Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     14 ஜூலை 2020  

பொதுக்காலம் 15ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 உங்களிடம் விசுவாசம் இல்லாவிடில், நீங்கள் நிலைபெற்றிருக்க மாட்டீர்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 1-9

உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாசு யூதா நாட்டை ஆட்சி செய்த நாள்களில், இரட்சின் என்னும் சிரியா நாட்டு அரசனும் இரமலியாவின் மகன் பெக்கா என்னும் இஸ்ரயேல் நாட்டு அரசனும் எருசலேமுக்கு எதிராகப் போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். அவர்களால் அது இயலாமற் போயிற்று.

"சிரியா எப்ராயிமோடு கூட்டணி அமைத்துக் கொண்டது" என்னும் செய்தி தாவீதின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது; உடனே பெருங் காற்றினால் காட்டு மரங்கள் அலையதிர்வு கொள்வதுபோல், ஆகாசின் உள்ளமும் அவர் நாட்டு மக்களின் உள்ளங்களும் அலைக்கழிக்கப்பட்டன. அப்பொழுது ஆண்டவர் எசாயாவை நோக்கி: "நீ உன் மகன் செயார்யாசிபை உன்னுடன் அழைத்துச் சென்று ஆகாசைச் சந்திப்பாயாக. வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில், மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில் நீ ஆகாசைக் காண்பாய். அவனுக்கு இதைச் சொல்: நீ அமைதியாய் இரு; அஞ்சாதிருந்து நடப்பனவற்றை உற்றுப் பார்; இரட்சின், சிரியா நாட்டினர், இரமலியாவின் மகன் ஆகியோரின் கடும் சினத்தைக் கண்டு மனங்கலங்காதே. அவர்கள் புகைந்து கொண்டிருக்கும் இரு கொள்ளிக் கட்டைகளிலிருந்து வரும் புகை போன்றவர்கள். சிரியா எப்ராயிமோடும் இரமலியாவின் மகனோடும் உனக்கெதிராய்ச் சதித்திட்டம் தீட்டி, "யூதாவுக்கு எதிராய் நாம் படை எடுத்துச் சென்று அதை நடுநடுங்கச் செய்வோம்; அதற்கு எதிராய்ப் போரிட்டு, அதைப் பிடித்து தயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்" என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்."

ஆதலால் ஆண்டவர் இவ்வாறு உரைக்கிறார்: "அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது, அது ஒருபோதும் நிறைவேறாது. ஏனெனில் சிரியாவின் தலைநகர் தமஸ்கு; தமஸ்கு நகரின் தலைவன் இரட்சின். (இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகளில் எப்ராயிம் ஒரு மக்களினம் என்னும் தகுதியை இழக்கும் வண்ணம் தவிடு பொடியாக்கப்படும்). எப்ராயிமின் தலைநகர் சமாரியா; சமாரியா நகரின் தலைவன் இரமலியாவின் மகன். உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்து நிற்க மாட்டீர்கள்."

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் -
=================================================================================
திபா 48: 1-2a. 2b-3. 4-5. 6-7 . (பல்லவி: 8d) Mp3

பல்லவி: கடவுள் தம் நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார்.
1
ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.
2a
தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை; அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது. - பல்லவி

2b
மாவேந்தரின் நகரும் அதுவே.
3
அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். - பல்லவி

4
இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்; அணிவகுத்து ஒன்றாக வந்தனர்;
5
அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்; திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர். - பல்லவி

6
அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது; பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர்.
7
தர்சீசுக் கப்பல்களைக் கீழைக் காற்றினால் நீர் தகர்த்தெறிகின்றீர். - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 20-24


அக்காலத்தில்

இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார். "கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே! தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 எசாயா 7: 1-9

"அமைதியாய் இரு; அஞ்சாதிரு; நம்பிக்கையில் நிலைத்திரு"


நிகழ்வு

மேற்கு வெர்ஜினியாவில் வயதான பெண்மணி ஒருவர் இருந்தார். ஒருநாள் இவரிடம், இவருடைய பேரன், "பாட்டி! நீங்கள் வானூர்தியில் பயணம் செய்திருக்கிறீர்களா...?" என்றான். இவர் "இல்லை" என்று சொன்னதும், அவன், "கட்டாயம் நீங்கள் ஒருமுறையாவது வானூர்தியில் பயணம் செய்யவேண்டும். வெளிநாடு செல்லவேண்டும் என்று இல்லை. நம்முடைய நாட்டிற்குள்ளே பயணம் செய்யலாம்; உங்களுடைய பயணச் செலவை நானே பார்த்துக்கொள்கின்றேன்" என்றான். "வேண்டாம் தம்பி! வானூர்தியில் பயணம் செய்வதற்கு எனக்கு மிகுந்த அச்சமாக இருக்கின்றது; நான் இப்படியே இருந்து விடுகிறேனே!" என்று கெஞ்சினார்.

"பாட்டி! நீங்கள் வானூர்தியில் பயணம் செய்வதற்கு அச்சப்படத் தேவையே இல்லை. அதில் பயணம் செய்வது அவ்வளவு பாதுகாப்பானது. அதனால் எனக்காக ஒருமுறை மட்டும் வானூர்தியில் செய்யுங்கள்" என்று சொல்லிப் பாட்டியை ஒருவழியாகச் சம்மதிக்க வந்தான் பேரன்.

இதற்குப் பின்பு ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த வயதான பெண்மணி வானூர்தியில் பயணம் செய்துவிட்டுத் திரும்பி வந்தார். அவர் வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது, அவரைத் தன்னுடைய வண்டியில் ஏற்றுக்கொண்டு வந்த பேரன் அவரிடம், "வானூர்தியில் பயணம் செய்தீர்களே! அந்த அனுபவம் எப்படி இருந்தது?" என்றான். "பயணம் நன்றாகத்தான் இருந்தது தம்பி; ஆனால், நான் என்னுடைய முழு எடையையும் என்னுடைய இருக்கையில் இறக்கி வந்தால், வானூர்திக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று, முன்னாடி இருந்த கைப்பிடியை இறுகப் பிடித்துக்கொண்டு, பாதி எடையை மட்டும்தான் என் இருக்கையில் இறக்கி வைத்தேன்" என்றார்.

இதைக் கேட்ட பேரனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. இருந்தாலும், சிரித்திவிட்டால் தன்னுடைய பாட்டி ஏதாவது நினைக்கக்கூடும் என்று அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

இந்த நிகழ்வில் வருகின்ற வயதான பெண்மணியைப் போன்றுதான், பலர் ஆண்டவர்மீது முழுமையான நம்பிக்கை வைக்காமல், அவர் காட்டும் வழியில் நடக்காமல் இருகின்றார்கள். இன்றைய முதல் வாசகம், ஆண்டவர்மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவந்த ஆகாசு மன்னனை, இறைவாக்கினர் எசாயா ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ அழைப்புத் தருவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காமல் வாழ்ந்த ஆகாசு மன்னன்

யூதாவை உசியாவின் பேரனும், யோதாமின் மகனுமான ஆகாசு ஆண்டுவந்த காலத்தில், அசீரியர்களிடமிருந்து சிரியாவிற்கும் இஸ்ரயேலுக்கும் ஆபத்து வரும் சூழ்நிலை ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த இரண்டு நாட்டு மன்னர்களும், யூதாவின் மன்னரான ஆகாசிடம், அசீரியர்களுக்கு எதிரான போரில் நீ எங்களோடு கூட்டணி வைத்தால், உன்னுடைய நாட்டை நாணல் ஆபத்திலிருந்து காப்பாற்றுவோம். இல்லையென்றால், உன்னுடைய நாட்டிற்கு எதிராக நாங்கள் போர்தொடுப்போம் என்று மிரட்டினார்கள். இதற்கு நடுவில், யூதாவின் மன்னனாக ஆகாசு சிரியா மற்றும் வடநாடான இஸ்ரயேலோடு கூட்டணி சேரத் தயங்கினான். காரணம், இந்த இரண்டு நாடுகளின்மீதும் போர்தொடுப்பதாக இருந்த அசீரிய நாட்டு மன்னனோடு அவன் இரகசியமாகக் கூட்டணி வைத்திருந்தான் (2 அர 16: 5-9).

இங்கு நாம் ஓர் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், ஆகாசு மன்னன், "எங்களோடு கூட்டணி வைக்காவிட்டால், உன்னுடைய நாட்டின்மீது போர்தொடுப்பேன்" என்று சொல்லி மிரட்டிய, சிரியா மற்றும் இஸ்ரேயல் நாட்டு மன்னர்களிடமிருந்து தன்னுடைய நாட்டைக் காத்துக்கொள்ள, அசீரிய நாட்டு மன்னனோடு கூட்டணி வைத்தானே! அதற்குப் பதிலாக அவன் ஆண்டவர்மீது நம்பிக்கை நம்பிக்கை வைத்திருக்கலாம்; ஆனால், அவன் ஆண்டவர் நம்பிக்கை வைக்காமல் இருக்கின்றான். அதனால்தான் ஆண்டவர் அவனிடம் இறைவாக்கினர் எசாயாவை அனுப்பி அவனுக்கு இறைவாக்கு உரைக்கின்றார்.

ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்குமாறு எசாயா, ஆகாசிடம் எடுத்துக்கூறுதல்

ஆண்டவருடைய அறிவுறுத்தலின்படி ஆகாசிடம், தன் மகன் செயார்யாசுவோடு வருகின்ற இறைவாக்கினர் எசாயா அவனிடம், "அமைதியாய் இரு, அஞ்சாதிரு" என்று என்கின்றார். இப்படிச் சொல்லிவிட்டு, தொடர்ந்து அவனிடம், சிரியா மற்றும் இஸ்ரயேல் நாட்டினர் புகை போல் ஒன்றுமில்லாமல் போவர் என்கின்றார். ஆண்டவர் சொன்னது போலவே சிரியா நாடு கி.மு. 732 ஆம் ஆண்டும், இஸ்ரயேல் நாடு, கி.மு.722 ஆம் ஆண்டும் அழிக்கப்பட்டன.

இறைவாக்கினர் எசாயா ஆகாசிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இறுதியாக, "உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில், நீங்களும் நிலைத்து நிற்க மாட்டீர்கள்" என்றார். ஆம், நாம் மனிதர்களிடம் அல்ல, ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்து (திபா 118: 8) அந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கவேண்டும். அதுதான் ஆகாசு மன்னனுக்கும் நமக்கும் இறைவன் தரும் செய்தியாக இருக்கின்றது.

நாம் ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையில் நிலைத்திருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"உங்களுடைய கவலை உங்களைக் கண்ணீர் வடிக்கச் செய்யும் என்றால், ஆண்டவர்மீது நீங்கள் கொள்ளும் நம்பிக்கை, அந்தக் கண்ணீரைத் உலர்ந்து போகச் செய்யும்" என்பார் புனித அகுஸ்தின். ஆகையால், நாம் எல்லாச் சூழ்நிலையிலும் ஆண்டவர்மீது உள்ள நம்பிக்கையில் மிக உறுதியாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 11: 20-24

நீங்கள் இன்னும் மனம்மாறவில்லையா?

நிகழ்வு

பெர்சியாவை ஆண்டு வந்தவர் மாமன்னர் ஹருண்-அல்ரஷித் (HarunAl Rashid). மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இவர், ஒருநாள் தன்னுடைய நாட்டில் இருந்த உயர்குடிமக்கள், அதிகாரிகள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள் என யாவரையும் தன்னுடைய அரண்மனையில் நடைபெறவிருந்த விருந்துக்கு அழைத்தார். அவர்களும் இவருடைய அழைப்பினை ஏற்று, விருந்துக்கு வந்தார்கள். இதற்கு முன்பாக விருந்து நடைபெறும் இடத்திலிருந்த சுவர்களைக் கவின் மிகு கற்களால் அழகுபடுத்தி, வண்ண வண்ண மலர்களால் நிரப்பி வைத்தார்.

விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த எல்லாரும் விருந்துக்கு வந்ததும், மாமன்னர் ஹருண்-அல்-ரஷித் தன்னுடைய அரசபைக் கவிஞர் அபுல் அடயாவை (Abul Atayah) அழைத்து, தன்னைப் பற்றியும், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற விருந்தைப் பற்றியும் கவிதை ஒன்று பாடச் சொன்னார். அபுல் அடயாவும் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல், கவிதை பாடத் தொடங்கினார்: "உயர்ந்ததோர் அரண்மனையில் மாட்சிமையோடு வீற்றிக்கும் மாமன்னரே! நீர் வாழ்க! உம் குலம் வாழ்க! ஒவ்வொரு நாளும் உமக்கு மகிழ்ச்சியாகத் தொடங்கி, மனநிம்மதியோடு நிறைவு பெருக!"

கவிஞர் அபுல் அடயா இப்படி மாமன்னரை ஏற்றிப் போற்றுவதைக் கேட்டுவிட்டு, "ஆஹா..!. ஓஹோ...!" என்று அவரை வியந்து பாராட்டினார்கள் விருந்துக்கு வந்தவர்கள். கவிஞர் இப்படியே பாடிக்கொண்டிருக்கும்பொழுது திடீரென்று, "ஒவ்வொரு நாளும் ஆடம்பரமாகவும் பகட்டாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் மாமன்னரே! நீர் சாகும் தருவாயில் இருக்கும்பொழுது, உம்முடைய கடந்த கால வாழ்க்கையை ஒருவினாடி திரும்பிப் பார்த்தால் எல்லாமே புகைபோல மறைந்திருக்கும்" என்றார்.

கவிஞர் இப்படிப் பாடல் பாடியதும், அங்கிருந்த அமைச்சர், "கவிஞரே! உம்மை மாமன்னரைப் பற்றியும் விருந்தைப் பற்றியும் புகழ்ந்து பாடச் சொன்னால், மன்னரைப் பற்றி இப்படிப் பாடிக்கொண்டிருக்கின்றீரே...! உம்மை என்ன செய்கின்றேன் பார்" என்று சொல்லி, அவரை வெட்டிவீழ்த்த, தன்னிடமிருந்த வாளை ஓங்கினார். அவரைத் தடுத்து நிறுத்திய மாமன்னர், "கவிஞரை ஒன்றும் செய்யவேண்டாம். இத்தனை நாள்களும் அறியாமையில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த என்னுடைய அறிவுக்கண்ணை அவர் திறந்து வைத்திருக்கின்றார். அதனால் அவருக்கு தக்க சன்மானம்தான் தருவதுதான் முறை" என்றார்.

இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த அபுல் அடயா என்ற அந்தக் கவிஞர், "மாமன்னரே! எனக்கு சன்மானம் எல்லாம் வேண்டாம். இப்பொழுதாவது நீர் உம்முடைய அறிவுக் கண்ணைத் திறந்தீரே! அதுவே போதும்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இதற்குப் பின்பு ஹருண்-அல்-ரஷித் பெர்சியா நாடு, குறிப்பாக பாக்தாத் நகரம் அறிவியல், ஆன்மிகம், கலை மற்றும் பண்பாடு போன்ற பல்வேறு தளங்களில் வளர்வதற்குப் பெரிதும் காரணமாக இருந்தார். (Little things about Great People Gratian Vas)

ஆம். மிகவும் உலகப்போக்கிலான வாழ்க்கை வாழ்ந்து வந்த மாமன்னர் ஹருண்-அல்-ரஷித், அபுல் அடயா என்ற கவிஞருடைய வார்த்தைகளைக் கேட்டு, மனம்மாறி நல்வழியில் நடக்கத் தொடங்கினார். ஆனால், இயேசுவின் போதனையை மீண்டும் மீண்டும் கேட்டும் பார்த்தும் மனம்மாறாமல் ஒருசில நகரங்கள் இருந்தன. இந்நகரங்களுக்கு என்ன ஆகும் என்பதைக் குறித்து நற்செய்தியில் வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருந்த மறுத்த நகரங்கள்

இன்றைய நற்செய்தியில் இயேசு கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் ஆகிய மூன்று நகர்களையும் கடுமையாகச் சாடுகின்றார். இதில் கப்பர்நாகுமை மற்ற இரண்டு நகர்களை விட இன்னும் கடுமையாகச் சாடுகின்றார். காரணம் இந்த நகரில் இயேசு பல்வேறு வல்லசெயல்களைச் செய்திருந்தார் (மத் 4: 12-13, 8: 5-17, 9: 2-8, 18-33; மாற் 1: 23: 28). இப்படியிருந்தபொழுது இந்த நகரில் இருந்தவர்கள் மனம்திருந்தாமல் இருந்தார்கள். அதனால் இயேசு அந்த நகரைப் பார்த்து, "தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையை விட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாக இருக்கும்" என்கின்றார். ஒருவேளை இயேசுவின் போதனையைச் சோதோம் நகரில் இருந்தவர்கள் (தொ நூ 18-19) கேட்டிருந்தால், அவர்கள் மனம்மாறியிருக்கக்கூடும்! ஆனால், இயேசுவின் போதனையைக் கேட்டபொழுதும் கப்பர்நாகும் இருந்தவர்கள் மனம்மாறாததால், அவர்களுக்குச் சோதோமில் இருந்தவர்களுக்குக் கிடைத்த தண்டனையை விட மிகுதியாகக் கிடைக்கும் என்கின்றார்.

முன்னதாக இயேசு, கொராசின், பெத்சாய்தா ஆகிய நகர்களைக் குறித்துப் பேசுகின்றபொழுது, உங்களிடையே செய்யப்பட்ட வல்லசெயல்கள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் மனம்மாறியிருக்கக்கூடும் என்பார். தீர், சீதோன் ஆகிய இரண்டு நகர்களும் பாவம் மலிந்த நகர்களாகக் கருதப்பட்டன (எசா 23; எசே 27-28; ஆமோ 1: 9-10). ஒருவேளை இயேசு இந்த நகர்களில் வல்ல செயல்களைச் செய்திருந்தால் அவர்கள் மனம்மாறியிருக்கக்கூடும்; ஆனால், இயேசு வல்ல செயல்கள் செய்ததைக் கண்டும், அவருடைய போதனையைக் கேட்டும் கொராசின், பெத்சாய்தா நகர்களில் இருந்தவர்கள் மனம்மாறாதால் இயேசு, அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை தீர், சீதோன் ஆகிய நகர்களுக்குக் கிடைக்கும் தண்டனையை மிகக் கடுமையாக இருக்கும் என்கின்றார்.

ஆம், இயேசு செய்த வல்லசெயல்களைக் கண்டு, அவருடைய போதனையைக் கேட்டு மிகுந்த கனிகொடுக்காமல், மனம்மாறாமல் இருந்தால், அதற்கேற்ற தண்டனையைத்தான் பெறுவோம். ஆகையால், நாம் இயேசுவின் போதனையைக் கேட்டு மனம்மாறி, மிகுந்த கனிதரும் மக்களாக வாழ்வோம்.

சிந்தனை

"மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம், மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்" (லூக் 12: 48) என்பார் இயேசு. ஆகையால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கின்ற மிகுதியான ஆசிகளைக் கொண்டு மிகுந்த கனிதருவோம்; மனம்மாறாமல் கனிகொடுக்காமல் இருக்கின்ற வாழ்க்கை கடவுளுக்கு ஏற்றதில்லை என்பதை உணர்ந்து, தொடர்ந்து அவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!