிமையாளர், உண்மை
தெரிவதற்கு முன்னர், மூன்று துறவிகளையும் கடுமையான வார்த்தைச்
சொல்லித் திட்டினாலும், அவர்கள் பசியால்தான் அப்படி
செய்தார்கள் என்ற உண்மை தெரியவந்ததும், அவர்களிடம் அவர்
மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய வயிற்றுப்
பசியைப் போக்க, கொஞ்சம் கதிர்களையும் அறுத்துத் தருகின்றார்.
ஆனால், இயேசுவின் சீடர்கள் பசியால்தான் கதிர்களைக் கொய்து
உண்டார்கள் என்று தெரிந்தபின்பும், பரிசேயர்கள் அவர்கள்மீது
குற்றம் சுமத்துகின்றார்கள். இதற்கு இயேசுவின் பதில் என்னவாக
இருக்கின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பசியினால் கதிர்களைக் கொண்டு உண்ட இயேசுவின் சீடர்கள்
ஒருவர் மற்றவருடைய விளைநிலத்திற்குச் சென்றால், அதிலிருந்து
கையால் கதிர்களைக் கொய்து உண்ணலாம் (இச 23: 25) என்று மோசேயின்
சட்டம் சொல்கின்றது. அந்த அடிப்படையில், சீடர்கள் கதிர்களைக்
கொய்து உண்டது குற்றமில்லைதான்; ஆனால், சீடர்கள் அதை
ஓய்வுநாளில் செய்ததால், பரிசேயர்கள் மிகப்பெரிய குற்றமாகப்
பார்க்கின்றார்கள். அப்பொழுதும்கூட பரிசேயர்கள், இயேசுவின்
சீடர்கள் பசியால்தான் கதிர்களைக் கொய்து உண்டார்கள் என்று
பெருந்தன்மையோடு விட்டிருக்கலாம். அவர்கள் அவ்வாறு
பெருந்தன்மையோடு நடந்துகொள்ளாமல், தன்னுடைய சீடர்கள்மீது
குற்றம் கண்டுபிடித்ததால், இயேசு தன் சீடர்கள் சார்பாக
இருந்து, பரிசேயர்களுக்குப் பதிலளிக்கின்றார்.
அவர்கள் செய்தது தவறு இல்லை என்றால், சீடர்கள் செய்ததும் தவறு
இல்லைதான்
இயேசு தன்னுடைய சீடர்கள்மீது குற்றம் கண்டுபிடித்த
பரிசேயர்களுக்குப் பதிலளிக்கும்பொழுது, நான்கு விதமான
பதில்களாய் அளிக்கின்றார். ஒன்று, குருக்கள் மட்டுமே
உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை தாவீதும் அவரோடு இருந்தவர்களும்
உண்டது (1சாமு 15: 22-23). இரண்டு, ஓய்வுநாள்களிலும் குருக்கள்
திருக்கோயிலில் பணிசெய்வது. மூன்று, பலியை அல்ல, இரக்கத்தையே
விரும்புகிறேன் என்று இறைவாக்கினர்கள் வழியாக ஆண்டவர் சொன்னது
(திபா 40: 6-8; எசா 1: 11-17; எரே 7: 21-23; ஒசே 6:6). நான்கு,
ஓய்வுநாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டது. இந்த நான்கு
பதில்களையும் இயேசு தன்னுடைய சீடர்கள்மீது கண்ட
பரிசேயர்களுக்குச் சொன்னதால், அவர்கள் எதுவும் பேசமுடியாமல்
அமைதியாகிவிடுகின்றார்கள்.
ஆம். பரிசேயர்கள் தாவீது மன்னர் செய்த குற்றத்தைப்
பெரிதுபடுத்தவில்லை; அப்படியானால் அவர்கள் இயேசுவின் சீடர்கள்
செய்த குற்றத்தைப் பெரிது படுத்தாமல் இருந்திருக்கவேண்டும்.
மேலும் பரிசேயர்கள் சட்டங்களை மட்டுமே தூக்கிப் பிடித்தார்கள்.
அவர்கள திருச்சட்டத்தின் சாராம்சமாக இருந்த அன்பை
மறந்துபோனார்கள். அதனால்தான் இயேசு அவர்களுக்குச் சரியான பதில்
அளிக்கின்றார். எனவே, நாம் சட்டங்களைத் தூக்கிப் பிடிப்பதை
நிறுத்திவிட்டு, அன்பையும் இரக்கத்தையும் தூக்கிப்பிடித்து,
அவற்றின்படி வாழக்கற்றுக்கொண்டு, இயேசுவின் உண்மையான சீடர்கள்
ஆவோம்.
சிந்தனை
"அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த
உடம்பு" (குறள் எண் 80) என்பார் ஐயன் திருவள்ளவர். ஆம்,
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும். அன்பு
இல்லாதவர்க்கு உள்ள உடம்பு, எலும்பைத் தோல் போர்த்திய
வெற்றுடம்பாகும். ஆதலால் நாம் சட்டத்தைத் தூக்கிப்
பிடிப்பவர்களாக இல்லாமல், இரக்கத்தையும் அன்பையும்
தூக்கிப்பிடித்து, அவற்றின்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|