Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     17 ஜூன் 2020  

பொதுக்காலம் 11ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இதோ! நெருப்புத் தேரில் எலியா விண்ணகத்துக்குச் சென்றார்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 2: 1, 6-14

ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ள இருந்த பொழுது, எலியாவும் எலிசாவும் கில்காலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். மீண்டும் எலியா எலிசாவை நோக்கி, "ஆண்டவர் என்னை யோர்தானுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு" என்றார். அதற்கு அவர், "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்" என்றார். ஆகவே அவர்கள் இருவரும் தொடர்ந்து பயணம் செய்தனர். அவர்கள் யோர்தான் நதிக் கரையை அடைந்து அங்கே நின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இறைவாக்கினர் குழுவினர் ஐம்பது பேரும் சற்றுத் தொலையில் நின்று கொண்டனர்.

அப்பொழுது, எலியா தம் போர்வையை எடுத்துச் சுருட்டி அதைக் கொண்டு நீரை அடித்தார். தண்ணீர் இருபுறமும் பிரிந்துகொள்ள, இருவரும் உலர்ந்த தரைமீது நடந்து நதியைக் கடந்தனர். அவர்கள் அக்கரைக்குச் சென்றவுடன் எலியா எலிசாவை நோக்கி, "உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்" என்று கேட்டார்.

அதற்கு எலிசா, "உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக!" என்றார். எலியா அவரை நோக்கி, "நீ கேட்பது கடினமான காரியம். உன்னிடமிருந்து நான் எடுத்துக் கொள்ளப்படும் போது, நீ என்னைக் காண்பாயாகில், அது உனக்குக் கிடைக்கும்; இல்லையெனில் கிடைக்காது" என்றார். இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டு வழிநடந்து செல்கையில், இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன.

எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார். எலிசா அதைக் கண்டு, "என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே!" என்று கதறினார். அதற்கு மேல் அவரால் அவரைக் காண முடியவில்லை. எனவே அவர் தம் உடைகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்துக் கொண்டார். மேலும் அவர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எடுத்துக் கொண்டு, திரும்பிச் சென்று யோர்தான் கரையில் நின்றார். பின்பு அவர், "எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்?" என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 31: 19. 20. 23 . (பல்லவி: 24) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரை நம்புவோரே, உள்ளத்தில் உறுதி கொண்டிருங்கள்.
19
உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! - பல்லவி

20
மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! - பல்லவி

23
ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்; ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்; ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6, 16-18

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக் கை செய்வது இடக் கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள், அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 2 அரசர்கள் 2: 1, 6-14

"உமது ஆவி என்மீது இரு மடங்கு இருப்பதாக"


நிகழ்வு



அது ஒரு துறவுமடம். அந்தத் துறவுமடத்தில் இருந்த தலைமைத் துறவிக்கு வயதாகிக்கொண்டே போனது. இதனால் அவர் அத்துறவுமடத்தில் இருந்த மற்ற துறவிகளிடம், "இன்னும் சிறிதுகாலம்தான் நான் உங்களோடு இருக்கப்போகிறேன். அதன்பின்பு நான் உங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவேன். உங்களை விட்டு நான் பிரிந்துசெல்வதற்கு முன்பாக, எனக்குப் பின் இந்தத் துறவுமடத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இருக்கின்றேன். இதற்காக ஒரு போட்டி வைக்கப்போகிறேன். இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். போட்டியில் கலந்துகொள்கின்றவர் ஒரு கவிதை எழுதி அதை அறிவிப்புப் பலகையில் வைக்கவேண்டும். இதற்காக நான் உங்களுக்கு இரண்டுநாள் அவகாசம் தருகின்றேன். போட்டியில் கலந்துகொண்டவர்களில் யாருடைய கவிதை நன்றாக இருக்கின்றதோ, அவரையே இந்தத் துறவுமடத்தின் தலைவராக நியமிக்கப்போகிறேன்" என்றார். அனைவரும் இதற்குச் சம்மதித்தார்கள்.

அடுத்த நாளை காலையில், துறவுமடத்தில் இருந்த எல்லாரும், யாரெல்லாம் தாங்கள் எழுதிய கவிதையை அறிவிப்புப் பலகையில் பொருத்தி வைத்திருக்கின்றார்கள் என்று பார்ப்பதற்காக அறிவிப்புப் பலகைக்கு முன்பாகக் கூடினார்கள். அந்த அறிவிப்புப் பலகையில் ஒருவர் எழுதிய கவிதை மட்டுமே இருந்தது. அக்கவிதையை, அந்த துறவுமடத்தில் இருந்த அறிவில் சிறந்த துறவி ஒருவர் எழுதியிருந்தார். அதை எல்லாரும் படித்துப் பார்த்தபொழுது, மிகவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தார்கள். தலைமைத் துறவியும் அந்தக் கவிதையைப் படித்துப் பார்த்தார். பின்பு அவர் அவர்களிடம், "இந்தக் கவிதை நன்றாக இருக்கின்றதுதான்; ஆனாலும் இதில் ஏதோ ஒன்று குறைவுபடுகின்றது. இன்னொரு நாள் இருக்கின்றதல்லாவா...! அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

மறுநாள், அறிவிப்புப் பலகையில் யாராவது தங்களுடைய கவிதையை எழுதிப் பொருத்தியிருக்கின்றார்களா என்று பார்ப்பதற்காக துறவுமடத்தில் இருந்த எல்லாரும் அறிவிப்புப் பலகைக்கு முன்பாகக் கூடினார்கள். அதில் முந்தைய நாள் போல் ஒரே ஒரு கவிதை எழுதிப் பொருத்தப்பட்டிருந்தது. அதை யார் எழுதினார் என்று எல்லாரும் பார்த்தபொழுது அதிர்ந்து போனார்கள். காரணம் அதில், துறவுமடத்தில் இருந்த சமையல்காரரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்பு அவர்கள் எல்லாரும் அந்தக் கவிதையைப் படித்துப் பார்ப்பதார்கள். அது அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் ஞானம் நிறைந்ததாகவும் இருந்தது. இதற்குப் பின்பு அங்கு வந்த தலைமைத் துறவி அந்தக் கவிதையைப் படித்துப் பார்த்தார். அவர் மற்றவர்கள் உணர்ந்ததைப் போன்றே உணர்ந்தார்.

உடனே அவர் அவர்களிடம், "இரண்டு கவிதைகளில் எது சிறந்த கவிதை என்பது இப்பொழுது உங்களுக்கே புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். முதல் கவிதை அருமையான வார்த்தைகளால் எழுதப்பட்டிருந்தது. ஆனால், அதில் ஆன்மா இல்லை. இரண்டாவது கவிதையில் அருமையான வார்த்தைகள் இல்லாவிட்டாலும், ஆன்மா இருக்கின்றது. எனவே, இந்தக் கவிதையை எழுதிய, இங்கு இத்தனை ஆண்டுகளும் சமையல்காரராய்ப் பணியாற்றி வந்தவரைத் இந்தத் துறவுமடத்தின் அடுத்த தலைவராக நிமியமிக்கின்றேன்" என்று சொல்லி அவரைத் துறவுமடத்தின் தலைவராக நியமித்தார்.

அறிவார்ந்த கவிதையை எழுதியவர் அல்ல, ஆன்மாவைத் தொடுவது மாதிரியான கவிதையை எழுதிய சமையல்காரர் எப்படி, அந்தத் துறவுமடத்தின் அடுத்த தலைவரானோ, அப்படி ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவருமான எலிசா, எலியாவிற்குப் பிறகு இஸ்ரயேலின் இறைவாக்கினராகின்றார். அதைப் பற்றித்தான் இன்றைய முதல் வாசகம் எடுத்துச்சொல்கின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எலியா எடுத்துக்கொள்ளப்படுதலும், எலிசா இஸ்ரயேலின் இறைவாக்கினர் ஆதலும்

முதல்வாசகத்தில், இறைவாக்கினர் எலியா சுழற்காற்றில் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதைக் குறித்து வாசிக்கின்றோம். திருவிவிலியத்தில் சுழற்காற்று என்பது கடவுளின் உடனிருப்பை வெளிப்படுத்தும் ஓர் அடையாளமாக இருக்கின்றது (யோபு 38: 1, 40:6, எரே 23:19; செக் 9: 14).

இறைவாக்கினர் எலியா, சுழற்காற்றில் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக, அவர் எலிசாவிடம், "....நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்" என்று கேட்கும்பொழுது, எலிசா அவரிடம், "உமது ஆவி என்மீது இரு மடங்கு இருப்பதாக" என்கின்றார். இஸ்ரயேலில் தலைச்சன் பிள்ளைக்கே இரண்டு பங்கு கிடைக்கும் (இச 21:17). எலிசா, இறைவாக்கினர் எலியாவடிம் உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக என்று கேட்டதும், அவர், நான் எடுத்துக் கொள்ளப்படும்பொழுது, நீ என்னைக் காண்பாயானால் அது உனக்குக் கிடைக்கும் என்கின்றார். எலியா எலிசாவிடம் சொன்னதுபோன்றே அவர் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்வதை எலியா காண்கின்றார். இதனால் எலியாவின் ஆவி அவர்மீது இரண்டு மடங்கு தங்குகின்றது.

எலியாவிற்குப் பின்பு எலிசா இஸ்ரயேலின் இறைவாக்குப் பணியைச் செய்வது கடவுளின் மேலான அழைப்பினாலும் அருளினாலும்தான் என்று சொல்லவேண்டும் (1அர 19:11) இவ்வாறு கடவுளின் அழைப்பைப் பெற்றுக்கொண்ட எலிசா, இறைவக்குப் பணியைச் சிறப்பாகச் செய்ததுபோன்று, கடவுளால் சிறப்பாக அழைக்கப்பட்டிருக்கின்ற நாமும், இறைவாக்குப் பணியை செம்மையாகச் செய்து, அவருக்குச் சான்று பகர்வதே நல்லது. நாம் அவருடைய பணியைச் சிறப்பாகச் செய்யத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"நான் கட்டளையிடம் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே" (எரே 1: 17) என்பார் ஆண்டவர். ஆகையால், இறைவாக்கினர் எலிசாவைப் போன்று, இறைவாக்கினர் எரேமியாவைப் போன்று கடவுளின் வார்த்தையை அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கும் நாம், அவருடைய வார்த்தையைத் துணிவோடு அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 6: 1-6, 16-18

"வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்"

நிகழ்வு



உங்களுக்குப் "பூசணிக் காய்" மனிதரைத் தெரியுமா? அவர் யாரென்று சொல்கின்றேன் கேளுங்கள்.

கொலரடோ என்ற இடத்தில் நிப்பன் டூஸ் என்றொரு விவசாயி வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு பெரிய தோட்டம் இருந்தது. இந்தத் தோட்டத்தில் இவர் பூசணிக்காய் விதைகளை நட்டுவைத்து, வளர்த்து வந்தார். மட்டுமல்லாமல், ஒவ்வோர் ஆண்டும் இலையுதிர் காலம் வருகின்றபொழுது, இவர் தன்னுடைய தோட்டத்திற்கு அருகாமையில் இருந்த பள்ளிக்கூடத்தில் படித்துவந்த ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தனது தோட்டத்திற்கு அழைத்து, அவர்களுக்கு ஆளுக்கொரு பூசணிக்காயைத் தந்தார்.

இப்படிப்பட்ட செயலை இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்துவந்தார். இதில் நாம் கருத்தில்கொள்ள முக்கியமான உண்மை, நிப்பன் டூஸ் தான் செய்துவந்த இந்தச் செயலை எந்தவொரு பிரதிபலனும் பாராமல் செய்துவந்ததுதான். இதனால் இவருடைய வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடம் இவருடைய பெயரையே பள்ளிக்குச் சூட்டி, இவரைப் "பூசணிக்காய் மனிதர்" என்று அன்போடு அழைத்து வந்தது.

மக்களால் பூசணிக்காய் மனிதர் என்று அன்போடு அழைக்கப்பட்ட நிப்பன் டூஸ் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை விட்டுச் சென்றிருக்கின்றார். அது என்னவெனில், எந்தவோர் அறச்செயலையும் அல்லது நன்மையையும் பிரதிபலன் பாராமல் செய்யவேண்டும் என்பதாகும். இதையே நாம் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், வலக்கை செய்வது, இடக்கைக்குத் தெரியாமல் செய்யவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இத்தகைய செய்தியை எடுத்துச் சொல்கின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

விளம்பரம் தேடும் உலகம்

ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள் எதைச் செய்தாலும் ஆதாயம் இல்லாமல் செய்யமாட்டார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இவர்கள் எந்தச் செயலைச் செய்தாலும், அதன்மூலம் தங்களுடைய பெருமையையும் புகழையும் மக்களுக்குப் பறைசாற்றவே நினைப்பார்கள். சமூக வலைத்தளங்களில் நாம் பார்த்திருப்போமே, ஒரு வாழைப்பழத்தை ஐந்து பேர் சேர்ந்துகொண்டு ஒருவருக்குக் கொடுப்பதை! இப்படிப்பட்டவர்கள் எல்லாரும் இந்தப் பட்டியலில்தான் வருவார்கள்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு அறச் செயல்களைச் செய்கின்றபோது எப்படிச் செய்யவேண்டும் என்பதைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார். மக்கள் பார்க்கவேண்டும்... புகழவேண்டும் என்று செய்யப்படும் அறச்செயல்கள் எல்லாம் உண்மையில் அறச் செயல்கள் அல்ல, அவை வெறும் தம்பட்டம்தான், அப்படிப்பட்ட அறச் செயல்களுக்கு கடவுளிடமிருந்து கைம்மாறு கிடைக்காது என்று இயேசு உறுதியாகச் சொல்கின்றார். ஆம், நாம் ஓர் அறச்செயலைச் செய்கின்றபொழுது அதன் நோக்கம் எப்படிப்பட்டதாக இருக்கின்றது என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். மனிதருடைய பாராட்டைப் பெறுவதற்காகத்தான் அறச்செயலைச் செய்கின்றோம் என்றால், அதற்கு இறைவனிடமிருந்து ஒருபோதும் கைம்மாறு கிடையாது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

அறச்செயல்களை ஆண்டவருடைய மாட்சிக்காகச் செய்வோம்

நாம் அறச்செயல் செய்கின்றபொழுது, எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று சொன்ன இயேசு, எப்படிச் செய்யவேண்டும் என்றும் சொல்கின்றார்.

நாம் அறச்செயல்களைச் செய்கின்றபொழுது, வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதவாறு இருக்கவேண்டும் என்று சொல்லும் இயேசு, நாம் கொடுக்கின்றோம் என்பதே தெரியாமல் கொடுக்கவேண்டும் என்பதை மிகவும் அழகாக எடுத்துக் கூறுகின்றார். நாம் பிறருக்குக் கொடுக்கின்றோம் என்பதே தெரியாமல் கொடுக்கின்றபொழுது, அது யாருக்கும் தெரியாமல் மறைவாய் இருக்கும். அப்படி மறைவாய் இருப்பதைக் காணும் ஆண்டவர் அதற்கேற்ற கைம்மாறு தருவார் என்பது உறுதி.

நாம் கடவுளிடமிருந்து கைம்மாறு பெறப் போகிறோமா அல்லது மனிதர்களிடமிருந்து கைம்மாறையும் பாராட்டையும் புகழையும் பெறப்போகிறோமா என்பதுதான் நமக்கு முன்பாக இருக்கும் கேள்வியாக இருக்கின்றது. மனிதர்கள் மாறக்கூடியவர்கள். அவர்கள் இப்பொழுது ஒரு பேச்சுப் பேசிவிட்டு, பின்னர் வேறொரு பேச்சுப் பேசுவார்கள். இப்பொழுது புகழ்பவர்கள் எப்பொழுதும் புகழ்ந்துகொண்டிருப்பார்கள் என்பதற்கு எந்தவோர் உறுதியும் இல்லை; ஆனால், ஆண்டவர் அப்படிக்கிடையாது அவர் என்றும் மாறாதவர் (எபி 13: 8). அப்படியானால், அவர் தருகின்ற கைம்மாறுதான் மாறாததுதான்.

எனவே, நாம் என்றும் மாறாத கடவுள் தருகின்ற கைம்மாறினைப் பெற, நாம் செய்யக் கூடிய அறச்செயல்களை மறைவாய், வலக்கை செய்வதை இடக்கை அறியாதவாறு செய்வோம்.

சிந்தனை

"அன்பு செலுத்துவதும், அறச்செயல்கள் செய்வதும் நல்லது. அவற்றை எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்வது அதைவிட நல்லது" என்பார் தாரிக் ரமதான் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் அறச்செயல்களைச் செய்கின்றபொழுது, அடுத்தவருடைய பாராட்டிற்காகவோ, பெருமைக்காகவோ அல்லாமல், ஆண்டவருடைய மாட்சிக்காகச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மத்தேயு 6: 1-6, 16-18

தர்மம் செய்!

அதை வெளிவேடம் இல்லாமல் செய்

நிகழ்வு

ஓரூரில் அகிலன், முகிலன் என்ற இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். இதில் அகிலன் வஞ்சக மனம் கொண்டவன். முகிலனோ மிகவும் நல்லவன். இவ்விருவரும் வெளியூர் சென்று, வாணிபம்செய்து, பொருளீட்டத் தீர்மானித்தனர். முதலீடு தன்னுடையது என்றாலும், கிடைத்த வருவாயில் பாதியை அகிலனுக்குக் கொடுத்தான் முகிலன். ஆனால், முகிலனின் செல்வத்தை முழுமையாக கவரத் திட்டமிட்ட அகிலன்.

ஒருநாள் அகிலன் முகிலனிடம் "நண்பா! தர்மத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான். அதற்கு முகிலன் "தர்மவழியில் செல்வதே சிறந்தது; எந்நிலையிலும், தர்மம் தவறக் கூடாது" என்றான். "தர்மமாவது, புண்ணியமாவது... எப்படியாவது சம்பாதித்து, பணக்காரனாக வாழ்வதுதான் புத்திசாலித்தனம். வேண்டுமானால், உன் கருத்தை பொதுமக்கள் சிலரிடம் கேட்கலாம். அவர்கள், நீ சொல்வதுதான் சரி என்று கூறினால், நீ எனக்குத் தந்த பணத்தை தந்துவிடுகிறேன். மாறாக, நான் சொல்வதுதான் சரி என்றால், உன் செல்வம் முழுவதையும் எனக்குத் தந்துவிட வேண்டும்" என்று பந்தயம் கட்டினான் அகிலன். அகிலனின் வஞ்சக உள்ளத்தை அறியாத முகிலன், அதற்கு ஒப்புக்கொண்டான். வழியில் செல்லும் சிலரிடம், இதுகுறித்து இருவரும் கேட்டனர். தர்மத்தைப் பற்றி அறியாத அவர்களோ, "அகிலன் சொல்வதே சரி" என்றனர். எனவே, பந்தயப்படி முகிலன் செல்வம் முழுவதையும் எடுத்துக் கொண்டான் அகிலன்.

சில மாதங்களில், மீண்டும் வியாபாரம் செய்து, பெரும் பொருள் ஈட்டினான் முகிலன். பொறாமைகொண்ட அகிலன் மறுபடியும் அதே பந்தயத்தைக் கட்டினான்; இம்முறையும் முகிலன் தோல்வியுற, அவன் கைகளை வெட்டினான் அகிலன்.
"நல்லவர்க்கு ஏற்படும் சோதனைகூட, வெற்றியில்தான் முடியும்" என்பதற்குச் சான்றாக, முகிலன் தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்க, அவனுக்கு பெருஞ் செல்வம் சேர்ந்தது.
"இதற்கு மேல் இவனை விட்டுவைக்கக் கூடாது' என்று தீர்மானித்த அகிலன், "தோற்பவர், கண்களை இழக்க வேண்டும்" என்ற நிபந்தனையுடன், மறுபடியும் பந்தயம் போட்டான். இப்போதும் தோற்று கண்களை இழந்த முகிலன் பல இடங்களில் சுற்றித்திரிந்து கடைசியில், ஓர் ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தான். அங்கு துறவி ஒருவர் இருந்தார். அவர் முகிலனின் நிலையைக் கண்டு இரங்கி, சக்திவாய்ந்த ஒரு மரத்தின் கிளையை ஒடித்து அதை அவன்மீது தடவினார். உடனே, முகிலன் இழந்த கைகளையும் கண்களையும் பெற்றான்,

இந்நிலையில், அப்பகுதியை ஆண்டு வந்த சிற்றரசரின் மகளுக்கு பார்வை பறி போனதால், அவளுக்கு யார் பார்வையை திரும்ப வரச் செய்கிறாரோ, அவரை தன் மகளுக்கு மணமுடித்து தருவதுடன், தன் நாட்டுக்கு அரசனாக முடிசூட்டுவதாக அறிவித்தார் அரசர். இதைக் கேள்விப்பட்ட முகிலன் தனக்கு உதவிசெய்த துறவியின் வழிகாட்டுதலின்படி மன்னனின் மகளுக்குப் பார்வை கிடைக்குமாறு செய்து, இளவரசியை மணந்து, அந்நாட்டுக்கு அரசனானான்.

இது நடந்து சில நாட்கள் கழித்து, காவலர்கள் ஒருவனை இழுத்து வந்தார்கள். "அரசே! இவன் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டுவந்தான். அதனால்தான் நாங்கள் இவனை உங்களிடம் பிடித்துக்கொண்டு வந்திருக்கின்றோம்" என்றார்கள். அவர்கள் இழுத்துக்ண்டு வந்தது வேறு யாருமல்ல பணத்தாசை பிடித்தலைந்த அகிலனைத்தான். முகிலன் அகிலனைத் தண்டிக்கவில்லை. மாறாக, அவனைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய், "நீ எனக்குச் செய்த தீமையிலும் ஒரு நன்மை இருந்திருக்கிறது. நான் இங்கு அரசனாக இருப்பதற்கு முதன்மையான காரணம்தான் நீதான். ஆனால் நீ ஒன்றை மட்டும் புரிந்துகொள், "நாம் செய்யும் தர்மம் என்றைக்காவது ஒருநாள் நம்மைக் காப்பாற்றும்" என்றான். இப்படிச் சொல்லிவிட்டு, அவனுக்கு நிறையப் பொருளுதவி செய்து அனுப்பிவைத்தான்.

நாம் செய்யும் தர்மம் நிச்சயம் ஒருநாள் நம்மைக் காப்பாற்றும் என்ற செய்தியை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் தர்மம் செய்வதன் முக்கியத்துவத்தை அதிலும் குறிப்பாக அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

வெளிவேடமில்லாமல் தர்மம் செய்யப்படும்

நற்செய்தியில் இயேசு யூத சமயத்தின் மூன்று முதன்மையான தூண்களான தர்மம் செய்தல், நோன்பிருத்தல், இறைவேண்டல் செய்தல் ஆகிய மூன்றில் முதலாவது மற்றும் மூன்றாவதைக் குறித்துப் பேசுகின்றார். இதில் முதலாவது இடம்பெறும் தர்மம் செய்வதைக் குறித்து மட்டும் இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

"உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்" (லூக் 12:33) என்று சொல்லும் இயேசு, இன்றைய நற்செய்தியில் மக்கள் பார்க்கவேண்டுவேண்டும் என்றும் நீங்கள் தர்மம் செய்யும்போது தம்பட்டம் அடிக்காதீர்கள் என்றும் கூறுகின்றார். இயேசு இவ்வாறு சொல்வதற்குக் காரணமில்லாமல் இல்லை. இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த பலர், மக்கள் தங்களைப் புகழவேண்டும், பாராட்டவேண்டும் என்றே தர்மம் செய்தார்கள். அதனால்தான் இயேசு, இதுபோன்று மக்கள் பார்க்கவேண்டும் புகழவேண்டும் என்று தர்மம் செய்கிறவர்கள் தங்களுடைய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என்று சொல்கின்றார்.

அப்படியானால் ஒருவர் தான் செய்கின்ற தர்மத்தினை ஏற்படிச் செய்யவேண்டும் என்கின்ற கேள்வி எழுகின்றது. இதற்கான பதிலை இன்றைய நற்செய்தியிலே இயேசு கூறுகின்றார்; "நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்" என்கிறார் இயேசு. இயேசு கூறுகின்ற இவ்வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது, நாம் செய்கின்ற தர்மம் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல், கடவுட்கு மட்டுமே தெரியக்கூடிய அளவில் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட தர்மத்திற்கு மட்டுமே இயேசு விரும்பும் தர்மமாகவும். மேலும் அத்தகைய தர்மத்திற்குக் கடவுள் தக்க கைம்மாறு தருவார்.

சிந்தனை

"பிறர்க்கு கொடுப்பதினாலோ அல்லது தர்மம் செய்வதினாலோ யாருமே ஏழையாகிவிடுவதில்லை" என்பார் ஆனி பிராங் என்ற எழுத்தாளர். ஆகவே, நாம் தர்மம் செய்வோம், அதுவும் எந்தவொரு வெளிவேடமும் இல்லாமல் தர்மம் செய்வம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!