|
07 ஜூன்
2020 |
|
மூவொரு இறைவன் பெருவிழா |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
++இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 34:
4b-6, 8-9
அந்நாள்களில் ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி மோசே அதிகாலையில்
எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச் சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும்
கொண்டு போனார். ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய்
நின்று கொண்டு, 'ஆண்டவர்' என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர்
அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், "ஆண்டவர்! ஆண்டவர்; இரக்கமும்
பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்;
நம்பிக்கைக்குரியவர்'' என அறிவித்தார். உடனே மோசே விரைந்து தரைமட்டும்
தாழ்ந்து வணங்கி, "என் தலைவரே! நான் உண்மையிலேயே உம்
பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள
மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள்
கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச்
சொத்தாக்கிக் கொள்ளும்'' என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தானி (இ) 1: 29ac. 30,31. 32,33 . (பல்லவி: 29b)
=================================================================================
பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும்
தகுதியுள்ளவர்.
29a
எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப்
பெறுவீராக;
29c
மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. -
பல்லவி
30
உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக;
31
கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர்
வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி
32
உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக;
33
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
++இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின்
நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
திருத்தூதர் பவுல்
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்
13: 11-13
சகோதரர் சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது:
மகிழ்ச்சியாய் இருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்;
என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்;
அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும்
கடவுள் உங்களோடு இருப்பார். தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர்
வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு
வாழ்த்துக் கூறுகிறார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும்
கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும்
இருப்பதாக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திவெ 1: 8 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும்
எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை
உண்டாகுக. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++உலகை மீட்கவே கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பினார்.
ஓ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
3: 16-18
அக்காலத்தில் இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: "தம் ஒரே மகன்மீது
நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்
பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல்
அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம்
மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.
அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை;
ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர்.
ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1மூவொரு இறைவன்
பெருவிழா
=================================================================================
இரக்கமும் பரிவும், பேரன்பும் கொண்ட
(மூவொரு) இறைவன்
ஓர் ஊரில் அனாதை இல்லம் ஒன்று இருந்தது. அதில் நூற்றுக்கும்
மேற்ப்பட்ட குழந்தைகள் தங்கி இருந்தார்கள். அந்த அனாதை இல்லத்தில்
அவ்வப்போது சில அசம்பாவிதங்களும் நடந்துகொண்டு வந்தன. அதற்கெல்லாம்
அந்த அனாதை இல்லத்தில் இருந்த குறிப்பிட்ட ஓர் இளைஞன் மட்டும்தான்
காரணமாக இருப்பான் என்று அனாதை இல்லத்திற்குப் பொறுப்பாக இருந்த
அதிகாரி நினைத்து வந்தார். அதனால் அந்த இளைஞனை எப்படியாவது
கையும் மெய்யுமாக பிடித்து வெளியே அனுப்ப வேண்டும் என அவர் எண்ணிக்கொண்டிருந்தார்.
ஒருநாள் அந்த அதிகாரி இல்லத்தில் இருந்த பால்கனியிலிருந்து
கீழே நடப்பவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது
குறிப்பட்ட அந்த இளைஞன் யாருமே செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்ட
பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தான். இதுதான் அவனைப் பிடிப்பதற்கு
சரியான தருணம் என்று சொல்லி அவனையே அவர் உற்றுப்
பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞன் தன்னுடைய
கையில் வைத்திருந்த ஏதோ ஓர் அட்டையை அருகே இருந்த மரத்தில்
தொங்கவைத்து விட்டுத் திரும்பிவிட்டான்.
அவனையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த அந்த அதிகாரி அவனுக்குப்
பின்னாலே சென்று, அவன் மரத்தில் தொங்கப்போட்டிருந்த அட்டையை எடுத்துப்
பார்த்தார். அந்த அட்டையை எடுத்துப் பார்ப்பதற்கு முன்பாக அந்த
இளைஞன் அட்டையில் ஏதாவது தேவை இல்லாமல் எழுதியிருப்பான் என்றுதான்
அவர் நினைத்திருந்தார். ஆனால் அவர் அட்டையை எடுத்துப் பார்த்தபோது
அவருடைய எண்ணமெல்லாம் மாறிப்போனது. ஏனென்றால் அதில் இந்த அட்டையைப்
பார்க்கின்ற யாவரையும் நான் உண்மையாக அன்பு செய்கிறேன் (To
whoever finds, I Love you) என்று எழுதியிருந்தது. இந்த வசனத்தைப்
படித்தபிறகு அவன் அந்த இளைஞனைக் குறித்த எண்ணத்தை
மாற்றிக்கொண்டார்.
அந்த இளைஞன் யாவரையும் நான் அன்பு செய்கிறேன் என்று எழுதியது
போன்றுதான் மூவொரு இறைவனும் நம்மை முழுமையாக அன்புசெய்வதாக இறைவார்த்தையின்
வழியாக, ஒவ்வொரு நிகழ்வின் வழியாக நமக்கு எடுத்துரைக்கின்றார்.
மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இன்று
நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் அனைத்தும் இரக்கமும் பரிவும் பேரன்பும்
கொண்ட (மூவொரு) இறைவன் என்றதொரு சிந்தனையை வழங்குகின்றன. நாம்
அதனைக் குறித்து சற்று விரிவாகச் சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
அதற்கு முன்பாக மூவொரு இறைவனைக் குறித்து ஒருசிலவற்றை
சிந்தித்துப் பார்ப்போம். கிறித்தவ இறையியலானது கடவுள், இறைத்தன்மையில்
ஒருவராகவும், ஆள்த்தன்மையில் தந்தை, மகன், தூய ஆவி என மூவராகவும்
இருக்கிறார். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் (Trinity) அல்லது
அதிபுனித திரித்துவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று இறை
ஆட்களில் தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள்.
இருப்பினும் தந்தை, மகனிடமிருந்தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்;
மகன், தந்தையிடமிருந்தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்;
தூய ஆவி, தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் வேறுபட்டவர். எனவே,
இவர்கள் ஒரே கடவுளின் மூன்று ஆட்கள்; மூவரும் மூன்று கடவுள்கள்
அல்லர். எந்தவித வேறுபாடும் இன்றி, இந்த மூவருக்கும் ஒரே அன்புறவு,
ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே இறைத்தன்மை இருப்பதால்
மூவரும் ஒரே கடவுளே என எடுத்துகின்றது. எனவே நாம் இதைக்
குறித்து முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முற்படாமல் மறையுண்மைகள்
என ஏற்றுக்கொள்வோம்.
மூவொரு கடவுள் எப்படிப்பட்டவர் என அறிந்த நாம் இன்றைய இறைவார்த்தையின்
வழியாக நமக்கு வழங்கப்படும் செய்தியினையும் சிந்தித்துப்
பார்ப்போம். விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
முதல்வாசகத்தில் ஆண்டவர் இரக்கமும் பரிவும், உள்ள இறைவன்; சினம்
கொள்ளத் தாமதிப்பவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்
என்று வாசிக்கின்றோம். இக்கருத்தை அதாவது ஆண்டவர் எவ்வளவு பேரன்பு
மிக்கவராக இருக்கிறார் என்பதை நற்செய்தி வாசகமானது இன்னும்
தெளிவாக விளக்கின்றது. தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும்
எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும்
கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார் என்று அங்கே நாம்
வாசிக்கின்றோம். ஆம், உலக மீட்புக்காக தன்னுடைய மகனையே
கையளிக்கின்ற அளவுவுக்கு கடவுளது அன்பு மேலானது, உயர்வானது.
கடவுளின் இத்தகைய அன்பிற்கு பாத்திரமாக இருக்க நாம் என்ன
செய்யவேண்டும் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இறைவனின் அன்பிற்குப் பாத்திரமாக இருக்க நாம் செய்யவேண்டிய
முதல் காரியம் அவருடைய அன்பு மகனும், நம் ஆண்டவருமான இயேசுவின்
மீது நம்பிக்கை கொள்வதாகும். நம்பிக்கை என்று சொல்கிறபோது
எத்தகைய நம்பிக்கை என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
வெறுமனே பெயரளவில் இருக்கும் நம்பிக்கை நம்மை நிலைவாழ்வுக்குக்
கொண்டு செல்லாது. மாறாக நற்செயலுடன் கூட நம்பிக்கையே நம்மை
நிலைவாழ்வுக்கு இட்டுச் செல்லும். இப்படிப்பட்ட நம்பிக்கைக்கு
எடுத்துகாட்டாக இருப்பவர்தான் நம் முதுபெரும் தந்தை ஆபிரகாம்.
யாக்கோபு எழுதிய திருமுகம் 2:23 ல், ஆபிரகாம் ஆண்டவர் மீது நம்பிக்கை
கொண்டார், அதனை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் என்னும்
மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பர்
என்னும் பெயர் பெற்றார் என்று வாசிக்கின்றோம் . ஆம், ஆபிரகாம்
ஆண்டவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார். அதனாலேயே
அவர் கடவுளுக்கு உகந்தவர் ஆனார். நாமும் ஆண்டவரிடத்தில் ஆபிரகாம்
கொண்டிருந்த நம்பிக்கையைக் கொண்டு வாழும்போது மூவொரு கடவுள் தரும்
நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
அடுத்ததாக நாம் செய்யவேண்டிய காரியம்; நாம் நம்முடைய நடத்தையை
சீர்படுத்துவதாகும். அதாவது பழைய பாவ வாழ்விலிருந்து மனம்மாறி
புதிய வாழ்வு, கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழவேண்டும். தூய பவுல்
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவார், சகோதர சகோதரிகளே, இறுதியாக
நான் உங்களுக்குச் சொல்வதாவது: மகிழ்ச்சியாய் இருங்கள்; உங்கள்
நடத்தையைச் சீர்படுத்துங்கள் என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும்
மூவொரு கடவுளின் அன்பிற்கு உகந்தவர்களாக இருக்க நம்முடைய நடத்தையை
வாழ்வை - சீர்படுத்தவேண்டும்.
முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். ஒருமுறை அவன் தூர
தொலைவில் இருக்கின்ற தன்னுடைய நாட்டு மக்கள் எப்படி இருக்கிறார்கள்
என்பதைத் தெரிந்துகொள்வதாக கால்நடையாகவே சுற்றுப் பயணம்
மேற்கொண்டான். அப்போது குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் அவனுடைய
கால்களைப் பதம்பார்த்தன. அவன் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்ததும்,
அரண்மனைக்கு வந்து மந்திரியிடம் ஆணையிட்டான். மந்திரியாரே! நம்முடைய
நாட்டில் இருக்கும் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கின்றன.
ஆகையால் என்னுடைய கால்கள் காயமடையாதவாறு, சாலைகள் அனைத்திலும்
மிருகத் தோல்களை விரியுங்கள் என்றான். இதைக் கேட்ட மந்திரிக்கு
தூக்கிவாரிப் போட்டது. எல்லாச் சாலைகளிலும் மிருகத் தோல்களைப்
பரப்பவேண்டுமென்றால் நிறைய மிருகங்களைக் கொல்லவேண்டுமே என்று
தீவிரமாக யோசித்தான்.
அப்போது அரசபையில் இருந்த முதியவர் ஒருவர், அரசே! நம்முடைய
நாட்டுச் சாலைகள் அனைத்திலும் மிருகத் தோல்களைப் பரப்புவதற்குப்
பதிலாக உங்களுக்கு தோலினால் ஒரு செருப்புத் தைத்துப்
போட்டுக்கொள்ளலாமே என்று ஆலோசனை கூறினார். அரசனுக்கும் அது சரியெனப்
பட்டது.
கதையில் வரும் அரசனைப் போன்று நாமும் நம்மை, நம்முடைய வாழ்வைச்
சீர்படுத்தாமல், அடுத்தவரை, இந்த உலகினை சீர்படுத்த
நினைக்கிறோம். உலகைச் சீர்படுத்துவதற்குப் பதில் நம்மைச் சீர்படுத்துவது
மிகவும் பொருத்தமானதாகும்.
நிறைவாக மூவொரு கடவுளின் அன்பிற்கு உகந்தவர்களாக வாழ நாம் செய்யவேண்டியது:
அமைதியாக வாழவேண்டும் என்பதுதான். இரண்டாம் வாசகத்தில் பவுலடியார்
அதைதான் குறிப்பிடுகின்றார். இன்றைக்கு நாடுகளுக்கிடையே, ஊர்களுக்கு
இடையே போர்களும், கலவரங்களும் வெடித்து, அமைதியற்ற ஒரு
சூழ்நிலைதான் நிலவிக்கொண்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில்
நாம் அமைதியோடு வாழ்வதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும்
ஒன்றாக இருக்கின்றது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அர்ஜென்டினாவிற்கும், அதன்
அண்டை நாடான சிலிக்கும் இடையே போர் மூழும் சூழல் ஏற்பட்டது. அப்படிப்பட்ட
தருணத்தில் பொனவெந்தூர் என்ற ஆயர் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி
ஏற்படவேண்டும் என்பதற்காக பொது இடங்களிலும், மக்கள் ஒன்று கூடிவரும்
இடங்களிலும் தீவிரமாகப் பேசினார். அவருடைய பேச்சு மக்களுடைய
மனத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஆம், பெரும் போர் ஏற்படும்
சூழலானது அமைதி தவழும் இடமாக மாறிப்போனது.
இப்படி யாருமே நினைத்திராத வகையில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி
ஏற்பட்டத்தால், அதன் நிமித்தமாக இருநாட்டவரும் போர்தொடுக்க
வைத்திருந்த ஆயுதங்கள் அனைத்தையும் உருக்கி இயேசுவின் உருவத்தில்
ஒரு வெண்கலச் சிலை வடித்து அதனை அர்ஜென்டினா மற்றும் சிலி ஆகிய
இரு நாடுகளும் சந்திக்கும் இடமான போனோஸ் ஏர்ஸ் ( Buenos Aires)
என்ற இடத்தில் நிறுவினார்கள். இச்சிலை தரையிலிருந்து 13000 அடி
உயிரத்தில் மிகப் பிரமாண்டமாக இருக்கின்றது. அச்சிலைக்குக்
கீழ் Jesus is our Peace Who made both one என்ற வசனம்
பொறிக்கப்பட்டிருக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் பிரிவினையை அல்ல, அமைதியை ஏற்படுத்தவேண்டும்
என்றதொரு சிந்தனையை இந்த நிகழ்வு நமக்கு வழங்குகின்றது. ஆகையால்
மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் மூவொரு
கடவுளின் பேரன்பை நாம் பெற்றுக்கொள்ள இறைவன்மீது நம்பிக்கை
வைப்போம், நம்முடைய வாழ்வைச் சீர்படுத்துவோம், எல்லாவற்றிற்கும்
மேலாக அமைதியை ஏற்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
தூய ஆவியார் பெருவிழா
I. திருத்தூதர் பணிகள் 2:1-11
II. 1 கொரிந்தியர் 12:3-7,12-13
III. யோவான் 20:19-23
இன்று தாயாம் திருச்சபையானது தூய ஆவியின் பெருவிழாவினைக்
கொண்டாடி மகிழ்கின்றது. தூய ஆவியின் பெருவிழா
திருவருட்சாதனங்களின் பெருவிழா. தூய ஆவியின் பங்கு
திருச்சபையின் வரலாற்றில் மிக முக்கியமானது. திருச்சபையின்
வரலாற்றில் மட்டுமல்ல, உலகத்தின் தொடக்கத்தில் இந்த பூமியானது
வெறுமையற்று இருந்தபோது அதில் உலாவிக் கொண்டிருந்தது தூய
ஆவியின் ஆற்றலே என்று நாம் விவிலியத்தின் முதல் பகுதியில்
வாசிக்க கேட்டிருக்கின்றோம். உலகத்தின் தொடக்கம் தொடக்கமும்
முடிவுமாக இருப்பவர் தூய ஆவியே. பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய
ஏற்பாட்டிலும் சரி மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் நடக்க
காரணமும் தூய ஆவியின் செயல்பாடே. இன்றைய முதல் நற்செய்தியில்
தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்களின் செயல்பாடுகளும் அது
தொடர்பான நிகழ்வுகளும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது
வாசகத்தில் புனித பவுலடியார் இயேசு எவ்வாறு தந்தை இறைவனால்
மாட்சிமைப்படுத்தப்பட்டார் உயர்த்தப் பட்டார் என்பதை
எடுத்துரைக்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு,
பயத்தோடு இருந்த சீடர்களுக்கு தூய ஆவியை அளித்த நிகழ்வானது
கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று வாசகங்களும் ஒன்றுடன் ஒன்று
இணைந்து நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றன.
இயேசு அளித்த தூய ஆவி , அதனைப் பெற்றுக் கொண்ட சீடர்களின் மன
நிலை, தந்தை கடவுள் இயேசுவைமாட்சிமைப்படுத்திய வழிகள் என
அனைத்தையும் நமக்கு நினைவூட்டி நாமும் அதன்படி வாழ அழைப்பு
விடுக்கின்றது இன்றைய வாசகங்கள்.
தூய ஆவி பெருவிழாவை
திருவருட்சாதனங்களின் பெருவிழா என்று கூறுவதற்கு காரணம்:
இயேசு தனது சீடர்களுக்கு தூய ஆவி அளித்த அந்த நிகழ்வினை நமது
சிந்தனைக்கு என்று எடுத்துக் கொள்வோம். அவர் பேசிய ஒரு சில
வார்த்தைகளில் நமது ஏழு திருவருட்சாதனங்களின் மிக முக்கிய
குறிப்புகள் அடங்கியுள்ளன.
ஞானஸ்ஞானம்:
இயேசு வந்து அவர்கள் நடுவில் இருக்கின்றார். பிறந்த குழந்தையை
கிறிஸ்தவ சமூகத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தி, இது
கிறிஸ்தவள் கிறிஸ்தவன் என்று அழைக்கப்பட இருக்கின்றது என்பதன்
அடையாளமாக ஞானஸ்ஞானம் கொடுக்கின்றனர். இயேசுவும் பயந்து
கொண்டிருந்த சீடர்களின் பயத்தை நீக்க கூடியிருந்த அவர்கள்முன்
வந்து நடுவில் நிற்கின்றார். தன்னை அடையாளப்படுத்துகிறார்
2 புதுநன்மை:
தனது கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டுகின்றார். இதன்
மூலமாக தனது உடலாகிய நற்கருணை அவர்களுக்கு
வெளிப்படுத்துகின்றார். அவரது உடலை கைகளை விலாவைக் கண்ட
சீடர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள். இதன்மூலமாக திவ்ய நற்கருணை
திருவருட்சாதனம் அடையாளப்படுத்தப்படுகிறது.
3 உறுதிப்பூசுதல்:
அவர் அவர்கள்மேல் ஊதி தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்
என்கிறார். உறுதிபூசுதல் திருவருட்சாதனத்தின் பொழுது நம்
ஒவ்வொருவரின் நெற்றியின் மீது திருத்தைலம் பூசப்பட்டு தூய
ஆவியைப் பெற்றுக் கொள் என்ற வரிகள் கூறப்பட்டு நாம் தூய
ஆவியால் நிரப்பப்படுகின்றோம். இங்கு இயேசுவின் வார்த்தைகள்
மூலம் இந்த திருவருட்சாதனம் இங்கு அடையாளப் படுத்தப்
படுகின்றது.
4,5 குருத்துவம், திருமணம்:
"தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்"
ஒவ்வொருவருக்கும் ஒரு அழைப்பு. சிலருக்கு திருமண அழைப்பு.
சிலருக்கு குருத்துவ, அழைப்பு, துறவற அழைப்பு. ஒவ்வொருவரும்
அவரவரது அழைப்புக்கேற்ற ஆற்றலை பெறுகின்றனர். முதல் வாசகத்தில்
கூறப்படுவது போல கடவுளுடைய இந்த அழைப்புக்கு ஏற்ற எதிர்நோக்கை
நாம் ஒவ்வொருவரும் பெற்றுள்ளோம். இயேசுவும் தனது சீடர்களை
தந்தை அவரை அனுப்பியது போல அனுப்புகின்றார். இதன் மூலமாக
குருத்துவம் திருமணம் எனும் அருட்சாதனங்கள்
நிறைவேற்றப்படுகின்றன அடையாளப் படுத்தப் படுகின்றன.
6,7 நோயில் பூசுதல், பாவமன்னிப்பு:
நீங்கள் எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோஅவர்களுடைய பாவங்கள்
மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாது இருப்பீர்களோ அவை
மன்னிக்கப்படா என்கின்றார். இதன் மூலமாக பாவமன்னிப்பு, நோயில்
பூசுதல் எனும் திருவருட்சாதனங்கள் அடையாளப் படுத்தப்
படுகின்றன.
ஆக இயேசு தூய ஆவியை சீடர்களுக்கு அளிக்கின்ற இந்த பெரு
விழாவானது, திருவருட்சாதனங்களை தம் சீடர்களுக்கு அளிக்கின்ற
திருவிழாவாகவும் கொண்டாடப்படுகின்றது. இயேசு அளிக்கின்ற இந்த
தூய ஆவியை பெற்றுக்கொண்ட, பெற்றுக் கொள்ளும் நாம் அவர் நமக்கு
விட்டுச் சென்ற அந்த அமைதியையும் பெற்றுக் கொள்வோம்.
முதல் வாசகத்தில் தூய ஆவியை பெற்றுக்கொண்ட திருத்தூதர்கள்
வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர் என்று சொல்வதை விட அவர்கள்
பேசிய மொழியை, பேசிய அந்த இறை வார்த்தைகளை பல்வேறு மொழிகள்
பேசக் கூடிய மக்கள் தத்தம் மொழிகளில் கேட்கின்றனர். இப்பொழுது
நாம் பெரும்பாலும் பிறமொழிகளின் விளக்கத்தை அறிந்து கொள்ள
கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் என்னும் ஒரு செயலியை
பயன்படுத்துகின்றோம். எந்த மொழியாக இருந்தாலும் நமது மொழியில்
அதை கூறி பிற மொழியில் நாம் அதன் விளக்கத்தை பொருளை தெரிந்து
கொள்ள முடியும். 2020 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மொழிபெயர்ப்பு
செயலியாக தூய ஆவி செயல்பட்டிருக்கிறார். இப்பொழுது இந்தத் தூய
ஆவியைப் பெற்றுக்கொள்ள நம்மையே தயாரித்துக் கொண்டிருக்கக்கூடிய
நாம், அயல் மொழியில் பேச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால்
அயலாரின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடியவர்களாக நாம் வாழ
வேண்டும் நாம தூய ஆவியின் வெளிப்பாடு சீடர்களுக்கு இரைச்சல்
போன்ற சத்தத்திலும், நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள்
வடிவத்திலும் வெளிப்பட்டன நமக்கும் இன்று நம்மை சுற்றிலும்
பல்வேறு விதமான இரைச்சல்கள் ஊரடங்கு வேலையின்மை, முறையான
சலுகைகளின்மை, பணத்தட்டுப்பாடு, உணவுத்தட்டுப்பாடு, நீர்
தட்டுப்பாடு என்று பல்வேறு விதமான இரைச்சல்கள் நம்மைச்சுற்றி
எழுந்து கொண்டே இருக்கின்றன. கோடை வெயிலின் தாக்கம், அரசியல்
தலைவர்களின் அராஜக போக்கினால் ஏற்படுகின்ற வருத்தம் என்னும்
தீ, நெருப்பு. ஊரடங்கு உத்தரவினால் தங்களது சொந்த ஊர்களுக்கு
நடைபயணமாக திரும்பி கொண்டிருக்கக்கூடிய வடமாநில மக்கள்,
அவர்கள் படும் துன்பம் இப்படி பல்வேறு நெருப்புப் போன்ற
பிளவுற்ற நாவுகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் நம்மிடம் செயல்பட இருக்கின்ற தூய ஆவி இந்த அனைத்து
பிரச்சனைகளையும் ஒரே நொடியில் தீர்க்குமா என்றால், இல்லை
என்பதுதான் பதில். ஆனால் இத்தனை பிரச்சினைகள் மத்தியிலும் அந்த
தூய ஆவி நம்மை நிறை உள்ளவராக, மனதிற்கு இதம் தரும் ஆவியானவர்
ஆக செயல்படுகின்றார். நமது கனிவான பேச்சு நமது ஆறுதலான பார்வை
நம்மால் முடிந்த சிறு உதவி இவை அனைத்தும் அயல் மொழி பேசும்
மொழிபெயர்ப்பு செயலியாக நம்மையும் இயங்க வைக்கும். இதனால்
கடவுளின் எதிர்நோக்கு அவர் நமக்களித்த உரிமைப் பேறு எவ்வளவு
மாட்சி மிக்கது என்பதையும் அவரது வல்லமை ஒப்புயர்வற்றது
என்பதையும் நாம் அறிந்து கொள்வோம். நமது புற கண்களை உலக மாயை
ஒளியில் இருந்து சற்று விலக்கி, அகக் கண்களை தூய ஆவியினால்
ஒளியூட்டுவோம் அப்பொழுது கிறிஸ்து நம்மில் இருந்து
செயலாற்றுகிறார். திருச்சபையின் ஒரு அங்கமாக நாம்
வாழுகின்றோம், நமது குடும்பம் குட்டி திருச்சபையாக
மாறுகின்றது,. அப்பொழுது இயேசு தந்த அந்த அமைதி நம்மிடம்
நிலைத்து பெருகும். நம்மில் நிலைக்கக்கூடிய அமைதி நம்மை சுற்றி
இருப்பவர்களுக்கும் பரவும். அமைதியை ஆழமாக அனுபவிப்பவர்களாக,
அமைதியை பிறருக்கும் அள்ளி தருபவர்களாக நாமும் மாறுவோம். தூய
ஆவியைப் பெற்றுக் கொள்வோம் தூயவர்களாக செயல்படுவோம். இயேசு
தந்த அமைதி நம்மிடமும் பிறரிடமும் செயல்பட அருள் வேண்டுவோம்.
ஊரடங்கில் இருந்தாலும் உள்ளூர உன்னதரின் அமைதி பெற்று வளமோடும்
நலமோடும் வாழ்வோம். இறை அமைதி உங்களோடும் உங்கள் குடும்பத்தார்
அனைவரோடும் நிலைத்திருக்க இறைவன் அருள் புரிவாராக ஆமென்.
|
|