Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     13 ஜூன் 2020  

பொதுக்காலம் 10ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 
++எலிசா புறப்பட்டுப் போய் எலியாவுக்குப் பணிவிடை செய்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 19-21


அந்நாள்களில் எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர்மீது தூக்கிப் போட்டார். எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, "நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன் பின் உம்மைப் பின்செல்வேன்" என்றார். அதற்கு அவர், "சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!" என்றார். எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற, அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 16: 1-2a,5. 7-8. 9-10 . (பல்லவி: 5a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.
1
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2a
நான் ஆண்டவரிடம் "நீரே என் தலைவர்;" என்று சொன்னேன்.
5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி

7
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி

9
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
திபா 119: 36a, 29b

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

++நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-37


அக்காலத்தில் இயேசு கூறியது:  "பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம். உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. ஆகவே நீங்கள் பேசும் போது "ஆம்" என்றால் "ஆம்" எனவும் "இல்லை" என்றால் "இல்லை" எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.""

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 அரசர்கள் 19: 19-21

"இழக்கத் துணிவதே சீடத்துவம்"

நிகழ்வு

கொரியாவைச் சார்ந்தவர் ஆன் ஈ சூக் (Ahn Ei Sook). இவர் ஓர் அருள்பணியாளர் வழியாகக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். இவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக இவருடைய குடும்பம் இவரை ஒதுக்கி வைத்தது. அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத இவர் தனித்து வாழத் தொடங்கினார்.

இந்த நேரத்தில் (1930 களில்) கொரியாவின்மீது ஜப்பானின் படையெடுப்பு படையெடுப்பு நடைபெற்றது. இதில் கொரியாவில் இருந்த பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதில் ஆன் ஈ சூக்கும் அடங்கும். சிறையில் அடைக்கப்பட்ட இவரை அங்கிருந்த சிறை அதிகாரிகள், ஜப்பானியத் தெய்வங்களை வணங்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இவரோ கிறிஸ்துவைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்று தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதனால் சிறை அதிகாரிகள் இவரை அடித்துத் துன்புறுத்தினார்கள்; கொடுமையாகச் சித்திரவதை செய்தார்கள். அப்படியிருந்தும் இவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இப்படிப்பட்ட சித்திரவதைகள் ஆன் ஈ சூக்கிற்கு ஆறு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன. ஒருமுறைகூட இவர் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு அவர்களுடைய தெய்வங்களை வணங்கவில்லை. ஆறு ஆண்டுகள் கழித்து இவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டபொழுது சிறை அதிகாரி, அங்கிருந்த சிறைவாசிகளிடம், "இந்தப் பெண்மணியிடம் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, எங்கள் தெய்வத்தை வணங்கவேண்டும் என்று சொல்லி எவ்வளவோ சித்திரவதை செய்தோம்; இவரோ ஒருமுறைகூட கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, எங்கள் தெய்வத்தை வணங்கவில்லை. உண்மையில் இவர் மிகப்பெரியவர்தான்!" என்றார். உடனே அங்கிருந்த சிறைக்கைதிகள் இவருக்குச் சத்தமாகத் தங்களுடைய கைகளைத் தட்டி, வாழ்த்துகள் கூறி, இவரை மகிழ்ச்சியோடு சிறையிலிருந்து அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வில் வரும் கொரியப் பெண்மணியான ஆன் ஈ சூக், கிறிஸ்துவைப் பின்பற்றியதால் முதலில் தன்னுடைய குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். அடுத்து, சிறையில் பல்வேறு விதமான சித்திரவதைகளை அனுபவித்தார். அப்படியிருந்தும் கூட, இவர் கிறிஸ்துவின்மீதுகொண்ட நம்பிக்கையில் கடுகளவுகூடத் தளரவில்லை. ஆம். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுவிட்டாலே இழப்புகளும் துன்பங்களும் தவிர்க்க முடியாதவைதானே! இன்றைய முதல் வாசகத்தில் இறைப்பணிக்காக தன்னுடைய குடும்பம், ஏர் மாடுகள் என் யாவற்றையும் இழக்கத் துணிந்த எலிசாவைக் குறித்து வாசிக்கின்றோம். எலிசாவின் அழைப்பு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைப்பணிக்காக எலிசா அழைக்கப்படல்

பாகால் தெய்வ வழிபாட்டை ஆதரித்த நானூற்று ஐம்பது பொய்வாக்கினர்களை இறைவாக்கினர் எலியா கொன்றொழித்த செய்தியைக் கேள்விப்பட்ட ஈசபேல் அரசி, அவரைக் கொல்வதற்குத் திட்டமிடுகின்றார். இதனால் எலியா இறைவாக்கினர் உயிருக்குப் பயந்து ஓரேபு மலையில் இருந்த ஒரு குகையில் வந்து ஒளிந்துகொள்கின்றார். அப்பொழுது மெல்லிய ஒலியின் வழியாக அவரோடு பேசிய கடவுள், அசாவேல், எகூ இருவரையும் அரசராகத் திருப்பொழிவு செய்; எலியாவை உனக்குப் பதிலாக அருள்பொழிவு செய் என்கின்றார். இதற்குப் பின்பு எலியா அங்கிருந்து வந்து, சாப்பாற்றின் மகனான எலிசாவின்மீது தன் மேலாடையைத் தூக்கிப் போட்டு இறைப்பணிக்காக அவரை அழைக்கின்றார். இறைவாக்கினர் எலியா, எலிசாவை அழைத்ததும், அவர் என்ன செய்தார் என்பதைப் பற்றித் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

எல்லாவற்றையும் விட்டு வந்த எலிசா

எலியா, எலிசாவை அழைத்தபொழுது அவர் ஏர்பூட்டி உழுதுகொண்டிருந்தார். பின்னர் எலியா எலிசாவைக் கடந்துபோகும்பொழுது, அவர் எலியாவிடம் ஓடிவந்து, "நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும்..." என்கின்றார். எலிசா இவ்வாறு சொன்னது, "கலப்பையில் கைவைத்த பின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக் 9: 62) என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு எதிரானதா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், நற்செய்தியில் வரும் அந்த மனிதர்கள் இயேசுவைப் பின்பற்றுவதைக் குறித்துக் குழைப்பத்தில் இருந்தார்கள். அவர்களுக்குத்தான் அந்த வார்த்தைகள் பொருந்துவதாக இருக்கின்றன. எலிசாவோ அப்படியில்லை. இறைப்பணி செய்வதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். அதனால்தான் அவர் தன்னிடமிருந்து இருபத்து நான்கு ஏர்மாடுகளை வெட்டி உணவாகப் படைத்து, கலப்பைகளை விருந்து தயாரிக்கப் பயன்படுத்தினார். இவ்வாறு எலிசா இறைப்பணிக்காகத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார்.

கடவுள் நம் ஒவ்வொருவரையும் அவருடைய பணிக்காக அழைக்கின்றார். நாம் அவருடைய அழைப்பை ஏற்று, அவருடைய பணியைச் செய்யத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"என் பின்னே வாருங்கள், நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" (மத் 4: 19) என்று சொல்லி இயேசு முதல் சீடரை அழைத்தது போன்று, இன்று நம்மையும் அழைக்கின்றோம். நாம் அவருடைய பணியைச் செய்ய நம்மையே அர்ப்பணிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 5: 33-37

"ஆணையிடவே வேண்டாம்"


நிகழ்வு



ஒரு நகரில் பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் கிறிஸ்தவரும்கூட. நன்றாக இருந்த அவர் திடீரெனப் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுந்தார். அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், "இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று சொல்லிக் கைவிரித்துவிட்டனர். இதனால் அந்தச் செல்வந்தர் தன்னுடைய பிள்ளைகள் மூலம் பங்குத்தந்தையை அழைத்து, "சுவாமி! எனக்காக மன்றாடுங்கள். உங்களுடைய மன்றாட்டினால் நான் நலமடைந்துவிட்டால், கோயில் கட்டுமானப் பணிக்காக ஒருகோடி உரூபாய் வரைத் தருகிறேன். இதை நான் கும்பிடுகின்ற அந்த அந்தோனியார் மேல் ஆணையாகச் சொல்கின்றேன்" என்றார். உடனே பங்குத்தந்தைச் செல்வந்தருக்காக உருக்கமாக இறைவனிடம் வேண்டிவிட்டுச் சென்றார்.

பங்குத்தந்தை அந்தச் செல்வந்தருக்காக இறைவனிடம் வேண்டிவிட்டுச் சென்ற நேரம், அந்தச் செல்வந்தர், வெகு விரைவிலேயே நலமடைந்து வீடு திரும்பினார்.

இது நடந்து ஓரிரு மாதங்கள் கழித்து பங்குத்தந்தையும் செல்வந்தரும் கோயிலில் சந்தித்துக் கொண்டார்கள். இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், பங்குத்தந்தை மெல்லப் பேச்சை எடுத்தார். "ஐயா! நீங்கள் மருத்துவமனைவில் இருக்கும்பொழுது "நான் மட்டும் பிழைத்துக்கொண்டால், கோயில் கட்டுமானப் பணிக்காக ஒரு கோடி உரூபாய் வரைக்கும் தருவேன்" என்று ஆணையிட்டுக் கூறினீர்களே! இப்பொழுது என்னுடைய கையில் பணம் இல்லாததால், கோயில் கட்டுமானப் பணிகள் தொய்வடைந்துவிட்டன. நீங்கள் கொடுப்பதாக ஆணையிட்டுச் சொன்ன அந்த ஒரு கோடி உரூபாயைத் தந்தால் கோயில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெறும்" என்றார் .

பங்குத்தந்தை இப்படிச் சொன்னதுதான் தாமதம், செல்வந்தர் தன்னுடைய குரலைச் உயர்த்தி, "என்ன! நான் கோயில் கட்டுமானப் பணிக்கு ஒருகோடி உரூபாய் தருவதாகச் சொன்னேனா...! நாம் கும்பிடுகின்ற அந்த அந்தோனியார் மேல் ஆணை! அப்படியெல்லாம் நான் சொல்லியிருக்க மாட்டேன்" என்று சாதித்தார். இதைக் கேட்ட பங்குத்தந்தைக்கு ஏதோ போல் ஆயிற்று. "போயும் போயும் இந்த மனிதரையா நம்பினேன்!" என்று அவர் தன்னையே நொந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் வரும் செல்வந்தர் எப்படி எதற்கெடுத்தாலும் அந்தோனியார் மேல் ஆணையிட்டாரோ அல்லது சத்தியம் செய்தாரோ, அப்படித்தான் இன்றைக்குப் பலர் யாரோ ஒருவர்மீது ஆணையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய செயல் தவறானது என்பதை நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பொய்யர்கள்தான் ஆணையிடுவார்கள்

"பொய்யாணை இடாதீர், ஆணையிட்டு நேர்ந்துகொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்" என்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றது (விப 20: 7; லேவி 19: 12; எண் 30: 2; இச 5: 11, 6:13, 23: 21-23). ஆண்டவர் இயேசு இதை மேற்கோள் காட்டிவிட்டு, விண்ணுலகின்மீதோ, மண்ணுலகின்மீதோ, எருசலேமின்மீதோ, தலைமுடியின் மீதோ.. எதன்மீதும் ஆணையிட வேண்டாம் என்று கூறுகின்றார்.

எதன்மீதும் ஆணைவிட வேண்டாம் என்று இயேசு சொல்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, நமக்கு எதன்மீதும் அதிகாரம் கிடையாது; இயேசுவுக்கு மட்டுமே எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கின்றது (மத் 28: 18). அதனால் நாம் எதன்மீதும் ஆணையிடக் கூடாது. இரண்டாவதாக, ஆணையிடும் யாரும் தங்களுடைய பொய்யை, போலித்தனத்தை மறக்கவே ஆணையிடுகின்றார்கள். அதனால் நாம் எதன்மீதும் ஆணையிடக்கூடாது என்கின்றார் இயேசு.

உண்மை பேசுபவர்களின் பேச்சு "ஆம்" என்றால் "ஆம்" என்றே இருக்கும்

ஆணையிடக் கூடாது என்று சொன்ன இயேசு, ஒருவருடைய பேச்சு எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். "நீங்கள் பேசும்போது, "ஆம்" என்றால் "ஆம்" எனவும் "இல்லை" என்றால் "இல்லை" எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடமிருந்து வருகின்றது" என்று சொல்வதன் மூலம் நம்முடைய பேச்சு உண்மையானதாய், நன்மையானதாய் இருக்கவேண்டும் என்று எடுத்துக் கூறுகின்றார் இயேசு.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்முடைய பேச்சு எப்படி இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். "சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்" என்று நம்முடைய சொற்கள் அல்லது வார்த்தைகள் எப்படி இருக்கவேண்டும் என்று கூறுவார் திருவள்ளுவர். ஆகையால், நாம் பயனில்லா சொற்களைத் தவிர்த்து, பயனுடைய சொற்களைப் பேசுவோம். அதன்மூலம் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம்.

சிந்தனை

"கோழைகளைத் தவிர வேறு எவரும் பொய் செல்வதில்லை" என்பார் மர்ஃபி என்ற அறிஞர். ஆம், கோழைகள் தான் பொய்சொல்வார்கள்; பொய்யாணையும் இடுவார்கள். பலசாலிகள் அல்லது ஆண்டவருடைய வழியில் நடப்பவர்கள் ஒருபோதும் பொய் சொல்வதில்; பொய்யாணையும் இடுவதில்லை. நாம் எப்பொழுதும் இயேசுவின் வழியில் நடந்து உண்மை பேசுபவர்களாவோம் அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
பொய்யாணை இடாதீர்கள்!

அந்த ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவர் வசதி படைத்தவராக இல்லாவிட்டாலும் கூட நிறைவான வாழ்க்கை வாழ்கின்ற அளவுக்கு இறைவன் அவரை ஆசிர்வதித்திருந்தார்; அவர் தன்னிடம் கேட்கின்ற மனிதர்களுக்கு எப்போதும் முகங்கோணாமல் உதவி செய்யக்கூடியவராகவும் இருந்தார்.

ஒருநாள் விவசாயிடத்தில் அவ்வூரில் இருந்த கசாப்புக் கடைகாரர் ஒருவர் அழுதுகொண்டே வந்தார். அவர் விவசாயிடம், ஐயா! என்னுடைய தந்தை சிறிது நேரத்திற்குக் முன்பாக இறந்து போய்விட்டார். அவருடைய ஈமச் சடங்கினைச் செய்கின்ற அளவுக்கு என்னுடைய கையில் போதிய பணமில்லை; நீங்கள்தான் எனக்கு ஒரு முப்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்கவேண்டும். அப்படி நீங்கள் பணம் கொடுத்தால், அதை ஒரே மாதத்தில் திருப்பித் தந்துவிடுகிறேன். இது என்னுடைய தாயின்மீது சத்தியம் என்றார். விவசாயியோ தன்னுடைய மகளின் திருமணச் செலவுக்காக கையில் குறைவான அளவில்தான் பணம் வைத்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவரிடம் இவ்வளவு பணத்தைக் கொடுத்தால், அடுத்து என்ன செய்வது என்று ஒருகணம் யோசித்துப் பார்த்தார். சரி அவசரத்துக்குத் தானே பணம் கேட்கிறார், தந்து உதவுவோம் என்று அவரிடத்தில் முப்பதாயிரம் ரூபாயை எடுத்துக்கொடுத்தார். அப்படிக் கொடுக்கும்போது அவர், மகளின் திருமண காரியத்திற்காக வைத்திருந்த பணத்தைத்தான் உனக்குத் தருகிறேன், அதனால் தவறாமல் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தைத் தந்துவிடு என்று சொல்லிவிட்டுத் தந்தார். கசாப்புக் கடைக்காரரும் விவசாயி சொன்னதற்கு சரி என்று சொல்லிவிட்டு பணத்தை வாங்கிகொண்டு போனார்.

கசாப்புக் கடைக்காரர் விவசாயிக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப, குறிப்பிட்ட தேதியில் பணத்தை அவரிடத்தில் கொடுக்கவில்லை, விவசாயியோ மேலும் ஒருவார காலம் பொறுத்துப் பார்த்தார். அப்படியும் கசாப்புக் கடைக்காரர் அவரிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து கொடுக்கவில்லை. சரி நேரடியாகவே அவருடைய வீட்டிற்குச் சென்று, பணத்தை அவரிடத்தில் கேட்டுப் பார்ப்போம் என்று அவருடைய வீட்டிற்குச் சென்றபோது, கசாப்புக் கடைக்காரர் விவசாயி தன்னுடைய வீட்டிற்கு வருவது தெரிந்து வீட்டை விட்டு வெளியேறினார். கசாப்புக் கடைக்காரர் இப்படியெல்லாம் நடந்துகொள்வதை அறிந்து விவசாயி மனவேதனை அடைந்தார்.

இப்படி பொறுத்துப் பொறுத்துப் பார்த்த விவசாயி ஒருகட்டத்தில் அவர் கசாப்புக் கடைக்காரர்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கசாப்புக் கடைக்காரர் பணத்ததை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய குற்றத்திற்காக, நீதிமன்றம் வாங்கிய தொகையைவிட ஒரு மடங்கு அபராதம் விதித்து அவருக்குத் தண்டனை வழங்கியது. (சில மாதங்களுக்கு முன்பாக தினகரன் பத்திரிக்கையில் வந்த நிகழ்வு இது).

மனிதர்கள் எப்படி கொடுத்த வாக்குறுதிகளை மீறுபவர்களாகும், ஆணையிட்டுக் கூறியதற்கு எதிராகச் செயல்படுபவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பொய்யாணை இடவேண்டாம் என்கிறார். எதற்காக என்றால், இயேசு வாழ்ந்த காலத்தில் நிறையப் பேர் ஆண்டவர் மீதும் விண்ணகத்தின் மீதும் மண்ணகத்தின் மீதும், எருசலேம் மீதும் ஆணையிட்டுப் பேசினார்கள். இப்படி செய்ததால் அவர்கள் தேவையில்லாமல் ஆண்டவரையும் உள்ளே இழுத்தார்கள். அதனால்தான் இயேசு ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மீதும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம்... என்கிறார். எதன்மீதும் ஆணையிடக்கூடாது என்பது இயேசு வலியுறுத்திக்கூறும் செய்தியாக இருக்கின்றது.

ஆண்டவருக்குக் வாக்குறுதி கொடுத்தால் அதனை மீறக்கூடாது என்பது பழைய ஏற்பாடு சொல்லும் பாடமாக இருக்கின்றது (எண் 30:2), ஆனால், இஸ்ரயலரோ தாங்கள் கடவுளுக்குக் கொடுத்த வாக்குறிதியை மறந்தார்கள், பொய்யான தெய்வங்களை வழிபாட்டு, போலியான வாழ்க்கை வாழத் தொடங்கினார்கள். அதனாலே கடவுள் அவர்களைத் தண்டிக்கின்றார்.

ஆகையால், நாம் இறைவன்மீது எக்காரணத்தைக் கொண்டும் ஆணையிடக் கூடாது, அதே நேரத்தில் இறைவனுக்கு கொடுத்த வாக்குறிதிகளை நாம் மீறக்கூடாது. இன்றைக்கு நிறையப் பேர் இறைவன் மீது ஆணையிட்டு ஒரு காரியத்தைச் செய்கிறார்கள். ஆனால், காலப்போக்கில் அவற்றை மறந்துவிட்டு, தங்கள் விருப்பம் போல் வாழத் தொடங்கி விடுகிறார்கள்.

எனவே, நாம் இறைவன்மீது ஆணையிடுகின்ற தவறான போக்கினை விடுவோம், நாம் கடவுளுக்கும் பிறருக்கும் கொடுக்கின்ற வாக்குறுதிகளுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!