|
|
10 ஜூன் 2020 |
|
பொதுக்காலம்
10ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
++நீரே ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மாற்றுவீர் என்றும்
இம்மக்கள் அறிவார்களாக!
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம்
18: 20-39
அந்நாள்களில் ஆகாபு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் அழைத்தான்.
பொய் வாக்கினரையும் கர்மேல் மலையில் ஒன்று திரட்டினான். எலியா,
மக்கள் அனைவர்முன் சென்று, "எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக்
கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப்
பின்பற்றுங்கள்! பாகால்தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்!"
அப்பொழுது எலியா மக்களிடம், "ஆண்டவரின் திருவாக்கினருள் நான்
ஒருவன்தான் எஞ்சியிருக்கிறேன்! பாகாலின் பொய்வாக்கினரோ
நானூற்றைம்பது பேர் இருக்கின்றனர். இரண்டு காளைகளை எங்களிடம்
கொண்டு வாருங்கள். அவர்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்து, அதைத்
துண்டு துண்டாக வெட்டி, விறகின் மேல் வைக்கட்டும்; ஆனால்
நெருப்பு வைக்கலாகாது. மற்றக் காளையை நான் தயார் செய்து விறகின்
மேல் வைப்பேன்; நானும் நெருப்பு வைக்க மாட்டேன். நீங்கள் உங்கள்
தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச்
சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே
உண்மைக் கடவுள்" என்றார். மக்கள் அனைவரும் பதில் மொழியாக,
"நீர் சொல்வது சரியே" என்றனர். பிறகு எலியா பாகாலின்
பொய்வாக்கினரிடம், "நீங்கள் அதிகம் பேராய் இருப்பதால் முதலில்
நீங்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யுங்கள்; ஆனால்
நெருப்பு மூட்டாதீர்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் தங்களுக்குக்
கொடுக்கப்பட்ட காளையைக் கொண்டு வந்து தயார் செய்த பின், காலை
முதல் நண்பகல் வரை பாகாலின் பெயரைக் கூப்பிட்டு, "பாகாலே! பதில்
தாரும்" என்று கத்தினர். ஆனால் எக்குரலும் கேட்க வில்லை; எப்பதிலும்
வரவில்லை. எனவே அவர்கள் தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி
ஆடலாயினர். நண்பகலாயிற்று, எலியா அவர்களைக் கேலி செய்து,
"இன்னும் உரத்த குரலில் கத்துங்கள். அவன் ஒரு தெய்வம்! ஒரு
வேளை அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கலாம்! அல்லது ஒதுக்குப்புறம்
போயிருக்கலாம்! அல்லது பயணம் செய்து கொண்டிருக்கலாம்! அல்லது
தூங்கிக் கொண்டிருக்கலாம்; அவன் விழித்தெழ வேண்டியிருக்கும்!"
என்றார். எனவே அவர்கள் இன்னும் உரத்த குரலில் கத்தினர். தங்கள்
வழக்கப்படி வாளினாலும் வேலினாலும், இரத்தம் கொட்டும் வரை, தங்களையே
கீறிக் கிழித்துக் கொண்டார்கள். பிற்பகல் ஆயிற்று. அவர்கள்
மாலைப் பலி செலுத்தும் நேரம்வரை தொடர்ந்து உளறிக்
கொண்டிருந்தார்கள். ஆயினும் எக்குரலும் கேட்க வில்லை. எப்பதிலும்
வரவில்லை. கவனிப்பார் யாருமில்லை. அப்போது எலியா எல்லா மக்களையும்
நோக்கி, "என் அருகில் வாருங்கள்" என்றார். மக்கள் அனைவரும் அவர்
அருகில் வந்தனர். உடனே எலியா அங்கே இடிந்து கிடந்த ஆண்டவரது பலிபீடத்தைச்
செப்பனிட்டார். "உன் பெயர் இஸ்ரயேல்" என்று ஆண்டவர்
யாக்கோபுக்கு உரைத்திருந்ததன் பொருட்டு, அவர் வழிவந்த குலங்களின்
எண்ணிக்கைப்படி எலியா பன்னிரு கற்களை எடுத்தார். அக்கற்களைக்
கொண்டு ஆண்டவர் பெயரில் ஒரு பலி பீடத்தைக் கட்டி, அப்பலி பீடத்தைச்
சுற்றிலும் இரண்டு உழவுகால் அகலம் உள்ள வாய்க்காலை வெட்டினார்.
அதன்பின் விறகுக் கட்டைகளை அடுக்கி, காளையைத் துண்டு துண்டாக
வெட்டி, அவற்றின் மேல் வைத்தார். "நான்கு குடங்கள் நிறைய தண்ணீர்
கொண்டு வந்து, எரிபலியின் மேலும் விறகுக் கட்டைகளின் மேலும் ஊற்றுங்கள்"
என்றார். அவர் "இரண்டாம் முறையும் செய்யுங்கள்" என்றார். அவர்கள்
இரண்டாம் முறையும் அவ்வாறே செய்தனர். அவர் "மூன்றாம் முறையும்
செய்யுங்கள்" என்றார். அவர்கள் மூன்றாம் முறையும் அப்படியே
செய்தனர். எனவே தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது.
மேலும் வாய்க்காலை அவர் தண்ணீரால் நிரப்பினார். மாலைப் பலி
செலுத்தும் நேரமாயிற்று. இறைவாக்கினர் எலியா பலிபீடத்தின் அருகில்
வந்து, "ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் என்பவர்களின் கடவுளாகிய
ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுள் நீரே என்றும், இவற்றையெல்லாம் நான்
உம் வாக்கின்படியே செய்தேன் என்றும் இன்று விளங்கச் செய்தருளும்.
நீரே கடவுளாகிய ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை
மீண்டும் மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறியும்படி எனக்குப் பதில்
தாரும்! ஆண்டவரே! எனக்குப் பதில் தாரும்!" என்றார். உடனே ஆண்டவரின்
நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியையும் விறகுக் கட்டைகளையும்,
கற்களையும், மணலையும் சுட்டெரித்து வாய்க்கால் நீரையும் வற்றச்
செய்தது. இதைக் கண்டவுடன் மக்கள் அனைவரும் முகங்குப்புற
விழுந்து, "ஆண்டவரே கடவுள்! ஆண்டவரே கடவுள்!" என்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 16: 1-2a. 4. 5,8. 11 . (பல்லவி: 1)
mp3
=================================================================================
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம்
புகுந்துள்ளேன்.
1
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம்
புகுந்துள்ளேன்.
2a
நான் ஆண்டவரிடம்
'நீரே என் தலைவர்' என்று சொன்னேன். - பல்லவி
4
வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர் தங்கள் துன்பங்களைப்
பெருக்கிக்கொள்வர்; அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில்
நான் கலந்துகொள்ளேன்; அவற்றின் பெயரைக் கூட நாவினால் உச்சரியேன்.
- பல்லவி
5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய
பங்கைக் காப்பவரும் அவரே;
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம்
உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி
11
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு
நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும்
பேரின்பம் உண்டு. - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா 25: 4c, 5a
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்;
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
5: 17-19
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "திருச்சட்டத்தையோ
இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்;
அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும்
ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு
சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச்
சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும்
மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச்
சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக்
கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 அரசர்கள் 18: 20-39
ஆண்டவரே கடவுள்!
நிகழ்வு
பதினாறாம் நூற்றாண்டில் ஜப்பானை ஆண்டுவந்த மன்னன் ஹிதேயோஷி
(Hideyoshi). இவன் க்யோடோ (Kyoto) என்ற இடத்தில் புத்தருக்குப்
பெரியதொரு கோயிலைக் கட்டத் தொடங்கினான். இந்தக் கோயிலின் கட்டுமானப்
பணியில் ஐம்பதாயிரம் பேருக்கும் மேல் ஈடுபட்டிருந்தார்கள்.
நிறையப் பொருள்செலவோடு கட்டப்பட்ட இந்தக் கோயிலின் கட்டுமானப்
பணிகள் நிறைவுறும் நேரத்தில், கோயிலின் கூரை இடிந்துவிழுந்து,
அதற்குள்ளே இருந்த பெரிய புத்தர் சிலை முதற்கொண்டு எல்லாமே தரைமட்டமாயின.
இதைக் கண்ட மன்னன் ஹிதேயோஷியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவன் நேராகத் தரைமட்டமாய்க் கிடந்த புத்தர் சிலையின் அருகில்
வந்து, அதன் கால் பகுதில் ஓர் அம்பை எய்து, "உனக்கு மிகப்பெரிய
பொருள்செலவில் ஒரு கோயிலைக் கட்டினேன்; ஆனால், நீயோ உன்னைக் கூடக்
காப்பாற்றிக் கொள்ள முடியாவாறு இருக்கின்றாய்" என்று சொல்லி
நொந்துகொண்டான் (Today in the Word, MBI, August, 1991, p.
23).
புத்தர் தன்னுடைய கோயிலை; ஏன், தன்னுடைய சிலையையே காப்பாற்ற
முடியாமல் போனது வேதனையான ஒரு செயல்தான். இன்றைய முதல்வாசகத்தில்
யார் உண்மையான கடவுள்? பாகாலா? ஆண்டவரா? என்பது தொடர்பாக ஒரு
முக்கியமான நிகழ்வு நடைபெறுகின்றது. அது குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இருமனத்தோராய்த் தத்தளித்த இஸ்ரயேல் மக்கள்
ஆண்டவராகிய கடவுள் மோசேயின் வழியாக, "நானே உன் கடவுளாகிய ஆண்டவர்...
என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது" (விப 20:
1-3) என்பதை முதன்மையான கட்டளையாகக் கொடுத்திருந்தார்; ஆனால்,
இஸ்ரயேல் மக்களோ ஆண்டுகள் மெல்ல உருண்டோடியபொழுது, உண்மைக் கடவுளை
மறந்துவிட்டு, பிற தெய்வங்களை, அதிலும் குறிப்பாகப் பாகால்
தெய்வத்தை வழிபடத் தொடங்கினார். பாகால் செய்த வழிபாட்டிற்குச்
சாலமோன் மன்னன் தொடக்கப் புள்ளியாக இருந்தாலும், ஆகாபு மன்னனுடைய
காலத்தில் அவ்வழிபாடு கொடிகட்டிப் பறந்தது.
இப்படிப்பட்ட ஒரு காலச் சூழ்நிலையில்தான் யார் உண்மையான கடவுள்?
பாகால் தெய்வமா? ஆண்டவராகிய கடவுளா? என்பதை மக்களுக்குக்
காட்டுவதற்காக இறைவாக்கினர் எலியா, ஆகாபு மன்னன் மூலம் இஸ்ரயேலின்
வடக்கில் இருந்த பத்துக்குலங்களையும் சேர்ந்த தலைவர்களையும் அழைத்து
அவர்களிடம், "எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக்
கொண்டிருக்கப் போகிறீர்கள்...?" என்று கேட்கின்றார். எலியா இறைவாக்கினர்
மக்களிடம் இவ்வாறு கேட்பது, மோசேயும் (விப 32: 26) யோசுவாவும்
(யோசு 24: 15) நீங்கள் யாருக்கு ஊழியம் செய்யப் போகிறீர்கள் என்று
கேட்பதை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது.
ஆண்டவரே கடவுள் என்பது நிரூபணமாதல்
எலியா இறைவாக்கினர் மக்களிடம், "ஆண்டவர்தாம் கடவுள் என்றால்,
அவரைப் பின்பற்றுங்கள்! பாகால்தான் என்றால், அவன்பின்னே
செல்லுங்கள்!" என்று சொன்ன பின்பு, அங்கிருந்தவர்களிடம் எங்களிடம்
இரண்டு காளைகளைக் கொண்டு வாருங்கள். ஒன்றைப் பொய்வாக்கினர்களிடமும்,
இன்னொன்றை என்னிடமும் கொடுங்கள். அவர்கள் அந்தக் காளையைத்
துண்டுதுண்டாக வெட்டி அவற்றை விறகின் மேல் வைத்து, நெருப்பு
வைக்காமல், அவர்களுடைய தெய்வத்தை அழைக்கட்டும். நானும் அவ்வாறே
செய்கின்றேன். இதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக்
கடவுள் என்கின்றார்.
பின்பு எலியா இறைவாக்கினர் சொன்னது போன்றே அங்கிருந்த நானூற்று
ஐம்பது பொய்வாக்கினர்கள் செய்து, "பாகால்" என்ற தங்களுடைய தெய்வத்தை
அழைத்தார்கள். பாகாலோ அவர்களுக்குப் பதில் தரவில்லை. பின்னர்
எலியா இறைவாக்கினர் ஆண்டவரின் பீடத்தைச் செப்பனிட்டு, அதன்மேல்
விறகுக் கட்டைகளை அடுக்கி, அதற்கு மேல் காளைகளைத்
துண்டுதுண்டாக வெட்டி வைத்து, நான்கு குடங்கள் நிறையத் தண்ணீர்
மூன்றுமுறை ஊற்றச் சொல்லி, மாலைப் பலி செலுத்தும் நேரம் வந்ததும்,
ஆண்டவரின் திருபெயரைச் சொல்லி, நீரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை
இம்மக்கள் அறியும்படி எனக்குப் பதில் தாரும் என்று
வேண்டுகின்றார். உடனே நெருப்பு கீழே இறங்கி வந்து எலிபலியையும்
விறகுக்கட்டைகளையும் இன்ன பிறவற்றையும் சுட்டெரித்து,
வாய்க்கால் நீரை வற்றச் செய்கின்றது. இதற்குப் பின்பு அங்கிருந்த
மக்கள், "ஆண்டவரே கடவுள்" என அறிந்துகொள்கின்றார்கள். அதே நேரத்தில்
அங்கிருந்த நானூற்று ஐம்பது பொய்வாக்கினர்களையும் எலியா
வெட்டிச் சாய்க்கின்றார்.
கர்மேல் மலையில் நடந்த இந்த நிகழ்வு, "ஆண்டவரே கடவுள்" என்ற உண்மையை
நமக்கு எடுத்துக்கூறுகின்றது. ஆகையால், நாம் இஸ்ரயேல் மக்களைப்
போன்று இரு மனத்தவராய்த் தத்தளித்துக்கொண்டிருக்காமல், உண்மையான
ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய வழியில் நடப்போம்.
சிந்தனை
"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன்
ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து" (மத் 22: 37) என்கிறது
இறைவார்த்தை. ஆகையால், நாம் ஆண்டவராகிய கடவுளை முழுமையாக அன்பு
செலுத்தி, அவருக்கு இறுதிவரை உண்மையுள்ளவர்களாய் இருப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 17-19
"திருச்சட்டத்தின் ஒரு சிற்றெழுத்தோ ஒரு
புள்ளியோ ஒழியாது"
நிகழ்வு
ஸ்காட்லாந்திலிருந்து இந்திய மண்ணிற்கு நற்செய்தி அறிவிக்க வந்தவர்
மறைப்பணியாளரான அலெக்சாந்தர் தஃப் (Alexander Duff 1806-1878).
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்திய மண்ணிற்கு வந்து
கடவுளின் வார்த்தையை அறிவித்துப் பலரையும் கிறிஸ்துவுக்குள்
கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய இவர், அதற்காக ஏராளமான புத்தகங்களைப்
சிறு சிறு பெட்டிகளில் வைத்து, அவற்றை இந்தியாவிற்குப் புறப்பட்ட
கப்பலில் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்
கப்பல் நல்நம்பிக்கை முனைக்கு (Cape of Good Hope) அருகில் வந்தபொழுது,
கடலில் புயல்காற்று வீசி, பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால்
அந்தக் கப்பலில் பயணம் செய்த எல்லாரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.
அலெக்சாந்தர் தஃப் எப்படியோ நீந்திக் கரையை வந்தடைந்தார். அவர்
தன்னோடு எடுத்துச் சென்றிருந்த புத்தகங்களெல்லாம் கடலில்
மூழ்கிப் போயின.
அவர் கரையில் நின்றவாறு, தான் பயணம் செய்த கப்பல் கடலில்
மூழ்கிய திசையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது
ஒரு பெரிய அலையடித்தது. அந்த அலையில் இவர் இந்தியாவிற்குப்
பெட்டியில் எடுத்துச் சென்ற திருவிவிலியமானது இவருக்கு முன்பாக
வந்து விழுந்தது. அதைப் பார்த்ததும் மட்டில்லா மகிழ்ச்சியடைந்த
அலெக்சாந்தர் தஃப், "எனக்கு இந்தத் திருவிவிலியம் போதும்;
இதைக் கொண்டே நான் மக்களுக்கு நற்செய்தி அறிவித்துப் பலரையும்
கிறிஸ்துவுக்குள் கொண்டுவருவேன்" என்று தனக்குள்
சொல்லிக்கொண்டார்.
இவர் தனக்குள் சொல்லிக்கொண்டது போலவே, இந்திய மண்ணிற்கு வந்து,
ஆண்டவருடைய நற்செய்தியை அறிவித்துப் பலரையும் அவருக்குள்
கொண்டு வந்து சேர்த்தார். இவர் இந்திய மண்ணில் நற்செய்தி
அறிவித்த காலக்கட்டத்தில் மக்கள் நடுவில் மிகப்பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தினார் என்பது இவரைப் பற்றிச் சொல்லப்படுகின்ற
செய்தியாகும்.
ஆம், கடவுளின் வார்த்தைக்கு அழிவே கிடையாது; அவ்வார்த்தையை
நாம் கடைப்பிடித்துக் கற்றுத் தரவேண்டும் என்ற செய்தியை இந்த
நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகம்
கடவுளின் வார்த்தையைப் பற்றியும், அதை நாம் மக்களுக்கு எப்படி
அறிவிக்கவேண்டும் என்பதைப் பற்றியும் நமக்கு
எடுத்துரைக்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
திருச்சட்டத்திற்கு அழிவில்லை
இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவின் மலைப்பொழிவின் ஒரு
பகுதியாக வருகின்றது. இதில் ஆண்டவர் இயேசு, "விண்ணும் மண்ணும்
ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு
சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச்
சொல்கின்றேன்" என்கிறார்.
இயேசு தன்னுடைய போதனையின்பொழுது, அடிக்கடி பயன்படுத்தக்கூடிய
வார்த்தைகள், "உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன்"
என்பதாகும். ஒரு கருத்தை ஆழமாக வலியுறுத்திக் கூறுவே, இயேசு
இவ்வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகின்றார். இன்றைய
நற்செய்தியில் இயேசு திருச்சட்டத்தின் அழிவுறாத் தன்மையை
வழியுறுத்திக் கூறவே, இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்.
திருச்சட்டம் ஒழியாது என்று இயேசு சொல்லக் காரணம், அது கடவுள்
அருளியது. மனித சட்டங்கள் வேண்டுமானால், ஒழியலாம், மாறலாம்.
ஆண்டவருடைய திருச்சட்டமோ ஒழியவே ஒழியாது.
விண்ணரசில் சிறியவர் யார்? பெரியவர் யார்?
இத்தகைய அழியாத திருச்சட்டத்தை, கட்டளைகளை அவர் வழியில்
நடக்கின்றவர்கள் கடைப்பிடித்துக் கற்பிக்கின்ற வேண்டும் என்று
இயேசு வலியுறுத்துகின்றார். இன்றைய காலக்கட்டத்தில் ஒருசில
போதகர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் கடவுளின் இக்கட்டளை
மீறியும், தங்களுடைய வசதிக்கேற்றாற்போல் அவற்றை மாற்றியும்
மக்களுக்குக் கற்பித்து, அதன்மூலம் இலாபம் அடைந்து
வருகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் விண்ணரசில் மிகச்
சிறியவர்கள் என்கின்றார் இயேசு; ஆனால், இக்கட்டளைகளில்
ஒன்றையும் மீறாது, அவற்றைக் கடைப்பிடித்துக்
கற்பிக்கின்றவர்கள் விண்ணரசில் பெரியவர்கள் என்கின்றார் இயேசு.
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்"
என்பார் ஐயன் திருவள்ளுவர். ஆம், நாம் கடவுளின் கட்டளையை
மக்களுக்குப் போதித்துவிடலாம்; அதைக் கடைப்பிடித்துக்
கற்பிப்பதுதான் சற்றுக் கடினமான செயல் ஆகும். ஆனாலும் நாம்
அதைக் கடைப்பிடித்துக் கற்பிக்கின்றபொழுது விண்ணரசில்
பெரியவர்களாவோம் என்பது உறுதி. நாம் விண்ணரசில் சிறியவர்களாக
இருக்கப் போகிறோமா அல்லது பெரியவர்களாக இருக்கக் போகிறோமா?
சிந்திப்போம்.
சிந்தனை
"வாழ்வளிக்கும் என் நியமங்களை அவர்களுக்குக் கொடுத்து
வாழ்வுதரும் என் நீதிநெறிகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன்.
அவற்றைக் கடைப்பிடிப்போர் வாழ்வு பெறுவர்" (எசே 20: 11)
என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் வாழ்வுதரும் ஆண்டவரின்
நியமங்களையும் நீதிநெறிகளையும் கடைப்பிடித்து வாழ்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
விண்ணரசில் யார் பெரியவர்?
நிகழ்வு
காந்தியடிகள் சுதேச இயக்கத் தொடங்கி, உள்ளாட்டுப் பொருள்களையே
மக்கள் வாங்கவேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டிருந்த நேரம்
அது. அப்பொழுது சபர்மதி ஆசிரமத்தில் இருந்த காந்தியடிகளின்
துணைவியார் கஸ்தூரிபாய்க்குக் காலில் காயம் ஏற்பட்டு, இரத்தம்
வழிந்தோடத் தொடங்கியது.
உடனே அவர், ஆசிரமத்தில் இருந்த பணிப்பெண்ணிடம், "காலில்
கட்டுப்போடுவதற்கு ஒரு துணியைக் கொண்டு வா" என்றா. அந்தப்
பணிப்பெண் ஓடிச் சென்று "மில்துணியைக்" கொண்டுவந்து
கொடுத்தார். அதை வாங்க மறுத்த கஸ்தூரிபாய், "வெளிநாட்டவரின்
தயாரிப்பான இந்த மில் துணி வேண்டாம். நம்முடைய நாட்டவரின்
தயாரிப்பான கதர்த் துணியைக் கொண்டு வா" என்றார். "அம்மா!
கதர்த் துணியை காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால்
உறுத்தும். மில் துணிதான் காயம்பட்ட இடத்தில் வைத்துக்
கட்டுவதற்கு ஏற்றது" என்றார் அந்தப் பணிப்பெண்.
பதிலுக்குக் கஸ்தூரி பாய் அந்தப் பணிப்பெண்ணிடம், "காயத்தில்
கதர்த் துணியை வைத்துக் கட்டினால் உறுத்தத்தான் செய்யும்!
அதற்காக காந்தியடிகளின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மீறிச்
செயல்பட முடியுமா...?" என்றார். பணிப்பெண்ணோ வேறு எதுவும்
பேசாமல், அவர் கேட்ட கதர்த் துணியை எடுத்துக் கொண்டு வந்து
கொடுத்தார்.
கதர்த் துணியை காயத்தில் வைத்துக் கட்டுவது உறுத்துவதாக
இருந்தாலும், காந்தியடிகளின் கொள்கைகளை மீறக்கூடாது என்று
செயல்பட்ட, கஸ்தூரிபாய் நமக்கு கவனத்திற்கு உரியவராக
இருக்கின்றார். இறைவார்த்தையும் ஆண்டவரின் திருச்சட்டமும் கூட
கடைப்பிடித்து வாழ்வதற்குச் சற்றுக் கடினமானவையான இருந்தாலும்,
அவற்றின் படி நடக்கின்றபொழுது விண்ணரசில் மிகப்பெரியவர்கள்
ஆவோம் என்கிறது இன்றைய இறைவார்த்தை. நாம் அதைக் குறித்து
இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வந்தவரா?
இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் இறைப்பணியைச் செய்தபொழுது,
பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் அவர்மீது வைத்த
குற்றச்சாற்று, "இயேசு ஓய்வுநாள் சட்டத்தையும் மூதாதையர்
மரபையும் மீறுகின்றார்" என்பதுதான். உண்மையில் இயேசு ஓய்வுநாள்
சட்டத்திற்கும் அல்லது திருச்சட்டத்திற்கும்
இறைவாக்குகளுக்கும் புதிய பொருள் தந்தாரே ஒழிய, அவற்றை
மீறவில்லை. அப்படியானால் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும்
திருச்சட்ட அறிஞர்கள், இயேசு சட்டத்தையும் மூதாதையர் மரபையும்
மீறிவிட்டார் என்று குற்றம் சுமத்தினார்களே... அவையெல்லாம்
என்ன என்று நமக்கு முன் ஒரு கேள்வி எழலாம்.
இயேசு மீறியதெல்லாம் அறிவுக்கு ஒவ்வாத பரிசேயச் சட்டங்கள்
அன்றி, ஆண்டவரின் திருச்சட்டங்கள் அல்ல. அதனால்தான் இயேசு
இன்றைய நற்செய்தி வாசகத்தில், "திருச்சட்டத்தையோ
இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்;
அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்" என்று
கூறுகின்றார். இதன்மூலம் இயேசு திருச்சட்டம் மற்றும் இறைவாக்கு
நூல்களின் மையமான அன்பைப் போதித்ததோடு மட்டுமல்லாமல், அதைத்
தன்னுடைய வாழ்வில் வாழ்ந்து காட்டினார் என்பது உறுதியாகின்றது.
கட்டளைகளைக் கடைபிடித்துக் கற்பிக்கின்றவர் விண்ணரசில்
பெரியவர்
திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றுகின்றேன்
என்றும் கடைப்பிடிக்கின்றேன் என்றும் சொன்ன இயேசு, தன்னைப்
பின்பற்றி வருகின்ற சீடர்களும் அவ்வாறு கட்டளைகளைக்
கடைப்பிடித்து வாழவேண்டும் என்று செய்தியை இயேசு இன்றைய
நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் கூறுகின்றார்.
ஆம், ஒருவர் இயேசுவின் சீடராக இருக்கின்றார் எனில், அவர்
இயேசுவின் போதனையைக் கேட்பதாலோ அல்லது இயேசுவின் போதனையை
மற்றவர்களுக்குப் போதிப்பதாலோ மட்டும் இயேசுவின் சீடராக
இருந்துவிட முடியும். அவர் இயேசுவின் போதனையைக்
கடைப்பிடிக்கவேண்டும். ஒருவேளை அவர் இயேசுவின் போதனையை
மக்களுக்குக் கற்பிக்கின்றார் எனில், அதனைக் கடைப்பிடித்துக்
கற்பிக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர் இயேசுவின் சீடராக
இருக்கமுடியும்; விண்ணரசில் பெரியவராகவும் இருக்கமுடியும்.
இல்லையென்றால் அவர் இயேசுவின் சீடராகவும் இருக்கமுடியாது;
விண்ணரசில் பெரியவராக அல்ல, சிறியவராகத்தான் இருக்க முடியும்.
இதில் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கின்றோம் என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் சொல்வது போல், "கடவுளின்
வார்த்தை உயிருள்ளது" (எபி 4: 12). ஆகையால், நாம் ஆண்டவரின்
வார்த்தைகளையும் அவருடைய அன்புக் கட்டளையையும் கடைப்பிடித்து,
விண்ணரசில் பெரியவர்கள் ஆவோம்.
சிந்தனை
"இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை
ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் அதன்படி நடக்கிறவர்களாவும் இருங்கள்"
(யாக் 1: 22) என்பார் புனித யாக்கோபு. ஆகையால், நாம்
வாழ்வளிக்கும் ஆண்டவரின் கட்டளைகளை, இறைவார்த்தையைக் கேட்டு,
அதன்படி நடப்பவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|