Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     15 ஜூன் 2020  

பொதுக்காலம் 11ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கினாய்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 17-29


அந்நாள்களில்

நாபோத்து இறந்தபின், திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு: "நீ புறப்பட்டு, சமாரியாவிலிருந்து ஆட்சிசெய்யும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைப் போய்ப் பார். அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன் உடைமையாக்கிக் கொள்ள அங்குப் போயிருக்கிறான். நீ அவனிடம் சொல்ல வேண்டியது: ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக்கிறாய் இல்லையா? எனவே, நீ அவனிடம் சொல்ல வேண்டியது. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும்." அப்போது ஆகாபு எலியாவை நோக்கி, "என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா?" என்று கேட்டான்.

அதற்கு அவர், "ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யும் அளவுக்கு உன்னையே விற்றுவிட்டாய். இதோ! நான் உனக்குத் தீங்கு வரச் செய்வேன். உனது வழிமரபை ஒழித்து விடுவேன். உரிமை மக்களாயினும், அடிமைகள் ஆயினும், இஸ்ரயேல் ஆண்மக்களை ஆகாபிடமிருந்து வெட்டி எறிவேன். நெபாற்றின் மகன் எரோபவாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோல், உன் குடும்பத்திற்கும் செய்வேன். ஏனெனில் நீ இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கி எனக்குப் பெருஞ்சினம் மூட்டினாய்.

மேலும் ஈசபேலைக் குறித்து ஆண்டவர் சொல்வது: இஸ்ரியேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும். ஆகாபைச் சார்ந்தவர்கள் நகரினுள் மடிந்தால், நாய்களுக்கு இரையாவர்; நகர்ப்புறத்தே இறந்தால், வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்" என்றார்.

ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யுமளவுக்குத் தன்னையே விற்றுவிட்ட ஆகாபைப் போல் கெட்டவன் எவனும் இருந்ததில்லை. ஏனெனில் அவனுடைய மனைவி ஈசபேல் அவனைத் தூண்டி விட்டாள். மேலும், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த எமோரியர் செய்துகொண்ட சிலைகளை எல்லாம் வழிபடும் அளவுக்கு அவன் மிகவும் இழிவாக நடந்து கொண்டான்.

அச்சொற்களை ஆகாபு கேட்டவுடன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு வெற்றுடல்மீது சாக்கு உடை உடுத்தி, நோன்பு காத்துச் சாக்குத் துணிமீது படுத்தான்; பணிவோடு நடந்துகொண்டான். அப்பொழுது திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு: "என் திருமுன் ஆகாபு தன்னைத் தாழ்த்திக் கொண்டதைக் கண்டாயன்றோ? அவன் என் திருமுன் தன்னைத் தாழ்த்திக்கொண்டதால் நான் அவன் வாழ்நாளின்போது தீமை வரச் செய்யாமல், அவனுடைய மகனது வாழ்நாளின்போது அவனுடைய குடும்பத்தாரின் மேல் தீமை விழச்செய்வேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -
=================================================================================
திபா 51: 1-2. 3-4ab. 9,14 . (பல்லவி: 1a)

பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.
1
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

3
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
4ab
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். - பல்லவி

9
என் பாவங்களைப் பாராதபடி உம் முகத்தை மறைத்துக் கொள்ளும்; என் பாவக் கறைகளை எல்லாம் துடைத்தருளும்.
14
கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது:  "உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', "பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக" எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர் களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 அரசர்கள் 2: 17-29

"ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்"

நிகழ்வு

ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின்பொழுது பங்குத்தந்தை கடவுளின் வார்த்தையைக் குறித்து மிகுந்த உற்சாகத்தோடு போதித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து, "இன்னுமாக இந்த நூலைப் (திருவிவிலியம்) பற்றிப் போதித்துக் கொண்டிருக்கின்றீர்கள்! இதில் சொல்லப்பட்டவை யாவும் கட்டுக்கதைகள்! இந்நூலை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று சத்தமாகச் சொல்லிவிட்டு அமர்ந்தார்.

பங்குத்தந்தை அந்த மனிதரை அதற்கு முன்பாகக் கோயிலில் பார்த்ததுகூடக் கிடையாது. இருந்தாலும் அந்த மனிதர் புரிந்துகொள்ளும்வகையில் பேசத் தொடங்கினார்: "ஐயா! நீங்கள் திருவிவிலியத்தை ஏற்றுக்கொள்கின்றீர்களோ, இல்லையோ அது உங்களுடைய விரும்பம். ஆனால், அதில் வருகின்ற, "ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்" (கலா 6:7) என்ற இறைவாத்தையைக் கட்டாயம் நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்." இப்படிச் சொல்லிவிட்டுப் பங்குத்தந்தை தொடர்ந்து பேசினார்: "எடுத்துக்காட்டுக்கு ஒருவர் குடித்துக் குடித்து தன் வாழ்க்கையைச் சீரழைக்கின்றார் எனில், அவரைப் பார்த்துவிட்டு அவருடைய பிள்ளைகளும் அவரை சுற்றி இருப்பவர்களும் சீரழியத்தான் செய்வார்கள்."

பங்குத்தந்தை இவ்வாறு சொல்லி முடித்ததுதான் தைமாதம், கோயிலின் ஒரு பகுதியில் இருந்தவர்கள் சத்தாமாகச் சிரிக்கத் தொடங்கினார்கள். பங்குத்தந்தைக்கு அவர்கள் சிரிப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. திருப்பலி முடிந்தபின்னரே, மறையுரையின்போது கேள்விகேட்ட அந்த மனிதர் பயங்கரக் குடிகாரர் என்றும், அவரைப் பார்த்துவிட்டு அவருடைய பிள்ளைகளும் குடிக்கு அடிமையானார்கள் என்றும் பங்குத்தந்தை தெரிந்துகொண்டார்.

ஆம், ஒருவர் தாம் எதை விதைக்கின்றாரோ, அதையே அறுவடை செய்கின்றார்கள். அதற்குச் சான்று இருப்பதுதான் மேலே உள்ள நிகழ்வு. இன்றைய முதல் வாசகத்தில் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை அபகரித்துக் கொண்டு அவரைக் கொன்றுபோட்ட ஆகாபு மன்னனுக்கு எதிராக ஆண்டவரின் சினம் எழுகின்றது. இதற்குப் பின்பு என்ன நடந்தது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நாபோத்தைக் கொன்று அவருடைய திராட்சைத் தோட்டத்தை அபகரித்த ஆகாபு

ஓர் அரசன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்குப் பேகன் என்ற அறிஞர் சொல்லக்கூடிய வார்த்தைகள் இவை: "அரசருக்கு வேண்டிய நீதிகள் எல்லாம் இவைகளில் அடங்கியுள்ளன: நீ ஒரு மனிதன் என்பதை நினைவில் வைத்துக்கொள். நீ ஆண்டவனின் பிரதிநிதி என்பதையும் நினைவில் வைத்திரு."

பேகன் சொல்லக்கூடிய வார்த்தைகள் நம்முடைய கவனத்திற்கு உரியவை. ஒரு மனிதனாவும் கடவுளின் பிரதிநிதியாகவும் இருக்கவேண்டிய ஆகாபு மன்னன், தான் கடவுளின் பிரதிநிதி என்பதை மறந்து, மனிதத் தன்மையே இல்லாமல், நாபோத்தின் திராட்சைத் தோட்டத்திற்கு ஆசைப்பட்டு, தன்னுடைய மனைவி ஈசபேலின் வழிகாட்டுதலின் பேரில் அவரைக் கொன்றுபோடுகின்றான். இதனால்தான் கடவுளின் சினம் அவன்மீது எழுகின்றது. இதற்குப் பின்பு ஆண்டவர் திஸ்பேயரான எலியாவிடம், நீ ஆகாபிடம் சென்று இறைவாக்கு உரை என்று சொல்ல, அவரும் அவனிடம் சென்று, "நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும்..." என்கின்றார். இதைக் கேட்டதும் அவன், தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு சாக்கு உடை உடுத்தி, தன்னையே தாழ்த்திக் கொள்கின்றேன்.

ஆகாபு மன்னன் இவ்வாறு செய்ததால், ஆண்டவர் எலியாவிடம் அவன் தன்னைத் தாழ்த்திக் கொண்டதால், அவன் வாழ்நாளின்போது தீமை வரச் செய்யாமல், அவனுடைய மகனது வாழ்நாளின்போது அவனுடைய குடும்பத்தாரின் மேல் தீமை விழச் செய்வேன் என்கின்றார். ஆகாபு மன்னன் ஆண்டவர் முன் தன்னைத் தாழ்த்திக் கொண்டானே! அது உண்மையான மனம்மாற்றமா...? ஆண்டவர் ஆகாபைக் குறித்துச் சொன்னது நடந்ததா என்பன குறித்துத் தொடர்ந்து சந்தித்துப் பார்ப்போம்.

போலியாக மனமாற்றம் அடைந்த ஆகாபு

ஆண்டவருக்கு முன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு தன்னைத் தாழ்த்திய ஆகாபு மன்னன் உண்மையான மனம்மாற்றம் அடையவில்லை. மாறாக, தன்னுடைய மனைவி ஈசபேலின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அதன்படியேதான் நடந்தான். இதனால் அவன் போர்க்களத்தில் கொல்லப்பட்டான் (1அர 22: 37-38). மேலும் அவனது மகனின் இரத்தத்தை நாய்கள் நக்கின (2அர 9: 14-37). இவ்வாறு ஆண்டவர் உரைத்த வார்த்தைகள் நிறைவேறின.

இதில் நாம் இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ளலாம். ஒன்று தவறு செய்தவன் அதற்கான தண்டனையை பெற்றாகவேண்டும் என்பதாகும். ஆகாபு மன்னன் தவறு செய்தான். அதனால் கடவுளின் சினம் அவனுடைய குடும்பத்தின்மேல் வருகின்றது. இரண்டாவதாக, மனம்மாற்றம் என்பது உண்மையானதாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அதற்கான பலன் கிடைக்கும். இல்லையென்றால், அதற்கான பலன் கிடைக்காது. ஆகையால், நாம் ஆகாபு மன்னனைப் போன்று ஆண்டவரை விட்டு விலகி நிற்காமல், அவரோடு ஒன்றித்து, அவருடைய வழியில் நடந்து, அவருடைய மக்களாவோம்.

சிந்தனை

"ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார்" (உரோ 2: 6) என்பார் புனித பவுல். ஆகையால், நமது வாழ்வு கடவுளுக்கு உகந்ததாக இருக்குமாறு செய்து, அவருடைய அருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 5: 43-48

நீங்கள் விண்ணகத்தந்தையின் மக்களா? உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்!

நிகழ்வு



பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர் ஹாரிடன் பூம் என்ற பெண்மணி. இவர் தன்னுடைய தந்தையோடு கைக் கடிகாரங்களைச் செய்து வந்தார். இவருக்கு ஒரு சகோதரியும் இருந்தார்.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இவர் யூதர்களுக்குத் தன்னுடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றத்திற்காக இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்த ஹிட்லரின் நாசிப்படையினர் இவரையும், இவருடைய தந்தையையும் சகோதரியையும் கைதுசெய்து வதைமுகாமில் அடைத்து வைத்தனர். வதைமுகாமில் நூற்று ஐம்பது பேர் இருக்கவேண்டிய இடத்தில், ஐந்நூறு பேர் அடைத்து வைக்கப்பட்டனர். இதனால் பலர் உயிரிழந்தனர்; அதில் ஹாரிடன் பூமின் தந்தையும் சகோதரியும் உள்ளடங்கும்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஹாரிடன் பூம், வதைமுகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தன்னுடைய வீட்டிற்கு வந்ததும், இவர் செய்த முதல் செயல், தன்னுடைய தந்தை மற்றும் சகோதரியின் இறப்புக்குக் காரணமாக இருந்தவரும், தன்னைக் கொடூரமாகச் சித்திரவதை செய்தவருமான அதிகாரிக்குக் கடிதம் எழுதியதுதான். அந்தக் கடிதத்தில் இவர் இவ்வாறு எழுதினார்: "வதை முகாமில் நான் என்னுடைய தந்தையையும் சகோதரியையும் இழந்தேன்; நான்கூட உங்களால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டேன். இந்தத் துன்பங்கள் எல்லாம் என்னைக் கடவுளிடம் மிக நெருக்கமாகக் கொண்டுசென்றன. அதற்காக உங்களுக்கு நன்றி. மேலும் இன்றிலிருந்து என் வாழ்நாள் முழுக்க உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளப் போகிறேன். இப்படிக்கு ஹாரிடன் பூம்."

தன்னுடைய தந்தை மற்றும் சகோதரியின் இறப்புக்குக் காரணமாக இருந்தவரும், தன்னைத் துன்புறுத்தியவருமான அதிகாரியை மன்னித்து, அவருக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளப்போவதாகச் சொன்ன ஹாரிடன் பூம் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியராக இருக்கின்றார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, உங்கள் பகைவரிடம் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் என்று சொல்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

அன்பு செலுத்துபவர்களையே அன்புசெய்யும்பொழுது பிற இனத்தவர்களாகின்றோம்

யூதர்கள், லேவியர் புத்தகத்தில் இடம்பெறும், "உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்குக் அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக" (லேவி 19: 18) என்ற கட்டளையை வைத்துக்கொண்டு, தங்களுடைய இனத்தைச் சார்ந்தவர்களே அன்புசெய்துவந்தார்கள். அதே நேரத்தில் "பகைவர்களிடம் வெறுப்புக் கொள்வாயாக" என்று எங்கேயும் சொல்லப்படாவிட்டாலும், திருப்பாடல் 139: 19-22, 140: 9-11 ஆகிய பகுதிகளில் இடம்பெறும் இறைவார்த்தைகளைப் பிடித்துகொண்டு, அவர்கள் பகைவர்களை வெறுத்து வந்தார்கள். இதைப் பார்த்துவிட்டுத்தான் இயேசு அவர்களிடம், அன்பு செலுத்துபவர்களிடம் மட்டும் அன்பு செலுத்தி, பகைவர்களை வெறுத்தால், நீங்கள் வரிதண்டுபவர்களைப் போன்றும் பிற இனத்தவர்களைப் போன்றும் இருப்பீர்கள் என்கின்றார். ஏனெனில், அவர்கள் தங்களை அன்பு செலுத்துபவர்களிடம் மட்டுமே அன்பு செலுத்தியும், தங்களுக்கு வாழ்த்துக் கூறுபவர்களுக்கே வாழ்த்துக் கூறியும் வந்தார்கள்.

பகைவர்களையும் அன்பு செய்கின்றபொழுது கடவுளின் மக்களாகின்றோம்

பிற இனத்தவர்கள் அல்லது இவ்வுலகைச் சார்ந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை எடுத்துச் சொன்ன இயேசு, தொடர்ந்து விண்ணகத் தந்தையின் மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றார்.

விண்ணகத் தந்தையின் மக்களாக இருப்பவர்கள், தங்களை அன்பு செய்பவர்களை மட்டுமல்ல, தங்களுடைய பகைவர்களையும் அன்பு செய்வார்கள்; மட்டுமல்லாமல், தங்களைத் துன்புறுத்துபவர்களுக்காக இறைவனிடம் வேண்டுவார்கள் என்கின்றார் இயேசு. ஆம், விண்ணகத்தந்தை நல்லோர் மீது மட்டுமல்ல, தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கின்றார். நேர்மையுள்ளோர் மீது மட்டுமல்ல, நேர்மையற்றோர்மீதும் மழை பெய்யச் செய்கின்றார். ஆகையால், அவருடைய மக்களாக இருக்கின்ற ஒவ்வொருவரும் தன்னை வெறுப்பரையும் அன்பு செய்யவேண்டும்; தன்னைத் துன்புறுத்துவோருக்காகவும் இறைவனிடம் வேண்டவேண்டும்.

இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், நம்மை வெறுப்பவரையும் அன்பு செய்து, நம்மைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுகின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். பல நேரங்களில் நாம் வெறுப்புக்கு வெறுப்பையும், தீமைக்குத் தீமையும் செய்துகொண்டிருக்கின்றோம். இயேசுவின் சீடர்களாக இருக்கின்ற நாம் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு இருக்க வேண்டாமா? சிந்திப்போம்.

சிந்தனை

"உங்கள் பகைவரை அன்பு செய்யுங்கள். ஏனெனில், அவர்கள்தான் உங்களிடமுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள்" என்பார் பெஞ்சமின் பிராங்கிளின். பகைவர்கள் நம்முடைய தவறுகளைச் சுட்டுக்காட்டுவார்கள் என்பதற்காக மட்டுமல்ல, நாம் கடவுளின் மக்கள் என்பதற்காக நம்முடைய பகைவர்களை அன்பு செய்வோம்; நம்மைத் துன்புறுத்துபவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!