|
|
28 ஜூன் 2020 |
|
|
பொதுக்காலம் 13 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று
நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11
அந்நாள்களில்
ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக்
கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால்
கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து
பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில்
நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல்
செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான்.
பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை
விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில்
வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக
வேண்டியது.
ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர்
இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத்
தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக்
காவல் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது.
அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, "உடனே எழுந்திடும்" என்று கூற,
சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.
வானதூதர் அவரிடம், "இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப்
போட்டுக்கொள்ளும்" என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர்
அவரிடம், "உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்"
என்றார்.
பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம்
உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர்
நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம்
காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே
வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே
வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை
விட்டு அகன்றார்.
பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, "ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி
ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த
எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்"
என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 . (பல்லவி: 4b)
Mp3
=================================================================================
பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை
விடுவித்தார்.
1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும்
என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக்
கேட்டு அக்களிப்பர். - பல்லவி
3
என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க
மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;
எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி
5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள்
முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -
பல்லவி
7
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று
காத்திடுவர்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம்
அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய
வாழ்வுக்கான வெற்றி வாகையே.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய
இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18
அன்பிற்குரியவரே,
நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து
செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில்
ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக்
காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய
வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத்
தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர்
தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.
நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக்
கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்;
சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும்
அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார்.
அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 16: 18
அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல்
என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல்
வெற்றிகொள்ளா. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19
அக்காலத்தில்
இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம்
சீடரை நோக்கி, "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?"
என்று கேட்டார். அதற்கு அவர்கள், "சிலர் திருமுழுக்கு யோவான்
எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது
பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்" என்றார்கள்.
"ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர்
கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின்
மகன்" என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன்.
ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக
விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான்
உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல்
என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல்
வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம்
தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை
செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும்
அனுமதிக்கப்படும்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மத்தேயு 8: 18-22
இயேசுவின் சீடராக இருப்பதற்குக் கொடுக்கவேண்டிய விலை அதிகம்
நிகழ்வு
பொலிவியாவிற்கு கிறிஸ்துவின் நற்செய்தியைக்
கொண்டுசென்றவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் சாரா கோர்சன்
(Sarah Corson) மற்றும் அவர்களுடைய தோழர்கள்.
அமெரிக்காவைச் சார்ந்த இவர்கள் கடவுளின் வார்த்தையை
பொலிவியாவில் உள்ள மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்று ஆர்வம்
கொண்டார்கள். அதே நேரத்தில் பொலிவியாவில், கடவுளின் வார்த்தையை
அறிவிப்பதற்கான தடைகளையும் அவர்கள் அறிந்தார்கள். என்ன செய்வது
என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில், சாரா கோர்சன்
அவர்களிடம், "பொலிவியாவில் உள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க
நம்பிக்கையோடு செல்வோம். ஒருவேளை அவர்கள் நம்மைக்
கொன்றுபோட்டால், மறைச்சாட்சியாக இறந்து இயேசுவுக்குச் சான்று
பகர்வோம். இல்லையென்றால், உயிரோடு இருந்து கடவுளின் வார்த்தையை
மக்களுக்கு அறிவித்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம்"
என்றார். அவர் சொன்ன யோசனை எல்லாருக்கும் சரியெனப் படவே, சாரா
கோர்சோன் உட்பட மொத்தம் பதினெட்டுப் பேர் பொலியாவிற்குப்
புறப்பட்டுச் சென்றார்கள்.
1980 களின் தொடக்கத்தில் அவர்கள் பொலியாவில் போய்
இறங்கியபொழுது, அங்கிருந்த இராணுவம் இவர்களைத் துப்பாக்கி
முனையில் சுற்றி வளைத்தது. அப்பொழுது அவர்கள் ஒருமித்த குரலில்
இறைவனிடம் வேண்டத் தொடங்கினார்கள். இவர்களுடைய வேண்டுதல்,
கையில் துப்பாக்கியோடு இருந்த இராணுவ வீரர்களுடைய உள்ளத்தில்
மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் இராணுவ வீரர்கள்
அவர்களை எதுவும் செய்யாமல், பொலிவியாவிற்குள் அனுமதித்தார்.
இதற்குப் பின்பு சாரா கோர்சோன் தன்னோடு வந்த பதினேழு
தோழர்களோடு சேர்ந்து போலியாவில் கடவுளின் வார்த்தையை மிகுந்த
உற்சாகத்தோடு அறிவித்தார். மட்டுமல்லாமல் பொலியாவில் இருந்த
வேளாண்குடி மக்களுடைய வாழ்வு சிறக்கவும், அவர்களுடைய
வேளாண்மையில் இவர்கள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தார்.
(Amazing Stories of Martyrdom and Costly Discipleship
Lesli White)
உயிருக்கு ஆபத்து இருந்தபொழுதும் சாரா கோர்சோனும், அவருடைய
தோழர்களும் பொலிவியாவில் கடவுளின் வார்த்தையை அறிவித்து,
இயேசுவின் உண்மையான சீடர்களாய்த் திகழ்ந்தது நமது
சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில்,
இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர்கள் எப்படி
இருக்கவேண்டும் என்பதைப் பற்றிய விளக்கத்தைத் தருகின்றார். அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சவால்களைத் தாங்கத் தயாராக இருக்கவேண்டும்
இயேசு மலைப்பொழிவை நிகழ்த்திவிட்டுக் கீழே இறங்கி வருகின்றார்;
தொழுநோயாளரையும், நூற்றுவத் தலைவரின் பையனையும், இன்னும்
பலரையும் நலப்படுத்துகின்றார். இதனால் பலரும் அவரைப்
பின்தொடர்கின்றார்கள். இதைப் பார்த்துவிட்டு, மறைநூல் அறிஞர்
ஒருவர், "இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றால், தனக்குப் பெயரும்
புகழும் கிடைக்கும்" என்ற தவறான எண்ணத்தோடு இயேசுவிடம் வந்து,
"போதகரே, நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப்
பின்தொடர்வேன்" என்கின்றார்.
இந்த மறைநூல் அறிஞர், தன்னை எதற்காகப் பின்தொடர்ந்து வருவதாகச்
சொல்கின்றார் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.
அதனால் இயேசு அவரிடம், சீடத்துவ வாழ்வின் இன்னொரு பக்கத்தை,
அதாவது சாவல்களும் துன்பங்களும் நிறைந்த பக்கத்தை எடுத்துச்
சொல்கின்றார். இயேசு அவரிடம் அப்படிச் சொன்னது அவருக்கு
மிகவும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். அதனாலேயே அவர்
இயேசுவைப் பின்தொடராமல் இருந்திருக்கலாம்.
இழப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும்
இயேசுவின் சீடராக இருப்பதற்கு ஒருவர் எப்படிப்பட்ட சாவலையும்
சந்திக்கவேண்டும் என்று இன்றைய நற்செய்தி வாசகம்
எடுத்துக்கூறும் அதே வேளையில், இயேசுவின் சீடராக இருப்பதற்கு
ஒருவர் எல்லாவற்றையும் இழந்து, இயேசுவுக்கு முதன்மையான இடம்
கொடுக்கவேண்டும் என்ற செய்தியையும் எடுத்துச் சொல்கின்றது.
"முதலில், நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர
அனுமதியும்" என்று சொன்ன மனிதரிடம் இயேசு, "...இறந்தோரைப்
பற்றிக் கவலை வேண்டாம்..." என்று சொல்லும் வார்த்தைகள்,
எல்லாவற்றையும்விட தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற
செய்தியை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது.
இயேசுவின் வார்த்தைகள் சற்றுக் கடினமாக இருப்பது போன்று
தோன்றலாம். ஆனால், உண்மை என்னவெனில், இயேசுவிடம் வந்த
மனிதருடைய தந்தை அப்பொழுது இறக்கவில்லை... அவர் இறந்தபின்
அவருக்குச் செய்யவேண்டியதையெல்லாம் செய்துவிட்டு வருவதாக
இயேசுவிடம் வந்த மனிதர் சொன்னதால்தான் இயேசு அவரிடம் அப்படிச்
சொல்கின்றார். அடுத்ததாக, கடவுளுக்கு நாசீராகத் தங்களை
அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இறந்த உடலைத் தொடக்கூடாது (லேவி
21: 11; எண் 6: 6). இயேசுவிடம் வந்த மனிதர் தன்னைக் கடவுளுக்கு
அர்ப்பணித்துக்கொண்ட பிறகு இறந்தவர்களை, இறந்த உடலைப் பற்றிக்
கவலைத் தேவையில்லை; அவர் கடவுளுக்கு முதன்மையான இடம் கொடுத்து
வாழ்ந்தால் போதும் என்பதாலும் இயேசு அப்படிச் சொல்கின்றார்.
இவ்வாறு இயேசுவின் சீடர் சவாலை எதிர்கொள்ளக்கூடியவராகவும்,
இழப்பைத் தாங்கிக் கொள்ளக்கூடியவராகவும் இருக்கவேண்டும்.
அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு
எடுத்துக்கூறுகின்றது. நாம் சவால்களை எதிர்கொள்பவர்களாகவும்,
இழப்பைத் தாங்கிக் கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கின்றோமா?
சிந்திப்போம்.
சிந்தனை
"இயேசு ஒருவரை அழைக்கின்றார் எனில், அவர் தனக்காக வந்து
இறக்கவேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்" என்பார்
தியாட்ரிச் போனஃப்பர். ஆகையால், நாம் இயேசுவின் சீடராக
இருப்பதற்குக் கொடுக்கவேண்டிய விலையை உணர்ந்தவர்களாய், அவரில்
நிலைத்து நின்று அவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
ஆமோஸ் 2: 6-10, 13-16
"ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட
மிதிக்கின்றீர்கள்"
நிகழ்வு
முன்பொரு காலத்தில் மன்னன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும்
கொடியவனாக இருந்தான். எந்தளவுக்கு என்றால், மக்களிடத்தில் ஒரு
மூட்டை நெல்லைக் கொடுத்துவிட்டு, ஒரு மூட்டை அரசியைக்
கேட்டான். ஒரு மூட்டை நெல்லிலிருந்து அரைமூட்டை அரசியைத்தான்
மக்களால் பெற முடித்தது என்பதால், அவர்கள் இன்னும் அரை மூட்டை
அரசியைப் பெறுவதற்குக் கடினமாக உழைக்கவேண்டி வேண்டி வந்தது.
இதனால் மக்கள் அனைவரும், "இவன் செத்தால்தான் நமக்கு
விடிவுகாலம் வரும்" என்று புலம்பத் தொடங்கினார்கள்.
மக்கள் இவ்வாறு புலம்பியது, மன்னனுடைய காதில் விழுந்தது.
இருந்தாலும் அவன் சட்டத்தைக் கொஞ்சம்கூடத் தளர்த்திக்
கொள்ளவில்லை. இதற்கிடையில், அவன் தனது இறப்பு நெருங்கி வருவதை
உணர்ந்தான். ஆகவே, அவன் தன்னுடைய மகனைக் கூப்பிட்டு, "எனக்குப்
பின் நீதான் இந்த நாட்டை ஆட்சி செய்யப்போகிறாய்! நான்
மக்கள்மீது மிகுதியாக வரி விதித்து, அவர்களைத்
துன்புறுத்திவிட்டேன்; நீ அப்படி இருக்கக்கூடாது. எனக்கு
நல்லபெயர் வருகின்ற மாதிரி ஆட்சி செய்யவேண்டும்" என்று
சொல்லிவிட்டு இறந்துபோனான்.
இதற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மகன், தன்னுடைய
தந்தைக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்ற முனைப்பில் மக்களிடம்,
"என் தந்தை உங்களிடம் ஒரு மூட்டை நெல்லைக் கொடுத்து, ஒரு
மூட்டை அரிசியை வாங்கிவந்தார். நான் அப்படிச் செய்யமாட்டேன்"
என்று சொல்லிவிட்டு இடைவெளிவிட்டான். இந்த இடைவெளியில்
மக்களெல்லாம், "அப்பாடா! நமக்கு விடிவுகாலம் வந்துவிட்டது"
என்று புளகாங்கிதம் அடைந்தர்கள். அப்பொழுது அவன், "ஆனால், நான்
ஒரு மூட்டை உமியைக் கொடுத்து, ஒரு மூட்டை அரசியை வாங்குவேன்"
என்றான். இதைக் கேட்டு அதிர்ந்துபோன மக்கள், "இதற்கு அந்தப்
புண்ணியவாளன் எவ்வளவோ மேல்!" என்று சொல்லி, அவனுடைய தந்தையைப்
பாராட்டிவிட்டுக் கலைந்து சென்றனர்.
மேலே உள்ள நிகழ்வில் வரும் மன்னனையும், அவனுடைய மகனையும்
போன்றுதான் இன்றைக்கும் நம்மை ஆண்டுகொண்டிருப்பவர்கள், அதிகார
வர்க்கத்தில் இருப்பவர்கள்; ஏன் நாம்கூட நமக்குக் கீழ் உள்ள
மக்களைச் சுரண்டியும் ஒடுக்கியும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
இத்தொரு நிலை இறைவாக்கினர் ஆமோசின் காலத்திலும் இருந்தது.
இதற்கு ஆமோஸ் எப்படி எதிர்வினை ஆற்றினார் என்பதைக் குறித்து
இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மக்கள் செய்த மூன்று குற்றங்கள்
இறைவாக்கினர் ஆமோஸ் கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
யூதாவில் உள்ள தெக்கோவாவில் பிறந்த இவர், தன்னுடைய ஆடுகளை
மேய்த்துக்கொண்டு வடநாட்டை நோக்கிச் சென்றார். அங்கு மக்கள்,
கடவுளின் வழிகளை மறந்து, ஏழைகளைச் சுரண்டி, ஒடுக்கி வாழ்ந்து
வாழ்ந்தார்கள். இதனால் ஆமாஸ் அங்கு இறைவாக்கு உரைக்கத்
தொடங்கினார். அவ்வாறு இறைவாக்கு உரைப்பதுதான் இன்றைய முதல்
வாசகமாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தை நாம் இரண்டு
பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம் ஒன்று, இறைவாக்கினர் ஆமாஸ்
மக்கள்செய்த குற்றத்தைப் பட்டியலிடுதல், இரண்டு,
மக்களுக்குமேல் வரவிருந்த தண்டனையை அவர் பட்டியலிடுதல்.
வடநாட்டில் இருந்தவர்கள் ஏழைகளையும் நேர்மையாளர்களையும்
ஒடுக்கினார்கள்; அவர்களை அடிமைகளாக விற்றார்கள். இது அவர்கள்
செய்த முதல் குற்றம். அடுத்ததாக, அவர்கள் நெறிகேடான வாழ்க்கை
வாழ்ந்து வந்தார்கள். இது அவர்கள் செய்த இரண்டாவது குற்றம்.
மேலும் கடவுளின் இல்லத்தில் கடன்காரர்களின் ஆடையைப் விரித்து,
அதில் வந்த பணத்தைக் கொண்டு குடித்தார்கள். இது அவர்கள் செய்த
மூன்றாவது குற்றம். இத்தகைய குற்றங்களுக்கு எத்தகைய தண்டனை
கிடைக்கும் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது
பகுதியில் கூறுகின்றார் இறைவாக்கினர் ஆமோஸ்.
குற்றங்களைச் செய்த மக்கள் பெறவிருந்த தண்டனை
மக்கள் செய்த மூன்றுவிதமான தண்டனைகளைச் சுட்டிய இறைவாக்கினர்
ஆமோஸ், அவற்றிற்கு அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையையும்
குறிப்பிடுகின்றார். ஆம், அந்நாளில் (அசீரியர்களின்
படையெடுப்பின்பொழுது) விரைந்து ஓடுபவர், வலிமை மிக்கவர்,
வில்லேந்துபவர்... என யாரும் தப்ப முடியாது; அவர்கள் இருந்த
இடத்திலேயே வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுந்துவதுபோல்
அழுத்தப்படுவார்கள் என்கின்றார் இறைவாக்கினர் ஆமோஸ்.
இறைவாக்கினர் ஆமோசின் வார்த்தைகள் நம்முடைய வாழ்வை
தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்க்க அழைக்கின்றன. நாம்
எளியவர்களை ஒடுக்கின்றோமா? அல்லது அவர்களை அன்புகூர்ந்து,
அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றோமா? நெறிகேடான
வாழ்க்கை வாழ்கின்றோமா? அல்லது நேர்மையான வாழ்க்கை
வாழ்கின்றோமா? சிந்திப்போம். நன்மையை நாடுங்கள்; தீமையைத்
தேடாதீர்கள் (ஆமோ 5:14) என்பார் ஆமோஸ். ஆதலால் நாம் தீமையை
விட்டுவிட்டு, நன்மையை நாடி, ஆண்டவரின் அன்பு மக்களாவோம்.
சிந்தனை
"கடவுளுடைய திரிகை மெதுவாகத்தான் திரிக்கும்; ஆனால்,
நிச்சயமாகத் திரிக்கும்" என்பார் ஹெர்பர்ட் என்ற அறிஞர்.
ஆகையால், கடவுளிடமிருந்து நீதியையும் இரக்கத்தையும் பெற,
முதலில் நாம் நீதியையும் இரக்கத்தையும் நம்முடைய வாழ்வில்
கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|