|
|
15 ஜூலை 2020 |
|
பொதுக்காலம்
15ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக்
கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ?
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்
10: 5-7, 13-16
ஆண்டவர் கூறியது:
அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது; தண்டனை
வழங்க நான் ஏந்தும் தடி அது. இறைப் பற்றில்லா நாட்டினர்க்கு அந்நாட்டை
நான் அனுப்புகிறேன்; எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க அதற்கு
ஆணை கொடுக்கிறேன்; அம்மக்களைக் கொள்ளையிடவும் அவர்கள் பொருள்களைச்
சூறையாடவும், தெருவில் கிடக்கும் சேற்றைப்போல அவர்களை
மிதித்துப் போடவும், அதற்குக் கட்டளை தருகிறேன். அசீரிய அரசன்
நினைப்பதோ வேறு, அவனது உள்ளத்தில் எழும் திட்டங்கள் வேறு; மக்களினங்கள்
அழிந்து நாசமாவதைத் தன் இதயத்தில் எண்ணுகிறான்; பல்வேறு இனத்தாரையும்
வெட்டி வீழ்த்த அவன் விரும்புகிறான்.
ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்: "என் கை வலிமையாலே நான் அதைச்
செய்து முடித்தேன்; என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மை யாலும் அதற்குத்
திட்டங்கள் தீட்டினேன்; மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள எல்லைகளை
அகற்றினேன்; அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்; அரியணையில்
வீற்றிருந்தோரை ஒரு காளை மிதிப்பதுபோல் மிதித்துப்போட்டேன்.
குருவிக் கூட்டைக் கண்டு பிடிப்பதுபோல் என் கை மக்களினங்களின்
செல்வங்களைக் கண்டு எடுத்துக்கொண்டது; புறக்கணித்த முட்டைகளை
ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல் நாடுகள் யாவற்றையும் ஒருங்கே
சேர்த்துக்கொண்டேன். எனக்கெதிராக ஒருவரும் இறக்கை அடிக்கவில்லை.
வாய் திறக்கவில்லை, கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை."
வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை
பாராட்டுவதுண்டோ? அறுப்பவனைவிடத் தன்னைச் சிறப்பு மிக்கதாக
வாள் கருத இயலுமோ? தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக் கைத் தடியால்
கூடுமோ? மரம் அல்லாத மனிதனைத் தூக்க மரத்தால் ஆன கோலால் இயலுமோ?
ஆதலால் தலைவராகிய படைகளின் ஆண்டவர் பாழாக்கும் கொள்ளை நோயை அவனுடைய
கொழுத்த வீரர்கள்மேல் அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ் தீ ஒன்றை
வைப்பார்; அவர் நெருப்பு மூட்டுவார்; அது கொழுந்துவிட்டு எரியும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 94: 5-6. 7-8. 9-10. 14-15 . (பல்லவி: 14a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்.
5
ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்; உமது உரிமைச்
சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர்.
6
கைம்பெண்டிரையும் அன்னியரையும் அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்;
திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர். - பல்லவி
7
"ஆண்டவர் இதைக் கண்டுகொள்வதில்லை; யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை"
என்கின்றனர்.
8
மக்களிடையே அறிவிலிகளாய் இருப்போரே, உணருங்கள்; மதிகேடரே, எப்பொழுது
நீங்கள் அறிவு பெறுவீர்கள்? - பல்லவி
9
செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர்
காணாதிருப்பாரோ?
10
மக்களினங்களைக் கண்டிப்பவர், மானிடருக்கு அறிவூட்டுபவர் தண்டியாமல்
இருப்பாரோ? - பல்லவி
14
ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக்
கைவிடார்.
15
தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர்
அதன் வழி நடப்பர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,
உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக்
குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 11: 25-27
அக்காலத்தில்
இயேசு கூறியது: "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,
உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும்
இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே,
இதுவே உமது திருவுளம்.
என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.
தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர்
யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி
வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
எசாயா 10: 5-7, 13-16
ஆணவத்தோடு செயல்பட்ட அசீரியர்கள்
நிகழ்வு
இரஷ்யாவில் தோன்றிய மிகப்பெரிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்.
இவருடைய போரும் அமைதியும், அன்னா கரேனினா போன்ற நாவல்கள் மிகவும்
அமரத்துவம் வாய்ந்தவை.
இப்படிப்பட்ட "பெரிய" எழுத்தாளர் ஒருநாள் மாலைவேளையில், தன்னுடைய
வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பூங்காவிற்குச் சென்று, இளைப்பாறிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்குக் கையில் ஒரு பந்தோடு வந்த மேரி என்ற சிறுமி,
அந்தப் பந்தை அங்கும் இங்கும் தூக்கிப் போட்டு விளையாடத் தொடங்கினாள்.
சிறிதுநேரத்திலேயே, அந்தப் பந்தைக் கொண்டு தனியாக விளையாடுவது
அவளுக்குச் சலித்துப் போனதால், அவள் அருகில் இருந்த லியோ
டால்ஸ்டாயிடம் சென்று, "என்னோடு விளையாட வரமுடியுமா...?" என்று
கேட்டாள். அவரும் அதற்குச் சரியென்று சொல்லவே, இருவரும்
சேர்ந்து பந்து விளையாடத் தொடங்கினார்கள்.
இருவரும் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்குபோது, பொழுது சாய்ந்ததால்,
இருவரும் விளையாட்டை நிறுத்திக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தார்கள்.
அப்பொழுது லியோ டால்ஸ்டாய் அந்தச் சிறுமியிடம், "பாப்பா! நீ
வீட்டிற்குப் போய், உன்னுடைய தாயிடம், "இன்று நான் லியோ
டால்ஸ்டாயோடு விளையாண்டேன் என்று சொல்; அவர் மகிழ்ச்சியடைவார்"
என்று சற்று, ஆணவத்தோடு சொன்னார். அதற்கு அந்தச் சிறுமி அவரிடம்,
"நீங்களும் உங்களுடைய வீட்டிற்குப்போன பிறகு, உங்களுடைய தாயிடம்,
"இன்று நான் மேரி என்ற சிறுமியோடு விளையாடினேன் என்று சொல்லுங்கள்;
அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து
வேகமாக ஓடிப் போனாள்.
சிறுமியின் இவ்வார்த்தைகள், அதுவரைக்கும் தான் மிகப்பெரிய எழுத்தாளர்
என்ற ஆணவத்தில் இருந்த லியோ டால்ஸ்டாயின் உள்ளத்தில்
பேரிடியாய் இறங்கியது.
இந்த நிகழ்வில் வருகின்ற லியோ டால்ஸ்டாயைப் போன்றுதான் பலரும்
நிறையநேரங்களில், "எல்லாம் தெரிந்தவர்கள்!" "எல்லாம் என்னால்தான்
நடக்கின்றது!" என்ற ஆணவத்தில் நடந்துகொள்கிறார்கள். உண்மையில்
நாம் பெற்ற கொடைகள், திறமைகள் அனைத்தும் ஆண்டவர் நமக்குக்
கொடுத்தவையே! இதை உணர்ந்துகொள்ளாமல்தான் எப்படியெல்லாமோ நாம்
பேசிக்கொண்டு அலைகின்றோம். இன்றைய முதல் வாசகம், கடவுள் அசீரியர்களை
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தும்பொழுது, அவர்களோ
எல்லாம் தங்களால்தான் ஆனது என்ற ஆணவத்தோடு நடந்துகொள்கின்றார்கள்.
அதனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அசீரியர்களைத் தன்னுடைய கருவியாகப் பயன்படுத்திய கடவுள்
ஆண்டவருக்கு உண்மையாக இருந்து, அவர் ஒருவருக்கே பணிந்து நடக்கவேண்டும்
என்பது இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாக வைக்கப்பட்ட கட்டளையாக இருந்தது.
இஸ்ரயேல் மக்கள் இந்தக் கட்டளையை மீறி, பாகால் தெய்வத்தை வழிபடத்
தொடங்கினார்கள். இதனால் அவர்களைத் தண்டித்துத் திருத்தும்
பொருட்டு, கடவுள் அசீரியர்களை கோலாகவும், தண்டனை வழங்க ஏந்தும்
தடியாகவும் பயன்படுத்தினார். கடவுளின் இத்திட்டத்திற்கு ஏற்ப
அசீரியர்கள் தாழ்ச்சியோடு நடந்தார்களா என்றால், இல்லை என்றுதான்
சொல்லவேண்டும். அதனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று
பார்ப்போம்.
அசீசிரியர்கள் ஆணவத்தோடு செயல்பட்டதால் தண்டனையைப் பெறல்
கடவுளுடைய கையில் ஒரு கருவியாய் இருந்து செயல்படுகின்றோம் என்பதை
அசீரியர்கள் உணர்ந்திருக்கவேண்டும்; ஆனால், அவர்கள் அதை உணராமல்,
தங்களுடைய கைவினையாலேயே யாவற்றையும் செய்துமுடித்தோம் என்றும்,
தங்களுடைய ஞானத்தாலும் அறிவுக்கூர்மையாலுமே திட்டங்களைத்
தீட்டினோம் என்றும் உள்ளத்தில் செருக்கு கொண்டார்கள். கடவுள்தான்
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்பவரைச் சிதறடிப்பவர் ஆயிற்றே..!
(லூக் 1: 50-53) அசீரியர்கள், கடவுளின் கையில் தாங்கள் ஒரு கருவி
என்பதை உணராததால், கடவுள் அவர்கள்மீது தண்டனையை வருவிக்கின்றார்.
எப்படிப்பட்ட தண்டனை எனில், எசேக்கியாவால், அசீரியப் படைவீரர்களில்
ஒரு இலட்சத்து, எண்பத்தைந்தாயிரம் பேர் கொல்லப்படுகின்றனர். இவ்வாறு
கடவுள் ஆணவத்தோடு செயல்பட்ட அசீரியர்கள் மேல் தண்டனையை வருவிக்கின்றார்.
கடவுள் நமக்கு ஒருசில கடமைகளைப் பொறுப்புகளைக்
கொடுத்திருக்கின்றார் எனில், அவற்றைத் தாழ்ச்சியோடு, "அவருடைய
கருவி நாம்" என்ற உணர்வோடு செய்யவேண்டும். அதைவிடுத்து, ஆணவத்தோடு
செயல்பட்டால் மிஞ்சுவது என்னவோ அழிவுதான்.
ஆகையால், நாம் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு, இறைவனுடைய கருவிகளாக
இருந்து செயல்படுவோம். அதன்மூலம் அவருடைய அன்பு மக்களாவோம்.
சிந்தனை
"கடவுளுடைய கையில் நான் ஒரு சிறிய எழுதுகோல்; அவர் தன்னுடைய
விரும்பம் போல் என்னைப் பயன்படுத்துகின்றார்" என்பார்
கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா. ஆகையால், நாம் தெரசாவைப்
போன்று கடவுளுடைய கையில் ஒரு சிறிய கருவி, எழுதுகோல் என்பதை
உணர்ந்து, ஆணவமில்லாமல், மிகுந்த தாழ்ச்சியோடு அவருடைய பணியைச்
செய்வோம். அதவழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 11: 25-27
இயேசுவைப் போன்று இறைவனைப் போற்றுவோம்
நிகழ்வு
ஒருநாள் மாலைவேளையில் ஒரு சிற்றூரில் இருந்த ஒரு தாத்தாவும்
அவருடைய பேத்தியும் ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசத் தொடங்கினார்கள்.
முதலில் பேத்திதான் பேச்சைத் தொடங்கினாள்: "தாத்தா! இந்த மரத்தில்
உள்ள இலைகள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளுமா...?". "அதற்கெல்லாம்
அவைகளுக்கு எங்கே நேரம் இருக்கப்போகிறது...?" என்று மெல்லிய
புன்னகையோடு பதில் சொன்னார் தாத்தா.
உடனே பேத்தி அவரிடம், "ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளாத அளவுக்கு,
அப்படியென்ன இந்த இலைகள் செய்துகொண்டிருகின்றன...?" என்று அடுத்த
கேள்வியைக் கேட்டாள். "இந்த இலைகள் எப்பொழுதும் தங்களுடைய கைகளை
உயர்த்தியவாறு, இறைவனைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கின்றன.
அதனால்தான் இவற்றிற்கு ஒன்றோடு ஒன்று பேசுவதற்கு நேரமில்லை" என்றார்
தாத்தா.
இதைக் கேட்டதும் பேத்தி மிகுந்த உற்சாகத்தோடு, "தாத்தா! இந்த
மரத்தின் இலைகளைப் போன்று மனிதர்களும் தங்களைப் படைத்தவரை எப்பொழுதும்
போற்றிப் புகழ்ந்துகொண்டு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...?"
என்றாள். "ஆமாம்! நீ சொல்வதுபோல் மனிதர்கள் தங்களைப் படைத்த
கடவுளைப் புகழ்ந்துகொண்டே இருந்தால், மிகவும் நன்றாக இருக்கும்"
என்று ஆமோதித்தார்.
உண்மைதானே! மனிதர்கள் தங்களைப் படைத்து, பாதுகாத்து, வழிநடத்துகின்ற,
இன்னும் எல்லாவிதமான நன்மைகளைச் செய்கின்ற கடவுளைப் போற்றிப்
புகழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நற்செய்தியில் இயேசு தந்தைக்
கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார். அவர் எத்தகைய சூழ்நிலையில்
கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்...? எதற்காக அவர் கடவுளைப்
போற்றிப் புகழ்ந்தார்...? என்பன குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ளாதபோதும் கடவுளைப் போற்றிய இயேசு
மனிதர்களில் சிலருக்குக் கடவுளைப் போற்றிப் புகழவேண்டும் என்ற
எண்ணமே ஏற்படாது. இன்னும் ஒருசிலர் இருக்கின்றார்கள், இவர்கள்
மகிழ்ச்சியாக இருந்தால் அல்லது கடவுள் தங்களுக்கு ஏதாவது பெரிய
அளவில் நன்மை செய்தால், அவரைப் போற்றிப் புகழ்வார்கள் அல்லது
அவருக்கு நன்றி சொல்வார்கள். ஆனால், தாங்கள் வருத்தத்திலோ அல்லது
ஏதாவது ஒரு துயரம்ஏற்பட்டிருக்கும் நேரத்திலோ கடவுளைப்
போற்றிப் புகழமாட்டார்கள்.
இன்றைய நற்செய்தியில் இயேசு இதற்கு முற்றிலும் மாறாக, மக்கள்
தன்னைப் புறக்கணித்து, தன்னுடைய செய்தியை கேட்டு, மனம்மாறாத
நிலையிலும்கூட கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார். ஆம்.
கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் ஆகிய நகர்களில் இயேசு கடவுளின்
வார்த்தையை எடுத்துரைத்து, அங்கிருந்த மக்கள் நடுவில் பல்வேறு
வல்ல செயல்களையும் அருமடையாளங்களையும் செய்தார். அப்படியிருந்தும்
மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு மனம்மாறவில்லை. இத்தகைய சூழநிலையில்
இயேசு கடவுளைச் சபித்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக, கடவுளைப்
போற்றிப் புகழ்கின்றார். இயேசுவின் இத்தகைய செயல், புனித பவுல்
கூறுகின்ற, "என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன். இன்றும் என்றும்,
வாழ்விலும் சாவிலும் முழுத்துணிவுடன் கிறிஸ்துவை (கடவுளை) என்
உடலால் பெருமைப்படுத்துவேன்" (பிலி 1: 20) என்ற சொற்களை நமக்கு
நினைவுபடுத்துதாக இருக்கின்றது.
ஆம், நமக்கு என்ன நேர்ந்தாலும், அதற்காக வெட்கமுறாமல், இப்பொழுதும்
எப்பொழுதும் ஆண்டவராகிய கடவுளை இயேசுவைப் போன்று பெருமைப்படுத்தவேண்டும்.
மறையுண்மைகளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியதற்காக கடவுளைப்
போற்றிய இயேசு
மக்கள் தன்னைப் புறக்கணித்த வேளையிலும் இயேசு கடவுளைப்
போற்றிப் புகழ்ந்தார் என்று பார்த்தோம். இப்பொழுது அவர் எதற்காகக்
கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
இயேசு தந்தைக் கடவுளை, மறையுண்மையை ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும்
மறைத்துவைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியதற்காகப் போற்றி
புகழ்கின்றார். ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறையுண்மைகள் மறைவாய்
இருந்ததற்குக் காரணம், அவர்கள் எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில்,
"நிறைந்துபோன குடங்களாக" இருந்தார்கள் (எசா 29: 14) ஆனால், குழந்தைகள்
அப்படியல்ல. அவர்கள் காலிக் குடங்களாக, எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக,
எளியவர்காக, தாழ்ச்சி நிறைந்தவர்களாக இருந்தார்கள். அதனால்தான்
அவர்களுக்கு மறையுண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன (யாக் 4:6).
அவ்வாறெனில், நாம் தாழ்ச்சியோடும், எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
எளிய மனநிலையோடும் இருந்தோமெனில், நமக்கும் மறையுண்மைகள்
வெளிப்படுத்தப்படும் என்பது உறுதி. நாம் எளிய மனத்தவராக... எல்லாச்
சூழ்நிலையிலும் கடவுளைப் போற்றிப் புகழ்கின்றவர்களாக இருக்கின்றோமா?
சிந்திப்போம்.
சிந்தனை
"மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்" (திபா 66: 8) என்பார்
திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் நம்மைப் படைத்து,
பாதுகாத்து, பரமாரித்து, மறையுண்மைகளை வெளிப்படுத்தும் இறைவனை,
எல்லா வேளையிலும் போற்றி, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|