Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     09 ஜூன் 2020  

பொதுக்காலம் 10ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ++எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 7-16

அந்நாள்களில் நாட்டில் மழை பெய்யாத காரணத்தால் சில நாள்களில் அந்த ஓடையும் வற்றிப் போனது. அப்பொழுது ஆண்டவரது வாக்கு எலியாவுக்கு வந்தது: "நீ புறப்பட்டுச் சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் போய் அங்கே தங்கியிரு. அங்கு உனக்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்." எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, "ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்றார். அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, "எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?" என்றார். அவர், "வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்" என்றார். எலியா அவரிடம், "அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது" என்று சொன்னார். அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை, கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 4: 1-2. 3-4. 6c-7 . (பல்லவி: 6c) Mp3
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, எங்கள்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்.
1
எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;
2
மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்? எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? - பல்லவி

3
ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும்போது அவர் எனக்குச் செவிசாய்க்கின்றார்; - இதை அறிந்துகொள்ளுங்கள்.
4
சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாய் இருங்கள். - பல்லவி

6c
ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படி செய்தருளும்.
7
தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியை விட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
மத் 5: 16

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 அரசர்கள் 17: 7-16

பாராமரிக்கும் இறைவன்

நிகழ்வு

அது ஒரு பனிபடர்ந்த கடற்கரை. அந்தக் கடற்கரையில் பென்குயின்கள் ஒன்றை ஒன்று ஒட்டியவாறு நின்றுகொண்டிருந்தன. அவற்றினுடைய கால்களுக்கு மேல், முட்டைகள் இருந்தன. மேலும் அவை தங்களிடமிருந்து உருண்டு ஓடிவிடாத வண்ணம் இருக்க அலகுகளால் அவற்றை தாங்கிப் பிடித்திருந்தன.

பென்குயின்களுக்கு உள்ள தனிச்சிறப்பு, ஆண் பென்குயின்கள்தான் முட்டைகளை அடைகாக்கும். அந்த கடற்கரையில் இருந்த பென்குயின்கள் எல்லாம் ஆண் பென்குயின்தான். அவை தங்களுடைய முட்டைகளை 38 செல்சியஸ் டிகிரி வெப்பத்தில் அடைகாத்தன. அவை அந்த முட்டைகளை அடைகாத்துக் குஞ்சுகளைப் பொறித்தபொழுது, தங்களுடைய எடையில் 45 சதவீதத்தை இழந்திருந்தன.

புதிதாக இந்தப் பூமிக்கு வருகின்ற பென்குயின்கள் நல்லமுறையில் வரவேண்டும் என்பதற்காக அவற்றின் தந்தையாக இருக்கும் ஆண் பென்குயின்கள் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் வியப்பாக இருக்கின்றன. தந்தையாம் இறைவனும்கூட, தன் மக்களை, தன் அடியார்களைக் காக்கின்ற விதம் மிகவும் வியக்கக்கூடியதாக இருக்கின்றது. முதல் வாசகத்தில், எலியா இறைவாக்கினர் ஒளிருந்திருந்த கெரீத்து ஓடையில் தண்ணீர் வற்றியபொழுது, கடவுள் அவரை எப்படிப் பராமரிக்கின்றார் என்பதை வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எலியா, சாரிபாத்தைச் சார்ந்த கைம்பெண்ணிடம் அனுப்பி வைக்கப்படல்

கடவுளின் அடியாரான இறைவாக்கினர் எலியா, பாகால் தெய்வ வழிபாட்டைத் தன் மனைவி ஈசபேலோடு சேர்ந்து ஆதரித்துவந்த ஆகாபு மன்னனிடம், வரும் ஆண்டுகளில் பனியோ, மழையோ பெய்யாது என்று உரைத்தார். இதைத் தொடர்ந்து கடவுள் எலியா இறைவக்கினரிடம், யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில் ஒளிந்துகொள் என்று சொன்னார். அவரும் அவ்வாறே செய்ய, கடவுள் அவருக்கு காகங்கள் வழியாக அப்பமும் இறைச்சியும் கொடுத்து, உணவளித்தார். ஓராண்டுக்குப் பிறகு கெரீத்து ஓடையில் தண்ணீர் வற்றியதும், கடவுள் அவருக்கு வேறொரு வழியைக் காட்டுகின்றார். அதுதான் சீதோனைச் சார்ந்த சாரிபாத்தில் இருந்த கைம்பெண்ணிடம் அனுப்பி வைத்தல்.

இதில் நாம் கவனிக்கவேண்டியது, சீதோனைச் சார்ந்தவர்கள் உணவுக்காக இஸ்ரயேலின் உதவியை நாடி நின்றதுதான் (1அர 5:9; திப 12: 20). இப்படி எந்த மக்கள் உணவுக்காக இஸ்ரயேலரின் உதவியை நாடி நின்றார்களோ, அந்த மக்களிடமே கடவுள் இறைவாக்கினர் எலியாவை அனுப்பிவைக்கின்றார். அவர்கள் யூதர்கள் அல்லாத பிற இனத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன் அடியாரையும் அவருக்கு அடைக்கலம் கொடுத்தவரையும் பராமரித்த இறைவன்

இறைவாக்கினர் எலியா, கடவுள் தன்னிடம் சொன்னது போன்று சீதோனைச் சார்ந்த சாரிபாத்துக்குச் செல்கின்றார். சாரிபாத்து என்ற இடம் எலியா இறைவாக்கினர் இருந்த இடத்திலிருந்து நூறு மைல்கள் தூரம். "அவ்வளவு தூரம் போகவேண்டுமா, அதுவும் பிற இனத்தார் பகுதிக்குப் போகவேண்டுமா?" என்று எலியா இறைவாக்கினர் நினைக்கவில்லை. மாறாக, அவர் ஆண்டவருடைய கட்டளைக்குப் பணிந்து சீதோனில் இருந்த சாரிபாத்துக்குச் செல்கின்றார்.

எலியா, சாரிபாத்தின் உள்ளே நுழைகையில், அதன் நுழைவாயிலில் ஒரு கைம்பெண்ணைக் காண்கின்றார். அவரிடம் முதலில் தண்ணீரும் அப்பமும் அவர் கேட்கின்றார். அவரோ தன்னிடம் கையளவு மாவும் சிறிதளவு எண்ணையுமே இருப்பதாகச் சொல்கின்றார். அப்பொழுது எலியா அவரிடம், எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா... நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும்வரை பானையில்ல மாவும், கலையத்தில் உள்ள எண்ணையும் தீராது என்கின்றார். எலியா இறைவாக்கினர் அவரிடம் சொன்னதுபோன்றே அவர் செய்ய, பானையில் உள்ள மாவு தீரவில்லை; கலயத்தில் உள்ள எண்ணெயும் குறையவில்லை.

இதில் நாம் இரண்டு உண்மைகளைக் கவனிக்கவேண்டும். ஒன்று, தன் அடியாரான எலியா இறைவாக்கினரைப் பஞ்சக் காலத்தில் ஆண்டவர் பராமரித்தது. இரண்டாவது, தன் அடியாரைக் கவனித்துக்கொண்ட கைம்பெண்ணின் குடும்பத்தை ஆண்டவர் பராமரித்துக் கொண்டது. ஒருவேளை எலியா இறைவாக்கினர் அந்தக் கைம்பெண்ணின் வீட்டிற்குப் போயிருக்காவிட்டால், அவர் தன்னிடம் இருந்த கொஞ்ச மாவையும் எண்ணெயையும் கொண்டு அப்பம் சுட்டுச் சாப்பிட்டு அத்தோடு இறந்திருந்தார்; ஆனால், அவர் கடவுளின் அடியாரான எலியா இறைவாக்கினருக்கு அப்பம் சுட்டுத் தந்ததால், பஞ்ச காலம் முடியும்வரை அவரிடம் மாவும் எண்ணையும் குறைவே இல்லை. இந்நிகழ்வு இயேசு சொன்ன, "இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால், ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்" (மத் 10: 42) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

ஆண்டவர் எலியா இறைவாக்கினரைப் பராமரித்தை வாசித்து அறிந்த நாம், நம்முடைய வாழ்வில் ஆண்டவருடைய பராமரிப்பை உணர்ந்திருக்கின்றோமா? நம்மைத் தேடி வருகின்ற ஆண்டவரின் அடியார்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்" (மத் 6: 11) என்று இயேசு தந்தையிடம் வேண்டக் கற்றுத்தருவார். நாம், இறைவன் நமக்கு அன்றாட உணவைத் தரவேண்டும் என்று மன்றாடுவதோடு மட்டுமல்லாமல், கடவுளின் பாரமரிப்பை உணர்ந்தவர்களாய்த் தேவையில் உள்ளவர்களுக்கு உணவிடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மத்தேயு 5: 13-16

"நீங்கள் உலகிற்கு விளக்காய் இருக்கின்றீர்கள்"

நிகழ்வு

அமலன் தன்னுடைய நண்பன் கதிரவனின் வீட்டிற்குச் சென்றிருந்தான். கதிரவனோ கண்பார்வை இல்லாத ஒரு மாற்றுத் திறனாளி. அமலன் கதிரவனுடைய வீட்டிற்குள் வந்ததும், கதிரவன் அவனிடம், "நண்பா! நீ இங்கேயே இரு. நான் உனக்கு தேநீர் தயாரித்துக் கொண்டு வருகின்றேன்" என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான்.

கதிரவன் சொன்னதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அமலன் அவன் பின்னாலேயே சென்றான். தன் நண்பன் தன்னைப் பின்தொடர்ந்து வருவதை அறிந்த கதிரவன் உடனே அந்த அறையில் இருந்த மின்விளக்கை ஏற்றினான். அதைப் பார்த்ததும் அமலன் கதிரவனிடம், "நண்பா! உனக்குத்தான் பார்வை கிடையாது! நீ மின்விளக்கை ஏற்றவேண்டிய அவசியமே இல்லை! பிறகு எதற்கு இப்பொழுது மின்விளக்கை ஏற்றினாய்?" என்றான்.

அதற்குக் கதிரவன் அமலனிடம், "இப்பொழுது நான் விளகேற்றியது எனக்காக அல்ல, நீ இருட்டில் இடறி விழுந்துவிடக்கூடாது என உனக்காக" என்றான். இப்படிச் சொல்லிவிட்டு கதிரவன் அமலனிடம், தொடர்ந்து பேசினான்: "மற்றவர்களுக்குத் தேவைப்பட்ட போதும், உனக்குத் தேவையில்லை என்ற ஒரே காரணத்திற்காக எத்தனை முறை நீ விளக்கை அணைந்திருக்கின்றாய்?" அமலனால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆம், நாம் பிறருக்கு, இவ்வுலகிற்கு விளக்காக இருப்பதற்குப் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தபொழுதும், அந்த வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையே மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு, நீங்கள் உலகிற்கு ஒளியாய் விளக்காய் இருக்கிறீர்கள் என்கின்றார். நாம் இந்த உலகிற்கு ஒளியாக, விளக்காக இருப்பது எப்படி என்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவார்த்தையை விளக்கு

நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய ஒளியாய் இருங்கள் என்பதை நம்முடைய சிந்தனைக்காக "விளக்காய் இருங்கள்" என்று எடுத்துக்கொள்வோம். "விளக்கு" என்பதற்குத் தமிழில் விளக்கம் தருதல் (Explain), கசடுகளை விளக்குதல் (Clean) விளக்கேற்றுதல் (Light) என்று மூன்றுவிதமான பொருள்கள் இருக்கின்றன. இந்த மூன்றுவிதமான பொருள்களையும் இன்றைய இறைவார்த்தையின் ஒளியில் தனித்தனியாக நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

முதலில் "விளக்கம் தருதல்" என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். இறைவார்த்தையைக் கற்றறிந்திருக்கின்ற ஒவ்வொருவரும் அவ்வார்த்தையை அறியாத, விளங்காத மக்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டும். இது நம்முடைய தலையாக கடமை. ஏனென்றால், பலருக்கும், திருத்தூதர் பணிகள்நூல் எட்டாம் அதிகாரத்தில் வருகின்ற எத்தியோப்பிய நிதியமைச்சரைப் போன்று இறைவார்த்தை விளங்காமலேயே இருக்கின்றது (திப 8:31) இப்படிப்பட்ட சூழலில் நாம் அவர்களுக்கு இறைவார்த்தையை விளக்கி, அதன்மூலம் நாம் உலகிற்கு விளக்காக, ஒளியாக இருப்பது மிகவும் தேவையான ஒன்றாகும்.

உலகில் உள்ள தீமையை வி(ல)ளக்கு

விளக்கு என்பதற்கு இருக்கும் இரண்டாவது பொருள் ஒன்றைத் தூய்மைப்படுத்துவதாகும். பொதுவாக நம்முடைய பேச்சு வழக்கில், பாத்திரத்தை விளக்கு, பல்லை விளக்கு என்று சொல்வோம். இதையே நாம் நம்முடைய ஆன்மிக வாழ்வோடு பொருத்திப் பார்க்கின்றபொழுது, நம்மிடம் இருக்கின்ற பாவத்தை, தீமை வி(ல)ளக்குதல் என்று சொல்லலாம். நற்செய்தியில்கூட இயேசு, "மனம்மாறி (தீமையை வி(ல)ளக்கி, நற்செய்தியை நம்புங்கள்" (மாற் 1: 15) என்றுதான் சொல்கின்றார். ஆகையால், நாம் நம்மிடம் இருக்கின்ற தீமைகளை வி(ல)ளக்கி, நன்மைகளைச் செய்வதன் வழியாக உலகிற்கு விளக்காக இருக்க முடியும்.

வாழ்வில் விளக்கேற்றுதல்

விளக்கு எதற்கு இருக்கும் மூன்றாவது பொருள், ஒருவர் இன்னொருவருடைய வாழ்விற்கு அர்த்தத்தைத் தருவதாகும். பொதுவாக ஒருவர் நம்முடைய வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும்பொழுது அவரை நாம், "இவர் என்னுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்" அல்லது "விளக்கேற்றி வைத்தார்" என்று சொல்கிறோம். அப்படி என்றால் நாம் பிறருடைய வாழ்விற்கு அர்த்தத்தைத் தருகின்றபொழுது அல்லது பிறருடைய வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும்பொழுது நாம் விளக்காக, ஒளியாக இருக்கின்றோம் என்பதே பொருள். இயேசுவும் தன்னுடைய வாழ்வால் உலகிற்கு ஒளியாக இருந்தார். நாமும் நம்முடைய வாழ்வால் பிறருடைய வாழ்விற்கு அர்த்தம் தருகின்றபொழுது, நாம் உலகிற்கு ஒளியாகின்றோம்.

இதில் இன்னொரு முக்கியமான செய்தியையும் நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு விளக்கு எரிவதற்கு எண்ணெய், திரி, தீ என்ற மூன்று பொருள்கள் தேவைப்படுகின்றன. இந்த மூன்றையும் எண்ணெய்+திரி+தீ என்று சேர்த்துச் சொன்னால், என்னைத் திருத்தி என்று வரும். ஆம், நாம் முதலில் நம்மைத் திருத்திக்கொண்டு, இறைவார்த்தைக்கு விளக்கம் கொடுத்து, இவ்வுலகில் உள்ள தீமை என்ற இருளை வி(ல)ளக்கி, வாழ்ந்தோம் எனில், நாம் உலகிற்கு விளக்காக, ஒளியாக மாறலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சிந்தனை

"இருளிலிருந்து ஒளி தோன்றுக என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசத் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே" (2 கொரி 4: 6) என்பார் புனித பவுல். ஆகவே, நம்முடைய உள்ளங்களில் அறிவொளியை வீசச் செய்த கடவுளின் அருள்துணையோடு உலகிற்கு ஒளியாக, விளக்காக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை -

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாக வெளிநாட்டிலிருந்து இராணுவப்படை ஒன்று இங்கு வந்து இறங்கியது. இராணுவப் படையிலிருந்த வீரர்கள் வாரம் முழுவதும் எங்கெல்லாமோ சுற்றி அலைந்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஆனதும் ஆலயத்தில் நடைபெறக்கூடிய வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டார்கள்.

இதைக்கூர்ந்து கவனித்து வந்த ஒரு இந்துமத சகோதரருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாமோ ஒவ்வொருநாளும் கோவிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டுவிட்டு வருகிறோம். ஆனால் இவர்களோ ஞாயிற்றுக்கிழமைதான் ஆலயத்திற்குப் போகிறார்கள், அதுவும் ஒருசில மணிநேரங்களிலே ஆலயத்தைவிட்டு வெளியே வந்துவிடுகிறார்கள். இவர்களைப் பார்த்தால் உண்மையில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்போல தெரியவில்லையே என்று வியந்துநின்றார்.

ஒரு சமயம் அந்த இந்துமத சகோதர் இருந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஏராளமான மக்கள் இடிபாட்டுக்குள் சிக்கிக்கொண்டு பறிதவித்தார்கள். ஒருசிலர் தங்களுடைய வீடுகளையும், உற்றார் உறவினர்களை இழந்து தவித்தார்கள். அப்போது இந்த இராணுவ வீரர்கள்தான் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்களை வெளியே கொண்டுவந்தனர். வீடுகளையும், உற்றார், உறவினர்களையும் இழந்து தவித்தோருக்கு தாங்கள் இருந்த முகாமில் இடமளித்து, அவர்களுக்கு பலநாட்கள் உணவளித்து வந்தார்கள்.

இதைப்பார்த்த அந்த இந்துமத சகோதரர் "இவர்கள் அல்லவா உண்மையான கிறிஸ்தவர்கள்/ இறைபக்தர்கள். இவர்களைப் போன்று நானும் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு கிறிஸ்தவராக வாழவேண்டும்" என்று சொல்லி, திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவராக வாழத் தொடங்கினார். கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்வு சாரமுள்ள, அர்த்தமுள்ள வாழ்வாக இருக்கவேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்" என்கிறார். அதாவது நாம் ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு உப்பைப் போன்று சுவையூட்டக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பதே இயேசு கூறவிரும்பும் செய்தியாக இருக்கின்றது.

ரோமானியர்கள் தங்களுடைய வாழ்வில் உப்பை மிகவும் இன்றியமையாத ஒரு பொருளாகக் கருதினார்கள். இன்றியமையாத மனிதர்களை "உப்புக் கல்லைப் போன்றவர்கள்" என்றே அழைத்தார்கள். ரோம் நகரில் இன்றைக்கும் முக்கியமான ஒரு சாலையை "Via Salaria The Salt Route" என்றே அழைத்து வருகிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு உப்பைப் போன்று முக்கியமானவர்கள். நமது இருப்பு இந்த உலகிற்கு பயன்தரக்கூடியதாக இருக்கவேண்டும்.

அடுத்ததாக உப்பு தூய்மைக்கு அடையாளமாக இருக்கின்றது. நமது வாழ்வும் தூய்மையானதாக இருக்கவேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பமாக இருக்கின்றது. லேவியர் புத்தகம் 19:2 ல் வாசிக்கின்றோம், "நீங்கள் தூயோராய் இருங்கள், ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவராய் இருக்கிறேன்" என்று. ஆகவே, நமது வாழ்வை தூய வாழ்வாக அமைத்துக்கொள்ளவேண்டும். இன்றைக்கு நாம் கெட்டுச் சீரழிந்து போவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. இவைகளுக்கும் மத்தியில் நாம் தூயவராக வாழ்வதுதான் சவால் நிறைந்த ஒரு காரியமாகும்.

நிறைவாக உப்பு பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்க உதவுகிறது. உணவுப் பொருட்களை மட்டுமல்லாது, இறந்த மனிதர்களுடைய உடலையும் நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பதற்கும் உப்பு பயன்படுகின்றது. உப்பாக இருக்க அழைக்கப்பட்டிருக்கும் நாம், இந்த சமூகத்தை கெட்டுப்போகாமல் பாதுகாக்கவேண்டியது நமது கடமையாகும்.

இந்த உலகம் பணத்திற்கும், இன, சாதிவெறிக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இதனை அழிந்துபோகாமல் மீட்டெடுப்பதுதான் நமது கடமையாகும்.

எனவே உலகிற்கு உப்பாக இருக்க அழைக்கப்பட்டிருக்கும் நாம், இந்த உலகில் நமது இருப்பு மிக முக்கியமானது என்பதை உணர்வோம், உப்பைப்போல தூய்மையான வாழ்வு வாழ்வோம், இந்த உலகை அழிவிலிருந்து மீட்போம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!