|
28 செப்டம்பர்
2019 |
|
பொதுக்காலம்
25ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 1-5,10-11a
நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நூலைக்
கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன். 'எங்கே போகிறீர்?' என்று
நான் அவரை வினவினேன்.
அதற்கு அவர், 'எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு
என்பதைக் காணப்போகிறேன்' என்றார். என்னோடு பேசிக்கொண்டிருந்த
தூதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார்.
வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஓடிச் சென்று அந்த இளைஞனிடம்
நீ சொல்ல வேண்டியது: '
எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான
கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப் போல்
இருக்கும்! ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய்
அமைவேன்; அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன்', என்கிறார்
ஆண்டவர்.
'
மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து
உன் நடுவில் குடிகொள்வேன்' என்கிறார் ஆண்டவர்.
அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்;
அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
எரே 31: 10. 11-12ab. 13 (பல்லவி: 10d)
=================================================================================
பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் ஆண்டவர் நம்மைக்
காத்திடுவார்.
10 மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள
கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; 'இஸ்ரயேலைச் சிதறடித்தவரே
அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக்
காப்பார்' என்று சொல்லுங்கள். பல்லவி
11 யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று
அவனை விடுவித்தார். 12ab அவர்கள் வந்து சீயோனின் உச்சியில்
பாடி மகிழ்வார்கள்; ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள்.
பல்லவி
13 அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே
இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை
நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்;
துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
2 திமொ 1: 10
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து,
அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட
இருக்கிறார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43b-45
அக்காலத்தில் இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்.
அவர் தம் சீடர்களிடம், "நான் சொல்வதைக் கேட்டு மனத்தில்
வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட
இருக்கிறார்"
என்றார்.
அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு
அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி
அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
லூக்கா 9: 43-45
"
மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட
இருக்கிறார்"
நிகழ்வு
இரண்டாம் நூற்றாண்டில் உரோமையில் வாழ்ந்தவர் புனித ஃபெலிசிதஸ்
(101-165). கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கைக்காக இவர்
சிறையில் அடைக்கப்பட்டார். அப்படி இவர் சிறையில் அடக்கப்பட்டபோது,
நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார்.
இவர் கொடிய விலங்குகட்கு முன்பாக வீசப்பட்டுக் கொல்லப்படுவதற்கு
மூன்று நாள்கட்கு முன்னம், மிகுந்த வேதனையோடு குழந்தையைப் பிரசவித்தார்.
இதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த சிறை அதிகாரி இவரிடம், "இந்த
வேதனையையே உன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே... உன்னை நாங்கள்
இன்னும் மூன்று நாள்கள் கழித்து கொடிய விலங்குகட்கு இரையாகப்
போடப்போகிறோமே, அந்த வேதனையை நீ எப்படித் தாங்கிக்கொள்ளப்
போகிறாய்?"
என்று கேட்டான்.
அதற்குப் ஃபெலிசிடஸ் மிகவும் உறுதியான குரலில், "
இப்பொழுது
நான் அனுபவித்ததோ பிரசவ வேதனை, இதனை நான் தனியாகத்தான் அனுபவிக்கவேண்டும்.
ஆனால், நீங்கள் என்னைக் கொடிய விலங்குகட்கு இரையாகப் போடுகின்றபோது,
அந்த வேதனையை நான் தனியாக அனுபவிக்கப் போவதில்லை. ஏனெனில்,
நான் கிறிஸ்துவுக்காக வேதனையை அனுபவிக்கப் போகிறேன். அதனால்
அவர் என்னோடு வேதனையை அனுபவிப்பார். அப்பொழுது அந்த வேதனை எனக்கு
வேதனையாகவே தெரியாது"
என்றார்.
ஆம், கடவுளுக்காக, அவர்மீது கொண்ட நம்பிக்கைக்காக நாம் வேதனைகளையும்
துன்பங்களையும் அனுபவிக்கின்றபோது, அவையெல்லாம் வேதனைகளாகவோ,
துன்பமாகவோ தெரியாது. மாறாக, அவை கடவுள் நமக்களிக்கும் ஆசியாகத்
தெரியும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது
சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு பாடுகளை ஏற்றுக்கொள்ளப்போவதைக்
குறித்துத் தன் சீடர்களிடம் பேசுகின்றார். சீடர்கள் இதனை எப்படி
எடுத்துக் கொண்டார்கள். நம்முடைய நம்பிக்கை வாழ்வில்
கிறிஸ்துவின் பொருட்டும் அவருடைய விழுமியங்களின் பொருட்டும் வருகின்ற
துன்பங்களை எப்படி நாம் எடுத்துக் கொள்வது? என்பவை குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தன் சாவை முன்னறிவிக்கும் இயேசு
நற்செய்தியில் இயேசு, "மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட
இருக்கின்றார்"
என்று தன்னுடைய சாவை முன்னறிவிக்கின்றார். இயேசுவுக்கு
முன்னும் சரி, அவர்க்குப் பின்னும் சரி யாராவது தன்னுடைய சாவை
அல்லது தான் இப்படித்தான் இறக்கப்போகிறேன் என்று முன்னறிவித்திருக்கின்றார்களா
என்று தெரியவில்லை. ஆனால், இயேசு தன்னுடைய சாவை ஒருமுறை அல்ல,
மூன்றுமுறை முன்னறிவிக்கின்றார். சாவை முன்னறிவிப்பதற்கு நிறையத்
துணிச்சல் வேண்டும். அது எல்லாராலும் முடியாது. ஆனால், இயேசுவுக்கு
அந்தத் துணிச்சல் இருந்தது. அதனால்தான் அவர் தன்னுடைய சாவை
முன்னறிவித்தார்.
தான் சாவைத் துணிவுடன் ஏற்றுக்கொண்ட இயேசு
இயேசு தன்னுடைய சாவை முன்னறிவித்தார் எனில், அதை வேறு வார்த்தைகளில்
சொல்லவேண்டும் என்றால், தன்னுடைய சிலுவைச் சாவை இயேசு விரும்பி
ஏற்றுக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். இன்றைக்கு எத்தனை
பேரால் சாவைத் துணிவோடு ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை!
ஆனால், இயேசு, இறைவனின் திருவுளம் நிறைவேற, மக்கள் அனைவரும்
வாழ்வுபெற (யோவா 10: 10) சாவை, அது தரும் துன்பத்தைத் துணிவோடு
ஏற்றுக்கொண்டார்.
இயேசு தன் சாவை இப்படித் துணிவோடு ஏற்றுக்கொண்டது, அவருடைய
வழியில் நடக்கும் ஒவ்வொருவர்க்கும் ஒரு முதன்மையான செய்தியை எடுத்துச்
சொல்கின்றது. அது குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
சிலுவைச் சாவு வேண்டாம் என்ற சீடர்கள்
இயேசு தன் சாவை, துன்பத்தைத் துணிவோடு ஏற்றுக்கொண்டார் எனில்,
அவருடைய வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் சாவையும் துன்பத்தையும்
துணிவோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், இன்று இயேசுவைப் போன்று
சாவையும் துன்பத்தையும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான்
உண்மையாக இருக்கின்றது. இயேசு தன் சாவை சீடர்களிடம் அறிக்கையிட்டபோது,
தலைமைச் சீடரான பேதுரு, "
ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு
நடக்கவே கூடாது"
(மத் 16: 22) என்று கூறினார். பேதுருவின் இவ்வார்த்தைகளை
ஒட்டுமொத்த சீடர்களின் சீடர்களின் வார்த்தைகளாகவே நாம் எடுத்துக்
கொள்ளலாம். ஏனென்றால், இயேசு சிலுவைச்சாவை அடைய இருந்ததையோ அவர்கள்
துன்பங்களை அடைய இருந்ததையோ அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
(பின்னாளில் அவர்கள் இயேசுவுக்குத் தங்கள் உயிரைத் தந்தது வேறு
விசயம்) இருந்தாலும் சாவையும் துன்பத்தையும் ஏற்றுக்கொள்ள அவர்கட்கும்
இன்று பலர்க்கும் துணிவு இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
ஆகையால், நாம் இயேசுவுக்காகவும் அவருடைய விழுமியங்கட்காகவும்
சாவையும் துன்பங்களையும் துணிவோடு ஏற்கத் தயாராகவேண்டும். அப்பொழுது
நாம் இயேசுவின் சீடர்களாக முடியும்.
சிந்தனை
'
கடவுளுக்கு இம்மண்ணுலகில் பாவமில்லாத ஒரு மகன் இருந்தான். ஆனால்,
துன்பத்தைச் சந்திக்காத மகன் என்று யாரும் இருந்ததில்லை'
என்பார்
புனித அகுஸ்தினார். ஆம், நம்முடைய நம்பிக்கை வாழ்க்கையும் துன்பங்களும்
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஆகையால், நாம் இயேசுவைப்
போன்று இறைவனின் திருவுளம் இம்மண்ணுலகில் நிறைவேற, துன்பங்களைத்
துணிவோடு ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
செக்கரியா 2: 1-5, 10-11a
"
இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்"
நிகழ்வு
நற்கருணை ஆண்டவர்மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தவர் சியன்னா
நகர புனித கத்ரின். இவர் நற்கருணை ஆண்டவருக்கு முன்பாக நீண்ட
நேரம் செலவழித்து வந்தார். அதற்குக் கைம்மாறாக நற்கருணை ஆண்டவரும்
இவர்க்கு அவ்வப்பொழுது காட்சிகள் கொடுத்து வந்தார்.
சில சமயங்களில் இவர் நற்கருணை ஆண்டவரிடம் வேண்டுகின்றபொழுது,
"
நற்கருணை ஆண்டவரே! நீர் என்னுடைய உள்ளத்தில் எழுந்தருளி வர
நான் தகுதியுள்ளவள்"
என்ற சொல்களை சொல்லி வந்தார். ஒருநாள் நற்கருணை
ஆண்டவர் இவரிடம் பேசும்போது, "
உன்னுடைய உள்ளத்தில் நான் எழுந்தருளி
வர நீ தகுதியற்றவளாக இருந்தாலும், உன் உள்ளத்தில் எழுந்தருளி
வர நான் தகுதியற்றவன்"
என்றார். உடனே கத்ரின் அவரிடம், "
நான்
மிகவும் அன்புசெய்யும் நம்பிக்கை ஆண்டவரே! தகுதியற்ற என் உள்ளத்தில்
தகுதியுள்ள நீர் வந்து தாங்கும்"
என்றார். மறுகணம் அவர்
கேட்டுக்கொண்டது போன்று, நற்கருணை ஆண்டவர் அவருடைய உள்ளத்தில்
போய் தங்கினார்.
இந்த நிகழ்வில் நற்கருணை ஆண்டவர் எப்படி சியன்னா நகரப் புனித
கத்ரினுடைய உள்ளத்தில் போய் தங்கினாரோ அதுபோன்று இன்றைய முதல்
வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் (இஸ்ரயேல்) மக்கள் நடுவில் தங்கப்போவதாக
வாக்குறுதி தருகின்றார். ஆதலால், அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினர் செக்கரியா கண்ட காட்சி
இறைவாக்கினர் செக்கரியா நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில், இறைவாக்கினர் செக்கரியா ஒரு காட்சி காண்கின்றார்.
அந்தக் காட்சியில், ஒரு மனிதர் தன்னுடைய கையில் அளவு நூலை
வைத்துக்கொண்டு எருசலேமின் அகலத்தையும் நீளத்தையும் அளக்கச்
செல்கின்றார். அப்பொழுது இன்னொரு மனிதர் செக்கரியாவிடம் வந்து,
முதல் மனிதரை எருசலேமின் நீளத்தையும் அகலத்தையும் அளக்கவேண்டாம்
என்று சொல்லச் சொல்கின்றார்.
எதற்காக இரண்டாவது வந்த மனிதர், முதலாவது வந்த மனிதரை எருசலேமின்
அகலத்தையும் நீளத்தையும் அளக்க வேண்டாம் என்று சொல்லச்
சொன்னார். இதற்கான காரணம் என்ன என்பதை இப்பொழுது சிந்தித்துப்
பார்ப்போம்.
ஆண்டவரே நெருப்புச் சுவராய் அமைவார்
இறைவாக்கினர் செக்கரியா கண்ட காட்சியில் வருகின்ற இரண்டாம் மனிதர்
முதல் மனிதரை, எருசலேமின் நீளத்தையும் அகலத்தையும் அளக்கவேண்டாம்
என்று சொன்னதற்கு மிக முக்கியமான, எருசலேம் திருநகர் எல்லா மக்களும்
வந்துபோகக்கூடிய அளவில் மதில்சுவர் இல்லாத ஒரு நகராக இருக்கும்.
அதனால்தான் இரண்டாவது மனிதர் இறைவாக்கினர் செக்கரியாவிடம் முதலாவது
மனிதரை எருசலேமை அளக்கவேண்டாம் என்று சொல்கின்றார். இறைவாக்கினர்
எசாயாவின் நூலில் இவ்வாறு வாசிக்கின்றோம்: பிற இனத்தார் உன் ஒளி
நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர் நோக்கி நடைபோடுவர்."
(எசா
60: 3) ஆம், ஆண்டவராகிய இயேசுவின் வருகையினால் iஇதெல்லாம் நடக்கும்
என்பதால் இரண்டாவது மனிதர் முதலாவது மனிதரை நோக்கி அவ்வாறு
சொல்கின்றார்.
இரண்டாது மனிதர் அவ்வாறு சொல்வதற்கான இரண்டாவது காரணம், ஆண்டவரே
நெருப்புச் சுவராய் இருப்பார் என்பதாலாகும் . ஆண்டவர் கற்பாறையும்
கேடயமாகவும் (திபா 18: 2); தன் மக்களை எல்லா ஆபத்துகளிலிருந்தும்
காப்பாற்றும் அரணும் கோட்டையுமாக இருப்பவர். அப்படிப்பட்டவர்
எருசலேமிற்குப் பாதுகாப்பாக இருக்கின்றபோது மதில்சுவர் எதுவும்
தேவையில்லை என்பதால், இரண்டாவது மனிதர் முதலாவது மனிதரிடம் இறைவாக்கினர்
செக்கரியாவை அப்படிச் சொல்லச் சொல்கின்றார். இதை விட இன்னொரு
முக்கியமான காரணம் இருக்கின்றது. அது என்ன என்று தொடர்ந்து
சிந்தித்துப் பார்ப்போம்.
நானே வந்து உன் நடுவில் குடிகொள்வேன்
இரண்டாவது மனிதர் இறைவாக்கினர் செக்கரியா வழியாக, எருசலேமின்
அகலத்தையும் நீளத்தையும் அளக்கவேண்டாம் என்று முதலாவது மனிதரிடம்
சொன்னதற்கு மிக முக்கியமான காரணம், ஆண்டவரே அவர்கள் நடுவில் வந்து
தங்கப் போகிறார் என்பதாலாகும். மெசியாவாம் இயேசு அவர்கள் நடுவில்
வந்து தங்குவார்; அவர்களுக்கு பாதுகாப்பையும் மீட்பையும் தருவார்
என்று பல இறைவாக்கினர்கள் வழியாகச் சொல்லப்பட்டது. அது இங்கு
மீண்டுமாகச் சொல்லப்படுகின்றது. ஆண்டவர், மக்கள் நடுவில் வந்து
தங்கும்போது, வேறு என்ன பாதுகாப்பு வேண்டும், அவரே பெரிய
பாதுகாப்பாக இருக்கும்போது!
சிந்தனை
'
வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்'
(யோவா 1: 14)
என்பார் யோவான். ஆகையால், நமக்குப் பாதுகாப்பையும் எல்லாவிதமான
ஆசியையும் தரவரும்/ தரும் ஆண்டவர் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கையை
வைத்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|