|
|
11 ஜூன் 2020 |
|
பொதுக்காலம்
10ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 21b-26; 13: 1-3
ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந்
தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர்.
இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள்
பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்று வர அனுப்பிவைத்தார்கள்.
அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்;
மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும்
ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு
நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம்
சேர்த்தார். பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்;
அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்து வந்தார். அவர்கள்
ஒராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான
மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல்
முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.
அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன்,
சிரோன் ஊரானாகிய லூக்கியு, குறநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த
மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர்.
அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம்,
"பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன்.
அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்" என்று கூறினார்.
அவர்கள் நோன்பிலிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை
அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி
வைத்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 65: 9a-c. 9d-10. 11-12 . (பல்லவி: 1a)
Mp3
=================================================================================
பல்லவி: உம்மைப் புகழ்ந்து பாடுவது கடவுளே, ஏற்புடையது!
9a-c
மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும்
பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை
நிரம்ப விளையச் செய்தது. - பல்லவி
9d
நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர்.
10
அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர
நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன்
வளமைக்கு ஆசி வழங்கினீர். - பல்லவி
11
ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய
வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.
12
பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள்
அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக்
கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும்
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மறைநூல் அறிஞர்,
பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்.
இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச்
சொல்கிறேன். `கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச்
சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ `முட்டாளே' என்பவர்
தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; `அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு
ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில்
செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள்
மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி
பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில்
அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள்
காணிக்கையைச் செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக்
கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு
செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை
ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில்
அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல்
அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்.''
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 அரசர்கள் 18: 41-46
மண்டியிட்டு வேண்டிய இறைவாக்கினர் எலியா
நிகழ்வு
டென்மார்க்கில் உள்ள கோபென்ஹகேன் என்ற இடத்தில் உள்ள புனித கன்னி
மரியாவிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட முதன்மைக் கோயிலின் (Cathedral),
பீடத்தில் தோர்வல்சென் (Torvaldsen) என்ற புகழ்பெற்ற சிற்பி வடித்துவைத்த
இயேசுவின் திருவுருவம் உள்ளது. இந்த இயேசுவினுடைய திருவுருவத்தின்
சிறப்பு, இதிலுள்ள இயேசுவின் கண்கள் நேராகப் பார்க்காமல் கீழே
பார்ப்பது போன்று இருக்கும்.
ஒருமுறை ஒரு வெளிநாட்டுக்காரர், இந்த முதன்மைக் கோயிலுக்கு வந்து,
இங்குள்ள இயேசுவின் திருவுருவத்தை கூர்ந்து பார்த்தபோதும்,
அவரது திருமுகத்தைக் காணமுடியாமல் விழித்தார். அப்பொழுது அங்கு
வந்த கோயில் பணியாளர் அவரிடம், நீங்கள் இயேசுவின் திருமுகத்தைப்
பார்க்கத்தானே விரும்புகின்றீர்கள்! தயவுசெய்து மண்டியிட்டுப்
பாருங்கள்; நிச்சயம் உங்களுக்கு இயேசுவின் திருமுகம் அழகாகத்
தெரியும் என்றார். அந்த வெளிநாட்டுப் பயணியும் மண்டியிட்டுப்
பார்க்கவே இயேசுவின் திருமுகம் மிக அழகாகத் தெரிந்தது.
ஆம், இயேசுவின் திருமுகத்தைப் பார்க்கவேண்டும் என்றாலும் சரி,
அவரது அருளையும் ஆசியையும் பெறவேண்டும் என்றாலும் சரி அவர்
முன் மண்டியிட வேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வு எடுத்துக்கூறுகின்றது.
இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எலியா, இறைவனின் திருமுன்
மண்டியிட்டு வேண்டியதால், மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மழை
பெய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அரசர்கள் முதல் நூலில் இடம்பெறும்
இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மக்கள் பாகால் தெய்வத்தை வழிபாட்டு வந்ததால் மழை பெய்யாமல் போதல்
இஸ்ரயேல் மன்னனாகிய ஆகாபு தன் மனைவியோடு சேர்ந்துகொண்டு,
பாகால் தெய்வ வழிபாட்டை ஆதரித்து வந்தான். இதனால் கடவுளின் சினம்
அவர்களுக்கு எதிராக மூண்டது (1 அர 16: 32-33). இதைத் தொடர்ந்து
கடவுளின் அடியவரான இறைவாக்கினர் எலியா ஆகாபு மன்னனிடம் வந்து,
வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது (1அர 17:1) என்று
சொல்லிவிட்டுப் போனார். ஆதலால், மூன்றரை ஆண்டுகள் மழை பெய்யாமலேயே
போனது. வான்மழையைப் போன்ற கடவுளின் வார்த்தையை (எசா 55: 10) இஸ்ரயேல்
மக்கள் கேட்டு, அதன்படி நடந்திருந்தால், அவர்களுக்குக் கடவுளின்
அருள் வான்மழையாகக் கிடைத்திருக்கும். அவர்களோ உண்மைக் கடவுளை
மறந்து, பாகால் தெய்வத்தை வழிபாட்டு வந்ததால், இப்படியொரு
நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
மண்டியிட்டு வேண்டியதால் மழை
வானம் மூன்றரை ஆண்டுகள் பொய்த்துப் போன நேரத்தில்தான் நானூற்று
ஐம்பது பொய்வாக்கினர்களை எலியா இறைவாக்கினர் கீசோன் ஓடைக்குக்
கொண்டுபோய்க் கொல்கின்றார். இதற்குப் பின்பு அவர் ஆகாபு மன்னனிடம்,
நீர் போய் உணவும் பானமும் அருந்துவீர். ஏனெனில், பெருமழையின்
ஓசை கேட்கின்றது என்று சொல்லிவிட்டு, கர்மேல் மலையின் உச்சிக்குச்
சென்று, மண்டியிட்டு, முழங்கால்களுக்கு நடுவில் முகம்
புதைத்து, இறைவனிடம் மன்றாடத் தொடங்குகின்றார். இடையிடையே தன்
பணியாளரிடம், நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார் என்று
சொல்கின்றார். இவ்வாறு அவர் ஏழு முறை தன் பணியாளரிடம்
சொல்கின்றார். இதனால் வானம் இரண்டு, கருமேகம் சூழந்து, காற்று
அடித்து, மழை பெய்யத் தொடங்குகின்றது .
இறைவாக்கினர் எலியா கர்மேல் மலை உச்சியில் மண்டியிட்டு வேண்டியது,
நமக்கு இரண்டு உண்மைகளை எடுத்துக்கூறுகின்றது. ஒன்று, நாம் இறைவனிடம்
மண்டியிட்டு அல்லது முழந்தாளிட்டு வேண்டினால், நாம் வேண்டியது
நிச்சயம் நிறைவேறும் என்பதாகும். நற்செய்தியில் தொழுநோயாளர் ஒருவர்
இயேசுமுன் முழந்தாள் படியிட்டு வேண்டியதால், நலம் பெற்றதாக
வாசிக்கின்றோம் (மாற் 1: 40). எலியா இறைவாக்கினர் ஆண்டவர் முன்
மண்டியிட்டு வேண்டியபின்பே மழை பெய்கின்றது.
இந்த நிகழ்வு உணர்த்தும் இரண்டாம் செய்தி, எலியா இறைவாக்கினரோடு
ஆண்டவர் எப்பொழுதும் உடனிருந்தார் என்பதுதான். ஆகாபிடமிருந்து
தப்பித்து கெரீத்து ஓடைக்கு அவர் போனபோதும் சரி, கர்மேல் மலையில்
பொய்வாக்கினர்களோடு நடந்த போட்டியின்போதும் சரி, இந்த நிகழ்விலும்
சரி, ஆண்டவர் அவரோடு எப்பொழுதும் இருந்தார். அதனால்தான் மூன்றரை
ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னுடைய இறைவேண்டலால் மழையைக் கொண்டு
வர முடிந்தது.
ஆண்டவர் எப்பொழுதும் நம்மோடு உடனிருந்து, நம்முடைய வேண்டுதலுக்குச்
செவிசாய்க்கின்றார். எனவே, நாம் ஆண்டவருக்கு உண்மையாய் இருந்து,
அவருக்கு உகந்தவர்களாய் நடக்கின்றோமா என்று சிந்தித்துப்
பார்ப்போம்.
சிந்தனை
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்
(திப 34:6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவருக்கு
உண்மையாய் இருந்து, அவர் முன் மண்டியிட்டு வேண்டுவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 20-26
சினங்கொள்ளாதிருப்போம்; சினங்கொள்பவர்களைப்
பொறுத்துக்கொள்வோம்
நிகழ்வு
அது ஒரு பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தில் முத்து என்ற பெரியவர்
வாயிற்காவலராகப் பணிபுரிந்து வந்தார்.
ஒருநாள் காலையில், தன்னுடைய நான்கு சக்கர வண்டியில் வந்த, அந்த
நிறுவனத்தில் நிர்வாக மேலாளராகப் (Managing Director)
பணிபுரிந்து வந்த அஜய், நிறுவனத்தின் வளாகத்திற்குள் தனது
வண்டியை நிறுத்துவதற்கு இடமில்லை என்பதை அறிந்ததும், அங்கு
நின்றுகொண்டிருந்த வாயிற்காவலரை அழைத்து, எதற்காக எல்லா
வண்டியையும் உள்ளே நிறுத்த விடுகிறீர்கள். இனிமேல் வண்டிகளை
வெளியே நிறுத்தச் சொல்லுங்கள் என்றார். அவரும் அதற்குச்
சரியென்று சொல்லிவிட்டு, அடுத்த நாளிலிருந்து வண்டிகளை வெளியே
நிறுத்தி வைத்தார்.
ஒருநாள் தற்செயலாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர்,
நிறுவனத்திற்கு வந்தார். அவர் தன்னுடைய நிறுவனத்திற்கு வெளியே
வண்டிகளெல்லாம் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து,
வாயிற்காவலரிடம், எதற்காக இப்படி வண்டிகளை எல்லாம் வெளியே
நிறுத்தி வைத்திருக்கின்றீர்கள்...? யார் வண்டிகளை இப்படி
வெளியே நிறுத்தச் சொன்னது...? நாளையிலிருந்து வண்டிகளை உள்ளே
நிறுத்தச் சொல்லுங்கள்! என்றார். முத்துவால், நிர்வாக
மேலாளர்தான் வண்டிகளை வெளியே நிறுத்தச் சொன்னார் என்று சொல்ல
முடியவில்லை. அப்படிச் சொன்னால் அவரைக் காட்டிக்கொடுப்பது
போன்று இருக்கும் என்பதால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்
அவர்.
நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளே சென்ற சிறிதுநேரம் கழித்து,
அங்கு பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய இரண்டு சக்கர
வண்டியில் வந்து இறங்கினார். அவர் வாயிற்காவலரிடம், ஐயா!
வண்டியை எங்கே நிறுத்துவது? உள்ளேயா? வெளியே வா? என்றார்.
பெரியவருக்குக் கடுங்கோபம் வந்தது. வண்டியை எங்கேயாவது
நிறுத்துங்கள்! அதை ஏன் என்னிடம் கேட்டுக்
கொண்டிருக்கின்றீர்கள் என்று கத்திவிட்டு, உள்ளே
சென்றுவிட்டார். வந்த இளைஞருக்கு ஒன்றும் புரியவில்லை.
இப்பொழுது என்ன நடந்துவிட்டது என்று இவர் இப்படிக்
கத்திவிட்டுப் போகிறார்...? யார்மீது உள்ள கோபத்தை எதற்கு
என்மேல் காட்டுகின்றார்...? என்று நினைத்துக்கொண்டு, அமைதியாக
அங்கிருந்து சென்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற முத்து என்ற அந்த வாயிற்காவலரைப்
போன்றுதான் பலரும் யார்மீதோ உள்ள சினத்தை யார்மீதோ அல்லது
நம்மீதோ காட்டுவார்கள். இப்படிப்பட்டவர்கள்மீது பதிலுக்கு நாம்
சினம் கொள்ளாமல், இந்த நிகழ்வில் கடைசியாக வந்த இளைஞரைப்
போன்று அமைதியாகக் கடந்து செல்வதுதான் நல்லது. இன்றைய
நற்செய்தி வாசகம், சினத்தால் விளையும் கேடுகளைக் குறித்து
எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக்
கேள்விப்பட்டிருப்பீர்கள்
பழைய ஏற்பாட்டுக் காலத்தில், கொலை செய்யாதே (விப 20: 13)
என்றும், கொலை செய்கிறவர் கொல்லப்படவேண்டும் (விப 21: 12; லேவி
24: 17) என்றும் சொல்லப்பட்டிருந்தது. இயேசுவோ,
முற்காலத்தவர்க்கு இவ்வாறு கூறப்பட்டிருப்பதைக்
கேள்விப்பட்டிருக்கலாம் என்று சொல்லிவிட்டு, தம் சகோதரர்
சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்பு ஆளாவார்
என்கின்றார்.
இயேசுவைப் பொருத்தளவில், கொலை செய்வது மட்டுமல்ல, அந்தக்
கொலைக்குக் காரணமாக இருக்கும் சினம்கூட தண்டனைக்குரிய
குற்றம்தான். அதனால்தான் இயேசு சினம் கொள்ளவேண்டாம் என்கிறார்.
இயேசு, சினத்திற்கு மாற்று வழியையும் சொல்கின்றார். அது
குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
நான் உங்களுக்குச் சொல்கிறேன்
யூதர்கள் ஆண்டுதோறும் கடவுளுக்குக் காணிக்கை கொண்டு
வருவார்கள். அப்படிக் கடவுளுக்குக் காணிக்கை
கொண்டுவருகின்றபொழுது, அவர்கள் தங்களுடைய சகோதரர், சகோதரியிடம்
ஏதோ மனந்தாங்கலோடு இருந்தால், அது கடவுளுக்கு ஏற்றதாக
இருக்காது. மாறாக, மனத்தாங்கலோடு இருக்கின்ற சகோதர்
சகோதரியிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டபின், செலுத்தப்படும்
காணிக்கையே கடவுளுக்கு ஏற்றதாக இருக்கும் என்கின்றார் .
ஆம், இந்த உலகத்தில் அமைதியான சூழல் உருவாக வன்முறையோ,
அதற்குக் காரணமாக இருக்கும் சினமோ ஒருபோதும் தீர்வாக இருக்க
முடியாது. வன்முறைக்குப் பதிலாக, சினத்திற்குப் பதிலாகப்
பொறுமையும் நல்லுறவுமே, இந்த உலகில் அமைதியை
ஏற்படுத்துவதற்குக் காரணிகளாக இருக்கும். ஆகையால், நாம்
நம்முடைய வாழ்வில் சினத்தை தவிர்ப்போம்; மற்றவர்கள் நம்மீது
சினங்கொண்டால் அதைப் பொறுமையாக ஏற்றுக்கொண்டு அமைதியாகக்
கடந்து செல்வோம்.
சிந்தனை
சினம் வெறிகொண்ட குதிரையைப் போல் துள்ளிப் பாய்கையில்,
இடையில் தடுக்கி விழும் என்பார் ஸாவேஜ் என்ற அறிஞர். ஆகையால்,
சினத்தால் விளையும் ஆபத்துகளை உணர்ந்தவர்களாய், நல்லுறவோடு
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
திருத்தூதர் பர்னபாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.
'பர்னபா' என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் கொடுக்கலாம்.
அரமேயத்தில் 'பர் நப்யா' என்று பிரித்தால் 'இறைவாக்கினரின் மகன்'
அல்லது 'இறைவாக்கின் மகன்' என்றும், கிரேக்கத்தில் 'ஹ்யோஸ் பராக்ளேசேயுஸ்'
எனப் பிரித்தால் 'ஆறுதலின் அல்லது தேற்றரவின் மகன்' என்றும்
மொழிபெயர்க்கலாம் (காண். திப 4:36). 'இறைவாக்கும்' 'ஆறுதல் தருவதும்'
சேர்ந்தே செல்லும் என்பது பவுலின் கூற்று (காண். 1 கொரி 14:3).
சைப்பிரசு நாட்டைச் சார்ந்த யோசே என்ற இவரைத்தான் 'பர்னபா' என்று
மாற்றுகின்றனர் திருத்தூதர்கள். திப 14:14ல் இவரும் திருத்தூதர்
என அழைக்கப்படுகின்றார். பவுலின் தூதுரைப் பயணங்களில் உடனிருந்த
உற்ற தோழர் பர்னபா.
சைப்பிரசு நாட்டின் பாதுகாவலராக இன்று வரை அவர் கொண்டாடப்படுகிறார்.
திப 9:26-27ல் இவரின் முக்கியமான பண்பு வெளிப்படுகிறது:
'பவுல் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்து
கொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும்
அவரைக் கண்டு அஞ்சினர். பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத்
திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில்
கண்டது பற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியது பற்றியும் அவர் தமஸ்குவில்
இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு
விளக்கிக் கூறினார்.'
பர்னபாவின் ஆளுமை நமக்கு மூன்று விதங்களில் சவால் விடுகிறது:
இணைப்புக்கோடு
பர்னபா ஒரு இணைப்புக் கோடு - பவுலுக்கும், மற்ற
தூதர்களுக்கும். இணைப்புக் கோடாக இருக்க வேண்டியவர் இரு
தரப்பினரையும் அறிந்தவராக இருக்க வேண்டும். அல்லது ஒருவரை
சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நம் உறவுநிலைகளில்
நாம் இணைப்புக்கோடாக இருத்தல் அவசியம் என்பதை நாம் அறிவோம்.
இதை அருள்பணி வாழ்விற்குப் பொருத்திப் பார்த்தால், ஓர்
அருள்பணியாளர் என்பவர் இறைவனுக்கும், மக்களுக்கும் உள்ள ஓர்
இணைப்புக்கோடு. இவர் இந்த இருவரையும் முழுமையாக அறிந்தால்தான்
தன் பணியைச் சரியாகச் செய்ய முடியும்.
நம்பிக்கை
'ஆண்டவர் பவுலுக்குத் தோன்றினார்' என்பதை நம்புகிறார்.
ஆச்சர்யமாக இருக்கிறது? கேள்வி கேட்கும் மனம் அல்ல, சரணடையும்
மனமே நம்பிக்கையை நம்மில் வளர்க்கும். 'அப்படியா? ஆண்டவரைப்
பார்த்தீங்களா? எங்கே? எப்போ? என்ன சொன்னார்?' என்ற எந்த
கேள்வியும் இல்லாமல் நம்பும் துணிச்சல் இவருக்கு எங்கிருந்து
வந்தது?
'அவர் வளர வேண்டும். நான் குறைய வேண்டும்.'
பர்னபாவால் அறிமுகம் செய்யப்பட்ட பவுலே காலப்போக்கில்
பர்னபாவைவிட மிக முக்கியத்துவம் பெறுகின்றார். 'உன்
வளர்ச்சிக்கு நான்தான் காரணம்' என்று சொல்லிக் காட்டவோ, அல்லது
'அவன் வளர்ந்து விட்டான், நான் அப்படியே இருக்கிறேன்' என்று
பவுல் மேல் பொறாமைப்படவோ இல்லை பர்னபா. அடுத்தவரை வளரவிட்டுப்
பார்க்கின்றார். இது அவரின் பரந்த மனப்பான்மைக்கு
எடுத்துக்காட்டு. மற்ற திருத்தூதர்களோடு சேர்ந்து கொண்டு
இவரும் பவுலை நிராகரித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச்
செய்யவில்லை. என்னே இவரின் தாராள உள்ளம்!
பர்னபா - நம் ஆறுதல்! |
|