Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     18 ஜூன் 2020  

பொதுக்காலம் 11ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 எலியாவினுடைய ஆவியால் எலிசா நிறைவு பெற்றார்.

சீராக்கின் ஞான நூலிருந்து வாசகம் 48: 1-15

இறைவாக்கினர் எலியா நெருப்புபோல் எழுந்தார்; தீவட்டி போல் அவருடைய சொல் பற்றி எரிந்தது. மக்கள் மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்?

இறந்தவரை உன்னத இறைவனின் சொல்லால் இறப்பினின்றும் பாதாளத்தினின்றும் எழச் செய்தீர். மன்னர்களை அழிவுக்கு உட்படுத்தினீர்; மேன்மைமிக்கவர்களைப் படுத்த படுக்கையாக்கி வீழ்த்தினீர். கடுஞ் சொல்லைச் சீனாய் மலைமீதும், பழி வாங்கும் தீர்ப்பை ஓரேபு மலைமீதும் கேட்டீர். பழி தீர்க்கும்படி மன்னர்களைத் திருப்பொழிவு செய்தீர்; உம் வழித்தோன்றல்களாக இறைவாக்கினர்களை ஏற்படுத்தினீர். தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக் கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்து கொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில்கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.

எலியா சூறாவளி சூழ மறைந்தார்; எலிசா அவருடைய ஆவியால் நிறைவு பெற்றார்; எலிசா தம் வாழ்நாளில் எந்தத் தலைவருக்கும் அஞ்சவில்லை; அவரை அடிபணிய வைக்க எவராலும் முடியவில்லை. அவரால் முடியாதது ஒன்றுமில்லை; இறந்த பிறகும் அவரது உடல் இறைவாக்கு உரைத்தது. அவர் தம் வாழ்நாளில் அரியன செய்தார்; இறப்பில் அவருடைய செயல்கள் வியப்புக்குரியனவாய் இருந்தன. இவை யாவும் கண்டும் மக்கள் மனம் மாறவில்லை. அவர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டு, மண்ணுலகெங்கும் சிதறடிக்கப்பட்ட வரையிலும் தங்கள் பாவங்களை விட்டு விலகவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 97: 1-2. 3-4. 5-6. 7 . (பல்லவி: 12a) Mp3
=================================================================================

பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.
1
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
2
மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். - பல்லவி

3
நெருப்பு அவர் முன் செல்கின்றது; சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.
4
அவர்தம் மின்னல்கள் பூவுலகை ஒளிர்விக்கின்றன; மண்ணுலகம் அதைக் கண்டு நடுங்குகின்றது. - பல்லவி

5
ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.
6
வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. - பல்லவி

7
உருவங்களை வழிபடுவோரும் சிலைகள் பற்றிப் பெருமையடித்துக் கொள்வோரும் வெட்கத்துக்கு உள்ளாவர்; அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள். - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
உரோ 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 சீராக்கின் ஞானம் 38: 1-15

"இவை யாவும் கண்டும் மக்கள் மனம் மாறவில்லை"


நிகழ்வு



ஒரு நகரில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டிருந்த சிறப்புப் பேச்சாளர், குடியின் தீமைகளைக் குறித்தும், குடியினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறித்தும் மிகவும் உணர்வுப்பூர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய பேச்சை மக்கள் கவனம் சிதறாமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர் மக்களிடம் இப்படித்தான் பேசினார்: "இந்த நகரில் இருக்கின்ற பணக்காரர்களில் பெரும்பாலனவர்கள் யாரென்று நினைக்கின்றீர்கள்? மதுபானக் கடையை வைத்திருப்பவர்கள்தான்! இந்த நகரில் மிகுதியான சொத்துகளை யார் வைத்திருக்கின்றார் என்று நினைக்கின்றீர்கள்? பதுபானக் கடை உரிமையாளர்கள்தான்! இந்த நகரில் இருக்கின்ற பெரிய பெரிய விடுதிகள், உணவகங்களின் உரிமையாளர்கள் யாரென்று நினைக்கின்றீர்கள்? மதுபானக் கடை உரிமையாளர்கள்தான்! இவை எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் கடினமாக உழைத்துச் சேர்த்த செல்வம் அனைத்தும் யாரிடம் போகிறது? மதுபானக் கடை உரிமையாளர்களிடம்தான்! அதனால் நீங்கள் கவனமாய் இருங்கள்."

அவர் இவ்வாறு பேசி முடித்ததும், கூட்டத்திலிருந்து பலத்த கைதட்டல் கிடைத்தது. இதனால் பேச்சாளர் மிகவும் பூரித்துப்போனார். அவர் மேடையை விட்டுக் கீழே இறங்கி வந்தபொழுது, ஒரு கணவனும் மனைவியும் அவரைப் பார்த்துப் பேச வந்தார்கள். கணவன் அந்தப் பேச்சாளரிடம், "ஐயா! இன்றைக்கு நீங்கள் பேசிய பேச்சு, எங்களுக்கு ஒருசில தெளிவுகளைத் தந்தது. மிக்க நன்றி" என்றார். "நான் பேசிய பேச்சு உங்களுக்கு ஒருசில தெளிவுகளைத் தந்ததா...? அப்படியானால் நீங்கள் குடிக்கமாட்டீர்கள்! சரிதானே!" என்றார் பேச்சாளர். "ஐயா! நாங்கள் சொன்னதை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கின்றேன். இந்த நகரில் என்ன தொழிலைத் தொடங்கலாம் என்று நாங்கள் இருவரும் ஒரு குழப்பமான மனநிலையில் இருந்தோம். உங்களுடைய பேச்சிலிருந்து, இங்கு மதுபானக் கடையை வைத்தால், தொழில் நன்றாக இருக்கும் என்று தெரிந்துகொண்டோம். அதுதான் நாங்கள் உங்களுடைய பேச்சிலிருந்து பெற்றுக்கொண்ட தெளிவு" என்றார் கணவர். இதைக் கேட்ட பேச்சாளருக்கு என்ன பதில் சொல்வத்தென்றே தெரியவில்லை.

இந்த நிகழ்வில் வருகின்ற கணவன் மனைவியைப் போன்றுதான் பலர், ஒருவர் சொல்கின்ற அறிவுரையைத் தங்களுடைய வசதிக்கு ஏற்றாற்போல் எடுத்துக்கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள், அடுத்தவரிடமிருந்து என்னதான் அறிவுரையை, நல்ல கருத்துகளைக் கேட்டாலும், திருந்துவதுமில்லை; கடவுளுக்கு உகந்த வழியில் அல்லது நல்ல வழியில் நடப்பதுமில்லை. சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர்கள் எலியாவும் எலிசாவும் மக்கள் நடுவில் சிறப்பாகப் பணிசெய்தாலும், அவற்றை கண்டு மக்கள் மனம் மாறவில்லை என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நெருப்புப் போல் எழுந்த இறைவாக்கினர் எலியா

கடந்த ஒருசில நாள்களாகவே, இறைவாக்கினர் எலியாவைக் குறித்த வாசகங்கள், அரசர்கள் முதல் மற்றும் இரண்டாம் நூலிலிருந்து அமையப்பெற்றிருந்ததை நாம் கவனித்திருப்போம். அவர் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அவரைக் குறித்து சீராக்கின் ஞானநூலில் இடம்பெறும் கருத்துகளை முதல் வாசகமாக இன்று நாம் பெறுகின்றோம். இதற்கு முன்பு தாவீது அரசரைக் குறித்து இப்படி வாசித்திருப்போம். இப்பொழுது இறைவாக்கினர் எலியாவைக் குறித்து வாசிக்கின்றோம்.

இறைவாக்கினர் எலியா, ஆகாபு மன்னனின் தவற்றைச் சுட்டிக்காட்டினார்; மக்கள்மீது பஞ்சம் வரச் செய்தார்; இறந்தவரை எழச் செய்தார். மக்களை உண்மை இறைவனை நோக்கி அழைத்துவரக் கடினமாக உழைத்தார். இறுதியில் சுழற்காற்றில் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். மக்கள் இவர் அறிவித்த கடவுளின் வார்த்தையைக் கேட்டு மனம்மாறினார்களா...? இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.

யாருக்கும் அஞ்சாத இறைவாக்கினர் எலிசா

இறைவாக்கினர் எலியாவிற்குப் பிறகு, அவர் விட்டுச் சென்ற பணியை இறைவாக்கினர் எலிசா தொடர்ந்தார். அவர், இறைவாக்கினர் எலியாவைப் போன்று இல்லாமல் அமைதியாகவும் அதே நேரத்தில் எந்தத் தலைவருக்கும் அஞ்சாமலும் கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்தார். இன்னும் சொல்லப்போனால், எலியா, திருமுழுக்கு யோவானைப் பிரதிபலிப்பவராக இருந்தால் எனில், இறைவாக்கினர் எலிசா இயேசுவை பிரதிபலிப்பவராக இருந்தார் (மத் 3: 1-12, 11:16-19). இப்படி எலியாவும் எலிசாவும் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்னபொழுதும், மக்கள் மனம்மாறாமலேயே இருந்தார்கள். இதனால்தான் அவர்கள் நாடு கடத்தப்பட்டு, எங்கும் சிதறடிக்கப்பட்டார்கள்.

ஆம், நமக்கு கடவுளின் வார்த்தை அறிவிக்கப்படுகின்ற எனில் அல்லது கடவுளின் வார்த்தையை நாம் கேட்கின்றோம் எனில், அதற்கு நல்லவிதமாய்ப் பதிலளித்து, நம்முடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். அப்படியில்லை எனில், கடவுளிடமிருந்து அதற்குண்டான பலனைப் பெறத்தான் செய்வோம். ஆகையால், நாம் கேட்கும் இறைவார்த்தைக்கு நல்லவிதமாய்ச் செவிமடுத்து, அதன்படி நடந்து அவருடைய அன்பு மக்களாக வாழ முயற்சிசெய்வோம்.

சிந்தனை

"நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது" (யோவா 15: 8) என்பார் இயேசு. ஆகையால், நாம் கேட்ட இறைவார்த்தைக்கு நல்ல விதமாய்ப் பதில் தந்து, பலன் தரும் மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 6: 7-15

"விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே"

நிகழ்வு



மின் தந்தியைக் (Electrical Telegraph) கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சார்ந்த சாமுவேல் எஃப்.பி.மோர்ஸ் (Samuel F. B. Morse 1791-1872).

ஒருமுறை செய்தியாளர் ஒருவர் இவரிடம், "உங்களுடைய ஆராய்ச்சியின்பொழுது எப்பொழுதாவது உங்களுக்கு அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கின்றதா?" என்றார். அதற்கு மோர்ஸ் அவரிடம், "ஒருமுறை அல்ல, பல முறை அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது?" என்றார். "அப்படிப்பட்ட நேரங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று செய்தியாளர் மோர்சிடம் அடுத்த கேள்வியைக் கேட்டபொழுது, அவர் இப்படிச் சொன்னார்: "என்னுடைய ஆராய்ச்சியின்பொழுது, அடுத்து என்ன செய்வது என்ற குழம்பம் ஏற்படுகின்றபொழுது, நான் "விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே" என்ற இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டலைச் சொல்லி, "இறைவா! எனக்கு நல்வழியைக் காட்டும்" என்று சொல்லி வேண்டுவேன். உடனே வழி பிறக்கும்."

மோர்ஸ் இப்படிச் சொல்லி முடித்ததும், அவரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர் மிகவும் ஆச்சரியப்பட்டார். (101 Stories for you and me J.P. Vaswani)

ஆம். மிகப்பெரிய கண்டுபிடிப்பாளரும் ஆராய்ச்சியாளருமான மோர்சிற்கு, இயேசு கற்றுக்கொடுத்த "விண்ணுலகிலிருக்கின்ற எங்கள் தந்தையே" என்ற இறைவேண்டல் புதிய வழியைக் காட்டியது என்றால், நமக்கும் அது புதிய வழியைக் காட்டும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. நற்செய்தியில் இயேசு, இறைவனிடம் நாம் எப்படி மன்றாடவேண்டும் என்பதைக் கற்றுத் தருகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மிகுதியான வார்த்தைகள் அடுக்குவதல்ல இறைவேண்டல்

நேற்றைய நற்செய்தியில், அறச் செயல்களை எப்படிச் செய்யவேண்டும் என்றும், நோன்பு எப்படி மேற்கொள்ளவேண்டும் என்றும் பேசிய இயேசு, இன்றைய நற்செய்தியில், இறைவேண்டல் எப்படிச் செய்யவேண்டும் என்று பேசுகின்றார்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயர்கள், மக்கள் பார்க்கவேண்டும் என்றே இறைவேண்டல் செய்தார்கள். மட்டுமல்லாமல், தங்களுடைய இறைவேண்டல்களில் அவர்கள் மிகுதியாக சொற்களை அடுக்கிக்கொண்டே போனார்கள். இப்படிச் செய்வதன்மூலம் அவர்கள் தங்களுடைய வேண்டுதல் கேட்கப்படும் என்று நினைத்தார்கள். ஆனால், ஆண்டவர் இயேசு, மக்கள் பார்க்கவேண்டும் என்று செய்யப்படும் இறைவேண்டலுக்கு இறைவனிடமிருந்து கைம்மாறு கிடைக்காது என்றுசொல்லி, மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் மட்டும் அது நல்ல இறைவேண்டல் என்று நினைக்கவேண்டாம் என மறைமுகமாக எடுத்துச் சொல்கின்றார்.

இயேசுவைப் பொருத்தவரையில், இறைவேண்டல் என்பது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நடக்கும் உரையாடல். அதை நாம் இயேசுவின் வாழ்விலிருந்தும், இன்றைய நற்செய்தியில் வெளிப்படும் வார்த்தைகளிலிருந்தும் கண்டுகொள்ளலாம்.

இறைவனுக்கு முதலிடம் கொடுத்து, நமக்கு அடுத்த இடம் கொடுப்பது இறைவேண்டல்

இறைவேண்டல் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, "ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்" என்று சொல்லி, இயேசு நமக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுத் தருகின்றார்.

இயேசு கற்றுத் தரும் இறைவேண்டலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. முதல் பகுதி இறைவனைப் போற்றுவதாகவும், இரண்டாவது பகுதி நம்முடைய தேவைகளுக்காக வேண்டுவதாகவும் இருக்கின்றது. ஆம், நம்முடைய ஆன்மிக வாழ்விலும் சரி, அன்றாட வாழ்விலும் சரி, இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுத்து, அவருடைய திருவுளத்தை நிறைவேற்றி வாழவேண்டும் என்று இயேசு கற்றுத்தரும் இறைவேண்டல் நமக்கு அழகாக எடுத்துக்கூறுகின்றது. இன்னும் சொல்லப்போனால், எப்பொழுது நாம் இறைவனின் திருவுளம் நிறைவேற உழைக்கின்றோமோ, அப்பொழுது நம்முடைய வேண்டுதல்களும் தேவைகளும் நிறைவேறும் என்பது உறுதி. ஆகையால், நாம் இறைவனுக்கு நம்முடைய வாழ்வில் முதன்மையான இடம் கொடுத்து, அவருடைய திருவுளம் நிறைவேற, நாம் அவருடைய கருவிகளாக இருந்து செயல்பட முன்வரவேண்டும்

பல நேரங்களில் நாம் நம்முடைய விருப்பத்தையும் தேவையையும் முன்னிலைப் படுத்தியே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நாம் கேட்குமுன்னரே, நம்முடைய தேவைகளை நமது விண்ணகத் தந்தை அறிந்திருக்கின்றார். அப்படியெனில், நாம் இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுத்து, அவருடைய திருவுளம் நிறைவேற உழைபாதே சாலச் சிறந்தது.

சிந்தனை

"இறைவேண்டல் என்பது நம்பிக்கையின் உயிர் மூச்சாகும். அது இறைவனில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களிலிருந்து, இறைவனை நோக்கி எழும் அழுகுரலாகும்" என்பார் திருத்தத்தை பிரான்சிஸ். ஆகையால், நம்முடைய நம்பிக்கையின் உயிர்மூச்சாக இருக்கும் இறைவேண்டலை இறைவனை நோக்கி எழுப்பி, அவர் காட்டும் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மத்தேயு 6: 7-15

மன்னித்தால் மன்னிப்பு

நிகழ்வு

நேப்பிள்ஸ் மற்றும் சிசிலி நாட்டின் மன்னராக இருந்தவர் அல்போன்சுஸ் என்பவர். இவர் இரக்கத்திற்கும் மன்னிப்பிற்கும் பெயர் போனவர். இவர் தவறு செய்கின்றவர்களைத் தண்டியாமல், அவர்கள்மீது இரக்கம்கொண்டு மன்னித்து வந்தார். இது குறித்து ஒருசிலர் அவரிடம், "நீங்கள் ஏன் தவறு செய்கின்றவர்களைத் தண்டியாமல், மன்னித்து விடுகின்றீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், "நல்லவர்களை நீதியால் வெல்லலாம், தீயவர்களை மன்னிப்பால்தான் வெல்ல முடியும். அதனால்தான் மன்னிக்கின்றேன்" என்றார். இதைக் கேட்டு அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.

இன்னொரு முறை, மன்னர் அல்போன்சுஸிற்கு நெருகிய ஒருசிலர் அவரிடம், "நீங்கள் குற்றவாளிகளை மன்னித்துக்கொண்டே இருந்தால், அவர்களை தொடர்ந்து தவறு செய்துகொண்டுதான் இருப்பார்கள்" என்று குறைபட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், "காட்டில் வாழ்கின்ற விலங்குகள்தான் ஒன்றை ஒன்று அடித்துச் சாப்பிடும். அது அவற்றின் குணம். மனிதர்கள் அப்படிக் கிடையாது, அவர்கள் மன்னிக்கப் பிறந்தவர்கள். மன்னிக்கின்றபொழுதுதான் அவர்கள் மனிதர்களாக இருக்கின்றார்கள். இல்லையென்றால் விலங்குகளாகிவிடுவார்கள்" என்றார்.

மனிதர்களுக்கு அழகே மன்னிப்புதான். அது ஒருவரிடத்தில் இல்லாமல் போகின்றபொழுது அவர் விலங்காகிவிடுகின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. நற்செய்தி வாசகம் மன்னிப்பின் முக்கியத்துவத்தையும் நாம் ஏன் மற்றவர்களை மன்னிக்கவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மன்னிக்கின்ற இறைவன்

மத்தேயு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து, மற்றவரை நாம் மன்னிக்கின்றபொழுது என்ன நடக்கின்றது என்பதையும் மற்றவர்களை நாம் மன்னியாது இருக்கின்றபொழுது, என்ன நடக்கின்றது என்பதையும் எடுத்துக்கூறுகின்றார். இவற்றைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது முன்பு, இறைவன் எப்படிப்பட்டவர் என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சீராக்கின் ஞான நூலில் இவ்வாறு வாசிக்கின்றோம்: "ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்; பாவங்களை மன்னிப்பவர்." (சீரா 2:11) அதே போன்று திருப்பாடல் 130:3-4 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: "ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்." ஆம், இறைவன் நம்முடைய குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிக்கத் தொடங்கினால், நம்மால் அவர்முன் நிலைத்த் நிற்க முடியாது. அவர் மன்னிப்பு அளிப்பவராக இருப்பதால்தான் நம்மால் நிலைத்து நிற்க முடிகின்றது. அப்படியெனில், இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிப்பது போல, நாம் பிறருடைய குற்றங்களை மன்னிக்கவேண்டும். அதுதான் தகுதியும் நீதியும் ஆகும்.

இறைவனின் மன்னிப்பைப் பெற நாம் பிறரை மன்னிக்க வேண்டும்

இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிக்கின்றார் என்பதைக் குறித்து மேலே சிந்தித்துப் பார்த்தோம். இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிக்கவேண்டும் என்றால், அதற்கு ஒரு நிபந்தனை இருக்கின்றது, அதுதான் மன்னிப்பு என்று கூறுகின்றார் ஆண்டவர் இயேசு. ஆம், மற்றவர் செய்யக்கூடிய குற்றங்களை நாம் மன்னிக்கின்றபொழுதுதான், இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிப்பவராக இருக்கின்றார். ஒருவேளை நாம் மற்றவருடைய குற்றங்களை மன்னியாது இருப்போமெனில், இறைவனும் நம்முடைய குற்றங்களை மன்னிக்க மாட்டார் என்று ஆண்டவர் இயேசு மிகத்தெளிவாகக் கூறுகின்றார். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுதான் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை (மத் 18).

ஆண்டவர் இயேசு மன்னிப்புக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார் எனத் தெரிந்துவேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் "மன்னிப்பு" என்பது கேலிக்கூத்தாகப் பார்க்கப்படுகின்றது. மன்னிப்பவர்கள் கோழைகள்... அவர்கள் பலவீனமானவர்கள் என்ற பேச்சு கூட மக்கள் நடுவில் இருக்கிறது. உண்மையில் மன்னிப்புதான் ஒருவனை பலசாலியாக்கும்; நிறைவுள்ளவனாக்கும். ஏனெனில், இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னித்து நிறைவுள்ளவராக இருக்கின்றார் (மத் 5: 48) நாமும் மற்றவர்கள் செய்யக்கூடிய குற்றத்தை மன்னிக்கின்றபொழுதுதான் நிறைவுள்ளவர்களாக முடியும். அதனாலேயே இயேசு மன்னிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.

ஆகையால், நாம் நமக்குத் தீமை செய்தவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்வோம். அதன்மூலம் இறைவனுடைய மன்னிப்பைப் பெறுவோம்.

சிந்தனை

"ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்கவேண்டும்" (கொலோ 3: 13) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் ஆண்டவர் நம்மை மன்னித்தது போல, ஒருவர் மற்றவரை மன்னிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!