|
|
01 ஜூலை 2020 |
|
பொதுக்காலம்
13ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 5: 14-15, 21-24
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது நீங்கள்
சொல்வது போல படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.
தீமையை வெறுத்து நன்மையை நாடுங்கள்; நகர் வாயிலில் நீதியை
நிலைநாட்டுங்கள்; அப்பொழுது ஒருவேளை படைகளின் கடவுளாகிய ஆண்டவர்
யோசேப்பின் வீட்டாரில் எஞ்சியிருப்போர்க்கு இரக்கம்
காட்டுவார்.
"உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்; உங்கள்
வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை. எரிபலிகளையும்
தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க
மாட்டேன்; கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும்
போது நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன். என் முன்னிலையில்
நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள், உங்கள்
வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன். மாறாக, நீதி வெள்ளமெனப்
பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 50: 7. 8-9. 10-11. 12-13. 16bc-17 . (பல்லவி: 23b)
Mp3
=================================================================================
பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும்
மீட்பைக் கண்டடைவர்.
7
என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுகின்றேன்; இஸ்ரயேலே! உனக்கு
எதிராய்ச் சான்றுகூறப் போகின்றேன்; கடவுளாகிய நானே உன் இறைவன்.
- பல்லவி
8
நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை;
உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
9
உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக் கிடாய்களையோ
நான் ஏற்றுக்கொள்வதில்லை. - பல்லவி
10
ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்; ஓராயிரம்
குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை.
11
குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்; சமவெளியில் நடமாடும்
யாவும் என்னுடையவை. - பல்லவி
12
எனக்குப் பசியெடுத்தால் நான் உங்களைக் கேட்கப் போவதில்லை; ஏனெனில்,
உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே.
13
எருதுகளின் இறைச்சியை நான் உண்பேனோ? ஆட்டுக் கிடாய்களின்
குருதியைக் குடிப்பேனோ? - பல்லவி
16bc
என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை
பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17
நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத்
தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யாக் 1: 18
அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி
உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர்
விரும்பினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
குறித்த காலம் வருமுன்னே, எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 28-34
அக்காலத்தில்
இயேசு கலிலேயாவின் மறு கரையை அடைந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு
வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு
எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு
அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள். அவர்கள்,
"இறைமகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வருமுன்னே எங்களை
வதைக்கவா இங்கே வந்தீர்?" என்று கத்தினார்கள்.
அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய்
மேய்ந்துகொண்டிருந்தன. பேய்கள் அவரிடம், "நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால்
அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்" என்று வேண்டின.
அவர் அவற்றிடம், "போங்கள்" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள்
புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப்
பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.
பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள்
நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும்,
நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள். உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு
எதிர் கொண்டு வந்து, அவரைக் கண்டு, தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு
வேண்டிக்கொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
ஆமோஸ் 5: 14-15, 21-24
"நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக"
நிகழ்வு
ஒரு சாதாரண ஆடுமேய்ப்பவராக இருந்து, தன்னுடைய "நேர்மையால்" பல
கோடிகளுக்கு அதிபதியான யூசுப்பைப் பற்றி உங்களுக்குத் தெரியமா?
சொல்கிறேன் கேளுங்கள்.
சூடான் நாட்டைச் சார்ந்த ஒரு பரம ஏழைதான் யூசுப். இவர்
தன்னுடைய சொந்த நாட்டில் பிழைப்பதற்கு வழியில்லாமல், அரபு
நாட்டிற்கு வேலை தேடிச் சென்றார். அங்கிருந்த ஒரு வணிகர்
இவரைத் தன்னுடைய ஆடுகளை மேய்க்கக் கேட்டுக்கொண்டதால், இவர்
அவருடைய ஆடுகளை மேய்த்து வந்தார். ஒருநாள் இவர் ஒரு
புல்வெளியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும்பொழுது, அங்குள்ள
"காட்டரபி" இனத்தைச் சார்ந்த மக்கள் சிலர் இவருக்கு முன்பாக
வண்டியில் வந்து இறங்கி, இவரிடம், "இருநூறு ரியால்
தருகின்றோம். ஓர் ஆடு தரமுடியுமா?" என்றார். அதற்கு யூசுப்
அவர்களிடம், "ஐயா! இந்த ஆடுகள் என்னுடையவை அல்ல; என்னுடைய
முதலாளியினுடையவை. மேலும் ஓர் ஆட்டின் விலை எப்படியும் ஆயிரம்
ரியால் வரும். இத்தகைய காரணங்களால், ஆட்டினை உங்களுக்குத்
தருவதாக இல்லை" என்று உறுதியாகச் சொன்னார்.
வந்தவர்கள் விடவில்லை. "இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள்
இருக்கின்றன. இவற்றிலிருந்து ஓர் ஆட்டினை எங்களுக்குத் தந்தால்
உன்னுடைய முதலாளிக்கு என்ன தெரியவா போகிறது...? மேலும் நாங்கள்
கொடுக்கக்கூடிய இந்த இருநூறு ரியாலைச் சம்பாதிக்க உனக்கு
எப்படியும் பல நாள்கள் ஆகும். அதனால் இந்தப் பணத்தை
வாங்கிக்கொண்டு, ஓர் ஆட்டினை எங்களுக்குத் தந்துவிடு"
என்றார்கள் அவர்கள். அப்பொழுது யூசுப் அவர்களிடம், "நீங்கள்
கொடுக்கும் இந்த இருநூறு ரியாலைச் சம்பாதிப்பதற்கு எனக்குப் பல
நாள்கள் ஆகும்தான். இந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு இங்குள்ள
ஆடுகளில் ஒன்றைத் தந்தால் என்னுடைய முதலாளிக்குத்
தெரியாதுதான்!; ஆனால், மேலே இருக்கின்ற இறைவனுக்குத் தெரியும்.
அதனால் எக்காரணத்தைக் கொண்டும் உங்களுக்கு ஆடு தரமாட்டேன்"
என்றார்.
யூசுப்பும் காட்டரபி இனத்தைச் சார்ந்த மக்கள் சிலரும் இப்படிப்
பேசிக்கொண்டிருந்ததைத் தற்செயலாக அங்கு வந்த அரேபியர் ஒருவர்
தன்னுடைய அதிநவீன அலைபேசியில் காணொளியாகப் பதிவுசெய்து,
தன்னுடைய நண்பர்களுக்கெல்லாம் பகிர்ந்தார். அவருடைய நண்பர்கள்
முகநூல், புலனம் (Whatsapp) போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர,
இந்தக் காணொளி இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்தது.
கடைசியில் இது சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகத்திற்கும்
சென்று சேர்ந்தது. இதைப் பார்த்துவிட்டு, அவர்கள் இதை அரசுத்
தலைவருக்குக் கொண்டு செல்ல, அவர், "நேர்மைக்கும்
இறையச்சத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இப்படியொரு
மனிதரை இந்த நாடு இதுவரை கண்டதில்லை இவருக்கு அரசாங்கம் ஒரு
இலட்சம் ரியால் பரிசளிக்கின்றது" என்றார்
இச்செய்தி, யூசுப்பின் சொந்த நாடான சூடான் நாட்டுத்
தலைவருக்குத் தெரியவந்தது. அவர், "யூசுப்புக்கு எங்களுடைய
நாட்டிலேயே வேலை தருகின்றோம்... இப்படிப்பட்ட நேர்மையான
மனிதரைப எங்களுடைய நாடு பெற்றிருப்பது, எங்களுடைய நாட்டிற்குக்
கிடைத்த மிகப்பெரிய பேறு" என்று சொல்லி அவரை அழைத்து, சில
கோடிகளைப் பரிசாக அளித்துச் சிறப்பித்தார். இப்படித்தான்
யூசுப் ஒரு சாதாரண ஆடு மேய்க்கும் மனிதராக இருந்து, பெரிய
கோடிஸ்வரர் ஆனார்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மையைக் கடைப்பிடித்து
வாழவேண்டும். அப்படி நாம் வாழ்ந்தோமெனில், அதற்கேற்ற கைம்மாறு
கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூடுகின்றது.
இன்றைய முதல்வாசகத்தில் ஆமோஸ் இறைவாக்கினர், "...நேர்மை வற்றாத
ஆறாகப் பாய்ந்து வருக!" என்கின்றார். அவர் சொல்லக்கூடிய
இவ்வார்த்தைகள் நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றன
என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நேர்மை என்னும் நன்மை வற்றாத ஆறாகப் பாயவேண்டும்.
தென்னாட்டிலிருந்து வடநாட்டிற்கு ஆடு மேய்க்கச் சென்ற "சமூக
நீதி இறைவாக்கினரான" ஆமோஸ், அங்கிருந்த பணக்காரர்கள், சாதாரண
மக்களை ஒடுக்கியும், போலியாகக் கடவுளுக்கு வழிபாடு
செய்துவந்ததையும் கண்டார். இதனால் அவர், "நீதி வெள்ளமெனப்
பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!" என்றார்.
நேர்மை வற்றாத ஆறாகப் பாயவேண்டும் என்றால், மக்கள் தங்களிடம்
இருக்கின்ற போலித்தனத்தை அப்புறப்படுத்திவிட்டு, கடவுள்மீது
ஆழமான நம்பிக்கை வைத்து, அவருடைய மக்கள்மீது இரக்கம்
காட்டவேண்டும். இவற்றைச் செய்யாமல், நேர்மை வற்றாத ஆறாகப்
பாயாது. இதை ஆமோஸ் இறைவாக்கினரின் வேறு வார்த்தைகளில்
சொல்லவேண்டும் என்றால், தீமையைத் தேடாமல், நன்மையைத்
தேடவேண்டும். அப்பொழுது நேர்மை வற்றாத ஆறாகப் பாயும்; கடவுளின்
உடனிருப்பும் இருக்கும். இதைத்தான் ஆமோஸ் இறைவாக்கினர்
மக்களிடம் எடுத்துரைக்கின்றார்.
திருப்பாடல் ஆசிரியர் இவ்வாறு கூறுவார்: "தீமையை
வெறுப்போர்மீது ஆண்டவர் அன்புகூர்கின்றார்" (திபா 97: 10).
ஆகையால், ஆண்டவர் நம்மீது அன்புகூரவும், நேர்மை வற்றாத ஆறாகப்
பாயமும், நாம் தீமையைத் தேடாமல், நன்மையான நேர்மையையும்
நீதியையும் தேடுகின்ற மகளாக நாம் இருக்கவேண்டும்.
சிந்தனை
"கடவுள் படைப்பில் நேர்மையான மனிதனே தலைசிறந்தவன்" என்பார்
போப் என்ற அறிஞர். ஆகையால், நாம் இறைவாக்கினர் ஆமோஸ்
கூறுவதுபோல நேர்மையோடு வாழக் கற்றுக்கொள்வோம். நேர்மையை வற்றாத
ஆறாகப் பாயச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 8: 28-34
புதுவாழ்வு தரும் இயேசு
நிகழ்வு
ஜப்பானில் ஷோய்ச்சி யோகோய் (Shoichi Yokoi) என்றோர் இராணுவ வீரர்
இருந்தார். இவர் 1944 ஆம் ஆண்டு, தன்னுடைய நாட்டின்மீது பெரிய
போர் வரப்போகிறது என்பது தெரிந்ததும், உயிருக்குப் பயந்து மலைக்குத்
தப்பியோடி, அங்கிருந்த ஒரு குகையில் வாழத் தொடங்கினார். இவர்
தனக்குப் பசியெடுத்தபொழுது, இயற்கையாகக் கிடைத்தப் பழங்கள், பச்சைக்
காய்க்கறிகள் ஆகியவற்றைப் பறித்துச் சாப்பிட்டு வந்தார். சில
நேரங்களில் அவை கிடைக்காதபொழுது, தவளைகள், நத்தைகள், எலிகள் ஆகியவற்றைப்
பிடித்துச் சாப்பிட்டு வந்தார். இரவு நேரங்களில் மட்டும் இவர்
வெளியே வருவார். இப்படியே இவர் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.
இதற்கு நடுவில் வெளியே கிடந்த ஆயுதங்கள், குண்டுவெடிப்பினால்
ஏற்பட்ட சேதங்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு போர் முடிவுக்கு
வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டார். ஆனால், ஊருக்குள்
போனால் இராணுவத்திடம் மாட்டிக்கொள்ளும், அதனால் பேசாமல் இங்கேயே
இருப்போம் என்று குகைக்குள்ளே வாழ்ந்து வந்தார்.
ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் இரவு வேளையில் இவர் வழக்கம்போல்,
தான் இருந்த குகையை விட்டு வெளியே வந்து, சாப்பிடுவதற்கு ஏதாவது
கிடைக்குமா என்று தேடியலைந்தார். அப்பொழுது தற்செயலாக அங்குவந்த
இரண்டு வேடர்கள், குகையில் வாழ்ந்து வந்த இந்த இராணுவ வீரரைக்
கண்டார்கள். இவர் பார்ப்பதற்கு ஒரு காட்டுவாசியைப் போல் இருப்பதைக்
கண்டு, அவர்கள் இவரிடம், "நீங்கள் யார்...? உங்களுக்கு என்ன ஆயிற்று...?
நீங்கள் ஏன் இப்படி ஒரு காட்டுவாசியைப் போன்று அலைந்துகொண்டிருக்கின்றீர்கள்...?"
என்று கேட்டார்கள். அதற்கு அந்த இராணுவ வீரர், நடந்த
அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவர்களிடம் சொல்லி முடித்தார்.
உடனே அந்த இரண்டு வேடர்களில் ஒருவர், "போர் முடிந்து பல
ஆண்டுகள் ஆகிவிட்டன...! நீங்கள் இராணுவத்திலிருந்து ஓடிவந்ததை
அவர்கள் இன்னுமா நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள்?" என்று
சொல்லி, அவரை ஊருக்குள் அழைத்து வந்து, அவரைப் புதிய மனிதராக
வாழ வழி வகுத்தார்கள்.
ஆம். உயிருக்குப் பயந்து, மலைக்குத் தப்பியோடி ஒரு
காட்டுவாசியைப் போன்று வாழ்ந்து வந்த அந்த இராணுவ வீரருக்கு
எப்படி அந்த இரண்டு வேடர்கள் புது வாழ்வினைத் தந்தார்களோ,
அப்படிப் பேய்பிடித்து, விலங்குகளைப் போன்று வாழ்ந்து வந்த
இருவருக்கு இயேசு புதுவாழ்வு தருகின்றார். இயேசு அந்த
இருவருக்கும் தந்த புதுவாழ்வு எத்தகையது என்பதைக் குறித்து
இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கதரேனர் பகுதிக்கு வந்த இயேசு
நற்செய்தியில் இயேசு கலிலேயாவின் மறுகரையை அடைந்து, கதரேனர்
வாழ்ந்து வந்த பகுதிக்கு வருகின்றார். இப்பகுதியானது கலிலேயாக்
கடற்கரையின் தென்புறமாக இருக்கின்றது. மேலும் இந்தப் பகுதி
அல்லது இந்த நகர் தெக்கப்பொலி எனப்படும், பத்து நகர்களில்
ஒன்றாக இருந்தது. பிற இனத்து மக்கள் மிகுதியாக வாழ்ந்து வந்த
இந்தப் பகுதிக்கென்று தனிப்பட்ட கட்டுப்பாடும்
சட்டதிட்டங்களும் அதிகாரமும் இருந்தன. இப்படிப்பட்ட பகுதிக்கு
இயேசு வருகின்றபொழுது, பேய் பிடித்திருந்த இருவர்
கல்லறையிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தார்கள். இவர்கள்
இருவரும் கொடியவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் இயேசுவை
நோக்கி, "இறைமகனே! குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா
இங்ககே வந்தீர்?" என்று சொல்கின்றபொழுது, இயேசு
அவர்களிடமிருந்த தீய ஆவியை அங்கு மேய்ந்துகொண்டிருந்த
பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பி சாகடிக்கின்றார்.
இங்குப் பேய்பிடித்திருந்த இருவருக்குள் இருந்த தீய ஆவி,
"குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா வந்தீர்" என்று
இயேசுவிடம் சொல்கின்ற வார்த்தைகளைப் பற்றி நாம் சிந்தித்துப்
பார்க்கவேண்டும். குறித்த காலம் என்பது தீய ஆவிகள் கந்தக,
நெருப்பு ஏரியில் எரிக்கப்படும் காலத்தைக் குறிக்கின்றது (திவெ
20: 10) இயேசு அதற்கு முன்னேயே அவைகளை வதைக்க வந்ததால்தான் அவை
அப்படிச் சொல்கின்றன.
பேய்பிடித்தவர்களுக்குப் புதுவாழ்வு தந்த இயேசு
தீய ஆவிகள் இயேசுவிடம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவர் அவைகளைப்
பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்ப, அவை செத்து மடிந்ததைப்
பார்த்த, பன்றிகளின் உரிமையாளர்கள், இயேசுவை தங்களுடைய
பகுதியிலிருந்து அகலுமாறு சொல்கின்றார். இதன்பிறகு இயேசு
அப்பகுதிக்குச் சென்றதாக நமக்குச் சொல்லவில்லை.
இங்கு நாம் ஒன்றைக் கவனிக்கவேண்டும். தீய ஆவி
பிடித்திருந்தவர்கள் இயேசுவால் புதுமனிதர்களாக
மாறியிருந்தார்கள். அதைக் கண்டு பன்றிகளின் உரிமையாளர்கள்
மகிழவில்லை. மாறாக, தங்களுடைய பன்றிகள் போய்விட்டனவே என்றுதான்
வருந்துகின்றார்கள். நாமும்கூட பல நேரங்களில், மனிதர்களுக்குக்
கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை மனிதர்களுக்குக் கொடுக்காமல்,
பொருளுக்கும் பணத்திற்கும், இன்ன பிறவற்றிற்கும் கொடுத்து
வாழ்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் இயேசுவைப் போன்று
மனித்ரகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ
அழைக்கப்படுகின்றோம்.
சிந்தனை
"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு
நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (மத் 25: 40)
என்பார் இயேசு. ஆகவே, நாம் மனிதருக்குச் செய்யும் உதவிகள்
யாவும், இறைவனுக்குச் செய்யப்படக்கூடியவை என்ற உண்மையை
உணர்ந்து, சக மனிதர்களை மனிதர்களாக மதிக்கக் கற்றுகொண்டு
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|