|
|
06 ஜூலை 2020 |
|
பொதுக்காலம்
14ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மணஒப்பந்தம்
செய்துகொள்வேன்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 2: 14-16, 19-20
ஆண்டவர் கூறுவது:
"நான் இஸ்ரயேலை நயமாகக் கவர்ந்திழுப்பேன்; பாலைநிலத்துக்கு அவளைக்
கூட்டிப்போவேன்; நெஞ்சுருக அவளுடன் பேசுவேன். அவளுடைய
திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்; ஆக்கோர்
பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்; அப்போது அவள்
அங்கே தன் இளமையின் நாள்களிலும், எகிப்து நாட்டினின்று
வெளியேறிய காலத்திலும் பாடியது போல் பாடுவாள்.
அந்நாளில், "என் கணவன்" என என்னை அவள் அழைப்பாள்; "என் பாகாலே"
என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்" என்கிறார் ஆண்டவர்.
"இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம்
செய்துகொள்வேன்; நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு
மணஒப்பந்தம் செய்துகொள்வேன். மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம்
செய்துகொள்வேன்; ஆண்டவராம் என்னை நீயும் அறிந்து கொள்வாய்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 145: 2-3. 4-5. 6-7. 8-9 . (பல்லவி: 8a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.
2
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும்
புகழ்வேன்.
3
ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது
மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. - பல்லவி
4
ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;
வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.
5
உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும்
நான் சிந்திப்பேன். - பல்லவி
6
அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்;
உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்.
7
அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது
நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். - பல்லவி
8
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்;
பேரன்பு கொண்டவர்.
9
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்
இரக்கம் காட்டுபவர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
2 திமொ 1: 10b
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து,
அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள்
மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத்
தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, "என் மகள் இப்பொழுதுதான்
இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள்
உடனே உயிர் பெறுவாள்" என்றார். இயேசு எழுந்து அவர் பின்னே
சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர்.
அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு
பெண் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத்
தொட்டார். ஏனெனில் அப்பெண், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே
போதும், நலம் பெறுவேன்" எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார்.
இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, "மகளே, துணிவோடிரு; உனது
நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" என்றார். அந்நேரத்திலிருந்தே
அப்பெண் நலம் அடைந்திருந்தார்.
இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல்
ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். அவர்,
"விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார்.
அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். அக்கூட்டத்தினரை
வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப்
பிடித்தார். அவளும் உயிர் பெற்று எழுந்தாள். இச்செய்தி
அந்நாடெங்கும் பரவியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
ஒசேயா 2: 14-16, 19-20
"அன்பாய் இருக்கும் ஆண்டவரை அறிவோம், அன்புசெய்வோம்"
நிகழ்வு
ஒருமுறை திருத்தந்தை பிரான்சிசிடம் வந்த சிறுவன் ஒருவன்,
"தந்தையே! கடவுள் இந்த உலகைப் படைக்கும் முன்பு என்ன
செய்துகொண்டிருந்தார்?" என்றான். அந்தச் சிறுவனிடமிருந்து
இப்படியொரு கேள்வியை எதிர்பார்த்திராத திருத்தந்தை அவனிடம்,
"கடவுள் இந்த உலகத்தைப் படைக்கும்முன்பு அன்பு
செய்துகொண்டிருந்தார். ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கின்றார்"
என்றார்.
பின்னர் அவர் அந்தச் சிறுவன் புரிந்துகொள்ளும் விதமாக விளக்கத்
தொடங்கினார்: "கடவுள் இந்த உலகத்தைப் படைக்கும் முன்பு ஒன்றுமே
செய்யவில்லை என்று சொல்லிவிடமுடியாது. அது தவறு. மேலும் கடவுள்
இந்த உலகைப் படைப்பதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தார்
என்று நீ கேட்ட கேள்வியிலேயே அதற்கான பதில் இருக்கிறது. ஆம்.
மனிதர்களுக்குத்தான் முன்பு, பின்பு எல்லாம்! கடவுளுக்கு
அப்படிக் கிடையாது. காரணம், காலங்களைப் படைத்தவர் அவர். அதனால்
கடவுள் இந்த உலகைப் படைப்பதற்கு முன்பு
அன்புசெய்துகொண்டிருந்தார். அந்த அன்பின் வெளிப்பாடுதான் இந்த
உலகு."
ஆம், கடவுள் அன்பாய் இருக்கின்றார். அந்த அன்பால்தான் நம்
ஒவ்வொரையும் ஆண்டுகொண்டிருக்கின்றார். இறைவாக்கினர் ஒசேயா
நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல்
மக்கள் கடவுளின் அன்பை உதறிச் சென்றாலும், அவர்கள்மீது அவர்
அன்புகொண்டிருப்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இஸ்ரயேலை நமயமாகக் கவிர்ந்திழுப்பேன்
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது தனிப்பட்ட
அன்புகொண்டிருந்தார். அதற்குக் காரணம், அவர்கள் திரளானவர்கள்
என்பதால் அல்ல, எல்லா மக்களிலும் அவர்கள் சொற்பமானவர்கள்
என்பதலாலேயே (இச 7:7) இப்படி இறைவன் இஸ்ரயேல் மக்கள்மீது
தனிப்பட்ட அன்புகொண்டு, அவர்களுக்குப் பாலும் தேனும் பொழியும்
கானான் நாட்டை வழங்கினாலும், அவர்கள் அதையெல்லாம் மறந்து, பிற
தெய்வத்தை வழிபட்டார்கள். இவ்வாறு இருப்பவர்களைத் தன் பக்கம்
கவிர்ந்திழுப்பதாக ஆண்டவராகிய கடவுள் கூறுகின்றார்.
இங்கு இடம்பெறுகின்ற "கவிர்ந்திழுத்தல்" என்ற சொல் மிகவும்
கவனிக்கத்தக்கது. ஆண்டவராகிய கடவுள், மக்கள் தன்னை அன்பு
செய்யவேண்டும்... தனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்று
ஒருபொழுதும் வற்புறுத்துவதில்லை. மாறாக, அவர் அவர்களுக்குத்
தன்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து, தன்னை அன்பு
செய்வதற்கும், தன்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், தன்னை
அன்பு செய்யாமல் போவதற்கும் சுதந்திரம் தந்திருக்கின்றார்.
இப்படிச் சுதந்திரம் தரப்பட்ட மக்களை நயமாகக் கவர்ந்திழுப்பேன்
என்றுதான் இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் கூறுகின்றார்.
அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவருக்குத் திரும்பக்
கொடுப்பேன்
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த சுதந்திரத்தை
அவர்கள் சரியாகப் படுத்தவில்லை. அவர்கள் உண்மைக் கடவுளை
மறந்து, பாகால் தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள். இதனால்
வடநாட்டில் இருந்தவர்கள் அசீரியர்களாலும், தென்னாட்டில்
இருந்தவர்கள் பாபிலோனியர்களாலும் நாடுகடத்தப்பட்டார்கள். பிறகு
அவர்கள் சொந்த நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டார்கள். இப்படிச்
சொந்த நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மக்களுக்குத்தான்
திராட்சைத் தோட்டங்களைத் திரும்பக் கொடுப்பேன் என்கின்றார்
ஆண்டவர். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குத் திராட்சைத்
தோட்டங்களைத் திரும்பக் கொடுப்பேன் என்று சொல்வது, அவர்
அவர்களுக்கு வளமான வாழ்வினைத் தரப்போகிறார் (எசா 65: 10)
என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.
முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம்
செய்துகொள்வேன்
இன்றைய முதல் வாசகத்தின் வழியாக ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேல்
மக்களிடம் சொல்லக்கூடிய முக்கியமான வார்த்தைகள், "முடிவில்லாக்
காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்"
என்பதாகும். இறைவாக்கினர் ஒசேயா நூல் முழுமைக்கும்,
கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் உள்ள உறவு, ஒரு
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவைப் போன்று
சுட்டிக்காட்டப்படுகின்றது. கடவுள் இஸ்ரயேல் மக்களை மிகுதியாக
அன்பு செய்தாலும், அவர்கள் கடவுளுக்கு உண்மையில்லாமல், பிற
தெய்வத்தை வழிபட்டு வந்தார்கள். இதனால்தான் கடவுள், முடிவில்லா
காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்;
அதனால் ஆண்டவராம் என்னை நீயும் அறிந்து கொள்வாய் என்று
அவர்களைப் பார்த்துக் கூறுகின்றார்.
ஆண்டவர் அன்பாய் இருக்கின்றார். அந்த அன்பின் கடவுளை
அறிந்துகொள்வதும், அதன்மூலம் நாம் அவரை அன்புசெய்வதும்தான்
கடவுள் நம்மோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் மையமாக
இருக்கின்றது. ஆகையால், நாம் அன்பாய் இருக்கும் கடவுளை ஆழமாய்
அறிந்துகொண்டு, அவர்மீது அன்புகொண்டு அவருடைய கட்டளைகளைக்
கடைப்பிடித்து வாழ முற்படுவோம். அதன்மூலம், அவரது அன்பு
மக்களாவோம்.
சிந்தனை
"நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள். அவரது
அன்பிற்குரிய இறைமக்கள்" (கொலோ 3:12) என்பார் பவுல். ஆகையால்,
கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டு, அவரது அன்புக்குரிய மக்களாக
இருக்கின்ற நாம், அவர்மீது மிகுந்த அன்பு, அவருடைய கட்டளைகளைக்
கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 9: 18 -26
"நம்புங்கள்; நல்லதே நடக்கும்"
நிகழ்வு
பத்தடி உயரள்ள ஒரு சுவற்றில் இரண்டு ஐந்து வயதுச் சிறுவர்கள்
ஓடிப்பிடித்து விளையாண்டு கொண்டிருந்தார்கள். கவலையை மறந்து
மிகவும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த அவர்கள் இருவரும்,
அந்தச் சுவர் லேசாக ஆடுவதுபோல் தெரிந்ததும், "காப்பாற்றுங்கள்;
காப்பாற்றுங்கள்" என்று அலறத் தொடங்கினார்கள்.
இவர்கள் போட்ட சத்தத்தைக் கேட்டு, அங்கு ஒருவர் ஓடிவந்தார்.
அவர் அந்த இரண்டு சிறுவர்களிடமும் "கீழே குதியுங்கள்; நான்
உங்களைப் பத்திரமாகப் பிடித்துக் கொள்கின்றேன்" என்றார். அவர்
சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஒரு சிறுவன் உடனே
குதித்தான். இன்னொரு சிறுவனோ, "கீழே குதித்தால் ஏதாவது
ஆகிவிடுமோ" என்ற அச்சத்தில் இன்னும் மிகுதியாக அலறத்
தொடங்கினான். இதனால் வந்தவர், அவன் இருந்த சுவற்றின்மீது மீது
அவனைக் காப்பாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிகழ்வில் வருகின்ற இரண்டு சிறுவர்களில் முதல் சிறுவன்,
உதவிக்கு வந்தவரை முழுமையாக நம்பினான். அதனால் அவன்
பதற்றமில்லாமல் கீழே குதித்தான்; பத்திரமாகத் தரைக்கு வந்தான்.
இரண்டாவது சிறுவனோ, உதவிக்கு வந்தவரை நம்பவே இல்லை. அதனால்
அவன் கடைசிவரைக்கும் பதற்றத்தோடு இருந்தான். ஆம். நம்முடைய
வாழ்வில் நம்பிக்கையோடு இருந்தால், எதைக்கண்டும் பதற்றமடையத்
தேவையில்லை. மாறாக இறைவனுடைய ஆசியை அபரிவிதமாய்ப்
பெற்றுக்கொள்ளலாம்.
இன்றைய நற்செய்தியில், ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கையினால்
இருவர் நலவாழ்வு பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைப்
பற்றி இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின்மீது நம்பிக்கைகொண்ட தொழுகைக்கூடத் தலைவர்
இயேசு தன்னுடைய சீடர்களோடு பேசிக்கொண்டிருக்கின்றார்;
அப்பொழுது அங்கு வருகின்ற தொழுகைக்கூடத்தலைவர் (யாயிர் என்று
மாற்கு (5: 22) மற்றும் லூக்கா (8: 41) நற்செய்தியாளர்கள்
கூறுகின்றார்கள்), "என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும்
நீர் வந்து அவள்மீது உம் கையை வையும், அவள் உடனே உயிர்
பெறுவாள்" என்கின்றார். யாயிர் பேசிய இந்த நம்பிக்கை மிகுதியான
வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர்,
இந்த யாயிர் யூதசமூகத்தில் எந்த நிலையில் இருந்தார் என்பதை
நாம் தெரிந்துகொள்வோம்.
யூத சமூகத்தில் தொழுகைக்கூடத்தலைவர் என்பது ஒரு முக்கியமான
பொறுப்பு. ஏனெனில், அவர்தான் வழிபாட்டிற்கு ஏற்பாடு
செய்யவேண்டும்; திருநூலின் ஏடுகளைப் பாதுகாக்கவேண்டும்;
திருமறையைப் பற்றி வகுப்பெடுக்க வேண்டும்; திருச்சட்டங்களுக்கு
உண்மையான இருக்கவேண்டும். இப்படிப் பல்வேறு பொறுப்புகள்
அவருக்கு இருந்தன. இதனால் அவருக்குச் சமூகத்தில் தனிப்பட்ட
மதிப்பு இருந்தது. இப்படிப்பட்ட மனிதர் இயேசுவிடம்
நம்பிக்கையோடு வந்து, பணிகின்றார். இது தொழுகைக்கூடத்
தலைவருடைய நம்பிக்கையை மட்டுமல்லாமல், தாழ்ச்சியையும்
காட்டுகின்றது. இவ்வாறு யாயிர் நம்பிக்கையோடும் தாழ்ச்சியோடும்
இருந்ததால், இயேசு அவருடைய வீட்டிற்குச் சென்று, இறந்துபோன
ஒருவரைத் தொட்டால் தீட்டு என்று இருந்தாலும், அவருடைய மகளைத்
தொடுகின்றார். இதனால் அவள் உயிர்பெற்று எழுகின்றாள்.
ஆம், யாயிரின் நம்பிக்கையும் தாழ்ச்சியும் அவருடைய மகள்
உயிர்பெற்று எழக் காரணமாக இருக்கின்றன.
இயேசுவின்மீது நம்பிக்கை கொண்ட இரத்தப்போக்கினால்
பாதிக்கப்பட்ட பெண்மணி
இயேசு யாயிரின் வீட்டிற்குச் செல்கின்ற வழியில் இன்னொருவரைச்
சந்திக்கின்றார். அவர்தான் பன்னிரண்டு ஆண்டுகளாக
இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி. இவர் தன்னிடம்
இருந்த நோயிலிருந்து நலம்பெற, தான் வைத்திருந்த எல்லாவற்றையும்
செலவழித்திருந்தபோதும்கூட நலம்பெறவில்லை (மாற் 5: 26). இந்த
நிலையில்தான் இவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, "நான்
அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்" என்று
தனக்குள் நினைத்துக்கொண்டு, நம்பிக்கையோடு இயேசுவின் ஆடையைத்
தொடுகின்றார்.
இந்தப் பெண்மணி இவ்வாறு நினைத்துக்கொண்டு தொடுவதற்கும் ஒரு
காரணம் இருந்தது. அது என்னவெனில், ஒரு பெண்ணுக்கு
உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு
நாள்களைப் போல் தீட்டானவை" (லேவி 15: 25ff) என்று மோசேயின்
சட்டம் சொன்னத்து. இதனால் "தீட்டுள்ள" தான் இயேசுவைத்
தொட்டால், அவரும் தீட்டாகிவிடுவார் என்ற அச்சத்தில், இவர்
அவரைத் தொடாமல், அவருடைய ஆடையைத் தொடுக்கின்றார். அந்தப்
பெண்மணி தொட்டதால், தன்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்த
இயேசு அவரிடம், "உன்னுடைய நம்பிக்கை உன்னை நலப்படுத்தியது"
என்கின்றார். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தத்போக்கினால்
பாதிக்கப்பட்ட பெண்மணி நலம் பெறுகின்றார்.
நாமும்கூட இயேசுவிடமிருந்து நலம்பெறவும் நன்மைகளைப் பெறவும்,
அவரிடம் நம்பிக்கைகொண்டு வாழ்வது மிகவும் இன்றியமையாதது. நாம்
இயேசுவிடம் யாயிரைப் போன்று, இரத்தப்போக்கினால்
பாதிக்கப்பட்டு, நலம்பெற்ற பெண்மனியைப் போன்று நம்பிக்கை
கொண்டிருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில்
படும்; முட்கள் இல்லை" என்பார் டிக்கன்ஸ் என்ற அறிஞர்.
ஆகையால், நாம் ஆண்டவரிடம் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டு
வாழ்வோம். அதன்மூலம் நல்லது நடக்கச் செய்வோம்; இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|