|
|
06 ஜூன் 2020 |
|
பொதுக்காலம் 9ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
++நற்செய்தித் தொண்டனுக்குரிய பணியை ஆற்று.
திருத்தூதர் பவுல்
திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்
4: 1-8
அன்புக்குரியவரே, கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும்
இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு
முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை
முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி.
வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் இதைச் செய்வதில்
நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு;
மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு. ஒரு காலம் வரும். அப்போது மக்கள்
நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு
கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப்
போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள். உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப்
புனைகதைகளை நாடிச் செல்வார்கள். நீயோ அனைத்திலும் அறிவுத்
தெளிவோடிரு; துன்பத்தை ஏற்றுக்கொள்; நற்செய்தியாளனின் பணியை ஆற்று;
உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய். ஏனெனில், நான் இப்போதே என்னைப்
பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை
முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென
வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி
நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு
மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே
தருவார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 71: 8-9. 14-15ab. 16-17. 22 . (பல்லவி: 15)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! என் வாய் உமது மீட்பை எடுத்துரைக்கும்.
8
என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே; நாளெல்லாம் நான் பேசுவது
உமது பெருமையே.
9
முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்; என் ஆற்றல் குன்றும்
நாளில் என்னைக் கைவிடாதேயும். - பல்லவி
14
நான் என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்; மேலும் மேலும் உம்மைப்
புகழ்ந்து கொண்டிருப்பேன்.
15ab
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும்
எடுத்துரைக்கும். - பல்லவி
16
தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்;
உமக்கே உரிய நீதிமுறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.
17
கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும்
நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். - பல்லவி
22
என் கடவுளே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உமது உண்மையையும்
புகழ்வேன்; இஸ்ரயேலின் தூயரே, யாழிசைத்து உம்மைப் புகழ்ந்து
பாடுவேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில்
விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++மற்ற எல்லாரையும் விட இந்த ஏழைக் கைம்பெண் மிகுதியாகப்
போட்டார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12:
38-44
அக்காலத்தில் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது,
"மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள்
தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு
வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள். தொழுகைக்கூடங்களில்
முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும்
பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்
கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள்.
கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே" என்று
கூறினார். இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு
மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்றுநோக்கிக்
கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு
வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு
காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து,
"இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற
எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த
மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை
இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக
வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்" என்று அவர்களிடம்
கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2 திமொத்தேயு 4: 1-8
வாய்ப்புக் கிடைத்தாலும்
கிடைக்காவிட்டாலும் இறைவார்த்தையை அறிவி
நிகழ்வு
"மூழ்காத கப்பல்" என வர்ணிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் 1912 ஆம்
ஆண்டு, கடலில் சென்றுகொண்டிருந்தபொழுது, எதிர்பாராத விதமாக பனிப்பாறையில்
மோதி, அதில் பயணம் செய்த ஒருசிலரைத் தவிர, பலர் கடலில் மூழ்கி
இறந்து போனார்கள். அப்படிக் கடலில் மூழ்கி இறந்துபோனவர்களில்
ஒருவர் மறைப்பணியாளரான ஜான் ஹார்பர் (1872-1912).
ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்தவரான இவர் பதினான்கு வயதில்
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, பதினேழு வயதிலிருந்தே கடவுளின்
வார்த்தையை மிகுந்த வல்லமையோடு அறிவித்து வந்தார். இப்படி இருக்கையில்தான்
இவர் 1912 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கடலில் சென்ற டைட்டானிக் கப்பலில்
பயணம் செய்தார். எதிர்பாராத விதமாகக் கப்பல் பனிப்பாறையில்
மோதி உடைந்துபோனபோது, பலர் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். ஒருசிலர்
உயிர்காக்கும் படகுகளில் ஏறித் தங்களுடைய உயிரைக்
காத்துக்கொள்ள முயன்றார்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜான் ஹார்பர் உயிர்காக்கும் படகுகளில்
இடம் கிடைக்காமல், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது
இவருக்கு அருகில், இவரோடு கப்பலில் பயணம் செய்த சக பயணி ஒருவர்,
தன்னிடம் இருந்த ஆற்றலை எல்லாம் திரட்டிக்கொண்டு
நீந்திக்கொண்டிருந்தார். அவரிடம் ஜான் ஹார்பர், "சகோதரா! நீங்கள்
மீட்புப் பெற்றுவிட்டீர்களா?" என்று கேட்ட, அவர், "இல்லை" என்று
சொன்னதும், "ஆண்டவராகிய இயேசுவின்மேல் நம்பிக்கை கொள். அப்பொழுது
நீங்கள் மீட்புப் பெறுவீர்கள்" என்றார். இப்படிச்
சொல்லிவிட்டு, ஜான் ஹார்பர் கடலில் மூழ்கிப்போனார். அவரோடு
பேசிய அந்தப் பயணியோ எப்படியோ நீந்திச் சென்று கரையை அடைந்தார்.
இது நடந்து ஓரிரு ஆண்டுகள் கழித்து, ஜான் ஹார்பரிடமிருந்து கடவுளின்
வார்த்தையைப் பெற்றுக்கொண்ட அந்த மனிதர், ஆண்டவர் இயேசுவை முழுவதும்
நம்பினார். மட்டுமல்லாமல், ஒரு கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
கூட்டத்தில் பேசும்பொழுது அவர், "ஜான் ஹார்பரால் மனமாற்றம் அடைந்த
கடைசி மனிதர் நானாகத்தான் இருக்கும்" என்று சான்று பகர்ந்தார்.
ஆம், ஜான் ஹார்பர் என்ற அந்த மறைப்பணியாளர் தான் சாவதற்கு
முன்புகூட கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்து, ஒருவரைக் கடவுளுக்குள்
கொண்டு வந்து சேர்த்தார். நாமும்கூட நமக்கு வாய்ப்புக்
கிடைக்கிறபொழுதெல்லாம் கடவுளின் வார்த்தையை அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
முதல் வாசகத்தில், பவுல் திமொத்தேயுவிடம், கடவுளின் வார்த்தையை
அறிவிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகின்றார். அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்திப் பணியாளனின் கடமையை ஆற்று
பவுலால் எபேசு நகரில் ஆயராக நியமிக்கப்பட்டவர் திமொத்தேயு. இவரிடம்
தான் எழுதிய திருமுகத்தின் வழியாக பல்வேறு அறிவுரைகளைக்
கூறுகின்றார் பவுல். அதில் முக்கியமான ஓர் அறிவுரைதான், நற்செய்திப்
பணியாளனின் கடமைச் செய் அல்லது வாய்ப்புக் கிடைத்தாலும்
கிடைக்காவிட்டாலும் இறைவார்த்தையை அறிவி என்பதாகும். பவுல் ஏன்
திமொத்தேயுவிடம் இப்படியோர் அறிவுரையைக் கூறினார் என்ற கேள்வி
எழலாம். இதற்கு பதில், ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு
முன்பு தன் சீடர்களிடம் சொன்ன, "நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம்
நற்செய்தியைப் பறைசாற்றுகள்" (மாற் 16: 15) என்ற கட்டளையில் இருக்கின்றது.
ஆம், இயேசு படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைக் பறைசாற்றுங்கள் என்று
தன் சீடர்களிடம் அன்புக் கட்டளை கொடுத்துள்ளதால், பவுல்
திமொத்தேயுவிடம், வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்
இறைவார்த்தையை அறிவித்து, நற்செய்திப் பணியாளனுடைய கடமைச் செய்
என்கின்றார்.
நற்செய்திப் பணியாளருக்குக் கிடைக்கும் கைம்மாறு
பவுல், திமொத்தேயுவிடம் நற்செய்திப் பணியாளரின் கடமையை ஆற்று
என்று சொல்லிவிட்டு, தான் எப்படி நற்செய்திப் பணியாற்றினேன் என்பதையும்,
அதில் வந்த துன்பங்களை எப்படி எதிர்கொண்டேன் என்பதையும் எடுத்துக்
கூறுகின்றார்.
பவுல் தன்னுடைய நற்செய்திப் பணியை ஒரு போராட்டத்திற்கு ஒப்பிடுகின்றார்.
"நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை
முடித்துவிட்டேன்... இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய
வாழ்வுக்கான வெற்றி வாகைய" என்று பவுல் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள்
நமக்கு அதைத்தான் நினைவுபடுத்துகின்றன. இவ்வாறு பவுல் தன்னுடைய
வாழ்க்கையே திமொத்தேயுவுக்கு எடுத்துக்காட்டாகத் தருகின்றார்.
ஆம். நாம் ஒவ்வொருவரும் கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கவேண்டும்.
இதுதான் இயேசுவும், இன்றைய முதல்வாசகத்தில் பவுலும் நமக்குத்
தருகின்ற அழைப்பாக இருக்கின்றது. இந்த அழைப்பினை உணர்ந்து நாம்
கடவுளின் வார்த்தையை அறிவிக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை
நினைவுகூருங்கள்" (எபி 13: 7) என்பார் எபிரேயர் திருமுகத்தின்
ஆசிரியர். ஆகையால், நாம் கடவுளின் வார்த்தையை நமக்கு எடுத்துச்
சொன்ன தலைவர்களை நினைவுகூருவோம்; அவர்களைப் போன்று நாமும்
வாய்ப்புக் கிடைக்கின்றபொழுதெல்லாம் கடவுளின் வார்த்தையை எடுத்துரைப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 12: 38-44
முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு
உரியவர்
நிகழ்வு
அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் ஒரு ஞாயிறுத்
திருப்பலியின்பொழுது, மறையுரையாற்றிக் கொண்டிருந்த பங்குத்தந்தை,
தன்னுடைய மறையுரையை முடிக்கும்முன்பாக இவ்வாறு சொன்னார்:
"அன்பார்ந்த மக்களே! நம்முடைய பங்கைச் சார்ந்த ஆரோக்கியசாமியை
உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ஒரு பரம ஏழை. அவர் தன்னுடைய
வீட்டிற்கு முன்பாக பத்துக்கும் மேற்பட்ட கோழிகளை
வைத்திருந்தார். நேற்று இரவு ஒருவர், அவர் வைத்திருந்த கோழிகளை
எல்லாம் திருடிச் சென்றுவிட்டார். அந்த மனிதர் யார் என்று எனக்குத்
தெரியும். இருந்தாலும், வெளியே சொல்ல எனக்கு விருப்பமில்லை; ஆனால்,
அப்படிப்பட்ட தாழ்வு மனப்பான்மை உடைய ஒருவர் கடவுளுக்குக்
காணிக்கை செலுத்தும்பொழுது குறைவாகத்தான் செலுத்துவார்."
இப்படிப் சொல்லி மறையுரையை முடித்த பின்பு, வழக்கத்திற்கு மாறாகப்
பங்குத்தந்தையே காணிக்கை எடுக்கச் சென்றார். "நாம் காணிக்கை
குறைவாகப் போட்டால், பங்குத்தந்தை நம்மைத்தான் சந்தேகப்படுவார்"
என்ற அச்சத்தில் பங்குமக்கள் அனைவரும் அன்றைய நாளில் தாராளமாகக்
காணிக்கை செலுத்தினார்கள். திருப்பலி முடிந்தபின்பு பங்குப் பேரவையினர்
காணிக்கையை எண்ணி அவரிடம் கொடுத்தபொழுது, அந்தப் பங்கில் அதுவரைக்கும்
அப்படியொரு காணிக்கை வந்ததில்லை என்பது பங்குத்தந்தைக்குத்
தெரியவந்தது. அப்பொழுது பங்குதந்தை பங்குப் பேரவையினரைப்
பார்த்துச் சொன்னார்: "இந்த மக்கள் பயத்தில்தான் இவ்வளவு
காணிக்கை செலுத்தியிருக்கின்றார்கள். இவர்கள் மட்டும் மனமுவந்து,
முகமலர்ச்சியோடு இப்படிக் காணிக்கை செலுத்தினால் எவ்வளவு நன்றாக
இருக்கும்."
ஆம், நாம் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துகின்றபொழுது, கடமைக்காகவோ,
அச்சத்துடனோ அல்ல, முகமலர்ச்சியோடு செலுத்தவேண்டும். அதைத்தான்
இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தியில், ஆண்டவர்
இயேசு முகமலர்ச்சியோடும் மனமுவந்தும் காணிக்கை செலுத்திய ஏழை
கைம்பெண்ணைப் பாராட்டுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு,
அந்த ஏழைக் கைம்பெண்ணைப் பாராட்டுகின்ற அளவுக்கு அவர் என்ன
செய்தார் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்த இயேசு
இன்றைய நற்செய்தி வாசகமானது, இரண்டு பகுதிகளைக்
கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு பகுதிகளுக்கும் நெருங்கிய
தொடர்பு இருக்கின்றது. நற்செய்தியின் முதல்பகுதியில், ஆண்டவர்
இயேசு மறைநூல் அறிஞர்களைச் சாடுவதைக் குறித்து வாசிக்கின்றோம்.
மறைநூல் அறிஞர்கள், கடவுளின் வார்த்தையை எந்தவொரு
பிரதிபலனையும் எதிர்பாராமல் மக்களுக்கு எடுத்துச்
சொல்லியிருக்கவேண்டும்; ஆனால், அவர்கள் எல்லாவற்றையும் மக்கள்
தங்களைப் பாராட்டவேண்டும், புகழவேண்டும்; வணக்கம்
செலுத்தவேண்டும் என்றே செய்தார்கள். இதைவிடக் கொடியதொரு
செயலையும் அவர்கள் செய்தார்கள். அது என்னவெனில், கைம்பெண்களை
ஒடுக்கி, அவர்களுடைய வீடுகளைப் பிடுங்கிக் கொண்டது. இயேசுவின்
காலத்தில் கைம்பெண்கள் என்றால், ஆதரவற்றவர்கள் என்ற
பட்டியலில்தான் வந்தார்கள். அதுவும் அவர்களுக்கு பிள்ளைகள்
இல்லையென்றால், அவர்களுடைய நிலைமை இன்னும் திட்டாட்டம்தான்.
இப்படிப்பட்ட கைம்பெண்களின் வீடுகளை மறைநூல் அறிஞர்கள்
பிடுங்கிக்கொண்டதால்தான், இயேசு அவர்களைக் கடுமையாகச்
சாடுகின்றார். மட்டுமல்லாமல், மக்கள் அவர்களிடம் கவனமாக
இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றார்.
இப்படி, மறைநூல் அறிஞர்களுக்கு எதிரான தன்னுடைய கண்டனக்
குரலைப் பதிவுசெய்த பின்னே இயேசு, எருசலேம் திருக்கோயிலில்
இருந்த காணிக்கை பெட்டிக்கு எதிராகப் போய் அமர்கின்றார்.
ஏழைக் கைம்பெண்ணைப் பாராட்டிய இயேசு
எருசலேம் திருக்கோயிலில், கோயில் வரிசெலுத்துவதற்கு என ஏழு
பெட்டிகளும், காணிக்கை செலுத்துவதற்கு என ஆறு பெட்டிகளும்
இருந்தன. பெண்கள் பகுதியில் இருந்த காணிக்கைப் பெட்டிகளுக்கு
எதிராகத்தான் இயேசு அமர்ந்துகொண்டு, அவற்றில் காணிக்கை
செலுத்துவோரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். செல்வந்தர்கள்
மிகுதியாக அதில் செலுத்தியபொழுது, ஏழைக் கைம்பெண்ணோ தன்னுடைய
பற்றாக்குறையிலும் அனைத்தையும் காணிக்கையாக செலுத்துகின்றார்.
அதைப் பார்த்துவிட்டுத்தான் இயேசு தன்னுடைய சீடர்களை அழைத்து,
அவருடைய செயலைப் பாராட்டுகின்றார்.
இயேசு அந்த ஏழைக் கைம்பெண்ணைப் பாராட்டுவதற்கு இரண்டு
முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, மேலே பார்த்த
மறைநூல் அறிஞர்களால் ஒடுக்கப்பட்டு, வறியநிலைக்கு ஆளானாலும்,
அந்தக் கைம்பெண், "இனி எல்லாவற்றையும் கடவுள்
பார்த்துக்கொள்வார்" என்ற நம்பிக்கையோடு அவருக்குக்
காணிக்கையாக செலுத்தியது. இரண்டாவதாக, அந்தக் கைம்பெண்
செல்வந்தர்களைப் போன்று மற்றவர் பாராட்டவேண்டும் என்பதற்காகக்
காணிக்கை செலுத்தவில்லை. மாறாக, எந்தவொரு பிரதிபலனையும்
எதிர்பாராமல் காணிக்கை செலுத்தியது. இந்தக் காரணங்களுக்காகவே
இயேசு கைம்பெண்ணைப் பாராட்டுகின்றார்.
நாம் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துகின்றபொழுது எப்படிச்
செலுத்துகின்றோம்? மற்றவருடைய பாராட்டுக்காகச்
செலுத்துகின்றோமா அல்லது எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல்,
முகமலர்ச்சியோடு காணிக்கை செலுத்துகின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்"
(2கொரி 9: 7) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கடவுளுக்குக்
காணிக்கை செலுத்துகின்றபொழுது, பிறர் நம்மைப் பாராட்டவேண்டும்,
புகழவேண்டும் என்பதற்காக அல்ல, கடவுள் நமக்குச் செய்த நன்மைகளை
என்னை நன்றிப்பெருக்கோடும் முகமலர்ச்சியோடும் செலுத்துவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|