Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       01  ஜூன் 2020  

பொதுக்காலம் 9ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 
இன்றைய வாசகங்கள் தூய கன்னி மரியா, திரு அவையின் அன்னை நினைவுக்கு உரியது.


உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20

அந்நாள்களில்

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்டார். "உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்" என்றான் மனிதன்.

"நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?" என்று கேட்டார். அப்பொழுது அவன், "என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்" என்றான்.

ஆண்டவராகிய கடவுள், "நீ ஏன் இவ்வாறு செய்தாய்?" என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், "பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்" என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்றார்.

மனிதன் தன் மனைவிக்கு "ஏவாள்" என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அல்லது

இயேசுவின் தாய் மரியாவோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 12-14


இயேசு விண்ணேற்றமடைந்த பின் திருத்தூதர்கள் ஒலிவ மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 87: 1-2. 3,5. 6-7 . (பல்லவி: 3) Mp3
=================================================================================

பல்லவி: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.
1
நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
2
யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.
3
கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. - பல்லவி

4
எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, "இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்" என்று கூறப்படும்.
5
"இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!" என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். - பல்லவி

6
மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, "இவர் இங்கேதான் பிறந்தார்" என ஆண்டவர் எழுதுவார்.
7
ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து "எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது" என்பர். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னிமரியே, பெருமகிழ்வு கொண்டவர் நீர்; புகழ் அனைத்திற்கும் தகுதி பெற்றவரும் நீர். ஏனெனில், நீதியின் ஆதவன், நம் இறை கிறிஸ்து, உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இவரே உம் மகன்! இவரே உம் தாய்!

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27


அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
 ================================================================================
 2 பேதுரு 1: 1-7

இயேசுவை அறிவதன் வாயிலாக உங்களுக்கு அருளும் நலமும் பெருகுக

நிகழ்வு

உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர் ஜிம் ரீவ்ஸ் (Jim Reeves 1923-1964). அமெரிக்காவைச் சார்ந்தவரான இவருக்கு பணம், பொருள், புகழ், மிகப்பெரிய இரசிகர் கூட்டம் என்று வாழ்க்கையில் எல்லாமும் இருந்தது. இதனால் இவருடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாகச் சென்றுகொண்டிருந்தது. இப்படி இருக்கையில் இவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் இவர் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்து, தற்கொலை செய்துகொண்டு தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுசெய்தார்.

இந்த நேரத்தில் இவர் தன்னுடைய நெருங்கிய நண்பரைச் சந்தித்தார். அவரிடம் இவர் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையையும், அதற்குத் தற்கொலை ஒன்றுதான் தீர்வு என்பதையும் எடுத்துச் சொன்னார். இவர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டுவிட்டு இவருடைய நண்பர் இவரிடம், திருவிவிலியத்தை எடுத்துக் கொடுத்து, இதைப் படித்துப் பார் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

தன்னுடைய நண்பரிடமிருந்து திருவிவிலியத்தைப் பெற்றுக்கொண்டு, வீட்டிற்கு வந்த ஜிம் ரீவ்ஸ் அதைப் பொறுமையாக வாசிக்கத் தொடங்கினார். திருவிவிலியத்தில் உள்ள ஒவ்வொரு இறைவார்த்தையையும் இவர் வாசிக்க வாசிக்க உள்ளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்தார். இதற்குப் பிறகு இவர் தற்கொலை செய்துகொள்ளும் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு, புதிய மனிதராக வாழத் தொடங்கினர். அப்பொழுது இவர் சொன்ன வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை: இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதரும் பணம், பொருள், புகழ் என எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ளட்டும். அப்பொழுது அவருக்குப் புரியும், தான் தேடிக்கொண்டிருப்பது இவற்றில் இல்லை என்பது."

ஆம், உலகப் புகழ்பெற்ற ஜிம் ரீவ்ஸிற்குப் பணமோ, புகழோ, இரசிகர்கள் கூட்டமோ... எதுவுமே மகிழ்ச்சியையும் நலமான வாழ்வையும் தந்துவிடவில்லை. திருவிவிலியத்தின் வழியாக இயேசுவைப் பற்றிய அறிவே அவருக்கு மகிழ்ச்சியையும் நலமான வாழ்வையும் தந்தது. இன்றைய முதல் வாசகத்தில் புனித பேதுரு கடவுளையும் நமது ஆண்டவராகிய இயேசுவையும் நீங்கள் அறிவதன் வாயிலாக உங்களுக்கு அருளும் நலமும் பெருகுக" என்கின்றார். பேதுரு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன, எப்படிப்பட்ட பின்னணியில் பேதுரு இவ்வார்த்தைகளைக் குறித்து எழுதினர் என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை எல்லாராலும் அறிந்துகொள்ள முடியாதா?

புனித பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகமானது "ஞானவாதக் கொள்கையைப் பின்பற்றிவந்தவர்கள்" (Gnostics), கிறிஸ்துவைப் பற்றிப் பரப்பி வந்த தவறான போதனைக்குப் பதில் தருவதாக இருக்கின்றது. இந்த ஞானவாதக் கொள்கையைப் பின்பற்றிவந்தவர்கள், கடவுளைப் பற்றி ஒருசிலர்தான் அறிந்துகொள்ள முடியும் என்ற செய்தியைப் பரப்பி வந்தார்கள். இவர்கள் "இந்த உலகம் தீமையானது" போன்ற பல தவறான செய்திகளையும் பரப்பிவந்தார்கள். இப்படிப்பட்டவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில்தான் பேதுரு இரண்டாம் திருமுகத்தை எழுதுகின்றார்.

கடவுளைப் பற்றி ஒரு குறிப்பிட்ட மக்களே அறிய முடியும் என்பது தவறான போதனை. காரணம், இனிமேல் எவரும் "ஆண்டவரை அறிந்துகொள்ளும்" எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர் என்கின்றார் ஆண்டவர்" (எரே 31: 34) என்கிறது இறைவார்த்தை. இப்படியிருக்கையில் ஞானவாதக் கொள்கையைப் பின்பற்றி வந்தவர்கள் சொன்னது தவறுதானே! அதனால்தான் பேதுரு அதற்கு எதிராகப் பேசுகின்றார்.

இயேசுவை அறிந்துகொள்வதன் மூலம் இறைப்பற்றுடன் கூடிய வாழ்க்கை வாழ முடியும்

பேதுரு, ஞானவாத கொள்கையைப் பின்பற்றிவந்தவர்கள் பரப்பிவந்த தவறான போதனைக்குப் பதிலளித்துவிட்டு, இறைமக்களிடம், இயேசுவை அறிவதன் வாயிலாக உங்களுக்கு அருளும் நலமும் பெருகுக என்கின்றார். மட்டுமல்லாமல், அவரை அறிந்துகொள்வதன் மூலம் இறைப்பற்றுடன் வாழ்க்கை நடத்த எல்லாவற்றையும் அவர் வழங்கியுள்ளார் என்கின்றார்.

நாம் இயேசுவை அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. அதைவிடவும் முக்கியமானது, இயேசுவை அறிந்துபின் இறைப்பற்றுடன் கூடிய வாழ்க்கை வாழ்வது. இன்றைக்கு நாம் இயேசுவைப் பற்றி அறிந்திருக்கின்றோம் எனில், அவருடைய விழுமியங்களை நம்முடைய வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டவேண்டும். இல்லையென்றால், நாம் கிறிஸ்துவை அறிந்துகொண்டதில் எந்தவொரு பொருளும் இல்லை. ஆகையால், நமக்கு அருளும் நலமும் எல்லாவிதமான ஆசிகளையும் தருகின்ற இயேசுவை அறிந்துகொண்டு, அவருடைய விழுமியங்களுக்கு ஏற்ப முயற்சி செய்வோம்.

சிந்தனை

"அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்வதில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கின்றார்" (1 யோவா 4: 8) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பாய் இருந்து, கடவுளை அறிந்துகொள்வோம். அறிந்த அவரை மற்றவருக்கு அறிவித்து, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 12: 1-12

மிகுந்த பலனை எதிர்பார்க்கும் கடவுள்

நிகழ்வு

ஊருக்கு வெளியே வீடுகட்டி, பல ஆண்டுகளாக அதில் தன்னுடைய குடும்பத்தோடு வாழ்ந்து வந்த மாணிக்கத்தின் வீட்டிற்கு முன்பாக ஒரு மாமரம் இருந்தது. பருவ காலத்தில் நன்றாகக் கனிதந்து வந்த அந்த மாமரம், ஏனோ சில ஆண்டுகளாகக் கனிகொடுக்காமல், பட்டுப் போகத் தொடங்கியது.

மாணிக்கத்தின் வீட்டிற்கு வந்துபோன அவருடைய நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் யாவரும் அவரிடம், மரம்தான் பட்டுப்போய்விட்டதே! இன்னும் எதற்கு இந்த மரத்தை இப்படியே வைத்திருக்கின்றீர்கள்; பேசாமல் வெட்டிவிடுங்கள்" என்று சொல்லிவிட்டுப் போனார்கள். மாணிக்கத்திற்கு அந்த மரத்தை வெட்ட விருப்பமில்லை. காரணம், அவர் தன்னுடைய வீட்டைக் கட்டத் தொடங்கியபொழுது, அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர், ஒரு மாங்கன்றைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்து, "இதை நீ கட்டிக்கொண்டிருக்கின்ற உன் வீட்டிற்கு முன்பாக நட்டு வை. பின்னால் இது வளர்ந்து நிழலும் கனியும் தரும்" என்று சொல்லிவிட்டுப் போனார். அதைத்தான் அவர் தன்னுடைய வீட்டிற்கு முன்பாக நட்டு வைத்து, ஒருசில ஆண்டுகளில் அதிலிருந்து நிழலும் கனிகளையும் பெற்றுவந்தார்.

இப்படி நன்றாகக் கனியும் நிழலும் தந்த மரம், திடீரென பட்டுப்போனதும், அதை எப்படி வெட்டுவது என்பதுதான் மாணிக்கத்திற்குப் பெரிய யோசனையாக இருந்தது. இது குறித்து அவர் சிந்தித்துக் கொண்டிருக்கையில், ஒருநாள் அந்த மாமரத்தின் அடியில் சென்று, அதனைக் கட்டியணைத்துக் கொண்டு, அதனோடு அவர் பேசினார்; பட்டுப்போயிருந்த அதன் கிளைகளைப் பிடித்துத் தடவிக்கொடுத்தார். இது ஓரிரு நாள்கள் தொடர்ந்தன. இடையிடையே அவர் அதற்குத் தண்ணீர் ஊற்றி, உரமும் போட்டார். ஒருவாரம் கழித்து, அவர் அந்த மாமரத்தைப் பார்த்தபொழுது, அதில் இலைகள் மெல்ல அரும்பத் தொடங்கின. அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஆம், அந்த ஆண்டில் அம்மாமரத்திலிருந்து அவருக்கு மிகுதியான பலன் கிடைத்தது.

இந்த நிகழ்வில் வருகின்ற மாணிக்கம் எப்படி, தன்னுடைய வீட்டிற்கு முன்பாக இருந்த மாமரம் நல்ல கனிகளையும் நிழலையும் தரவேண்டும் என்று எதிர்பார்த்தாரோ, அப்படி இறைவனும் நம்மிடமிருந்து நல்ல பலனை எதிர்பார்க்கின்றார். இத்தகைய செய்தியைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

எல்லாவற்றையும் செய்துதரும் இறைவன்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, கொடிய குத்தகைக்காரர் உவமையைச் சொல்கின்றார். இயேசு இந்த உவமையைச் சொல்லக் காரணம், அதிகாரத்தில் இருந்த தலைமைக் குரு, மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் (மாற் 11:27) ஆகியோரின் வெளிவேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டத்தான். இவர்கள் தங்களிடம் இருந்த அதிகாரத்தைக் கொண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்தார்கள்; ஆனால், உண்மையில் இவர்களுடைய வாழ்க்கை போலித்தனம் மிகுந்ததாக இருந்து. அதனால்தான் இயேசு இந்த உவமைச் சொல்கின்றார்.

யூதர்களுக்குத் திராட்சைத் தோட்டம் என்பது நன்கு அறிமுகமான ஒன்று (திபா 80: 8-16; எசா 5: 1-7; எரே 2: 21). இன்னும் சொல்லப்போனால், திராட்சைத் தோட்டத்திலிருந்து கிடைத்த திராட்சை இரசத்தால்தான் அவர்களுடைய பொருளாதாரம் செழித்தது. இதைப் பின்புலமாக வைத்து, இயேசு உவமையைச் சொல்லத் தொடங்குகின்றார். இயேசு சொல்லும் இந்த உவமையின் முதல்பகுதியில், திராட்சைத் தோட்ட உரிமையாளர் அதற்கு "நன்றாக வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டியதாகச் சொல்கின்றார். இவையெல்லாம் திராட்சைத் தோட்ட உரிமையாளர், திராட்சைத் தோட்டம் நன்றாக வளர்வதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்தார் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. கடவுளும்கூட, நாம் நன்றாய் இருப்பதற்கு எல்லாவற்றையும் செய்துதருகின்றார் என்பதை இங்கு நாம் இணைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.

பலனை எதிர்பார்க்கும் கடவுள்

திராட்சைத் தோட்ட உரிமையாளர் தன்னுடைய திராட்சைத் தோட்டத்திற்கு எல்லாவற்றையும் செய்துகொடுத்து, அதைக் குத்தகைக்கு விடுகின்றார். திராடசைத் தோட்டத்தைக் குத்தகைக்கு வாங்கியவர் உரிய காலத்தில் குத்தகைப் பணத்தைத் தருவதுதான் முறை; ஆனால், இந்தக் கொடிய குத்தகைக்காரர், குத்தகையை வாங்கிப் போன பணியாளர்களையும், கடைசியில் திராட்சைத் தோட்ட உரிமையாளரின் மகனையும் கொன்றுபோட்டுவிட்டு, சொத்தைத் தங்களுக்கு உரியதாக்க நினைக்கின்றார்கள். இப்படிப்பட்ட வேளையில்தான் திராட்சைத் தோட்ட உரிமையாளர், அந்தக் கொடிய குத்தகைக்காரர்களை அப்புறப்படுத்திவிட்டு, உரிய காலத்தில் பலன்தரும் புதிய குத்தகைக்காரர்களிடம் திராட்சைத் தோட்டத்தைக் கொடுக்கின்றார்.

யூதர்கள், அதிலும் குறிப்பாகத் தலைமைக் குரு, மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் உரிய பலனைக் கொடுக்கவில்லை. அதனால்தான் அவர்களிடமிருந்து இறையாட்சி அப்புறப்படுத்தப்பட்டு, அதற்கு உரிய பலனைத் தரும் பிற இனத்து மக்களிடம் கொடுக்கப்பட்டது. கடவுள் நமக்கு எல்லா வாய்ப்பு வசதிகளையும் கொடுத்திருக்கின்றார் எனில், அவற்றைக் கொண்டு, நாம் உரிய பலனைத் தரவேண்டும். ஏனெனில், நாம் மிகுந்த கனிந்து இயேசுவின் சீடராய் இருப்பதே தந்தைக் கடவுளுக்கு மாட்சியளிக்கும் செயலாக இருக்கின்றது (யோவா 15: 8).

நாம் உரிய பலனைத் தருகின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"நீங்கள் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது" (யோவா 15: 4) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவோடு இணைந்திருப்போம். அதன்மூலம் மிகுந்த கனிதந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!