Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     24 ஜூன் 2020  

பொதுக்காலம் 12ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம்திருமுழுக்கு  யோவானின் பிறப்பு பெருவிழாத் திருப்பலி
=================================================================================
 நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் துணியில் என்னை மறைத்துக் கொண்டார். அவர் என்னிடம், "நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்" என்றார்.

நானோ, "வீணாக நான் உழைத்தேன்: வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்: ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது" என்றேன்.

யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்:

அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 139: 1-3. 13-14. 15 . (பல்லவி: 14a) Mp3
=================================================================================

பல்லவி: வியத்தகு முறையில் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்.
1
ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
2
நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
3
நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. - பல்லவி

13
ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!
14
அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். - பல்லவி

15
என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். - பல்லவி


இயேசுவின் வருகைக்கு முன்பே யோவான் போதித்து வந்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 22-26

அந்நாள்களில்

பவுல் கூறியது: கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து "ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன் என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்" என்று சான்று பகர்ந்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், "மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்" என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார்.

யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் "நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை" என்று கூறினார்.

சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
லூக் 1: 76 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இக்குழந்தையின் பெயர் யோவான்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66, 80

எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.

ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார். அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.

அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மத்தேயு 7: 15-20

போலிகள் சூழ் உலகு

நிகழ்வு


அமுதன் ஓர் இசைப் பிரியர். புதிதாக வரும் திரைப்படங்களுடைய இசைத் தட்டுகளை வாங்கி, அவற்றைத் தன்னுடைய வீட்டில் இருந்த ஒலிபெருக்கியில் போட்டுக் கேட்பது வழக்கம். அதில் அவனுக்கு ஓர் அலாதியான இன்பம்.

ஒருநாள் அவனிடமிருந்த ஒலிபெருக்கி வேலை செய்யாமல் போனது. அதை அவன் பல ஆண்டுகளாக வைத்திருந்தான். அதனால் அவன், "இந்த ஒலிபெருக்கியைச் சரிசெய்வதற்குப் பதில், புதிதாக வாங்கிவிடுவதே நல்லது" என்று, தான் இருந்த சிற்றூரிலிருந்து நகருக்கு வந்து, "Made in Japan" என்று எழுதப்பட்டிருந்த ஓர் ஒலிபெருக்கியைப் பத்தாயிரம் உரூபாய் விலை கொடுத்து வாங்கிச் சென்றான்.

தொடக்கத்தில் அந்த ஒலிபெருக்கி நன்றாகச் செயல்பட்டது. "கொடுத்த விலைக்கு இந்த ஒலிபெருக்கி தகும்" என்று அமுதன் மிகவும் பூரிப்படைந்தான். திடீரென்று ஒரு நாள் அந்த ஒலிபெருக்கி பழுதடைந்தது. ஆகவே, அவன் அந்த ஒலிபெருக்கியை, ஒலிபெருக்கியிலிருந்து பழுதை நீக்கும் கடைக்குத் தூக்கிக்கொண்டு சென்றான். கடைக்காரர் அந்த ஒலிபெருக்கியிலிருந்து பழுதை நீக்கும்பொழுதுதான் கண்டுபிடித்தார், அது ஜப்பானில் செய்யப்பட்டது அல்ல, இந்தியாவில் செய்யப்பட்டது என்று. அவர் அமுதனிடம் இந்த உண்மையைச் சொன்னபோது, "நாம் ஏமாந்துபோனோமே" என்று நொந்துபோனான்.

போலிகள் எங்கும் பெருகிவிட்டன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து, உண்ணும் உணவு வரை பெருகிவிட்டன. இதில் மதமும் விதிவிலக்கல்ல. எங்கு பார்த்தாலும் போலிப் போதகர்கள், போலிச் சாமியார்கள் பெருகிவிட்ட இந்தச் சூழலில், அவர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு, போலி இறைவக்கினர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்கின்றார். அவர்களைக் குறித்து எச்சரிக்கை இருப்பதற்கு அவர்கள் எப்படிப்பட்டர்கள் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. இன்றைய நற்செய்தி வாசகம் அவர்களைக் குறித்த தெளிவினைத் தருகின்றது. நாம் அதைப் பற்றி இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

யார் இந்தப் போலி இறைவாகினர்கள்?

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் போலி இறைவாக்கினர்கள் மிகுந்திருந்தார்கள் (2அர 3: 13; எசா 44: 25; எரே 23: 16). இவர்கள், ஆண்டவருடைய வெளிப்பாடு அல்லது செய்தி தங்களுக்குக் கிடைத்தது என்று சொல்லிக்கொண்டு, தங்களை "இறைவாக்கினர்" என்று அறிவித்துக் கொண்டு, மக்கள் நடுவில் பணிசெய்து வந்தார்கள். இதில் கவனிக்கவேண்டியது என்னவெனில், இவர்கள் எப்பொழுதுமே மன்னர்களையும் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடிய செய்தியை மட்டுமே சொல்லி வந்ததுதான். நாட்டிற்கு எதிராகப் போர் வரும் சூழல் இருந்தாலும், அமைதி, அமைதி என்றே சொல்லிவந்தார்கள். இயேசுவின் காலத்திலும், அவருக்குப் பிறகும்கூட இந்தப் போலி இறைவாக்கினர்கள் மிகுதியாக இருந்தார்கள் (மத் 24: 11; திப 20: 29). இவர்களுடைய முதன்மையான நோக்கம். பேரும் புகழும் பணமும் சம்பாதிப்பதுதான். அதற்காக இவர்கள் எப்படிப்பட்ட செயலையும் செய்யத் தயாராக இருந்தார்கள்.

போலி இறைவாக்கினர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

போலி இறைவாக்கினர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு வரும் ஓநாய்களாக இருப்பார்கள் என்று சொல்லும் இயேசு, இவர்களை இவர்களது செயல்களைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்ளலாம் என்று தெளிவாய்ச் சொல்கின்றார். இதற்காக இயேசு பயன்படுத்தும் உருவகம்தான் மரம், கனி பற்றிய உருவகம் ஆகும். நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும் என்று சொல்லும் இயேசு, போலி இறைவாக்கினர்களை அவர்கள் செய்யக்கூடிய பித்தலாட்டங்கள், ஏமாற்று வேலைகள், தன்னலத்தை மட்டுமே மையப்படுத்திய செயல்கள் ஆகியவற்றைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளலாம் என்கின்றார். ஆகையால், நாம் போலி இறைவாக்கினர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

போலி இறைவாக்கினர்களையும் போலிகளையும் குறித்துச் சிந்தித்துப் பார்க்கின்ற இந்த வேளையில், நாம் போலிகளாக இருக்கின்றோமா அல்லது இறைவனுக்கும், நம்மை நம்பி வாழ்பவர்களுக்கும் உண்மையாய் இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும் என்பது போல், நாம் நல்லவர்கள், உண்மையானவர்கள் என்பதை நமது நற்செயல்களால் நிரூபிக்கவேண்டும். அப்பொழுதான் நாம் நல்லவர்களாய், உண்மையுள்ளவர்களாய் இருக்கமுடியும்.

நாம் நல்ல கனிகளைக் கொடுக்கின்றோமா அல்லது நச்சுக் கனிகளைக் கொடுக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"அவர்களது முடிவு அவர்களுடைய செயல்களுக்கு ஏற்பவே அமையும்" (2 கொரி 11: 15) என்று போலி இறைவாக்கினர்களைக் குறித்துக் கூறுவார் புனித பவுல். ஆகையால், நாம் நச்சுக் கனிகளை அல்ல, நல்ல கனிகளைக் கொடுத்து, நல்லவர்களாய், உண்மையுள்ளவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 2 அரசர்கள் 22: 8-13, 23: 1-3

ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாக அவர் திருமுன் உடன்படிக்கை செய்த யோசியா

நிகழ்வு



பிரான்சு நாட்டு மன்னரான லூயிஸ், தனது இறப்பு நெருங்கி வந்துவிட்டதை உணர்ந்தார். உடனே இவர் தனக்கு நன்கு அறிமுகமான புனித வின்சென்ட் தெ பவுலை தன்னுடைய பணியாளர் ஒருவரை அனுப்பி, வரவழைத்தார். அவர் வந்ததும், மன்னர் லூயிஸ் அவரிடம், "என்னுடைய இறப்புக்கு நான் என்னையே தகுந்த விதமாய்த் தயாரிக்கவேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்றார்.

அதற்கு வின்சென்ட் தெ பவுல் அவரிடம், "நீங்கள் உங்களுடைய இறப்பிற்கு உங்களைத் தகுந்த விதமாய்த் தயாரிக்கவேண்டும் என்றால், ஆண்டவருடைய முன்மாதிரிகையை நீங்கள் பின்பற்றவேண்டும். இயேசு எப்படித் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி அவருக்கு உகந்தவராய் வாழ்ந்தாரோ, அப்படி நீங்கள் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி வாழவேண்டும். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், இயேசுவின் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடித்து வந்தால், உங்களால் நல்ல இறப்பினை அடைய முடியும்" என்றார்.

வின்சென்ட் தெ பவுல் இவ்வாறு சொல்லி முடித்ததும் மன்னர் லூயிஸ், "நீங்கள் சொல்வது போன்றே நான் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றேன். இப்பொழுது எனக்கு நீங்கள் ஆசி கூறுங்கள்" என்றார். வின்சென்ட் தெ பவுலும் அவருக்கு ஆசி கூற, மன்னர் லூயிஸ் நிம்மதியாய்த் தன்னுடைய ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தார். அப்பொழுது அவருடைய முகத்தைப் பார்த்த வின்சென்ட் தெ பவுல், "எத்தனையோ மனிதர்கள் இறக்கின்றபொழுது அவர்கள் அருகில் இருந்து, அவர்களுடைய முகத்தை நான் பார்த்திருக்கின்றேன்; ஆனால், யாருடைய முகத்திலும் இல்லாத பேரமைதி இவருடைய முகத்தில் காண்கின்றேன். இவர் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதாக வாக்களித்ததால்தான், கடவுள் இவருக்கு இப்படியொரு பேற்றினைத் தந்திருக்கின்றார்" என்றார்.

ஆம், நாம் கடவுளின் கட்டளைப்படி, அவருடைய திருவுளத்தின்படி நடக்கையில், அவர் தன்னுடைய ஆசியையும் அமைதியையும் வளமான வாழ்வினையும் நமக்கு அளிப்பார் என்பது உறுதி. முதல்வாசகத்தில் யூதாவை ஆண்டுவந்த யோசியா மன்னர், எருசலேம் திருகோயிலில் திருச்சட்ட நூல் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, மக்கள் அனைவரோடும் சேர்ந்து, ஆண்டவரோடு உடன்படிக்கை செய்துகொள்கின்றார். இதனால் அங்கு பேரமைதி உண்டாகின்றது. இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருக்கோயிலில் திருச்சட்ட நூல் கண்டெடுக்கப்படல்

யோசியா தமது எட்டாவது வயதில் யூதாவின் மன்னரானார். இவர் தமது ஆட்சியின் பதினெட்டாவது ஆண்டில், அதாவது இவருக்கு இருபத்து ஆறாவது வயது நடக்கும்பொழுது, குரு இல்க்கியா மற்றும் எழுத்தன் சாப்பான் ஆகியோரைக் கொண்டு எருசலேம் திருக்கோயிலைப் புதுபிக்கத் தொடங்குகின்றார். இப்பணி நடக்கின்றபொழுது திருச்சட்ட நூலானது கண்டெடுக்கப்படுகின்றது. இத்திருச்சட்ட நூல், இணைச்சட்ட நூல்தான் என்று ஒருசிலரும், ஐநூல் என்று ஒருசிலரும் சொல்வர். இந்நூலைக் கண்டெடுக்கும் குரு இல்க்கியா அதை எழுத்தன் சாப்பானிடம் கொடுக்க, அவரோ அதை யோசியாவிடம் கொண்டு வந்து வாசித்துக் காட்டுகின்றார்.

அதை வாசிக்கக்கேட்ட யோசியா தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொள்கின்றார். பின்னர் அவர், இத்திருச்சட்ட நூலில் தன்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும் என்ன சொல்லப்பட்டிருகின்றது என்பதைத் தெரிந்துகொண்டு வருமாறு குரு இல்க்கியா, எழுத்தன் சாப்பான், அகிக்காம், அக்போர், அசாயா ஆகியோரை இறைவாக்கினர் குல்தாவிடம் அனுப்பி வைக்கின்றார்.

ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாக அவரோடு உடன்படிக்கை செய்துகொள்ளுதல்

எருசலேம் திருக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட திருச்சட்ட நூலை எடுத்துக்கொண்டு, குரு இல்க்கியா, எழுத்தன் சாப்பான், அகிக்காம், அக்போர், அசாயா ஆகியோர் இறைவாக்கினர் குல்தாவிடம் சென்றபொழுது அவர், யோசியா ஆண்டவருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்திகொண்டு அழுததால், ஆண்டவர் யூதாவின்மேல் அனுப்பவிருந்த தீமைகளையெல்லாம் அவரது கண்ணில் காணாதபடி செய்வார் என்றும், அவர் மன அமைதியுடன் கல்லறைக்குச் செல்வார் என்றும் ஆண்டவர் கூறுவதாக அவர்களிடம் கூறுகின்றார். அவர்கள் இச்செய்தியை மன்னர் யோசியாவிடம் கூறியபொழுது, அவர் மக்கள் எல்லாரோடும் சேர்ந்து, ஆண்டவர் முன்பாக, அவருடைய கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடிப்பதாக உடன்படிக்கை செய்கின்றார். இதனால் அங்கு அமைதி நிலவுகின்றது.

ஆம், யோசியா மன்னர், தன் மக்களோடு ஆண்டவருடைய கட்டளைக் கடைப்படிப்பதாக அவரோடு உடன்படிக்கை செய்த பின்னரே, அங்கு தீவினை விலகி அமைதி பிறக்கின்றது. நாமும் நம்முடைய தீய நாட்டங்களை விட்டுவிட்டு, ஆண்டவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோம் எனில், நம்முடைய வாழ்வில் வரும் தீவினை விலகுவதோடு மட்டுமல்லாமல், நன்மைகளும் பெருகும். நாம் ஆண்டவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்" (விப 20: 6) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் கடவுளின் கட்டளைக் கடைப்பிடித்து அவரது அன்புக்கு உரியவர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!