|
|
08 ஜூலை 2020 |
|
பொதுக்காலம்
14ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 10: 1-3, 7-8, 12
இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக் கொடி, அது மிகுதியான கனிகளைத்
தனக்கே தாங்கி நிற்கின்றது; எவ்வளவு மிகுதியாகக் கனிகளைக்
கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாய்ப் பலிபீடங்களை அமைத்தது; எத்தகைய
சிறப்புடன் நாடு செழிப்புற்றதோ, அதற்கு இணையாய்ச் சிலைத் தூண்கள்
சிறப்புப் பெற்றன. இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள், தங்கள்
குற்றத்திற்காகத் தண்டனை பெறுவார்கள்; ஆண்டவர் அவர்களுடைய பலிபீடங்களைத்
தகர்த்திடுவார்; அவர்களுடைய சிலைத் தூண்களை நொறுக்கிடுவார். அப்போது
அவர்கள், "நமக்கு அரசன் இல்லை; ஆண்டவருக்கு நாம் அஞ்சி நடக்கவில்லை;
அரசன் இருந்தாலும், நமக்கு என்ன செய்வான்?" என்பார்கள்.
சமாரியாவின் அரசன் நீர்மேல் குமிழிபோல் அழிந்து போவான். இஸ்ரயேலின்
பாவமாகிய சிலைவழிபாட்டின் உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்;
முள்களும், முட்புதர்களும் அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்;
அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து "எங்களை மூடிக்கொள்ளுங்கள்,"
குன்றுகளைப் பார்த்து "எங்கள்மேல் விழுங்கள்" என்று சொல்வார்கள்.
நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்; அன்பின் கனியை அறுவடை
செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்; ஏனெனில்
ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத்
தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
=================================================================================
திபா 105: 2-3. 4-5. 6-7 . (பல்லவி: 4b)
Mp3
பல்லவி: ஆண்டவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! அல்லது: அல்லேலூயா.
2
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம்
வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
3
அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத்
தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! - பல்லவி
4
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது
நாடுங்கள்!
5
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும்,
அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
- பல்லவி
6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட
யாக்கோபின் பிள்ளைகளே!
7
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம்
அனைத்திற்கும் உரியன. - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மாற் 1: 15
அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம்
மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7
அக்காலத்தில்
இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை
ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது
பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின்
மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு,
தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,
தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த
யூதாசு இஸ்காரியோத்து.
இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக்
கூறியது: "பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின்
நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல்
மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது "விண்ணரசு
நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
ஓசேயா 10: 1-3, 7-8,12
"உங்கள் தரிசு நிலங்களை உழுது
பண்படுத்துங்கள்"
நிகழ்வு
கான்சாஸ் நகரில் அல் ஜான்சன் என்றொரு பிரபல திருடன் இருந்தான்.
இவன் எப்பொழுது, யாருடைய வீட்டில் கையை வைப்பானோ என்று மக்கள்
எல்லாரும் அச்சத்தில் இருந்தார்கள். அந்தளவுக்கு இவன்
கைதேர்ந்த திருடனாக இருந்தான்.
இப்படித் திருடியே பிழைப்பை ஓட்டிவந்த இந்த அல் ஜான்சன்,
திடீரென ஆண்டவர் இயேசுவால் தொடப்பட்டு, மனம்மாறினான். இதைவிடவும்
எல்லாரும் வியந்து பார்க்கக்கூடிய ஒரு செயலைச் செய்தான். அது
என்னவெனில், இவன் தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் ஒரு வங்கியில்
திருடிய பணத்தைத் திரும்பித் தந்தது (Today in the Word,
April, 1989, pg.1)
அல் ஜான்சன் என்ற அந்தப் பிரபல திருடன் ஒருகாலத்தில் தன்னுடைய
உள்ளத்தைத் தரிசு நிலம் போன்று வைத்திருந்தான்; ஆனால், அவன் ஆண்டவர்
இயேசுவால் தொடப்பட்ட பிறகு, தன்னுடைய உள்ளத்தைப் பண்படுத்தத்
தொடகினான். இறைவாக்கினர் ஒசேயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
முதல் வாசகம், இரண்டு மனம் கொண்டவர்களாய் வாழ்ந்து வந்த இஸ்ரயேல்
மக்கள், தரிசு நிலம் போன்று இருந்த தங்களுடைய நிலம் என்னும் உள்ளத்தைப்
பண்படுத்திப் பயன்படுத்தவேண்டும் என்று என்றோர் அழைப்பினைத் தருகின்றது.
அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இருமனம் கொண்டவர்களாய் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள்
"இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று
நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்" (இச 30: 15ff) என்று
ஆண்டவராகிய கடவுள் கூறுவதாக இணைச்சட்ட நூலில் நாம்
வாசிக்கலாம். இங்கு வாழ்வு என்று ஆண்டவர் குறிப்பிடுவது,
அவருடைய கட்டளைக் கடைப்பிடித்து, அவர்மீது அன்புகொண்டு
வாழ்வது; சாவு என்று அவர் குறிப்பிடுவது, அவருக்குக்
கீழ்ப்படியாமல், அவர்மீது அன்புகூராமல் வாழ்வது. ஆண்டவராகிய
கடவுளால், இஸ்ரயேல் மக்கள் வாழ்வு, சாவு என்ற இந்த இரண்டில்
ஏதாவது ஒன்றைத் தேர்ந்துகொள்ள அழைக்கப்பட்டார்கள். ஆனால்,
அவர்கள் "எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் ஊழியம்
புரிவோம். அவரது குரலுக்குக் கீழ்ப்படிவோம்" (யோசு 24: 24)
என்றார்கள். அதே நேரத்தில் பாகால் தெய்வத்தையும்
வழிபட்டார்கள். இப்படி அவர்கள் இரண்டு மனம்கொண்டவர்களாக
இருந்தார்கள என்பது மிகவும் வேதனையான உண்மை.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, "எவரும் இரு தலைவர்களுக்குப்
பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம்
அன்பு கொள்வார்..." (மத் 6: 24) என்பார். இஸ்ரயேல் மக்களோ சில
நேரங்களில் கடவுளுக்கும், சில நேரங்களில் பாகாலுக்கும்
பணிந்துவாழ்ந்தார்கள். இதனால்தான் ஒசேயா இறைவாக்கினர் வழியாக
ஆண்டவர், "இருமனம் கொண்ட மக்களாகியாய அவர்கள், தங்கள்
குற்றத்திற்காகத் தண்டனை பெறுவார்கள்" என்கின்றார்.
மனம் திரும்புவதற்கான கடைசி வாய்ப்பு
இஸ்ரயேல் மக்கள், தாங்கள் செய்த தவற்றுக்குத் தண்டனை பெறுவதாக
ஆண்டவர் சொன்னாலும், அவர்களுக்கு இறுதியாக ஒரு வாய்ப்பினை அவர்
தருகின்றார். அதைத்தான் இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில்
வருகின்ற, "உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்" என்று
வார்த்தைகளில் நாம் வாசிக்கின்றோம்.
இங்குச் சொல்லப்படுகின்ற தரிசு நிலம் என்பது, இஸ்ரயேல் மக்கள்
ஆண்டவராகிய கடவுளை மறைந்து பாகால் தெய்வத்தை வழிபட்டதால்,
தங்களுடைய உள்ளத்தைப் பாழ்படுத்திக்கொண்டதோடு ஒப்பிடலாம்.
இப்படிப் பாகால் தெய்வ வழிபாட்டால் தங்களுடைய உள்ளத்தைப்
பாழ்படுத்திக் கொண்ட இஸ்ரயேல், அதைப் பண்படுத்திக் கடவுளிடம்
திரும்பி வர கடைசியாக ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது; ஆனால்,
அவர்கள் அதைக்கூடச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துபடுங்கள் என்று
இறைவாக்கினர் ஒசேயா சொல்வதை, திருமுழுக்கு யோவான் சொல்கின்ற,
"மனம் மாறுங்கள்; ஏனெனில், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது"
(மத் 3: 1-2) என்ற வார்த்தைகளோடு ஒப்பிடலாம். ஆம், நாம்
ஒவ்வொருவரும் மனம்மாறவேண்டும். அதைத்தான் இறைவன் பல்வேறு
இறைவாக்கினர்கள் வழியாகவும், தன்னுடைய வார்த்தையின் வழியாகவும்
நமக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகின்றார்.
ஆகையால், நாம் நம்முடைய உள்ளம் என்னும் நிலத்தைப் பண்படுத்தி,
அந்த உள்ளத்தில் ஆண்டவரைக் குடியிருக்கச் செய்து, அவருடைய
வழியில் நாளும் நடக்க, முயற்சி செய்து, அவரது அன்பு
மக்களாவோம்.
சிந்தனை
"ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; பாவங்களை விட்டு விலகுங்கள்;
அவர் திருமுன் வேண்டுங்கள்; குற்றங்களைக் குறைத்துக்
கொள்ளுங்கள்" (சீஞா 17: 25) என்கிறது சீராக்கின் ஞானநூல்.
ஆகையால், கடவுள் நாம் மனம்மாறவேண்டும் என்பதற்காக மீண்டும்
மீண்டும் கொடுக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில்
பயன்படுத்திக்கொண்டு, அவரிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 10: 1-7
உபகரணங்களை நீங்கள் தாருங்கள்; வேலையை
நான் செய்து முடிக்கின்றேன்
நிகழ்வு
உலக இரண்டாம்போர் மிகத் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம்
அது. அப்பொழுது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் வின்சென்ட்
சர்ச்சில். இவரிடம் பலர், எதிரிகளிடமிருந்து எப்படியாவது
நாட்டைக் காத்து, போரில் நாட்டிற்கு வெற்றியைப் பெற்றுத்
தாருங்கள்" என்று கேட்டபொழுது, அவர்களிடம் இவர், வீரர்களை
நீங்கள் தந்தால், நாட்டிற்கு வெற்றியை நான் பெற்றுத்தருகிறேன்
என்பதை உணர்த்தும் வகையில், "உபகரணங்களை நீங்கள் தாருங்கள்;
வேலையை நான் செய்து முடிக்கின்றேன்" என்றார்.
ஆம், எதிரிகளிடமிருந்து நாட்டைக் காக்க வீரர்கள் தேவை.
அதுபோன்று நற்செய்தியை அறிவிக்க சீடர்கள் தேவை. இன்றைய
நற்செய்தியில் இயேசு, பன்னிரு திருத்தூதர்களைத்
தேர்ந்தெடுப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். எதற்காக இயேசு
பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்தார் என்பதை இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்
ஏன் பன்னிருவர்?
இயேசு, விண்ணரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கி,
பல்வேறு வல்லசெயல்களையும் அருமடையாளங்களையும் செய்வதைப்
பார்த்துவிட்டுப் பலரும் அவரைப் பின்தொடர்ந்தார். ஒருசிலரை
இயேசு தாமாகவே அழைத்தார். இப்படித் தன்னைப் பின்தொடர்ந்த,
தாமாகவே அழைத்த சீடர்களிடமிருந்து இயேசு பன்னிருவரைத்
திருத்தூதராகத் தேர்ந்தெடுக்கின்றார்.
இயேசு பன்னிருவரைத் திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுத்தது,
இஸ்ரயேலில் இருந்த பன்னிரு குலங்களையும் அடையாளபடுத்தவே என்று
சொல்லலாம் (மத் 19: 28). இந்தப் பன்னிரு என்ற எண்ணானது அல்லது
பன்னிரு திருத்தூதர்கள் என்பவர்கள் தொடர்ந்து
நிலைநாட்டப்பட்டார்கள். எப்படியெனில், இயேசுவைக்
காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து தற்கொலை செய்துகொண்ட
பிறகு, பன்னிருவரில் ஓர் இடம் காலியாகின்றது. இந்த இடத்தை
நிரப்புவதற்காகத் திருத்தூதர்கள், தூய ஆவியாரின்
வழிகாட்டுதலில் மத்தியாவைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் (திப 1:
15-26). இவ்வாறு பன்னிரு என்ற எண்ணானது அல்லது பன்னிரு
திருத்தூதர்கள் தொடர்ந்து நிலைநாட்டப்பட்டார்கள்.
அதிகாரம் அளிக்கும் இயேசு
இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்த உடன், அவர்களை
அப்படியே பணித்தளங்களுக்கு அனுப்பிவிடவில்லை. மாறாக,
அவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றார். எப்படிப்பட்ட அதிகாரம்
எனில், தீய ஆவிகளை ஒட்டவும், நோய் நொடிகளை
நலப்படுத்துவதற்குமான அதிகாரம். தீயஆவிகளும் நோய்நொடிகளும்
இயேசுவின் காலத்தில் இருந்த மக்களை (இன்று உள்ள மக்களையும்)
வருத்துவதாக இருந்தன. அதனால்தான் தீய ஆவிகளை விரட்டவும், நோய்
நொடிகளை நலப்படுத்தவும் இயேசு சீடர்களுக்கு அதிகாரம்
அளிக்கின்றார். இதன்மூலம் இயேசு தன் சீடர்களை ஆற்றல்
நிறைந்தவர்களாக மாற்றுகின்றார்.
வழிதவறிப் போன ஆடுகளிடம் செல்லச் சொல்லும் இயேசு
இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு
அதிகாரம் அளித்து, "பிற இனத்தாரின் எப்பகுதிக்கும்
செல்லவேண்டாம்... வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே
செல்லுகள்" என்று சொல்கின்றார். இயேசு இவ்வாறு சொல்வதன் மூலம்,
அவர் பிற இனத்தவரை ஒதுக்குகின்றாரா? என்ற கேள்வி எழலாம். இயேசு
யாரையும் ஒதுக்குவதில்லை; எல்லா மக்களுக்காகவும்தான் வந்தார்
என்பதை நற்செய்தியில் வருகின்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன (மத்
8: 28-34; யோவா 4). மேலும் கடவுள் எல்லாரும் மீட்புப்
பெறவேண்டும் என்றே விரும்புகின்றார் என்பதையும்
திருவிவிலியத்தின் பல பகுதிகள் எடுத்துக்கூறுகின்றன (தொநூ 12:
3; எசா 25: 6, 56: 3-7; மலா 1: 11; திப 10: 34-35; உரோ 3:
29-30). பின் எதற்காக இயேசு தன்னுடைய சீடர்களிடம்,
"...இஸ்ரயேல் மக்களிடமே சல்லுங்கள்?" என்று சொன்னார் என்று
நமக்குத் தோன்றலாம்.
இயேசு பன்னிருவரிடமும் இப்படிச் சொன்னதற்கு முக்கியமான காரணம்,
இது குறுகிய காலத்தில் செய்யப்பட வேண்டிய நற்செய்திப் பணி
என்பதால்தான். இதைப் புனித பவுல், "முதலில் யூதருக்கு..." (உரோ
1: 16) என்று கூறுவார். ஆம். காலம் குறுகியது என்பதால்,
முதலில் யூதருக்கு நற்செய்தி அறிவிக்கச் சொல்கின்றார் இயேசு.
ஆனால், எல்லாருக்கும் நற்செய்தி அறிவிப்பது நீண்ட காலப்பணி
என்பதால், அவர் தான் விண்ணேற்றம் அடைகின்றபொழுது, தன்னுடைய
சீடர்களிடம், "எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" (மத்
28: 19) என்கின்றார்.
ஆகையால், காலத்தைக் கணக்கிட்டே இயேசு இப்படிச் சொன்னார் என்பதை
நாம் புரிந்துகொண்டு, அவருடைய பணியை நாமும் செய்வதற்கு
முன்வருவோம். எல்லாரும் அவருடைய நற்செய்தியை அறிய நாம் ஒரு
கருவியாய் இருந்து செயல்படுவோம்.
சிந்தனை
"நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத்
தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி
நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்" (யோவா 15: 16)
என்பார் இயேசு. ஆகவே, நாம் கனிதரவும், அவருடைய நற்செய்தியை
எல்லாருக்கும் அறிவிக்கவும் தேர்ந்தெடுத்திருக்கும்
இயேசுவுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து, அவருடைய
நற்செய்திப் பணியைச் சிறப்பாகச் செய்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|