|
|
19 ஜூன் 2020 |
|
பொதுக்காலம்
11ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம் இயேசுவின் திருஇதயம்
பெருவிழா
=================================================================================
ஆண்டவர் உங்கள்மீது அன்புகூர்ந்தார்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 7: 6-11
உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணிலுள்ள
எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாகக் கடவுளாகிய
ஆண்டவர் தேர்ந்து கொண்டார். எல்லா மக்களிலும் நீங்கள் திரளானவர்கள்
என்பதற்காக ஆண்டவர் உங்கள்மீது அன்பு கொண்டு உங்களைத் தேர்ந்து
கொள்ளவில்லை. உண்மையில், எல்லா மக்களிலும் நீங்கள் சொற்பமானவர்களே!
மாறாக, உங்களிடம் அன்புகூர்ந்ததனாலும், உங்கள் மூதாதையருக்கு
ஆணையிட்டுக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டும், ஆண்டவர்
தமது வலிமைமிகு கரத்தால் உங்களைப் புறப்படச் செய்து, அடிமைத்தன
வீட்டினின்றும் எகிப்து மன்னனாகிய பார்வோனின் கையினின்றும் உங்களை
விடுவித்தார். எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவரே கடவுள் எனவும்,
அவரே உண்மையான இறைவன் எனவும் அறிந்துகொள்ளுங்கள். அவர்மீது அன்புகூர்வோருக்கும்
அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கும் ஆயிரம் தலைமுறைவரைக்கும்
தம் இரக்கத்தின் உடன்படிக்கையைக் காக்கின்றவர் அவரே! ஆனால்,
அவரைப் பகைப்பவரை அழிப்பதன் மூலம் நேரடியாகப் பதிலளிப்பார்;
அவரை வெறுப்பவரை நேரடியாகத் தண்டிப்பதற்கும் காலம் தாழ்த்த
மாட்டார். எனவே நீங்கள் கடைப்பிடிக்கும்படி நான் உங்களுக்கு இன்று
இடும் கட்டளைகளையும், நியமங்களையும் முறைமைகளையும்
நிறைவேற்றுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 103: 1-2. 3-4. 6-7. 8,10 . (பல்லவி: 17)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர்மீது அவரது பேரன்போ
நிலைத்திருக்கும்.
1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை
ஏத்திடு!
2
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும்
மறவாதே! - பல்லவி
3
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம்
குணமாக்குகின்றார்.
4
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப்
பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி
6
ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும்
அவர் உரிமைகளை வழங்குகின்றார்.
7
அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை
இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். - பல்லவி
8
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும்
உள்ளவர்.
10
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு
ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - பல்லவி
இரண்டாம் வாசகம்
கடவுள் அன்பாய் இருக்கிறார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 4: 7-16
அன்பிற்குரியவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக!
ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும்
கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்.
அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய்
இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே
மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு
வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல,
மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக்
கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.
அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால்,
நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு
கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது
அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால்
நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார்
எனவும் அறிந்துகொள்கிறோம். தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக
அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கின்றோம்.
இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கை இடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்;
அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள
அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார்.
அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும்
அவரோடு இணைந்திருக்கிறார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்,
என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 11: 25-30
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தின் முன்பாக, "தந்தையே,
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில்
ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை
எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத்
தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த
வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்"
என்று கூறினார். மேலும் அவர், "பெருஞ்சுமை சுமந்து
சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்
கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல்
கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது"
என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2 அரசர்கள் 11: 1-4, 9-18, 20
தன் மக்களைக் கைவிடாத இறைவன்
நிகழ்வு
மாமன்னர் பிரடெரிக் (1712-1786) பிரண்டேர்பர்க்கில் இருந்த ஒரு
பள்ளிக்கூடத்தைப் பார்வையிடச் சென்றிருந்தார். அந்தப் பள்ளிக்கூடத்திற்குள்
நுழைந்து, ஒரு வகுப்பறைக்குள் இவர் சென்ற நேரத்தில், அங்குப்
புவியியல் பாடமானது நடந்துகொண்டிருந்தது.
உடனே மானன்னர் பிரடெரிக் ஒரு மாணவனை எழுப்பி கேள்வி கேட்கத் தொடங்கினார்.
"நாம் இருக்கக்கூடிய இந்த பிரண்டேர்பர்க் எங்குள்ளது?". மாணவன்
சிறிதும் தாமதியாமல், "ப்ருஸ்சியா மாகாணத்தில் உள்ளது" என்றான்.
"ப்ருஸ்சியா மாகாணம் எங்கு உள்ளது?" என்று மீண்டுமாக மாமன்னர்
அவனிடம் கேட்க, "ஜெர்மனியில் உள்ளது" என்றான்.
மாமன்னர் விடவில்லை. "ஜெர்மனி எங்கு உள்ளது?" என்று மீண்டும்
அவனிடம் கேட்க, அவன், "ஐரோப்பாக் கண்டத்தில் உள்ளது" என்றான்.
"ஐரோப்பா கண்டம் எங்குள்ளது?" என்று அவர் அவனைத் தொடர்ந்து
கேட்க, அவன், "ஐரோப்பா கண்டம் உலகில் உள்ளது" என்றான். "உலகம்
எங்கு உள்ளது?" என்று மானன்னர் தன்னுடைய இறுதிக் கேள்வியைக்
அவனிடம் கேட்டபொழுது, அவன் பொறுமையாகச் சிந்தித்துவிட்டு,
"இந்த உலகம் கடவுள் கையில் உள்ளது. அதுவும் மிகவும்
பாதுகாப்பாக உள்ளது" என்றான்.
அந்த மாணவனிடமிருந்து இப்படியொரு பதிலைச் சிறிதும் எதிர்பாராத
மாமன்னர் அவனை வெகுவாக பாராட்டினார் .
ஆம், இந்த உலகமும் இதில் உள்ள நாம் அனைவரும் கடவுளின் கையில்
இருக்கும்பொழுது நமக்கேதும் ஆபத்து வந்துவிடுமா என்ன...? இன்றைய
முதல் வாசகம், தாவீது வழிமரபே இப்புவியில் இருக்கக்கூடாது...
அதைக் கூண்டோடு அழிக்கவேண்டும் என்று நினைத்த அத்தலியாவிடமிருந்து
தாவீது வழிமரபு காப்பாற்றப்படுவது குறித்தும், புதிய அரசராகத்
தாவீது வழிமரபில் யோவாசு நியமிக்கப்படுவதைக் குறித்தும்
வாசிக்கின்றோம். இதைப் பற்றி இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்
தாவீதின் வழிமரபைக் கூண்டோடு அழிக்க நினைத்த அத்தலியா
பாகால் தெய்வ வழிபாட்டை ஆதரித்து வந்த ஆகாபு மன்னனின் மகள் அத்தலியா.
இவள் யூதாவில் மன்னனாக இருந்த தன் மகன் அகசியா, எகூ என்பவனால்
கொல்லப்பட்ட பின்பு, கிமு. 837 ஆம் ஆண்டு யூதாவின் ஆற்றிப்
பொறுப்பை ஏற்றாள். இவள் யூதாவின் ஆற்றிப் பொறுப்பை ஏற்ற
பின்பு, தாவீது அரசரின் குடும்பத்தைச் சார்ந்த அத்தனை பேரையும்
கொன்றொழித்தாள். ஆனால், இறைவன் அரச குடும்பத்தைச் சார்ந்த
யோவாசு என்ற ஒரு வயதுக் குழந்தையை மட்டும் குரு யோயாதா மற்றும்
அவருடைய மனைவி யோசேபா வழியாகப் பத்திரமாகக் காப்பாற்றினார்.
யோயாதா, யோசேபா வழியாகக் கடவுள் தாவீதின் வழிமரபைக் காப்பாற்றுதல்
ஆண்டவருக்கெனக் கோயிலில் கட்ட விரும்பிய தாவீது மன்னனிடம் கடவுள்
இறைவாக்கினர் நாத்தான் வழியாக, "...என் முன்பாக உனது குடும்பமும்
உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே
நிலைத்திருக்கும்" (2 சாமு 7: 16) என்று கூறுவார். அவ்வார்த்தைகள்
இன்றைய முதல் வாசகத்தோடு அப்படியே பொருந்திப் போகின்றன. ஆம்,
தாவீதின் குடும்பத்தை அத்தலியா கூண்டோடு அழிக்க நினைத்தபொழுது,
கடவுள் யோயாதா மற்றும் அவருடைய மனைவி யோசேபா வழியாக அரச குடும்பத்தைச்
சார்ந்த யோவாசைப் பத்திரமாகக் காப்பாற்றினார். மேலும் இவர்கள்
இருவர் வழியாகவும் செவிலிப் பெண்ணின் வழியாகவும் யோவாசை அரசி
அத்தலியாவிற்குத் தெரியாமல் பாதுகாத்தார்.
இந்நிலையில் யோவாசுக்கு ஏழு வயது நடக்கும்பொழுது, குரு யோயாதா
அவரை அரசராகத் திருமுழுக்கு செய்கின்றார். இதைப்
பார்த்துவிட்டு அங்கிருந்தவர்கள், "அரசர் நீடூழி வாழ்க" என்று
வாழ்த்த, இந்த சத்தத்தைக் கேட்டு அங்கு வரும் அத்தலியாவை ஏற்கெனவே
ஏற்பாடு செய்யப்பட்டது போல் நூற்றுவர் தலைவர்கள்
கொன்றுபோடுகின்றார்கள்.
பாகால் கோயில் தகர்க்கப்பட்டு, நாட்டில் அமைதி நிலைநாட்டப்படுதல்
அத்தலியா கொல்லப்பட்ட பிறகு, ஆண்டவர் ஒருபக்குமுமாக, அரசன் மக்கள்
ஒருபக்கமாக அவர்களிடையே யோயாதா உடன்படிக்கை செய்து
வைக்கின்றார். பின்னர் நாட்டில் இருந்த பாகால் தெய்வ பலிபீடங்கள்
தகர்க்கப்படுகின்றன. யோவாசு மன்னன் அரியணையில் ஏற, நாட்டில் அமைதி
ஏற்படுகின்றது. மக்களும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்குகின்றார்கள்.
கொடியவளான அத்தலியா கொல்லப்பட்டதும், அதன்பிறகு யோவாசு அரியணையில்
ஏறியதும், நமக்கு ஒரு செய்தியை மிக அழுத்தம் திருத்தமாக எடுத்துச்
சொல்கின்றது. அதுதான், கடவுள் தன் மக்களைக் கைவிடமாட்டார் என்பதாகும்.
ஆகையால், நம்மைக் கைவிடாமல் தாங்கியிருக்கும் இறைவனுடைய
வழியில் நடந்து, நாம் அவருக்கு உகந்த மக்களாவோம்.
சிந்தனை
"ஆண்டவரே, உம்மை நாடிவருவோரை நீர் கைவிடுவதில்லை" (திபா 9: 10)
என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்மைக் கைவிடாமல்,
நெஞ்சில் வைத்துத் தாங்கியிருக்கும் இறைவனின் பராமரிப்பை எப்பொழுதும்
நம்முடைய வாழ்வில் உணர, அவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 6: 19-23
விண்ணுலகில் எவ்வளவு செல்வம் சேமித்து
வைத்திருக்கின்றீர்கள்?
நிகழ்வு
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் மறைப்பணி செய்துவந்தவர்
ஜார்ஜ் டபிள்யூ. ட்ரூத். ஒருநாள் இவருக்கு இவருடைய பகுதியில்
இருந்த ஒரு மிகப்பெரிய பணக்காரரிடமிருந்து, தன்னுடைய வீட்டில்
நடைபெறும் விருந்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்தது.
ஜார்ஜும் அந்தப் பணக்காரருடைய அழைப்பினை ஏற்று, அவருடைய
வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டார்.
விருந்து முடிந்ததும், பணக்காரர் ஜார்ஜைத் தன்னுடைய வீட்டின்
மேல்மாடிக்கு அழைத்துச் சென்று, "நான் இந்த இடத்திற்கு வந்தபொழுது
கையில் ஒன்றுமில்லாமல்தான் வந்தேன். ஆனால், இப்பொழுது பலகோடிகளுக்கு
அதிபதி" என்று பேசிக்கொண்டே, கையை வடதிசை நோக்கிக்காட்டி, "அதோ
தெரிகின்றதே! எண்ணெய்க் கிணறுகள்! அதெல்லாம் என்னுடையதுதான்"
என்றார். பின்னர் அவர் தென்திசையை நோக்கித் தன்னுடைய கையைத்
திரும்பி, "அதோ பச்சைப் பசேல் என்று தெரிகின்றனவே வயல்கள்! அவையெல்லாம்
என்னுடையவைதான்" என்றார். ஜார்ஜ் அந்தப் பணக்காரர் சொன்னதையெல்லாம்
பொறுமையாகக் கேட்டுக் கொண்டார்.
பின்னர் அந்தப் பணக்காரர், கீழ்த்திசை நோக்கித் தன்னுடைய கையை
நீட்டி, "அதோ தெரிகின்றதே! மாட்டுப் பண்ணை! அதுவும் என்னுடையதுதான்"
என்றார். அதன்பிறகு அவர் மேல்திசை நோக்கி தன்னுடைய கையை
நீட்டி, "அங்கு தெரிகின்றதே ஆப்பிள் தோட்டம்! அதுவும் என்னதுதான்!"
என்றார். இப்படி எல்லாவற்றையும் சொல்லி முடித்த அந்தப் பணக்காரர்,
ஜார்ஜ் ஏதாவது தன்னைப் பற்றிப் பாராட்டிப் பேசுவார் என்று எதிர்பார்த்தார்.
அப்பொழுது ஜார்ஜ் அந்தப் பணக்காரரின் தோளில் கையைப் போட்டு, வானத்தைச்
சுட்டிக்காட்டியவாறு, "எல்லாப் பக்கமும் சொத்துச் சேர்த்து
வைத்திருக்கின்றீர்கள்! நல்லது! மேலே, விண்ணகத்தில் எவ்வளவு
சொத்துச் சேர்த்து வைத்திருக்கின்றீர்கள்?" என்றார். ஜார்ஜிடமிருந்து
இப்படியொரு கேள்வியை எதிர்பார்த்திராத அந்தப் பணக்காரர்,
"இதுவரைக்கும் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை" என்று மிக வருத்தத்தோடு
சொன்னார்.
இந்த நிகழ்வில் வருகின்ற பணக்காரரைப் போன்றுதான், மண்ணகத்தில்
செல்வம் சேர்த்து வைக்கத் தெரிந்திருக்கின்ற நாம், விண்ணகத்தில்
செல்வம் சேர்த்து வைக்கத் தெரியாமல் இருக்கின்றோம். இன்றைய
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, மண்ணகத்தில் அல்ல,
விண்ணகத்தில் செல்வம் சேர்த்து வைக்க நமக்கு அழைப்புத்
தருகின்றார் அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
மண்ணுலக செல்வம் அழிந்துவிடும்
ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், அவர்கள் தனித்துவம்
மிக்கவர்களாக, வித்தியாசமான இருக்கவேண்டும் என்பதைத் தன்னுடைய
மலைப்பொழிவின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
இன்றைய நற்செய்தியிலும் அது தொடர்கின்றது.
இந்த மண்ணுலகில் செல்வம் சேர்த்து வைப்பதுதான் எல்லாருடைய
விருப்பமாக இருக்கின்றது. ஆனால், ஆண்டவர் இயேசு சீடர்களிடம்,
மண்ணுலகில் செல்வம் சேர்த்து வைக்காதீர்கள். அது அழிந்துவிடும்
என்கின்றார். புனித பவுலோ ஒருபடி மேலே சென்று, "செல்வத்தைச்
சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக்
கொள்கிறார்கள்... பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து
விடுகிறார்கள்" (1 திமொ 6: 9) என்கின்றார். ஆகையால், நம்மைப்
பல்வேறு தீய நாட்டங்களில் விழ வைக்கும் செல்வத்தை மண்ணுலகில்
சேர்த்து வைப்பதில் நாம் மிகக் கவனமாக இருக்கவேண்டும்
விண்ணுலக செல்வம் அழியாது
மண்ணுலகில் செல்வம் சேர்த்து வைத்தால், அழிந்துபோய்விடும்
என்று சொன்ன இயேசு, விண்ணுலகில் செல்வம் சேர்த்து வைத்தால் அது
அழியவே அழியாது என்று கூறுகின்றார்.
விண்ணுலகில் எப்படிச் செல்வம் சேர்த்து வைப்பது என்று நமக்குக்
கேள்வி எழலாம். விண்ணுலகில் செல்வம் சேர்த்து வைப்பது
வேறொன்றுமில்லை. நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்து,
அதன்மூலம் மற்றவரையும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழச்
வைப்பதாகும். இன்றைக்கு நம்மால் எவ்வளவு வேண்டுமானாலும்
செல்வத்தைச் சம்பாதிக்க முடியும்; ஆனால், மனிதர்களைச்
சம்பாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே! மனிதர்களைச்
சம்பாதிக்கவேண்டும் என்றால், நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து
வாழவேண்டும். அந்த வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, மற்றவர்களும்
கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வார்கள். அதன்மூலம்
மனிதர்களைச் சம்பாதிக்க முடியும். அதுவே விண்ணுலகில் செல்வம்
சேர்த்து வைப்பதாகும்.
ஆகையால், நாம் நம்முடைய கீழ்ப்படிதலுள்ள வாழ்வால், விண்ணுலகில்
செல்வம் சேர்த்து வைப்பவர்கள் ஆவோம்.
சிந்தனை
"பணம் உங்களுக்கு அடிமையாக இருக்கின்ற வரையில் பிரச்சனை இல்லை.
நீங்கள் பணத்திற்கு அடிமையானால்தான் பிரச்சனை" என்பார் பில்லி
கிரஹாம் என்ற மறைப்பணியாளர். ஆகையால், நாம் பணத்திற்கு
அடிமையாகாமல், மனிதர்களைச் சம்பாதித்து, விண்ணுலகில் செல்வம்
சேர்த்து வைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|