|
|
25 செப்டம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
25ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை
அடிமைத்தனத்திற்கு கையளிக்கவில்லை.
எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 9: 5-9
மாலைப் பலி நேரத்தில் நோன்பை முடித்துக் கிழிந்த ஆடையோடும்
மேலுடையோடும் முழந்தாளிட்டு என் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கைகளை
விரித்து,
எஸ்ராவாகிய நான் கூறியது:
"கடவுளே! உம்மை நோக்கி என் முகத்தைத்
திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள்
தலைக்குமேல் பெருகிவிட்டன. எங்கள் குற்றங்கள் விண்ணைத்
தொட்டுவிட்டன. எம் முன்னோர் காலமுதல் இதுவரை நாங்கள் பெரும் பாவம்
செய்துள்ளோம். எங்கள் பாவங்களினால், நாங்களும் எங்கள் அரசர்களும்,
குருக்களும் வேற்று நாட்டு மன்னர்களின் கைக்கும், வாளுக்கும்,
அடிமைத்தனத்திற்கும், கொள்ளைக்கும், வெட்கக் கேட்டுக்கும் இதுவரை
ஒப்புவிக்கப்பட்டோம்.
ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளும் ஆண்டவருமாகிய
உமது கருணை துலங்கியுள்ளது; எங்களுள் சிலரை எஞ்சியோராக
விட்டுவைத்தீர்; உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம்
தந்தீர்; எம் கடவுளாகிய நீர் எம் கண்களுக்கு ஒளி தந்தீர்; எமது
அடிமைத்தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர். நாங்கள் அடிமைகளாக
இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்குக் கையளிக்கவில்லை.
மாறாக நாங்கள் உயிர் பிழைக்கவும், எங்கள் கடவுளின் கோவிலை எழுப்பவும்,
பாழடைந்ததைப் பழுது பார்க்கவும் யூதேயாவிலும் எருசலேமிலும்
பாதுகாப்பு அளிக்கவும் பாரசீக மன்னர்களின் முன் எமக்கு உமது தயை
கிடைக்கவும் செய்தருளினீர்!"
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
தோபி: 13: 2,3. 6,7. 8. (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: என்றும் வாழும் கடவுள் போற்றி!
2 அவர் தண்டிக்கிறார்; இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின்
ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார்.
அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. 3 இஸ்ரயேல் மக்களே,
வேற்றினத்தார்முன் அவரது புகழை அறிக்கையிடுங்கள். ஏனெனில் அவர்
அவர்களிடையே உங்களைச் சிதறடித்துள்ளார். பல்லவி
6 நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால்
திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால்
திரும்புவார்; தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே
திருப்பிக் கொள்ளார். 7 உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது
எண்ணிப் பாருங்கள்; நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்; வாயார அவரை
அறிக்கையிடுங்கள். என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள். பல்லவி
8 நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்; அவருடைய
ஆற்றலையும் மேன்மையையும் பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன்.
பாவிகளே மனந்திரும்புங்கள்; அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள்.
ஒருவேளை அவர் உங்கள்மீது அருள்கூர்வார்; உங்களுக்கு இரக்கங்காட்டுவார்.
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மாற் 1: 15
அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறி விட்டது; இறையாட்சி
நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல்நலம் குன்றியோரின் பிணி
தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6
அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம்
அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக்
கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம்
குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
அப்போது அவர்களை
நோக்கி, "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு,
பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி
போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்;
அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய
நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள
தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான
சான்றாகும்" என்றார்.
அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து
நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய
நீர் எங்களை அடிமைத்தனத்திற்கு கையளிக்கவில்லை.
எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 9: 5-9
"
எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்குமேல் பெருகிவிட்டன"
.
நிகழ்வு
இறைநம்பிக்கையாளர் பக்தர் - ஒருவர் இருந்தார். அவர் ஒவ்வொருநாளும்
இரவு தூங்குவதற்கு முன்னம் முழந்தாள் படியிட்டு மன்றாடுவார்.
அப்படி அவர் இறைவனிடம் மன்றாடுகின்றபோது, '
இறைவா! நான் பாவம்
செய்யக்கூடாது என்று எவ்வளவோ முயற்சி செய்கின்றேன். ஆனாலும் என்னால்
பாவம் செய்யாமல் இருக்க முடியவில்லை'
என்று மன்றாடி வந்தார்.
ஒருநாள் இரவு அவர் இறைவனிடம் இவ்வாறு மன்றாடிக்
கொண்டிருக்கும்பொழுது, இறைவன் அவர்க்கு முன்னம் தோன்றி, "
மகனே!
உன்னுடைய மன்றாட்டைக் கேட்டேன்... இன்னும் ஏழு நாள்கள்தான்.
அதன்பிறகு நீ இப்படியெல்லாம் கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை"
என்றார். "
என்ன! இன்னும் ஏழு நாட்கள்தானா...? அதன்பிறகு என்ன
ஆகும்...?"
என்று ஆச்சரியாகக் கேட்டார் அவர். அதற்கு இறைவன்
அவரிடம், "
இன்னும் ஏழு நாள்களில் நீ இறந்துவிடுவாய்"
என்று
சொல்லிவிட்டு இறைவன் மறைந்துபோனார்.
இறைவன் சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு, இறைநம்பிக்கையாளர் அதிர்ந்து
போனார். '
இன்னும் ஒரு ஏழு நாள்கள்தான் இம்மண்ணுலகில் இருக்கப்போகிறனா...?
அப்படியானால் இந்த ஏழு நாள்களில் எப்பொழுதும் கடவுளையே கண்முன்னால்
நிறுத்திப் பயனுள்ள வாழ்க்கை வாழவேண்டும்'
என்று
முடிவுசெய்தார். அதன்படியே அவர் இறைவனைத் தன் கண்முன்னால்
நிறுத்தி, தன்னால் இயன்ற மட்டும் எவ்வளவு நன்மைகளைச் செய்ய
முடியுமோ, அவ்வளவு நன்மைகளைச் செய்து வந்தார்.
இறைவன் கொடுத்த ஒருவார அவகாசம் முடிந்தது. '
இன்றிரவு எப்படியும்
நான் இறந்துவிடுவேன். அதனால் இறப்பதற்கு முன்னம் ஒருமுறை இறைவனிடம்
மன்றாடுவோம்'
என்று உருக்கமாக அவர் மன்றாடினார். அப்பொழுது இறைவன்
அவர்க்கு முன்னம் தோன்றினார். அவரைப் பார்த்தும் அவர், "
இறைவா!
நீங்கள் கொடுத்த காலக்கெடு இன்றோடு முடிந்துவிட்டது. அதனால் என்னை
இந்த மண்ணுலகிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்"
என்றார். உடனே
இறைவன் அவரிடம், "
உன்னை நான் இந்த மண்ணுலகிலிருந்து எடுக்கப்
போவதில்லை... இங்கேயேதான் இருக்கப்போகிறாய்"
என்றார். "
என்ன!
நான் இங்கேதான் இருக்கப்போகிறேனா...? அப்படியானால், நான் சாகமாட்டேனா...?"
என்று அவர் கேட்டதும், இறைவன் அவரிடம், "
ஆமாம், நீ சாகமாட்டாய்...
இந்த மண்ணில் இன்னும் பல ஆண்டுகள் வாழ்வாய்"
என்றார்.
பின்பு இறைவன் அவரிடம், "
அதுசரி, இந்த ஒருவார காலத்தில் எப்பொழுதாவது
பாவம் செய்தாயா...?"
என்றார். "
இல்லவே இல்லை. இந்த ஒருவார காலத்தில்
எப்பொழுதும் உம்மையே என் கண்முன்னால் நிறுத்தி, பயனுள்ள
வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். சாவுபயம் வேறு எனக்கு முன் எப்பொழுதும்
நிழலாடியதால், நான் எந்தவொரு பாவத்தையும் செய்யவில்லை"
என்றார்
அந்த இறைநம்பிக்கையாளர். "
இந்த ஒருவார காலத்தில் நீ வாழ்ந்ததுபோல்
எப்பொழுதும் நீ என்னை உன் கண்முன்னால் நிறுத்தி வாழ். நிச்சயமாக
உனக்குக் பாவம் செய்யவேண்டும் என்ற எண்ணமே ஏற்படாது"
என்று
சொல்லிவிட்டு மறைந்துபோனார்.
இறைவனை நம் கண்முன்னால் வைத்துத் வாழ்ந்தால், பாவம் செய்வதற்கு
வழியில்லை என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நமது
சிந்தனைக்குரியது. முதல் வாசகத்தில் குரு எஸ்ரா, இஸ்ரயேல் மக்கள்
ஆண்டவருக்கு எதிராகச் செய்த பாவங்களை வேதனையோடு அறிக்கையிடுவதைக்
குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு நமக்குச் சொல்வதென்ன என்று
சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவர்க்கு நம்பிக்கையில்லாமல் வாழ்ந்துவந்த இஸ்ரயேல் மக்கள்
இஸ்ரயேல் மக்கட்கு ஆண்டவர் செய்த நன்மைகள் ஏராளம். எகிப்தில்
அடிமைகளாய் இருந்தவர்களை, மீட்டுக்கொண்டு வந்து பாலும் தேனும்
பொழியும் கானான் நாட்டை வழங்கினான்; இன்னும் எவ்வளவோ நன்மைகளை
அவர்கட்கு அவர் செய்தார். அவர் அவர்களிடம் சொன்னதெல்லாம் '
நானே
உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள்!'
(லேவி 26: 12) என்பதுதான்.
அவர்களோ அதை வசதியாக மறந்துவிட்டு வேற்று தெய்வத்தை வழிபாட்டு,
அழிவைச் சந்தித்தார்கள். இதை நினைத்துத்தான் குரு எஸ்ரா ஆண்டவரிடம்
வேதனையோடு பேசுகின்றார்.
நம்பிக்கைக்குரியவராய் இருந்த ஆண்டவர்
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இல்லாது
போனாலும் ஆண்டவர் (அவர்கட்கு) நம்பிக்கைக்குரியராக இருந்தார்
(1அர 19:18). அதானால்தான் அவர் இஸ்ரயேல் மக்கள் தன்னை விலகிச்
சென்றபோதும், அவர் அவர்களை பிற இனத்தவராகிய சைரசு மன்னர்
வழியாக விடுதலை வழங்கி, அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்குக்
கொண்டுவருகின்றார். இப்படியெல்லாம் இறைவன் இஸ்ரயேல் மக்கட்கு
நமக்கு நன்மை செய்திருக்கும்பொழுது, நாம் அவர்க்கு நம்பிக்கைக்குரியவர்களாக
இருப்பது சாலச் சிறந்ததாகும்.
சிந்தனை
'
எளியவரையும் உள்ளம் வருந்துவோரையும் என் சொல்லுக்கு அஞ்சுபவரையும்
நான் கண்ணோக்குவேன்'
(எசா 66: 2) என்பார் ஆண்டவர். ஆகையால், நம்பிக்கைக்குரியவராய்,
தனக்கு அஞ்சி நடப்போர்க்கு ஆசி வழங்குகின்றவராய் இருக்கின்ற ஆண்டவரிடம
நம்முடைய குற்றத்தை உணர்ந்து அவரிடம் திரும்பி வந்து, அவர்க்குரிய
மக்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 9: 1-6
இறையாட்சியைப் பற்றிப் பறைசாற்ற சீடர்களை
அனுப்பிய இயேசு
நிகழ்வு
பல ஆண்டுகட்கு முன்னம் ஐரோப்பாவில் இருந்த ஒரு மறைப்பணி நிலையம்,
'
ஆண்டுக்கு 2500 டாலர் ஊதியம்'
என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில்
இளைஞர் ஒருவரை சீனாவுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பி வைத்தது.
அந்த இளைஞரும் மிக ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் ஆண்டவருடைய நற்செய்தியை
மக்கட்கு அறிவித்து வந்தார். இதனால் அவருடைய பெயரும் புகழும்
எங்கும் பரவின.
இதற்கிடையில் அவரைக் குறித்துக் கேள்விப்பட்ட ஒரு பன்னாட்டு
நிறுவனம் அவரை அழைத்து, "
நாங்கள் உங்கட்கு ஆண்டிற்கு ஐந்தாயிரம்
டாலர் ஊதியம் தருகின்றோம். நீங்கள் எங்களுடைய நிறுவனத்தில் வந்து
பணிசெய்வீர்களா?"
என்று கேட்டது. அவரோ, "
அதெல்லாம் முடியாது"
என்று மறுத்துவிட்டார். பன்னாட்டு நிறுவனம் தொடர்ந்து அவரிடம்,
"
ஆண்டிற்கு பத்தாயிரம் டாலர் ஊதியம் தருகின்றோம். அப்பொழுதாவது
எங்களுடைய நிறுவனத்தில் வந்து பணிசெய்வீர்களா?"
என்று கேட்டது.
அப்பொழுதும் அவர் முடியாது என்று மறுத்துவிட்டார்.
'
இவர் இன்னும் அதிகமான ஊதியம் எதிர்பார்க்கிறார் போலும்'
என்று
நினைத்துக்கொண்டு, அந்த நிறுவனத்தின் தலைவர் அவரிடம்,
"
ஆண்டிற்கு ஐம்பதாயிரம் டாலர் கொடுத்தால், எங்களுடைய நிறுவனத்திற்கு
வந்து பணிபுரிவீர்களா?"
என்று கேட்டார். அப்பொழுதும் அவர் முடியவே
முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் பொறுமையிழந்த அந்தப்
பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர், "
ஒருவேளை நான் கொடுக்கின்ற ஊதியம்
உங்கட்குப் பெரிதாக இல்லையோ?"
என்றார். "
நீங்கள் கொடுக்கின்ற
ஊதியமல்ல, நீங்கள் கொடுக்கின்ற வேலை எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
எனக்கு நான் இப்பொழுது செய்துவரும் நற்செய்திப் பணிதான் பெரிதாகத்
தெரிகின்றது. அந்தப் பணியைச் செய்வவதால் கிடைக்கின்ற மகிழ்ச்சியை
நீங்கள் மில்லியன் டாலர் கொடுத்தாலும் கிடைக்காது"
என்றார் அந்த
இளைஞர்.
ஆம், நற்செய்திப் பணியை விடவும் சிறந்ததொரு பணியில்லை... அதனை
செய்வதால் கிடைக்கின்ற மகிழ்ச்சியை வேறு எதனாலும் தந்துவிட
முடியாது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது
சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு பன்னிருவரைப் பணித்தளங்கட்கு
அனுப்புவதையும் அப்படி அவர் அவர்களை அனுப்புகின்றபோது அவர்கள்
எப்படிப் பணிசெய்யவேண்டும் என்பதைப் பற்றி இயேசு கூறுவதையும்
குறித்து வாசிக்கின்றோம். அவற்றைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இறையாட்சியைப் பற்றி அறிவிக்க அனுப்பப்படல்
நற்செய்தியில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, பேய்களை
அடக்கவும் பிணிகளைப் போக்கவும் இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை
அறிவிக்கவும் அவர்களை அனுப்புகின்றார். அப்படி அனுப்புகின்றபோது,
அவர் அவர்கட்கு வல்லமையும் அதிகாரமும் அளிக்கின்றார். இயேசு தன்
சீடர்களைத் திக்கவராய் விடமாட்டார் (யோவா 14: 18) என்பதை உணர்த்துவதாக
இருக்கின்றது, அவர் அவர்கட்குக் கொடுக்கும் வல்லமையும் அதிகாரமும்.
இதன்மூலம் சீடர்கள் தங்களுடைய சொந்த வல்லமையைக் கொண்டு அல்ல,
இறைவல்லமையைக் கொண்டு, இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கவேண்டும்
என்பதை இயேசு எடுத்துச் சொல்கின்றார்.
ஆண்டவரை நம்பிப் பணிசெய்ய அனுப்பப்படல்
இயேசு தன் சீடர்களைப் பணிதளங்கட்கு அனுப்புகின்றபோது, அவர்களிடம்
சொல்லக்கூடிய மிக முக்கியமான செய்தி, பயணத்திற்கு வேறு எதையும்
(ஓர் அங்கியைத் தவிர) எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்பதாகும்.
இயேசுவின் இவ்வார்த்தைகள், அவருடைய பணியைச் செய்யக்கூடிய
யாரும் பணத்தின்மீதோ பொருளின்மீது அல்ல, ஆண்டவர் மீது தன் நம்பிக்கை
வைத்துப் பணிசெய்ய வேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாக
இருக்கின்றது. இதில் இன்னொரு முக்கியமான செய்தியும் உள்ளடங்கி
இருக்கின்றது. அது என்னவெனில், சீடர்கள் பயணத்தின்போது எதையும்
எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்றால், அவர்கட்குத் தேவையானவை
மக்கள் கொடுக்கவேண்டும். இதைத் தான் இயேசு வேலையாள் உணவுக்கு
உரிமையுடையவர் (மத் 10: 10) என்கின்றார்
எதிர்ப்புகட்கு அஞ்சாமல் பணிசெய்ய அனுப்பப்படல்
இயேசு தன் சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றபோது
சொல்கின்ற இன்னொரு முக்கியமான செய்தி, பணித்தளங்கில் வருகின்ற
எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதீர்கள் அல்லது புறம்பே தள்ளிவிட்டுப்
பணிசெய்யுங்கள் என்பதாகும். நற்செய்தியில் இயேசு சொல்கின்ற,
'
உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுக் கிளம்பும்போது
உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்'
என்ற
வார்த்தைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றது. பணித்தளங்களில்
நிச்சயம் எதிர்ப்புகள் வரும். அவற்றை காலில் படிந்துள்ள தூசியை
உதறிவிடுவது போன்று உதறிவிட்டுப் பணிசெய்யவேண்டும் என்பதுதான்
இயேசு நமக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது. ஆகையால்,
நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வல்லமையையும் அதிகாரத்தையும்
கொண்டு அவருடைய பணியைத் திறம்படச் செய்வோம்.
சிந்தனை
'
அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும்... உன்னை
விடுவிக்க நான் உன்னோடு இருப்பேன்'
(எரே 1: 19) என்பார் ஆண்டவர்.
ஆகையால், கடவுள் இறைவாக்கினர் எரேமியாவிற்குச் சொன்ன இவ்வார்த்தைகளை
உள்வாங்கிக் கொண்டு இறையாட்சிப் பணியைச் சிறப்பாகச் செய்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|