Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     22 ஜூன் 2020  

பொதுக்காலம் 12ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 
++ஆண்டவர் இஸ்ரயேலைத் தள்ளிவிட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 17: 5-8,13-15,18

அந்நாள்களில் அசீரியா மன்னன், நாடு முழுவதன் மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான். ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான். ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர். மேலும் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும், இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின் படியும் நடந்து வந்தனர். ஆயினும் ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: "உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்." ஆனால் அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்; ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்து, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்; "வேற்றினத் தாரைப் பின்பற்றலாகாது" என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர். எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளிவிட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 60: 1. 2-3. 10-12 . (பல்லவி: 5b) Mp3
=================================================================================

பல்லவி: எங்களுக்குத் துணை செய்யும் ஆண்டவரே, எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!
1
கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டீர்; எங்களை நொறுக்கிவிட்டீர்; எங்கள்மீது சீற்றம் கொண்டீர்; இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும். - பல்லவி

2
நிலத்தை நீர் அதிரச் செய்தீர்; அதில் பிளவு உண்டாகச் செய்தீர்; அதன் வெடிப்புகளைச் சீர்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது;
3
உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்; மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். - பல்லவி

10
கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு விட்டீர் அன்றோ! கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ!
11
எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ வீண்.
12
கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
எபி 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

++முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள்.

 மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், `உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக் கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 2 அரசர்கள் 17: 5-8, 13-15,18

ஆண்டவரை மறந்து, அற்பமானவற்றைத் தேடிய இஸ்ரயேல் மக்கள்

நிகழ்வு



இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் ஒரு பெரிய நிறுவனத்தில் நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்காகப் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தான். தற்செயலாக அவன் தனக்கு எதிரில் பார்த்தபொழுது, ஒரு மனிதர் தன்னுடைய காதைச் சுவற்றையொட்டி வைத்துக்கொண்டு எதையோ கேட்டுக்கொண்டிருந்தார். நீண்டநேரமாக அவர் அப்படியே செய்துகொண்டிருந்ததால், அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. "இந்த மனிதர் அப்படி என்னதான் அந்தச் சுவற்றிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கின்றார்! அதை நாம் தெரிந்துகொள்வோமே! என்று அவனுக்குள் ஆர்வம் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் நேர்முகத் தேர்விற்குப் போகவேண்டும். அந்த நேர்முகத் தேர்வு அவனுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாக இருந்தது.

இப்படி இரண்டுக்கும் நடுவில் அவன் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமான நிலையில் இருந்தான். இதற்கு நடுவில் நேரம் கடந்துகொண்டே இருந்தது. அவன் போகவேண்டிய இடத்திற்கான பேருந்துகள்கூட போய்க்கொண்டே இருந்தன. அப்பொழுது அவனுக்குள் ஓர் எண்ணம் தோன்றியது. "எதிர்த்திசையில் இருக்கும் மனிதர் சுவற்றிலிருந்து என்ன கேட்டுக்கொண்டிருக்கின்றார் என்பதைத் தெரிந்துவிட்டு, அதன்பிறகு நேர்முகத் தேர்விற்குச் செல்வோம்" என்பதுதான் அவனுக்குள் தோன்றிய எண்ணம். இதற்குப் பின்பு அவன் சாலையைக் கடந்து, எதிர்த்திசையில் இருந்த மனிதரிடம் சென்றான்.

"ஐயா! உங்களை நீண்டநேரமாகக் கவனித்து வருகின்றேன். சுவற்றில் காதை வைத்துக்கொண்டு, எதையோ கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்... சுவற்றிலிருந்து அப்படி என்ன கேட்கின்றது என்பதை நான் தெரிந்துகொள்ளலாமா?" என்றான். "இந்தச் சுவற்றிலிருந்து என்ன கேட்கின்றது என்பது உனக்குத் தெரிந்துகொள்ளவேண்டுமா? நீயே காதை வைத்துக் கேள்" என்றார் அந்த மனிதர். உடனே அந்த இளைஞன் மிகவும் ஆர்வத்தோடு, சுவற்றில் காதைவைத்துக் கேட்கத் தொடங்கினான். ஒருநிமிடத்திற்கு மேலும் அவன் சுவற்றில் காதை வைத்துக் கேட்டபொழுதும் அவனுக்கு எதுவும் கேட்கவில்லை. அதனால் அவன் மிகுந்த ஏமாற்றத்தோடு, "ஐயா! நானும் ஒரு நிமிடத்திற்குள் மேல், இந்தச் சுவற்றில் என்னுடைய காதை வைத்துக் கேட்டுவிட்டேன். அப்படி எதுவும் எனக்குக் கேட்கவில்லையே!" என்றான்.

அதற்கு அந்த மனிதர், "நானும்கூட இந்தச் சுவற்றிலிருந்து ஏதாவது கேட்டுவிடும் என்பதற்காகத்தான் நீண்டநேரமாக இதில் காதைவைத்துக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்" என்றார். இளைஞன் பேய் அறைந்தவன் போல் ஆனான். இதற்குப் பின்பு அவன் பேருந்தில் ஏறி, நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்தைக் கண்டுபிடித்து, அங்கு செல்வதற்குள், நேர்முகத் தேர்வே முடிந்தது. அதனால் அவன் தன் விதியை நொந்துகொண்டான்.

இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அற்பமான ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னுடைய வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகராமலேயே போனான். இஸ்ரயேல் மக்களும் இப்படித்தான் ஆண்டவரைத் தேடாமல், அற்பமானவற்றை, அதாவது பாகால் தெய்வத்தைத் தேடினார்கள். இதனால் அவர்களுக்கு மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. இஸ்ரயேல் மக்கள் செய்த தவறு என்ன, அதற்கு அவர்களுக்குக் கிடைத்த தண்டனை என்ன என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளைத் தேடாததால் ஏற்பட்ட அசீரிய மன்னனின் படையெடுப்பு

இன்றைய முதல் வாசகத்தில் அசீரிய மன்னன் வடநாட்டின் மீது படையெடுத்து வந்து, அங்கிருந்தவர்களை நாடுகடத்திச் சென்றதைக் குறித்து வாசிக்கின்றோம். கி.மு.722 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தப் படையெடுப்பில் 27,290 பேர் நாடு கடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இப்படியொரு படையெடுப்பு இஸ்ரயேல் மக்கள்மீது நடந்ததற்கு இன்றைய முதல் வாசகம் சொல்லக்கூடிய காரணம், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்திலிருந்து அழைத்த வந்த உண்மைக் கடவுளை மறந்துவிட்டுப் பாகால் தெய்வத்தை வழிபட்டதுதான். இஸ்ரயேல் மக்களுடைய இந்த நன்றிகெட்ட தனத்தாலேயே, அவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள்.

திரும்புங்கள்; கடைப்பிடியுங்கள்

இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய நன்றிகெட்ட தனத்தால் ஆண்டவராகிய கடவுளை மறந்து, அதனால் நாடுகடத்தப்பட்டாலும், ஆண்டவர் அவர்கள்மீது இரக்கம்கொண்டு, தன்னுடைய இறைவாக்கினர்கள் வழியாக அவர்களிடம், "உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புகள்... என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்" என்று மீண்டும் மீண்டுமாகச் சொல்லிக்கொண்டேதான் இருந்தார் (எரே7: 3, 5, 18: 11). மக்கள்தான் கடவுளுடைய வார்த்தையைக் கேளாமல், தங்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டார்கள்.

ஆகையால், கடவுள் நம்முடைய வாழ்வில் பல்வேறு வல்ல செயல்களைச் செய்திருக்கின்றார் எனில், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்கு நம்முடைய வாழ்வில் முதன்மையான இடம் தருவதே சாலச் சிறந்தது.

சிந்தனை

"அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்பொழுது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்" (மத் 6: 33) என்பார் இயேசு. ஆகையால், நமக்கு பல்வேறு நன்மைகள் செய்த, இன்றும் செய்துகொண்டிருக்கும் ஆண்டவருக்கு உண்மையாய் இருந்து, அவருக்கு நம்முடைய வாழ்வில் முதன்மையான இடம் கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 7: 1-5

தீர்ப்பிடுதல் ஒரு மனிதத் தன்மையற்ற செயல்

நிகழ்வு



அது ஒரு துறவுமடம். அந்தத் துறவுமடத்தில் இருந்த வயதான துறவி ஒருவர், சாகும் தருவாயில் இருந்தார். ஆனாலும்கூட அவர் தான் சாகப்போகிறோமே என்ற கவலையே இல்லாமல், பாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவரைப் பார்த்துவிட்டு அந்தத் துறவுமடத்தில் இருந்த தலைமைத் துறவி அவரிடம், "சாகும் தருவாயில் இருக்கையில் இப்படியா நீங்கள் பாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பது...? சாகப்போகிறோமே என்று கொஞ்சம்கூட உங்களுக்குக் கவலையில்லையா?" என்று சற்றுக் கோபத்தோடு கேட்டார்.

அதற்கு அந்த வயதான துறவி, "நான் இளந்துறவியாக இருந்தபொழுது, ஒருநாள் கண்களை மூடிக்கொண்டு, திருவிவிலியத்தின் எந்த இறைவார்த்தையில் என்னுடைய விரலை வைக்கிறேனோ, அந்த இறைவார்த்தைப் பகுதியை நான் என்னுடைய வாழ்நாள் முழுக்கக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன். அதன்படி நான் கண்களை மூடிக்கொண்டு திருவிவிலியத்தின் ஓரிடத்தில் என்னுடைய விரலை வைத்தபொழுது, அந்தப் பகுதியில், "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்" (மத் 7:1) என்று இருந்தது. அன்று முடிவுசெய்தேன், இன்மேல் யாரையும் தீர்ப்பிடக்கூடாது என்று. நான் முடிவெடுத்தது போன்றே, இதுவரைக்கும் யாரையும் தீர்ப்பிடவில்லை. அதனால் கடவுளும் எனக்கு தீர்ப்பளிக்க மாட்டார் - நல்ல தீர்ப்பு அளிப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனவேதான் நான் எந்தவொரு கவலையும் இல்லாமல் இருக்கின்றேன்" என்றார்.

நாம் அடுத்தவரைத் தீர்ப்பிடாமல் இருக்கின்றபொழுது, நாமும் தீர்ப்புக்குள்ளாக மாட்டோம் என்ற செய்தியை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

தீர்ப்பிடுதல் ஒரு பாவம்

ஆண்டவர் இயேசு, எதற்குப் பிறர் குற்றவாளிகள் எனத் தீர்பளிக்கக்கூடாது என்று சொல்கின்றார் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த உலகத்தில் யாரையும் யாருக்கும் முழுமையாகத் தெரியாது. ஒருவர் தன்னுடைய கண்ணால் பார்த்ததைக் கொண்டு அல்லது மற்றவர் சொன்னதைக்கொண்டு அடுத்தவரைப் பற்றித் தெரிய வருகின்றார். அவர் அடுத்தவரைப் பற்றித் தெரிந்தது கொஞ்சம்தான். அதை வைத்துக்கொண்டு அல்லது ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், அவர் இப்படிப்பட்டவர் என்று தீர்ப்பிடுவது பாவம் அல்லவா! அதனால்தான் இயேசு பிறர் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடாதீர்கள் என்று கூறுகின்றார்.

இது தொடர்பாக வேய்ன் டயர் என்பவர் கூறும்பொழுது, "மற்றவர்களைப் பற்றித் தீர்ப்பளிக்கும்பொழுது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்கள் சொல்லவில்லை, நீங்கள் யாரென்று மற்றவர்களுக்குச் சொல்கிறீர்கள்" என்பார். மிகவும் கவனிக்கவேண்டிய வார்த்தைகள் இவை.

தீர்ப்பிடுதல் ஒரு பெருங்குற்றம்

பிறர் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடாதீர்கள் என்று இயேசு சொல்வதற்கு இரண்டாவது காரணம், நாமே குற்றவாளிகள், தவறு செய்யக்கூடியவர்கள் என்பதால்தான். நம்மிடம் மிகப்பெரிய குற்றத்தை வைத்துக்கொண்டு, அடுத்தவர் குற்றவாளி என்று தீர்ப்பிடுவது பெருங்குற்றம் அல்லவா! அதனால்தான் இயேசு அவ்வாறு சொல்கின்றார். இது தொடர்பாக கிளின்ட் ஈஸ்ட்வுட் என்ற எழுத்தாளர் குறிப்பிடும் பொழுது, "என்னைப் பற்றித் தீர்ப்பிடுவதற்கு முன்னால், நீ சரியானவனா என்பதைப் பார்த்துக் கொள்" என்பார். ஆகையால், மற்றவரைப் பற்றித் தீர்ப்பளிக்கும்பொழுது, நாம் சரியானவர்கள்தானா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தீர்ப்பிடுதல் ஒரு மனிதத் தன்மையற்ற செயல்

அடுத்தவரைப் பற்றித் தீர்ப்பளிக்கக்கூடாது என்று இயேசு சொல்வதற்கு மூன்றாவது காரணம், தீர்ப்பளிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே இருக்கின்றது என்பதால்தான். தீர்ப்பளிக்கும் அளிக்கும் அதிகாரம் உட்பட, எல்லா அதிகாரமும் இயேசுவுக்கு இருந்தாலும் (மத் 28: 18), அவர் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணைத் தீர்ப்பிடவில்லை. இதன்மூலம் கடவுள்தான் தீர்ப்பளிப்பார் என்பதை இயேசு மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவார். அப்படியிருக்கையில், கடவுள் செய்யவேண்டிய வேலையை நாம் செய்தால் பிறர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், அது மனிதத் தன்மையற்ற செயல் அல்லவா! அதனால்தான் இயேசு தீர்ப்பளிக்காதீர்கள் என்கின்றார்.

ஆகையால், தீர்ப்பளித்தல் பாவம், பெருங்குற்றம், மனிதத்தன்மையற்ற செயல் என்பதை உணர்ந்தவர்களாய், அடுத்தவர்களைக் குறித்து உயர்வான எண்ணத்தோடு (உரோ 12: 10) வாழ்வோம்; தீர்ப்பிடாமல் இருப்போம்.

சிந்தனை

"எப்பொழுதும் அடுத்தவர்களைப் பற்றித் தீர்ப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் அல்ல, தங்களைப் பற்றி ஆய்வுசெய்து, அதைத் திருத்திக்கொள்பவர்களே மகிழ்ச்சியான மனிதர்கள்!" என்கிறது ஒரு முதுமொழி. ஆகையால், நாம் அடுத்தவர்களைப் பற்றித் தீர்ப்பிட்டுக் கொண்டிருப்பதில் நேரத்தைச் செலவழிக்காமல், நம்மைத் திருத்திக் கொள்வதில் நேரத்தைச் செலவிட்டுக் கடவுளுக்குக் உகந்த வழியில் நடப்போம். அதனழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!