Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     16 ஜூலை 2020  

பொதுக்காலம் 15ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 7-9, 12, 16-19

நீதிமான்களின் நெறிகள் நேரியவை; நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர். ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காகக் காத்திருக்கிறோம், உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன.

என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது; எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது; உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில் வாழ்வோர் நேர்மையைக் கற்றுக்கொள்வர்.

ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.

ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்; நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம். பேறுகாலம் நெருங்குகையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்! நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்; ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்; நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை; உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் போவதில்லை.

இறந்த உம் மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்; புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி; இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச் செய்கின்றீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 102: 12-14. 15-17. 18,20,19 . (பல்லவி: 19b) Mp3
=================================================================================


பல்லவி: விண்ணுலகினின்று ஆண்டவர் வையகத்தைக் கண்ணோக்கினார்.
12
ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்; உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும்.
13
நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்; இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.
14
அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்; அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர். - பல்லவி

15
வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.
16
ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.
17
திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். - பல்லவி

18
இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.
20
அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.
19
ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில்

இயேசு கூறியது: "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எசாயா 26: 7-9, 12, 16-19

"நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்கும் இறைவன்"

நிகழ்வு

முன்பொரு காலத்தில் வணிகர் ஒருவர் இருந்தார். இவர் தொழில் சம்பந்தமாகப் பல இடங்களுக்கும் சென்று வந்ததால், ஓர் ஒட்டகம் இருந்தால், வசதியாக இருக்கும் என்று நினைத்தார். ஆகையால், இவர் தன்னுடைய உதவியாளரோடு சேர்ந்து ஓர் ஒட்டக உரிமையாளரிடம் சென்று, ஒரு பெரிய விலை கொடுத்து ஒட்டகம் ஒன்றை வாங்கிவந்தார்.

வீட்டிற்கு வந்த வணிகர் தன்னுடைய உதவியாளரிடம், "ஒட்டகத்தை தொழுவத்தில் கட்டி வைத்துவிடு; நாம் இருவரும் நாளைக் காலையில் இந்த ஒட்டகத்தில், பக்கத்து ஊருக்குச் சென்று வருவோம்" என்றார். உதவியாளரும் அவர் சொன்னதற்குச் சரியென்று என்று சொல்லிவிட்டு, ஒட்டகத்தைத் தொழுவத்தில் கட்டுவதற்காக அதை இழுத்துக்கொண்டு முன்னால் சென்றார் .அப்பொழுது வணிகர், ஒட்டகத்தின் சேணத்தில் ஏதோ ஒரு சிறிய பை இருப்பதைப் பார்த்து, முன்னால் சென்றுகொண்டிருந்த உதவியாளரிடம், "கொஞ்ச நேரம் நில்" என்று சொல்ல, அவரும் வணிகர் சொன்னதற்கு இணங்கி அப்படியே நின்றார்.

ஒட்டகத்தின் சேணத்தை நோக்கித் தன் கைகளை வேகமாகக் கொண்டுசென்ற வணிகர், அதில் இருந்த சிறிய பையை எடுத்து, அதனுள் என்ன இருக்கின்றது என்று பார்த்தார். அவருடைய கண்களை அவராலேயே நம்ப முடியாத வண்ணம், அந்தப் பையில் விலைமதிக்க முடியாத மாணிக்கக் கற்கள் இருந்தன. பக்கத்தில் இருந்த வணிகரின் உதவியாளரும்கூட, அதைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றார்.

"இந்தப் பை முழுவதும் விலைமதிக்க முடியாத மாணிக்கக் கற்கள் இருக்கின்றன. நிச்சயமாக இது நாம் ஒட்டகத்தை விலைகொடுத்து வாங்கிவந்த ஒட்டக உரிமையாளருக்கு உரியதாகத்தான் இருக்கும். அதனால் நான் இதை அந்த ஒட்டக உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன். நீ இங்கேயே இரு" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். உடனே வணிகருடைய உதவியாளர், "ஐயா! நான் சொல்கிறேன் என்று தவறாக நினைக்கவேண்டாம். இந்தப் பை உங்களிடம்தான் இருக்கின்றது என்று ஒட்டக உரியமையாளருக்குத் தெரியவா போகிறது; பேசாமல், இதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்" என்றார். "அப்படிச் செய்வது சரியாக இருக்கின்றது" என்று தன்னுடைய உதவியாளரிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்து நடையைக் கட்டிய வணிகர், ஒட்டத்தின் உரிமையாளரிடம் சென்று, மாணிக்கக் கற்கள் இருந்த பைக் கொடுத்தார்.

அதை மிகவும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட ஒட்டக உரிமையாளர், "உங்களைப் பார்த்தால் மிகவும் நேர்மையான மனிதர் போன்று தெரிகின்றது. அதனால்தான் எனக்குச் சொந்தமான மாணிக்கக் கற்கள் நிறைந்த இந்தப் பையை என்னிடம் திருப்பிக் கொடுத்திருக்கின்றீர்கள்" என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து வணிகரிடம், "ஐயா! நீங்கள் நேர்மையாக நடந்துகொண்டதால், உங்களுக்கு ஏதாவது பரிசளிக்கலாம் என்று இருக்கின்றேன். அதனால் நீங்கள் இந்த மாணிக்கக் கற்களிலிருந்து உங்களுக்குப் பிடித்த இரண்டு மாணிக்கக் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

ஒட்டக உரிமையாளர் இப்படிச் சொன்னதுதான் தாமதம், வணிகர் அவரிடம், "நான் இதிலிருந்து ஏற்கெனவே இரண்டு கற்களை எடுத்துகொண்டு விட்டேன்" என்றார். "என்ன! இந்தப் பையிலிருந்து ஏற்கெனவே இரண்டு மாணிக்கக் கற்களை எடுத்துக்கொண்டுவிட்டீர்களா...?" என்று கேட்டுக்கொண்டே பையிலிருந்த மாணிக்கக் கற்களை எண்ணிப் பார்த்தார் ஒட்டக உரிமையாளர். எல்லாம் சரியாக இருந்தன.

"பையில் வைத்திருந்த மாணிக்கக் கற்களெல்லாம் சரியாக இருக்கின்றபொழுது, இதிலிருந்து இரண்டு மாணிக்கக் கற்களை எடுத்துக்கொண்டுவீட்டீர்கள் என்று சொல்கிறீர்களே! அது எப்படி?" என்று ஓட்டக உரியாளர் கேட்டதும், வணிகர் அவரிடம், "இரண்டு மாணிக்கக் கற்களை நான் எடுத்துக்கொண்டு விட்டேன் என்று சொன்னது, என்னிடமுள்ள நேர்மையும் சுயமரியாதையும்தான். சுயமரியாத உள்ள யாரும் நேர்மையாக இருப்பார். நேர்மையாக இருக்கின்ற யாரும் பிறர் பொருளை விரும்பமாட்டார்" என்று சொல்லி முடித்தார்.

ஆம். இந்த நிகழ்வில் வருகின்ற வணிகர் நேர்மையாளராய் இருந்தார். அதனால்தான் விலையுயர்ந்த பொருளுக்கும் ஆசைப்படாமல் இருந்தார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல்வாசகம், நீதிமான்களின் வழ்கள் நேரியவை என்றும், அதனால் அவர்களுக்குக் கிடைக்கும் ஆசிகளையும் எடுத்துக் கூறுகின்றது. நாம் அதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

நேர்மையாளர்களின் வழிகள் நேரியவை

இன்றைய முதல்வாசகம், நாம் ஒவ்வொருவரும் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை எடுத்துக்கூறுகின்றது. ஏனென்றால் இவ்வுலகில் இறைவனின் நீதித்தீர்ப்பும் இரக்கமும் நிலைத்திருக்கின்றன. மட்டுமல்லாமல், அவருடைய கைகள் வல்லமையாகச் செயல்படுகின்றன. அதனால் நாம் ஒவ்வொருவரும் நேர்மையோடு வாழவேண்டும். இஸ்ரயேல் மக்கள் இறைவனின் நீதித்தீர்ப்பும் இரக்கமும், அவருடைய செயல்பாடும் இவ்வுலகில் இருக்கின்றன என்பதை அறிந்த பின்பும், அவர்கள் நேர்மையோடும் உண்மையோடும் நடக்காமல், பாகால் தெய்வத்தை வழிபட்டு வந்தார்கள். இத்தகைய பின்னணியில்தான் எசாயா இறைவாக்கினர், "நீதிமான்களின் நெறிகள் நேரியவை; நீர் நேர்மையாளர்களின் வழியைச் செம்மையாக்குகின்றீர்" என்கின்றார்.

பழங்காலத்தல் வழிகள் மிகவும் கரடு முரடானவையாக, ஆபத்தானவையாக இருந்தன; ஆனால் நேர்மையாளரின் வழியைக் கடவுள் செம்மையாக்குவார் என்று சொல்லி, ஒவ்வொருவரும் நேர்மையோடு நடக்கச் சொல்கின்றார் எசாயா இறைவாக்கினர். ஆகையால், நாம் நேரிய வழியில் நடந்து, கடவுள் தரும் ஆசிகளைப் பெற்ற மக்களாக வாழ்வோம்.

சிந்தனை

"நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக"(ஆமோ 5: 24) என்பார் ஆமோஸ் இறைவாக்கினர். ஆகையால், நாம் நீதியோடும் நேர்மையோடு வாழ்ந்து, செம்மையான வழியில் நடப்போம். இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 11: 28-30

மனத்தாழ்மையுடைய இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்வோம்

நிகழ்வு

இருபதாம் நூற்றாண்டில், இரஷ்யாவில் பிறந்த மிகப்பெரிய இசை ஆளுமை இகோர் ஸ்டரவின்ஸ்கி (Igor Stravinsky 1882 -1971). இவர் பியானோவை அவ்வளவு அற்புதமாக இசைத்து, இசையமைக்கக் கூடியவர்.

ஒருமுறை ஹாலிவுட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஒருவர் இவரிடம் வந்து, நான்காயிரம் டாலர்களைக் கொடுத்து, "நான் தாயாரித்துக்கொண்டிருக்கும் படத்திற்கு இசையமைத்துக் கொடுங்கள்" என்றார். இதற்கு இகோர் ஸ்டரவின்ஸ்கி, "இவ்வளவுதானா...? பணம் மிகவும் குறைவாக இருக்கின்றதே..." என்றார்.

உடனே அந்தத் தயாரிப்பாளர், "உமக்கு இசையைக் கற்றுத்தந்த உம்முடைய ஆசானுக்கே நான் நான்காயிரம் டாலர்தான் தருவேன்; நீர் என்ன இந்தப் பணம் குறைவாக இருக்கின்றது என்கிறீர்" என்றார். "என்னுடைய ஆசான் திறமையானவர்; அவர் எளிதாக ஒரு படத்திற்கு இசையமைத்துவிடுவார்; ஆனால், நான் என்னுடைய ஆசானைப் போன்று திறமையாவன் கிடையாது. மேலும் ஒருபடத்திற்கு நான் இசையமைக்க அவ்வளவு சிரமப்பட வேண்டும். அதனால்தான் எனக்கு இந்தப் பணம் போதாது என்று சொன்னேன்" என்றார்.

உண்மையில் இகோர் ஸ்டரவின்ஸ்கி, தன்னுடைய ஆசானைப் போன்று திறமையானவர்தான்; ஆனாலும் அவருக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து, மிகவும் தாழ்ச்சியோடு பேசியதால், படத்தயாரிப்பாளர், அவருக்குக் கொஞ்சம் கூடுதலான தொகையைச் சம்பளமாகக் கொடுத்தார்.

மிகப்பெரிய இசைக்கலைஞராகிய இருந்தாலும், இகோர் ஸ்டரவின்ஸ்கி தாழ்ச்சியோடு இருந்ததால், தயாரிப்பாளரிடம் அவர் கேட்டது கிடைத்தது. நம்முடைய வாழ்க்கையிலும் நாம் (மனத்)தாழ்ச்சியோடு இருக்கையில், நாம் கேட்டதுகிடைக்கும். மட்டுமல்லாமல், இயேசு தருகின்ற இளைப்பாறுதலும் கிடைக்கும். இன்றைய நற்செய்தியில் இயேசு, இளைப்பாறுதல் தருவதாகக் கூறுகின்றார். இயேசு தருகின்ற இளைப்பாறுதலை ஒருவர் பெற்றுக்கொள்ள, என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்துபோன மக்கள்

இயேசுவின் காலத்தில் இருந்த சாதாரண மக்கள் பல்வேறு சுமைகளைச் சுமந்தார்கள். இவற்றில் மிகவும் முக்கியமான சுமை, பரிசேயர்கள் அவர்கள்மீது சுமத்திய சட்டம் என்ற சுமை. ஆம். தங்களை ஒழுக்கவாதிகள், சட்டக் காப்பாளர்கள் என்ற கருதிக்கொண்ட பரிசேயர்கள், சட்டங்கள் என்ற சுமத்திற்கரிய பளுவான சுமைகளை மக்களுடைய தோள்மேல் வைத்தார்கள் (மத் 23: 4). இந்தச் சுமைகளை எல்லாம் அவர்கள் சுமந்தார்களா என்றால், கிடையாது. அவர்கள் மக்கள்மீது சுமைகளை இறக்கிமட்டுமே வைத்தார்கள். இதனால் சாதாரண மக்களுடைய வாழ்க்கை சுமை நிறைந்ததாக இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இயேசு மக்களிடம், "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்கிறார்.

இயேசு சுமை சுமந்து சோர்ந்திருப்போருக்கு இளைப்பாறுதல் தருவதாகச் சொல்கின்றாரே...! அந்த இளைப்பாறுதல் நமக்குச் சுமையே அல்லது துன்பமே இல்லாத வாழ்வைத் தந்துவிடுமா? என்ற கேள்வி எழலாம். இயேசு அதைக் குறிப்பிடவில்லை. மாறாக, தன்னிடம் வந்தால், தன்னிடமிருந்து கற்றுக்கொண்டால் ஒருவருடைய சுமை எளிதாக இருக்கும் என்பதையே அவர் குறிப்பிடுக்கின்றார்.

இயேசுவிடம் நாம் எதைக் கற்றுக்கொண்டால், நம்முடைய சுமை எளிதாக இருக்கும் என்ற கேள்வி எழலாம். அதற்கான பதிலை இயேசு நற்செய்தியில் குறிப்பிடுகின்றார். அதைக் குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தன்னுடைய மனத்தாழ்ச்சியின் வழியாக இளைப்பாறுதல் தரும் இயேசு

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போருக்கு இளைப்பாறுதல் தருவதாகச் சொல்லும் இயேசு, "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்" என்கின்றார். ஆம். நாம் இயேசுவிடமிருக்கும் கனிவையும் தாழ்ச்சியையும் கற்றுக்கொண்டு, அவற்றின்படி நடந்தால் அவர் தருகின்ற இளைப்பாறுதல் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.

இயேசு கனிவுக்கும் மனத்தாழ்மைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். அதனால்தான் அவரால் எல்லார்மீதும் அன்புகொள்ள முடிந்தது; தன்னுடைய சீடர்களுடைய காலடிகளைக் கழுவ முடிந்தது. நாமும் இயேசுவிடமிருந்த கனிவையும் மனத்தாழ்மையையும் நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வந்தால், நமக்கு இயேசு தருகின்ற இளைப்பாறுதல் நிச்சயம் கிடைக்கும். இன்றைக்குப் பலருக்கு உள்ளத்தில் அன்பு இல்லை; ஆணவம் மட்டுமே குடிகொண்டிருக்கின்றது. என்றைக்கு நமது உள்ளத்தில் கனிவும் தாழ்ச்சியும் இருக்கின்றனதோ அன்றைக்கு நமது உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

ஆகவே, நாம் இயேசுவிடமிருந்து இளைப்பாறுதலைப் பெற, அவரிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் கடைப்பிடித்து வாழக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

"நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள்" (1 பேது 3:8) என்பர் புனித பேதுரு. ஆகையால், நாம் புனித பேதுரு கூறுவது போன்று, நம் ஆண்டவர் இயேசு கூறுவது போன்று கனிவோடும் மனத்தாழ்மையோடு வாழக் கற்றுக்கொண்டு, இயேசுவின் இளைப்பாறுதலைப் பெறுவோம்; இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!