|
|
12 ஜூன் 2020 |
|
பொதுக்காலம்
10ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மலைமேல் ஆண்டவர் திருமுன் வந்து நில்.
அரசர்கள் முதல்
நூலிலிருந்து வாசகம் 19: 9a,11-16
அந்நாள்களில் எலியா அங்கிருந்த
குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர்,
"வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய
நான் கடந்து செல்ல இருக்கிறேன்" என்றார். உடனே ஆண்டவர்
திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச்
சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை.
காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும்
ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று.
தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய
ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை
மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது,
"எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?" என்று ஒரு குரல் கேட்டது.
அதற்கு அவர், "படைகளின் கடவுளாகிய ஆண்டவர்மீது நான் பேரார்வம்
கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை
உதறிவிட்டனர்; உம் பலி பீடங்களைத் தகர்த்து விட்டனர்; உம் இறைவாக்கினரை
வாளால் கொன்று விட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என்
உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்" என்றார். அப்போது ஆண்டவர்
அவரிடம், "நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம்
நோக்கிச் செல். அவ்விடத்தை அடைந்தவுடன் அசாவேலைச் சிரியாவுக்கு
மன்னனாகத் திருப்பொழிவு செய். நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு
அரசனாகத் திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த
சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு
செய்'' என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 27: 7-8a. 8b-9abc. 13-14 . (பல்லவி: 8b)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.
7
ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது
இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.
8
"புறப்படு, அவரது முகத்தை நாடு" என்றது என் உள்ளம். - பல்லவி
8a
ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.
9abc
உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை
விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே,
என்னைத் தள்ளிவிடாதிரும். - பல்லவி
13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று
நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை
பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
பிலி 2: 15-16 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள்.
உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே
அப்பெண்ணோடு விபசாரம்
செய்தாயிற்று.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 5: 27-32
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: `விபசாரம் செய்யாதே' எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன்
நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம்
செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்
செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும்
நரகத்தில் எறியப் படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள்
இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச்
செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள்.
உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில்
ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. `தன் மனைவியை விலக்கி விடுகிறவன்
எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்' எனக் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக
அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச்
செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை
மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.''
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 அரசர்கள் 19: 9a, 11-16
"எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?"
நிகழ்வு
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் கெய்த் மில்லர். இவர் எழுதிய "The
Taste of New Wine" என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது.
நன்றாகச் சென்றுகொண்டிருந்த இவருடைய வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு
மேல் பிரச்சனைகள் வரத் தொடங்கின. இதனால் இவர் யாருமில்லாத இடத்திற்குச்
சென்று, தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று
முடிவு செய்தார். இதன் பொருட்டு, இவர் தனியான ஓர் இடத்திற்குச்
சென்றார். அந்த இடத்தில் இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு
முன்பாக மேலே பார்த்து, "இறைவா! என்னிடத்திலிருந்து உமக்கு என்ன
வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளும்" என்று கண்ணீர் சிந்தி, உரக்கக்
கத்தினார்.
அப்பொழுது யாரோ ஒருவர், "நான் உன்னுடைய விருப்பத்தைத் தவிர
வேறொன்றையும் கேட்கவில்லை" என்று சொல்வதுபோல், இவருக்குக் கேட்டது.
இவர் சுற்றும் முற்றும் பார்த்தார். அங்கு இவரைத் தவிர வேறு
யாருமில்லை. அப்பொழுது இவர், "இறைவன்தான் நம்மிடத்தில்
பேசியிருக்கின்றார்" என்று நினைத்துக்கொண்டவராய், இறைவனின்
விருப்பத்திற்குத் தன்னையே கையளித்து வாழத் தொடங்கினார்.
இதற்குப் பின்பு இவர் எழுதிய புத்தகம்தான் மேலே உள்ள "The
Taste of New Wine" என்ற புத்தகமாகும். இதில் இவர்
குறிப்பிடும் ஒரு வரி மிகவும் முக்கியமானது. அந்த வரி இதோ:
"கடவுள் உன்னுடைய விருப்பத்தைக் கேட்கின்றார். நீ உன்னுடைய
விருப்பத்தை அவருக்குக் கொடுத்தால், உன்னுடைய வாழ்க்கை, உன்
முந்தைய வாழ்க்கையைவிடப் பல மடங்கு உயர்ந்து நிற்கும்."
எப்படி வாழ்க்கையே வெறுத்துப் போய்த் தற்கொலை செய்துகொள்ளத்
துணிந்த கெய்த் மில்லரை ஆண்டவர் தடுத்தாட்கொண்டு, அவருக்குப்
புதியதொரு வாழ்க்கையைத் தந்து, அவரைத் தன்னுடைய விருப்பத்தின்படி
நடக்கப் பணிந்தாரோ, அப்படி உயிருக்குப் பயந்து, குகைக்குள் ஒளிந்து
வாழ்ந்த எலியா இறைவாக்கினரை ஆண்டவர் "இரண்டாவது முறையாகத்" தன்னுடைய
பணியைச் செய்ய அழைக்கின்றார். ஆண்டவராகிய கடவுள் எலியா இறைவாக்கினரை
இரண்டாவது முறையாக அழைத்த இந்த நிகழ்வு, நமக்கு என்ன செய்தியை
எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுத் நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
உயிருக்குப் பயந்து தப்பியோடி வந்த எலியா
எலியா இறைவாக்கினர், பாகால் தெய்வ வழிபாட்டை ஆதரித்து வந்த 450
பொய்வாக்கினர்களைக் கொன்றொழித்தார். இச்செய்தி ஈசபேலுக்குத்
தெரிய வந்ததும், அவள் எலியா இறைவாக்கினரைக் கொல்வதற்குத் திட்டம்
தீட்டினாள். இதனால் எலியா இறைவாக்கினர் ஓரேபு மலைக்குத் தப்பி
ஓடிவருகின்றார்.
ஆண்டவராகிய கடவுள் எலியா இறைவாக்கினரோடு எப்பொழுதும் உடனிருந்தார்.
அது ஆகாபு மன்னனுக்கு எதிராக இறைவாக்கு உரைக்கும்பொழுதும் சரி,
மூன்றரை ஆண்டுகள் வானம் பொய்த்தபொழுதும் சரி, பொய்வாக்கினர்களை
அவர் எதிர்கொண்டபொழுதும் சரி ஆண்டவர் எப்பொழுதும் அவரோடு உடனிருந்து,
அவருக்கு பாதுகாப்பையும் வெற்றியையும் தேடித் தந்தார். அப்படியிருந்தும்
அவர் ஈசபேலிடமிருந்து உயிருக்கு ஆபத்து வந்ததும், ஆண்டவருடைய
பாதுகாப்பில் நம்பிக்கை வைக்காமல், ஓரேபு மலைக்குத் தப்படியோடி
வந்து ஒளிந்துகொள்கின்றார். இப்படிப்பட்ட சூழலில்தான் ஆண்டவர்
அவருக்குத் தோன்றுகின்றார்.
மெல்லிய ஒலியில் தன்னை வெளிப்படுத்திய ஆண்டவர்
ஆண்டவராகிய கடவுள், குகையில் ஒளிந்திருந்த எலியா இறைவக்கினருக்குத்
தோன்றிய விதம் நம்மை வியப்படைய வைப்பதாக இருக்கின்றது. "இதோ ஆண்டவராகிய
நான் கடந்து செல்லவிருக்கிறேன்" என்று ஆண்டவர், எலியா இறைவாக்கினரிடம்
சொன்னதும், அவர் மலைமேல் வருகின்றார். அங்கு சுழற்காற்று, நிலநடுக்கம்,
தீ என ஒவ்வொன்றாக வருகின்றது. எதனிலும் கடவுள் இல்லை. இறுதியாக
வந்த மெல்லிய ஒலியில்தான் இருந்தார். அப்பொழுது ஆண்டவர் அவரிடம்,
"நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கின்றாய்?" என்று
கேட்கின்றார். இக்கேள்வி, "உனக்கென ஒரு பணி இருக்கும்பொழுது இங்கே
ஏன் வந்தாய்?" என்று கேட்பது போல் இருக்கின்றது.
மேலும் கடவுள் எப்பொழுதும் தன்னைப் பிரமாண்டங்கள் வழியாகவும்,
பெரிய பெரிய செயல்கள் வழியாகவும் வெளிப்படுத்துவதில்லை. அவர்
சாதாரண, எளியவற்றின் மூலமாகவே வெளிப்படுத்துகின்றார் என்ற உண்மையை
நமக்கு எடுத்துரைப்பதாவும் இருக்கின்றது. மெல்லிய ஒலியில் ஆண்டவர்
இருந்தது, "காற்று விரும்பிய திசையில் வீசுகின்றது" (யோவா 3:8)
என்று இயேசு பரிசேயர் தலைவர் நிக்கதேமிடம் சொல்வதை நமக்கு
நினைவுபடுத்துகின்றது .
இதற்குப் பின்பு ஆண்டவர், இறைவாக்கினர் எலியாவை மீண்டுமாகத் தன்
பணிக்கு அழைத்து, அசாவேலையும் எகூவையும் அரசராகத் திருப்பொழிவு
செய்யவும், எலிசாவை இறைவாக்கினராக அருள்பொழிவு செய்யவும்
சொல்கின்றார். ஆண்டவர், எலியா இறைவாக்கினரை மீண்டுமாக அழைத்தது,
கடவுள், நம் ஒவ்வொருவருக்கும் மீண்டுமாக ஒரு வாய்ப்பினைத் தருகின்றார்
என்ற செய்தியை உணர்த்துவதாக இருக்கின்றது. எனவே, நாம்
யாருக்கும் அஞ்சாமல், கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை உணர்ந்தவர்களாய்,
அவருடைய அழைப்பைப் பெற்றவர்களாய், அவருடைய பணியைத் துணிவோடு
செய்வோம்.
சிந்தனை
"உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்" (எரே1: 19) என்பார்
ஆண்டவர். ஆகையால், நாம் கடவுளின் பாதுகாப்பையும் பராமரிப்பதையும்
உன்றந்தவர்களாய் அவருடைய பணியைத் தொடர்ந்து செய்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 27-32
"வெட்டி எறிந்து விடுங்கள்"
நிகழ்வு
அது விடுமுறைக் காலம் என்பதால் ஜோஸ், ஊரில் இருந்த தன்னுடைய
மாமாவின் வீட்டிற்குச் சென்றிருந்தான். ஜோஸின் மாமா வீடு,
சுற்றிலும் பல்வேறு வகையான மரங்களால் நிறைந்து, பார்ப்பதற்கு
அவ்வளவு இரம்மியமாக இருந்தது. அவன் அங்குச் சென்ற இரண்டாவது
நாளில், அவனுடைய மாமாவைப் பார்க்க, ஒருசிலர் வந்தார்கள். அவர்களை
அவர் தன்னுடைய தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார். ஜோஸும் அவர்களோடு
சென்றான். அப்பொழுது ஜோஸின் மாமா வந்தவர்களிடம், ஒருசில மரங்களைச்
சுட்டிக்காட்டி, "இந்த மரங்களில் உள்ள கிளைகளை எல்லாம் வெட்டி
எறிந்துவிடுங்கள்" என்றார். அவர்களும் அதற்குச் சரியென்று
சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினர்.
அவர்கள் அங்கிருந்து போனபின்பு, ஜோஸ் தன்னுடைய மாமாவிடம் பேசத்
தொடங்கினான். "மாமா! இப்பொழுது வந்தவர்களிடம் இங்குள்ள ஒருசில
மரங்களைச் சுட்டிகாட்டி "இந்த மரங்களின் கிளைகளை எல்லாம்
வெட்டி எறிந்துவிடுங்கள்" என்று சொன்னீர்களே...! மரங்களின்
கிளைகளை வெட்டிவிட்டால், மரங்கள் பட்டுப் போய்விடாதா...? ஏன்
அப்படிச் சொன்னீர்கள்...?" என்றான். "தம்பி! நான்
சுட்டிக்காட்டிய மரங்களெல்லாம் பார்ப்பதற்கு வேண்டுமானால்
நன்றாக இருக்கலாம்; ஆனால், அவை உள்ளுக்குள் காய்ந்தும்,
இன்னும் ஒருசில மரங்கள் அடர்த்தியாகவும் இருந்து
பலனளிக்காமலேயே இருக்கும். அதனால் அந்த மரங்களில் இருக்கின்ற
தேவையற்ற பகுதிகளை வெட்டி எறிந்துவிட்டால், அவை நன்றாகப்
பலன்கொடுக்கும்" என்று சொன்ன ஜோஸின் மாமா, தொடர்ந்து அவனிடம்,
"மனிதர்களிலும் கூட, ஒருசில தேவையற்ற எண்ணங்கள், பண்புகள்
இருக்கின்றன. அவற்றை அவர்கள் வெட்டி எறிந்துவிட்டால், அவர்கள்
நல்ல பலனைக் கொடுப்பார்கள்."
ஆம், ஒரு மரத்தில் இருக்கின்ற தேவையற்ற பகுதிகளை
அப்புறப்படுத்தும்பொழுது, அது எப்படி மிகுந்த
பலன்கொடுக்கின்றதோ, அப்படி மனிதர்களிடம் இருக்கின்ற ஒருசில
தேவையற்ற எண்ணங்களை, பண்புகளை அப்புறப்படுத்துகின்றபொழுது,
அவர்கள் மிகுந்த பலன்தருபவர்களாக மாறுவார்கள். நற்செய்தியில்
ஆண்டவர் இயேசு இத்தகைய செய்தியைத்தான் நமக்கு
எடுத்துக்கூறுகின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
விபசாரம் மட்டுமல்ல, இச்சையோடு நோக்குவதும் குற்றம்தான்
"விபசாரம் செய்யாதே" (விப 20: 14) என்பது பத்துக் கட்டளைகளுள்
ஒரு கட்டளை. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இக்கட்டளை
வலியுறுத்திச் சொல்லப்பட்டதற்குக் காரணம், கணவனும் மனைவியும்
ஒருவருக்கொருவர் உண்மையாக வேண்டும்; அவர்கள் பிறரை நாடக்கூடாது
என்பதற்காகத்தான். அப்படிக் கணவனும் மனைவியும் தங்களுடைய
வாழ்க்கைத் துணையை விட்டுவிட்டு பிறரை நாடிச் சென்றால் அது
மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, ஒருபடி மேலே சென்று, விபசாரம்
செய்வது மட்டுமல்ல, ஒருவரை இச்சையோடு நோக்குவதுகூட பாவம் என்று
குறிப்பிடுகின்றார். அதைவிடவும் அந்த இச்சையைத் தூண்டும்
கண்ணைப் பிடுங்கி விடுவது நல்லது என்று குறிப்பிடுகின்றார்.
நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய "பிடுங்கி விடுதல்", "வெட்டி
விடுதல்" ஆகிய வார்த்தைகள் உண்மையில் என்ன பொருளை
உணர்த்துகின்றன என்று பார்ப்போம்.
தீய எண்ணங்களைப் பிடுங்கி எறிய வேண்டும்
மலைப்பொழிவின் இன்னோர் இடத்தில் இயேசு, "கண்தான் உடலுக்கு
விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி
பெற்றிருக்கும்" (மத் 6: 22) என்பார். ஆம். கண் பார்க்கின்றது;
அதன்வழியாக ஒருவருக்குள் தீய எண்ணங்கள் உருவாகின்றன. அந்த
எண்ணங்கள் அப்படியே அவரைச் செயலுக்கு இட்டுச் செல்கின்றன.
அதனால்தான் இயேசு கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால்,
அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள் என்கிறார்.
இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளை நாம் அப்படியே பொருள்
கொள்ளக்கூடாது. மாறாக, கண்வழியாக நம்முடைய உள்ளத்தில்
உருவாகும் தீய எண்ணங்களைப் பிடுங்கி எறிந்து அல்லது வெட்டி
எறிந்துவிட்டு, நம்முடைய உள்ளத்தைத் தூய ஆவியின் கனிகளால் (கலா
5: 22) நிரப்பவேண்டும். அப்பொழுது நம்முடைய உள்ளம் தூயதாக
இருக்கும். இறைவனும் அங்கு வந்து குடிகொள்வார்.
ஆகையால், நம்முடைய உள்ளத்தில் படிந்திருக்கும் தீய எண்ணங்களை
அப்புறப்படுத்திவிட்டு, இறைவனைப் போன்று தூயவர்களாய் வாழ்வோம்.
சிந்தனை
"நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம். இதயத்தைக்
கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி
வாருங்கள்" (யோவே 2: 13) என்பார் இறைவாக்கினர் யோவேல்.
ஆகையால், நாம் நம்முடைய உள்ளத்தில் இருக்கின்ற தீய எண்ணங்களை
அகற்றிவிட்டு, உண்மையும் தூய்மையும் அன்பும் நிறைந்தவரான
ஆண்டவரிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மத்தேயு 5: 27-32
மனச்சலவை
நிகழ்வு
அது ஒரு பழமையான கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் பெரியவர்
ஒருவர் இருந்தார். அவர் பங்குக்கோவிலில் ஆட்கள் இல்லாத சமயம்
வந்து, "ஆண்டவரே என்னுடைய மனத்தில் படிந்திருக்கின்ற
தூசுகளையும் ஒட்டடைகளையும் நீர் அகற்றுவீராக" என்று சத்தம்
போட்டு மன்றாடி வந்தார்.
அந்தப் பெரியவரின் நடவடிக்கைகளைக் கவனித்த அந்தப் பங்கில்
இருந்த பங்குத்தந்தை, "ஆலயத்தில் ஆளில்லாத நேரம் பார்த்து
வருகின்ற இந்தப் பெரியவர் அப்படி என்ன செய்கிறார்" என்று அவர்
பின்னால் நின்று பார்த்தார். அப்பொழுது பெரியவர் வழக்கம்போல்,
"ஆண்டவரே! என்னுடைய உள்ளத்தில் படிந்திருக்கின்ற தூசுகளையும்
ஒட்டடைகளையும் நீர் அகற்றுவீராக" என்று சத்தம் போட்டுப்
மன்றாத் தொடங்கினார். இதைப் பின்னாலிலிருந்து
கேட்டுக்கொண்டிருந்த பங்குத்தந்தை, "மகனே! உன்னுடைய மனதில்
படிந்திருக்க தூசுகளும் ஒட்டடைகளும் அகலவேண்டும் என்றால்,
அதற்குக் காரணமாக இருக்கும் சிலந்தி என்னும் சாத்தானை அடித்து
விரட்டவேண்டும் அல்லது கொல்லவேண்டும்" என்றார்.
சத்தம் எங்கிருந்து வருகின்றது என்று பெரியவர் திரும்பிப்
பார்த்தபோது அவருக்குப் பின்னால் பங்குத்தந்தை இருப்பதைக்
கண்டு திடுகிட்டார். "தான் இவ்வாறு வேண்டுவது
பங்குத்தந்தைக்குத் தெரிந்துவிட்டதே" என்ற உருவிதமான
குற்றவுணர்வோடு பங்குத்தந்தையிடம் வந்தார். பங்குத்தந்தை
அவரிடம், "உங்களுடைய மனத்தில் தூசுகள் ஒட்டடைகள் என்ற தீய
எண்ணங்கள் படிகின்றது என்றால், அவற்றுக்குக் காரணமாக இருக்கும்
சிலந்தி என்ற சாத்தான் உங்களை நெருங்கவிடாது பார்த்துக்
கொள்ளவேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்" என்றார்.
ஒரு பிரச்சனைக்குத் தீர்வுகாணவேண்டும் என்றால், அதை
மேம்போக்காக அணுகிக்கொண்டிருந்தால்போது, அந்தப் பிரச்சினையின்
வேர் எங்கிருக்கின்றது என்பதை அறிந்து, அதைக் களைகிறபோது
மட்டுமே, பிரச்சனைக்குச் சரியான தீர்வுகாண முடியும். அத்தகைய
உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது
சிந்தனைக்குரியது. நற்செய்தியில் "விபசாரம்" தொடர்பான
பிரச்சினைக்கு ஆண்டவர் இயேசு இதே பாணியைத்தான்
கடைப்பிடிக்கின்றார். அவர் கடைப்பிடிக்கும் பாணி "விபசாரம்"
என்ற பிரச்னைக்கு எப்படித் தீர்வு தருகின்றது என்பதை இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
விபசாரம் மிகப்பெரிய குற்றம்
"விபசாரம் செய்யாதே" (விப 20:14) என்பது ஆண்டவராகிய கடவுள்
மோசே வழியாக இஸ்ரயேல் மக்கட்குக் கொடுத்த கட்டளையாகும்.
இக்கட்டளையை மீறி ஒருவர் விபசாரம் செய்கின்றார் என்றால், அவர்
குற்றவாளியாகக் கருதப்பட்டார். ஆனால், ஆண்டவர் இயேசுவோ ஒருபடி
மேலே சென்று, விபசாரம் மட்டுமல்ல ஒருவரை இச்சையோடு
நோக்குவதுகூட பாவம் என்றும் இதற்குக் காரணமாக இருக்கும்
கண்ணை/கையைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள் என்றும் கூறுகின்றார்.
பழைய ஏற்பாட்டுக் காலச் சட்டம் செயலைக் குற்றம் என்று சொன்னது
அந்த செயலுக்குக் காரணமாக இருந்த சிந்தனையை/ எண்ணத்தைக்
குறித்து, எதுவும் பேசவில்லை. இயேசுவோ செயலுக்குக் காரணமாக
இருக்கும் சிந்தனை அல்லது எண்ணமே பாவம் என்று
குறிப்பிடுகின்றார். விபசாரத்தில் ஈடுபடுவது மட்டுமல்லாமல்,
அதை செய்யத் தூண்டும் சிந்தனையும் பாவம் என்று இயேசு
சொல்வதற்கு இன்னொரு முக்கியமான விடயமும் இருக்கின்றது. இதை
இயேசுவே இன்னொரு பகுதியில் குறிப்பிடுகின்றார். "கொலை, கொள்ளை,
விபசாரம், பரத்தமை, களவு, பொய்ச்சான்று, பழிப்புரை ஆகியவற்றைத்
தூண்டும் ஆகியவற்றைத் தூண்டும் தீய எண்ணங்கள்
உள்ளத்த்திலிருந்தே வருகின்றன (மத் 15: 9). ஆகையால், மேலே
குறிப்பிடப்பட்ட பாவங்களிருந்தும் குறிப்பாக
விபசாரத்திலிருந்தும் ஒருவர் வெளிவரவேண்டும் என்றால், அவர்
தன்னுடைய உள்ளத்தைச் சலவை செய்து தூயதாக வைத்திருப்பது மிகவும்
இன்றிமையாதது.
திருமணத்தை உடன்படிக்கையை மேன்மைப்படுத்தும் இயேசு
இயேசு கிறிஸ்து விபசாரத்தையும் அதைச் செய்யத் தூண்டும்
எண்ணங்களையும் மிகப்பெரிய குற்றம் என்று சுட்டிக்காட்டுவதன்
வழியாக திருமண உடன்படிக்கையை மேன்மைப்படுத்துகின்றார்.
எவ்வாறெனில், படைப்பின் தொடக்கத்தில் மனிதன் அதாவது ஆதாம் தன்
மனைவி ஏவாவைப் பார்த்து, "இவளே என் எலும்பின் எலும்பும்
சதையின் சதையும் ஆனவள்" (தொநூ 1: 23) என்று சொல்கின்றார்.
ஆதாம் ஏவாவைப் பார்த்துச் சொல்கின்ற இவ்வார்த்தைகள் ஒவ்வொரு
கணவன் மனைவிக்கும் பொருந்தும். ஒவ்வொரு கணவனுக்கும் தன் மனைவி
எழும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்தான்.
அப்படியிருக்கும்போது பிறர் மனைவியையோ அல்லது பிறர் கணவனை
நோக்குவது மிகப்பெரிய தவறு. இந்த உண்மையைத்தான் இயேசு, ஒருவரை
இச்சையோடு நோக்குவது குற்றம் என்று சொல்கிறார். இவ்வாறு அவர்
திருமண உடன்படிக்கையை மேன்மைப்படுத்துகின்றார்.
சிந்தனை
"நீங்கள் தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும்
ஆண்டவருமான நான் தூயவர் (லேவி 19:2) என்பார் கடவுள். ஆகவே,
நாம் கடவுளைப் போன்று தூயோராகவும் தீய சிந்தனைகட்கு
இடம்கொடாதவராகவும் வாழப் பழகுவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|