|
|
03 ஜூன் 2020 |
|
பொதுக்காலம் 9ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
++உம்மீது என் கைகளை விரித்ததால், உமக்குள் வந்துள்ள கடவுளின்
வரத்தைப் புத்துயிர்பெறச் செய்யும்.
திருத்தூதர் பவுல்
திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்
1: 1-3; 6-12
என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின்
திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய
வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம்
கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும்
அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப்
போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான்
அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில்
உன்னை நினைவுகூருகின்றேன். உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில்
அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத்
தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை
உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே
வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக்
குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத்
தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத்
துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு
அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து
இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை
மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய
கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது.
அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச்
செய்தார். அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும்
போதகனாகவும் நான் ஏற்படுத்தப்பட்டுள்ளேன். இதன் பொருட்டே நான்
இவ்வாறு துன்புற்று வருகிறேன்; எனினும் வெட்கமுறுவதில்லை. ஏனெனில்,
நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம்
ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை
எனக்கு உண்டு.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 123: 1-2a. 2bcd. . (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
1
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
2a
பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கி இருப்பதுபோல, என்
கண்களை உயர்த்தியுள்ளேன். - பல்லவி
2bcd
பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல,
எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள்
உம்மையே நோக்கியிருக்கும். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம்
நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்" என்கிறார் ஆண்டவர்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++அவர் வாழ்வோரின் கடவுள்; இறந்தோரின் கடவுள் அல்லர்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 18-27
அக்காலத்தில்
உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை
அணுகி, "போதகரே, ஒருவர் மகப்பேறின்றித் தம் மனைவியை
விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக
ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று
மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார். சகோதரர் எழுவர் இருந்தனர்.
மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர்
அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்தார். மூன்றாமவருக்கும்
அவ்வாறே நிகழ்ந்தது. ஏழு பேருக்கும் மகப்பேறு
இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும்
இறந்தார். அவர்கள் உயிர்த்தெழும்போது, அவர் அவர்களுள் யாருக்கு
மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக்
கொண்டிருந்தனரே!" என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களிடம்,
"உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும்
தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.
இறந்து உயிர்த்தெழும்போது யாரும் அருட்சாதனம்
செய்துகொள்வதில்லை.
மாறாக, அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள். இறந்தோர்
உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர்
பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்தது இல்லையா? "ஆபிரகாமின்
கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே" என்று
கடவுள் அவரிடம் சொன்னாரே! அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக,
வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக்
கொண்டிருக்கிறீர்கள்" என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2 திமொத்தேயு 2: 1: 1-3, 6-12
"கடவுள் நமக்கு வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே
வழங்கியுள்ளார்"
நிகழ்வு
சீக்கிய மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, மிகப்பெரிய
நற்செய்திப் பணியாளராக வாழ்ந்த சாது சுந்தர் சிங் (1889-1929)
சொல்லக்கூடிய நிகழ்வு இது.
சிறுமி ஒருத்தி இருந்தாள். ஒருநாள் இவர் பக்கத்து ஊரில் இருந்த
தன்னுடைய தோழியைப் பார்க்க சாலையோரமாக நடந்து
சென்றுகொண்டிருந்தாள். வழியில் ஒரு மனிதன் இவளைத் தடுத்து
நிறுத்திப் பேசத் தொடங்கினான். "உன்னைப் பார்த்தால் நீ ஒரு
கிறிஸ்தவள் போன்று தெரிகின்றது! நீ உன்னுடைய பெற்றோர் கிறிஸ்தவ
மதத்தைப் பின்பற்றி வந்ததால், கிறிஸ்தவள் ஆனாயா...? இல்லை நீயே
விருப்பப்பட்டுக் கிறிஸ்தவள் ஆனாயா...?"
அந்த மனிதன் இவ்வாறு கேட்டதற்குச் சிறிதும் தாமதியாமல் சிறுமி
பதில் சொல்லத் தொடங்கினாள்: "ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாக எங்களுடைய
ஊருக்கு நற்செய்திப் பணியாளர் ஒருவர் வந்தார். அவர் இயேசு
கிறிஸ்துவைப் பற்றி அறிவித்தார். இயேசு கிறிஸ்துவைப் பற்றி
நான் முதன்முறையாக அறிந்துகொண்டபோது எல்லாம் புதிதாக இருந்தது.
பிறகு அவரைப் பற்றிய சிந்தித்து வந்தேன். ஒருநாள், இனிமேல்
வாழ்ந்தால் கிறிஸ்தவளாகத்தான் வாழவேண்டும் என்று முடிவுசெய்து,
அன்றிலிருந்து இன்றுவரை ஒரு கிறிஸ்தவளாக
வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்."
அந்த மனிதன் இதைக் கேட்டதுதான் தாமதம், சிறுமியின் கன்னத்தில்
"பளார்" என அறைந்தான். காரணம் அவன் ஒரு பிற சமயத்தைச் சார்ந்தவன்.
பின்னர் அவன் அவளைத் தூக்கிக்கொண்டு போய், ஒரு பாழடைந்த கட்டடத்திற்குள்
அடைத்து வைத்து, அன்னம் தண்ணீர் கொடுக்காமல் சித்திரவதை
செய்தான். இடையிடைய அவன் அந்தப் பாழடைந்த கட்டடத்தின் அருகில்
சென்று, சிறுமி என்ன செய்துகொண்டிருக்கின்றாள் என்று உன்னிப்பாகக்
கவனித்தான். அவளோ, தான் இப்படி வந்து மாட்டிக்கொண்டுவிட்டோமே
என்று சிறிதுகூடக் கவலைப்படாமல், கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருந்தாள்.
மட்டுமல்லாமல், தன்னை அந்தப் பாழடைந்த கட்டடத்திற்குள் அடைத்து
வைத்து, அன்னம் தண்ணீர் கொடுக்காமல் சித்திரவதை செய்யும் மனிதனுக்காகவும்
மன்றாடி வந்தாள்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு அந்த மனிதன், "இப்படியொரு
சிறுமியையா நாம் துன்புறுத்தினோம்" என்று மிகவும் வேதனையடைந்தான்.
பின்னர் அவன் அந்தச் சிறுமையை அங்கிருந்து விடுவித்தான். அத்தோடு
அவன், "துன்பத்திலும் தளர்ந்து போகாத நம்பிக்கையை இந்தச்
சிறுமைக்கு இவள் வழிபடும் இயேசு தந்தார் எனில், உண்மையில் அவர்
பெரியவர்" என்று இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவராக வாழத் தொடங்கினான்.
இந்த நிகழ்வில் வருகின்ற சிறுமி தான் சித்திரவதை செய்யப்பட்டபொழுதும்,
தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருந்து இயேசுவுக்குச் சான்று
பகர்ந்தார். இன்றைய முதல் வாசகத்திலும் பவுல் திமொத்தேயுவிடம்,
துன்பங்களுக்கு நடுவில், கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையில்
உறுதியாக இருந்து, அவருக்குச் சான்று பகருமாறு சொல்கின்றார்.
அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பணிவாழ்வில் எதிர்ப்புகளைச் சந்தித்த திமொத்தேயு
லிஸ்திராவில் இருந்த, இறைவனின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட ஒரு
குடும்பத்தைச் சார்ந்தவர்தான் திமொத்தேயு (திப 16: 1-2). பவுலோடு
பிரிகியா, கலாத்தியா, மீசியா, பிலிப்பி போன்ற பல இடங்களுக்குச்
சென்று, கடவுளின் வார்த்தையை அறிவிப்பதில், அவருக்கு உறுதியாக
இருந்த திமொத்தேயுவைப் பவுல் எபேசின் ஆயராக நியமித்தார் (1திமொ
1:3) திமொத்தேயு எபேசு நகரில் ஆயராக இருந்து பணிசெய்து
கொண்டிருக்கும்பொழுது தப்பறைக் கொள்கைகளைப் பரப்பி வந்தவர்களிடம்
இவருக்கு பெரிய பிரச்சனை வந்தது (1 திமொ 4:12) இதனை இவர்
தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கையில்தான் பவுல், இவரிடம்
"கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும்
கொண்ட உள்ளத்தினை வழங்கியுள்ளார்" என்று கூறுகின்றார்.
கடவுள் நமக்கு வல்லமையுள்ள உள்ளத்தினைக் கொடுத்திருக்கார் என்றால்,
நம்முடைய வாழ்விலும் சரி, பணிவாழ்விலும் சரி எதிர்வரும் சவால்களை
தாங்கிக்கொள்வதற்கான ஆற்றலை அவர் தந்திருக்கின்றார் என்பதுதான்
இதிலுள்ள பொருளாக இருக்கின்றது.
கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதைக் குறித்து வெட்கமடையத்
தேவையில்லை.
பவுல், திமொத்தேயுவிடம் தொடர்ந்து கூறும்பொழுது,
கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதைக் குறித்து வெட்கமுறத்
தேவையில்லை; மாறாகத் துன்பத்தில் என்னோடு பங்கு கொள் என்கின்றார்.
பவுல் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அறிவித்ததற்காக பல்வேறு
விதங்களில் துன்பப்பட்டார்; ஆனாலும் அவர் வெட்கமுறவில்லை. எனவே,
நம்பிக்கை அடிப்படையில் பவுலுக்கு அன்புப் பிள்ளையாகவும்
(1திமொ 1:1) சகோதரராகவும் (எபே 13: 23) இருந்த திமொத்தேயு, கடவுள்
அவருக்குக் கொடுத்த வல்லமையுள்ள இதயத்தைக் கொண்டு சிறந்த
முறையில் சான்று பகரவேண்டும் என்கிறார் பவுல்.
நம்முடைய வாழ்க்கையிலும் திமொத்தேயுவின் வாழ்வில் வந்ததுபோல பிரச்சனைகளும்
சவால்களும் வரலாம். அவற்றைக் கண்டு நாம் கலங்கிடாமல், கடவுள்
கொடுத்த வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட இதயத்தைக்
கொண்டு அவருக்குச் சிறந்த விதமாய்ச் சான்று பகர்வோம்.
சிந்தனை
"மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும்
என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன் (மத் 10:
32) என்பார் இயேசு. ஆகையால், நாம் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை
வெட்கமுறால், துணிவோடு அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antony
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 12: 18-27
சதுசேயர்கள் என்னும் குழப்பவாதிகள்
நிகழ்வு
அது ஓர் அழகான கடற்கரை. அந்தக் கடற்கரையில் ஆயிரங்கால் பூச்சி
ஒன்று தன்னுடைய இணையோடு மெல்ல நடந்து சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது
வேகமாகப் பறந்து வந்த காகம் ஒன்று, அவற்றின் அருகே வந்து
நின்றுகொண்டு, ஆண் ஆயிரங்கால் பூச்சியோடு பேச்சுக் கொடுக்கத்
தொடங்கியது.
"ஆயிரங்கால் பூச்சியே! உன்னை நினைக்கையில் எனக்குப் பெருமையாகவும்
மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது! உன்னிடத்தில் நான் நீண்டநாள்களாக
ஒருசில கேள்விகளைக் கேட்கவேண்டும் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் அதற்கு நல்லதொரு வாய்ப்புக்
கிடைத்திருக்கின்றது. என்னுடைய கேள்விகள் இதோ: நீ நடந்து
செல்கையில் எந்தத் காலை முன் வைப்பாய்? எந்தக் காலைப்
பின்வைப்பாய்? அடுத்ததாக, இரண்டு கால்களை வைத்துக்கொண்டு சமாளிப்பதே
எனக்குக் கடினமாக இருக்கின்றபொழுது, ஆயிரங்கால்களை
வைத்துக்கொண்டு நீ எப்படிச் சமாளிக்கின்றாய்? கொஞ்சம் விளக்கமாகச்
சொல்வாயா?"
காகம் இப்படியெல்லாம் கேள்வி கேட்டதும், ஆயிரங்கால் பூச்சி
சிந்திக்கத் தொடங்கியது. அது சிந்திக்க சிந்திக்க அதற்குத் தலைசுற்றத்
தொடங்கியது. எப்படியோ நிலைமையைச் சமாளித்துக்கொண்ட ஆயிரங்கால்
பூச்சி காகத்திடம், "காகமே! இதுவரை யாரும் என்னிடம் இப்படியெல்லாம்
கேள்விகளைக் கேட்டதில்லை. நீ இப்படியெல்லாம் கேள்விகளைக் கேட்டபின்பு,
எனக்கு எந்தக் காலை முன் வைப்பது, எந்தக் காலைப் பின் வைப்பது
என்று குழப்பமாக இருக்கின்றது" என்றது.
ஆயிரங்கால் பூச்சி சொன்னதைக் கேட்டு சத்தமாகச் சிரித்த காகம்,
"உன்னைக் குழப்புவதற்குத்தான் இப்படியெல்லாம் கேள்விகளைக்
கேட்டேன்" என்று சொல்லிவிட்டு வானில் பறந்துசென்றது.
வேடிக்கையான நிகழ்வாக இருந்தாலும், இது உணர்த்துகின்ற செய்தி
மிகவும் ஆழமானது. பலர் இந்த நிகழ்வில் வருகின்ற காகத்தைப்
போன்றுதான், ஒன்றைக் குறித்துத் தெளிவு பெறவேண்டும் என்பதற்கு
கேள்வி கேட்பதை விடவும், மற்றவர்களைக் குழப்பமே கேள்வி
கேட்பார்கள். நற்செய்தியிலும், இயேசுவிடம் வருகின்ற சதுசேயர்கள்
தங்களுடைய கேள்வியால் இயேசுவைக் குழப்பவும், அவரைச் சிக்கலில்
மாட்டிவிடவும் நினைக்கின்றார்கள். அவர்களுக்கு இயேசு என்ன பதில்
கூறினார்... அவர் கூறிய பதிலிலிருந்து நாம் என்னென்ன உண்மைகளைக்
கற்றுக்கொள்ளலாம் என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்து
பார்ப்போம்.
உயிர்ப்பு இல்லையென்று மறுத்த சதுசேயர்கள்
யூத சமூகத்தில் பணபலமும் அதிகார பலமும் கொண்டவர்கள் இந்தச் சதுசேயர்கள்.
இவர்கள் நம்பியதெல்லாம் பழைய ஏற்பாட்டில் உள்ள முதல் ஐந்நூல்களைதான்.
இந்த ஐந்து நூல்களில் உயிர்ப்பு பற்றி எதுவும் சொல்லப்படவில்லை;
அதனால் உயிர்ப்பு என்ற ஒன்று கிடையவே கிடையாது; வானதூதர்களும்
கிடையாது என்று சொல்லிவந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் இயேசுவைச்
சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்பதற்காக உயிர்ப்பு தொடர்பான ஒரு
கேள்வியோடு வருகின்றார். ஒரு பெண்ணை மணக்கின்ற ஒருவர் மகப்பேறின்றி
இறந்தால், அவனுடைய சகோதரனே, அந்தப் பெண்ணை மணந்துகொண்டு, அவருக்கு
மகப்பேற்றினைத் தரவேண்டும் என்பது மோசேயின் சட்டம் (இச 25:
5-6). இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, உயிர்ப்பு தொடர்பான
கேள்வியோடு இயேசுவிடம் வருகின்ற சதுசேயர்களின் எண்ணமெல்லாம்,
தங்களுடைய கேள்விக்கு இயேசுவால் பதில் சொல்லவே முடியாது என்பதாகத்தான்
இருந்திருக்கும்; ஆனால், இயேசு அவர்களுக்கு மிகத் தெளிவான பதிலைச்
சொல்லி, அவர்களுடைய வாயை அடைக்கின்றார்.
உயிர்ப்பை மறுத்ததன் மூலம் கடவுளின் வல்லமையை மறுத்த சதுசேயர்கள்
இயேசு, சதுசேயர்கள் கேட்ட கேள்விக்கு, அவர்கள் ஏற்றுக்கொண்ட ஐந்நூலிருந்தே
பதிலளிகின்றார். விடுதலைப் பயண நூல் 3:6 ஐ மையமாக வைத்துப் பதில்
சொல்லும் இயேசு, சதுசேயர்களிடம், உங்களுக்கு மறைநூலைப் பற்றிய
அறிவில்லை; கடவுளின் வல்லமையைப் பற்றியும் அறிவில்லை என்று
தெளிவான விளக்கம் தருகின்றார். ஒருவேளை இந்தச் சதுசேயர்கள்
கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை (லூக் 1: 37) என்பதை
ஏற்றுக்கொண்டிருந்தால், உயிர்ப்பையும்
ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்குக் கடவுளைக் குறித்த
போதிய தெளிவில்லாம் இருந்ததால்தான், இயேசுவிடம் இப்படியெல்லாம்
கேள்வி கேட்கிறார்கள். இயேசு சதுசேயர்களுக்கு இப்படிப் பதில்
சொன்னதால் அவர்கள் வாயடைத்துப் போகின்றார்கள்.
ஆம், கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, வாழ்வோரின் கடவுள்.
அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும். ஆகையால், நாம் கடவுளின்
வல்லமையை உணர்ந்தவர்களாய், அவருடைய விருப்பத்திற்கு
ஏற்றாற்போல் நடப்போம்.
சிந்தனை
"உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத் தருவார்"
(எசா 54: 13) என்பார் எசாயா இறைவாக்கினர். ஆகையால், நாம்
கடவுள் கற்றுத் தருவதைத் தெளிவுறக் கற்று, அதை
மற்றவர்களுக்கும் கற்பிப்போம். இறைவல்லமையை உணர்ந்தவர்களாய்
இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல, வாழ்வோரின் கடவுள்
இப்போது லண்டனில் உள்ள தூய பவுல் பேராலயம் இருக்கின்ற இடத்தில்
ஒரு பேராலயம் இருந்தது. அந்தப் பேராலயமானது 1666 ஆம் ஆண்டு இலண்டனில்
ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் அழிந்துபோனது.
எல்லாம் முடிந்துபோனது என்று ஏனையோர் இருந்த வேளையில் கிறிஸ்டோபர்
வரேன் (Christoper Wren) என்ற கட்டடக் கலைஞர், பேராலயம் இருந்த
அதே இடத்தில் புதிதாக ஓர் ஆலயம் கட்டத் தொடங்கினார். அந்த ஆலயம்
கட்டத் தொடங்குவதற்கு முன்பாக எரிந்துபோன பழைய ஆலயத்தை ஒரு
பார்வையிட்டார். அப்போது அவருடைய கண்ணில் ஒரு கல்வெட்டுப் பட்டது.
அந்தக் கல்வெட்டு லத்தின் மொழியில் எழுதப்பட்டிருந்தது. அதன்
ஆங்கில மொழிபெயர்ப்பு இதுதான் "I Shall rise again". அதாவது
நான் மீண்டுமாக (உயிர்த்)தெழுவேன் என்று பொறிக்கப்பட்ட அந்த
வசனத்தைப் படித்ததும் கிறிஸ்டோபர் வரேன் மிகுந்த உற்சாகமடைந்தார்.
அந்த உற்சாகத்திலே 35 ஆண்டுகளில் இப்போது இருக்கின்ற தூய பவுல்
பேராலயத்தைக் கட்டி எழுப்பினார்.
இயேசு உயிர்த்தெழுந்தார் இது நம்முடைய நம்பிக்கை. அவர் உயிர்தெழுந்தது
போன்று நாமும் உயிர்த்தெழுவோம் இதுவும் நம்முடைய நம்பிக்கையாக
இருக்கின்றது ( 1 கொரி 15:20). இதில் நம்பிக்கை கொள்ளாத எவரும்
கிறிஸ்தவரே இல்லை என்பதுதான் உண்மை.
நற்செய்தி வாசகத்தில் சதுசேயர்கள் சிலர் இயேசுவிடம் வந்து, அவரைத்
தங்களுடைய பேச்சில் சிக்க வைக்க நினைக்கிறார்கள். இந்த சதுசேயர்கள்
யாரென்றால், யூத சமூகத்தில் இருந்த பணக்காரர்களும்
மேட்டுக்குடியினரும் ஆவர். இவர்களுக்கு திருநூலின் முதன் ஐந்து
நூல்களைத் (Pentatuch) தவிர ஏனையவற்றில் நம்பிக்கை கிடையாது.
அதுபோன்று வானதூதர்களின் மீதும் உயிர்த்தெழுதலின் மீதும் இவர்களுக்கு
நம்பிக்கை கிடையாது. அப்படிப்பட்டவர்கள்தான் இயேசுவிடம் வந்து
ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்கள் எழுப்பும் கேள்வி இதுதான்:
சகோதரர்கள் எழுவர் இருக்கின்றார், அவர்களில் மூத்தவன் ஒரு
பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்து போய்விடுகின்றான், அதற்கு
அடுத்தவனும் அப்பெண்ணை மணந்து இறந்து போய்விடுகின்றான். இப்படியாக
எழுவரும் அப்பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்து போய்விடுகிறார்கள்.
இறுதியாக அப்பெண்ணும் இறந்து போய்விடுகிறார். அப்படியாயின், உயிர்த்தெழுதலின்
போது அப்பெண் யாருக்கு மனைவியாக இருப்பார். ஏனென்றால், அந்தப்
பெண் ஏழு பேரையும் தன்னுடைய கணவராக ஏற்றுக்கொண்டாரே".
சதுசேயர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி மிகவும் தந்திரமானது என்றாலும்,
இயேசு அவர்களுக்கு அவர்கள் நம்பிய திருநூலின் முதல் ஐந்து நூல்களில்
ஒன்றான விடுதலைப் பயண நூலிலிருந்து விளக்கம் தருகின்றார். ஆண்டவராகிய
கடவுள் மோசேக்கு முட்புதரில் தோன்றியபோது தன்னை, "ஆபிரகாமின்
கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோப்பின் கடவுள் என்று
சொல்லிவிட்டு, "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" என்றுரைப்பார்
(விப 3: 6,14). இந்த நிகழ்ச்சியை இயேசு அவர்களுக்குச்
சுட்டிக்காட்டிவிட்டுச் சொல்வார், கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல,
மாறாக வாழ்வோரின் கடவுள் என்று. இதன்வழியாக சதுசேயர்கள் நம்பிய
முதல் ஐந்து நூற்களிலேயே உயிர்த்தெழுதலுக்கான சான்று இருக்கின்றது
என்று இயேசு அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார். மேலும் "ஒருவர்
இறந்து உயிர்த்தெழும்போது அவர் மண்ணகத்தில் இருப்பது போன்று அல்லாமல்,
வானதூதர்களைப் போன்று இருப்பார்" என்றும் இயேசு அவர்களுக்கு விளக்கம்
தருகின்றார்.
இயேசு சதுசேயர்களுக்கு அளித்த பதிலிலிருந்து நாம் ஒருசில உண்மைகளைக்
கண்டுகொள்ளலாம். அதில் முதலாவது, இறந்து உயிருடன் நாம் எழுப்பப்படும்
போது இவ்வுலகத்தில் இருப்பது போன்று இருக்க மாட்டோம், மாறாக வானதூதர்களைப்
போன்றும் கடவுளின் மக்களாக இருப்போம் என்பதாகும். இப்படி நாம்
வானதூதர்களாகவும் கடவுளின் மக்களாகவும் இருக்கின்றபோது நிலையான
மகிழ்ச்சியைப் பெறுவோம் என்பது உறுதி.
அடுத்ததாக இயேசுவின் பதிலிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும்
செய்தி, நம் கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, மாறாக வாழ்வோரின்
கடவுள் என்பதாகும். அப்படியானால் அவர் இன்றைக்கும் நம்மத்தியில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் ஆழமான உண்மையாக இருக்கின்றது.
கடவுள் நம்மோடு வாழும்போது நமக்கென்ன கவலை (திபா 23:1).
ஆகையால், கடவுள் இன்றைக்கும் நம் மத்தியில் வாழ்ந்து
கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தவர்களாய், எல்லாவித கவலைகளிலிருந்தும்
அச்சத்திலிருந்தும் விடுதலை பெறுவோம்; இந்த மண்ணகத்தில் இறைவனுக்கு
உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறைவன் அளிக்கும்
முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம். |
|