|
20 ஜூன் 2020 |
|
பொதுக்காலம் 12 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுள் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13
எரேமியா கூறியது:
"சுற்றிலும் ஒரே திகில்!" என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்;
"பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்" என்கிறார்கள்.
என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்;
"ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப்
பழி தீர்த்துக்கொள்ளலாம்" என்கிறார்கள்.
ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்.
எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள்
வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை;
அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.
படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரைச் சோதித்து அறிபவரும் உள்ளுணர்வுகளையும்
இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழி
வாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.
ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில்,
அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3a)
=================================================================================
திபா 69: 7-9. 13,16. 32-34 . (பல்லவி: 13b)
பல்லவி: கடவுளே! உமது பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
7
உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை
மூடிவிட்டது.
8
என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு
அயலான் ஆனேன்.
9
உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது;
உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.
- பல்லவி
13
ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம்
செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப்
பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர்.
16
ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது;
உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். - பல்லவி
32
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித்
தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
33
ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்;
சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.
34
வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும்.
- பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
5: 12-15
சகோதரர் சகோதரிகளே,
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப்
பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம்
செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. திருச்சட்டம்
தரப்படும் முன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது
அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில்
இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை
எனினும், சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாம்
வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.
ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில்,
ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும்
இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும்
பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 26b-27a
அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது
என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்,
என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 26-33
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது:"உடலை மட்டும் கொல்பவர்களுக்கு
அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும்
இல்லை; அறிய முடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான்
உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு
காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள்.
ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச
வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே
அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பது இல்லையா?
எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித்
தரையில் விழாது.
உங்கள் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக்
குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.
மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும்
என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன். மக்கள்
முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற
என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
I எரேமியா 20: 10-13
II உரோமையர் 5: 12-15
III மத்தேயு 10: 26-33
அஞ்சாதிருங்கள்; அஞ்சுங்கள்
நிகழ்வு
1989 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 12 ஆம் நாள் அமெரிக்காவைச்
சார்ந்த ரே ப்ளான்கென்ஷிப் (Ray Blankenship) என்பவருக்கு அமெரிக்க
அரசாங்கம் "Cost Guard"s Silver LIfesaving Medal" என்ற மிக
உயரிய விருதை வழங்கிச் சிறப்பித்தது. இதற்கு முக்கியக் காரணமாக
இருந்த நிகழ்வு இதுதான்:
ரே ப்ளான்கென்ஷிப், ஆற்றங்கரையோரமாக இருந்த தன்னுடைய வீட்டில்
இருந்து, சாளரத்தின் வழியாக எதிரே இருந்த ஆற்றையே உற்றப்
பார்த்துக்கொண்டிருந்தார். அன்றைய நாளில் ஆற்றில் நீர்வரத்து
மிக அதிகமாக இருந்தது. அப்பொழுதுதான் அந்த எதிர்பாராத நிகழ்வு
நடைபெற்றது. ஆம், ஆற்று வெள்ளத்தில் சிறுமி ஒருத்தி வேகமாக இழுத்துக்
கொள்ளப்பட்டு வந்தாள் அதைப் பார்த்ததும் ரே
ப்ளான்கென்ஷிப்பிற்கு ஒன்றும் ஓடவில்லை. பிறகு மனத்தில் துணிவை
வரவழைத்துக் கொண்டு, ஆற்றில் குதித்தார். ஆற்றில் வேகமாக இழுத்துச்
செல்லப்பட்ட சிறுமியைக் காப்பாற்றுவது ரே ப்ளான்கென்ஷிப்பிற்கு
மிகவும் சிரமமாக இருந்தது. இருந்தாலும், தன்னுடைய உயிரை ஒரு
பொருட்டாக எண்ணாமல், அந்தச் சிறுமியைக் காப்பாற்றி, கரைக்குக்
கொண்டு வந்தார். இதனால்தான் ரே ப்ளான்கென்ஷிப்பிற்கு அமெரிக்க
அரசாங்கம் மிக உயரிய விருதை வழங்கிச் சிறப்பித்தது.
இதில் வியப்பூட்டும் உண்மை என்னவென்றால், ஆற்றில் இழுத்துச்
செல்லப்பட்ட சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய ரே
ப்ளான்கென்ஷிப்பிறகு நீச்சலே தெரியாது என்பதுதான். ஆம், தனக்கு
நீச்சல் தெரியாதபோதும், ரே ப்ளான்கென்ஷிப் அதைப் பற்றிக் கவலைப்படாமல்,
அஞ்சாமல், ஆற்றில் குதித்து சிறுமியின் உயிரைக்
காப்பாற்றினார். அதனாலேயே அவருக்கு உயரிய விருந்து வழங்கப்பட்டது.
இயேசுவின் சீடராக இருக்கின்ற ஒவ்வொருவரும், யாருக்கும் அஞ்சாமல்,
இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வந்தால், ஆண்டவர் அதற்கேற்ற
கைம்மாறு தருவார்! பொதுக்காலத்தின் பன்னிரண்டாம் ஞாயிறான இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, அஞ்சாமல் ஆண்டவர் இயேசுவுக்குச்
சான்று பகர்ந்து வாழவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது
குறித்து இப்பொழுது நாம் சிந்திப்போம்.
மனிதர்களுக்கு அஞ்சாதிருங்கள்
இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றார்.
அவ்வாறு அனுப்புகின்றபொழுது, அவர்களுக்கு என்ன மாதிரியான சவால்களும்
ஆபத்துகளும் வரும்; அவற்றை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும்
என்பதைப் பற்றிப் பேசுகின்றார். அதுதான் இன்றைய நற்செய்தி வாசகமாக
இருக்கின்றது.
இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லும்
முதலாவது செய்தி, "உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்"
என்பதாகும். கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கின்றபொழுது மனிதர்களிடமிருந்து
எதிர்ப்புகள் வரலாம். ஏனெனில், அவர்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள்
அல்லர்; அதனால் உலகம் அவர்களை வெறுக்கும், கொல்லவும் கொல்லவும்
செய்யும் (யோவா 17: 14) அதனால்தான் இயேசு இவ்வுலகைச் சார்ந்தவர்களுக்கு
அல்லது உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம் என்கின்றார்.
இப்படி உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சாமல் ஆண்டவருக்குப்
பணிசெய்தவர்கள், பணி செய்கின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள்.
இவர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர் புனித தெர்த்துலியன்.
இரண்டாம் நூற்றாண்டில் யாருக்கும் அஞ்சாமல், கடவுளுக்குப் பணிசெய்த
இவர் சொல்லக்கூடிய வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை.
"நீங்கள் எங்களைக் கொல்லலாம், துன்புறுத்தலாம், சித்திரவதை
செய்யலாம். எந்தளவுக்கு நீங்கள் எங்களைத் துன்புறுத்துவீர்களோ,
அந்தளவுக்கு நாங்கள் வளருவோம். ஏனெனில், மறைச்சாட்சிகளின் இரத்தம்,
திருஅவையின் வித்து. மறைச்சாட்சிகளின் ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும்
முப்பது மடங்காக, அறுபது, மடங்காக, நூறு மடங்காக நம்பிக்கையாளர்களை
ஆண்டவர் பெருகச் செய்வார்." ஆம், ஆண்டவர் நம்பிக்கையாளர்களைப்
பெருகச் செய்துகொண்டே இருப்பார். நாம் செய்யவேண்டியதெல்லாம்,
உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாமல் அவருடைய பணிசெய்வதுதான்.
ஆண்டவருக்கு அஞ்சுங்கள்
ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்
என்று குறிப்பிட்ட இயேசு, ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க
வல்லவருக்கு அஞ்சுங்கள் என்கின்றார். இங்கு இயேசு கிறிஸ்து,
"ஆண்டவருக்கு அஞ்சுகள்" என்று சொல்வதன் பொருள் என்ன என்று
சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ஆண்டவருக்கு அஞ்சுதல் என்றால்,
அவரிடம் நம்மை முழுவதும் ஒப்படைத்துவிட்டு, அவருடைய திருவுளத்திற்குப்
பணிந்து வாழ்தல் ஆகும். இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின்
வார்த்தையை எடுத்துரைத்த இறைவாக்கினர் எரேமியாவிற்கு பலரிடமிருந்து
எதிர்ப்புகள் வருகின்றன. அப்படிப்பட்ட சூழலில் அவர் யாருக்கும்
அஞ்சாமல், "ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல் என்னோடு இருக்கின்றார்;
அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று
விடுவிக்கின்றார்" என்று சொல்லி துணிவோடு தன்னுடைய பணியைச்
செய்கின்றார்.
ஆம், நாம் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்கின்றோம் எனில், அவருடைய
பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் நம்பிக்கை கொண்டு வாழ்க்கையை அணுகுகின்றோம்
என்பதே பொருள். ஏனெனில், கடவுள் சாதாரண சிட்டுக் குருவிகளைக்கூட
தரையில் விழாமல் பார்த்துக் கொள்கின்றார். அப்படிப்பட்டவர் தனக்கு
அஞ்சி வாழ்வோரை எப்படி எல்லாம் பாதுகாப்பார் என்பதை நாம்
சிந்தித்துப் பார்த்துக் கொள்ளலாம். ஆகையால், நாம் மனிதர்களுக்கு
அல்ல, ஆண்டவருக்கு அஞ்சி வாழ்பவர்களாய் இருப்போம்.
மனிதர்களுக்கு அஞ்சாமல், ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்குக்
கிடைக்கும் கைம்மாறு
மனிதர்களுக்கு அல்ல, ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்குப் பணிசெய்யச்
சொல்லும் இயேசு, அப்படிப் பணிசெய்வோருக்கு என்ன கைம்மாறு
கிடைக்கும் என்பதை இன்றைய நற்செய்தியின் இறுதியில் அழகாக
எடுத்துக்கூறுகின்றார். "மக்கள் முன்னிலையில் என்னை
ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின்
முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்" என்று இயேசு சொல்வதன்
மூலம், அவர் தன்னை ஏற்றுக்கொண்டு, மக்கள் முன் அஞ்சாமல் சான்று
பகர்கின்றவருக்குத் தகுந்த கைம்மாறு அளிப்பதாகக் கூறுகின்றார்
.
நாம் கடவுளுக்கு அஞ்சி, அவருடைய பணியைச் செய்கின்றோமா?
சிந்தித்துப் பார்ப்போம். பல நேரங்களில் நாம், ராபர்ட் ஜி.லீ
என்ற எழுத்தாளர் குறிப்பிடுவது போன்று, கடவுளுக்கு அஞ்சாமல்,
மனிதர்களுக்கு அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்நிலையை
மாற்றிக்கொண்டு எல்லாம் வல்லவரும், தீமைகளிலிருந்து பாதுகாப்பு
அளிப்பவருமான ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய பணியைச் செய்வது
சிறந்தது. நாம் ஆண்டவருக்கு அஞ்சி அவருடைய பணியைச் செய்யத்
தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
இரண்டாம் உலகப் போரின்பொழுது அமெரிக்கா இராணுவத்தின் தளபதியாக
இருந்தவர் ஜார்ஜ் பேட்டான் என்பவர். இவர் சொல்லக்கூடிய செய்தி
இது: "எப்பொழுது நீங்கள் அஞ்சத் தொடங்குகின்றீர்களோ, அப்பொழுதே
நீங்கள் அழிவை நெருங்கிவிட்டீர்கள். இதற்கு மாறாக நீங்கள்
அஞ்சாமல் இருக்கின்றபொழுது, எப்படிப்பட்ட சவாலையும்
எதிர்கொள்கின்றவர்களாக இருக்கின்றீர்கள். இதைவிடவும் கடவுள்
எப்பொழுதும் தன் மக்களைத் தனித்து விடுவதில்லை. அவர் அவர்களோடு
இருந்து, எதிர்வரும் ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான ஆற்றலைத்
தருகின்றார்."
ஆம், ஆபத்துகள் மிகுந்த இந்த உலகில், ஆண்டவர் நம்மோடு
இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு நாம் நடைபோட்டோமெனில்,
எப்படிப்பட்ட ஆபத்துகளையும் நாம் எதிர்கொள்ளலாம். ஆகையால்,
நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, யாருக்கும் அஞ்சாமல்
அவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|