Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     27 ஜூன் 2020  

பொதுக்காலம் 12ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 சீயோன் மகளே! ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுக!

புலம்பல் நூலிலிருந்து வாசகம் வாசகம் 2: 2, 10-14, 18-19

ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்; அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின் அரண்களைத் தகர்த்தார்; அவற்றைத் தரைமட்டமாக்கினார். அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும் மேன்மை குலையச் செய்தார்.

மகள் சீயோனின் பெரியோர் தரையில் மௌனமாய் அமர்ந்துள்ளனர்; அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக் கொண்டுள்ளனர்; சாக்கு உடை உடுத்தியுள்ளனர்; எருசலேமின் கன்னிப் பெண்கள் தங்கள் தலைகளைத் தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர்.

என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன! என் குலை நடுங்குகின்றது! என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத் தரையில் சிதறுகின்றது!

என் மக்களாகிய மகள் நசுக்கப்பட்டுள்ளாள்! நகர் வீதிகளில் குழந்தைகளும் மழலைகளும் மயங்கிக் கிடக்கின்றனர்! அவர்கள் தங்கள் அன்னையரிடம், "அப்பம், திராட்சை இரசம் எங்கே?" என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப் போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர் விட்டவர் போல் ஆகின்றனர்!

மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப் போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்?

உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர்; நீ நாடுகடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் சொல்லவில்லை; அவர்கள் பொய்யையும் அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு, உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்!

அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது; மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்!

எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு! உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றிவிடு! தெரு முனையில் பசியால் மயங்கி விழும் குழந்தைகளின் உயிருக்காக, அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து!

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 74: 1-2. 3-4. 5-7. 20-21 . (பல்லவி: 19b) Mp3
=================================================================================

பல்லவி: சிறுமைப்படும் உம் மக்களின் உயிரை மறந்துவிடாதீர் ஆண்டவரே!
1
கடவுளே! நீர் ஏன் எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்? உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல் உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது?
2
பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபைக்கூட்டத்தை நினைத்தருளும்; நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட இனத்தாரை மறந்துவிடாதேயும்; நீர் கோவில் கொண்டிருந்த சீயோன் மலையையும் நினைவுகூர்ந்தருளும். - பல்லவி

3
நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவீராக! எதிரிகள் உமது தூயகத்தில் அனைத்தையும் பாழ்படுத்தி விட்டார்கள்.
4
உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில் வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்; தங்கள் கொடிகளை வெற்றிக்கு அடையாளமாக நாட்டுகின்றார்கள். - பல்லவி

5
அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட மரப் பின்னல் வேலைப்பாடுகளைக் கோடரிகளால் சிதைத்தார்கள்.
6
மேலும் அங்கிருந்த மர வேலைப்பாடுகள் அனைத்தையும் சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு தகர்த்தெறிந்தார்கள்;
7
அவர்கள் உமது தூயகத்திற்கு தீ வைத்தார்கள்; அவர்கள் உமது பெயருக்குரிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். - பல்லவி

20
உமது உடன்படிக்கையை நினைத்தருளும்! நாட்டின் இருளான இடங்களில் கொடுமை நடக்கும் குடியிருப்புகள் நிறைந்திருக்கின்றன.
21
சிறுமையுற்றோர் மீண்டும் வெட்கமுறாதபடி செய்யும்; எளியோரும் வறியோரும் உமது பெயரைப் புகழ்வராக! - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
மத் 8: 17

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17


அக்காலத்தில்

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். "ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" என்றார். இயேசு அவரிடம், "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.

நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் "செல்க" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் "வருக" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து "இதைச் செய்க" என்றால் அவர் செய்கிறார்" என்றார்.

இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, "நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்" என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.

இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்.

பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, "அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்" என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மத்தேயு 8: 5-17

"நீர் நம்பிய வண்ணமே உமக்கு நிகழும்"


நிகழ்வு



கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த செய்தியை நாம் அனைவரும் அறிந்திருப்போம்; ஆனால், அதற்குப் முன்னால் நடந்தவை எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானமானவை. அதைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

1492 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 3 ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் உள்ள போலோஸ் துறைமுகத்திலிருந்து நினா, பின்டா, சாங்தா மரியா ஆகிய மூன்று சிறு கப்பல்களில், பத்தொன்பது பேரைச் சேர்த்துக்கொண்டு கொலம்பஸ் புதிய நிலப்பரப்பைத் தேடித் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். ஒருநாள், இரண்டு நாள் என்று நாள்கள் சென்றுகொண்டே இருந்தன; ஆனால் புதிய நிலப்பரப்பு யாருடைய கண்ணுக்கும் தென்படவில்லை. கொலம்பசோடு இருந்தவர்களுக்கு, "புதிய நிலப்பரப்பு கண்ணில் தென்படுமா? இல்லை அனைவரும் கடலில் மூழ்கிச் சாகப்போகிறோமா?" என்று அவநம்பிக்கை ஏற்பட்டது. அப்பொழுது கொலம்பஸ் அவர்களிடம், "நிச்சயம் நாம் புதிய நிலப்பரப்பைக் காணத்தான் போகிறோம்; நம்பிக்கையோடு இருங்கள்" என்று உற்சாகப் படுத்தினார்.

இப்படியே நாள்கள் சென்றுகொண்டிருந்தன. புதிய நிலப்பரப்பை மட்டும் அவர்கள் கண்டபாடில்லை. இருபத்து நான்காம் நாளில், கொலம்பசோடு இருந்தவர்கள் அவரிடம், "நாம் திரும்பிச் செல்வதற்கான உணவு மட்டும்தான் இருக்கின்றது. இனிமேல் ஒருநாள் நம் நம்முடைய பயணத்தைத் தொடர்ந்தாலும், எல்லாரும் உணவின்றிப் பட்டினியில் சாகவேண்டியதுதான்!" என்றார்கள். அதற்குக் கொலம்பஸ் அவர்களிடம், "இருபத்து நான்கு நாள்களுக்குமான உணவில், என்னுடைய உணவும்தானே இருக்கின்றது! இன்னும் ஒருநாள் நாம் நம்முடைய பயணத்தைத் தொடர்வோம். எப்படியும் புதிய நிலப்பரப்பைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. ஒருவேளை புதிய நிலப்பரப்பைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், என்னைத் தூக்கி இந்தக் கடலில் போட்டுவிட்டு, நீங்கள் எனக்குச் சேரவேண்டிய உணவை உண்டுகொண்டே உங்களுடைய பயணத்தைத் தொடருங்கள்" என்றார்.

கொலம்பஸ் சொன்ன யோசனை அந்தப் பத்தொன்பது பேருக்கும் சரியெனப் படவே, தங்களுடைய பயணத்தைத் தொடர்ந்தார்கள். மறுநாள் அவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் புதியதொரு நிலப்பரப்பு அவைகளுடைய கண்ணில் தென்பட்டது. அந்த நிலப்பரப்புதான் அமெரிக்கா.

கொலம்பசோடு பயணம் செய்த பத்தொன்பது பெரும் நம்பிக்கையில்லாமல் இருந்தபொழுது, கொலம்பஸ் மட்டும் "எப்படியும் புதிய நிலப்பரப்பைக் கண்டுபிடித்து விடலாம்" என்ற நம்பிக்கையோடு இருந்தார். அந்த நம்பிக்கையே புதிய நிலப்பரப்பைக் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்தது. நற்செய்தியில் நூற்றுத்தலைவர், "இயேசுவிடம் சென்றால், முடக்குவாதமுற்று, மிகுந்த வேதனையோடு இருக்கும் தன்னுடைய பையன் நலமடைவான்" என்ற நம்பிக்கையோடு வந்தார். அந்த நம்பிக்கை அவருடைய பையனுக்கு நலமளிக்கின்றது. இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவே கண்டுவியக்கும் அளவுக்கு இருந்த நூற்றுவத் தலைவரின் நம்பிக்கை

கலிலேயக் கடலின், வடமேற்குத் திசையில் இருந்த மிகப்பெரிய கடற்கரை நகரம்தான் கப்பர்நாகும். இந்நகருக்கு எல்லாத் தரப்பு மக்களும் வந்துபோனார்கள். அதனால் செல்வத்தோடு பாவமும் பெருகியது. இப்படிப்பட்ட நகரிலிருந்துதான், நூற்றுவத் தலைவர், தன் பையன் முடக்குவாதமுற்று, மிகுந்த வேதனையோடு படுக்கையில் கிடக்கின்றான் என்ற செய்தியோடு இயேசுவிடம் வருகின்றார். இயேசு அவரிடம், "நான் வந்து அவனை நலப்படுத்துவேன்" என்று சொன்னதும், நூற்றுவத் தலைவர் அவரிடம், "...ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்" என்கின்றான்.

யூதர்கள் பிற இனத்து மக்களை நாயினும் கீழாகப் பார்த்தார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நூற்றுவத் தலைவர், இயேசுவுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்ததாலும், இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்ததாலும், அவர் இயேசுவிடம், ஒரு வார்த்தை சொன்னால் போதும் என்னுடைய பையன் நலமடைவான் என்கின்றார்.

நம்பினோர்க்கு நலம்

நூற்றுவர் தலைவர், நூறு படைவீர்களுக்குத் தலைவராக இருப்பவர். மட்டுமல்லாமல், அவர் இயேசுவைக் குறித்து அவ்வளவாகக் கேள்விப்படாத பிற இனத்தவர். அப்படிப்பட்டவரிடமிருந்து நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள் வந்ததைத் கேட்டுதான், இயேசு அவரை வியந்து பாராட்டுகின்றார். "நீர் நம்பியே வண்ணமே உமக்கு நிகழும்" என்று சொல்லி அவருடைய பையனை நலப்படுத்துகின்றார்.

ஆம், நூற்றுவத் தலைவர் இயேசுவிடம் கொண்டிருந்த நம்பிக்கை மிகவும் ஆழமானது. அந்த நம்பிக்கையினாலேயே அவருடைய பையனுடைய நோய் நீங்குகின்றது. இயேசுவைக் குறித்து இறைவார்த்தை வழியாகவும், அருளடையாளக் கொண்டாட்டங்களின் வழியாகவும் நாம் தெரிந்துகொள்கின்றோம். அப்படி இருந்தும் நமக்கு இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை இல்லை என்பதுதான் கசப்பான உண்மையாக இருக்கின்றது. இந்த இடத்தில்தான் நூற்றுவத் தலைவர் நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.

நூற்றுவத் தலைவருடைய நம்பிக்கை அவருடைய பையனுக்கு நலம் கிடைக்கக் காரணமாக இருந்தது. நம்முடைய நம்பிக்கை எத்தகையதாக இருக்கின்றது? அதனால் நமக்கு என்னென்ன நன்மை விளைந்திருக்கின்றது? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

"நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது" என்பார் ஜான்சன் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் இறைவனிடம் ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 புலம்பல் 2:2, 10-14, 18-19

ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்

நிகழ்வு



ஒரு கிராமப்புறப் பங்கில் பங்குப் பணியாற்றி வந்த அருள்பணியாளர் ஒருவர், ஒருநாள் மாலை வேளையில், அந்தக் கிராமத்தில் இருத்த ஒரு சாலையின் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். வழியில் இவருடைய பங்கைச் சார்ந்த ஒருவர் தன்னுடைய வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் அருள்பணியாளரைப் பார்த்ததும், பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார் .

"சுவாமி! நீண்ட நாள்களாக உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கவேண்டும் என்று இருந்தேன். இப்பொழுதுதான் அதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. என்னுடைய கேள்வியை இப்பொழுது உங்களிடம் கேட்கட்டுமா?" என்ற விவசாயியிடம், அருள்பணியாளர், "தாராளமாகக் கேளுங்கள்" என்றார். உடனே அவர், "சுவாமி! நான் மீட்புப் பெறுவதும் பெறாததும் இறைவனுக்குத் தெரியுமா? தெரியாதா?" என்றார். "நீங்கள் மீட்பு பெறுவதும் பெறாததும் நிச்சயம் இறைவனுக்குத் தெரியும்" என்றார் அருள்பணியாளர்.

உடனே அந்த விவசாயி, "நான் மீட்புப் பெறுவதும் பெறாததும் அந்த இறைவனுக்குத் தெரியும் என்றால், நான் எப்படியும் வாழலாம்தானே! இப்படித்தான் வாழவேண்டும் என்ற அவசியம் இருக்கா?" என்றார். இதற்கு அருள்பணியாளர் பதிலேதும் சொல்லாமல், அவரிடம் திருப்பி ஒரு கேள்வியைக் கேட்டார். "ஐயா! உங்களுடைய இந்த வயல் நன்றாக விளையுமா, விளையாதா என்பது உங்களுக்குத் தெரியும்தானே?". "ஆமாம் சுவாமி! இந்த வயல் நன்றாக விளையுமா, விளையாதா என்பது எனக்குத் தெரியும்" என்றார் விவசாயி. "இந்த வயல் நன்றாக விளையும், விளையாது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்பொழுது, எதற்காக இந்த வயலில் இப்படிக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்...! பேசமால் அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே!" என்றார் அருள்பணியாளர். இப்பொழுது விவசாயிக்கு அருள்பணியாளர் சொல்ல வந்த செய்தி நன்றாகப் புரிந்தது.

இறுதியாக அருள்பணியாளர் இப்படிச் சொல்லி முடித்தார்: "நாம் மீட்புப் பெறுவதும் பெறாததும் கடவுளுக்குத் தெரிந்தாலும், நாம் மீட்பு பெறுவதும் பெறாததும் நாம் வாழ்கின்ற வாழ்க்கையைப் பொருத்துத்தான் உள்ளது."

ஆம், நம்முடைய வாழ்விற்கும் தாழ்விற்கும் நம்மையன்றி வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. புலம்பல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகமானது, பாபிலோனியர்களால் எருசலேம் திருநகர் தீக்கிரையாக்கப்பட்டதைப் பார்த்த இறைநம்பிக்கையாளர் ஒருவருடைய வேதனையைப் பதிவுசெய்வதாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

ஒவ்வொருவருடைய செயலுக்கும் அவரே பொறுப்பு

பாபிலோனிய மன்னன் நெபுக்கத்னேசராலும், அவனுடைய மெய்க்காப்பாளர்த் தலைவன் நெபுசரதானாலும் எருசலேம் தரைமட்டமாக்கப்பட்டது; அங்கிருந்த ஏழைகள் தவிர்த்து மற்ற எல்லாரும் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைநம்பிக்கையாளர் ஒருவர், ஆண்டவர்தான் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் அரண்களையும் தகர்த்து, அதன் தலைவர்களை மேன்மை குலையச் செய்தார் என்று வேதனையோடு கூறுகின்றார்.. உண்மையில் ஆண்டவர் அல்ல, இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகச் செய்த விரோதமான செயல்களே அவர்களுடைய அழிவுக்குக் காரணமாக இருந்தது.

ஆண்டவரின் குரலைக் கேட்டு, அவரிடம் திரும்பி வந்து, அவருக்கு ஊழியம் செய்யுங்கள் என்று பல்வேறு இறைவாக்கினர்கள் இஸ்ரயேல் மக்ககளிடம் மீண்டும் மீண்டுமாகச் சொன்னார்கள். மக்கள்தான் இறைவாக்கினர்களின் குரலையும் இறைவனுடைய குரலையும் கேளாமல், பாகால் தெய்வத்தை வழிபட்டு, நெறிகேடான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். இதனாலேயே அவர்கள் இப்படியொரு மிகப்பெரிய அழிவினைச் சந்தித்தார்கள். ஆகவே, கடவுள் மக்களை அழித்தார் என்று சொல்வதையும் விடவும், மக்களே தங்களுடைய அழிவிற்குக் காரணமாக இருந்தார்கள் என்று சொல்லலாம்.

அவரை நோக்கிக் கைகளை உயர்த்துவோம்

யூதாவில் இருந்தவர்களுக்கு நேர்ந்த இந்த அழிவுக்கு அவர்களுடைய செயல்களே காரணம் என்று மேலே பார்த்தோம். அப்படியானால், நாம் கடவுள் தரக்கூடிய மேலான ஆசிகளையும் அருள்கொடைகளையும் பெறவேண்டும் என்றால், அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு இன்றைய முதல் வாசகத்தின், இறுதியாக வருகின்ற, "அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து" என்ற வார்த்தைகளே பதிலாக இருக்கின்றது. ஆம், நாம் கடவுள் தருகின்ற ஆசியையும் அருளையும் பெற, அவரை நோக்கி நம்முடைய கைகளையும் எண்ணங்களையும் உயர்த்தவேண்டும். இதுதான் நாம் செய்யவேண்டிய முதன்மையான செயலாக இருக்கின்றது.

ஆகையால், நாம் நம்மிடம் இருக்கின்ற தீவினைகளை விட்டுவிட்டு, நம்முடைய எண்ணங்களை ஆண்டவரை நோக்கி உயர்த்துவோம். அதன்வழியாக அவருடைய அன்பு மக்களாவோம்.

சிந்தனை

"கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுகள்" (கொலோ 3:1) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இவ்வுலகைச் சார்ந்தவற்றை அல்ல, மேலுலகு சார்ந்தவற்றை நாடி, ஆண்டவருக்கு உகந்தவர்கள் ஆவோம். அதன்வழியாக அவருடைய அருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மத்தேயு 8: 5-17

அவரில் நம் முழு எடையையும் இறக்கி வைப்போம்

நிகழ்வு

ஸ்காட்லாந்தில் பிறந்து, தெற்குப் பசிபிக் கடலில் உள்ள தீவுகளில் இருந்த மக்களுக்கு ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைத்து வந்தவர், மறைப்பணியாளரான ஜான் கிப்சன் பாட்டன் என்பவர். இவர் அங்கிருந்த மக்கள் பேசக்கூடிய மொழியில் திருவிவிலியத்தை மொழிபெயர்த்து வந்தார். இப்படிப்பட்ட சமயத்தில் இவருக்கு நம்பிக்கை என்ற வார்த்தையை எப்படி மொழிபெயர்க்கவேண்டும் என்று தெரியவில்லை. நம்பிக்கைக்கு இணையான வார்த்தை அந்த மக்கள் பேசக்கூடிய மொழியில் இல்லாததால் இவர் என்ன செய்யதென்று குழம்பித் தவித்தார்.


இந்நிலையில் ஒருநாள் ஜான் கிப்சன் பாட்டனைப் பார்ப்பதற்குப் பெரியவர் ஒருவர் வந்தார். வந்தவர் கொஞ்சம் தடிமனாக வேறு இருந்தார். அவர், ஜான் கிப்சனுக்கு முன்பாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டார். நாற்காலியில் அமர்ந்துகொண்டபோதும் அவர் நிலைகொள்ளாமலேயே இருந்தார். இதனால் அவர் தனக்கு முன்பாக இருந்த இன்னொரு நாற்காலியில் தன்னுடைய இரண்டு கால்களையும் எடுத்து வைத்து அமர்ந்தார். இப்பொழுது அவர் மிகவும் வசதியாக அமர்ந்துகொண்டதை உணர்ந்தார். பின்னர் அவர் ஜான் கிப்சனிடம், "இந்த நாற்காலியில் என் முழு எடையையும் இறக்கி வைத்துவிட்டு அமரும்போது எவ்வளவு வசதியாக இருக்கின்றது" என்றார்.

இதைக் கேட்ட ஜான் கிப்சனுக்குப் பொறி தட்டியது. இத்தனை நாள்களும் நாம் தேடிக்கொண்டிருந்த நம்பிக்கை என்ற வார்த்தைக்குச் சரியான வார்த்தை கிடைத்துவிட்டது என்று திருவிவிலியத்தில் எங்கெல்லாம் நம்பிக்கை என்ற சொல் வந்ததோ, அந்த இடத்திலெல்லாம் "முழு எடையையும் இறக்கி வைத்தல்" என்ற சொற்களைப் பயன்படுத்தினார்.

ஆம், "இறைவனால் எல்லாம் கூடும்" என்று நம்முடைய முழு எடையையும் அவர்மீது இறக்கி வைத்துச் செயல்பட்டால் அல்லது அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு செயல்பட்டால், நாம் வேண்டியது நிறைவேறும் என்பது உறுதி. இன்றைய நற்செய்தி வாசகம் நம்பிக்கையினால் நாம் இறைவனிடம் வேண்டுவது நிறைவேறும் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

புறவினத்தாரான நூற்றுவத் தலைவர் இயேசுவின்மீதுகொண்ட நம்பிக்கை

நற்செய்தியில், நூற்றுவத்தலைவர் இயேசுவின்மீதுகொண்ட நம்பிக்கையினால் தன்னுடைய பையனின் முடக்குவாதம் நீங்கி நலம்பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நூற்றுவத் தலைவர் யூதர் கிடையாது; புறவினத்தார். இப்படிப்பட்டவர் இயேசுவைக் குறித்து முழுமையாகத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்புக் கிடையாது, மற்றவர்கள் சொன்னதைக் கொண்டுதான் இயேசுவைக் குறித்து ஓரளவு தெரிந்திருக்க முடியும். அப்படியிருந்தாலும் இயேசுவின் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, அவரிடம், "நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்" என்று சொல்கின்றார். இயேசுவும் இவருடைய நம்பிக்கையைக் கண்டு, இவருடைய பையனுக்கு நலமாளிக்கின்றார்.


இதில் நாம் கவனிக்கவேண்டியது, இயேசு சொல்லக்கூடிய, "இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை" என்பதுதான். இயேசு எந்த மக்கள் நடுவில் அதிகமாகப் பணிசெய்தாரோ, அந்த மக்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ளவில்லை (மாற் 6:6). மாறாக, அவரைக் குறித்து அவ்வளவாகக் கேள்விப்படாத புறவினத்து மக்கள் அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இதனால்தான் இயேசு நூற்றுவத் தலைவரின் நம்பிக்கையை வியந்து பாராட்டுகின்றார்.


எல்லாருக்கும் நலமளிக்கும் இயேசு


ஆண்டவர் இயேசு நூற்றுவத் தலைவரின் பையனுக்கு நலமளித்த இந்த நிகழ்வு, நமக்கு ஒரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், இயேசு ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல அல்லது யூதர்களுக்கு மட்டுமல்ல எல்லா மக்களுக்கும் நலமளிக்கின்றார் என்பதாகும். நூற்றுவத் தலைவர் ஒரு புறவினத்தார் என்பதற்காக அவருடைய பையனுக்கு இயேசு நலமளிக்காமல் இருந்துவிடவில்லை. மாறாக, அவர்கொண்டிருந்த நம்பிக்கையை மட்டும் பார்த்து அவருடைய பையனுக்கு நலமளிக்கின்றார். அப்படியானால், ஒருவர் அவர் சார்ந்த குலத்தினால், இனத்தினால் மட்டும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியாது; கடவுள்மீது கொள்ளும் நம்பிக்கையினால் மட்டுமே, ஏற்புடையவராக முடியும். இதைத்தான் புனித பவுல் நம்பிக்கையினால் ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்" (உரோ 3: 28) என்று கூறுகின்றார்.

ஆகையால், நாம் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா என்று சிந்தித்து பார்த்து, ஒருவேளை நம்மிடம் நம்பிக்கை இல்லையென்றால், அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

"நேர்மையுடன் நடக்கும் என் அடியார், நம்பிக்கையினால் வாழ்வு அடைவார்" (எபி 10: 38) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால் நாம் எல்லார்மீதும் இரங்கும் கடவுளிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!