Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     05 ஜூன் 2020  

பொதுக்காலம் 9ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ++கிறிஸ்துவில் வாழவிரும்புவோர் இன்னலுறுவர்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 10-17


அன்புக்குரியவரே, என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு, மன உறுதி ஆகியவற்றைப் பின்பற்றி வந்திருக்கிறாய். அந்தியோக்கியாவிலும், இக்கோனியாவிலும், லிஸ்திராவிலும் எனக்கு நேரிட்ட இன்னல்களும் துன்பங்களும் உனக்குத் தெரியும். இத்தகைய இன்னல்களைப் பொறுத்துக் கொண்டேன். இவை அனைத்திலிருந்தும் ஆண்டவர் என்னை விடுவித்தார். கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். ஆனால் தீயோர்களும் எத்தர்களும் மேலும் மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள். நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 119: 157-160. 161,165. 166,168 . (பல்லவி: 165a) Mp3
=================================================================================

பல்லவி: உம் திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு நல்வாழ்வு உண்டு.
157
என்னைக் கொடுமைப்படுத்துவோரும் பகைப்போரும் பலர்; ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு நான் தவறுவதில்லை.
160
உண்மையே உமது வார்த்தையின் உட்பொருள்; நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம் என்றும் நிலைத்துள்ளன. - பல்லவி

161
தலைவர்கள் என்னைக் காரணமின்றிக் கொடுமைப்படுத்துகின்றனர்; ஆனால், உம் வாக்கை முன்னிட்டு என் உள்ளம் நடுங்குகின்றது.
165
உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை. - பல்லவி

166
ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக நான் காத்திருக்கின்றேன்; உம் கட்டளைகளைச் செயல்படுத்துகின்றேன்.
168
உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப் பிடிக்கின்றேன்; ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை. - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++மெசியா தாவீதின் மகன்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-37


அக்காலத்தில் இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, "மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? தூய ஆவியின் தூண்டுதலால், ஆண்டவர் என் தலைவரிடம், "நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று உரைத்தார்" எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?" என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
2 திமொத்தேயு 3: 10-17

நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்துநில்

நிகழ்வு

அமெரிக்காவில் பிறந்து, இரஷ்ய மண்ணில் நற்செய்திப் பணி செய்தவர் அருள்பணியாளர் வால்டர் ஜோசப் சிஸ்ஜேக் (Walter Joseph Ciszek 1904-1984). இயேசு சபை அருள்பணியாளரான இவர் இரஷ்யவிற்குக் கடவுளின் வார்த்தையைக் கொண்டு சென்றவர்களில் மிகவும் முக்கியமானவர்.

இவர் இரஷ்யாவில் கடவுளின் வார்த்தையை அறிவித்ததற்காக அங்கிருந்த அரசாங்கம் இவரைப் பிடித்துச் சிறையில் அடைத்தது. ஏறக்குறைய இருபத்து மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த இவரிடம், "நீ கிறிஸ்துவை மறுதலித்துவிடு; உன்னை விடுதலைசெய்து விடுகின்றோம்" என்று இரஷ்ய அரசாங்கம் பலமுறை கேட்டுக்கொண்டபோதும், இவர் தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1963 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய சொந்த நாட்டிற்கு வந்து, அங்கு கடவுளின் வார்த்தையை மிகவும் துணிவோடு அறிவித்து வந்தார்.

இவர் அமெரிக்காவிற்குத் திரும்பிய பிறகு "He Leadeth Me" என்ற புத்தகத்தினை எழுதினார். இந்தப் புத்தகத்தில் இவர் இரஷ்யாவில் கடவுளின் வார்த்தையைத் தான் அறிவித்தபொழுது சந்தித்த சவால்களையும், சவால்களுக்கு நடுவில், ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்ததையும் எடுத்துக்கூறுகின்றார். இந்தப் புத்தகத்தை நாம் வாசிக்கின்றபொழுது, புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையில் தளராமல் இருப்பதற்கான ஆற்றலையும் பெறுவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. இவருக்கு 1990 ஆம் ஆண்டு இறையடியார் பட்டம் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சவால்கள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றிற்கு நடுவிலும் கிறிஸ்து இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையில் நிலைத்து நின்ற அருள்பணியாளர் வால்டர் ஜோசப் சிஸ்ஜேக் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் பவுல் திமொத்தேயுவிடம், "நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்துநில்" என்கின்றார். பவுல் திமொத்தேயுவிடம் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன, இவ்வார்த்தைகளின் வழியாக நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பன குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

தன் தாய் மற்றும் பாட்டியின் வழியாகக் கடவுளின் வார்த்தையைக் கற்ற திமொத்தேயு

லிஸ்திராவைச் சார்ந்தவர் திமொத்தேயு (திப 16: 1-2) இவர் பவுலின் உடன் பணியாளராக இருந்து பணியாற்றியதால், பவுல் இவரை எபேசு நகரின் ஆயராக நியமித்தார். திமொத்தேயு எபேசு நகரில் ஆயராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபொழுதுதான் தப்பறைக் கொள்கைகளைப் பரப்பி வந்தவர்கள் இவருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தார்கள். அப்பொழுதுதான் பவுல் இவரிடம், "நீ கற்றறிந்தவற்றில் நிலைத்து நில்" என்கின்றார்.

திமொத்தேயு கடவுளின் வார்த்தையைத் தன்னுடைய பாட்டி லோயிடமிருந்தும், தன்னுடைய தாய் யூனிக்கியிடமிருந்தும் கற்றறிந்தார் (2திமொ 1:5). இவர்கள் இருவரும் இறைவன்மீது ஆழமான நம்பிக்கைகொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பின்பு பவுல் இவரிடம் இறைவார்த்தை அனைத்தும் இயேசுவில் நிறைவேறுகின்றன; இயேசுதான் வாக்களிக்கப்பட்ட மெசியா என்பதை எடுத்துரைத்திருந்தார். இப்படிக் கற்று, அறிந்த இறைவார்த்தையில் உறுதியாக இருக்கவேண்டும் என்றுதான் பவுல் திமொத்தேயுவிடம் அறிவுறுத்துகின்றார்.

கற்றறிந்தவற்றில் உறுதியாக இருக்க திமொத்தேயுவிடம் பவுல் அறிவுறுத்தல்

பவுல் திமொத்தேயுவிடம் சொல்வது போன்று கற்றறிந்தவற்றில் உறுதியாக நிலைத்து என்பது அவ்வளவு எளிதான செயலா? என்ற கேள்வி நமக்கு எழலாம். கற்றறிந்தவற்றில் உறுதியாக நிலைத்து நிற்பது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. அதற்காக ஒருவர் கொடுக்கக்கூடிய விலை அதிகம். திமொத்தேயுக்கு இப்படி அறிவுறுத்தும் பவுல்கூட தான் கற்றறிந்தவற்றில் உறுதியாக இருந்ததால், பல்வேறு இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்தார். இதனை இன்றைய முதல்வாசகத்தின் முதற்பகுதியில் வாசிக்கலாம். ஆனாலும், துன்பங்களும் இன்னல்களும் வருகின்றனவே எதற்காக நம்முடைய நம்பிக்கையிலிருந்து விலகிவிடக் கூடாது. இதை ஒவ்வொருவரும் நம்முடைய மனத்தில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசுகூட, "இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் (மாற் 13:13) என்கின்றார். ஆகையால், நாம் கற்றறிந்தவற்றில் மன உறுதியுடன் நிலைத்துநிற்க முயற்சி செய்து, இயேசுவின் உண்மையான சீடராவோம்.

சிந்தனை

"நீங்கள் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள்" (எபே 6:10), ஆகையால், நாம் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெற்றவர்களாய், நம்முடைய நம்பிக்கையில், நாம் கற்றறிந்த இறைவார்த்தையில் மிக உறுதியாக இருந்து, ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 12: 35-37

இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்த மக்கள்

நிகழ்வு

அருள்பொழிவு செய்யப்பட்டுச் சிலநாள்களே ஆன அருள்பணியாளர் ஒருவர், வயதில் மூத்த அருள்பணியாளர் ஒருவரிடம், மறையுரை ஆற்றுவது தொடர்பாக ஒருசில விளக்கங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது மூத்த அருள்பணியாளர் அவரிடம், "தம்பி! மறையுரை ஆற்றும்பொழுது ஒருபொழுதும் நீட்டி முழங்கிவிடக்கூடாது; மிகவும் இரத்தினச் சுருக்கமாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் உன்னுடைய மறையுரையை மக்கள் விரும்பிக் கேட்பார்கள். இதை விளக்க ஒரு நிகழ்வைச் சொல்கின்றேன் கேள்" என்று சொல்லிவிட்டு அந்த மூத்த அருள்பணியாளர் இந்த நிகழ்வைச் சொன்னார்.

ஒரு பங்கில் மறைப்பரப்பு ஞாயிறு கொண்டாடப்பட்டது. திருப்பலி நிறைவேற்றிய பங்குத்தந்தை, தன்னுடைய மறையுரையின்பொழுது, உலகமெங்கும் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கு ஒவ்வொருவரும் தாராளாக நிதியுதவி செய்யவேண்டும் என்று உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார். மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு, மறைப்பரப்புப் பணிக்காகத் தாராளமாக நிதியுதவி வழங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டார்கள். நேரம் கடந்தது. மக்கள் தன்னுடைய மறையுரை ஆர்வமாய்க் கேட்பதைப் பார்த்த பங்குத்தந்தை இன்னும் உணர்வுப்பூர்வமாகப் பேசத் தொடங்கினார். இதைப் பார்த்துவிட்டு மக்கள், மறைப்பரப்புப் பணிக்காக இரண்டு மடங்கு நிதியுதவி வழங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டார்கள்

பங்குத்தந்தை இத்தோடு நிறுத்திவிடவில்லை. இன்னும் நீட்டி முழங்கினார். இடையிடையே ஒருசிலர் தூங்கி வழியத் தொடங்கினர். அதைக்கூட கண்டுகொள்ளாமல் பங்குத்தந்தை தொடர்ந்து மறையுரை ஆற்றினார். ஒருவழியாக அவர் தன்னுடைய மறையுரையை முடித்துவிட்டு, மறைப்பரப்புக்கான காணிக்கைகளை அவரே மக்களிடம் வாங்கச் சென்றபொழுது, அவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவெனில், கோயிலில் இருந்த எல்லாரும் தூங்கி வழங்கிகொண்டிருந்தனர். அதைப் பார்த்துவிட்டுப் பங்குத்தந்தை அதிர்ந்து போனார்.

இந்த நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டு, மூத்த அருள்பணியாளர் அந்த இளம் அருள்பணியாளரிடம், "இப்பொழுது புரிகின்றதா! மறையுரை ஆற்றும்பொழுது ஏன் நீட்டி முழங்காமல், இரத்தினச் சுருக்கமாக ஆற்றவேண்டும் என்று" என்றார்.

ஆம், மறையுரையாக இருக்கட்டும், சொற்பொழிவாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும், கேட்பவர்களைக் மனமுவந்து கேட்க வைக்கதாக இருக்கவேண்டும். அந்த இரகசியத்தை மக்கள்முன் பேசுகின்றவர்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பேசியதை மக்கள் மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்று வாசிக்கின்றோம். மக்கள் மனமுவந்து கேட்கும் அளவுக்கு இயேசு அப்படி என்ன பேசினார்... எதைப் பற்றிப் பேசினார் என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தாவீது மகனாய் இருந்தாலும், இயேசு இறைமகனே!

எருசலேமிற்குள் வெற்றிவீரராய் வந்த இயேசு, திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்களை விரட்டியடித்த பின்பு, அதிகாரத்தில் இருந்த பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக வந்து, தங்களுடைய கேள்விகளால் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க முயன்று தோற்றுப் போனார்கள். இதற்குப் பிறகு எவரும் இயேசுவிடம் எதையும் கேட்கத் துணியவில்லை. அப்பொழுதுதான் இயேசு, மறைநூல் அறிஞர்கள், மெசியா தாவீதின் மகன் என்பதைப் பற்றிப் பேசிவந்தைக் குறித்து விளக்கம் அளிக்கத் தொடங்கினார். இதற்காக அவர் திருப்பாடல் 101: 1 இல் இடம்பெறுகின்ற இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப் பேசுகின்றார்.

மனித முறைப்படி இயேசு தாவீதின் மகனாக அவருடைய வழிமரபினராக இருந்தாலும், இயேசு தாவீதுக்கும் ஆண்டவர். அதைத்தான் அவர் மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். இயேசுவின் இப்பேச்சைத்தான் மக்கள் மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இயேசுவை போல எவரும் என்றுமே பேசியதில்லை

இன்றைய நற்செய்தியிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி இயேசுவின் போதனையை மக்கள் மனமுவந்து கேட்டதற்கும், வியந்து கேட்டதற்கும் காரணம் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசுவின் போதனையை மக்கள் மனமுவந்தும் வியந்தும் கேட்டதற்கும் ஒரே காரணம், இயேசுவின் போதனை பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் போதனையைப் போலன்றி அதிகாரம் கொண்ட போதனையாக இருந்தது. இந்த அதிகாரம் இயேசுவுக்குத் தந்தைக் கடவுளிடமிருந்து வந்தது (மத் 28: 17). மட்டுமல்லமால், இயேசு தான் போதித்ததை வாழ்வாக்கியதாலும், வாழ்ந்ததைப் போதித்ததாலும் வந்தது. "வாழ்ந்து சொல்லும் வார்த்தைக்கு வலிமை" என்பதுபோல இயேசு வாழ்ந்ததைப் போதித்தார்; போதித்ததை வாழ்ந்தார். அதனால்தான் "அவரைப் போல எவரும் என்றுமே பேசியதல்லை" (யோவா 7: 46) என்று தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பி வைத்த காவலர்கள் சொல்கின்றார்கள்.

ஆகையால், நம்முடைய போதனை அல்லது பேச்சு வல்லமையுள்ளதாக, எல்லாரும் மனமுவந்து கேட்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்றால், நம்முடைய வாழ்விற்கும் போதனைக்குமான இடைவெளி குறையவேண்டும். அந்த இடைவெளியைக் குறைக்க நாம் முயற்சி செய்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"பேச்சாளர்கள் நல்ல செயலாளர்களாக இருக்கவேண்டும்" என்பார் ஷேக்ஸ்யர். ஆகையால், நாம் நம்முடைய பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து, இயேசுவைப் போன்று வாழ்வே பெரிய போதனையாக இருக்கச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 இயேசு என்னும் மெசியா தாவிதுக்கும் ஆண்டவர்

அது ஒரு மழைக்காலம். இரவு நேரம் வேறு. அத்தகைய வேளையில் ஒரு பெருநகரில் திடிரென்று கொடுங்காற்றுடன் பெய்த மழையினால் மரங்கள் அனைத்தும் மின்சார வயர்களில் சாய்ந்து, அந்நகர் முழுவதும் மின்சாரம் தடைபட்டுப் போனது. மின்சாரம் தடைபட்டு இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் நிலைமை சரிசெய்யப் படாமையால் அந்த நகரில் இருந்த மக்களின் வாழ்வே பெரிதும் திண்டாட்டமாய் போனது. மின்சாரம் இல்லாமல் தொலைக்காட்சி ஓடவில்லை, காற்றாடி ஓடவில்லை, குளிர்சாதப் பெட்டி இயங்கவில்லை, அலைபேசிகள் அனைத்தும் அணைந்து போயின. இப்படி அன்றாட வாழ்க்கையே முடங்கிப்போனது.

இதற்கு மத்தியில் ஒரு வீட்டில் இருந்த மகன் தன்னுடைய தந்தையிடம், "மின்சாரம் இல்லாமல் எல்லாமே முடங்கிப்போய் விட்டதே" என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டான். அப்போது தந்தையானவர் மகனிடம், "மின்சாரம் இல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கை முடங்கிப் போனது உண்மையே. அது போன்றுதான் கடவுள் தன்னுடைய அருளை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டுவிட்டால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.

எவ்வளவு ஆழமான வார்த்தைகள். கடவுளின் அருள் மட்டும் நமக்கு இல்லையென்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது; இயங்க முடியாது என்பதுதான் நிதர்சன உண்மையான இருக்கின்றது. அவர்தான் எல்லாரையும் விடப் பெரியவர்; அவர்தான் எல்லா அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பவர்.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு கோவிலில் கற்பித்துக்கொண்டிருக்கும்போது, மறைநூல் அறிஞர்கள் சொல்லக்கூடிய, "மெசியா தாவிதின் மகன்" என்ற வார்த்தைக்கு விளக்கம் தருகின்றார்.

மெசியா என்னும் மீட்பர் தாவீதின் வழிமரபில் பிறப்பார் என்று இஸ்ரயேல் மக்கள் தொடக்க முதலே நம்பி வந்தார்கள். இதற்கான சான்றுகள் பழைய ஏற்பாட்டின் நிறைய பகுதிகளில் இருக்கின்றன (எசா 9:2-7), புதிய ஏற்பாட்டிலும்கூட மெசியா என்னும் இயேசுவை தாவிதின் மகனே என்று அழைப்பதையும் பார்க்கின்றோம் (மாற் 10:47). இயேசுவின் தலைமுறையில் அட்டவணையில் கூட இயேசு தாவிதின் வழிமரபிலிருந்து தோன்றினார் என்று படிக்கின்றோம் இத்தகைய ஒரு சிந்தனைப் போக்கினை மறைநூல் அறிஞர்கள் தொடக்க முதலே மக்களுக்கு வழங்கி வந்தார்கள்.

இத்தகைய ஒரு நிலையில்தான் இயேசு மக்களிடத்தில், திருப்பாடல் 110: 1 ஐ மேற்கோள் காட்டி, மெசியா தாவிதின் வழிமரபில் தோன்றினாலும், அவர் தாவிதுக்கும் ஆண்டவர் இயேசு என்று எடுத்துக்கூறுகின்றார். ஆகையால், மெசியா தாவிதின் மகனாக இருந்தாலும் அவர் தாவித்துக்கும் ஆண்டவர், தாவீதைவிட பெரியவர் என்ற செய்தியை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அடுத்ததாக, தாவிதின் வழிமரபில் தோன்றக்கூடிய மெசியா ஒரு அரசியல் மெசியாவாக இருப்பார் என்று யூதர்கள் நினைத்தார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவோ, தான் ஒரு அரசியல் மெசியா அல்ல, எல்லா நாட்டினர்மீதும் போர்தொடுத்து அவர்களைத் தனக்கு அடிபணியச் செய்யும் ஓர் அரசரும் அல்ல, மாறாக எல்லா மக்களையும் கடவுளிடம் கொண்டுவரக்கூடிய ஒரு மெசியா என்று எடுத்துரைகின்றார். ஆகையால், இயேசு எப்படிப்பட்ட மெசியா என்பதையும் இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்த நேரத்தில் இந்நற்செய்திப் பகுதி நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருகின்றோம். இயேசு ஒரு சாதாரண மனிதராக இந்த மண்ணுலகத்தில் பிறந்தாலும் அவர் தமதிருத்துவத்தில் இரண்டாம் ஆள், இறைமகன் என்பதை நாம் புரிந்துகொண்டு, அவர்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும். யூதர்கள் ஆண்டவர் இயேசுவை இறைமகனாகவும் மெசியாவாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனாலே அவர்கள் இறைவன் தந்த நிலைவாழ்வையும் ஆசிரையும் இழந்து போனார்கள். நாமும் ஆண்டவர் இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொள்ளாதபோது அவர் தரக்கூடிய ஆசியை இழந்து போவோம் என்பது உறுதி.

அடுத்ததாக, ஆண்டவர் இயேசு மக்களை இறைவனிடம் கொண்டுவரக்கூடிய பணியை மிகச் சிறப்பாகச் செய்தார் என்று பார்த்தோம். நாம் ஒவ்வொருவருமே மக்களை, இறைவனிடம் கூட்டிச் சேர்க்கின்ற பணியை சிறப்பாகச் செய்யவேண்டும். யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் என்று சொல்வார்கள். அது போன்று நாம் பெற்ற இயேசு அனுபவத்தை, இறையனுபவத்தை எல்லா மக்களுக்கும் கொடுக்கவேண்டும், அதுவே உண்மையான சாட்சிய வாழ்வாக இருக்கும் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆகவே, இயேசு என்னும் மெசியா எல்லாருக்கும் மேலானவர் என்பதை உணர்வோம், அவரை போன்று நாமும் மக்களை இறைவனிடம் அழைத்துச் செல்வோம். இறைவனுகுக் உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!