Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     04 ஜூன் 2020  

பொதுக்காலம் 9ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 
++நாம் இயேசுவோடு இறந்தோமானால், அவரோடு வாழ்வோம்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 8-15

அன்பிற்குரியவரே, தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன். பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: "நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்; நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது." இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து. வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவது பயனற்றது; அது கேட்போரின் அழிவுக்கு ஏதுவாகும் எனக் கடவுள் முன்னிலையில் சான்று பகர்ந்திடு. நீ கடவுள் முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்; உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ வெட்கமுற வேண்டியதில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 25: 4-5ab. 8-9. 10,14 . (பல்லவி: 4a) Mp3
=================================================================================

பல்லவி: உம் பாதைகளை ஆண்டவரே, நான் அறியச் செய்தருளும்.
4
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5ab
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். - பல்லவி

8
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி

10
ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
14
ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
திபா 119: 34

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

++நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34

அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்டார். அதற்கு இயேசு, "இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக" என்பது முதன்மையான கட்டளை. "உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை" என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், "நன்று போதகரே, "கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை" என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது" என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மாற்கு 12: 28b-34

அன்பு செலுத்துவது, பலிகளைவிட மேலானது

நிகழ்வு

இளம்பெண் ஒருத்தி இருந்தாள். இவளுடைய குடும்ப மிகவும் வசதியானது; அதனால் இவளுக்கு ஏராளமான தோழிகள் இருந்தார்கள். இவளுடைய பொழுதுபோக்கே தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து, பல இடங்களுக்குச் சென்றுவருவதருதான். ஒருமுறை இவள் தன்னுடைய தோழிகளுடன் காஷ்மிருக்குச் சென்றபொழுது, அங்கு அழகுவேலைப்பாடு நிறைந்த ஒரு சால்வையைக் கண்டாள். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது என்பதாலும், தன்னுடைய தாயின் பிறந்தநாள் பரிசாக அதைத் தரலாம் என்பதாலும், இவள் அதை ஒரு பெரிய விலை கொடுத்து வாங்கிக்கொண்டாள்.

இவளுடைய தாயின் பிறந்தநாள் வந்தபொழுது, இவள் தான் வாங்கிவந்த விலையுயர்ந்த சால்யையின் மேல், "அம்மா! நான் உங்களை மிகவும் அன்புசெய்கின்றேன்" என்பதை ஆங்கிலத்தில் எழுதி, அவரிடம் கொடுத்தாள். அதை அன்போடு வாங்கிக்கொண்ட இவளுடைய அம்மா, "மகளே! உன்னிடத்தில் நான் ஒருசில வார்த்தைகள் பேசலாமா?" என்று கேட்க, இவள், "தாராளமாகப் பேசுங்கள் அம்மா!" என்று சொன்னதும், இவளுடைய அம்மா பேசத் தொடங்கினாள்: "மகளே! என்னுடைய பிறந்தநாள் பரிசாக எனக்கு நீ இந்த விலையுயர்ந்த சால்வையைப் பரிசளித்திருக்கின்றாய்; மிக்க நன்றி. ஆனாலும் நோய்வாய்ப்பட்டிருக்கின்ற எனக்கு இந்தச் சால்வையைவிடவும், உன்னுடைய உடனிருப்பும் அன்பும்தான் தேவை. அவற்றை இனிமேலானது எனக்குத் தருவாயா?"

தன்னுடைய தாய் இவ்வாறு சொன்னதும், அந்த இளம்பெண் தன்னுடைய தவற்றை உணர்ந்து கண்ணீர் சிந்தி, அழத் தொடங்கினாள்.

இந்த நிகழ்வில் வருகின்ற இளம்பெண் தன்னுடைய தாய்க்கு விலையுயர்ந்த சால்வையைப் பரிசாகக் கொடுத்தபொழுது, அவளுடைய தாய், தனக்குச் சால்வையை விடவும் அன்புதான் வேண்டும் என்று கேட்டார். ஆண்டவரும்கூட நம்மிடமிருந்து பலிகளை விடவும் அன்பைத்தான் எதிர்பார்க்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகம், கடவுள் நம்மிடமிருந்து பலிகளை விடவும் அன்பை எதிர்பார்க்கின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவைத் தொடர்ந்து வரும் கேள்விகள்

மாற்கு நற்செய்தி பன்னிரண்டாம் அதிகாரம் முழுவதும், இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஒருவர் மாற்றி ஒருவர் வருவதையும், அவர்களுக்கு இயேசு தக்க பதில் தருவதையும் குறித்து வாசிக்கின்றோம். முதலில் பரிசேயர்கள் அனுப்பி வைத்த ஏரோதியர்கள், சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா என்ற கேள்வியோடு வருவார்கள். பின்னர் சதுசேயர்கள் உயிர்ப்பு பற்றிய கேள்வியோடு வருவார்கள். இன்றைய நற்செய்தியில், மறைநூல் அறிஞர், அனைத்திலும் முதன்மையான கட்டளை? என்ற கேள்வியோடு வருகின்றார். இவருக்கும் இயேசுவுக்கும் நடக்கும் உரையாடல்தான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது.

அன்பு பலியைவிட மேலானது

இயேசுவிடம் வருகின்ற மறைநூல் அறிஞர், ஒரு பரிசேயர் (மத் 22: 34-35) என்கிறார் மத்தேயு நற்செய்தியாளர். இது ஒருபுறமிருக்க, இந்த மறைநூல் அறிஞர் இயேசுவிடம் கேட்ட, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வோம். இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன. ஒன்று, யூதர்களிடம் "அதைச் செய்யவேண்டும்", "இதைச் செய்யக்கூடாது" என்று அறநூறுக்கும் மேற்பட்ட கட்டளைகள் அல்லது சட்டங்கள் இருந்தன. இவற்றில் எது முதன்மையான கட்டளை என்பது தொடர்பான விவாதம் அவர்களிடம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது .இரண்டாவதாக, இயேசு மக்கள் நடுவில் ஒரு போதகராக, இறைவாக்கினராக அறியப்பட்டார். எனவே, முதன்மையான கட்டளை என்று இயேசு என்ன சொல்கின்றார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவும் மறைநூல் அறிஞர் இயேசுவிடம் இக்கேட்கின்றார் என்று புரிந்துகொள்ளலாம்.

அன்பு செலுத்தினால் இறையாட்சிக்கு உட்படுவோம்

மறைநூல் அறிஞர் தன்னிடம் கேட்ட கேள்விக்கு இயேசு இணைச்சட்ட நூல் 6:5, லேவியர் நூல் 19:18 ஆகிய இரண்டு இடங்களில் வருகின்ற இறைச் சொற்றொடர்களை ஒன்றாக இணைத்து, இறையன்பு முதன்மையான கட்டளை, பிறரன்பு இதற்கு இணையான கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை என்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதை ஆமோதிக்கும் மறைநூல் அறிஞர், அன்பு பலிகளை விட மேலானது என்கின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை" என்கின்றார்.

ஆம், நாம் இறையன்பு, பிறரன்பு என்ற இந்த இரண்டு கட்டளைகளையும் கடைப்பிடித்து வாழ்கின்றபொழுது, இறையாட்சிக்கு மிக அருகில் இருக்கின்றோம் என்பதே உண்மை. ஆகையால், நம்முடைய அன்றாட வாழ்வில் கடவுள் தந்திருக்கும் இக்கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து, அவருடைய அன்புக்குரியவர்கள் ஆவோம்.

சிந்தனை

"அன்பு செலுத்துகின்ற... அன்பு செலுத்தப்படுகின்ற யாரும் ஏழையில்லை" என்பார் ஆஸ்கார் வைல்ட் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் ஆண்டவரையும், நமக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வோம்; அன்பு பலியை விட மேலானது என்ற உண்மையை உணர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 2 திமொத்தேயு 2: 8-9

"கடவுளுக்கு முன் ஏற்புடையவனாக இருக்க முயற்சி செய்"

நிகழ்வு

பேரரசர் அக்பருடைய அரசபையில் அரசபைக் கலைஞராக இருந்தவர் "தான்சேனா" என்பவர். இவர் அவ்வப்பொழுது பாடல்கள் பாடி, அக்பரையும் அரசபையோரையும் மகிழ்ச்சிப் படுத்துவார். இப்படியிருக்கையில் ஒருநாள் அக்பர் நகர்வலம் சென்றார். அவர் ஒரு குடிசைக்கு முன்பாகச் சென்றுகொண்டிக்கும்பொழுது ஓர் இனிமையான குரல் அவருடைய காதில் வந்து விழுந்தது. "மிகவும் அற்புதமான குரலாக இருக்கின்றதே...! இது யாருடைய குரல்..?" என்று அக்பர் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது, அது தன்னுடைய அரசபையில் இருக்கும் தான்சேனாவினுடைய குருவின் குரல் என்று. பின்பு அவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து வந்துவிட்டார்.

இது நடந்தது ஓரிரு நாள்கள் கழித்து அக்பர் தான்சேனாவைச் தற்செயலாகப் பார்த்தார். உடனே அவர் தான்சேனாவை அழைத்து, "தான்சேனா! உன்னிடம் நான் ஒரு முக்கியமான செய்தியைப் பற்றிக் கேட்கவேண்டும் என்று இருந்தேன்; இதோ நீயே வந்துவிட்டாய்" என்றார். "என்ன செய்தி; சொல்லுங்கள் அரசே" என்று தான்சேனா பணிந்து நின்றபொழுது, அக்பர் அவரிடம், "தான்சேனா! சில நாள்களுக்கு முன்பாக, நான் நகர்வலம் சென்றிருந்தபொழுது உன்னுடயை குருவின் குரலைக் கேட்டேன். என்ன ஓர் அற்புதமான குரல்! அக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் நான் அப்படியே வியந்துபோனேன். இப்பொழுது நான் உன்னிடத்தில் கேட்க விரும்பியது இதுதான்: "உன்னுடைய குரலை விடவும் உன்னுடைய குருவின் குரல் மிகவும் அற்புதமாக இருக்கின்றதே! அது ஏன்? என்றார்.

தான்சேனா சிறிதும் தாமதியாமல் இவ்வாறு சொன்னார்: "அரசே! நான் உங்களைப் போன்ற மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகப் பாடிக்கொண்டிருக்கின்றேன். அதனால்தான் என்னுடைய குரல் இப்படி இருக்கின்றது; ஆனால் என்னுடைய குரு அப்படியல்ல, அவர் இறைவனை மாட்சிப்படுத்தப் பாடிக்கொண்டிருக்கின்றார். அதனால் அவருடைய குரல் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றது." தான்சேனாவிடமிருந்து இப்படியொரு பதிலைக் கேட்ட அரசர் மிகவும் வியந்துபோனார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற தான்சேனாவினுடைய குரு மனிதர்களை அல்ல, இறைவனை மகிழ்ச்சிப்படுத்தவும் மாட்சிப்படுத்தவும் பாடினார். அதனால்தான் அவரது குரல் அவ்வளவு அருமையாக இருக்கின்றது என்று அரசரால் பாராட்டப்பட்டது. நாமும் எதைச் செய்தாலும் இறைவனை மாட்சிப்படுத்தச் செய்தால் அது சிறப்பாகவும், அதே நேரத்தில் இறைவனுக்குப் பிடித்தமானதாகவும் இருக்கும். இன்றைய முதல் வாசகத்தில் பவுல் திமொத்தேயுவிடம், "நீ கடவுள்முன் ஏற்புடையவனாக நிற்க முயற்சி செய்" என்கின்றார். பவுல், திமொத்தேயுவிடம் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மனிதர்முன் ஏற்புடையவராக இருக்கும்பொழுது என்ன நடக்கும்?

எபேசு நகரில் ஆயராக இருந்தவர் திமொத்தேயு. இவரிடம் பவுல் பல்வேறு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்வதுதான் இன்றைய முதல்வாசகமாக இருக்கின்றது. இதில் பவுல் திமொத்தேயுவிடம் சொல்லக்கூடிய அறிவுரைதான் "கடவுள்முன் ஏற்புடையவனாக நிற்க முயற்சி செய்" என்பதாகும். இன்றைப் பலர் மனிதர்கள் தங்களைப் பாராட்டவேண்டும், புகழவேண்டும் என்பதற்காக அவர்கள் முன் ஏற்புடையவர்களாக இருக்க முயற்சி செய்கின்றார்கள். இதனால் அவர்கள் தங்களுடைய சுயத்தை இழந்தவர்களாகவும், அடுத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்த எப்படிப்பட்ட செயலையும் செய்யத் துணியும் இழிவானவர்களாகவும் மாறுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒருபோதும் கடவுளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியாது.

கடவுள் முன் ஏற்புடையவராக இருக்கும்பொழுது என்ன நடக்கும்?

மனிதர் முன் ஏற்புடையவராக இருக்க முயற்சி செய்பவர்கள் ஒரு பிரிவினர் என்றால், கடவுள் முன் ஏற்புடையவராக இருக்க முயற்சி செய்பவர்கள் இன்னொரு பிரிவினர்.

ஒருவர் கடவுள்முன் ஏற்புடையவராக இருக்கின்றபொழுது, மனிதர்களிடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதிக்கலாம் (யோவா 17:14) ஏனென்றால், ஆண்டவர் இயேசு கடவுள்முன் ஏற்புடையவராக, அவருடைய அன்பார்ந்த மைந்தராக (மத் 3:17, 17:5) இருந்ததால்தான், மனிதர்களிடமிருந்து அவ்வளவு எதிர்ப்பினைச் சம்பாதித்தார். ஆகையால், ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவராக இருக்கின்றபொழுது, மனிதர்களிடமிருந்து நிச்சயம் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டிவரும். ஆனாலும், அவற்றையெல்லாம் மீறி, அவர் கடவுள்முன் ஏற்புடையவராக நிற்க வேண்டும் என்றுதான் பவுல் திமொத்தேயுவிடம் விடுக்கும் அழைப்பாக இருக்கின்றது.

பவுல் திமொத்தேயுக்குக் கொடுத்த அதே அழைப்புதான் இன்று நமக்கும் கொடுக்கப்படுகின்றது, நாம் கடவுள்முன் ஏற்புடையவராக இருக்க முயற்சி செய்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார் அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்" (மத் 6: 24) என்பார் இயேசு. ஆம், இவ்வுலகில் யாரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது.. எனவே, நாம் மனிதர்களுக்கு அல்ல, நமக்கு நிலைவாழ்வையும் எல்லாவிதமான ஆசிகளையும் தரும் இறைவனுக்குப் பணிசெய்து, அவர் முன்பாக ஏற்புடையவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
முதன்மையான கட்டளை

நிகழ்வு

பிரான்ஸ் நாட்டின் மன்னராக இருந்தவர் மாவீரன் நெப்போலியன். இவர் யாரையும் மதிப்பதே கிடையாது; ஆனால், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த மருத்துவரும் விஞ்ஞானியுமான ஜென்னர்மீது தனி மதிப்புக் கொண்டிருந்தார்.

இது குறித்து ஒருசிலர் மாவீரன் நெப்போலியனிடம், "யாரையும் மதிக்காத நீங்கள், எதிரிநாட்டு மருத்துவர் ஜென்னர்மீது மட்டும் தனி மதிப்புக் கொண்டிருக்கின்றீர்களே...! அது எப்படி...?" என்று கேட்டார்கள். அதற்கு நெப்போலியன் அவர்களிடம், "ஒரு மன்னருக்கு அழகு, அவர் போரில் ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று குவிப்பது. அவரால் கொன்றுகுவிக்கப்பட்ட மனிதர்களைக் காப்பாற்ற முடியாது; ஆனால், மருத்துவர் ஜென்னரோ, கொள்ளைநோயால் மக்கள் இறக்காத வண்ணம் மருந்து கண்டுபிடித்திருக்கின்றார். இறைவன்மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டவரான மருத்துவர் ஜென்னர், கொள்ளைநோயால் மக்கள் இறக்காது இருக்க மருந்து கண்டுபிடித்திருக்கின்றார் என்றால், அவர் மக்கள்மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கவேண்டும். அதனால்தான் அவரால் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் இறக்காமல் இருக்க, மருந்து கண்டு பிடிக்க முடிந்திருக்கின்றது. அதனாலேயே அவர்மீது எனக்குத் தனிமதிப்பு இருக்கின்றது" என்றார்.

இறைவன்மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த மருத்துவர் ஜென்னர், மனிதர்கள்மீதும் மிகுந்த அன்புகொண்டிருந்தார். அந்த அன்புதான் அவரைக் கொள்ளை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கத் தூண்டியது. இன்றைய நற்செய்தி வாசகம் இறைவனையும் அதற்கு இணையாக மனிதர்களையும் அன்பு செய்யவேண்டும் என்றோர் அழைப்புத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

முதன்மையான கட்டளை எது?

நற்செய்தியில், இயேசுவிடம் வருகின்ற மறைநூல் அறிஞர் ஒருவர், "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்கின்றார். இயேசுவிடம் இக்கேள்வியைக் கேட்கின்றவர், சாதாரண ஒரு யூதர் அல்லர்; மறைநூல் அறிஞர். அப்படியானால், அவர் மறைநூலைக் குறித்து நன்கு அறிந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். அப்படியிருந்தும் அவர் ஏன் இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்கவேண்டும் என்ற கேள்வி நமக்கு எழலாம். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடவேண்டும். இரண்டு, இயேசுவின் பார்வையில் எது முதன்மையான கட்டளை எனத் தெரிந்துகொள்ளவேண்டும்.

மக்கள் நடுவில் இயேசு அடைந்துவந்த புகழையும் செல்வாக்கையும் கண்டு பொறாமைப்பட்ட பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடவேண்டும்... அவருக்கு அவப்பெயரை உண்டாக்கவேண்டும் என்பதற்காகப் பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்டார்கள். அதில் ஒன்றுதான் இன்றைய நற்செய்தியில் கேட்கப்பட்ட கேள்வி. மாற்கு நற்செய்தி மறைநூல் அறிஞர் இயேசுவிடம் கேள்வி கேட்பதாக வருகின்றது; ஆனால், மத்தேயு நற்செய்தியில் பரிசேயர்களிடம் இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் கேள்வி கேட்பதாக வருகின்றது (மத் 22: 34-35). அப்படியானால், மறைநூல் அறிஞர் இயேசுவிடம் கேள்வி கேட்பதன்மூலமாக அவரைச் சிக்க வைக்க நினைத்தார் என்று உறுதியாகச் சொல்லலாம்.

அடுத்ததாக, பரிசேயர்கள் நடுவில் எது முதன்மையான கட்டளை என்பது தொடர்பாக அடிக்கடி விவாதம் நடக்கும். இந்நிலையில் மக்களால் மதிக்கப்பட்ட இயேசு, முதன்மையான கட்டளை என்று எதைச் சொல்கின்றார் என்று தெரிந்துகொள்வதாக, அவர்கள் மறைநூல் அறிஞரை அனுப்பி, கேள்வியைக் கேட்கின்றார்கள்.

இறையன்பும் பிறரன்புமே ஒருவரை இறையாட்சிக்கு உட்படுத்தும்

முதன்மையான கட்டளை எது என மறைநூல் அறிஞர் தன்னிடம் கேள்வியைக் கேட்டதும், இயேசு இணைச்சட்ட நூல் 6: 4 யையும் லேவியர் நூல் 19: 18 யையும் இணைத்து இறையன்பும் பிறரன்புமே முதன்மையான கட்டளை என்றும் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று இணையான கட்டளை என்றும் சொல்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதும், அவரிடம் கேள்வி மறைநூல் அறிஞர், இயேசு சொன்னதை ஆமோதித்துவிட்டு, இறையன்பும் பிறரன்பும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானவை என்று கூறுகின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை.

ஆம், கடவுளையும் அடுத்திருப்பவரையும் அன்பு செய்கின்ற ஒருவர் இறையாட்சிக்கு மிக நெருக்கமாகவும், ஏன், இறையாட்சிக்கு உட்படுபவராகவும் இருக்கின்றார் என்று உண்மை. எனவே, நாம் கடவுளையும் அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்களையும் முழுமையாய் அன்புசெய்யக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

"அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!" (எபே 3: 17) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இறைவனை, அடுத்திருப்பவரை அன்பு செய்யக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!