|
|
20 ஜூன் 2020 |
|
பொதுக்காலம்
11ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம் தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம் நினைவுக்கு
உரியது.
++அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார்.
குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 17-25
யோயாதா இறந்தபின்,
அரசர் தம்மைப் பணிந்து நின்ற தலைவர்களின் சொற்களுக்கு இணங்கினார்.
அதனால் அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப்
புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிபட்டனர்.
அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின்
மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார். அவர்கள் தம்மிடம் மீண்டும்
வருவதற்கு ஆண்டவர் அவர்களிடம் இறைவாக்கினர்களை அனுப்பினார்.
அவர்களும் மக்களைக் கண்டித்தனர். ஆனால் அவர்கள் செவி கொடுக்கவில்லை.
அப்போது கடவுளின் ஆவி குரு யோயாதாவின் மகன் செக்கரியாவின் மேல்
இறங்கியது; அவர் மக்கள் முன் நின்று அவர்களை நோக்கி: "இதோ,
கடவுள் கூறுகிறார்: ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன்? அதனால்
நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே! ஆண்டவரை நீங்கள் புறக்கணித்ததால்,
அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்" என்று கூறினார். அவர்கள்
அவருக்கு எதிராகச் சதி செய்து, அரசரின் ஆணைக்கேற்ப ஆண்டவரின்
இல்லத்து மண்டபத்தில் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர். அவர்
தந்தை யோயாதா காட்டிய பேரன்பை மறந்து, அரசர் யோவாசு செக்கரியாவைக்
கொல்லச் செய்தார். அவர் இறக்கும்போது, "ஆண்டவர் இதைக் கண்டு
பழிவாங்குவாராக!" என்றார். அடுத்த ஆண்டு, சிரியாப் படையினர்
அவருக்கு எதிராக வந்து, யூதாவிலும் எருசலேமிலும் புகுந்து மக்களின்
எல்லாத் தலைவர்களையும் கொன்று அழித்தனர். கொள்ளைப் பொருள்கள்
அனைத்தையும் தமஸ்கு மன்னனிடம் அனுப்பி வைத்தனர். சிரியர் மிகச்
சிறு படையுடன்தான் வந்தனர்; இருப்பினும், தங்கள் முன்னோரின்
கடவுளான ஆண்டவரை இஸ்ரயேலர் புறக்கணித்ததால், ஆண்டவர் அவர்களது
பெரும் படையைச் சிரியரின் கையில் ஒப்புவித்தார். அவர்கள்
யோவாசைத் தண்டித்தனர். கடும் காயமுற்ற நிலையில் யோவாசைச் சிரியர்
விட்டுச் சென்றனர். அவருடைய அலுவலர்களோ அவருக்கு எதிராகச் சதி
செய்து, குரு யோயாதாவின் மகனின் இரத்தப் பழியின் பொருட்டு அவரது
படுக்கையிலேயே அவரைக் கொன்றனர். தாவீதின் நகரத்தில் அவர் சடலத்தை
அடக்கம் செய்தனர்; ஆனால் அரசர்களின் கல்லறைகளில் அவரை அடக்கம்
செய்யவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 89: 3-4. 28-29. 30-32. 33 . (பல்லவி: 28a)
Mp3
=================================================================================
பல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.
3
"நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொண்டேன்; என்
ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத்
தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. - பல்லவி
28
அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு
நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும்
நிலைத்திருக்கும்.
29
அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை
வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன். - பல்லவி
30
அவன் புதல்வர் என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ, என் நீதி நெறிகளின்படி
நடக்காவிடிலோ,
31
என் விதிகளை மீறினாலோ, என் கட்டளைகளைக் கடைப் பிடிக்காவிடிலோ,
32
அவர்களது குற்றத்திற்காக அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்;
அவர்களின் தீச்செயலுக்காக அவர்களைக் கசையால் அடிப்பேன் - பல்லவி
33
ஆயினும், என் பேரன்பை தாவீதை விட்டு விலக்க மாட்டேன்; என்
வாக்குப் பிறழாமையினின்று வழுவ மாட்டேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 8: 9
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும்
அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து
வைத்திருந்தார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப்
போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி
விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து
அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார்.
இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர்
இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும்
அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத்
தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே
அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக்
கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.
அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும்
அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய
பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய
தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன்
தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு
தேடிக்கொண்டிருந்தோமே" என்றார். அவர் அவர்களிடம் "நீங்கள் ஏன்
என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க
வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார். அவர் சொன்னதை
அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப்
பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது
உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2 குறிப்பேடு 24: 17-25
நன்றாகத் தொடங்கியும் மோசமாக முடிந்த யோவாசின் வாழ்க்கை
நிகழ்வு
பிரான்ஸ் நாட்டின் மன்னராக இருந்தவர் பதினைந்தாம் லூயிஸ். இவருக்கு
ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் லூயூஸ். இந்த லூயூசிற்கு, தான்
மன்னருடைய மகள் என்ற கர்வம் எப்பொழுது இருந்து வந்தது. இதனால்
இவள் யாரையும் மதிப்பதில்லை; மரியாதை குறைவாகத்தான் பேசுவாள்.
இந்த லூயூசிற்குக் கீழ் ஓர் இளம்பெண் வேலை பார்த்து வந்தாள்.
அவள் கிறிஸ்துவின்மீது மிகுந்த பக்தி கொண்டவள். ஒருநாள் இளவரசி
லூயூஸ், அந்த இளம்பெண்ணைத் தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினாள்.
இத்தனைக்கும் அந்த இளம்பெண்மீது எந்தத் தவறு இல்லை. இதனால் அந்த
இளம்பெண் இளவரசியிடம், "என்னிடம் தவறு இருந்தால் சொல்லுங்கள்...
தவறே இல்லாமல் இப்படியெல்லாம் திட்டுவது முறையில்லை" என்றார்.
அந்த இளம்பெண்ணிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்த்திராத
இளவரசி, "நான் யாரென்று தெரியுமல்லவா! இந்த நாட்டின் மன்னருடைய
மகள்! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடமே இப்படிப்
பேசுவாய்...?" என்று கத்தினாள். அப்பொழுதும் நிதானம் இழக்காத
அந்த இளம்பெண், "நீங்கள் வேண்டுமானால், இந்த நாட்டினுடைய மன்னரின்
மகளாக இருக்கலாம்; ஆனால், நான் மன்னருக்கெல்லாம் மன்னராம் இயேசு
மகள். அதனால் தவறே செய்யாமல், யாரும் என்னை தகாத வார்த்தைகளால்
திட்டினால், இப்படித்தான் தட்டிக் கேட்பேன்" என்றாள்.
அந்த இளம்பெண் பேசிய வார்த்தைகள் இளவரசியைச் சிந்திக்க வைத்தன.
இதற்குப் பின்பு இளவரசி, தானும் மன்னருக்கெல்லாம் மன்னராம் இயேசுவின்
மகள் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் கர்மேல் சபையில் சேர்ந்து துறவியாகி,
இறைவனின் அன்பு மகளானாள்; எல்லாரையும் மதிக்கக் கற்றுக்கொண்டாள்.
இந்த நிகழ்வில் வரும் இளவரசி லூயூஸ் ஒருகாலத்தில் யாரையும் மதிக்காமல்,
கர்வத்தோடு இருந்தாள். எப்பொழுது அவள் கர்மேல் சபையில்
சேர்ந்து துறவியானாளோ அப்பொழுதே அவள் இறைவனின் அன்பு மகளானாள்;
எல்லாரையும் மதிக்கக் கற்றுக்கொண்டாள். ஆனால், இதற்கு
முற்றிலும் மாறாக, இறைவனின் அன்பு மகனாக இருந்து பின்னர்
சாத்தான் அல்லது பாகாலின் மகனாக மாறிய யோவாசின் அழிவைக்
குறித்து இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். அவனுக்கு ஏற்பட்ட
இந்த அழிவிற்குக் காரணமென்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
நன்றி மறந்த யோவாசு
அத்தலியா, தாவீதின் வழிமரபைச் சார்ந்தவர்களை அழிக்க
நினைத்துபொழுது, குரு யோயாதாவும், அவருடைய மனைவி யோசேபாவும்
தாவீதின் வழிமரபைச் சார்ந்த யோவசைக் காப்பாற்றி அரியணையில் அமர்ந்தினார்கள்;
ஆனால், அவன், குரு யோயாதா மறைந்த பிறகு, தன்னுடைய மூதாதையர்கள்
செய்த தவற்றை, அதாவது பாகால் தெய்வத்தை வழிபட்டு வந்தவர்களுக்கு
ஆதரவாகச் செயல்பட்டு வந்தான். மட்டுமல்லாமல், கோயிலில் இருந்த
பொருள்களைக்கூட அவன் பாகால் தெய்வ வழிபாட்டை ஆதரித்து வந்தவர்களுக்கு
அள்ளிக் கொடுத்தான். இது யோவாசு செய்த மிகப்பெரிய தவறு என்றுதான்
சொல்லவேண்டும். ஏனென்றால் குரு யோயாதா, பாகால் தெய்வ வழிபாட்டை
ஆதரித்து வந்தவர்களிடம் ஆட்சி போய்விடக்கூடாது என்பதற்காகக் கடுமையாகப்
போராடினார். ஆனால், அவருடைய மறைவிற்குப் பிறகு எல்லாவற்றையும்
மறந்து, பாகால் தெய்வ வழிபாட்டை ஆதரிக்கத் தொடங்கினான் யோவாசு.
அதை எதிர்த்துப் பேசிய குரு யோயாதாவின் மகனான செக்கரியாவையும்
அவன் மிகத் தந்திரமாகக் கல்லால் எறிந்து கொன்றுபோட்டான்.
கொடிய சாவைச் சந்தித்த யோவாசு
யோவாசு உண்மைக் கடவுளை மறைந்து பாகால் தெய்வ வழிபாட்டை ஆதரித்தது
மட்டுமல்லாமல், அவனுடைய தவற்றைச் சுட்டிய செக்கரியாவையும்
கொன்றுபோட்டதால், கடவுளின் சினம் அவனுக்கு எதிராக எழுந்தது.
இதனால் அவனுடைய படை சிரியரிடம் ஒப்புவிக்கப்படுகின்றது; அவன்
காயமுற்றான். பின்னர் அவனுடைய பணியாளர்களே அவனைக்
கொன்றுபோட்டார்கள். அவன் கொல்லப்பட்ட பிறகு, அரசர்கள் அடக்கம்
செய்யப்படும் இடத்தில் அடக்கம் செய்யப்படாமல் வேறோர் இடத்தில்
அடக்கம் செய்யப்படும் பரிதாப நிலைக்கு அவன் தள்ளப்பட்டான்.
யோவாசு தன்னுடைய வாழ்க்கையை நன்றாகத்தான் தொடங்கினான்.
நன்றாகத் அவன் தன்னுடைய வாழ்க்கையை முடித்திருக்கலாம்; ஆனால்,
அவன் நன்றி மறந்தவனாய், உண்மைக் கடவுளை விட்டு பாகாலுக்கு
பின்னால் சென்றான். அதனால் அவன் கொடிய முடிவைச் சந்தித்தான்.
நாம் கடவுளுக்கு இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதும் உண்மையாய்
இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவருடைய அன்பு மக்களாக நாம்
மாறமுடியும்.
சிந்தனை
"இறுதிவரை மனவுறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்" (மத் 24:
13) என்பார் இயேசு. நாம் தொடக்கத்தில் மனஉறுதியுடனும்,
கடவுளுக்கு உகந்தவர்களாவும் இருப்பது பெரிதில்லை. இறுதிவரை
மனவுறுதியுடனும் கடவுளுக்கு உகந்தவர்களாகவும் இருக்கவேண்டும்
அப்பொழுதுதான் நாம் மீட்புப் பெறுவோம். ஆகையால், நாம் இறுதிவரை
மனவுறுதியுடன் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 6: 24-34
"அவற்றை விட நீங்கள் மேலானவர்கள் அல்லவா?"
நிகழ்வு
அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா (Oklahoma) நகரில் ஆயராக
இருந்தவர் ஆயர் வில்லியம் ஆல்பர்ட் கோயல் (William Alfred
Quayle 1860- 1925). ஒருநாள் இரவு இவர் "நாளை என்ன நடக்குமோ?"
என்று மிகவும் கவலைப்பட்டு கொண்டு, தூக்கம் வராமல் அங்கும்
இங்கும் நடந்துகொண்டிருந்தார். அப்பொழுது ஏதோ ஒரு குரல்,
"கோயல்! நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். இந்த உலகையும்
உன்னையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்கின்றேன். நீ
நிம்மதியாகத் தூங்கு" என்று ஒலித்தது. பேசுவது இறைவன்தான்
என்பதை உணர்ந்த கோயல், நிம்மதியாகப் படுத்துத் தூங்கினார்.
மறுநாள் இவர் தூங்கி எழுந்தபொழுது, "இதெல்லாம் நடந்துவிடுமோ"
என்று அஞ்சிய எதுவும் நடக்கவில்லை. உடனே இவர், இந்த உலகையும்
தன்னையும் ஆபத்திலிருந்து காத்த இறைவனுக்கு நன்றி
செலுத்தினார். (A Source Book of Inspiration J. Maurus)
ஆம், நம்மைக் கண்ணின் கருவிழி போல இறைவன்
காத்துக்கொண்டிருக்கும்பொழுது, நாம் எதற்குக் கவலைப்படவேண்டும்
என்ற செய்தியைத்தான் இந்த நிகழ்வு நமக்கு
எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாகவும்
ஆண்டவர் இயேசு நமக்கு இதே செய்தியைத்தான் கூறுகின்றார். நாம்
அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
எல்லாருக்கும் தக்க வேளையில் உணவளிக்கும் இறைவன்
"எல்லா உயிர்களின் கண்களும் உம்மையே நோக்கியிருக்கின்றன. தக்க
வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்" (திபா 145: 15)
என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுவார். இவ்வார்த்தைகள்
சாதாரணமாக எழுதப்பட்ட வார்த்தைகள் என்று கடந்து போய்விட
முடியாது. கடவுளின் பாராமரிப்பையும் பாதுகாப்பையும் உணர்ந்த
ஒருவரால்தான் இப்படி எழுதியிருக்க முடியும்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய "சீடர்களைப்" பார்த்து
நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று சொல்வதற்குக் காரணம்,
வானத்துப் பறவைகளுக்கு உணவளித்து, வயல்வெளி மலர்களைப்
பராமரிக்கும் இறைவன், அவற்றை விட மேலானவர்களாக இருக்கும்
மனிதர்களை நிச்சயம் பராமரிப்பார் என்பதால்தான். இது தொடர்பாக
ஆஸ்வால்ட் சாம்பர்ஸ் என்ற எழுத்தாளர் குறிப்பிடும்பொழுது,
"நம்முடைய கவலைகளுக்கெல்லாம் காரணம், கடவுளின் பராமரிப்பை நாம்
உணராததுதான்" என்பார். ஆகவே, நாம் கடவுளின் பராமரிப்பை
உணர்ந்து வாழத் தொடங்கினால், எதற்கும் கவலைப்படத் தேவையில்லை
என்பது உறுதியாகின்றது.
கவலைப்படுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை
தன்னுடைய சீடர்கள் கவலைப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்கு
இயேசு சொல்லக்கூடிய இரண்டாவது காரணம், கவலைப்படுவதால்,
நம்முடைய உயரத்தோடு ஒரு முழம் கூட்டமுடியாது (லூக் 12: 25)
என்பதால்தான். இன்றைக்குப் பலருடைய கவலைக்கான காரணத்தை நாம்
விசாரித்துப் பார்த்தோமெனில், அது மிகவும் அற்பமானதாகவும்,
இதற்கெல்லாமா கவலைப்படுவார்கள் என்று நாம் வியப்பாக இருக்கும்.
இயேசு சொல்வதுபோல், கவலைப்படுவதால் எதுவும் ஆகப்போவதில்லை
என்பதை நாம் உணருகின்ற வேளையில், நாம் எதற்குக்
கவலைப்படமாட்டோம்.
கடவுளுக்கு ஏற்புடையவற்றை நாடினால், அவர் எல்லாவற்றையும்
பார்த்துக்கொள்வார்
நாம் கவலையில்லாமல் இருப்பதற்கு இயேசு சொல்லக்கூடிய மூன்றாவது
காரணம் மிகவும் முக்கியமானது. அதுதான் அனைத்திற்கும் மேலாக,
கடவுளுடைய ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுதல்.
எவர் ஒருவர் கடவுளுடைய ஆட்சியையும், அவருக்கு
ஏற்புடையவற்றையும் நாடுகின்றாரோ, அவரை கடவுள்
பார்த்துக்கொள்வார். மட்டுமல்லாமல், அவர் உணவு, உடை,
இன்னபிறவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கத் தேவையே
இல்லை. பலருக்குத் தங்களுடைய வாழ்க்கையில் எதற்கு
முக்கியத்துவம் கொடுப்பது என்பதுதான் மிகப்பெரிய பிரச்சனையே!
அற்பச் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டுப் பலர்
கவலைக்கு மேல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். என்றைக்கு
ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவற்றை நாடுகின்றாரோ, அன்றைக்கு
அவருக்குக் கவலைப்படுவதற்கு நேரமே இருக்காது என்று
சொல்லிவிடலாம்.
இது தொடர்பாக பி.சி.போஃர்பஸ் என்ற அறிஞர் குறிப்பிடும்பொழுது,
"உங்களால் சிறந்ததை இன்றைக்குச் செய்ய முடியுமென்றால், நீங்கள்
நாளைய நாளைக் குறித்துக் கவலைப்
பட்டுக்கொண்டிருக்கமாட்டீர்கள்" என்பார். ஆம், நாம் நமக்கு
எல்லாவிதமான ஆசிகளையும் தரக்கூடிய கடவுளின் திருவுளத்தை,
அவருக்குக் ஏற்புடையவற்றை இன்றைக்கே செய்ய முடியுமென்றால்,
நாளைய நாளைக் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆகையால்,
நாம் கடவுளின் ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடி,
கவலையில்லா வாழ்க்கை வாழ்வோம்.
சிந்தனை
"கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழ்பவர் கவலைப்படுவதில்லை.
கவலைப்படுகின்ற யாரும் கடவுள்மீது நம்பிக்கை வைப்பதில்லை"
என்பார் ஜார்ஜ் முல்லர். நாம் கடவுள்மீது நம்பிக்கை வைத்து,
அவருக்கு ஏற்புடையவற்றை நாடுவோம். அதன்மூலம் இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மரியாளின் மாசற்ற இதயப் பெருவிழா
இளைஞன் ஒருவன் கொடிய குற்றம்செய்ததற்காக, குற்றவாளிக் கூண்டில்
நிறுத்தப்பட்டான். அவனை விசாரித்துப் பார்த்த நீதிபதி
இறுதியில் அவனுக்கு மரணத்தண்டனை விதித்தார். அவன், தான் இந்த
நிலைக்குக் காரணமாக இருந்த சமூகத்தை, உறவுகளை, நண்பர்களை, ஏன்
தன்னுடைய தாயைக்கூட முற்றிலுமாக வெறுத்தான்.
தன்னுடைய மகனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்ற
செய்தியைக் கேள்விப்பட்டு, அவனுடைய தாய் அவனைப் பார்ப்பதற்காக
சிறைக்கூடம் நோக்கி ஓடோடி வந்தாள். அப்போது சிறைஅதிகாரி அவளைத்
தடுத்துநிறுத்தி, "அம்மா! உம்முடைய மகன் இப்போது யாரையும்,
(உங்களையும் சேர்த்து) பார்க்க விரும்பவில்லை" என்றார். அதற்கு
அந்தத் தாய் அவரிடம், "அது ஏன்?" என்று கேட்டதற்கு அவர்,
"உங்கள் அனைவரையும் அவன் முற்றிலுமாக வெறுக்கிறான். அவனுக்கு
இப்போது யாரையுமே பிடிக்கவில்லை" என்றார்.
அதற்கு அந்தத் தாய், "அவன் என்னை வெறுத்தால் என்ன!, நான் அவனை
முழுவதும் அன்பு செய்கிறேன்" என்றாள். மரணதண்டனைக் கைதியான
அந்த இளைஞன்மீது தாயானவள் எந்தளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்
என்பதை அந்த சிறைஅதிகாரி அப்போது உணர்ந்துகொண்டார்.
"தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு, இந்த உலகில் வேறு
எதுவுமில்லை" என்ற குன்றக்குடி அடிகளாரின் வார்த்தைகள் எவ்வளவு
அர்த்தம் நிறைந்ததாக இருக்கிறது என்பதை மேலே உள்ள நிகழ்வு
நமக்கு எடுத்துக்கிறது.
இன்று அன்னையாம் திருஅவை மரியாளின் மாசற்ற இதயப் பெருவிழாவைக்
கொண்டாடி மகிழ்கின்றது. அன்னையின் இதயம் மாசற்றது, அது
எப்போதும் அன்பினால் நிரம்பி வழிந்ததோடு மட்டுமல்லாமல்,
இறைத்திருவுளம் எதுவென அறிந்து, அதை நிறைவேற்றுவதிலே கண்ணும்
கருத்துமாய் இருந்தது. எனவே, இப்பெருவிழாவில் மரியாளின் மாசற்ற
இதயம் நமக்கு எத்தகைய பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று
சிந்தித்துப் பார்த்து மரியாளைப் போன்று, இறைத்திருவுளம்
எதுவென அறிந்து, அதை நிறைவேற்ற நாம் முயல்வோம்.
மரியாளின் மாசற்ற இதயத்திற்கான பக்திமுயற்சிகள்
கி.பி.பதினேழாம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டதற்கான வரலாறு
இருக்கிறது. ஜான் யூட்ஸ் என்ற குருவானவர்தான் மரியாளின் மாசற்ற
இதயத்திற்காக முதல்முறை திருப்பலி மற்றும் பூசைக்கருத்துகள்
ஒப்புக்கொடுத்தவர். அவர்தான் இப்பக்தி முயற்சி உலகெங்கும் பரவ
அடித்தளமிட்டவர். அதன்பின்னர் அன்னை மரியாள் பாத்திமா நகரில்
லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ் என்ற மூன்று சிறுவர்களுக்குக்
காட்சிகொடுத்தபோது இந்த பக்திமுயற்சி இன்னும் பரவத்
தொடங்கியது.
1917 ஆம் ஆண்டு, ஜூன் 13 ஆம் தேதி புதன்கிழமை காட்சியில்,
மரியன்னையின் தூய இதயம் முட்களால் ஊடுருவப்பட்டு இருப்பதை
லூசியா கண்டாள். ஜெசிந்தா, பிரான்ஸிஸ் மற்றும் மக்களோடு
ஜெபமாலை செபித்தபின் லூசியாவிடம் அன்னை மரியா, "நீ இன்னும்
கொஞ்சகாலம் இங்கு இருக்கவேண்டும். என்னை மக்கள் அறிந்து
நேசிக்கும்படி உன்னை பயன்படுத்த இயேசு விரும்புகிறார்; உலகில்
என் மாசற்ற இதய பக்தியை ஏற்படுத்தி, இப்பக்தியைக் கைக்கொள்ளும்
அனைவருக்கும் நான் மீட்பை வாக்களிக்கிறேன்; என் மாசற்ற இதயம்
உன் அடைக்கலமாகவும், கடவுளிடம் உன்னை அழைத்து செல்லும்
வழியாகவும் இருக்கும்" என்று கூறினார்.
அப்போது பேரொளியின் பிரதிபலிப்பு அவர்கள் மேல் பாய்ந்தது.
மாதாவின் வலது உள்ளங்கையில் முட்களால் குத்தித்
துளைக்கப்படுவதாகத் தோன்றிய ஓர் இதயம் இருந்தது. மனுக்குலத்தின
பாவங்களால் நிந்திக்கப்பட்டு, நம்மிடம் பரிகாரம் கேட்கிற
மரியன்னையின் தூய இதயம் தான் அது.
அன்னை மீண்டும் அவர்களிடம் "ஏதாவது சிறுசிறு ஒறுத்தல்கள்
செய்யுபோது, "ஓ! இயேசுவே" உமது அன்பிற்காகவும், பாவிகள்
மனந்திரும்புவதற்காகவும், மரியன்னையின் தூய இதயத்திற்கு
எதிராகக் கட்டிக் கொள்ளப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும்,
இதைச் செய்கிறேன்" என்று சொல்லும்படிக் கூறினார்; ரஷ்யாவை
என்மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வு நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு அருட்திரு
ஸ்தெபனோ கோபியிடம் அன்னை மரியாள் பேசும்போது, "தன் மாசற்ற
இதயத்தின் ஒளி, திருத்தந்தை, குருக்களை ஆசீர்வதிப்பதையும்,
அடைக்கலமாகவும், பாதுகாப்பாகவும் தன் இதயம் எப்போதும்
இருப்பதாகவும், தங்களையே அர்ப்பணிக்கவும்" கூறினார்.
இந்த நிகழ்வுகளை எல்லாம் அறிந்த திருத்தந்தை பனிரெண்டாம்
பத்திநாதர் 1944 ஆம் மரியாளின் மாசற்ற இதயப் பெருவிழாவை உலகம்
முழுவதும் கொண்டாடப் பணித்தார். தொடக்கத்தில் இவ்விழா ஆகஸ்ட்
22 ஆம் தேதிதான் கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பிறகு இவ்விழா
இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவிற்கு அடுத்த நாள் கொண்டாடப்
பணிக்கப்பட்டது.
மரியாளின் மாசற்ற இதயத்தைப் பற்றி திருவிவிலியம்
சொல்லாமலில்லை. அதற்குத் தெளிவான விவிலியச் சான்றுகள்
இருக்கின்றன. லூக்கா நற்செய்தி 2 ஆம் அதிகாரம் 19& 51(இன்றைய
நற்செய்தி வாசகம்) ஆகிய வாசங்களில், "மரியாள் நிகழ்ந்தவற்றை
எல்லாம் தன்னுடைய உள்ளத்தில் இருத்தி, சிந்தித்துக்
கொண்டிருந்தாள் என்று படிக்கின்றோம். அதேபோன்று லூக்கா
நற்செய்தி 2 ஆம் 35 ஆம் வசனத்தில் எருசலேம் திருக்கோவிலில்
சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் தாங்கி, "இக்குழந்தை
இஸ்ரயேல் மக்களின் பலரது வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும்
காரணமாக இருக்கும்.... உம்முடைய உள்ளத்தை ஒரு வாள்
ஊடுருவிப்பாயும்" என்று மரியாளைப் பார்த்துக் குறிப்பிடுவார்.
இதன்மூலம் மரியாள் ஆண்டவர் இயேசுவைப் பற்றியே தன்னுடைய
உள்ளத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தார் என்று உறுதி
செய்துகொள்ளலாம்.
மரியாள் எப்போதும் மீட்பின் திட்டத்தை தன்னுடைய உள்ளத்தில்
இருத்தி சிந்தித்துப் பார்த்தவள். அதோடு மட்டுமல்லாமல், அந்த
மீட்புத் திட்டம் நிறைவேற தன்னுடைய திருமகன் இயேசுவோடு
துன்பங்களையும், வேதனைகளையும், அவமானங்களையும் சந்தித்தவள்;
உள்ளத்தில் தூய அன்பை வைத்துக்கொண்டு, துன்புற்ற மானிட
சமுதாயத்திற்கு இரங்கியவள்.
ஆகவே, இத்தகைய ஒரு தூய, இரக்கமிக்க அன்னையைக் கொடையாகப்
பெற்றிருக்கும் நாம், அந்த அன்னை வாழ்ந்து காட்டிய நெறியின்படி
வாழ்வதுதான், நான் அன்னைக்குச் செய்யக்கூடிய மிகச் சிறந்த
கைமாறாக இருக்கும்.
ஒரு சாதாரண அன்னையே தன்னுடைய பிள்ளை நன்றாக இருக்கவேண்டும்,
வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை அடையவேண்டும் என்று கனவுகண்டு,
அதற்காக தன்னுடைய உடல், பொருள் அத்தனையும் தியாகமாகத் தருவாள்.
(தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளின்
வளர்ச்சியில் அவர்களுடைய தாயின் பங்கு எந்தளவுக்கு அளவிட
முடியாததாக இருந்தது என்பதை இங்கே நாம் நினைவில்
கொள்ளவேண்டும்). அப்படியிருக்கும் போது மரியாள் நமக்காக,
நம்முடைய மீட்புக்காக எத்தகைய தியாகங்களை மேற்கொண்டிருப்பார்
என்பதை நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.
எனவே, நாம் அன்னையின் அன்புப் பிள்ளைகளாக மாறவேண்டும் என்றால்,
மரியாளின் மாசற்ற இதயப் பெருவிழாவை அர்த்தமுள்ளதாக
மாற்றவேண்டும் என்றால் அவரைப் போன்று இறைத்திருவுளம் எதுவென
அறிந்து, அதை நிறைவேற்ற முன்வரவேண்டும். அதுதான் நாம் அன்னைச்
செலுத்தும் காணிக்கையாக இருக்கும். இவ்வாறு நாம்
இறைத்திருவுளம் எதுவென அறிந்து, அதை நிறைவேற்றும்போது இன்றைய
முதல் வாசகத்தில் கேட்பது போன்று "நாம் மக்களினங்கள் நடுவில்
புகழடைவோம்; ஆண்டவரின் ஆசி பெற்ற மக்களாக விளங்கிடுவோம்".
எனவே, மரியாவின் மாசற்ற இதயப் பெருவிழாக் கொண்டாடும் இந்த
நல்லநாளில் மரியாளைப் போன்று, நம்முடைய இதயத்தையும்,
வாழ்வையும் தூயதாக்கிக்கொள்வோம், இறைதிருவுளம் அறிந்து அதை
நிறைவேற்றுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். Fr.
Maria Antonyraj, Palayamkottai. |
|