|
|
08 ஜூன் 2020 |
|
பொதுக்காலம்
10ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
++இஸ்ரயேலின் கடவுளை எலியா வழிபடுகிறார்.
அரசர்கள் முதல்
நூலிலிருந்து வாசகம் 17: 1-6
அந்நாள்களில் கிலயாதில்
குடியிருந்த திஸ்பே ஊரைச் சார்ந்த எலியா ஆகாபு அரசனிடம், "நான்
பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என்
வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது" என்றார்.
பின்னர் ஆண்டவரின் வாக்கு எலியாவுக்கு வந்தது: "இங்கிருந்து ஓடிவிடு;
கிழக்கு முகமாகப் போய் யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில்
ஒளிந்து கொள். அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக்கொள். அங்கே உனக்கு
உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்". அவ்வாறே
அவர் போய் ஆண்டவரது வாக்கின்படி செய்தார். அவர் சென்று
யோர்தானுக்கு அப்பாலிருந்த கெரீத்து ஓடையருகில் தங்கியிருந்தார்.
காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக்
கொண்டு வந்தன. ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 121: 1-2. 3-4. 5-6. 7-8 . (பல்லவி: 2)
Mp3
=================================================================================
பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் எனக்கு உதவிடுவார்.
1
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு
உதவி வரும்?
2
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி
வரும். - பல்லவி
3
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும்
அவர் உறங்கிவிடமாட்டார்.
4
இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை; உறங்குவதும்
இல்லை. - பல்லவி
5
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப் பக்கத்தில்
உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்!
6
பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத்
தீண்டாது. - பல்லவி
7
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம்
உயிரைக் காத்திடுவார்.
8
நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும்
ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 12a
அல்லேலூயா, அல்லேலூயா! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில்
விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்.
மத்தேயு எழுதிய
நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12
அக்காலத்தில் இயேசு மக்கள்
கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே
வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: ``ஏழையரின்
உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு
உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல்
பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை
உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை
கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக்
காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள்
கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத்
துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு
அவர்களுக்கு உரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து,
துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம்
சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை
கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும்
கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த
இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 அரசர்கள் 17: 1-6
ஆண்டவரின் வார்த்தையைத் துணிவோடு எடுத்துச் சொன்ன எலியா
நிகழ்வு
அமெரிக்காவைச் சார்ந்தவர் இயற்கையியலாரான ஹென்றி டேவிட் தோரே
(Hendry David Thoreau 1817 -1862). இவர் எழுதிய "Walden",
"Civil Disobedience" ஆகிய நூல்கள் மிகவும் பிரபலமானவை. 1846
ஆம் ஆண்டு, அமெரிக்க அரசாங்கம் மெக்சிக்கோ நாட்டின்மீது
போர்தொடுப்பதற்காக மக்கள்மீது வரி விதித்தது. இதை மிகக் கடுமையாக
எதிர்த்த இவர், போர் அடிமைத்தனத்தையும் அமைதியற்ற சூழலையும்தான்
ஏற்படுத்தும் என்று தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்தார். இதனால்
அமெரிக்க அரசாங்கம் இவரைச் சிறையில் அடைத்தது.
இவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு,
ரால்ப் வால்டோ எமர்சன் என்பவர் இவரைப் பார்க்க வந்தார். அவர்
இவரிடம், "நீர் எதற்கு இப்படிச் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றீர்...
பேசாமல் அரசாங்கம் கேட்கக்கூடிய வரியைச் செலுத்துவிட வேண்டியதுதானே...!"
என்றார். அதற்கு இவர், "அரசாங்கம் கொண்டுவரக்கூடிய சட்டத்தை அப்படியே
ஏற்றுக்கொள்வதற்கு நான் உன்னைப் போன்று நான் கோழை இல்லை.
மேலும் போரின் மூலம் அடிமைத்தனத்தை ஆதரிப்பதற்கு நான் ஒன்றும்
மனசாட்சி இல்லாதவனும் இல்லை" என்றார். தோரே இவ்வாறு சொன்னதற்கு
எமர்சன் பதிலேதும் சொல்லமுடியாமல் வாயடைத்து நின்றார்.
ஆம், ஹென்றி டேவிட் தோரே, அமெரிக்க அரசாங்கம் தவறு செய்தபொழுது,
அதை அஞ்சாது சுட்டிக்காட்டினார். அதனால் சிறைத்தண்டனையை அனுபவித்தார்.
இன்றைய முதல் வாசகத்தில், பாகால் தெய்வ வழிபாட்டை ஆதரித்து வந்த
ஆகாபு மன்னனுடைய தவற்றை, இறைவாக்கினர் எலியா அஞ்சாமல் எடுத்துரைப்பதைப்
பற்றி வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
பாகால் தெய்வ வழிபாட்டை ஆதரித்து வந்த ஆகாபு மன்னன்
இஸ்ரயேலின் அரசனாக இருந்தவன் ஆகாபு மன்னன். இவன் எத்பாகாலின்
மகளாகிய ஈசபேலை மணந்தான். இந்த ஈசபேல் பிற இனத்தைச்
சார்ந்தவள். இவளை மகிழ்விக்க ஆகாபு மன்னன் சமாரியாவில் பாகால்
தெய்வத்திற்கு ஒரு கோயிலைக் கட்டி, அத்தெய்வத்திற்கு
பலிபீடமும் கட்டினான். இதனால் இவன் கடவுளின் சினத்திற்கு
ஆளானான் (1 அர 16: 31-33). இதை அறிந்த கடவுளின் அடியாரும்
இறைவாக்கினருமான திஸ்பேயைச் சார்ந்த எலியா, ஆகாபு மன்னிடம்,
"நான் பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர்மேல் ஆணை!
...வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது" என்கின்றார்.
இஸ்ரயேல் நாட்டில் வழக்கமாக அக்டோபர் மற்றும் நவம்பர்
மாதங்களில் பருவ மழை பெய்யும். ஆனால், ஆகாபு மன்னன் பாகால்
தெய்வ வழிபாட்டை ஆதரித்து வந்ததால், எலியா இறைவாக்கினர்
அக்டோபர் மாதத்திற்கு முன்னரே அவனிடம் சென்று, பனியோ, மழையோ
பெய்யாது என்கின்றார். அவர் சொன்னது போன்ற மூன்றரை ஆண்டுகள்
வானம் பொய்த்தது. எலியா இறைவாக்கினர் சொன்னதும் வானம் பொய்த்து
என்றால், அவர் எந்தளவுக்கு வல்லமை நிறைந்தவராக இருந்திருப்பார்
என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம் (யாக் 5:
17-18). மேலும் மழை கடவுளின் வார்த்தையோடு ஒப்பிடப்பட்டது (இச
32: 2; எசா 55:10). இஸ்ரயேல் மக்கள் கடவுளின் வார்த்தையைக்
கேட்டு நடக்காமல், பிற தெய்வங்களை வழிபட்டதால், அங்கு மழை
பொய்த்துப் போனது.
தம் அடியாரைக் காப்பாற்றிய ஆண்டவர்
எலியா இறைவாக்கினர், ஆகாபு மன்னனுடைய தவற்றை சுட்டிக்காட்டிய
பிறகு, ஆண்டவரால், யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து
ஓடையருகில் ஒளிந்து கொள்ளப் பணிக்கப்படுகின்றார். எலியாவும்
அங்கு சென்று ஒளிந்துகொள்ள, கடவுளுக்கு அவருக்குக் காலையிலும்
மாலையும் காகங்கள் வழியாக அப்பமும் இறைச்சியும் கொடுத்து,
அவருடைய பசியைப் போக்குகின்றார். ஆண்டவர் கெரீத்து ஓடையருகில்
ஒளிந்துகொண்டிருந்த எலியா இறைவாக்கினருக்கு உணவளித்தது,
ஆண்டவர் தம் அடியாரை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற உண்மையை
மிகவும் அருமையாக எடுத்துக் கூறுகின்றது. இதில் நாம்
கவனிக்கவேண்டிய செய்தி, கடவுள் காகங்கள் வழியாக எலியா
இறைவாக்கினருக்கு உணவளித்ததுதான். யூதர்களுக்கு காகங்களைப்
பிடிக்காது, அவர்கள் அவற்றை அருவருக்கத் தக்கவை (லேவி 13: 19)
என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள்; ஆனால், கடவுள் அவற்றின்
வழியாக எலியாவுக்கு உணவளித்தது, கடவுள் நினைத்தால் எப்படியும்
அருஞ்செயலைச் செய்ய முடியும் என்ற உண்மையை உணர்த்துவதாக
இருக்கின்றது.
ஆகையால், நாம் நம்மை பராமரிக்கும், பாதுகாக்கும் இறைவனுடைய
வார்த்தையை எலியா இறைவாக்கினரைப் போன்று யாருக்கும் அஞ்சாமல்
எடுத்துரைத்து, அவருடைய உண்மையான மக்களாவோம்.
சிந்தனை
"அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல்
வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான்
உன்னோடு இருக்கின்றேன்" (எரே 1: 19) என்று ஆண்டவர்
இறைவாக்கினர் எரேமியாவிடம் கூறுவார். ஆண்டவர் இறைவாக்கினர்
எரேமியாவிற்கு உரைத்த வார்த்தைகளை நமக்கு உரைத்த வார்த்தைகளாய்
எடுத்துக்கொண்டு, நாம் எவருக்கும் அஞ்சாமல் ஆண்டவரின்
வார்த்தையைத் துணிவோடு அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 5: 1-12
மலைப்பொழிவு, மண்ணகம் தழைத்தோங்குவதற்கான
அருள்பொழிவு
நிகழ்வு
காந்தியடிகள் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு,
இந்தியாவிற்குத் திரும்பியிருந்த நேரம் அது.
காந்தியடிகளைப் பார்க்க, இந்தியாவின் முன்னாள் பிரதிநிதியான
(Viceroy) இர்வின் பிரவு வந்தார். அவர் காந்தியடிகளிடம்,
"காந்தி ஜி! எங்களுடைய நாட்டிற்கும் உங்களுடைய நாட்டிற்கும்
இடையே நடக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண எது சரியான
வழியாக இருக்கும்" என்று கேட்டார். உடனே காந்தியடிகள் தன்னுடைய
அறையில் இருந்த திருவிவிலியத்தை எடுத்து, அதில் மத்தேயு
நற்செய்தி ஐந்தாம் அதிகாரத்தில் இடம்பெறும் இயேசுவின்
மழைப்பொழிவைச் சுட்டிக்காட்டி, "இயேசு தன்னுடைய மலைப்பொழிவில்
சுட்டிக்காட்டுகின்ற வழியைப் பின்பற்றி நடந்தால், நம்முடைய
இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல,
உலகம் முழுவதும் நடக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண
முடியும்" என்றார்.
ஆம், இயேசுவின் மலைப்பொழிவு, இந்த மனிதகுலம்
தழைத்தோங்குவதற்கான வாழ்வியல் நெறிகள் அடங்கிய ஒரு பெட்டகம்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவின் மலைப்பொழிவைக் குறித்து
வாசிக்கின்றோம். இயேசுவின் இந்த மழைப்பொழிவு நமக்கு என்ன
செய்தியைத் தருகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
புதிய போதனை
நற்செய்தியில், இயேசு மக்கள்கூட்டத்தைக் கண்டு, மலைமேல் ஏறி,
திருவாய் மலர்கின்றார். அவ்வாறு அவர் திருவாய் மலர்ந்து
கற்பித்தவைதான் இந்த மழைப்பொழிவு. அதிலும் குறிப்பாக இன்றைய
நற்செய்தியில் இடம்பெறும் எட்டுவிதமான பேறுகள்.
ஏழையரின் உள்ளம், துயருறுதல், கனிவோடிருத்தல், நீதி
நிலைநாட்டும் வேட்கைகொண்டிருத்தல் தூய்மையான உள்ளம், அமைதி
ஏற்படுத்துதல், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படல்,
இயேசுவின் பொருட்டு இகழ்ந்து துன்புறுத்தப்படல் ஆகிய இந்த
எட்டுவிதமான பேறுகளும் இந்த உலகம் காட்டும் நெறிகளுக்கு
முற்றிலும் எதிரானவை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த
உலகம் மற்றவருக்காகவும் கிறிஸ்துவுக்காகவும் துயருறுதல்
என்பதற்குப் பதிலாக, மற்றவர்களைத் துயரப்படுத்திக் கொண்டு
இருக்கின்றது. அதே போன்றுதான், இயேசு போதிக்கும் அமைதிக்குப்
பதிலாக இந்த உலகம் வன்முறையைப் போதித்துக் கொண்டிருக்கின்றது.
இப்படி ஒன்றாகச் சொல்லிக்கொண்டு போகலாம்.
இயேசு ஏன் இந்த உலகம் போதிக்கும் போதனைக்கு மாறாக அமைதியையும்
இரக்கத்தையும் கனிவையும் போதித்து, அவற்றை நாம் கடைப்பிடித்து
வாழவேண்டும் என்று சொல்கின்றார் என நமக்குக் கேள்வி எழலாம்.
இதற்கான பதிலை இயேசு யோவான் நற்செய்தியில் கூறுகின்றார். "நான்
உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச்
சார்ந்தவர்கள் அல்ல" (யோவா 17: 14) என்று இயேசு கூறுவதிலிருந்த
நாம் இந்த உலகம் காட்டும் போதனைகளின்படி வாழாமல், இயேசு
காட்டும் போதனைகளின்படி, வாழ அழைக்கப்படுகின்றோம். புனித
பவுலும் இதைத்தான், "நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று
எழுந்தவர்களால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுகள்" (கொலோ 3:1)
என்று கூறுகின்றார். ஆகையால், நாம் இயேசுவின் சீடர்களாக இருக்க
வேண்டுமெனில், அவருடைய இந்தப் புதிய போதனையைக் கடைப்பிடித்து
வாழவேண்டும்.
மண்ணகத்தில் அல்ல, விண்ணகத்தில் கைம்மாறு கிடைக்கும்
இயேசுவின் இந்தப் புதிய போதனையை கடைப்பிடித்து வந்தால்
ஒருவருக்கு என்ன கைம்மாறு கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.
இயேசுவின் இப்போதனையைக் கடைப்பிடித்து வந்தால், மண்ணகத்தில்
துன்பம் வரலாம்; பிறருடைய வெறுப்பைச் சம்பாதிக்கலாம் (யோவா 16:
33). ஆனால், விண்ணகத்தில் கைம்மாறு கிடைக்கும். இதைத்தான்
இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் இவ்வாறு கூறுகின்றார்:
"...மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில்
உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்."
ஆம், மனிதர்கள் தரும் புகழ்ச்சியான வார்த்தைகளோ, பாராட்டுகளோ
புகைபோல மறைந்துவிடும். ஆனால், இறைவன் தரும் கைம்மாறு நீடித்து
இருக்கும். ஆகையால், நாம் இந்த உலகம் காட்டும் வழியில் நடந்து,
உலகைச் சார்ந்தவர்களாய் இராமல், இயேசு காட்டும் வழியில்
நடந்து, அவருடைய உண்மையான சீடர்களாக இருப்போம்; அவர் தருகின்ற
கைம்மாறினைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
"அழிவுக்குக் காரணமாக இருக்கும் அணுவைக் குறித்து
அறிந்துகொண்டோம்; வாழ்வுக்குக் காரணமாக இருக்கும் இயேசுவின்
மலைப்பொழிவைக் குறித்து இன்னும் அறிந்துகொள்ளவில்லை" என்பார்
அமெரிக்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான ஓமர் பிராட்லே.
ஆகையால், நாம் வாழ்வுக்குக் காரணமாக இருக்கும் இயேசுவின்
மலைப்பொழிவைக் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு, அதன்படி வாழ
முயற்சி செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|