|
28 ஜூன் 2020 |
|
பொதுக்காலம் 13 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரின் புனிதர் வரும்பொழுதெல்லாம், இங்கே தங்கிச் செல்லட்டும்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 4: 8-11, 14-16a
ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றார். அங்கேயிருந்த பணக்காரப்
பெண் ஒருவர் அவரை உணவருந்தும்படி வற்புறுத்தினார். அதன்பின்
அவர் அவ்வழியே சென்றபோதெல்லாம் அங்கே உணவருந்திவிட்டுச்
செல்வார். அவர் தம் கணவனை நோக்கி, "நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின்
அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன். ஆதலால் வீட்டு மேல்
தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை,
மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர்
வரும்பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும்" என்றார்.
ஒரு நாள் எலிசா அங்கு வந்து மாடி அறையில் தங்கி ஓய்வு எடுத்துக்
கொண்டிருந்தார். எலிசா, "வேறு எந்த விதத்தில் அவருக்கு உதவி
செய்யலாம்?" என்று கேட்டார். அதற்குக் கேகசி, "அவருக்குக்
குறையேதும் இல்லை. ஆனால், அவருக்குப் பிள்ளை இல்லை. அவருடைய
கணவருக்கும் வயதாகி விட்டது" என்றான். எலிசா, "அவளை இங்கு வரச்
சொல்" என்றார். அவ்வாறே அவன் அவரை அழைக்க, அவரும் கதவருகில் வந்து
நின்றார். எலிசா அவரை நோக்கி, "அடுத்த ஆண்டு இதே பருவத்தில்
உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 89: 1-2. 15-16. 17-18 . (பல்லவி: 1a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
1
ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர்
எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்;
உமது உண்மை வானைப் போல் உறுதியானது. - பல்லவி
15
விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம்
முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
16
அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது
நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். - பல்லவி
17
ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள்
வலிமை உயர்த்தப்பட்டுள்ளது.
18
நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு
உரியவர். - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம்
கொண்டுள்ள நம்பிக்கை.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
6: 3-4, 8-11
சகோதரர் சகோதரிகளே,
திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும்
அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத்
தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச்
செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி
திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.
கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம்
கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து
இனிமேல் இறக்க மாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர்
அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க
ஒரே ஒரு முறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே
வாழ்கிறார்.
அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்;
கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை
எண்ணிக்கொள்ளுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
1 பேது 2: 9
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர்,
அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; உங்களை இருளினின்று
தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை
அறிவிப்பது உங்கள் பணி. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர்
அல்ல.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 37-42
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "என்னைவிடத் தம்
தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர்
எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ
மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத்
தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி
வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம்
உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என்
பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.
"உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை
ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்.
இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால்
ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார்.
நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர்
நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.
இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம்
குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
I 2 அரசர்கள் 4: 8-11, 14-16a
II உரோமையர் 6: 3-4, 8-11
III மத்தேயு 10: 37-42
தன்னையே தருவதில் முழுமை பெறும்
சீடத்துவம்
நிகழ்வு
ஒரு பங்குக் கோயிலில் நடைபெறவிருந்த அசன விருந்திற்கு, அந்தப்
பங்குக் கோயிலில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள்,
அவ்வூரில் மிக அருகருகே இருந்த கோழிக்குப் பண்ணைக்கும் ஆட்டுப்
பட்டிக்கும் சென்று, அதன் உரிமையாளரிடம், "பங்குக்கோயிலில்
நடைபெறுகின்ற இருக்கின்ற அசன விருந்தில் நாங்கள் மட்டன்
பிரியாணி வழங்கலாம் என்று இருக்கின்றோம்; கூடவே ஒரு முட்டையும்
வழங்கலாம் என்று இருக்கின்றோம். விருந்திற்கு எப்படியும்
ஆயிரம் பேராவது வருவார்கள். அதனால் நூற்று ஐம்பது கிலோ
ஆட்டுக்கறியும், ஆயிரம் முட்டைகளும் நாங்கள் சொல்கின்ற நாளில்
நீங்கள் எங்களுக்குத் தந்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டுப்
போனார்கள்.
அவர்கள் பேசியதை அருகருகே இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு
கோழியும் ஓர் ஆடும் இவ்வாறு பேசிக்கொண்டன. "பங்குக் கோயிலில்
நடைபெறும் அசன விருந்துக்கு கோழிகளாகிய நாங்கள் எங்களுடைய
பங்கிற்கு ஆயிரம் முட்டைகள் தருகின்றோம். ஆடுகளாகிய நீங்கள்
உங்களுடைய பங்கிற்கு வெறும் நூற்று ஐம்பது கிலோ கறிதான்
தருகின்றீர்கள் போல!" என்றது கோழி. அதற்கு ஆடு கோழியிடம்,
"நீங்கள் உங்களுடைய பங்கிற்கு ஆயிரம் முட்டைகள் வேண்டுமானால்
தரலாம். ஆனால், அந்த ஆயிரம் முட்டைகளும் உங்களிடம் இருக்கின்ற
ஒரு பகுதிதான். நாங்கள் அப்படிக் கிடையாது. நாங்கள் நூற்று
ஐம்பது கிலோ கறி தருவதாக இருந்தாலும், எங்களையே தருகின்றோம்.
இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு" என்றது.
இப்படிச் சொல்லிவிட்டு ஆடு கோழியிடம் இப்படிச் சொல்லி
முடித்தது: "சீடத்துவ வாழ்வு கூட தன்னிடம் இருக்கின்ற
ஏதோவொன்றைத் தருவதல்ல, தன்னையே தருவது."
ஆம், உண்மையான சீடத்துவம் என்பது தன்னையே தருவது. அதைத்தான்
மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
பொதுக்காலத்தின் பதின்மூன்றாம் ஞாயிறான இன்று நாம்
வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எது உண்மையான சீடத்துவம் என்ற
கேள்விக்கு விடையாக இருக்கின்றது. அது குறித்து நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
தன் இரத்த உறவுகளைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருதல்
நற்செய்தியில், இயேசு தன்னுடைய சீடர்களிடம், என்னைவிடத் தன்
தாய், தந்தை, மகன், மகள் ஆகியோரிடம் மிகுதியாக அன்பு
கொண்டிருப்பவர் என்னுடைய சீடராக இருக்க முடியாது என்கின்றார்.
இயேசு இவ்வாறு சொல்வதால், இயேசுவின் சீடராக இருக்க
விரும்புகின்றவர், தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களை
வெறுக்கவேண்டும் என்பதல்ல. மாறாக, அவர்களைவிட இயேசுவை அன்பு
செய்யவேண்டும், அவருக்கு முதன்மையான இடம் தரவேண்டும். இத்தகைய
வாழ்விற்கு இயேசுவே மிகச்சிறந்த முன்மாதிரியாக
விளங்குகின்றார். ஆம், இயேசு தன்னுடைய பணிவாழ்வைத்
தொடங்கியபிறகு, தன்னுடைய இரத்த உறவுகளை விட இறைவனுக்கும்
இறையாட்சிக்குமே முதன்மையான இடம் கொடுத்தார். இதனை, இயேசு
தன்னைத் தேடிவந்த தாயிடமும் சகோதரர் சகோதரிகளிடம் பேசக்கூடிய
வார்த்தைகளைக் கொண்டு (மத் 12: 48-50) மிக எளிதாகப்
புரிந்துகொள்ளவேண்டும். ஆகையால், இயேசுவின் சீடர் தன்னுடைய
இரத்த உறவுகளைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவதில்
கருத்தாய் இருக்கவேண்டும்.
தன் உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம்தரவேண்டும்
தன் இரத்த உறவுகளைவிட இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவது
சீடத்துவ வாழ்வின் முதல்நிலை என்றால், தன் உயிரைவிட
இயேசுவுக்கு முதன்மையான இடம் தருவது சீடத்துவவாழ்வின் இரண்டாம்
நிலையாகும். இதுகுறித்து இயேசு தொடர்ந்து பேசுகின்றபொழுது,
"...தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்" என்கின்றார்.
ஆம். இயேசுவின் சீடர் அவருக்காகத் தன் உயிரையும் இழக்கத்
துணிகின்றபொழுது, அதை காத்துக் கொள்பவராக இருக்கின்றார்.
இயேசுவின் பொருட்டு எத்தனையோ புனிதர்கள், மறைச்சாட்சிகள்
தங்களுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். அவர்கள் அன்று
தங்களுடைய உயிரை இழந்தாலும், இன்று அவர்கள் இறைவனின் திருமுன்
மகிழ்ந்திருக்கின்றார்கள். நாமும்கூட நம்முடைய உயிரைவிட
இயேசுவுக்கு முதன்மையான இடம் கொடுத்து வாழ்ந்தோமெனில் அதை
மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
போரில் குண்டடிபட்டுக் கைகளையும் கால்களையும் இழந்திருந்த
படைவீரர்கள் நடுவில், மருத்துவப் பணியும் ஆன்மிகப் பணியும்
செய்துவந்த அருள்பணியாளர் ஒருவர், போரில் தன் இரு கைகளையும்
இழந்ததுகூடத் தெரியமால் படுத்துக்கிடந்த படைவீரர் ஒருவரிடம்
மிகவும் அமைந்த குரல், "போரில் உங்களுடைய இரண்டு கைகளையும்
இழந்துவிட்டீர்கள்" என்றார். இதைக்கேட்டு சிறிதும் பதற்றமடையாத
அந்தப் படைவீரர் அருள்பணியாளரிடம், "போரில் நான் கைகளை
இழந்துவிட்டேன் என்று சொல்லாதீர்கள். நாட்டிற்காக நான்
என்னுடைய இரண்டு கைகளை தந்திருக்கின்றேன் என்று சொல்லுங்கள்"
என்றார். ஆம், கிறிஸ்துவுக்காக நம் உயிரை இழக்கின்றபொழுது அதை
மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்பதே உண்மை.
சிலுவைகளைச் சுமக்கத் துணிதல்
தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர், தன்னுடைய இரத்த உறவைவிட,
தன்னுடைய உயிரைவிட தனக்கு முதன்மையான இடம் தரவேண்டும் என்று
சொல்லும் இயேசு, அவர் தன் பொருட்டு சிலுவையைச் சுமக்கத் தயாராக
இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார். இயேசுவின்
காலத்தில் சிலுவை என்பது இழிவானதாகவும் அவமானத்தின்
சின்னமாகவும் கருதப்பட்டது (1 கொரி 1: 23). ஆகவே, தன்னைப்
பின்தொடர்ந்து வருகின்றவர் சிலுவையைச் சுமக்கவேண்டும் என்று
இயேசு சொல்கின்றபொழுது, அவர் அவமானங்களையும் துன்பங்களையும்
விமர்சனங்களையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்ற
அர்த்தத்தில் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு தன் இரத்த உறவைட, தன் உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையான
இடம் கொடுத்து, சிலுவையைச் சுமக்கத் தயாராக இருக்கும் தன்
சீடர்களுக்கு உதவிகள் செய்யகூடியவர்களுக்கு இறைவன் தக்க
கைம்மாறு அளிப்பார் என்று இயேசு இன்றைய நற்செய்தியின்
இறுதியில் குறிப்பிடுகின்றார். இயேசுவின் சீடர்கள் அவருடைய
பதிலாளிகளாக இருக்கின்றார்கள். எனவே, அவருடைய சீடர்களுக்கு
குளிர்ந்த நீரோ, உணவோ, தேவைப்படுகின்ற உதவிகளோ
செய்யக்கூடியவர்கள் இயேசுவுக்கே செய்பவர்களாக மாறுகின்றார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் தக்க கைம்மாறு தருகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலிசாவிற்கு உதவிகள்
செய்துவந்த சூனேமைச் சார்ந்த பெண்மணிக்கு இறைவன் குழந்தைப்
பேற்றினைத் தருவதாக வாசிக்கின்றோம்.
ஆதலால், இயேசுவைப் பின்பற்றுகின்றவர்கள் தம் உறவுகளை விட,
உயிரைவிட இயேசுவுக்கு முதன்மையாக இடம் தந்து பணி
செய்யக்கூடியவர்களாக இருக்கட்டும். இப்படிப்பட்ட பணிகளைச்
செய்கின்ற இயேசுவின் சீடர்களுக்கு இறைமக்கள் தக்க உதவிகளைச்
செய்பவர்களாக இருக்கட்டும். இப்படி வாழ்ந்தால், எல்லாரும்
இறைவனுடைய அருளைப் பெறுவது உறுதி.
சிந்தனை
"இயேசுவின் சீடராக இருப்பதால் கிடைக்கின்ற மகிழ்ச்சியில்
திளைத்திருக்கின்ற ஒருவரால் மட்டுமே, மற்றவர்களை இயேசுவின்
சீடராக முடியும்' என்பார் Follow me: A Call to Die. A call to
live என்ற நூலின் ஆசிரியரான டேவிட் பிளாட். ஆகையால், நாம்
இயேசுவின் உண்மையான சீடர்களாக இருந்து, மற்றவர்களை இயேசுவின்
சீடர்களாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
சீடத்துவ வாழ்வு
ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனது எண்ணமெல்லாம்
எந்தவித முயற்சியும் செய்யாமல் சந்தோசமாக வாழவேண்டும்
என்பதுதான். வேறு விதமாகச் சொல்லவேண்டுமானால் நோகாமல் நொங்கு
சாப்பிடவேண்டும் என்பதுதான் அவனுடைய நோக்கமாக இருந்தது.
அதற்கான வழியை யார் சொல்லித் தருவார் என்று அங்குமிங்கும்
அலைந்து திரிந்தான்.
ஒருநாள் அவனிடம், பக்கத்து ஊரில் ஒரு முனிவர் இருக்கிறார்,
அவர் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கான வழியைச் சொல்லித் தருகிறார்
என்று யாரோ ஒருவர் சொல்ல, உடனே அவன் அந்த முனிவரைக் காண
பக்கத்து ஊருக்கு விரைந்து சென்றான். முனிவரைக் கண்டதும்
சாஸ்டாங்கமாக அவர் முன் தரையில் விழுந்து பணிந்தான். பின்னர்
அவரிடத்தில், "சுவாமி, துன்பமே இல்லாத இன்பமான வாழ்வு ழ ஒரு
வழியைச் சொல்லுங்கள்?" என்றான். அதற்கு அவர் சிறிதுநேரம்
யோசித்துவிட்டு, "சரி, உனக்கு நான் துன்பமே இல்லாத இன்பமான
வாழ்வு வாழ்வதற்கான வழியைச் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன்பாக
நீ போய் உடைபடாமல் மரமாகவோ, செடியாகவோ வளர்கின்ற ஒரு விதையைக்
கொண்டுவா" என்றார். அதற்கு அவன், "ஓ! இவ்வளவுதானே, உடனே
கொண்டுவருகிறேன் என்று சொல்லிவிட்டு, அவ்விடத்திலிருந்து
நகர்ந்துசென்றான்.
நீண்டநாட்கள் தேடியும் அவனால், உடைபடாமல், சிதையாமல் மரமாகவோ,
செடியாகவோ வளர்கின்ற ஒரு விதையை கொண்டுவர முடியவில்லை.
இறுதியில் அவன் முனிவரிடம் சென்று தன்னுடைய தோல்வியை
ஒத்துக்கொண்டான். அப்போது அவர் அவனிடத்தில், "அன்பு மகனே!,
துன்பமில்லாமல் இன்பமான வாழ்வுவாழ நீ நினைக்கின்றாய், ஆனால்
உண்மை என்னவென்றால் துன்பமில்லாமல் எவராலும் இன்பமான வாழக்கை
வாழ முடியாது, ஏனென்றால் இன்பத்தின் நுழைவாயிலே துன்பம்தான்"
என்றார். தொடர்ந்து அவர் அவனிடத்தில் சொன்னார், "உன்னிடத்தில்
நான் உடைபடாமல், சிதையாமல் மரமாகவோ, செடியாகவோ வளர்கின்ற ஒரு
விதையைக் கொண்டுவரச் சொன்னேன். ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு
விதையை உன்னால் கொண்டுவர இயலாது. விதை என்றால் அது தன்னையேச்
சிதைக்கவேண்டும், மனிதர் என்றால் துன்பத்தை அனுபவிக்க
வேண்டும். அப்போதுதான் இன்பமாக வாழ்க்கை வாழமுடியும்" என்றார்.
இதைக் கேட்ட அந்த இளைஞன் அறிவொளி பெற்று தன்னுடைய இல்லம்
சென்றான்.
துன்பமில்லாமல் இன்பமில்லை, சிலுவை இல்லாமல் சீடத்துவ
வாழவில்லை, ஏன் சிம்மாசனமும்கூட இல்லை என்பதை இந்தக் கதையானது
நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதிமூன்றாம்
ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாளில் நாம்
படிக்கக்கேட்ட இறைவார்த்தையானது சிலுவைகளை சுமப்பதுதான்
உண்மையான சீடத்துவ வாழ்வு என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
அதனைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னைப்
பின்பற்றி வருவோர் எப்படி இருக்கவேண்டும் என்பதை
நினைவூட்டுகின்றார். முதலாவதாக இயேசுவின் சீடர்கள் யாவரும்
சிலுவையைச் சுமப்பதற்கு தயாராக இருக்கவேண்டும். சிலுவை என்று
சொல்கிறபோது அது நாம் நமது பணிவாழ்வில் எதிர்கொள்ளும்
சவால்கள், பிரச்சனைகள், அவமானங்கள், அச்சுறுத்தல்கள், இன்னும்
பிறவாகும். இப்படி யார் ஒருவர் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள
முன்வருகிறாரோ அவர்தான் தன்னுடைய சீடராக இருக்கமுடியும் என்பது
இயேசுவின் தெளிவான போதனையாக இருக்கின்றது.
ஒருமுறை இயேசு தன்னைப் பின்பற்றி வர நினைத்தவரைப்
பார்த்துக்கூறுவார், "நரிகளுக்குப் பதுங்குக்குழிகளும்,
வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்குத்
தலைசாய்க்கக் கூட இடமில்லை" என்று (லூக் 9: 58), இயேசு
இப்படிச் சொன்னபிறகு அந்த மனிதர் இயேசுவைப் பின்தொடர்ந்தாரா?
இல்லையா? என்று நமக்குத் தெரியாது. ஆனால் இயேசு தன்னைப்
பின்பற்றி வருவோர் தன்னைப் போன்று துன்பங்களையும்,
சிலுவைகளையும் அனுபவிக்கவேண்டும் என்பதை மிகத் தெளிவாகக்
கூறுகின்றார்.
அடுத்ததாக இயேசு தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்களுக்கு
இருக்கவேண்டிய தகுதியாகச் சொல்வது: தன்னை (இறைவனை) மட்டுமே
முழுமையாக அன்பு செய்யக்கூடியவராக இருக்கவேண்டும் என்பதாகும்.
இயேசு கூறுகின்றார், "என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ
மிகுந்த அன்புகொண்டுளோர் என்னுடையோர் எனக் கருதப்பட
தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ, மகளிடமோ மிகுதியாய்
அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத்
தகுதியற்றோர்" என்று. அப்படியானால் இயேசுவைப் பின்பற்றி
நடக்கும் ஒருவர் இயேசுவுக்கும், அவர் காட்டும்
விழுமியத்திற்கும் ஏற்ப வாழவேண்டும். இல்லையென்றால் அவர்
இயேசுவின் சீடராக இருக்கமுடியாது.
ஆனால் இன்றைக்கு தம்மை இயேசுவின் சீடர்கள் என்று
சொல்லிக்கொள்ளும் சிலர் இயேசுவை முழுமையாக அன்புசெய்யாமல்,
இந்த உலக செல்வங்களை, உறவுகளை அன்புசெய்து வாழ்வது நமக்கு
வேதனை அளிப்பதாக இருக்கின்றது. "பற்றுக பற்றற்றான் பற்றினை,
அப்பற்றை பற்றுக பற்று விடற்று" என்பான் அய்யன் திருவள்ளுவர்.
ஆம், ஒன்றுக்கும் உதவாத உலக செல்வங்களைத் துறந்துவிட்டு
ஒப்பற்ற செல்வமாக இறைவனைப் பற்றிக்கொண்டு வாழவேண்டும் அதுதான்
உண்மையான துறவு வாழ்வாக இருக்கும் என்பதுதான் திருவள்ளுவரின்
கருத்து. ஆண்டவர் இயேசுவும் நமக்கு அதைத்தான் நமக்கு
நினைவூட்டுகிறார்.
"ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என்
வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்" என்று
சொல்கிற மனிதரிடம் இயேசு கூறுவார், "கலப்பையில் கை வைத்தபின்
திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படச்
தகுதியுள்ளவர் அல்ல" என்று. ஆம், இயேசுவின் சீடர் இவ்வுலகிற்கு
அல்ல, இறைவனுக்கே முன்னுரிமை தரவேண்டும்.
இயேசுவின் சீடராவதற்கான மூன்றாவது தகுதி: இயேசுவுக்காக உயிரைத்
தர முன்வருதாகவும். இன்றைய நற்செய்தியில் இயேசு, "என்
பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக்கொள்வர்" என்று
கூறுவார். ஆம், இயேசு சொல்வதுபோல உயிரைத் தருவதைவிடவும்
இயேசுவின்பால் இருக்கும் நமது அன்பை வெளிப்படுத்த வேறு உயர்ந்த
வழில்லை. எத்தனையோ புனிதர்கள், மறைசாட்சிகள் இயேசுவுக்காக
தங்களுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். அதன்வழியாக தாங்கள்
இயேசுவின் உண்மைச் சீடர்கள் என்பதை இந்த உலகிற்கு
வெளிப்படுத்தினார்கள். ஆகவே நாம் ஒவ்வொருவரும் இயேசுவுக்காக
நம்முடைய உயிரையும் கூட இழந்து, அதன்மூலம் நாம் இயேசுவின்
உண்மைச் சீடர்கள் என்று இந்த உலகிற்கு நிருபிக்கவேண்டும்.
எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறுவார், "பாவத்திற்கு
எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு இன்னும்
நீங்கள் எதிர்த்து நிற்கவில்லை" என்று (எபி 12:4) ஆகவே, நாம்
இயேசுவுக்காக எதையும் இழக்கத் தயாராய் இருப்போம். அவரின்
உண்மைச் சீடராவோம்.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக, இயேசுவின் சீடர், இறையடியார்களை
கவனித்துக்கொள்பவராகவும் இருக்கவேண்டும். அரசர்கள் இரண்டாம்
புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்
எலிசா இறைவாக்கினர் சூனேமுக்குச் சென்றபோது ஒரு பெண்மணியின்
வீடுவழியாகக் கடந்து செல்கிறார். அப்போது அந்த பெண்மணி
இறைவாக்கினர் எலிசாவை அழைத்து தன்னுடைய வீட்டில் உணவருந்தச்
சொல்கிறார். மேலும் எப்போதெல்லாம் அவர் அந்தப் பெண்மணியின்
வீட்டைக் கடந்து செல்கிறாரோ அப்போதெல்லாம் அவர் அவருக்கு உணவு
கொடுக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், அவருடைய வீட்டின்
மேல்மாடியில் தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்கிறார். இதைக்
கண்டு மகிழ்ந்த இறைவாக்கினர் எலிசா, அவருக்கு குழந்தைப்
பாக்கியத்தைத் தருகின்றார்.
"நம்முடைய ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச்
செய்யவேண்டும்" என்கிறது திருச்சபையின் ஒழுங்குமுறை. அந்த
வகையில் சூனேம் நகரப் பெண்மணி எலிசா இறைவாக்கினருக்கு தன்னால்
இயன்ற உதவிகளைச் செய்தார். அதனால் குழந்தை பாக்கியம் பெற்றார்.
இதன்மூலம் ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய, "இறைவாக்கினர் ஒருவரை
அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்கு
உரிய கைம்மாறு பெறுவார்... இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என்
சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும்
தம் கைம்மாறு பெறாமல் போகார்" என்ற வார்த்தையானது
நிறைவேறுகிறது.
நாம் நம்மத்தியில் ஆன்மீகப் பணியையும், சமூகப் பணிகளையும்
செய்கின்ற இறையடியார்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்கின்றோமா
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம்
இறையாடியார்களை அவமரியாதை செய்ய முயல்கிறோமே ஒழிய, அவர்களுக்கு
உதவிகளைச் செய்ய முன்வருதில்லை. இந்த நிலை மாறவேண்டும்.
அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும். அப்போது
நம்முடைய குடும்பம், சந்ததி மற்றும் சமுதாயம் முழுவதும்
ஆசிர்வதிக்கப்படும்.
ஒருமுறை துறவி ஒருவரும் அவருடைய சீடரும் புனிதத் தலத்திற்கு
திருயாத்திரை போய்க்கொண்டிருந்தார்கள். நெடுந்தூரம் நடந்தசென்ற
களைப்பு மிகுதியால் துறவியும், அவருடைய சீடரும் ஊருக்கு
ஒதுக்குப் புறத்தில் இருந்த ஒரு வீட்டின் திண்ணையில் படுத்து
அயர்ந்து தூங்கிவிட்டனர். அப்போது அங்கு வந்த அந்த வீட்டு
எஜமானி, "யாராரெல்லாமோ படுக்க இது என்ன சத்திரமா?" என்று
சொல்லி அவர்கள்மீது தண்ணீரை இறைத்து, அங்கிருந்து அவர்களை
விரட்டி அடித்தார். அவர்கள் இருவரும் பக்கத்து வீடுகளுக்குச்
சென்றபோதும் அதே நிலைதான் ஏற்பட்டது. அப்போது அந்த துறவி
தன்னுடைய சீடரைப் பார்த்துச் சொன்னார்,
இந்த ஊரில் இருப்பவர் யாவருமே எங்கேயும் சிதறுண்டு செல்லாமல்
இங்கே இருக்கட்டும்" என்று சொல்லிவிட்டு தன்னுடைய நடையைக்
கட்டினார். சீடர் ஒன்றுமே புரியாமல் துறவியைப்
பின்தொடர்ந்தார்.
அவர்கள் இருவரும் போகிற வழியிலே இன்னொரு ஊரும் வந்தது. ஆனால்
அந்த ஊரில் இருந்த மக்கள் துறவியையும், சீடரையும் பார்த்த
உடன், "நம்மூருக்கு பெரிய மகான்கள் இருவர் வந்திருக்கிறார்கள்
என்று சொல்லி, அவர்களை சிறப்பாகக் கவனித்துக் கொண்டார்கள்.
தங்களுடைய வீடுகளுக்கு அழைத்துச் சென்று, விருந்து
உபசரித்தார்கள். பின்னர் அவர்கள் இருவரும் அவ்வூரிலிருந்து
விடைபெற்றும்போது துறவி, "இவ்வூரில் இருக்கும் மக்கள் அனைவரும்
இங்கே மட்டும் இருக்காமல் எத்திசைக்கும் சிதறுண்டு போகட்டும்"
என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
துறவியின் செய்கையைக் கண்டு புரியாமல் விழித்த சீடர்,
துறவியிடத்திலே விளக்கத்தைக் கேட்டார். "நாம் இருவரும் முதலில்
சென்ற ஊரில் வாழ்ந்த மக்கள் சுயநலவாதிகள்,
இரக்ககுணமில்லாதவர்கள். அவர்களை அங்கேயே இருக்கட்டும் என்று
சொன்னீர்கள். ஆனால் இப்போது நாம் இருக்கும் ஊரில் உள்ள மக்களோ
இரக்ககுணமுள்ளவர்கள், தாராள குணம் படைத்தவர்கள்.
அப்படிப்பட்டவர்களை நீங்கள் எத்திசைக்கும் சிதறுண்டு போகட்டும்
என்று சொல்கிறேர்களே, இதன் அர்த்தம் என்ன?" என்று கேட்டார்.
அதற்கு அவர், "சுயநலவாதிகள் ஓரிடத்தில் இருப்பதுதான் நல்லது.
ஆனால் இரக்ககுணம் படைத்தவர்களோ எல்லா இடங்களுக்கும் பரவிச்
சென்றால்தான் எல்லாருக்கும் சிறப்பு. அதனால் நான் அப்படிச்
சொன்னேன்" என்றார்.
இறையடியார்களுக்கு உதவுபவர்கள் என்றைக்கும் ஆசிரைப்
பெறுவார்கள் என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும்
உண்மையாக இருக்கின்றது.
ஆகவே இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம்
சிலுவைகளைத் தாங்கிக்கொள்ள முன்வருவோம், இறைவனுக்கு மட்டுமே
முதலிடம் தருவோம். இறையடியார்களை கவனித்துக்கொள்வோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். Fr. Maria
Antonyraj,
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|