Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     26 ஜூன் 2020  

பொதுக்காலம் 12ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 யூதா மக்கள் நாடு கடத்தப்பட்டனர்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 25: 1-12

செதேக்கியாவினது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதம் பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடு எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி அதைச்சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான். இவ்வாறு அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டு வரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது. அவ்வாண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகரில் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.

அப்பொழுது, நகர் மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசப் பூங்காவின் இரு மதில்களுக்கு இடையே அமைந்த வாயில் வழியாக அராபாவை நோக்கி இரவில் ஓடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.

கல்தேயப் படையினர் அரசனைப் பின் தொடர்ந்து சென்று, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்; அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று. அவர்கள் அரசனைப் பிடித்து, இரிபலாவில் இருந்து பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான். பாபிலோனிய மன்னன், செதேக்கியாவின் புதல்வர்களை அவனது கண்முன்னே கொன்றான். மேலும் அவனுடைய கண்களைப் பிடுங்கிய பின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்.

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் ஏழாம் நாளன்று, அவன் பணியாளனும், மெய்க்காப்பாளர் தலைவனுமாகிய நெபுசரதான் எருசலேமிற்குள் நுழைந்தான். அவன் ஆண்டவரின் இல்லத்தையும், அரசனது அரண்மனையையும், எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் தீக்கிரையாக்கினான்; பெரிய வீடுகளை எல்லாம் தீயிட்டுப் பொசுக்கினான். மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்த கல்தேயரின் படையினர் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களைத் தகர்த்தெறிந்தனர்.

மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நகரில் எஞ்சியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னனிடம் சரணடைந்து இருந்தவர்ளையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்த்து நாடு கடத்தினான். மெய்க்காப்பாளர் தலைவன் திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டு வைத்தான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 137: 1-2. 3. 4-5. 6 . (பல்லவி: 6) Mp3
=================================================================================
பல்லவி: உன்னை நினையாவிடில் என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக!
1
பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.
2
அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். - பல்லவி

3
ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். "சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள் என்றனர். - பல்லவி

4
ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
5
எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப் போவதாக! - பல்லவி

6
உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல் வாயோடு ஒட்டிக் கொள்வதாக! - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
மத் 8: 17

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4


அக்காலத்தில்

இயேசு மலையிலிருந்து இறங்கியபின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார். இயேசு தமது கையை நீட்டிஅவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது. இயேசு அவரிடம், "இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மத்தேயு 8: 1-4

"நோயுடன் போராடவேண்டும்; நோயாளருடன் அல்ல"


நிகழ்வு



ஓர் ஆசிரியையாகத் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தவர் அமெரிக்காவைச் சார்ந்த மேரி ரீட் (Mary Reed 1854-19). இவர் தன்னுடைய முப்பதாவது வயதில், அதாவது 1884 ஆம் ஆண்டு கடவுளின் அழைப்பை உணர்ந்தார். ஆதலால், இவர் தன்னுடைய ஆசிரியர்ப் பணியைத் துறந்துவிட்டு, இந்தியாவிற்கு வந்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் சந்தாக் (Chandag) என்ற இடத்தில் உள்ள தொழுநோயாளர்கள் நடுவில் பணிசெய்யத் தொடங்கினார்.

உடல் முழுவதும் புண்களோடு, பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழுநோயார்கள்மீது மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு பணிசெய்த இவர், 1890 ஆம் ஆண்டு விடுமுறைக்காகத் தன்னுடைய வீட்டிற்கு வந்தபொழுதுதான் தெரிந்தது, இவருக்குத் தொழுநோய் இருக்கிறது என்று. இருந்தாலும், வீட்டிலுள்ள யாரிடமும் அதைக் காட்டிக்கொள்ளாமல், மீண்டுமாக வீட்டிற்கு வந்து தொழுநோயாளர்கள் நடுவில் தொழுநோயுடேனே பணிசெய்து வந்தார் இவர்.

1943 ஆம் ஆண்டு இம்மண்ணுலக வாழ்வைத் துறந்த மேரி ரீட், ஏறக்குறைய ஐம்பத்து ஒன்பது ஆண்டுகள் தொழுநோயாளர் நடுவிலே பணிசெய்து, அந்தத் தொழுநோயால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்காகவே தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

தொழுநோயாளர்களின் நலம்பெற வேண்டும் என்பதற்காகவே, தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த மேரி ரீடின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர் எப்படி தொழுநோயாளர்களிடம் கரிசனையோடும் அன்போடும் நடந்துகொண்டாரோ, அப்படி நாமும் நம்மோடு இருக்கின்ற நோயாளர்கள், வயது முதிர்ந்தவர்கள், இயலாதவர்கள் ஆகியோரிடம் கரிசனையோடும் அன்போடும் நடந்துகொள்ளவேண்டும். நற்செய்தியில், ஆண்டவர் இயேசு தன்னிடம் வரும் தொழுநோயாளர்மீது பரிவுகொண்டு அவரிடமிருந்த நோயை நீக்குவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு செய்த இந்த நற்செயல் நமக்கு என்ன செய்தியை எடுத்துக்கூறுகின்றது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவிடம் தாழ்ச்சியோடு நம்பிக்கையோடும் வந்த தொழுநோயாளர்

இயேசுவின் காலத்தில் தொழுநோயாளர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டார்கள். அதனால் அவர்கள் ஊருக்கு வெளியே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைக்கப்பட்டார்கள். அவர்கள் இவ்வாறு வைக்கப்பட்டதற்குக் காரணம் யூதச் சட்டம், ஒருவருக்குத் தொழுநோய் இருப்பது தெரிந்தால், அவர் தன்னைக் குருவிடம் காட்டிவிட்டு, ஊருக்கு வெளியே இருக்கவேண்டும் என்று சொன்னது (லேவி 13, 14). நற்செய்தியில் வருகின்ற தொழுநோயாளர் அப்படித்தான் ஊருக்கு வெளியே இருந்திருப்பார்.

இந்நிலையில் அவர், இயேசு மலையிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்துவிட்டு, இயேசுவின் முன்பாகப் பணிந்து, "ஐயா! நீர் விரும்பினால் எனது நோயை நீக்க முடியும்" என்கின்றார். இந்தத் தொழுநோயாளரின் செயலிலும், அவருடைய வார்த்தையிலும் இரண்டு முதன்மையான செயல்கள் வெளிப்படுகின்றன. ஒன்று, அவரிடமிருந்த தாழ்ச்சி. இரண்டு, அவரிடமிருந்த நம்பிக்கை. ஆம், தொழுநோயாளர் இயேசுவின் முன்பாகப் பணிவது, அவருடைய தாழ்ச்சியையும், "...எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று சொல்வது இயேசுவின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையையும் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.

தொழுநோயாளரைத் தொட்டு நலப்படுத்திய இயேசு

தன்னிடம் வந்த தொழுநோயாளர் தாழ்சியோடும் நம்பிக்கையோடும் இருப்பதைப் பார்த்து, இயேசு அவர்மீது பரிவுகொண்டு, அவரைத் தொட்டு நலப்படுத்துகின்றார். இங்கு இயேசு தொழுநோயாளரைத் தொட்டார் என்பது மிகவும் கவனிக்கவேண்டிய ஒரு செயலாக இருக்கின்றது.

யூத சமூகத்தில் தொழுநோயாளரைத் தொட்டால் தீட்டு என்று சொல்லப்பட்டது (லேவி 5:3, 13: 1-16; எண் 5: 2;. ஆனால், ஆண்டவர் இயேசு அதையும் மீறித் தொழுநோயாளரைத் தொட்டார் எனில், அவர் தன்னிடம் வந்த தொழுநோயாளரை ஒரு மனிதராகப் பார்த்தார் என்பதை எடுத்துக்கூறுகின்றது. நாமும்கூட நோயாளர்கள் குறித்து இத்தகைய பார்வையைக் கொண்டிருக்கவேண்டும் என்பதுதான் நமக்குத் தரப்படுகின்ற செய்தியாக இருக்கின்றது. பல நேரங்களில் நோயாளர்களை நாம் மனிதர்களாக நடத்துவதில்லை என்பதே வேதனை கலந்த உண்மை!

கொரோனோ நோய்த்தொற்றுக் காலத்தில் ஒருவரை நாம் அலைபேசியில் அழைக்கின்றபொழுது மீண்டும் மீண்டுமாகக் கேட்கக்கூடிய வார்த்தைகள், "நாம் நோயுடன் போராடவேண்டும்; நோயாளர்களுடன் அல்ல என்பதுதான். ஆகவே, நம்மோடு வாழக்கூடிய நோயாளர்கள், வலுக்குறைந்தவர்கள் ஆகியோர்மீது இயேசுவைப் போன்று பரிவோடு நடந்துகொண்டு, அவர்களுடைய நல்வாழ்விற்காக நம்மால் இயன்றதைச் செய்வோம்.

சிந்தனை

"யாரெல்லாம் நம்மிடமிருந்து பெற்றதைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களாக இருக்கின்றார்களோ, அவர்களுக்கு நல்லது செய்வதன் வழியாகவே இவ்வுலகில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகையால், நாம் திரும்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் நோயாளர்கள், வறியவர்கள் ஆகியோரிடம் நம்முடைய அன்பைக் காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 2 அரசர்கள் 25: 1-12

தீக்கிரையாக்கப்பட்ட எருசலேம் நகரம்

நிகழ்வு



துறவி ஒருவர் இருந்தார். ஒருநாள் இவரிடம் ஓர் இளைஞன் வந்தான். அவன் துறவியைத் தாழ்ந்து பணிந்து வணங்கிவிட்டுத் தன்னிடமிருந்த கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்கத் தொடங்கினான்.

"சுவாமி! திராட்சைப் பழங்களைச் சாப்பிடுவது தவறா?" என்றான் அந்த இளைஞன். "திராட்சைப் பழங்களைச் சாப்பிடுவது ஒன்றும் தவறில்லையே!" என்று துறவி சொல்லி முடித்ததும், "திராட்சைப் பழங்களோடு தண்ணீரையும் சேர்த்துச் சாப்பிட்டால் தவறா?" என்று அடுத்த கேள்வியிக் கேட்டான் இளைஞன். "அதுவும் தவறில்லையே! என்று துறவி சொன்னதும், "இவற்றோடு கொஞ்சம் நுரைமத்தையும் (Yeast) சேர்த்துச் சாப்பிட்டால் தவறா?" என்றான் இளைஞன்.

இதற்குப் பதிலேதும் சொல்லாத துறவி அவனிடம் திருப்பிக் கேள்வியைக் கேட்கத் தொடங்கினார். "தம்பி! உன்னுடைய தலையில் நான் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டேன் என்றால், உனக்கு வலிக்குமா?" "வலிக்காது" என்று இளைஞன் சொன்னதும், "மண்ணோடு கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து உன்னுடைய தலையில் கொட்டினால், உனக்கு வலிக்குமா?" என்றார் துறவி. "அப்பொழுதும் வலிக்காது?" என்று இளைஞன் சொன்னதும், துறவி அவனிடம், "சரி, மண்ணையும் தண்ணீரையும் நன்றாகக் கலக்கி, தீச்சூளையில் வைத்து அதைச் செங்கலாக்கி, உன் தலையில் எறிந்தால், உனக்குக் வலிக்குமா?" என்றார். இளைஞால் எதுவும் பேச முடியவில்லை.

அப்பொழுது துறவி அவனிடம், "தம்பி! நீ செய்யக்கூடிய தவற்றினை எப்படி வேண்டுமானால் நியாயப்படுத்தலாம். அல்லது இதெல்லாம் ஒரு தவறா என்றுகூடக் கேட்கலாம்; ஆனால், தவறு தவறுதான். அதை யாரும் மறுக்க முடியாது" என்றார். இளைஞன் தான் குடித்துக்கொண்டிருப்பது தவறு என்பதை உணர்ந்தவனாய் வீடு திரும்பினான்.

இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞனைப் போன்றுதான் பலரும் தாங்கள் செய்யக்கூடிய தவற்றினை நியாயப்படுத்தக் கூடியவர்களாகவும், இதெல்லாம் ஒரு தவறா என்று வாதிடக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். இன்றைய முதல் வாசகத்தில், பாகாலை வழிபடுவது ஒரு தவறா என்று வாழ்ந்து வந்த செதேக்கியாவும் அவனுடைய மக்களும் எதிரியின் கையில் வீழ்ந்து, நாடுகடத்தப்படுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இவர்களுக்கு நேர்ந்த இந்த அழிவிற்குக் காரணமென்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவருக்கு ஊழியம் செய்ய மறந்த இஸ்ரயேல் மக்கள்

அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து, இஸ்ரயேல் மக்களை மோசேக்குப் பின் வழிநடத்தி வந்த யோசுவா மக்களைப் பார்த்து, "இப்பொழுது, ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் செய்யுங்கள்... உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங்களை விட்டு விலகுங்கள்" (யோசு 24: 14) என்பார். இதற்கு மக்கள், "நாங்கள் எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்; அவரது குரலுக்குக் கீழ்ப்படிவோம்" (யோசு 24: 21: 24) என்பார்கள். ஆனால், ஆண்டுகள் மெல்ல உருண்டோடியபொழுது, அவர்களும் சரி, அவர்களுடைய வழிமரபினரும் சரி, ஆண்டவருக்கு ஊழியம் புரிவதையும், அவருடைய குரலுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதையும் விட்டுவிட்டுப் பாகால் தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில் எருசலேம் நகரும், நகரில் இருந்த அரண்மனையும், பெரிய பெரிய வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டு, யூதாவை ஆண்டுவந்த "பொம்மை அரசனாகிய செதேக்கியா பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் நாடுகடத்தப்பட்டான் எனில், அதற்கு முக்கியமான காரணம், அவன் உண்மைக் கடவுளை மறந்துவிட்டு பிற தெய்வங்களைத் தேடியதுதான். ஆதலால், யூதா எதிரிகளின் கையில் விழுந்ததற்கு மிக முக்கியமான காரணம், அதை ஆண்டுவந்த மன்னர்களும், மக்களும் உண்மைக் கடவுளை மறந்துவிட்டு, பாகால் தெய்வத்தை வழிபாட்டு வந்ததுதான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

நாம் யாருக்கு ஊழியம் செய்கின்றோம்?

வரலாறு நமக்குத் திரும்ப திரும்ப பாடம் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால், நாம்தாம் மிகப்பெரிய இழப்பினைச் சந்திக்க வேண்டிவரும். அன்று இஸ்ரயேல் மக்கள் உண்மைக் கடவுளை மறந்து வாழ்ந்ததால், மிகப்பெரிய அழிவினைச் சந்தித்தார்கள். இன்று நாமும்கூட உண்மைக் கடவுளை மறந்துவிட்டு, அந்தக் கடவுள் இருக்கின்ற இடத்தில் பணம், பொருள், புகழ் இன்ன பிறவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தோமேமெனில், இதுபோன்ற அழிவினைச் சிந்திப்போம் என்பதே உறுதி. ஆகையால், நாம் நம்முடைய தீச்செயல்களை விட்டு, உண்மையான இறைவனுக்கு ஊழியம் செய்து, அவருடைய அன்பு மக்களாவோம்.

சிந்தனை

"என்மீது அன்பு கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன் (இச 5: 10) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் நம் ஆண்டவரிடம் அன்புகூர்ந்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!