Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     15 ஜூன் 2020  

பொதுக்காலம் 11ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 1-16

அந்நாள்களில்

இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரயேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. ஆகாபு நாபோத்திடம், "உன் திராட்சைத் தோட்டம் என் அரண்மனை அருகில் இருப்பதால், நான் அதைக் காய்கறித் தோட்டம் ஆக்கும்படி என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாய் அதைவிட நல்ல திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன். உனக்கு விருப்பமானால், அதன் விலையை வெள்ளியாகத் தருகிறேன்" என்றான்.

அதற்கு நாபோத்து ஆகாபிடம், "என் மூதாதையரின் உரிமைச் சொத்தை நான் உமக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக!" என்றான். "என் மூதாதையரின் உரிமைச் சொத்தை உமக்குக் கொடுக்க மாட்டேன்" என்று இஸ்ரியேலனாகிய நாபோத்து தன்னிடம் சொன்ன வார்த்தைகளை முன்னிட்டு, ஆகாபு ஆத்திரத்துடனும் கோபத்துடனும் தன் அரண்மனைக்கு வந்தான்; முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் கட்டிலில் படுத்துக்கிடந்தான்; உணவருந்த மறுத்துவிட்டான்.

அப்போது அவனுடைய மனைவி ஈசபேல் அவனிடம் வந்து, "நீர் ஏன் மனம் சோர்ந்திருக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை?" என்று அவனைக் கேட்டாள். அதற்கு அவன் அவளிடம், "நான் இஸ்ரியேலனாகிய நாபோத்திடம் பேசினேன். "உன் திராட்சைத் தோட்டத்தை அதற்கான வெள்ளிக்கு எனக்குக் கொடுத்துவிடு. உனக்கு விருப்பமானால், அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்" என்றேன். அதற்கு அவன் "என் திராட்சைத் தோட்டத்தை உமக்குத் தர மாட்டேன்" என்று சொல்லிவிட்டான்" என்றான். அப்போது அவன் மனைவி ஈசபேல் அவனை நோக்கி, "இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்துகொள்வது? எழுந்திருந்து உணவருந்தி மனமகிழ்வாய் இரும். இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நானே உம்மிடம் ஒப்படைக்கிறேன்" என்றாள்.

எனவே அவள் ஆகாபின் பெயரால் மடல்கள் எழுதி, அவற்றில் அவனது முத்திரையைப் பொறித்து, அம்மடல்களை நாபோத்துடன் நகரில் குடியிருந்த பெரியோருக்கும் உயர்குடி மக்களுக்கும் அனுப்பினாள். அம்மடல்களில் அவள், "நீங்கள் ஒரு நோன்பு அறிவித்து நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமரச் செய்யுங்கள். அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவிவிட்டு, "நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்" என்று அவன் மீது குற்றம் சாட்டச் செய்யுங்கள். பின்னர் அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள்" என்று எழுதியிருந்தாள்.

நாபோத்துடன் அந்நகரில் குடியிருந்த பெரியோரும் உயர்குடி மக்களும் ஈசபேல் தமக்கு அனுப்பிய மடல்களில் எழுதி இருந்தவாறே செய்தனர். அவர்கள் ஒரு நோன்பு அறிவித்து, நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமர்த்தினர். அப்பொழுது அந்த இழி மனிதர் இருவரும் வந்து நாபோத்துக்கு எதிரே உட்கார்ந்தனர். அந்த இழி மனிதர் மக்களைப் பார்த்து, "நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான்" என்று அவன் மீது குற்றம் சாட்டினர். எனவே, அவர்கள் அவனை நகருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றனர்.

பிறகு அவர்கள், "நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்" என்று ஈசபேலுக்குச் செய்தி அனுப்பினர். நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்ததை ஈசபேல் கேட்டவுடன் அவள் ஆகாபை நோக்கி, "நீர் எழுந்து சென்று இஸ்ரியேலனாகிய நாபோத்து உமக்கு விற்க மறுத்த அதே திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்; நாபோத்து உயிரோடில்லை; அவன் இறந்து போனான்" என்றாள். நாபோத்து இறந்து போனதை ஆகாபு கேட்டு, இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டுப் போனான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 5: 1-2a. 4-5a. 5b-6 . (பல்லவி: 1b) Mp3
=================================================================================


பல்லவி: ஆண்டவரே, என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
1
ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்; என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
2a
என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும். - பல்லவி

4
ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5a
ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்கமாட்டார். - பல்லவி

5b
தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.
6
பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
திபா 119: 105

அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:  "கண்ணுக்குக் கண்', "பல்லுக்குப் பல்" என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மத்தேயு 5: 38-42

நன்மையால் தீமையை வெல்வோம்

நிகழ்வு

நைஜீரியாவில், 1967 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் 1970 ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் நாள்வரை உள்நாட்டுக் கலவரம் நடைபெற்றது. இந்தக் கலவரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டனர். இக்கலவரத்திற்குக் காரணமாக இருந்தவர்கள் அந்த நாட்டில் இருந்த இபோ இனமக்கள். இவர்கள், நாட்டில் கலவரம் ஓய்ந்து அமைதி திரும்பியபொழுது, கலவரத்திற்கு காரணம் தாங்கள்தான் என்று அரசாங்கத்திற்குத் தெரிந்துவிட்டது. அதனால் அரசாங்கம் தங்களை ஒடுக்கும் என்று மிகவும் அஞ்சினார்கள்.

ஆனால், அப்பொழுது நைஜீரியாவின் தலைவராக இருந்த கோவன் என்பவர், இபோ இனமக்கள் நினைத்தது போன்றெல்லாம் செய்யவில்லை. மாறாக, இரண்டு முக்கியமான செயல்களைச் செய்து எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் செய்த இரண்டு செயல்கள் இதுதான். ஒன்று, நாட்டில் ஏற்பட்ட கலவரத்திற்குக் காரணமாக இருந்த இபோ இனமக்களில் இருந்த திறமைச்சாலைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்தது. இரண்டு, இபோ இனமக்களிடம் அவர், "உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும், அதை என்னுடைய கவனைத்திற்குக் கொண்டு வாருங்கள். அதை நான் உடனடியாக நிவர்த்தி செய்கிறேன்" என்று சொன்னது.

கோவன், இபோ இனமக்களிடம் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அவருக்கு நெருங்கியவர்கள் அவரிடம், "இந்த நாட்டில் கலவரம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்த இந்த இபோ இனம்மக்களுக்கு நீங்கள் இப்படியெல்லாமா நன்மை செய்வது?" என்று கேட்டபொழுது, கோவன் அவர்களிடம் மிகவும் பொறுமையாகச் சொன்னார்: "இந்த நாட்டில் மறுபடியும் கலவரம் வெடிக்காமல், அமைதியான சூழ்நிலை நிலவுவதற்கு, தீமைக்குப் பதில் நன்மை செய்வதைத் தவிர வேறு நல்ல வழியில்லை."

ஆம், இந்த உலகில் கலவரமும் வன்முறையும் ஓயவேண்டும் என்றால், அதற்குத் தீமை ஒருபோதும் தீர்வாகாது; நன்மைதான் தீர்வாகும். இன்றைய நற்செய்தியில் இயேசு இத்தகைய செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

தீமைக்குத் தீமை ஒருபோதும் தீர்வாகாது

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் "கண்ணுக்குக் கண்", "பல்லுக்குப் பல்" என்ற சட்டம் இருந்தது (விப 21: 23-25; லேவி 24: 19-20; இச 19:21). இந்தச் சட்டத்தைக் குறித்து நாம் கேள்விப்படும்பொழுது, "இது என்ன கடினமான சட்டமாக இருக்கின்றதே!" என்று நமக்குத் தோன்றலாம்; ஆனால், அந்தக்காலத்தில் இக்கடினமான சட்டம்கூட, சமூகத்தில், இனக்குழுக்களிடையே சமநிலை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

எடுத்துக்காட்டிற்கு ஓர் இனக்குழுவில் உள்ள ஒருவரை இன்னோர் இனக்குழுவில் உள்ள ஒருவர் தாக்கினால், பதிலுக்குத் தாக்கப்பட்ட இனக்குழுவைச் சார்ந்தவர், தாக்கிய இனக்குழுவில் உள்ள எல்லாரையும் அழிக்கக்கூடிய அபாயம் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருவன் இன்னொருவனின் கண்ணையோ பல்லையோ எடுத்தால், பதிலுக்கு அவனுடைய கண்ணையோ, பல்லையோ எடுக்கும் சட்டமானது நடைமுறைக்கு வந்தது. ஆனால், ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், இந்தச் சட்டம்கூட வேண்டாம் என்று சொல்கின்றார். காரணம், கண்ணுக்குக் கண்ணை எடுத்தால், இந்த உலகில் யாவரும் பார்வையற்றவர்களாகத்தான் இருக்கவேண்டி வரும். பல்லுக்குப் பல்லை எடுத்தால், எல்லாரும் பல்லில்லாமல்தான் அலையவேண்டி வரும். அதனால்தான் இயேசு அப்படிச் சொல்கின்றார்.

தீமைக்கு நன்மையே தீர்வு

பழைய ஏற்பாட்டுக் காலச் சட்டங்களைச் சொல்லிவிட்டு அதற்கு மாற்றாக, இயேசு புதிய சட்டமாக, தீமைக்குப் பதில் நன்மை செய்யுங்கள் என்று குறிப்பிடுகின்றார். வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும், அங்கியை எடுத்துக்கொள்ள விரும்புபவருக்கு மேலுடையையும், ஒருகல் தொலை நடக்கக் கட்டாயப்படுத்துபவரிடம் இருகல் தொலைவும், கேட்கிறவருக்குக் கொடுப்பதும், கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகங்கோணாமல் கொடுப்பதும், தீமைக்குப் பதில் நன்மை செய்வதற்கான வழிகள் என்று குறிப்பிடுகின்றார் இயேசு.

ஒருவர் நமக்குத் தீங்குசெய்கின்றபொழுது, பதிலுக்கு நாம் அவருக்குத் தீங்கு செய்யாமல், இயேசு சொல்வதுபோல் நன்மை செய்கின்றபொழுது, தீமை குறைவதற்கு வாய்ப்பிருக்கின்றது. மட்டுமல்லாமல், நமக்குத் தீமை செய்த நபர், இப்படிப்பட்ட மனிதருக்காக நாம் தீமை செய்தோம் என்று மனந்திருந்துவதற்கான வாய்ப்பிருக்கின்றது. ஆகையால், நாம் தீமைக்கு ஒருபோதும் தீமை தீர்வாகாது; நன்மைதான் தீர்வாகும் என்பதை உணர்ந்து, நமக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யக்கொள்வோம். அதன்மூலம் இயேசுவின் உண்மையான சீடர்கள் ஆவோம்

சிந்தனை

"சிலர் நீங்கள் கீழே விழவேண்டும் என்று மன்றாடுவார்கள்; அப்படிப்பட்டவர்கள் மேலே எழவேண்டும் என்று மன்றாடுகள்" என்பார் ரம்மி ரோசியர் என்ற அறிஞர். ஆகையால், நாம் நமக்குத் தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்வோம். அதன்மூலம் இயேசுவின் உண்மையான சீடர்கள் ஆவோம்; இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 1 அரசர்கள் 21: 1-6

பேராபத்தை விளைவிக்கும் பேராசை

நிகழ்வு



துறவி ஒருவர் இருந்தார். இவரைப் பணக்காரன் ஒருவன் மிகத் தீவிரமாகப் பின்பற்றி வந்தான். ஒருநாள் அவன் ஒரு பையில் ஐநூறு பொற்காசுகளை வைத்து, அதை துறவியிடம் கொண்டு வந்து, "சுவாமி! இதை என்னுடைய காணிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள்" என்றான்.

அதை வாங்கிய துறவி, "உன்னிடம் இவ்வளவுதான் பொற்காசுகள் இருக்கின்றனவா...? என்றார். அவனோ, "இல்லை சுவாமி! இன்னும் ஏராளமாக இருக்கின்றன" என்று சொன்னதும், துறவி மீண்டுமாக அவனிடம், "இன்னும் உனக்குப் பணம் வேண்டுமா?" என்றார். அவனும், "ஆமாம் சுவாமி! இன்னும் எனக்கு ஏராளமாகப் பணம் வேண்டும்" என்று சொன்னதும், துறவி, "அப்படியானால், நீ கொடுத்த இந்தக் காணிக்கையையும் நீயே வைத்துக்கொள். ஏனெனில் உனக்குத்தான் பணம் மிகுதியாகப் பணம் தேவைப்படுகின்றதே! எனக்கு பணமும் தேவையில்லை; இன்னமும் வேண்டும் என்ற எண்ணமும் இல்லை" என்றார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற பணக்காரனைப் போன்றுதான் பலர் இருப்பதை வைத்து நிறைவடையாமல், "இன்னமும் வேண்டும்... இன்னமும் வேண்டும்" என்று பேராசைப்பட்டு பேரழிவில் மாட்டிக் மாடிக்கொள்வதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேலின் அரசனாக இருந்த ஆகாபு நாபோத்தின் திராட்சைத் தோட்டத்திற்கு ஆசைப்பட்டத்தையும், தொடர்ந்து நடக்கும் தீவினையையும் எடுத்துக் கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நாபோத்தின் திராட்சைத் தோட்டத்திற்கு ஆசைப்பட்ட ஆகாபு

இஸ்ரயேலின் அரசனாக இருந்த ஆகாபு, தன்னுடைய அரண்மனைக்கு அருகில் இருந்த நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தனக்குத் தருமாறு நாபோத்திடம் கேட்க, அவரோ, "இது என் மூதாதையரின் சொத்து. நான் உனக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக" என்று சொல்லி மறுத்து விடுகின்றார். நாபோத்து, ஆகாபு மன்னிடம் இவ்வாறு சொன்னதற்கு முக்கியமான காரணம், நிலம் ஆண்டவருக்குச் சொந்தம். அதை யாரும் விற்று விடக்கூடாது (லேவி 25: 23) என்பதால்தான். திராட்சைத் தோட்டத்தை நாபோத்து தனக்குத் தரவில்லை என்றதும், அவன் உணவருந்த மறுத்துக் கவலையோடு இருக்கின்றான். பின்னர் தன் மனைவி ஈசபேல் காரணத்தைக் கேட்டதும், எல்லாவற்றையும் சொல்கின்றான்.

ஆகாபு, நாபோத்தின் தோட்டத்தின்மீது பேராசை கொண்டது, அவன் செய்த முதல் தவறு என்று சொல்லலாம்; ஆனால், அதற்கு முன்பாகவே அவன் பாகால் தெய்வ வழிபாட்டைத் தன்னுடைய மனைவியோடு ஆதரித்து வந்தான். அதனால்கூட அவனுடைய உள்ளத்தில் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். "பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே" (விப 20: 17) என்பது கடவுள் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளுள் ஒன்று. ஆகாபு நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை விரும்பியதால், அவன் முதல் தவற்றைச் செய்யத் தொடங்குகின்றான்.

தன் மனைவி வழியாக நாபோத்தைக் கொன்று, அவனுடைய நிலத்தை அபகரித்த ஆகாபு

ஆகாபு மன்னன், நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை அடையமுடியவில்லை என்ற தன் மனைவி ஈசபேலிடம் சொன்னபொழுது, அவள் நாபோத்துக்கு எதிராகப் பொய்ச்சான்றுகளை ஏற்பாடு செய்யத் தொடங்குகின்றாள். "பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே" (விப 20:16) என்பது ஒன்பதாவது கட்டளை. அதை ஆகாபு தன் மனைவியின் வழியாக, நாபோத்துக்கு எதிராகச் செய்கின்றான்.

பின்னர் நாபோத்துக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னவர்கள், "நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான்" என்கின்றார்கள். "கடவுளையும் மக்கள் தலைவனையும் பழிக்காதே" (விப 23: 28) என்கிறது விடுதலைப் பயண நூல். இதனால் கடவுளையும் மக்கள் தலைவனையும் பழித்துவிட்டான் என்பதற்காக, நாபோத்து கல்லால் எறிந்து கொல்லப்படுகின்றான். இவ்வாறு ஆகாபு மன்னன் கொலை செய்பவனாகவும் (விப 20: 13), களவு செய்பவனாகவும் (விப 20: 15) மாறுகின்றான். ஆகாபின் உள்ளத்தில் இருந்த ஆசையே, நாபோத்தைக் கொல்வதுவரைக்கும் இட்டுச் செல்கின்றது.

ஆகாபு நாபோத்து தொடர்பான இந்த நிகழ்வு இன்றைக்கும் கூட நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள், சாதாரண மக்கள் தங்களுடைய பிழைப்பிற்காக வைத்திற்கும் சிறிதளவு நிலத்தையும் உடைமைகளையும் அபகரித்துக் கொள்ளும் சூழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. திருடர்களாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் சாதாரண மக்களுக்கு எதிராகச் செய்யும் திருட்டை, பாதகச் செயலை நிறுத்தாவிட்டால் அநீதி ஓய்வதற்கு வாய்ப்பில்லை. பிறகு இறைவன்தான் அவர்களுக்கு நீதி வழங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்

சிந்தனை

"பொருளாசையே எல்லாத் தீமைகளுக்கு ஆணிவேர் (1திமொ 6:10) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் உலக செல்வங்களின் மீது ஆசை, பற்று வைக்காமல், இறைவன்மீது பற்று வைத்து வாழ்வோம். ஏழைகளுக்கு எதிராக அநீதி இழக்காமல், அவர்களுக்கு நல்லது செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!